Followers

Saturday, May 29, 2010

திருமண விருந்துகளில் தேவையா இந்த ஆடம்பரம்?

தமிழ்நாட்டு திருமண விருந்துகளில் தேவையா இந்த ஆடம்பரம்?

சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழில் தமிழ்நாட்டில் திருமண விருந்துகள் பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். பழைய காலத்தில் தலைவாழை இலைபோட்டு நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பரிமாறி விருந்து படைக்கும் முறையிலிருந்து நவீன பாணியில் நட்சத்திர ஓட்டல் போன்றவற்றில் நடக்கும் விருந்துகள் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார் கட்டுரையாளர். முற்றிலும் நமது பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாறாகக் கையில் தட்டை ஏந்தி, பெயர் தெரியாத பல உணவு வகைகளை, ஒவ்வொரு வகை உணவையும் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு நின்று கொண்டு ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கொண்டு போய் ஒரு கூடையில் போட்டுவிட்டு கைகழுவும் புதிய பாணி பந்தி பரிமாறல் பற்றிய கட்டுரை அது. இந்த வகை சாப்பாட்டுக்காக இவர்கள் செய்கின்ற செலவு திருமண செலவில் பாதியை விழுங்கி விடுகிறது. மீதி பாதியைத் திருமண மண்டபங்களுக்காகச் செலவு செய்யப்படுகிறது. இந்த ஆடம்பரங்கள் நீக்கப்பட்டு உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தினால் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதைச் சற்று சிந்தித்தால் என்ன?

இன்று தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்கின்ற அனைவருமே மைலாப்பூர், அடையாறு, ஆழ்வார்பேட்டை அல்லது அண்ணா நகரில் வசிக்கும் செல்வந்தர்கள் அல்ல. ஏழை எளியவர்களும், மாத வருவாயில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து பிள்ளைகளின் திருமணத்துக்கென்று சேமித்து செலவு செய்பவர்கள்தான் இருக்கிறார்கள். திருமணம் ஆன தினத்திலிருந்தே குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்குக் கல்விச் செலவு, திருமணச் செலவு இவற்றுக்காக தங்களது ஒரு வேளை சாப்பாட்டைக் கூட தியாகம் செய்து சேமிக்கும் தம்பதியர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் நமது கலாச்சாரப்படியும், சாஸ்த்திர முறைப்படியும் திருமணங்களைச் செய்யத்தான் விரும்புகிறார்கள். ஆனால் இன்றைய நாகரீகச் சூழலில் வெளியில் நடைபெறும் இதுபோன்ற ஆடம்பரத் திருமணங்களைப் பார்த்த பின் குறிப்பாக பெண்கள், நமது மகளுக்கும் இதுபோல பெரிய திருமண மண்டபத்தில் இதுபோலவே புதுமையான விருந்தைப் படைக்க வேண்டும் என்று ஆசைப்படத் துவங்குகிறார்கள். அப்படி ஆழம் தெரியாமல் இந்த ஆடம்பரங்களுக்குப் பலியாகி போண்டியானவர்களும் உண்டு.

ஆனால் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் செய்தி என்ன தெரியுமா? இன்னமும் சென்னைக்கு வெளியே பெரும்பாலான ஊர்களில் நமது பாரம்பரிய முறை திருமணங்களும் விருந்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஓருசில இடங்களில் சென்னையைப் போன்ற ஆடம்பர, நாகரிகமான, ஐந்து நட்சத்திர ஓட்டல் அல்லது திருமண கூடங்களில் நவீன முறை விருந்துகளும் நடைபெறத் தொடங்கிவிட்டன என்பது வருத்தத்துக்குரிய செய்திதான்.

தமிழ்நாட்டு மக்களில் எத்தனை பேர் அருசுவை அரசு நடராஜனைக் கொண்டோ, அல்லது சென்னையிலுள்ள திருமண ஒப்பந்தக்காரர்களான மீனாம்பிகா, ஞானாம்பிகா, மூகாம்பிகா, சரஸ்வதி போன்ற திருமண ஏஜன்சிக்கள் மூலமாகவோ தங்கள் வீட்டுத் திருமணங்களை ஏற்பாடு செய்யும் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். மேட்டுக்குடி
மக்களின் நாகரிகம் சாதாரண ஏழை எளிய சாமானிய மக்களையும் மெல்ல மெல்ல தழுவத் தொடங்கிவிட்டது நமது கெட்ட காலம்.

முன்பெல்லாம் கிராமங்களில் திருமணம் செய்வதற்கு மண்டபங்களை நாடுவதில்லை. வீடுகளும் பெரிய பெரிய வீடுகளாக இருக்கும் ஒரு வீட்டில் திருமணம் என்றால் அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் தத்தமது வீடுகளையும் திருமணத்துக்காக உபயோகித்துக் கொள்ள அனுமதி தருவார்கள். விருந்தினர்கள் இப்படிப் பல வீடுகளிலும் தங்கிக் கொள்வார்கள். தெரு நிறைந்த பந்தல் போடப்பட்டு அது நிறைய விருந்தினர்கள் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு அவ்வப்போது கொண்டு வந்து தரப்படும் காபி டீ, அல்லது குளிர் பானங்களை அருந்திக்கொண்டு நான்கு நாட்கள் திருமண நிகழ்ச்சியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். இப்போது நான்கு நாள் திருமணமும் வேண்டாம், வீட்டுக்குள்ளேயே திருமணமும் வேண்டாம். வாடகை குறைவான மண்டபத்தில், எளிமையாக நமது பாரம்பரியமுறைப்படி நடத்தினால் என்ன?

முன்பெல்லாம் அந்தந்தப் பகுதிகளில் திருமண சமையலுக்கென்று பிரபலமான சமையற்காரர்கள் இருந்தார்கள். குறிப்பாக மாயவரம் என்றால் காவேரிப்பட்டினம் வைத்தா, திருவெண்காடு அகோரம் ஐயர், நாராயண ஐயர், கும்பகோணம் சாட்டை வெங்கட்டராமன் இப்படி எத்தனை பெயர்கள் அன்று பிரபலமாக இருந்தன. உணவுக்கான அத்தனை சாமான்களுக்கும் அவர்கள் ஒரு பட்டியல் போட்டு கொடுத்து விடுவார்கள். இலை, காய்கறி முதல் அத்தனை சாமான்களையும் வாங்கி வந்து உக்கிராண அறையில் நிரப்பி அதற்கு ஒரு நிர்வாகியும் நியமிக்கப்படுவார். மாப்பிள்ளை அழைப்புக்கு முந்தின நாள் மாலை சமையற்காரர்கள் வந்து இறங்கி விடுவார்கள். முதலில் அடுப்புக்கு பூஜை போட்டுவிட்டு வேலையை ஆரம்பிப்பார்கள். சீர் வரிசைக்கும், விருந்தில் பரிமாறவும் தேவையான இனிப்பு வகைகள் அங்கே செய்யப்படும். ஒரு புறம் சிலர் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பார்கள். ஊறப்போட்ட தானியங்களை கல்லுரலில் சிலர் அரைத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி கோலாகலமாக சாப்பாட்டு வேலை தொடங்கி திருமணத்துக்கு மறுநாள் காலையில் கட்டுச்சாதக் கூடை கட்டி அதில் பலவிதமான கதம்ப சாதங்களை எல்லாம் தயார் செய்து சம்பந்திகளுக்குக் கொடுத்து அனுப்பும் வரை சமையற்காரர்களின் பணி இடைவிடாது நடைபெறும். பரிமாறுவதற்கு மட்டும் அதிகப்படியான நபர்களை வரவழைத்து முஹூர்த்தம் முடிந்த பிறகு அவர்கள் அனுப்பப்பட்டுவிடுவார்கள். இப்படி கல்யாண சமையல் என்பது பார்த்தும், அருந்தியும் ரசிக்க வேண்டிய செயல்களாக இருந்தன.

அதுமட்டுமல்ல, நமது பாரம்பரிய உணவு வகைகள் நாட்டின் அந்தந்தப் பகுதிகளின் வெப்ப தட்ப நிலைக்கேற்ப அமைந்திருக்கும். குளிர் அதிகமான வடதேசங்களில் அதற்கேற்ற கோதுமை உணவு வகைகளும், தென்னாட்டுக்கு ஏற்ற அரிசி உணவு வகைகளும் நமது சாப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன. நமது சீதோஷ்ணத்துக்கு மாறான உணவுகூட நமக்குப் பலவித நோய்களைத் தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் யோசிக்க வேண்டும்.

திருமண விருந்து என்றால் விருந்தாளிகள் அனைவருக்கும் நுனிவாழை இலை போட்டு தண்ணீர் வைக்கப்படும். விருந்தினர் அமர்ந்து இலையில் நீர் தெளித்து சுத்தம் செய்து
கொண்டபின் பரிமாறத் தொடங்குவார்கள். முதலில் பாயசம் அல்லது ஓர் இனிப்புடன் தொடர்ந்து நாலைந்து வகை காய்கள், கூட்டுகள், தயிர்பச்சடி, இனிப்பு பச்சடி, கோசிமலி, அவியல், உசிலி இவற்றோடு வடை, அப்பளம் பாயசம் என்று ஒவ்வொன்றும் வரிசையாக பரிமாறப்படும். இதற்கிடையே திருமண வீட்டுக்காரர் நடுவில் நின்று கொண்டு "சாருக்கு இன்னொரு கரண்டி பாயசம் ஊற்றப்பா" என்பார். "வேண்டியதைக் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்" என்பார். இதுதான் பந்தி உபசாரம் என்பது. நிறைவாக தயிர் அல்லது மோர் சாதம் முடிந்து பந்தியில் அருகில் இருப்பவர் எழுந்திருக்கும் வரை காத்திருந்து மரியாதை கொடுத்து அனைவரும் எழுந்திருப்பர். பிறகு ஆங்காங்கே தட்டுகளில் தாம்பூலம் வைக்கப்படும். இது நமது பாரம்பரிய முறை விருந்து பரிமாறும் முறை.

செட்டிநாட்டில் நடக்கும் புதுமை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கும் பந்தி உபசாரத்தை அனைவரும் கண்டிப்பாகக் கண்டு அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் பரிமாற ஒரு நபர் இருப்பார். அவர் யாருடைய இலையில் அந்த பதார்த்தம் இல்லையோ அங்கு ஓடிப்போய் அதை பரிமாற வேண்டும். விருந்தளிப்பவர் அல்லது அவரது உறவினர்கள் அங்கு நின்று கொண்டு ஒவ்வொருவரையும் அவரவர் தேவைகளை விசாரித்து உபசரித்து உணவளிக்கும் பண்பாடு இன்றும் அவர்களிடம் இருக்கிறது.

