Followers

Sunday, October 31, 2010

கவி கா.மு.ஷெரீப்



கவி கா.மு.ஷெரீப்

தமிழ் திரை உலகில் பல கவிஞர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களில் பலர் இன்றும் நமது நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பல பாடல்கள் நமது நெஞ்சங்களில் ஆழப்பதிந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. தங்களது கவித்துவம் வெளிப்பட வேண்டும், திரையுலகின் மூலம் தங்களது பெயரும் புகழும் வெளி உலகில் பரவ வேண்டும் என்பதோடு, வாழ்க்கைக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது என்பதற்காக இவர்கள் இந்தத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட பல கலைஞர்கள், கவிஞர்கள் நமது நாடக மேடைகளிலிருந்து தான் தமிழ்த்திரை உலகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களில் உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கம்பதாசன், பாபநாசம் சிவன், வாலி, நா.காமராஜ், நா.முத்துக்குமார், கு.மா.பாலசுப்பிரமணியன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்கள் தவிர இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் பல இளைய தலைமுறை கவிஞர்களும் அடங்குவார்கள்.

நூறு ஆண்டுகள் ஆனபின்பும் இவர்களது பல பாடல்கள் அன்றும் பாடப்பட்டுக் கொண்டிருக்கும், அத்தகைய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் பல. இவர்களது கவிதைகளை இசை அமைத்து கேட்டு இன்புறும் வண்ணம் இசை அமைத்துக் கொடுத்த அமரத்துவம் வாய்ந்த இசை இயக்குனர்களைத்தான் மறக்கமுடியுமா? சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்டராமன், ஜி.ராமநாத ஐயர், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வேதா போன்ற பலர் என்றும் நிலைத்திருக்கும் பாடல்களை இசை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் அவர்களின் படங்கள் இவைகளில் எல்லாம் அதிகமாகப் பாடல்களை இயற்றியவர் கவி.கா.மு.ஷெரீப். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. நல்லதொரு தேசிய வாதி. காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தேச விடுதலைப் போரிலும் ஈடுபாடு கொண்டவர். காங்கிரசில் தமிழ் மொழிபால் ஆர்வம் கொண்ட பலர் அன்று தமிழ்நாட்டில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தொண்டர்களாகத்தான் இருந்து வந்தார்கள். அவர்களில் கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்களைச் சொல்லலாம்.

கவி.கா.மு.ஷெரீப் அன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.இவர் 11--8--1914இல் பிறந்தார். 1973 அக்டோபர் 10ஆம் தேதி காலமானார். தஞ்சை மாவட்டக் காரரான இவருக்கு தேசியமும், மொழியும் இரு கண்களாக இருந்தன. சின்ன வயதில் மற்ற திரைத்துறை கவிஞர்களைப் போலவே இவரும் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். பின்னர் இவரது பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெறலாயின. அப்படிப் புகழ் பெற்ற பாடல்களின் வரிசை மிகப் பெரிது. முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மாயாவதி" எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகிதான் பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது.

எம்.ஏ.வேணு அவர்களின் தயாரிப்பில் சேலத்தில் தயாரான டவுன் பஸ் எனும் படத்தில் பாடப்பட்ட "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?" என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த "மாங்கல்யம்" படத்தில் வந்த "பொன்னான வாழ்வு மண்ணாகலமா?" என்கிற சோகப் பாட்டு. "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்ற பாட்டு "பணம் பந்தியிலே" படத்தில். சிவகாமி எனும் படத்தில் "வானில் முழு மதியைக் கண்டேன்" என்ற பாடல். ஏ.பி.நாகராஜனின் வெற்றிப் படமான "மக்களைப் பெற்ற மகராசி"யில் பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தில் வந்த "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?", "அன்னையின் ஆணை"யில் வந்த "அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை", எம்.ஏ.வி.பிக்சர்ஸ் "முதலாளி"யில் "குங்குமப் பொட்டுக்காரா, கோணக் கிராப்புக்காரா" பாடல், நான் பெற்ற செல்வத்தில் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்" பாடல் இப்படி இவரது திரையுலகப் பாடல் பயணம் தொடர்ந்தது.

இந்தக் கால கட்டத்தில் இவரது அரசியல் மேடைப்பேச்சு, தமிழரசுக் கழகம், காங்கிரஸ் மேடைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ம.பொ.சி.யின் நிழல் போல செயல்பட்ட இவரும் "தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற இதழ்களை நடத்தினார். ஜானிகான் ஜான் தெரு, தேனாம்பேட்டையில் இவரது அலுவலகம் அமைந்திருந்தது. பிரபலமான அரசியல் வாதியாகவும், திரைத்துரைப் பிரமுகராகவும் இவர் இருந்தார். இவர் இளமையில் திருவாரூரில் இருந்த சமயம் "ஒளி" எனும் பத்திரிகையை நடத்தி வந்தார். பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவரும் நாளில் இவரது சிபாரிசின் பேரில்தான் கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்தார்.

இப்போது போல திரையுலகக் கவிஞர்களுக்கு அதிகம் பாட்டு எழுத வாய்ப்புக்கள் வராது. இவர் ஓர் ஆண்டுக்கு ஓரிரு பாடல்கள் மட்டும்தான் எழுதுவார். அப்படி எழுதுகின்ற பாடலுக்கும் அதிக நாட்களை இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இசை அமைப்பாளர்கள் கவிஞர்களைத் தேடிப் பின் தொடர்ந்துகொண்டு இருப்பார்களாம் பாட்டு தயாராகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டு. இவரே அது பற்றி எழுதியிருக்கிறார். அதில் இவர் குறிப்பிடும் செய்தி, இசை அமைப்பாளர் இசையை வாசித்துக் காட்டும் போதே சில கவிஞர்கள் தூங்கிவிடுவார்களாம் என்பதும் ஒன்று.

இவரைப் பற்றிய மற்றொரு தகவல் திரையுலகில் பரவியிருந்தது. அது "சிவலீலா" எனும் நாடகத்துக்காக கவி.கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்களை ஏ.பி.நாகராஜன் தனது திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களில் எடுத்துக் கையாண்டார் என்பதுதான். அதன் முழு விவரமும் நமக்குத் தெரிய வரவில்லை. இவர் நிறைய அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். கவிதைகள் தவிர, கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு 1972இல் கலைமாமணி விருதினை அளித்துக் கெளரவித்தது. இவர் எழுதிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். திரைத்துறையில் வாய்ப்பு குறைந்த பிறகு, அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்று இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தார். மிக உயர்ந்த குணங்களையும், தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட மிகச் சிறந்த ஆன்மிக வாதியாகவும் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப். வாழ்க கவி.கா.மு.ஷெரீப்பின் புகழ்!


"தமிழ் முழக்கம்" கவி கா.மு.ஷெரீப்

(கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி "தினமணி" தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது)

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே', இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?', 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று 'குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். "அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி" என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்" என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

"கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்" என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். "எனக்கென எஞ்சி நின்றவை -- புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று" என்றும், "புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது" என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைதவர். அவரின் முதல் கவிதை "குடியரசு" ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

"சீறாப்புராணம்" சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்" என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

"தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக" என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் "சந்திரோதயம்" என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். 'அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் 'சாட்டை' இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் 'தமிழ் முரசு' என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் "தமிழகக் களக்கவினர்" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் 'சந்திரமோகன்' நாடகத்தில் 'திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி" என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். 'பெண் தெய்வம்', 'புது யுகம்' ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை 'மச்சகந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். 'சிவ லீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், 'பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான 'காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.
****


Thursday, September 2, 2010

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
திருமதி மங்களம் பகவதி, பி.ஏ.,பி.எட்.,
திருவாரூர்.

நீலகண்ட பிரம்மச்சாரி - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன். தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர். இவர் ஒருவருக்காக இருபதுக்கும் மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஒரு அறையத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர். தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் 1978ம் வருஷம் மார்ச் மாதம் 4ம் தேதி காலமானவர். நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்து விடக்கூடாது. இவரை நந்தி மலையில் மகாத்மா சந்திக்க முயன்றும், இவர் இருந்த குன்று மிக உயரத்தில் இருந்தமையால் மகாத்மாவின் செயலாளர் மகாதேவ தேசாய் சென்று இவரை அழைத்து வந்து மகாத்மாவைச் சந்திக்க வைத்த வரலாறும் நமக்குக் கிடைக்கிறது. யார் இந்த நீலகண்ட பிரம்மச்சாரி? இவரது சாதனைகள்தான் என்ன என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா? தேசப்பற்று என்பது என்ன, அதற்காக ஒருவர் எந்த அளவுக்குத் தியாகங்களைப் புரியலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீலகண்ட பிரம்மச்சாரியின் வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் போதும். இனி இந்த தியாக புருஷனின் வரலாற்றைச் சிறிது பார்க்கலாம்.

திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம் ஒவ்வோராண்டும் "மகாகவி பாரதியார் பற்றிய ஓர் அஞ்சல் வழிக் கல்வியை" நடத்தி வருகின்றனர். அதில் இவ்வாண்டு ஒரு பாடத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி எழுதிவிட்டு, அதுகுறித்த ஒரு கேள்வியையும் கேட்டிருந்தனர். அதற்கு விடை தெரிந்து கொள்ள முயன்றபோது சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட திரு ரா.அ.பத்மநாபன் எழுதிய "புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி" எனும் நூல் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை, அதனை மறுபதிப்பு செய்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த நூலில் உள்ள சில செய்திகளை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1911ல் மணியாச்சி ரயில் நிலயத்தில் வாஞ்சிநாதன் எனும் வீர தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. இவர் 1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகவாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள் 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான். சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் 4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்த 'ஊட்டுப்புரை' சத்திரத்தில் தங்கிக் கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தபின் சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிந்தார். அவரது நேர்மைத் திறத்தால் இவர் அங்கு சாமான்கள் வாங்கும் முகவராக நியமனமானார். அப்போது 1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நமது நீலகண்டனும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைத்தார். அவரது சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுத் தருவதாக நீலகண்டன் உறுதியளித்தார். எனினும் அப்படி செய்ய முடியாமல் அரசியல் வேலைகள் நீலகண்டனை தன்வசம் இழுத்துக் கொண்டன. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றினார்.

தஞ்சை மாவட்ட ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங்கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணன் என்று ஒருவர். இவர் 1908ல் சென்னை வந்தார். இந்த காலகட்டத்தில் நீலகண்டனை இரகசியப் போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். பிரம்மச்சாரி என்பதற்கு திருமணமாகாமலும், பெண்கள் தொடர்பே இல்லாதவர் எனும் பொருள்படக்கூடிய சொல். இருந்த போதிலும், குடும்ப பந்தங்களில் ஈடுபடாத, கொண்ட குறிக்கோளுக்காகப் பாடுபட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற பொருளில் அவர் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டார். மேலும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொள்ளாமல் பொதுவாக இந்தத் திருநாட்டின் தேசபக்தன் எனப் பொருள்படும்படி இந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார்.

போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த "அபினவ பாரதம்" எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு. பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் அங்கே சென்றார். சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் இவர் "சூர்யோதயம்" எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார். இவர் வ.உ.சிக்குத் தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுத்தார். அதையறிந்த நீலகண்டன் தனி நபர் கொலைகளில் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் நாட்டில் ஒரே சமயத்தில் புரட்சி செய்து வெள்ளையனை வெளியேற்ற வேண்டுமென்பதே தான் ஈடுபட்டுள்ள அபினவ பாரத இயக்கத்தின் நோக்கம் என்பதையும் தெளிவு படுத்திவிட்டு ஆஷ் கொலைசெய்யப்படும் போது தான் இங்கிருந்தால் தன்னையும் அதில் பிணைத்து விடுவார்கள் என்று எண்ணி வடக்கே காசிக்குச் சென்று அங்கு ஓர் தேசபக்தர் வீட்டில் தங்கி இருந்தார்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிக்கு அவர் வன இலாகாவில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் போலீசிடம் சிக்கியதால் வாஞ்சிக்கு துணை நின்றதாக நீலகண்டனும் தேடப்பட்டார். 1911 ஜூலையில் நீலகண்டன் கல்கத்தா போலீஸ் கமிஷனர் சர் சார்லஸ் டக்கார்டு என்பவருக்குத் தான் சரணடைய விரும்புவதாகக் கடிதம் எழுத, இவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். இவரை விசாரணை செய்த நீதிபதி ஏ.எம்.சி.டாம்போ என்பவர் இவர் மீது மரியாதை கொண்டு நெல்லை நீதிமன்றத்தில் இவர் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டபோது, இவரது தோற்றத்தையும், முகத்தில் இருந்த தேஜசையும் கண்டு இவருக்கு ஒரு நாற்காலி கொடுத்து அமர வைக்குமாறு உத்தரவிட்டார். நீலகண்டனை அந்த நீதிமதி மிகவும் மரியாதையோடு நடத்தியதோடு, அவர் மீது தனது வாழ்நாளின் கடைசி வரை பக்தி பாராட்டி அவருக்கு சகல மரியாதைகளையும் செய்து வந்தார், இவரது நண்பராகவும் திகழ்ந்தார்.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கு 22. 1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார். சிறையிலும் இவரது புரட்சி ஓயவில்லை. சிறையில் தனக்குக் கடுங்காவல் தண்டனை என்பதால் விறகு வெட்டச் சொல்லுகிறார்கள், நான் ஒரு அரசியல் கைதி எனக்கு இந்த வேலைகள் தரக்கூடாது, படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். இவர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. அரிசிச் சொறும் படிக்க நூல்களும் தரப்பட்டன. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து இவர் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார், பிறகு பெல்லாரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்க வர்க்கம் அந்த நாளில் சுதந்திரப் போர் வீரர்களை எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தி யிருந்தால் நீலகண்டன் போன்ற மன உறுதி படைத்த வீரர்கள் கூட தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1914ல் உலக யுத்தம் தொடங்கியது. அப்போது இவர் சிறையிலிருந்து தப்பியோடி பிறகு மாட்டிக்கொண்டு அதற்கும் சேர்த்துத் தண்டனை அடைந்தார்.

இவர் சிறையில் ஒழுங்காக நடந்துகொண்டால் ஏழாண்டு சிறை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றார்கள். ஆனால் இவரது செயல்பாடுகளால் இவரது தப்பிச் செல்லும் முயற்சியும் சேர்த்து இவருக்குத் தண்டனைக் காலம் ஏழரை ஆண்டுகளாக்கப்பட்டது. 1912 பிப்ரவரி 15ல் தொடங்கி இவரது தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாரைத் தொடர்பு கொண்டார். பாரதியாரும் இவருக்கு அவ்வப்போது தனது சிரம தசையிலும் உதவி புரிந்தார். பாரதியார் காலமானபோது இவரைத்தான் பாரதிக்கு கொள்ளிவைக்கச் சொன்னார்கள், இவர் மறுத்துவிடவே அந்தப் பொறுப்பு பாரதியாரின் உறவினரும், தமிழ்நாடு இந்தி பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஹரிஹர சர்மாவுக்குச் சென்றது.

பாரதியார் இவருக்கு அறிமுகப்படுத்திய தொழிலாளர் இயக்கங்களின் முன்னோடியும், பொதுவுடமைவாதியுமான தேசபக்தர் சிங்காரவேலரின் தொடர்பு இவரைப் "போல்ஷ்விக் பிரசுரங்கள்" வெளியிடத் தூண்டின. அது ஆயுதப் புரட்சியைத் தூண்டும் பிரசுரங்கள். இந்த குற்றத்துக்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை 1922 முதல் தொடங்கியது. சிறையில் நன்னடத்தைக்காக சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு 1930ல் ரங்கூன் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். இந்த தண்டனைக் காலம் முழுவதும் இவர் நாட்டின் பல்வேறு ஊர்களில் இப்போது பாகிஸ்தானிலுள்ள முல்டான், பெஷாவர், பர்மாவில் ரங்கூன் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். விடுதலையானதும் சென்னை திரும்பி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி', 'இந்து' பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

இளம் வயது தொடங்கி புரட்சிப் பாதையில் பயணித்த நீலகண்டனுக்கு இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 'பரிவிராஜக' (பற்றுக்களை விடுத்த சந்நியாச வாழ்க்கை) வாழ்க்கையை மேற்கொண்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் இவை எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்வது அவருக்கு ஒரு மாறுதலாக இருந்தது. இந்த வாழ்க்கையில் அவர் பெயர், புகழ், குற்றச்சாட்டு என்று எதையும் சுமக்காமல் வாழ்க்கை கனமில்லாமல் இருந்ததை உணர்ந்து கொண்டார். வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்த இவர் வேறு எதிலும் மனம் ஈடுபடாதிருக்க வேண்டி சதா சர்வ காலமும் அனைத்துக்கும் மூலாதாரமான பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவரை இப்படிப் பார்த்தவர்களுக்கு இவர் எருக்கஞ்சேரி நீலகண்டனாக இல்லாமல், சுவாமி ஓம்காரானந்தாவாகத் தெரிந்தார். இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். பரதேசி வாழ்க்கை மேற்கொண்ட இவர் அதனை விரும்பாமல் ராணியிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப்பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான்பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.