இன்று! ஓர் நட்சத்திர ஓட்டலில் இருளடைந்த மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் குசலம் விசாரிக்கும் வகையில் இடி இடிப்பது போன்ற குரலில் சிரித்தும் மகிழ்ந்தும் ஆலிங்கனம் செய்து கொண்டும், ஆண் பெண் எல்லோரும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கைகொடுத்தோ, அல்லது தழுவிக்கொண்டோ மேல்நாட்டாரைப் போல ஏதோவொரு வகையில் நிகழ்ச்சிகள் நடக்கும். ஆண்களும் பெண்களும் கைகுலுக்கிக் கொள்வது என்ன தவறா? இது என்ன பழைய பஞ்சாங்கம் என்று நினைக்காதீர்கள். அன்று வரை அதுபோன்ற கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் கூட இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தங்கள் கட்டுக்களை அறுத்தெறிந்துவிட்டு விடுதலையான சிறைப்பறவை போன்று 'சோஷலாக' நடக்கத் தொடங்குகிறார்கள் என்பதுதான் கருத்து. நிச்சயதார்த்தமோ, திருமணமோ அதுபாட்டுக்கு ஒரு மேடையில் ஒரு பிராமணர் மந்திரங்கள் சொல்ல அக்கினி மூட்டி ஹோமம் வளர்த்து நெய்யை அதில் ஊற்றிக்கொண்டே, வருகிற விருந்தினருக்கு ஹாய் சொல்லி வரவேற்றபடி மாப்பிள்ளை எப்போதடா இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவோம் என்று ஒருவழியாக தாலிகட்டி முடித்து எல்லோருக்கும் கைகுகுலுக்கி அரட்டை அடிக்கப் போவார். விருந்து என்ற பெயரில் அவரவர் ஒரு தட்டை கையில் ஏந்திக் கொண்டு, மங்கிய வெளிச்சத்தில் மேஜைமேல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களில் எதற்கு என்ன பெயர், என்ன வகை என்பதுகூட தெரியாதபடி தேவையோ தேவை இல்லையோ ஒரு கரண்டி எடுத்து பத்து அங்குல விட்டமுள்ள தட்டில் வழிய வழிய போட்டுக்கொண்டு இதை எப்படி சாப்பிட வேண்டுமென்று அருகிலுள்ளவர்களைப் பார்த்து அதுபோல சாப்பிடுவது. சாப்பிடும் உணவு எந்த வகையைச் சார்ந்தது சைவமா அல்லது அசைவமா என்பதுகூட அறிந்துகொள்ள முடியாத வகையில் அதன் தோற்றம். நம்மை நாமே உபசரித்துக் கொள்ளும் நவீன பந்தி உபசரணை இது! இது என்ன கலாச்சாரம்? இதற்கெல்லாம் காரணம் ஆடம்பரமா? பணமிருக்கும் பெருமையா? தெரியவில்லை.

நாட்டில் அவசியத்திற்கேற்ப பழைமையை ஒழித்துப் புதுமையைப் புகுத்துவது என்பது தேவைதான். அதற்காக அடிப்படையான நமது பண்பாடு கலாச்சாரம் அனைத்தையுமே குழிதோண்டி புதைத்துவிட வேண்டுமா? நாகரிகம் என்ற பெயரில் கலாச்சாரக் கொலை செய்துவிட்டு, வயிறு நிரம்பாமல் எது என்ன வகை உணவு என்பது அறியாமல் சாப்பிட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு பறக்கும் அனாச்சாரம் நமக்குத் தேவையா? இப்போதே இதனைப் பற்றி சிந்தித்து நல்ல முடிவு எடுக்காமல் போனால் பிறகு நாமும் காலாச்சார சீரழிவில் காணாமல் போய்விடுவோம்.

இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!! திருமணங்கள் மிக எளிமையாக நடத்தப்பட வேண்டும். வேண்டிய வசதியும் பணமும் இருந்தாலும் மற்றவர்களுக்காக ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். வாணவேடிக்கைகளும், வீண்செலவுகளும் குறைக்கப்பட வேண்டும். விரும்பினால் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி தவிக்கும் ஏழைபாழைகளுக்கு ஒரு கவளம் வயிறார உணவு படைக்க முயற்சி செய்யலாம், அல்லது ஆதரவற்றோர் இல்லங்களில் நல்ல உணவுக்காக ஏங்கும் மக்களுக்கு ஒரு வேளை வயிறார உணவு படைக்கலாம். ஆடம்பரங்களைத் தவிர்ப்போம். மனிதாபிமானத்தோடு நமது வீட்டு விழாக்களைக் கொண்டாடுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நாகரிகமும், பண்பாடும் நமது கிராமப் புறங்களிலிருந்துதான் புறப்படுகின்றன. நகரங்கள் அவற்றைச் சீரழிக்காமல் இருந்தால் சரி!

Friday, May 28, 2010

சீர்காழி சதி வழக்கு

சீர்காழி சதி வழக்கு:
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

(சீர்காழி சதி வழக்கு எனப் பெயர் பெற்ற இந்த ஆகஸ்ட் புரட்சியில் கைதாகி சிறையில் வாடிய அத்தனை தியாகிகளுக்கும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கும் அத்தனை பேர் சார்பிலும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். இந்த கட்டுரை அந்தத் தியாகச் செம்மல்களுக்கு அர்ப்பணம்.)

தமிழகத்தில் 1942 ஆகஸ்ட் புரட்சியின்போது தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு அடுத்ததாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவது இந்த சீர்காழி சதி வழக்கு. 1942 ஆகஸ்ட்டில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானமும், அதனையடுத்த தேசத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையும் தொடர்ந்து வடநாடு முழுவதும் தீவிரமான போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாடு அவர்களுக்குப் பின் தங்கியது இல்லை என்று கூறும் வகையில் இங்கும் பல தீவிரவாதப் போராட்டங்கள் நடைபெற்றன.

தொடக்கத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வந்த காங்கிரசார்களை, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளைக்காரனின் பேச்சு விழித்து எழச்செய்து விட்டது. இரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடொன்றில் பேசுகையில் சென்னை கவர்னர் "இந்தியாவின் இதர பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், இரயில்வே பாலங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகள் நடைபெற்று வரும்போது, சென்னை மாகாணம் மட்டும் அப்படிப்பட்ட நாச வேலைகள் எதுவும் நடைபெறாமல் அமைதியாகவே இருக்கிறது என்பது சென்னை மாகாணத்துக்குப் பெருமை, ஆகவே இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி" என்று கூறினார். இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதைப் படித்த தேசபக்தர்களுக்கு, கவர்னரின் பேச்சு ஒரு சவாலாக இருந்தது போலும். ஓகோ! வட இந்திய மக்களைப் போல தென்னிந்திய மக்கள் தேச உணர்வில் பின் தங்கியவர்கள் என்பது போல அல்லவா இவர் பேசியிருக்கிறார். நம் தேசபக்தியையும், வட இந்திய மக்களைப் போலவே நாமும் காண்பித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது போலும். சென்னை மாகாண கவர்னரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து சென்னை மாகாணம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இவைகள் தோன்றலாயின. அந்த வரிசையில் சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம்.

சீர்காழிக்கு அருகில், புகைவண்டி நிலையத்திற்கு மிக அருகில் ஒரு உப்பனாறு உண்டு. அந்த உப்பனாற்றின் மீதுள்ள ரயில்வே பாலத்திற்கு வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டி 8 பேர் மீது இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்குதான் சீர்காழி சதி வழக்கு என்று பெயர் பெற்றது. அந்த எட்டு பேரின் பெயர்கள் வருமாறு:-

1. சென்னை தினமணி உதவி ஆசிரியர் என்.ராமரத்தினம்.
2. சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபர் ஆர்.சுப்பராயன்
3. கும்பகோணம் பந்துலு ஐயரின் முதல் மகன் .வி.சேஷு ஐயர்
4. அவந்திபுரம் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி
5. கும்பகோணம் பந்துலு ஐயரின் 3ஆவது மகன் டி.வி.கணேசன், தினமணி உதவி ஆசிரியர்.
6. சீர்காழி வெங்கடேசன்
7. சீர்காழி வெங்கட்டராமன்
8. சீர்காழி சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் பல படித்த தேசபக்தி மிகுந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் கொண்டனர். எத்தனை தலைவர்கள், அத்தனை பேரும் அஹிம்சை சத்தியம் என்று தங்கள் போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்கள். அவர்களைப் பிடித்து எங்கிருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை செய்யும் இந்த வெள்ளை அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினர். இவர்களோடு தேசபக்த பாமர மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தனர்.

அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்வதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றிய சிந்தனையே அந்த இளைஞர்களுக்கு இல்லை. நம் நாடு, நம் மக்கள், நம் தலைவர்கள், நமக்கு சுதந்திரம், அடக்குமுறையைக் கையாளும் வெள்ளையனுக்கு சரியான பாடம் இதுதான் அவர்கள் மனதில் ஓடிய எண்ண அலைகள். அப்படிப்பட்ட தியாக மனம் படைத்த தஞ்சை மாவட்ட படித்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செயல்படத் துடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நாளில் மிகப் பிரபலமான பத்திரிகைகளாக விளங்கிய, ஆங்கில ஏடு "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்", தமிழ் நாளேடு "தினமணி" இவற்றின் அதிபராக விளங்கியவர் திரு இராம்நாத் கோயங்கா என்பவர். அந்த பத்திரிகைகளில் தினமணியில் பணியாற்றியவரும் பின்னர் அதன் ஆசிரியராகவும் இருந்தவர் மேதை திரு ஏ.என்.சிவராமன் அவர்கள். இவர்களோடு தினமணி என்.இராமரத்தினம் ஆகியோர் ஒன்று கலந்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதியிலுள்ள ஏதாவதொரு பாலத்துக்கு வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதற்கு முதலில் வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொள்ள வேண்டுமே, என்ன செய்வது? இராம்நாத் கோயங்காவுக்கு நாடு முழுவதிலும் நல்ல செல்வாக்கு உண்டு. அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி கோயங்காவும், சிவராமனும் ஆந்திரா, ஒரிசா எல்லையிலுள்ள செல்லூர் எனும் இடத்துக்கு ரகசியமாகச் சென்று அங்கிருந்த மைக்கா சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலருக்குப் பணம் கொடுத்து, அவர்கள் சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டுக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். ஒரு டைனமைட் என்பது சாக்பீஸ் அளவுக்கு இருக்கும். இந்த டைனமைட் குச்சிகளைப் பாதுகாப்பாகச் சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

ஏ.என்.சிவராமன் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் தானே திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு தகுதியான வீரர்களைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைத்து ஏற்பாடுகள் செய்யக் கிளம்பினார். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்த என்.இராமரத்தினம் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் கும்பகோணம் சென்றார். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஒரு தேசபக்தர் முகாமாகத் திகழ்ந்தது. அந்தக் காலத்தில் கும்பகோணம் காங்கிரசில் தலைவராக பிரபலமாக இருந்தவர் காலம் சென்ற பந்துலு அய்யர் என்பாராகும். இவர் 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போதே நகர காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சத்தியாக்கிரகிகளுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தும், கூட்டங்களில் பேசியும் பாடுபட்டவர். இவர் பாபநாசத்தை அடுத்த திருக்கருகாவூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். அந்த நாளில் அந்த ஊரைத் திருக்களாவூர் என்றே அழைப்பார்கள். இவருடைய குமாரர்கள் சேஷு அய்யர், டி.வி.கணேசன் ஆகியோரும் மிகச் சிறந்த தேச பக்தர்கள். வீரம் செறிந்தவர்கள்.