அந்த மலைவாழ் மக்கள் சிலர் அடிக்கடி சாது ஓம்காரை வந்து சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படியொரு முறை அவர் கொடுத்த பூஜை தீர்த்தம் அவர்களது நோய்களைத் தீர்த்தது என்ற செய்தி பரவ, பலரும் இவரிடம் தீர்த்தம் பெற்றுக்கொள்ள வரலாயினர். 1934ல் இவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது இவர் மனத்தில் ஓர் கேள்வி எழுந்தது: "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதன் என்ற பெயரும் புகழும் பெறவா என்னை ஆண்டவன் படைத்தான். எப்போதும் கூட்டம் சூழ்ந்திருக்க மன அமைதியின்றி தியானத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதற்கா இங்கு வந்தேன். என் யோகப் பயிற்சி என்ன ஆவது" என்பது அவர் மனம் எழுப்பிய கேள்வி.

அவ்வளவுதான், அவர் அந்தக் கூட்டத்திலிருந்தும், பெயரும் புகழும் தேடிவரும் சந்தர்ப்பத்தைக் கைகழுவிவிட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்னகிரி மலையின் உச்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓர் பாழடந்த மண்டத்தைச் சிறிது செப்பனிட்டு அங்குள்ள ஒரு சுனையைச் சுத்தம் செய்து அங்கேயே தங்கினார். இந்தப் பணிகளில் அவருக்கு உதவிய கிராம மக்களுக்கு 1934ல் அவர் ஓர் சமாராதனை செய்து உணவளித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் இவர் பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார். 1936ல் மகாத்மா காந்தி மைசூர் வந்திருந்தபோது சாது ஓம்காரை சந்திக்க விரும்பினார். அவர் இருந்த மலையுச்சிக்கு அவரால் போகமுடியாததால் அவரது செயலாளர் மகாதேவ தேசாயை அங்கு அனுப்பி அவரைச் சந்தித்து மகாத்மாவைக் காண அழைத்தார். அவரும் அப்படியே வந்து மகாத்மாவுடன் சில மணிகள் ஆன்மிக சிந்தனைகள் பற்றி உரையாடினார்.

1936 முதல் அவர் சுமார் 30 ஆண்டுகாலம் சுற்றுப்பயணம் செய்தார். பிறகு 1966ல் முதுமை காரணமாக ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். அவர் இருந்த சென்னகிரி உச்சியில் காட்டுத்தீ பரவியதால் மறுபடியும் சுவாமி ஓம்கார் மலையடிவாரத்துக்குத் தனது ஆசிரமத்தை மாற்றிக் கொண்டார். இவருக்கு சமூகத்தின் பலமட்டத்திலும் சீடர்கள் உருவானார்கள். பல சாதியினர், கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், அரச குடும்பத்தினார், அடிமட்ட மக்கள், இளையோர், முதியோர் என்று இவரைத் தேடி வரும் மக்கள் அதிகமானார்கள். இவரது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை "மெய் ஒப்புதல்" எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.

இவரது இரண்டாவது நூல் "உபதேஷ்" எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் "தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்". இதுவும் பெங்களூரில் வெளியானது. தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவியாக மாறிய இவரது வாழ்க்கை இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி சத்குரு ஸ்ரீ ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், பிங்கள வருஷம், மாசி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண பக்ஷம் தசமி திதியில் 1978 மார்ச் மாதம் 4ம் தேதி மாலை 4.10க்கு இவ்வுலக பந்தங்கள் நீங்கி இறவா புகழுடம்பு எய்தினார்.

அவருக்கு இறுதிக்காலம் சமீபித்துவிட்டது என்ற தகவல் சீர்காழி எருக்கஞ்சேரியிலிருந்த அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது இளவல் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி வந்து அவருக்கு சாம வேத முறைப்படி சுவாமி ஓம்காரின் காதில் கர்ண மந்திரம் ஓதினார். அவரது உடல் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரளான மக்கள் வந்து மரியாதை செலுத்தினர். மறுநாள் மார்ச் 5ம் தேதி ஞாயிறு காலை சுமார் 2000 பேர் ஆசிரமத்தில் கூடியிருக்க, ஆசிரமத்து வளாகத்திலேயே சுவாமி ஓம்கார் அவர்களின் பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நீலகண்ட பிரம்மச்சாரி போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. தனது எண்பத்தி எட்டு ஆண்டு வாழ்க்கையில் நாற்பத்தி நான்கு வயது வரை இந்திய சுதந்திரத்துக்காக பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகத் தன்னையே சுதந்திர வேள்வியில் ஆஹூதியாக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரருக்கு எங்காவது ஒரு இடத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறதா? எங்காவது ஒரு சிலை உண்டா? இவரது புரட்சி வாழ்க்கை எந்த பாட நூலிலாவது இடம் பெற்றிருக்கிறதா? நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரே சிலைகள் மயமாகக் காட்சி அளிப்பதும், பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஏதேதோ எழுதப்பட்டிருப்பதும் கண்டு இந்த சுதந்திர வீரனுக்கு எதுவுமே இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்டால், புதிதாகத் தியாகிகள் உருவாக முடியுமா? தன்னலமற்ற நாட்டுச்சேவை இனி கிடைக்குமா என்று நல்ல உள்ளங்கள் வருந்தத்தான் செய்யும். என்ன செய்வது? இதுபோன்ற தியாகிகளை வணங்கினால்தான் இந்த நாட்டில் தேசபக்தி வளரும், புதிய தியாகப் பரம்பரை தோன்றும். வாழ்க நீலகண்ட பிரம்மச்சாரி (சுவாமி ஓம்காரானந்தா) புகழ்!

(1889ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த தினம்)
(1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி இவரது நினைவு தினம்.)

Thursday, August 26, 2010

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய "மலைக்கள்ளன்" எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் 'பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ்

.
நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம்
சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்;
பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ?
'வேண்டும்' என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்
யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது?

'அடிமையல்ல நான்' எனும் ஆண்மையே சுதந்திரம்;
தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ?
ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்;
மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ?

அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே
நஞ்சுகொண்டு யாரையும் நலிவு செய்து தீருமோ?
நத்திவாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்திரம்
கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ?

கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்திரம்;
உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்?
தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்திரம்
வாய்மையோடு உறவறாத வன்மையே சுதந்திரம்.


ஒப்பற்ற காந்தியால் உலகம் வாழும்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை
கற்பனைக்கிங் கில்லையந்தக் காளிதாசன்
செவிநாடும் கீர்த்தனைக்கு தியாகராஜரில்லை
தேசிய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
உத்தமராம் காந்திதனை உவந்து பேச.

சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.

கொலைகளவு பொய்சூது வஞ்சமாதி
கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த பிறவியெனும் மனித வர்க்கம்
சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலைமதிக்க முடியாத செல்வமன்றோ
வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?

புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்
களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த
தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்
உத்தமரைக் 'கண்டோமா' என்னும் ஏக்கம்
ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி
நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்
உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்
எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்
கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.

கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
தளர்வாகும் எழுபத்து ஒன்பதாண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க.

தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார்
சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?

நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம்
நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம்
ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை
அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ?

செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய்
உணருகின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம்
உயருகின்ற ஜீவருக்குள் நம்மோடொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற தொத்துக் கொள்ள லாகுமோ?

அமலனாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை
ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம்
விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி?

ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும்
நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது
பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும்
பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்?