கும்பகோணம் போய்ச்சேர்ந்த ஏ.என்.சிவராமன், இந்த பந்துலு அய்யரின் மூன்றாவது புதல்வரான டி.வி.கணேசன் (இவரும் தினமணியில் உதவி ஆசிரியர்) என்பாரை அழைத்துக் கொண்டு அவருடைய சொந்த கிராமமான திருக்கருகாவூர் சென்றனர். இருவரும் திட்டங்களை ரகசியமாக வகுக்க அமைதியான இந்த கிராமத்தை நாடி வந்தனர். அந்த கிராமத்தில் இவர்கள் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி எட்டு மைல் தூரத்திலுள்ள அம்மாபேட்டைக்குச் சென்றனர். அங்கு சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அப்படிச் சந்தித்த அவ்வூர் காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டு, இருவரும் திருக்கருகாவூர் திரும்பி வந்தனர்.

அம்மாபேட்டை, பாபநாசம் அல்லது அந்த வட்டாரத்துக்குள் எங்கு எந்த சதிவேலை நடந்தாலும், அது டி.வி.கணேசனின் மீதுதான் விழும் என்று இவர்கள் அந்தப் பகுதியில் வெடி வைக்கும் திட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் பகுதியில் எது நடந்தாலும் போலீசுக்கு முதலில் மூக்கில் வியர்ப்பது கணேசன் என்ற பெயர்தான். அந்த அளவுக்கு அவர்

அந்தப் பகுதியிலும், போலீஸ் ரிக்கார்டுகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கினார். சரி, இந்தப் பகுதி வேண்டாம் என்றால், எந்த இடத்தில்தான் தங்கள் திட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வது. புதிய திட்டம் வகுப்பதற்காகத் திருக்கருகாவூரிலிருந்து புறப்பட்டு இருவரும் சுவாமிமலைக்கு அருகிலுள்ள அவந்திபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு இலட்சுமண அய்யர் என்பார் மிகுந்த தேசபக்தி மிகுந்தவர், தைரியமானவர். அவரைப் போய் பார்க்கலாம் என்று அவர் வீட்டிற்குச் சென்றார்கள். இந்த இலட்சுமண அய்யரை விட அவருடைய தம்பி கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி மகா தைரியசாலி. உற்சாகம் மிகுந்தவர். தீவிரமான காங்கிரஸ்காரர். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர். இவரைப் பார்த்தால் என்ன என்று இவரை தொடர்பு கொண்டனர்.

அவந்திபுரத்தில் கூடிப் பேசிய இம்மூவரும், அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றனர். கும்பகோணத்தில் அப்போது சென்னை விமான நிலையத்தில் பிரதம டெலிகம்யூனிகேஷன் அதிகாரியாக விளங்கிய பொன்னுசாமி ஐயர் என்பவரின் வீடு இருந்தது. இவர்கள் மூவரும் அந்த பொன்னுசாமி ஐயரின் இல்லத்துக்குச் சென்றனர். அங்கே டெலிகம்யூனிகேஷன் அதிகாரி பொன்னுசாமி ஐயர் தவிர, குடந்தை பந்துலு ஐயரின் மூத்த மகன் சேஷு ஐயர், பந்துலு ஐயரின் தம்பி மகன் துரைசாமி ஐயர், அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், பந்துலு ஐயரின் மூன்றாவது மகனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோன்றிய திட்டத்தைக் கூறினர். குறிப்பாக இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது. அது எந்த ஆறு? எந்த பாலம்? யார் செய்வது? போன்றவற்றை அந்தந்த இடத்திற்குப் போய் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.

இவர்களது யோசனைப் படி தெற்கேயிருந்து சென்னைக்குப் போகும் மெயின் லைன் இந்தப் பகுதி வழியாகப் போவதாலும், ஏதாவதொரு முக்கியமான ஆற்று ரயில் பாலம் தகர்க்கப்படுமானால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படும்படி நமது செயல் இருக்க வேண்டும் என்று கணேசன் கூறிய கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். இது நல்ல யோசனை என்று அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். சரி, திட்டம் உருவாகிவிட்டது. அதை யார் அமல் படுத்துவது என்ற கேள்வி பிறந்தது. இதைப் பற்றி பேசுவதற்காக, சேஷு ஐயரும், ராமரத்தினம், கிருஷ்ணமூர்த்தி மூவரும் சீர்காழிக்குச் சென்று அவ்வூரில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த ரகுபதி ஐயரின் குமாரனும், துடிப்பும், தேசபக்தியும், வீரமும் ஒருங்கே பெற்ற காங்கிரஸ்காரராக விளங்கிய சுப்பராயனைச் சந்தித்தனர். வந்த அன்பர்கள் சுப்பராயனிடம் தங்கள் திட்டத்தை விளக்கி அதைச் செயல் படுத்தும் விதம் குறித்து விவாதித்தனர். இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுப்பராயன், தனது உள்ளூர் நண்பர்களிடமும் இதுபற்றி பேசி, விவாதித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறினார். தினமணி ராமரத்தினமும், கணேசனும் சென்னை திரும்பிவிட்டனர்.

சில தினங்களுக்குப் பிறகு சுப்பராயனிடமிருந்து ராமரத்தினத்துக்கு ஒரு கடிதம் வந்தது. ராமரத்தினத்தை டைனமைட்டுடன் சீர்காழி வரும்படி கேட்டுக் கொண்டிருந்தது அந்தக் கடிதத்தில். உடனே ராமரத்தினம் அவ்விதமே டைனமைட் குச்சிகளுடன் சீர்காழி சென்று அவற்றை சுப்பராயனிடம் கொடுத்துவிட்டு, அவர்களது திட்டம் என்ன, எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, திட்டம் செயல்படப்போகும் விதம் குறித்து திருப்தி தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பினார்.

சீர்காழி இரகுபதி ஐயரின் குமாரரும், பின்னாளில் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிருவனத்தை நிருவி பெரும் புகழோடு விளங்குபவருமான, சுப்பராயன் தனது சீர்காழி நண்பர்களான வெங்கட்டராமன், வெங்கடேசன், சுப்பிரமணியன் ஆகியவர்களுடன் திட்டம் குறித்து விரிவாக விவாதித்து, சீர்காழி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள உப்பனாறு பாலத்தைத் தங்கள் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டனர். இந்த உப்பனாற்றுக்கு சுக்கனாறு என்று பெயர். இனி அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும், தேவைப்படும் சாதனங்களையும் சேகரிக்கத் தொடங்கினர்.

நாடு முழுவதும் பாலங்களைத் தகர்க்கும் பணி மும்முரமாக நடந்து வந்ததால், இரயில் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு மைல் தூரத்திற்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர். இரயில் தண்டவாளங்கள், பாலங்கள் இவைகளில் எவரும் வெடி வைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

இந்த இளைஞர் குழுவில் அதி தீவிரவாதிகளாகவும், உறுதியும் துணிச்சல் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள் இருவர். அவர்கள் வெங்கடேசனும், சுப்பிரமணியனும் ஆவர். இவர்கள் இருவரும் திட்டம் உருவானவுடனேயே அதைச் செயல்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாயினர். தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் இவர்கள் எழுந்து விடுவார்கள். அக்கம் பக்கத்திலோ, அல்லது வழியிலோ யார் கண்ணிலும் பட்டுவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருவரும் உப்பனாறுக்குச் செல்வார்கள். கையில் ஒரு பையில் துளைபோடும் இயந்திரம் முதலான உபகரணங்களை எடுத்துச் செல்வார்கள். அங்கு போய் ஒருவர் ஆற்றில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு, ரயில்வே பாலத்தின் தூணில் துளை போடுவார். மற்றவர் பாலத்தின் மீது நின்று கொண்டு யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி யாரும் கண்ணில் தென்பட்டால் உடனே மற்றவரை எச்சரித்து, இருவரும் அந்த இடத்தை விட்டு அந்தர்தியானம் ஆகிவிடுவார்கள். இந்த வேலையை இருவரும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். இப்படி இவர்கள் கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் வரை தினமும் தொடர்ந்து செய்து வந்தனர். ஒரு வழியாக துளையிடும் வேலை முடிந்தது.