Monday, August 23, 2010

பி.சீனிவாச ராவ்

விவசாயிகளின் எழுச்சி நாயகர் பி.சீனிவாச ராவ்

த்மிழ்நாட்டில் சுதந்திரப் போட்டாத்தில் ஈடுபட்டு தொண்டு புரிந்தவர்களில் பி.சீனிவாச ராவ் ஒருவர். இவர் தனது போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், அந்த ஏகாதிபத்தியம் இந்த நாட்டில் வேரூன்ற காரணங்கள் எவை என்று கண்டு, அந்த ஆணிவேரை அறுத்தெறிய முயன்றவர். வயல்களில் உழைக்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள், உழைப்பாளிகள் இவர்களைச் சுரண்டிக்கொண்டு, வெள்ளைக்காரர்களுக்குச் சாமரம் வீசும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை அகற்றினாலே, வெள்ளைக்காரர்கள் தானாகவே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்பது இவரது கருத்து. இந்த நோக்கத்துக்காக அவர் என்ன செய்தார்?

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. அந்தச் சங்கத்தை தமிழகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து சுற்றி அலைந்து உழைத்தவர் சீனிவாச ராவ். இவரைப் பற்றி இன்றுகூட கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தவிர மற்றையோர் அறிந்து கொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயன்றதுமில்லை. இவர் கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி இருக்கும் குடகு நாட்டில் பிறந்தவர். இவர் யார் எவர் எங்கிருந்து வந்தார் என்பதையெல்லாம்கூட பிறருக்குத் தெரிவிக்க விரும்பாமல் தான் ஈடுபட்டிருக்கும் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சீனிவாச ராவ்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் சென்னையில் இவருடன் சிறையில் இருந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அமீர் ஹைதர்கான் போன்றவர்கள். சுதந்திரப் போர் ஒரு புறம், விவசாயிகளின் எழுச்சி மற்றொரு புறம் என்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் இவர் தனது இயக்கத்தை மையமாகக் கொண்டார். இவர் ஆரம்ப கால அரசியலின்போது இவருடன் இணைந்து போராடிய பல தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.வி.காட்டே, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்டராமன் ஆகியோர். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த தொண்டர்கள்.

இவர் அதிகமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பாமல், செயல் ஒன்றே குறியாகத் தன் வாழ்நாளைக் கழித்தார். கீழத் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி போன்ற பகுதிகள்தான் இவரது போராட்டக் களமாக இருந்தது. இந்த ஓய்வறியாத தொண்டனின் மறைவுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகையான "ஜனசக்தி" இவர் நினைவாக கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டது. அதில் பல தலைவர்களும் இம்மாமனிதன் பற்றிய பல செய்திகளைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துமே மிக விளக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் ப.ஜீவானந்தம் போன்றோர் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளை உள்ளடக்கி இருந்தன. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு காணலாம்.

ப.ஜீவானந்தம்: "தன் பெற்றோர் உற்றாரைப் பற்றி, ஊர் பேர் பற்றி இதுவரை மறந்தும் பேசாத ஒரு விசித்திர மனிதர் அவர். அதே பொழுதில் 1930லிருந்து நம்மை விட்டுப் பிரிந்த வரை தமிழகத்தையே தாயகமாகக் கொண்டு வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்திருந்தார். எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரையோ, புரட்சி வீரனையோ நான் எதிர்ப்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஓர் அபூர்வ பிறவி அவர்."

"1930இல் சென்னையில் பிரகாசம் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரத்த பைசாசமே போலீஸ் கமிஷனர் கன்னிங்காம் உருவத்தில் வந்து நடத்திய கொடிய அடக்குமுறைச் சித்திரவதையை இன்று நினத்தாலும் உடலும் குடலும் பதறும். அந்தப் போராட்டத்தில் புலுசு சாம்பமூர்த்தி, காஸா சுப்பாராவ், துர்க்காபாய் முதலான தேசபக்தர்களோடு மாணவராக இருந்த சீனிவாச ராவும் கலந்து கொண்டார். நாட்டின் பெருமையைக் காத்த வீரர்களில் ஒருவர் இவர்."

"ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாகி, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மூச்சுகூட விடமுடியாத நிலையில் 2/65 பிராட்வேயை உறைவிடமாகக் கொண்டு ஒரு எடுப்புச்சாப்பாட்டை மூன்று பேர், சில வேளைகளில் நான்கு பேர் உண்டு பணிபுரிந்த காலம் அது. அப்போது சீனிவாச ராவி எங்களுக்கு ஒரு நட்சத்திரமாக விளங்கினார்."

ஹெச்.டி.ராஜாவின் 'நியு ஏஜ்' பத்திரிகையில் முழுநேரமும் பணிபுரிந்தார். 1935இல் காங்கிரஸ் கட்சிக்குள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளையை முதலில் அமைத்தவர் சீனிவாச ராவ். இவர் சிறிது அதிகமான நேர்மையாளர். தனக்கு சரி என்றும் நீதி என்றும் பட்டுவிட்டால் அதில் உறுதியாக நிற்பார். அவருடைய கண்டிப்புக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் பயந்து பலரும் சற்றுத் தள்ளியே இருப்பார்கள். அவருடைய கொள்கை பிடிப்பும், சுயநலமின்மையும் அத்தகையது."

"வெளிமாநிலக்காரர் என்பதாலும், தமிழ் சரியாகப் பேச முடியாததாலும் மணலி கந்தசாமி போன்றோருடன் சேர்ந்து 1943இல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அவர்களை ஒரு போராட்ட சக்தியாக உருவாக்கினார். அதுமுதல் 30 ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்த தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன். அந்த விவசாயிகளின் தலைவர் இறந்த போது திருத்துறைப்பூண்டியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆயிரமாயிரம் விவசாயிகள் கண்ணீர் சிந்தி அந்தத் தலைவனை வழியனுப்பிய காட்சி கல்லும் கரையச் செய்யும் காட்சியாகும்."

எம்.ஆர்.வெங்கட்டராமன்: "வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அக்கிரமம் என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டித்து விடுவார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் செயலாளராகவும் இருந்தார். அன்னியத் துணிகள் பகிஷ்காரம் நடந்த போது இவர் போலீசாரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். பூட்ஸ் காலால் மிருகத்தனமாக மிதிக்கப்பட்டார். அத்தனை அடிகளையும் அஞ்சாத நெஞ்சத்தோடு எதிர் கொண்டவர் சீனிவாச ராவ்."

பி.ராமமூர்த்தி: "கண்டிப்பு, கட்டுப்பாடு, எளிய வாழ்க்கை இவைகளுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் சீனிவாச ராவ். தொண்டனுக்குத் தொண்டனாக, நண்பனுக்கு நண்பனாக, தலைவனுக்குத் தலைவனாகத் திகழ்ந்தார். ஆகவே தான் அவரது மறைவுச் செய்தி கேட்ட சில மணி நேரத்தில் தஞ்சை மாவட்டமே, தமிழகமே கதறி அழுதது. அவரது இறுதிப் பயணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்."

ஏ.எம்.கோபு: "கன்னடத்தில் உயர்சாதியான பிராமண குலத்தில் பிறந்து, காவிரி நதி தீரமான தஞ்சைத் தரணியின் வற்றாத வளத்தின் வித்தாகவும், வேராகவும், விளங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் அவதரித்த லட்சக்கணக்கான வேளான் தொழிலாளரின், குத்தகைதாரர்களின், குறுநில உடைமையாளர்களின் விமோசனத்துக்காக அரும்பாடுபட்டு, தஞ்சையில் உயிர் நீத்து, திருத்துறைப்பூண்டியில் மீளாத்துயில் கொண்ட் தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சீனிவாச ராவ்."

பி.சீனிவாச ராவி 1961ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தஞ்சாவூரில் காலமானார். அவர் உயிர் பிரிந்தபோது அவருடன் அப்போது தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காத்தமுத்து, தஞ்சை ஏ.வி.ராமசாமி, கே.நல்லகண்ணு ஆகியோர் உடனிருந்தனர். அவர் உடல் பி.ராமமூர்த்தி, எம்.காத்தமுத்து, கே.டி.ராஜு ஆகியோரால் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முல்லை ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொண்டர்களும் கண்ணீர் சிந்த 30-9-1961 இரவு 10-30 மணிக்கு எரியூட்டப்பட்டது.

போராட்டத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு ஏழைப்பங்காளனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க தோழர் பி.சீனிவாச ராவ் புகழ்!