இதுவரை எந்தவித அபாயமான சூழ்நிலையும் தோன்றாதபடி வேலையைக் கச்சிதமாக செய்து முடித்து விட்டனர். இனிமேல்தான் இவர்கள் செய்யவேண்டிய, ஆபத்தானதும் மிகவும் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டியதான வேலைகள் இருக்கின்றன. சுவற்றில் போட்ட துளையில் டைனமைட்டைப் பொறுத்தி, அதில் திரியை இணைத்து, அது கீழே உள்ள நீரில் விழுந்து நனைந்து விடாமல் இருக்க திரியோடு ஒரு குடைக்கம்பியை இணைத்துக் கட்டி நீட்டிக் கொண்டிருக்கும்படி வைத்தனர். திரி நீளம் அதிகம் இல்லாமல் இருந்தாலும், நீர் நிரம்பிய இடம் என்பதால் பத்த வைத்தவுடன் உடனே ஓடி மறைவது சிரமம் என்பதாலும், பற்ற வைத்த பிறகு ஓடிவிட போதிய நேரம் தரும் வகையில் அந்தத் திரியை எண்ணெயில் நனைத்து திரி மெதுவாக எரியும்படி செய்து கொண்டனர். இப்போது திட்டப்படி எல்லா ஏற்பாடுகளும் தயார். திரியைப் பற்ற வைக்க வேண்டியதுதான், மெயின் லைனில் உள்ள அந்த பாலம் வெடித்துச் சிதற வேண்டியதுதான், வெள்ளை அரசாங்கம் ஆடிப்போகப் போகிறது. இந்த இளைஞர்கள் பாலத்தில் வெடிகுண்டுகளை வைத்து, திரிகளையும் தயார் செய்து, திரிக்கு தீ வைக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டு, போலீசாரோ அல்லது மற்றவர்கள் கண்ணிலோ படாமல் ஓடிப்போய் புதர்களுக்கிடையில் மறைந்து கொண்டனர். அந்த நேரம் பார்த்து ரயில் தண்டவாளங்களைப் பாதுகாக்கும் போலீஸ் பார்ட்டி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.

அப்போது பாலத்தடியில் வைக்கப்பட்டிருந்த குண்டும், அதன் திரி குடைக்கம்பியோடு நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி விட்டு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். பாலத்துக்கு சேதம் இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை மிகப் பெரிய நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டது.

உப்பனாற்றுப் பாலத்துக்கு யாரோ வெடி வைத்து விட்டார்கள் என்று ஊரெங்கும் பரபரப்பு. போலீஸார் சிண்டைப் பிய்த்துக் கொண்டு புலன் விசாரிக்கத் தொடங்கினர். அங்கு இங்கு சுற்றி அலைந்து தகவல்களைத் திரட்டி, இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டனர். பலரை அழைத்துச் சென்று அவர்கள் பாணியில் விசாரித்தனர். இதில் பங்கு பெற்ற யாரும் கொன்று போட்டாலும் வாயைத் திறக்காத உறுதி படைத்தவர்கள். எங்கு இவர்களுக்கு புக இடம் கிடைத்ததோ தெரியவில்லை, இதைத் தொடர்ந்து போலீஸ் சுறுசுறுப்படைந்தது. இந்த காரியத்தைச் செய்யக்கூடியவர்கள் சீர்காழி பகுதியில் யார் என்று விசாரித்து, அன்று இரவே சுப்பராயன் வீட்டைச் சோதனையிட வந்து சேர்ந்தார்கள்.

அங்கு சுப்பராயனைக் கைது செய்து கொண்டு, அவருடைய நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த கே.எஸ்.வெங்கட்டராமன், வி.சுப்பிரமணியன், ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விசாரணை செய்ததை அடுத்து சென்னையில் தினமணி என்.ராமரத்தினம், டி.வி.கணேசன் ஆகியோரையும், கணேசனின் அண்ணன் வி.சேஷு ஐயர், கிருஷ்ணய்யர், ஜே.வெங்கடேஸ்வரன் முதலியவர்களையும் அவரவர்கள் ஊரில் இவர்களைப் பிடித்து கைது செய்து வழக்கு தொடுத்தனர். இவர்கள் மீது அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்ததாகவும், அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், உப்பனாறு பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட தேசபக்தர்கள் அனைவரும் சீர்காழி தாலுக்கா சிறையில் ஆறு மாத காலம் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் செங்கல்பட்டு விசேஷ (செஷன்ஸ்) நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் இதற்கென்று இயற்றப்பட்டதல்லவா? அந்த சட்டத்தின்படி தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்தனர். விசாரணை தொடங்கும்போதே போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி சேஷு ஐயர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கின் முடிவில் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தியும், டி.வி.கணேசனும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவரை மட்டும் பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைத்தனர். மற்ற எதிரிகளான தினமணி என்.இராமரத்தினம் அவர்களுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இரகுபதி ஐயரின் புதல்வரும், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபருமான தொழிலதிபர் சுப்பராயனுக்கு ஐந்து வருஷம் சிறை, வெங்கட்டராமனுக்கும், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணியனுக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்கள் பெல்லாரியில் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் விசாரணையின்போது ராமரத்தினம் பத்து மாத சிறை தண்டனையோடு விடுதலை செய்யப்பட்டார். எனினும் 1944இல் பிரிட்டிஷ் அரசு இவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து ஆறு மாதம் சிறையில் அடைத்தது. ஆறு மாதம் கழித்து விடுதலையான இவரை மறுபடி 1945இல் அரசாங்கம் கைது செய்து ராஜத்துவேஷ வழக்கு தொடர்ந்தது. உயர்நீதி மன்றத்தில் இவர்கள் செய்த மேல் முறையீட்டில் இவர் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலையானார். சுப்பராயனும், இதர தேசபக்தர்களும் 1946ஆம் ஆண்டில் டி.பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சரானபோது விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களை எந்த அவசரச் சட்டத்தின் கீழ் விசாரித்து தனி நீதிமன்றத்தில் தண்டனை அளித்தார்களோ, அந்தச் சட்டம் செல்லாது என்று உயர் நீதி மன்றத்தில் ஓர் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்த அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கை சாதாரண கிரிமினல் சட்டப்படியே விசாரிக்கலாம் என்று உயர்நீதி மன்றம் கூறிவிடவே, வேறு வழியில்லாமல் இவர்கள் மீது திரும்பவும் விசாரணை தொடங்கியது. இதில் சுப்பராயன் அவர்களும், வெங்கட்டராமன், சுப்பிரமணியன்,

வெங்கடேசன் ஆகியோர் மட்டும் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றனர், மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நடந்த காலத்தில் இதன் விசாரணை விவரங்களை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். காரணம் இதில் சம்பந்தப்பட்டவர்கள், மிக பிரபலமான பத்திரிகையாளர்கள், தொழிலதிபர் மற்றும் நன்கு படித்த இளைஞர்கள் என்பதால். வழக்கில் 5ஆவது எதிரியான டி.வி.கணேசன் சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பத்திராதிபர் ராம்நாத் கோயங்கா, தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், தினமணி உதவி ஆசிரியர் வெங்கட்டராஜுலு நாயுடு ஆகியோர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் கணேசன் விடுதலை செய்யப்பட்டாலும், பிரிட்டிஷ் அரசுக்கு இவர் மீது ஒரு கண் இருந்தது. இவர் மிக பயங்கரமான புரட்சிக்காரர் என்பது அவர்களது கணிப்பு. ஆகையால் மறுபடியும் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சுமார் எட்டு மாத காலம் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டாவது எதிரியான சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்றாலும், சிறை தண்டனை பெற்றார். நாட்டுக்காக தனது சொந்த சுக போகங்களையும் மறந்து இவர் செய்த தியாகம் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய செய்தி. இவர் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிருவனத்தைத் தொடங்கி பெரிய தொழிலதிபராகி அந்த ஊரிலேயே வாசம் செய்யலானார். திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் போன்ற பல பொது அமைப்புக்களில் இவர் பொறுப்பு வகித்து சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தார் என்பது நமக்கெல்லாம் நிறைவு தரக்கூடிய செய்தி. இவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று இவரது தந்தையார் ரகுபதி ஐயர் விரும்பினார் ஆயினும், காந்திஜியின் ஆன்ம பலம் வழிகாட்டியதால் திரு சுப்பராயன் சற்றும் அசைந்து கொடுக்காமல் தனது தண்டனை காலத்தை அனுபவித்தார் என்பது அவர் நினைவை தமிழகம் என்றென்றும் போற்றி நினைவில் நிறுத்த வேண்டும். வாழ்க சீர்காழி சதி வழக்குத் தியாகிகள், வளர்க அவர்களது புகழ்!

திருவையாறு கலவர வழக்கு

திருவையாறு கலவர வழக்கு

ஆன்மீகத் துறையில் மட்டுமல்லாது திருவையாறு அரசியலிலும் முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்ச கட்டத்தை அடைந்த 1942 ஆகஸ்ட் புரட்சி எனும் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின்போது அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு புரட்சிகளில் ஒன்று திருவையாற்றிலும், மற்றொன்று சீர்காழி உப்பனாறு பாலத்திற்கு வெடிகுண்டு வைத்த நிகழ்ச்சியாகவும் நடந்திருக்கிறது. சீர்காழி சதி வழக்கில் அன்றைய "தினமணி' இதழைச் சேர்ந்த திரு இராமரத்தினம், ஏ.என்.சிவராமன், திருச்சி சிம்கோ மீட்டர் நிறுவனத்தின் அதிபராக பின்னாளில் விளங்கியவரும் சீர்காழி பெருநிலக்கிழார் எஸ்.இரகுபதி ஐயரின் மகனுமான சுப்பராயன், கும்பகோணம் பந்துலு ஐயரின் குமாரனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன், சேஷு ஐயர் போன்றவர்கள் சம்பந்தப்பட்டு பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள். திருவையாறு நிகழ்ச்சியில் அரசர் கல்லூரி மாணவர்களாயிருந்த சோமசேகர சர்மா, இராம சதாசிவம், ஏ.ஆர்.சண்முகம், கு.ராஜவேலு, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் போன்றவர்களும் மேலும் பெரும்பாலும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவையாற்றை அரசியல் வரைபடத்தில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கும்படி நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களையும் இந்த நூலில் சிறிது பார்க்கலாம்.

1942 ஆகஸ்ட் புரட்சியின் போது நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ. எனினும் திருவையாற்றில் நடந்த "திருவையாறு கலவர வழக்கு" போராட்டத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். திருவையாறு நகரத்தில் போலீசுக்கு எதிராகக் கலகம் கல்லெறி வைபவம், போலீஸ் தடியடி, அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திருவையாறு தபால் அலுவலகம், முன்சீப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகுந்து அடித்து நொறுக்கி, தீ வைத்த சம்பவங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், இறுதியில் 44 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கைப் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

1942 ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஆங்கில அரசுக்கு காங்கிரசின் மீதும், காந்தியடிகள் மீதும் பயங்கர கோபம். பழிதீர்த்துக் கொள்ள பயங்கர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆகவே நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே அவர்களாகவே பெரும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்தி தலைவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் நடுமே இந்தியா மந்திரி அமெரியின் விஷமத்தனமான வியாக்கியானம் வேறு மக்கள் கையில் கிடைத்ததும், ஓகோ இப்படித்தான் போர் புரிய காந்தியடிகள் கட்டளையிட்டிருக்கிறார் போலும், இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் இந்தியா மந்திரி பொய் சொல்வாரா? என்ற நினைப்பில் அவர் குறிப்பிட்டமாதிரியில் போராட்டம் திசை திரும்பிவிட்டது.