Wednesday, August 18, 2010

"காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன்

"காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன் (1908 - 1985)

காந்தி ஆஸ்ரமம் திரு அ.கிருஷ்ணன் அவர்கள் 1908ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய கல்வி திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு வரை நடந்தது. இளம் வயதில் தேசிய உணர்வு ஏற்பட்ட காரணத்தால் அப்போது நடந்த பல தேசிய இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் பம்பாய் நகரில் இருந்த உறவினரிடம் வேலைக்காக அனுப்பப்பட்டார். அங்கு இவர் 1927 -29 ஆண்டுகளில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பம்பாய் பெரு நகரம் என்பதோடு இவருடைய தேசிய இயக்கத்தில் ஈடுபடவும் அங்கு இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. கதர் துணிகளை மொத்தமாக வாங்கி தோளில் சுமந்துகொண்டு விற்பனை செய்து தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். மகாத்மா காந்தியிடம் இவர் இந்தப் பணிக்காக பெற்ற பாராட்டை இவர் பெருமையாகக் கருதினார்.

பம்பாயிலிருந்து தமிழகம் திரும்பி விளாத்திகுளம் எனும் ஊரில் பொதுப்பணித்துறையில் மேஸ்திரியாகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு இருந்த கதர் கடைக்கு இவர் அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி அங்கு சென்ற போது கதர் கடையில் இருந்த ஒரு பத்திரிகை இவர் கண்களில் பட்டது. அது "விமோசனம்" எனும் பத்திரிகை. அது திருச்செங்கோடு நகரத்தில் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' வெளியீடு. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. உடனே அந்த பத்திரிகைக்கு சந்தா அனுப்பியதோடு கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை ஏற்று அலுவலகத் தொடர்பினாலும், பொதுத்தொடர்பினாலும் பலரிடம் சந்தா வசூலித்து 'விமோசனம்' பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார். இவரது ஆர்வத்தையும், தேசபக்தியையும் கல்கி வெகுவாகப் பாராட்டி இவரை திருச்செங்கோடு வந்து தன்னைச் சந்திக்குமாறு கடிதம் எழுதினார்.

கல்கியின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணன் 1930இல் திருச்செங்கோடு சென்று அங்கு கல்கியைத் தேடினார். இவர் போனபோது கல்கி அங்கு இல்லை. பிறகு அவர் வந்தபின் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு ராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காக திருச்சியிலிருந்து டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து நூறு தொண்டர்களுடன் பாதயாத்திரை சென்றார். இவருக்கும் அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ள ஆசைதான். ஆனால் இவரை அப்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

அதுமுதல் ராஜாஜி கிருஷ்ணனின் ஆதர்ச தலைவர் ஆனார். சுதந்திரப் போரில் நடைபெற்ற பல போராட்டங்களில் இவர் பங்கு பெற்றார். 1932ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1933 வரை சுமார் ஒரு வருட காலம் சிறை தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தார். அதன் பிறகு 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ராஜாஜி தலைமையில் போராட்டத்தில் கைதாகி இரண்டாம் முறையாக சிறையில் இருந்தார்.

நாமக்கல்லில் இராமலிங்கம் பிள்ளையோடு போராட்டங்களில் கலந்து கொண்டு கொல்லிமலைப் பகுதிகளில் காவல்துறையின் கண்களில் படாமல் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தினார். அப்போது இவரோடு இருந்த பல தேசபக்தர்களுக்கு இராமலிங்கம் பிள்ளையின் சகோதரி மகன் இராமசாமி பிள்ளை (கரூர்) சைக்கிளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, பாத்திரங்கள் தெரியாமல் அதன் மீது வைக்கோலை வைத்துக் கொண்டு ரகசியமாகக் கொண்டு செல்வாராம். காந்தியத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்ட இவர் இளமை முதல் கதர் மட்டுமே அணிந்து வந்தார்.

1930 தொடங்க்கி 1970 வரை இவர் காந்தி ஆஸ்ரமப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 1970இல் பணி நிறைவு பெற்று தன் பிள்ளைகள் பேராசிரியர் கி.கண்ணன், திரு கி.முத்துராமகிருஷ்ணன் ஆகியோரோடு வசித்து வரலானார். இவரது வாழ்க்கையில் இறைவன் விளையாடிவிட்டார். இவரது மூத்த மகனை இவர் 1977ஆம் ஆண்டில் பறிகொடுத்தார். புத்திர சோகம் இவர் மனதை ஆழமாகப் பாதித்திருந்தாலும் அதனை சிறிதுகூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் கீதையின் வழிகாட்டுதல்படி நன்மை தீமைகளைச் சமமாகப் பாவித்துத் தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். மூத்த மகனை இழந்த பின் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் 1985இல்தான் இவர் மறைந்தார்.

திருச்செங்கோடு ஆசிரிமத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அதோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆசிரமத்தில் இவர் நிர்வாகம் செய்த காலத்தில் இவருக்கு கதர் பணியில் ஈடுபாட்டோடு சிறப்பாகப் பணியாற்றினார். கதர் இயக்கத்தில் அப்போது தீவிரமாக இருந்த கோவை ஐயாமுத்து போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு இருந்தது. ஆசிரமத்தில் இராட்டையில் நூல் நூற்கவும், கதர் துணி தயாரிக்கவும் இவர் அதிக ஈடுபாடு காட்டினார். 1940இல் இவர் நாகபுரிக்கருகில் இருந்த வார்தா காந்தி ஆசிரமம் சென்று அங்கு மகன்வாடி கிராமோத்யோக் வித்யாலயாவில் கையினால் காகிதம் செய்யும் முறையைக் கற்று வந்தார். திருச்செங்கோடு திரும்பி இங்கிருந்த தொண்டர்கள் பலருக்கும் கையினால் காகிதம் செய்யும் முறையைப் பயிற்றுவித்து எல்லோருக்கும் பயன்படும்படி கைத்தொழிலை வளர்த்தார்.

அப்போது திருச்செங்கோடு ஆசிரமத்தின் காதி பண்டார் எனும் கதர் கடையின் நிர்வாகியாக பழனிச்சாமி பண்டாரம் என்பவர் இருந்தார். அவர் 1945இல் காலமான போது கிருஷ்ணன் அந்த பண்டாரின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதுமுதல் சுமார் இருபத்தைந்தாண்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார். சேலத்தில் இப்போது உள்ள 'ராஜாஜி காதி பவன்' அன்று ஆசிரமத்தில் இருந்த காதி பண்டாரின் வளர்ந்த நிலைதான்.

தியாகி அ.கிருஷ்ணனுக்கு மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் அதிக ஈடுபாடும் பக்தியும் உண்டு. தன் மகன் ஒருவருக்கு இராமகிருஷ்ணன் என்று பெயரிட்டதே இந்தக் காரணம் தொட்டே. அன்றைய சேலம் மாவட்டத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்து மேற்கண்ட மகாங்களைப் பற்றிய பெருமைகளைப் பரப்பியதோடு பல விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் பாடல்களை நல்ல குரல் வளத்தோடு இவர் பாடுவதைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது. உணர்ச்சி பூர்வமாக, பாடல்களின் கருத்துக்கேற்ப இவர் பாரதி பாடல்களைப் பாடிக் கேட்க பலரும் விரும்புவர். நல்ல இசை வளம், குரல் வளம் இவருக்கு உதவி புரிந்தது.

மூத்த மகனை இழந்து விட்டாலும், இவரது மற்ற இரு மகன்களிடமும், தன் மகளிடமும் அன்பு பூண்டு இவர் தனது மனைவியோடு இருந்து 1985இல் காலமானார். வாழ்க தியாகி 'காந்தி ஆஸ்ரமம்' அ.கிருஷ்ணன் புகழ்!

Sunday, August 8, 2010

டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி

டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

அந்தக் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் அதிகமாக ஆண்களைப் போல அரசியலிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் முன்னணியில் நின்று போராட்டங்களை வழிநடத்துவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நமது கலாச்சாரம், பண்பாடு இவற்றில் மக்கள் வைத்திருந்த அதீதமான நம்பிக்கை. அதுபோலவே பெண்களை உயர்கல்வி கற்க அனுமதிப்பதும் இல்லை. அப்படி உயர்கல்வி கற்று மேம்பட்ட திறமையுடன் வெளிவந்தவர்களில் அனேகம் பேர் மேற்சொன்ன வேலிகளை உடைத்தெறிந்து விட்டு முன்னணியில் விளங்கியிருக்கின்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்புஜம்மாள், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, மதுரை அகிலாண்டத்தம்மாள் (மதுரை வைத்தியநாத அய்யரின் மனைவி), மஞ்சுபாஷ்ணி அம்மையார், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்களையும் சொல்லமுடியும்.