அரசாங்கத் தரப்பில் கூறப்படும் வழக்கின் விவரம் இதோ:

நாடு முழுவதிலும் நடக்கும் மக்கள் எதிர்ப்பின் ஒரு பங்காக திருவையாறு நகரத்திலும் மக்கள் கொதிப்படைந்தனர். காந்திஜி கைதான 9-8-1942க்கு மறுநாள் 10-8-1942 அன்று திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவர்கள் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த அரசர் கல்லூரி என்பது மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்திரங்கள் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. பின்பு ஆங்கில அரசு இவற்றை அரசு சார்பில் சத்திரம் இலாகா மூலமாக நடத்தி வந்தது. அந்த வகையில் திருவையாற்றில் சமஸ்கிருத கல்லூரி தொடங்கப்பட்டு, முதலில் சமஸ்கிருதம் மட்டும் சொல்லித்தரப்பட்டு, பின்பு அதில் தமிழ் வகுப்பும், பிறகு இப்போது மற்ற எல்லா பாடங்களும் சொல்லித்தரப்படும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசர் கல்லூரி மாணவர்கள்தான் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்தோடு தலைவர்கள் கைதையும் எதிர்த்து ஓர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு ஆந்திரா பகுதியிலிருந்து இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிப்பதற்காக வந்து விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்பவர் முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தார்.
அவரோடு கு.ராஜவேலு, பின்னாளில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்டவர் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கீற்றுப் பந்தல் பிறகு தீப்பிடித்து எரிந்து போயிற்று. இந்த விபத்து பற்றி விசாரணை செய்ய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் டி.நடராஜ முதலியார் என்பவர் கல்லூரிக்கு வந்து விசாரணை செய்தார். இதில் இரண்டு மாணவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினார். அவர்கள் கவிஞர் சுந்தரம் மற்றும் கோவிந்தராஜன் என்பவர். இவர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகள் 27, 44 ஆக சேர்க்கப்பட்டவர்கள். இந்த கல்லூரிக்குள் நடந்த இந்த நிகழ்வு, வெளியேயும் பரவும் என்று போலீஸ் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.

12-8-1942 அன்று, அதாவது உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்த நாளுக்கு இரண்டாவது நாள் மாலை 5 மணிக்கு புஷ்யமண்டபத் துறையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவிக்கரை எனும் ஊரைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சிதம்பரம் பிள்ளை என்பவரும் தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல் நிலைப் பள்ளி என வழங்கும் திருவையாறு Central High School முன்னாள் ஆசிரியர் சங்கரய்யர் என்பவரும் பேசினார்கள். இவர்கள் பேச்சில் மக்கள் இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு எந்த வகையிலும், அவர்களது யுத்த முஸ்தீபு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கக்கூடாது என்று பேசினர்.

இந்த கூட்டத்தில் பேசியவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், தேசபக்தியைத் தூண்டியும் பேசினர். மறுநாள் காலை அதாவது 13-8-1942 அன்று திருவையாறு கடைத் தெருவில் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. விசாரித்ததில் மகாத்மா மற்றும் இதர தலைவர்களின் கைதை எதிர்த்து கடைக்காரர்கள் கடையடைப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. அப்போது காலை 7 அல்லது 8 மணி இருக்கும், சுமார் 200 அல்லது 300 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தார்கள். இவர்கள் அனைவர் கையிலும் கழி அல்லது கற்கள் வைத்திருந்தனர். இந்தக் கூட்டம் அப்படியே கடைத்தெருவுக்குள் கிழக்கிலிருந்து மேற்காக நுழைந்து வரத்தொடங்கியது. மற்றொரு கூட்டம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரத் தொடங்கியது. அப்படி அந்தக் கூட்டம் கடைத்தெருவில் வரும்போது திறந்திருந்த கடைக்காரர்களை கடையை மூடும்படியும் அப்படி இல்லாவிட்டால் அதன் விளைவை எதிர்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு வந்தனர். இந்தச் செய்தி போலீசுக்குப் போயிற்று. உடனே சப் இன்ஸ்பெக்டர் T.நடராஜ முதலியார் போலீஸ் காவலர்கள் லோகநாதன், பராங்குச நாயுடு, சிவிக் கார்டுகள் வடிவேலு, அப்துல்லா, அப்துல் அஜீஸ் குப்புசாமி ஆகியோருடன் கடைத்தெருவுக்கு வந்தார். போலீஸ் அதிகாரியும் போலீஸ் மற்றும் சிவிக் கார்டுகளும் கடைக்காரர்களைக் கடைகளைத் திறந்து வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு, தாங்கள் பாதுகாப்பளிப்பதாகவும் உறுதி கூறினர். கூட்டத்தினரை போலீசார் கலைந்து போய்விடுமாறு கேட்டுக் கொண்டனர், அவர்கள் போகாததால் எச்சரித்தனர். பிறகு மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர். ஆனால் கூட்டம் கலைந்து போகாமல் மேலும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை எடுத்து வீசினர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வளவும் ஆட்கொண்டார் சந்நிதி முன்பாகக் கடைத்தெருவின் கிழக்குப்பகுதியில் நடந்து கொண்டிருக்க, கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து மெல்ல நகர்ந்து தபால் ஆபீசுக்குச் சென்று விட்டனர். அங்கு சென்று தபால் ஆபீசின் மீது கற்களை எறிந்தும், கதவை உடைத்துத் திறந்து கொண்டு, மூங்கிலால் ஆன தடுப்பை எடுத்துச் சாலையில் வீசி, மின் பல்புகளை உடைத்து, தந்தி ஒயர்களை அறுத்தெறிந்து அறிவிப்பு பலகையையும் உடைத்துத் தெருவில் விட்டெறிந்தனர்.

சுமார் 10 மணிக்கு மக்கள் கூட்டம் மிகப் பெரிதாக ஆனது. 300 அல்லது 400 பேருக்கு மேல் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அத்தனை பேர் கைகளிலும் கழியும்க கற்களும் இருந்தன. இந்தக் கூட்டம் விரைந்து ஊரின் தென்பகுதியில் காவிரி நதியின் தென் கரையில் இருந்த முன்சீப் கோர்ட் வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கூட்டத்தினர் அனைவரும் ஒரே மாதிரியாக "மகாத்மா காந்திக்கு ஜே" என்று கோஷமிட்டுக் கொண்டு சென்றனர். கோர்ட் கட்டடத்தில் கூட்டம் கல்லெடுத்து வீசி, கூறையில் பதித்திருந்த கண்ணாடிகளையும், பெயர் பலகையையும் உடைத்தனர். சிலர் கோர்ட்டுக்கு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மேஜை நாற்காலி இவற்றைப் போட்டு உடைத்தனர். கோர்ட் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் மன்னரின் போட்டோ உடைத்தெறியப்பட்டது. பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்ட புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. இங்க் புட்டிகள் உடைத்தெறியப்பட்டன. டைப் அடிக்கும் மெஷின் உடைக்கப்பட்டு சாலையில் கொண்டு போய் போட்டு நசுக்கப்பட்டு, பின்னர் அருகிலிருந்த காவிரி ஆற்றில் வீசி எறியப்பட்டது. வாசலில் நெருப்பு அணைக்க மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த வாளிகள் நசுக்கி தூக்கி எறியப்பட்டன. கோர்ட் அறை தவிர ஆபீசின் இதர பாகங்களில் இருந்த மேஜை நாற்காலிகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து ஆபீஸ் பணம் சூறையாடப்பட்டது. அலுவலக கேட் உடைக்கப்பட்டு நடு சாலையில் போடப்பட்டு போக்குவரத்தை நிறுத்தினர். இவை அனைத்தும் சுமார் 15 நிமிஷ நேரத்துக்குள் நடந்து முடிந்தன.

கூட்டம் உடனே அங்கிருந்து அடுத்த கட்டடத்தில் இருந்த சப் ரிஜிஸ்டரார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கும் கோர்ட்டில் நடந்தது போன்ற அழிவுகளும், உடைத்தலும் நடைபெற்றன. காலை 11-15 அல்லது 11-30 மணி சுமாருக்கு போலீஸ் அங்கு வந்து சேர்ந்தது. போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து கோர்ட் மற்றும் சப் ரிஜிஸ்டிரார் அலுவலகக் கட்டடங்களில் நடைபெற்ற வன்முறையைக் கண்டு கூடியிருந்த கூட்டத்தைத் தடிகொண்டு தாக்கி விரட்டலாயினர். உடனே கும்பல் நாலா திசைகளிலும் சிதறி ஓடிவிட்டது. அந்தச் சந்தடியில் கு.ராஜவேலு, காவிரி ஆற்று வெள்ளத்தில் குதித்து, நீரின் போக்கிலேயே நீந்திக் கொண்டு போய், திருப்பழனம் எனும் கிராமத்தில் கரை ஏறினார். அங்கு அவர் ஒரு வாழைத் தோட்டத்தில் படுத்திருந்துவிட்டு, பின்னர் அவ்வூரைச் சேர்ந்தவரும், ராஜவேலுவோடு படித்தவருமான ஒரு நண்பர் வீட்டிற்குப் போய்விட்டார்.

சம்பவம் நடந்த நாளன்று மாலையிலிருந்தே நூற்றுக்கணக்கானோரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கடைத்தெருவில் நிறுத்தி, அங்கிருந்த கடைக்காரர்கள், கோர்ட், சப்ரிஜிஸ்டிரார் ஆபீசில் வேலை செய்வோர், பிராசஸ் சர்வர்கள், போஸ்ட் மாஸ்டர், முன்சீப், சப்ரிஜிஸ்டிரார் ஆகியோரைவிட்டு அடையாள அணிவகுப்பு நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பிறகு இறுதியில் 44 பேர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.

கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் போலீசாரைத் தங்கள் கடமையைச் செய்யமுடியாமல் தடுத்ததாகவும் கு.ராஜவேலு உள்ளிட்ட 19 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. முன்சீப் கோர்ட்டையும், ரிஜிஸ்டிரார் ஆபீசையும் அடித்து நொறுக்கியதாக எஸ்.டி.சுந்தரம் உள்ளிட்ட 38 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. சிலர் இந்த இரண்டு வழக்கிலும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அன்று மால சுமார் 4.00 அல்லது 4.30 மணிக்கு மாவட்ட மாஜிஸ்டிரேட், மாவட்ட காவல்துறை அதிகாரி, ரிசர்வ் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சப் இன்ஸ்பெக்டர் டி.நடராஜ முதலியார் விசாரணையை நடத்தினார். இவர் நடத்திய விரிவான விசாரணை, அடையாள அணிவகுப்பு இவற்றை நடத்தி கடைசியாக 28-9-1942 அன்று சம்பவம் நடந்து 1-1/2 மாதம் கழித்து 44 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

கடைத் தெருவில் கூட்டமாக ஆயுதங்களுடன் சென்று கடைக்காரர்களை மிரட்டி, கடைகளை மூடச்சொல்லியும், அப்படி மூடாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லி வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீசார் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் இந்திய பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்படி, ஏ.ஆர்.சண்முகம், கருப்பையா, கிருஷ்ணசாமி செட்டி, சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், ரெங்கநாதன், கு.ராஜவேலு, எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, கோவிந்தசாமி, ரெத்தினம் சேர்வை, குஞ்சு பிள்ளை, மாணிக்கம் பிள்ளை, ஏகாம்பரம் பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, பஞ்சன், ராம சதாசிவம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதுபோலவே, ராஜாராம் ராவ், நல்லதம்பி, ஏ.ஆர்.சண்முகம், சன்னாசி சேர்வை, ஊமையன் சுப்ரமணியன், எஸ்.வி.பழனி, கருப்பையன், கோவிந்தராஜுலு, சிதம்பரம், பங்காருசாமி, கிருஷ்ணசாமி செட்டி, மணி பிள்ளை, ராஜா வன்னியர், அமர்சிங் வன்னியர், சந்தானம் செட்டி, கோவிந்தராஜன் செட்டி, ஜெகன்னாத செட்டி, கோபால்சாமி செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், சாமிநாத பிள்ளை, காளி வன்னியர், சுந்தரேசன், குஞ்சு ஆகியவர்கள் மீது முன்சீப் கோர்ட், சப் ரிஜிஸ்டிரார் அலுவலகம் ஆகியவற்றைத் தாக்கி உபகரணங்களை உடைத்தல், ஆவணங்களை எரித்தல், ஆற்றில் போட்டு அழித்தல் போன்ற செயல்களுக்காக வழக்கு பதிவு செய்தனர்.

அரசாங்கத் தரப்பில் மொத்தம் 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் முன்சீப், போஸ்ட் மாஸ்டர், சப் ரிஜிஸ்டிரார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் அடங்குவர். இந்த வழக்கு நாம் முன்பே சொன்னவாறு 27-2-1943 அன்று அதாவது சம்பவம் நடந்து 6 மாத காலத்துக்குப் பிறகு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு 4-1/2 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 85 பேர் எதிரிகளின் தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளில் பெரும்பாலோர் குற்றவாளிகளுக்கு அலிபி, அதாவது குற்றம் நடந்த நேரத்தில் அவர்கள் அங்கு இல்லை என்றே சொன்னார்கள். அவை எதுவுமே ஏற்கப்படவில்லை.

போலீசாருக்கும், கோர்ட் சிப்பந்திகளுக்கும் கல்லூரி மாணவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னதாகக் கூறப்பட்டது. என்றாலும், வலுவான சான்றுகள் எதுவும் சொல்லி நிரூபிக்கப்படவில்லை. மேலும் மாணவர்களுக்கும் இவர்களுக்கும் விரோதம் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் வாதிடப்பட்டது. குறிப்பாக உண்ணாவிரதம் இருந்த பந்தல் எரிந்த சம்பவத்திற்காக மூன்று மாணவர்களை சப் இன்ஸ்பெக்டர் நடராஜ முதலியார் போலீஸ் நிலையத்துக்கு 17-8-1942 அன்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். என்றாலும் அவர்கள் மறுநாள் விடுவிக்கப்பட்டு விட்டனர். உண்மையில் போலீசுக்கு மாணவர்கள் மீது விரோதம் இருந்திருக்குமாயின் இவர்களைக் கைது செய்திருப்பார்களே என்றும் கூறப்பட்டது.

குற்றவாளிகளில் முதல் 11 பேர் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு விட்டனர். இப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறை, அராஜகம், அடித்து நொறுக்குதல் எல்லாம் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுவதும், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக சகஜமாக போய்விட்டதையும் நாம் அறிவோம். ஆனால், அன்று 1942இல் “க்விட் இந்தியா” தீர்மானத்தை காந்திஜி நிறைவேற்றிய காரணத்தால், இந்திய பாதுகாப்புச் சட்டம் என்ற கடுமையான சட்டத்தை அமல் படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாலும் இந்த வீரர்கள், வன்முறைதான் என்றாலும், தேசபக்தி காரணமாகச் செய்து பல ஆண்டுகள் சிறையில் தவம் செய்த வீரவரலாற்றை எங்ஙனம் மறக்க இயலும். குறுகிய நோக்கில் தற்போது நடைபெறும் வன்முறையோடு ஒப்பிடுகையில், தேசபக்தி காரணமாக நடந்த இந்தச் செயல் வீரச்செயலாகவே கருத வேண்டும்.

கு.ராஜவேலு சிறை சென்று மீண்ட பின்னர் சென்னை சென்று தமிழ். எம்.ஏ. தேர்வு பாஸ் செய்து, காமராஜ் முதல்வராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் தமிழ்த்துறையில் பணியாற்றி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து, வீர சாவர்க்கரின் எரிமலையைத் தமிழில் எழுதி, சிலப்பதிகாரத்துக்கு விளக்க உரை எழுதி, “வைகறை வான மீன்கள்” எனும் தலைப்பில், விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி நாவல் எழுதி, பாரதியின் குயில் பாட்டுக்கு விளக்கம் எழுதி, இன்றும் நம்மிடையே பெரும் புகழோடு வாழ்ந்து வருபவர். இவரைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளரும், பாரதி அன்பரும், தேசிய வாதியுமான பெ.சு.மணி அவர்கள் எழுதியிருக்கும் பகுதி பயனுள்ளதாக இருக்கும். அது, "பழந்தமிழ் இலக்கிய மரபையும், நவீன படைப்பிலக்கியத் தமிழ் மரபையும் இணைக்கும் தமிழ் பேரறிஞர்களுள் கு.ராஜவேலும் ஒருவர். இவ்வகையில் திருமணம் பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார், டாக்டர் மு.வரதராசனார் வரிசையில் புகழ் எய்தியவர் கு.ராஜவேலு. பதினான்கு வயதிலேயே சிறுகதை எழுதி நவீன படைப்பிலக்கியத் துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர். புதினங்கள் (Novels) பலவற்றைப் படைத்தவர்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், தமது சிறைவாசத்தையும் புதிய படைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். காந்தியடிகள் தலைமையில் நிகழ்ந்த வீறார்ந்த "வெள்ளையனே வெளியேறு" (Quit India Movement) எனும் ஆகஸ்ட் சுதந்திர போராட்ட இயக்கத்தை, சுய அனுபவ வெளியீடாக "ஆகஸ்ட்-1942" எனும் பெயரில் புதினமாக எழுதியவர். புகழ் பூத்த இலக்கிய இதழான "கலைமகள்" இவருடைய "காதல் தூங்குகிறது" எனும் புதினத்திற்கு முதல் பரிசு அளித்து கெளரவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில், இரண்டு ஆண்டுகளைச் சிறை வாசத்தில் கழித்த தியாகியாகவும் பாராட்டப்பெற்று வருபவர்.

காந்தியடிகள், நேருஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராசர் முதலான தேசியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பெரும் பேற்றினைப் பெற்றவர். குறிப்பாக பெருந்தலைவர் காமராசரின் 'நம்பற்குரிய வீரராக' என்றும் திகழ்ந்தவர். ஆசிரியரான பின்பும், மாணவராகவே இருந்து படித்துக் கொண்டிருப்பவர் என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் போற்றப்பட்டவர் கு.ராஜவேலு. "சிந்திப்பவர்க்கே நெஞ்சில் களி வளர" புதிய சிந்தனைகளைத் தமிழ் மணக்கும் உரைநடையில் வழங்கும் இவருடைய உரைநடை ஆற்றலை, டாக்டர் மு.வ., "கு.ராஜவேலுவின் உரைநடையே கவிதை" என்று புகழ்ந்துள்ளார். பெரியோரைப் போற்றலும், நடுவுநிலை தவறாத நேர்மைத் திறனும், கூரிய அறிவும், சீரிய பண்பும், பரந்த உள்ளமும் தெளிந்த நீரோடை போன்ற நடையும், கவிஞரின் உள்ளக் குறிப்பைத் தெள்ளத் தெளிய அறிந்து அதைத் தயங்காது உரைக்கும் அவரது பண்புகள்"

விடுதலையான கவிஞர் எஸ்.டி.சுந்தரம், சுதந்திர இந்தியாவில் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திரு கு.ராஜவேலு, எம்.ஏ., அவர்கள் அரசு உயர் அலுவலராக இருந்து இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இதில் கு.ராஜவேலுவின் சார்பில் 4 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் கல்லூரி தங்கும் விடுதியின் மேற்பார்வையாளர் ஒருவரும், கல்லூரி பேராசிரியர் ஒருவருமாவர். அவர்கள் 13-4-1942 அன்று ராஜவேலு விடுப்பு கேட்டு விண்ணப்பித்ததைச் சுட்டிக் காட்டினர். ஆனால் அரசாங்கத் தரப்பு சாட்சி ஒருவர் இவர் அன்று கூட்டத்தில் இருந்ததை உறுதிப்படுத்தினார். ஈரோட்டைச் சேர்ந்த முனிசிபல் கவுன்சிலர் முத்துச்சாமி அய்யர் என்பவர், ராஜவேலு ஈரோட்டுக்கு வந்திருந்ததாகச் சொன்னதும் ஏற்கப்படவில்லை. ராஜவேலுவின் சகோதரர் ஒருவர் பிரபலமான கேசவதாஸ் காளிதாஸ் சேட் என்பவரிடம் பணியாற்றி யிருக்கிறார்.