மகாகவி பாரதியார் 'சந்திரிகையின் கதை' என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் நிஜமாகவே வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களைக் கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார். அதில் வீரேசலிங்கம் பந்துலு வருவார். தி ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வருவார். இப்படிப்பட்ட உயர்ந்த தலைவர்கள் பெண்களின் உயர்வுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள், தாங்களே தடைகளை மீறி செய்தும் காட்டியிருக்கிறார்கள். இங்கு நாம் பார்க்கப் போகிற விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணியை அப்படி உருவாக்கியவர் வீரேசலிங்கம் பந்துலு என்று கூறலாம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்கள் போலீசாரின் தடியடிக்கு ஆளாகி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த வரலாற்றை நாம் நிறைய படித்திருக்கிறோம். ஆனால் அப்படி அடிவாங்கிய பெண்பிள்ளைகளைப் பற்றி அதிகமாகச் செய்திகள் இல்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் 1930இல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, தொண்டர்கள் சேர்ந்து குவித்து வைத்திருந்த உப்பை அள்ளிச் செல்ல போலீஸ் முயன்றபோது, அந்த உப்புக் குவியலைச் சுற்றித் தொண்டர்கள் கைகோர்த்து தடுத்தனர். அப்படித் தடுத்த பலரும் போலீசாரின் புளியம் மிளாரினால் அடிக்கப்பட்டனர். தொண்டர்களில் ஒருவராக இந்தப் போரில் ஈடுபட்ட டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியை பெண் என்றும் பாராமல், போலீஸ் புளியம் மிளாரினால் அடித்துத் துவைத்ததோடு, அவரது இரண்டு கால்களையும் பிடித்துத் தரையில் தரதரவென்று இழுத்து வந்து தூக்கி கூடாரத்தை விட்டு வெளியே எறிந்த கொடுமையும் நடந்தது. இந்தக் கொடுமை நிகழ்வைச் சற்று கண்மூடி கற்பனை செய்து பாருங்கள். அடடா! என்ன கொடுமை இது என்று அலறத் தோன்றும். அந்தக் கொடுமைக்கு ஆளானவர் நாம் இப்போது பார்க்கப் போகும் தேசத் தொண்டர், சமூகத் தொண்டர், தியாகி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள்.

மற்றுமொரு செய்தியையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை யொட்டி மதக்கலவரம் வடநாட்டில் கொடுமையாக நிகழ்ந்தேறியபோது, நேரு சிறையில் இருந்த நேரத்தில், அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினியை மகாத்மா காந்தியடிகளிடம் அனுப்பித் தனக்கு தேச சேவையில் ஈடுபடுத்த வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்திராவும் காந்தியடிகளிடம் சென்று கேட்டார். அவர் சொன்னார். நீயோ சின்னப் பெண். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நீ மதக்கலவரம் நிலவும் டெல்லிக்குச் சென்று என்ன சேவையைச் செய்ய முடியும். நீயே போய் நிலைமையைப் பார்த்து என்ன செய்யலாம் என்று சொல்லு என்றார். இந்திரா டெல்லி வந்தார். தன்னையொத்த இளைஞர்களை ஒன்று சேர்த்தார். "ஹனுமான் சேனா' எனும் அமைப்பை ஏற்படுத்தி வன்முறைகளைத் தடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் இந்த சேனையின் மூலம் பாடுபட்டார். அது அங்குமட்டும்தான் நடக்குமா என்ன? ஜவஹர்லால் கேட்டுக் கொண்டபடி இந்திரா செய்ததைப் போல, தென்னகத்தில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள் "வானரசேனை" எனும் சிறுவர்களுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவையில் ஈடுபட்டார்.

சீனிவாச ராவ, சூடாமணி அம்மையார் தம்பதியருக்கு 1892ஆம் வருஷம் டிசம்பர் 6ஆம் தேதி ருக்மணி பிறந்தார். இவருடைய தந்தை இவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட முயன்றபோது வீரேசலிங்கம் பந்துலு தலையிட்டு பால்ய விவாகத்தைத் தடுத்தார். மகளை நன்றாகக் கல்வி கற்கச் செய்ய வேண்டினார். அதன்படி பள்ளி சென்று படிக்கத் தொடங்கினார் ருக்மணி. இந்த துணிச்சலை ஊரார் தாங்கிக் கொள்வார்களா. இவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். டாக்டர் லக்ஷ்மிபதி என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

திருமதி ருக்மணி லக்ஷ்மிபதிக்குப் பிறந்த குழந்தைகளுள் இறந்தது போக மிச்சம் இரண்டு பெண்கள் ஒரு மகன். இவர்களுள் ஒரு பெண் பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் ராமமூர்த்தியின் மனைவி இந்திரா ராமமூர்த்தி. ஜாதி சமய வேற்றுமைகளைக் கடந்து இவர் அனைவரிடமும் அன்போடு பழகியதோடு, அதனைச் செயலிலும் காட்டி வந்தார். பெண்களின் முன்னேற்றத்திலும் இவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்பே சொன்னபடி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தன் குடும்பத்தை விட்டு போராடி சிறை தண்டனை பெற்றவர் இவர். மகாத்மா காந்தி சென்னை வந்தபோது அவரை வரவேற்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களில் ருக்மணியும் ஒருவர்.

1934இல் இவர் சென்னை மகாஜன சபைக்குத் துணைத் தலவரானார். 1936இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவரானார். 1937இல் சென்னை மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினரானார். அதே ஆண்டில் சென்னை சட்டசபையின் மேலவைக்குத் தேர்வாகி துணைச் சபாநாயகராக ஆனார். 1938இல் இவர் ஜப்பான் சென்றார். 1940இல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டு கைதானார்.1946இல் சுதந்திரத்துக்கு முன்பு ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் பதவி ஏற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் இவர் சுகாதார அமைச்சரானார்.

தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த வீரப் பெண்மணி, சமூக சேவகி, சிறந்த நிர்வாகி, 1951ஆம் ஆண்டி ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று காலமானார். இன்று பெண்விடுதலை பற்றிப் பலரும் பேசுகிறார்கள். முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு அதனைச் செயலில் செய்து காட்டிய வீரப் பெண்மணி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியின் பெருமைக்கு நாம் அஞ்சலி செய்வோம். வாழ்க டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி புகழ்!

வீர வாஞ்சி

வீர வாஞ்சி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

உலக நாடுகளில் பல வன்முறைப் புரட்சிகளின் மூலம்தான் விடுதலையடைந்திருக்கின்றன. பிரெஞ்சு புரட்சியில் மாண்ட உயிர்கள் எத்தனை? ரஷ்யப் புரட்சியில் மாண்டவர்கள் எத்தனை பேர்? அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? இப்படி உலகம் முழுவதும் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும்தான் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம், சத்தியாக்கிரகம் மூலம் நெடுநாள் போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரத்தைக் காணமுடிந்தது. காந்தியடிகளின் இந்தப் போரை "கத்தியின்றி, ரத்தமின்றி" நடந்த போராக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஆங்கிலேயர்களின் ரத்தத்தை சிந்த வைக்காமல், அடிபட்டு, உதைபட்டு, துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு நம் இந்திய ரத்தத்தைச் சிந்தி இந்த சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறுக்கமுடியாது. அதுதான் அகிம்சை வழி.

மகாத்மா காந்தியடிகள் இந்திய அரசியலில் ஆழங்கால் படுவதற்கு முன்பு பால கங்காதர திலகர் காலத்தில் இந்த அகிம்சை வழியெல்லாம் நடைமுறையில் இல்லை. அதுமட்டுமல்லாமல் எந்த வழியிலாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டிவிட வேண்டுமென்கிற துடிப்புதான் நம் மக்கள் உள்ளங்களில் இருந்த கருத்து. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞன், கொடுமைக்காரனும், இந்தியர்களை புழுவிலும் கேவலமாகக் கருதக்கூடியவனும், தேசபக்த சிங்கம் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குக் கிடைத்த கொடிய தண்டனைக்குக் காரணமாக இருந்தவனுமான ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்றான் என்பது எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்வது. இது தேசபக்தியின் வெளிப்பாடா இல்லையா, இது தவறு என்று சொல்வதற்கு, இதற்கு மாற்று வழி ஏதேனும் அந்த காலகட்டத்தில் இருந்ததா? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கண்ட பிறகுதான் இந்த வீர இளைஞனின் தியாகத்தை மதிப்பிட வேண்டும்.