ராஜவேலு திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் படிக்கும் மாணவர். இவரும் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்களும் அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சாட்சியத்தின் வாயிலாக ராஜவேலு ஈரோட்டில் மாணவர்கள் கூட்டங்களை நடத்தி வந்தார் என்றும், அவர் நல்ல பேச்சாளர் என்றும், அவர் ஒரு தொழிற்சங்க செயலாளர் என்றும் கூறப்பட்டது. ராஜவேலு ஈரோட்டைச் சேர்ந்தவர், அரசர் கல்லூரியில் தமிழ் படிப்பதற்காக இங்கே இருந்தார் என்பதையும் நாம் சொல்ல வேண்டும்., இவர் சம்பவம் நடந்த அன்று கல்லூரியில் காலை 8 முதல் பகல் 1 வரை இருந்தார் என்று ஒரு சாட்சி. அன்று இவர் பிரின்சிபாலைச் சந்தித்து ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகிக்க அழைத்ததாகவும் சாட்சி இருந்தது. இவற்றை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

சோமசேகர சர்மா என்றொரு கல்லூரி மாணவர். அதே கல்லூரியைச் சேர்ந்தவர். இவரும் காலையிலிருந்து கல்லூரியில் இருந்ததாக உடன் படிக்கும் மாணவர் ஒருவர் சாட்சியம் அளித்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. ஆர்.கணேச அய்யர் எனும் பேராசிரியரும் இந்த மாணவன் கல்லூரியில் இருந்ததை சாட்சியம் அளித்தும் பலனில்லை. அதற்கு இந்த மாணவர் கலவரத்திலும் ஈடுபட்டுவிட்டு, கல்லூரியிலும் தலை காட்டியிருக்கலாம் என்பது போல தீர்ப்பளித்திருக்கிறார்.

13-8-1942 அன்று திருவையாற்றில் கடையடைப்பும், அதையொட்டிய பொது மக்கள் கலவரம், போலீஸ் தடியடியும், பிறகு தபால் அலுவலகம், மாவட்ட முன்சீஃப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் கோர்ட்டில் நீதிபதி கே.வி.கண்ணப்ப முதலியார், அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திருவையாறு மாவட்ட முன்சீப், மாவட்ட நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை, திருவையாறு சார்பதிவாளர் மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கை 12-8-1942, திருவையாறு போஸ்ட் மாஸ்டர், திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்குக் கொடுத்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இந்திய பாதுகாப்புச் சட்டப்படி பதிவானது. வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலை யானார்கள். மீதமுள்ள 40 பேருக்குத் தண்டனை.

மேற்படியான தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெல்லாரியில் உள்ள அலிப்பூர் ஜெயிலுக்கு அனுப்பி "C" வகுப்பில் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வாழ்க திருவையாற்றுத் தியாகிகள் புகழ்! (நன்றி: ஆவணங்களைச் சேகரித்துக் கொடுத்த வழக்கறிஞர் நா.பிரேமசாயி அவர்களுக்கு நன்றி.)

Friday, May 21, 2010

வ.ரா.

வ.ரா. என்கிற வ.ராமசாமி.

இருபதாம் நூற்றாண்டில் தனது தமிழ் எழுத்துக்களின் வழியாக மக்களுக்கு விடுதலை உணர்வினை புகட்டிய தமிழ் எழுத்தாளர் வ.ரா. என அறியப்படும் வ.ராமசாமி. 1889ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகிலுள்ள திங்களூர் கிராமத்தில் பிறந்தார். 1910ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் விடுதலை இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்று கொண்டவர் வ.ரா.

இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மூடப்பழக்க வழக்கங்களே என்று முழுமையாக நம்பினார். அதனால் அதனை எதிர்த்துப் போராடுவதில் வ.ரா. முனைந்து நின்றார்.

'சுதந்திரன்'. 'சுயராஜ்யா' ஆகிய பத்திரிகைகளில் சுதந்திர உணர்வினைத் தூண்டும் விதத்திலும், மூடப் பழக்க வழக்கங்களைப் போக்கும் விதத்திலும் தொடர்ந்து எழுதி வந்தார். 'கதர்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள், நாட்டு உணர்வினை பாமரனும் எளிதாகப் பெரும் விதத்தில் அமைந்திருந்தன. காத்தரின் மேயோ என்ற அயல்நாட்டுப் பெண் இந்திய மாதர் என்ற பெயரில் எழுதிய நூலில் இந்தியர்களை மிகவும் இழிவாகச் சித்தரித்திருந்தார். இதனை மறுக்கும் விதத்தில் வ.ரா. எழுதிய "மாயா மேயோ அல்லது மாயோவுக்கு சவுக்கடி" என்ற நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆங்கிலேயர்களின் கண்டனத்துக்கும் உள்ளானது.

1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்ற வ.ரா. அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது. சிறையில் இருந்த காலத்தில் இவருக்கு இருந்த ஆஸ்த்துமா நோய் மிகவும் அதிகமானது. உடல் நலிந்த நிலையில் சிறையிலிருந்து வெளிவந்தார். மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராகவும், பாண்டிச்சேரியில் தீவிர வாத இயக்கங்களில் ஈடுபட்டிருந்த வ.வே.சு.ஐயர், அரவிந்தர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நெருங்கிய சகாவாகவும் வ.ரா. திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகின் தனக்கென தனி இடத்தைப் பெற்ற வ.ரா. 1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் நாள் சென்னையில் காலமானார்.

திரு வ.வெ.சு. ஐயர்


சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்
திரு வ.வெ.சு. ஐயர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

வ.வெ.சு.ஐயரின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம். திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881இல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் வ.வெ.சுப்பிரமணியம் என்கிற வ.வெ.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்ற பிளீடர் என்ற ஒரு தேர்வு இருந்தது. அதைப் படித்து வக்கீலாக இவர் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது, மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி.

இவருடைய உறவினர் ஒருவர் பர்மாவில் ரங்கூனில் இருந்தார்; பெயர் பசுபதி ஐயர். அவரிடம் சென்று ரங்கூனில் வக்கீலாகப் பணியாற்றினார் வ.வெ.சு.ஐயர். அங்கு இவருக்கு தான் லண்டன் சென்று பாரிஸ்டராக வேண்டுமென்கிற ஆசை வந்தது. லண்டன் புறப்பட்டுச் சென்றார். ரங்கூனில் இருக்கும்போது திருச்சியைச் சேர்ந்தவரும் மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர்தான் புகழ்மிக்க டி.எஸ்.எஸ்.ராஜன் ஆவார். இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த இந்தியா ஹவுஸ் எனுமிடத்தில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமானது இந்த இந்தியா ஹவுஸ். அவர் ஒரு சிறந்த தேசபக்தர். அங்கு இவருக்கு வீரர் சாவர்க்காருடைய நட்பு கிடைத்தது. அங்கிருந்த தேசபக்தர்கள் ஒன்றுகூடி இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணியை மேற்கொண்டனர்.

இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குப் பல விதங்களிலும் தொல்லைகள் கொடுத்தது. அதைத் தவிர்க்க இவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் குடிபுகுந்தனர். அப்போது ஷியம்ஜி கிருஷ்ண வர்மா இறந்து போனார். லண்டனில் பாரிஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் இவர் அந்தப் பட்டத்தை நிராகரித்துவிட்டார். தேசபக்திதான் அதற்குக் காரணம். அப்போது 1910இல் லண்டனில் கர்ஸான் வில்லி எனும் ஆங்கிலேய அதிகாரி மதன்லால் திங்க்ரா எனும் ஓர் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இந்தியா ஹவுசில் குடியிருந்த அனைத்து இந்தியர்களுக்கும் பிடித்தது சனியன். போலீஸ் தொல்லை அதிகரித்தது. விடுதி சோதனைக்குள்ளாகியது. திங்க்ராவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாரிசிலிருந்து லண்டன் வந்த சவார்க்கரை ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. வ.வெ.சு.ஐயர் இவரைச் சிறையில் சென்று சந்தித்தார். அதனால் ஐயர் மீது சந்தேகப்பட்ட ஆங்கில அரசு இவரையும் கைது செய்ய திட்டமிட்டது. இந்த செய்தியை எப்படியோ ஐயர் தெரிந்து கொண்டார். சவார்க்கரும் ஐயரை எப்படியாவது சிறைப்படாமல் தப்பி இந்தியா போய்விடுமாறு கேட்டுக் கொண்டார். ஐயர் ஏற்கனவே தாடி மீசை, தலைமுடி இவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சீக்கியர் போல உடை அணிந்துகொண்டு தனது கைப்பெட்டியுடன் கிளம்பி கப்பல் ஏறச் சென்றார். இவர் பெட்டியில் இவரது பெயரின் முன் எழுத்துக்களான 'வி.வி.எஸ்' பொறிக்கப்பட்டிருந்தது.

இவரைப் பல இடங்களிலும் தேடிய போலீஸ், இந்தியா செல்லவிருந்த கப்பலில் ஏறியிருந்த இந்தியர்களை சோதனையிட்டது. அதில் ஒரு சர்தார் இருந்ததைப் பார்த்தார். இவர்களுக்கு வ.வெ.சு.ஐயர் பற்றிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சர்தார் நிச்சயமாக ஐயராக இருக்கமுடியாது என்று நினைத்தனர். எனினும் ஒரு சந்தேகம். அவரைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஐயர் பெயருக்கு வந்ததாகப் பொய்யான ஒரு தந்தி கவரை, அதன் மீது வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கொடுத்தனர். அந்த உறையை வாங்கிப் பார்த்த ஐயர், "ஓ! இது எனக்கு வந்த தந்தி அல்லவே. வி.வி.எஸ். ஐயர் என்பவருக்கல்லாவா வந்திருக்கிறது" என்றார்.

போலீசார் விடவில்லை. "மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியில் வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருக்கிறதே" என்றனர். உடனே சமயோசிதமாக ஐயர், "அதுவா, என் பெயர் வி.விக்ரம் சிங், அதன் சுருக்கம்தான் இந்த வி.வி.எஸ்." என்றார் நிதானமாக. எவ்வித ஆபத்தான சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர் ஐயர் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது. ஓராண்டு காலம் பாரிசில் தங்கிய ஐயர் பிறகு ரோம் நகருக்குப் போனார். அங்கிருந்த பல மாறுவேஷங்களில் பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். இவர் கடலூரில் இறங்கி அங்கிருந்த நடந்தே புதுச்சேரி போய்ச்சேர்ந்தார்.