சரித்திர காலத்தில் ஒரு நாட்டுப் படையும், எதிரி நாட்டுப் படையும் நேருக்கு நேர் போரிட்டுக் கொண்டார்கள். அதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதையெல்லாம் கொலையாகக் கருதுவதில்லை. அதுமட்டுமல்லாமல் கொடியவர்களும், சர்வாதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட வரலாறு நமக்கு நிறையவே கிடைக்கின்றன. இத்தாலியில் ஃபாசிஸ்ட் தலைவன் முசோலினியும் அவனோடு பல ஃபாசிஸ்ட்டுகளும் மிலான் நகரில் கொல்லப்பட்டு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர். அப்படிச் செய்தவர்கள் இத்தாலி தேசபக்தர்களாகக் கருதப்பட்டார்களேயன்றி கொலைகாரர்களாக அல்ல. அவர்களுக்கு முன்பாக அதே இத்தாலியில் மாஜினியும் வன்முறை அரசியல் நடத்தியவர்தான். கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகிறபோது 'வன்முறை'யும் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் இந்த வீர வாஞ்சியின் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம். தாங்கமுடியாத தருணத்தில் வன்முறையில் ஈடுபடும் தேசபக்தர்கள் எத்தகைய தியாகங்களைப் புரிகிறார்கள். அவையெல்லாம் அவர்களது சொந்த நலனுக்காகவா, நாட்டின் நலன் கருதியா? தன்னை அழித்துக் கொண்டு இந்த நாடு நல்ல நிலை அடையவேண்டுமென்று அவர்கள் செய்த தியாகங்களுக்கு அளவுகோல் உண்டா? சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு வெள்ளைக்கார சார்ஜெண்ட் சாண்டர்ஸ் என்பான் அடித்த அடியின் காரணமாகப் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் இறந்து போனார். அன்று லாகூர் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த ஷாகீத் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் அந்த வெறிபிடித்த வெள்ளையனைச் சுட்டுக் கொன்றனர். அது கொலையா? தேசபக்தனின் பழிவாங்கும் செயலா? 24 வயதில் அந்த இளைஞர்கள் நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்த செயலை என்னவென்று சொல்லலாம்? குதிராம் போஸ், மதன்லால் திங்க்ரா போன்ற மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது யார் பொருட்டு? இதையெல்லாம் நம் மனதில் கொண்ட பிறகே வீரன் வாஞ்சிநாதனின் செயலை எடைபோட வேண்டும்.

வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று வந்த வேலையை விட்டு இங்கு நாடுபிடிக்கும் வேலையில் இறங்கினர். அவர்களது சூழ்ச்சிக்கு இரையான ராஜ்யங்கள் எத்தனை எத்தனை? வாரிசு இல்லாமல் ஒரு அரசன் இறந்தால் அந்த ராஜ்ஜியத்தைத் தங்களதாக எடுத்துக் கொண்டது பிரிட்டிஷ் சூழ்ச்சி. ராஜ்யத்தை நல்லபடி நடத்துவதாகவும், தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதாகவும் உத்தரவாதமளித்துப் பிடுங்கிக் கொண்ட ராஜ்யங்கள் எத்தனை? இந்தியர்கள் ஏமாளிகள் இவர்கள் தொடைகளில் திரித்த வரையில் லாபம் என்று கருதியது வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி. அதில் ஆளவந்தவர்கள் ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஈவு இரக்கமற்ற முரடர்கள். இந்தியர்களை மனிதர்களாகவே நினைக்கத் தெரியாதவர்கள். இந்தப் பின்னணியில் வாஞ்சியின் வரலாற்றைப் பார்ப்போம்.

அமைதியாகவும், வெள்ளையனின் அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டும் தென்னகம் முழுவதும் வாய்பேசாத மெளனிகளாக இருந்த சமயம் உரக்கக் குரல் கொடுத்த தேசிய வாதிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா மற்றும் அவர்களோடு தோளோடு தோள் நின்ற மாடசாமி போன்ற வீரர் பெருமக்கள். இவர்களைக் கைது செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்து இந்த வீரப்பெருமக்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டு வந்து அடைத்த பின் பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று இருமாந்திருந்த வெள்ளை ஆதிக்கமும், அதன் பிரதிநிதியாகத் திருநெல்வேலி ஆக்டிங் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பானும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் ஒன்று மணியாச்சி ரயில் சந்திப்பில் நடந்தது. ஆம்! 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 10-40 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் அந்த சம்பவம் நடந்தது.

17-6-1911 கலெக்டர் ஆஷ் அவனது மனைவி ஆகியோர் கொடைக்கானலில் படிக்கும் தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நெல்லை பாலம் ரயில் நிலையத்தில் காலை 9-30 மணிக்குக் கிளம்பினார்கள். அவர்கள் பயணம் செய்த ரயில் மனியாச்சியில் நின்றது. அங்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இருவரும் முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அந்த ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டு வந்த வண்டியை விட்டு இறங்கி ஆஷ் இருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறினார். வாஞ்சியைப் பார்த்த ஆஷ் பதறினான், யார் நீ என்று கத்தினான். உடனே தன் கைத்துப்பாக்கியால் ஆஷை நோக்கிச் சுட்டார். குண்டு அவன் மார்பில் பாய்ந்தது. அந்த நிலையிலும் ஆஷ் தன்னைச் சுட்டவனைப் பிடிக்க முயன்றான். அவன் மனைவி அதைத் தடுத்து விட்டாள்.

ஆஷைச் சுட்டுவிட்டு பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய வாஞ்சிநாதனைப் பிடிக்க சிலர் முயன்றனர். அவர்களை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுவிட்டார் வாஞ்சி. உள்ளே நுழைய பயந்துகொண்டு ஒரு மணி நேரம் நின்றவர்கள் கழிப்பறையிலிருந்து குண்டு வெடித்த சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தார்கள். அங்கே வாஞ்சி தனது கைத் துப்பாக்கியைத் தன் வாயினுள் சுட்டுக்கொண்டு இறந்து வீழ்ந்து கிடந்தார். குண்டடிபட்டுக் காயமடைந்த ஆஷ் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் வழியில் கங்கைகொண்டான் எனுமிடத்தில் இறந்து போனார்.

கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்த வாஞ்சிநாதன் உடலைப் போலீசார் சோதனையிட்டனர். அவர் காட்டிலாகாவில் வேலை பார்த்தவராதலால் உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தார். ஒரு பையில் தமிழில் எழுதப்பட்டு, தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்ட தேதியில்லாத ஒரு கடிதம் இருந்தது. அவர் அணிந்திருந்த கோட்டில் ஒரு மணிபர்சும், ராணி விக்டோரியாவின் படமும், இரண்டாம் வகுப்பு ரயில்வே டிக்கட் ஒன்று, ஐந்து அணா நாணயங்கள் இவை இருந்தன.

யார் இந்த வாஞ்சி? அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டையில் கோயில் மணியமாக இருந்த ரகுபதி ஐயர் என்பவரின் மகன். இவருக்கு நான்கு சகோதரிகள், இரண்டு ஆண் பிள்ளைகளில் இவர் இளையவர். இவர் செங்கோட்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.படித்தார். தனது 23ஆம் வயதில் முன்னீர்ப்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து பரோடா சமஸ்தானத்துக்குச் சென்று மரவேலை செய்யும் தொழில்துறைப் படிப்பைப் படித்துத் தேறினார். பிறகு புனலூரில் காட்டிலாகாவில் பாரஸ்ட் கார்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

அந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் பாரதமாதா சங்கம் என்றொரு இயக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. இதனை நிறுவியவர் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பார். இவர் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் பிறந்தவர். தேசபக்தியின் காரணமாக வெள்ளை அரசுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்ய எண்ணி வங்கத்திலிருந்து வந்திருந்த சில புரட்சிக்காரர்களின் தீர்மானப்படி பாரதமாதா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நீலகண்டனுக்கு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த வ.வெ.சு.ஐயரின் தொடர்பு இருந்தது. இந்த பாரதமாதா சங்கம் என்பது ஒரு ரகசிய இயக்கம். இதில் உறுப்பினர்களாக இருப்போர் ரகசியமாக ஒன்று கூடி, காளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்த தண்ணீரை வெள்ளையரின் குருதி என்று எண்ணிக் குடிப்பர். கத்தியால் தங்கல் கை விரல்களில் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர். என்ன ஆபத்து நேர்ந்தாலும், சங்கத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியாருக்குச் சொல்வதில்லை, எதிர்பாராத ஆபத்து எதுவும் ஏற்பட்டால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். எப்படியும் ரகசியம் வெளிவரக்கூடாது என்றெல்லாம் இந்தச் சங்கத்தின் நிபந்தனைகள் ஆகும்.

வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரியோடு நேர்ந்த ஏதோ மனவருத்தத்தால் அவரை ஒதுக்கிவிட்டு புதுச்சேரியிலிருந்த வ.வெ.சு.ஐயரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். செங்கோட்டையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கு ஐயரைச் சந்தித்தார். அப்போது ஐயர் சிலருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார். அதில் வாஞ்சிநாதனும் சேர்ந்து கொண்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியைப் பெற்றார். வாஞ்சிநாதன் ஆஷ் என்பானைக் கொல்ல ஏன் முடிவெடுத்தார்?

தூத்துக்குடியில் 1906இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்து ஒழிப்பதற்கு இடைவிடாமல் பாடுபட்டவன் அப்போது தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த இந்த ஆஷ் என்பான். அங்கு இவன் இருந்த காலத்தில் இவன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. நாடு போற்றும் சிதம்பரம் பிள்ளையை அவமதித்தான். அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டான். இவரை ஒழிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்பது போல நடந்து கொண்டான்.

குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளைக்காரர்கள் குள்ளிப்பதற்காக அங்கு இந்தியர்கள் யாரும் நீராடக்கூடாது என்று உத்தரவு போட்டான் ஆஷ். வ.உ.சிதம்பரம் பிள்ளை இரண்டு தீவாந்தர தண்டனை பெறக் காரணமாக இருந்தவனும், உத்தமத் தலைவராக இருந்த சுப்பிரமனிய சிவாவை அவரது தகுதியறியாமல் அவமானப் படுத்திய இந்த அன்னியனை இனியும் உலாவ விடக்கூடாது என்று முடிவெடுத்தார் வாஞ்சி. ரகசியக் கூட்டத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாரதமாதா சங்கத்தினர் வாஞ்சியின் பெயர் வரவே இந்தப் பணியை முடிக்க வாஞ்சியை ரத்தத்தால் வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர். வாஞ்சியும் திட்டமிட்டபடி ஆஷையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார்.

வாஞ்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கிலக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? "ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசத்தின் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருவோவிந்தன், அர்ஜுனன் ஆகியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."

இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஊட்டியது. எங்கு பார்த்தாலும் போலீசின் அத்து மீறல், கெடுபிடி. புனலூரில் ஒரு வக்கீல் தான் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நெருங்கியவர்கள் வீடுகள் போலீசாரால் சூறையாடப்பட்டன. கைதுக்குத் தப்பி தலைமறைவானார் மாடசாமி என்பார். தர்மராஜ ஐயர் வீடு சூறையாடப்பட்டவுடன் சித்திரவதைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

23 வயதே ஆன வாஞ்சிநாதனின் இளம் மனைவி பொன்னம்மாள், பருவமடைந்த நாள் முதலே விதவையானாள். தேசபக்தனை மணந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பதை அவள் உலகுக்கு அறிவிப்பது போல எல்லாம் நடந்தன. இந்த வழக்கில் மாடசாமி தப்பிப் போய்விட்டாலும், அழகப்ப பிள்ளை, தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாவடி அருணாசலம் பிள்ளை எனும் மாணவர் கல்லூரி விடுதியிலேயே கைது செய்யப்பட்டார். இவர்கள் தவிர இந்த வழக்குக்காக தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை, வக்கீல் குமாஸ்தா சோமசுந்தரம் பிள்ளை, சுந்தரபாண்டியபுரம் சோமசுந்தரம் ஐயர் ஆகியோரும் கைதானார்கள். இவர்களில் சிலர் அப்ரூவர்களாக ஆனார்கள். புதுச்சேரியில் இருந்த போது மாடசாமி மூலம் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொல்லப் போகிறான் என்ற செய்தி கேட்டதும், இதுபோன்ற தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லாத, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு புரட்சி செய்ய ஒரு இயக்கத்தை நடத்தி வந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பழி தன் மீது விழுந்துவிடும் என்பதால் தப்பிக் காசி நகருக்குச் சென்று விட்டார். ஆனால் விதி அவரை அங்கு சென்னை மாகாண ரகசியப் போலீசார் உருவில் துரத்திக் கொண்டு சென்றது. அவர் அங்கிருந்து கல்கத்தா சென்று விட்டார். ஆனால் காசியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்த செட்டியாரை போலீஸ் துன்புறுத்தியது.

தன்னைக் கைது செய்ய போலீசார் அலைகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார். அங்கிருந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். இவரை நீதிபதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியபோது விலங்கிடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார். இவரது தேஜசைப் பார்த்த நீதிபதி, இவரது விலங்குகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். பின்னாளில் ஓம்கார் சுவாமிகளாக நீலகண்ட பிரம்மச்சாரி கர்நாடக மாநிலம் நந்தி மலையடிவாரத்தில் வசித்த காலம் வரை அந்த நீதிபதி இவருடைய சீடனாக விளங்கி வந்தார்.

ஆஷ் கொலை வழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்றது. இறுதியில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் 4 ஆண்டுகள், ஆலப்புழை ஹரிஹர ஐயர் 3 ஆண்டுகள், தூத்துக்குடி முத்துக்குமாரசாமி பிள்ளை, சுப்பையா பிள்ளை, செங்கோட்டை ஜெகநாத ஐயங்கார், புனலூர் பாபு பிள்ளை, செங்கோட்டை பிச்சுமணி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் சிலர், சாவடி அருணாசலம் பிள்ளை, கஸ்பா அழகப்ப பிள்ளை, எட்டயபுரம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் விடுதலையானார்கள்.

ஒருக்கால் வாஞ்சி உயிரை விடாமல் இருந்திருந்தால் அவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்திருக்கும். இவர்கள் கையால் மாண்டு போவதைவிட தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதையே அந்த மாவீரன் விரும்பி ஏற்றுக் கொண்டான். இத்தோடு இந்த வழக்கின் போக்கு நின்று போய்விடவில்லை. இந்த தண்டனையெல்லாம் கொடுத்து முடித்த பிறகும், வீர சாவர்க்கருக்கு இதில் பங்கு உண்டா என்று போலீசுக்கு மூக்கில் வியர்த்தது. அவரையும் விசாரணை செய்தனர். இன்றும் கூட ஆஷ் கொலை எங்கு எவரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. வாஞ்சி புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரைச் சந்தித்தது அறிந்து போலீஸ் ஐயரை மாட்டிவைக்க தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்தது. அதற்குச் சாதகமாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லை, ஐயரின் மீது வழக்குப் போட முடியவில்லை.

தேசபக்த சிங்கங்கள் இதற்கு முன்பு பல தடவை முயன்றனர், சில வெற்றி பெற்றன, சில தோல்வியில் முடிந்தன. குதிராம் போஸ் முயன்றதில் இரு பெண்கள்தான் மாண்டனர். மதன்லால் திங்க்ரா யாரைக் கொல்ல திட்டமிட்டாரோ, அவர் தப்பிவிட, மற்றொரு குற்றவாளியான கர்சானைத் தாக்கியது. ஆனால் மணியாச்சியில் வாஞ்சிநாதன் வைத்த குறி தப்பவில்லை. இதனை வெறும் கொலையாகப் பார்ப்பதை விட ஒரு தேசபக்தன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கொள்வதுதான் சரியாக இருக்கும். காரணம், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் பானர்மன் எனும் ஆங்கில தளபதி வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டான். நூறு ஆண்டுகள் கழித்து அதே நெல்லை மண்ணில் வீரவாஞ்சி அதற்குப் பழிவாங்கிவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும்.

வாஞ்சிநாதன் இந்தச் செயலைச் செய்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் அவர்கள் பாடுபட்டு, இறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்திடச் செய்தமைக்கு அவருக்கு தேசபக்தர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகிறார்கள். வாழ்க வீர வாஞ்சியின் புகழ்!