ஐயர் புதுச்சேரி வந்த செய்தி போலீசாருக்கு நெடுநாள் கழித்தே தெரிந்தது. இங்கும் போலீஸ் தொல்லை இவரைத் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியிலிருந்து சிலர் வந்து புதுச்சேரியில் ஐயரைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஐயர் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொடுத்தார். அதில் வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி ஆகியோரும் அடங்குவர். 1911ஆம் வருஷம் அப்போது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட வாஞ்சிநாதன் எனும் இளைஞரும் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இவர் ஏற்கனவே புதுச்சேரி சென்று அங்கிருந்த சுதேசித் தலைவர்களைச் சந்தித்தனால், புதுச்சேரி சுதேசிகள் ஐயர் உட்பட அனைவரும் சந்தேக வலையில் சிக்கிக்கொண்டார்கள்.

புதுச்சேரியில் ஐயருக்கு எத்தனை தொல்லைகள் தரவேண்டுமோ அத்தனையையும் போலீசார் தந்தனர். இவ்வளவு தொல்லைகளுக்கி இடையிலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முதல் உலக யுத்தம் 1918இல் முடிந்தது. இந்திய தேசபக்தர்களுக்கு மாற்றம் நேரிடும் என்ற உணர்வு வந்தது. அதனால் 1918இல் பாரதியார் இந்திய எல்லைக்குள் நுழைய கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1920இல் ஐயர் இந்திய எல்லைக்குள் வந்தார். வந்த பின் இந்தியா முழுவதும் சில மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹரித்துவார், கவி ரவீந்திரரின் சாந்திநிகேதன், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆகிய ஆசிரமங்களுக்கும் சென்று வந்தார். இது போன்ற குருகுலம் ஒன்றை தமிழகத்தில் தொடங்க ஆர்வம் கொண்டார். ஊர் திரும்பிய பின் "தேசபக்தன்" என்ற பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்தார். அதில் வெளியான கட்டுரை ஒன்று தேச விரோதமானது என்று சொல்லி இவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை கிடைத்தது. அப்போது பெல்லாரி சிறையில் இருந்த போதுதான் கம்ப ராமாயண ஆங்கில கட்டுரையை எழுதி முடித்தார்.

1922இல் சிறையிலிருந்து விடுதலையான ஐயர் திருநெல்வேலி ஜில்லாவில் சேரன்மாதேவி எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓர் ஆசிரமம் நிறுவினார். அதற்கு 'பாரத்துவாஜ ஆசிரமம்' என்று பெயர். மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆசிரமத்தில் அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிதாகச் சேர்ந்த சில பிராமண குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். ஆனால் ஐயர் மற்ற எல்லா குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். அவர் மட்டுமல்ல, அவர் பெண் மற்றும் மற்ற பிராமண குழந்தைகளும் அப்படியே. ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், இப்படி சில பிராமண பிள்ளைகளின் பெற்றொர்கள் ஒரு நிபந்தனையாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனி உணவு அளித்தது ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்தது. அது பிரம்மாண்டமாக வளர்ந்தது. தமிழ்நாட்டு வழக்கப்படி, இங்கு ஜாதியை வைத்துத்தான் அரசியல், ஆகையால் ஐயர் மீது ஜாதி வெறியன் என்ற முலாம் பூசப்பட்டது. பூசிய தலைவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர். மகாத்மா காந்தி வரையில் இந்த பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஐயர் மிகவும் மனம் வருந்தி நொந்து போனார்.

இந்த நிலையில் 1925இல் ஜுன் மாதம் குருகுல குழந்தைகளோடு பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்ற போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்க தாண்டியபோது அவளது தாவணி நீரில் பட்டு அவளை அருவிக்குள் இழுத்துக் கொண்டது. அவளைக் காப்பதற்காக அவளைத் தொடர்ந்து தண்ணீரில் பாய்ந்த ஐயரும் அருவிக்குள் போய்விட்டார். இருவரின் உடலும் கிடைக்கவில்லை. ஒரு மகத்தான வீரபுருஷனின் இறுதிக் காலம் அவலச்சுவையோடு முடிந்து போய்விட்டது.வ.வெ.சு.ஐயரின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம். திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881இல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் வ.வெ.சுப்பிரமணியம் என்கிற வ.வெ.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்ற பிளீடர் என்ற ஒரு தேர்வு இருந்தது. அதைப் படித்து வக்கீலாக இவர் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது, மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி.

இவருடைய உறவினர் ஒருவர் பர்மாவில் ரங்கூனில் இருந்தார்; பெயர் பசுபதி ஐயர். அவரிடம் சென்று ரங்கூனில் வக்கீலாகப் பணியாற்றினார் வ.வெ.சு.ஐயர். அங்கு இவருக்கு தான் லண்டன் சென்று பாரிஸ்டராக வேண்டுமென்கிற ஆசை வந்தது. லண்டன் புறப்பட்டுச் சென்றார். ரங்கூனில் இருக்கும்போது திருச்சியைச் சேர்ந்தவரும் மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர்தான் புகழ்மிக்க டி.எஸ்.எஸ்.ராஜன் ஆவார். இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த இந்தியா ஹவுஸ் எனுமிடத்தில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமானது இந்த இந்தியா ஹவுஸ். அவர் ஒரு சிறந்த தேசபக்தர். அங்கு இவருக்கு வீரர் சாவர்க்காருடைய நட்பு கிடைத்தது. அங்கிருந்த தேசபக்தர்கள் ஒன்றுகூடி இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணியை மேற்கொண்டனர்.

இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குப் பல விதங்களிலும் தொல்லைகள் கொடுத்தது. அதைத் தவிர்க்க இவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் குடிபுகுந்தனர். அப்போது ஷியம்ஜி கிருஷ்ண வர்மா இறந்து போனார். லண்டனில் பாரிஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் இவர் அந்தப் பட்டத்தை நிராகரித்துவிட்டார். தேசபக்திதான் அதற்குக் காரணம். அப்போது 1910இல் லண்டனில் கர்ஸான் வில்லி எனும் ஆங்கிலேய அதிகாரி மதன்லால் திங்க்ரா எனும் ஓர் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இந்தியா ஹவுசில் குடியிருந்த அனைத்து இந்தியர்களுக்கும் பிடித்தது சனியன். போலீஸ் தொல்லை அதிகரித்தது. விடுதி சோதனைக்குள்ளாகியது. திங்க்ராவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாரிசிலிருந்து லண்டன் வந்த சவார்க்கரை ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. வ.வெ.சு.ஐயர் இவரைச் சிறையில் சென்று சந்தித்தார். அதனால் ஐயர் மீது சந்தேகப்பட்ட ஆங்கில அரசு இவரையும் கைது செய்ய திட்டமிட்டது. இந்த செய்தியை எப்படியோ ஐயர் தெரிந்து கொண்டார். சவார்க்கரும் ஐயரை எப்படியாவது சிறைப்படாமல் தப்பி இந்தியா போய்விடுமாறு கேட்டுக் கொண்டார். ஐயர் ஏற்கனவே தாடி மீசை, தலைமுடி இவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சீக்கியர் போல உடை அணிந்துகொண்டு தனது கைப்பெட்டியுடன் கிளம்பி கப்பல் ஏறச் சென்றார். இவர் பெட்டியில் இவரது பெயரின் முன் எழுத்துக்களான 'வி.வி.எஸ்' பொறிக்கப்பட்டிருந்தது.

இவரைப் பல இடங்களிலும் தேடிய போலீஸ், இந்தியா செல்லவிருந்த கப்பலில் ஏறியிருந்த இந்தியர்களை சோதனையிட்டது. அதில் ஒரு சர்தார் இருந்ததைப் பார்த்தார். இவர்களுக்கு வ.வெ.சு.ஐயர் பற்றிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சர்தார் நிச்சயமாக ஐயராக இருக்கமுடியாது என்று நினைத்தனர். எனினும் ஒரு சந்தேகம். அவரைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஐயர் பெயருக்கு வந்ததாகப் பொய்யான ஒரு தந்தி கவரை, அதன் மீது வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கொடுத்தனர். அந்த உறையை வாங்கிப் பார்த்த ஐயர், "ஓ! இது எனக்கு வந்த தந்தி அல்லவே. வி.வி.எஸ். ஐயர் என்பவருக்கல்லாவா வந்திருக்கிறது" என்றார்.

போலீசார் விடவில்லை. "மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியில் வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருக்கிறதே" என்றனர். உடனே சமயோசிதமாக ஐயர், "அதுவா, என் பெயர் வி.விக்ரம் சிங், அதன் சுருக்கம்தான் இந்த வி.வி.எஸ்." என்றார் நிதானமாக. எவ்வித ஆபத்தான சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர் ஐயர் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது. ஓராண்டு காலம் பாரிசில் தங்கிய ஐயர் பிறகு ரோம் நகருக்குப் போனார். அங்கிருந்த பல மாறுவேஷங்களில் பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். இவர் கடலூரில் இறங்கி அங்கிருந்த நடந்தே புதுச்சேரி போய்ச்சேர்ந்தார்.

ஐயர் புதுச்சேரி வந்த செய்தி போலீசாருக்கு நெடுநாள் கழித்தே தெரிந்தது. இங்கும் போலீஸ் தொல்லை இவரைத் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியிலிருந்து சிலர் வந்து புதுச்சேரியில் ஐயரைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஐயர் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொடுத்தார். அதில் வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி ஆகியோரும் அடங்குவர். 1911ஆம் வருஷம் அப்போது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட வாஞ்சிநாதன் எனும் இளைஞரும் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இவர் ஏற்கனவே புதுச்சேரி சென்று அங்கிருந்த சுதேசித் தலைவர்களைச் சந்தித்தனால், புதுச்சேரி சுதேசிகள் ஐயர் உட்பட அனைவரும் சந்தேக வலையில் சிக்கிக்கொண்டார்கள்.

புதுச்சேரியில் ஐயருக்கு எத்தனை தொல்லைகள் தரவேண்டுமோ அத்தனையையும் போலீசார் தந்தனர். இவ்வளவு தொல்லைகளுக்கி இடையிலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். முதல் உலக யுத்தம் 1918இல் முடிந்தது. இந்திய தேசபக்தர்களுக்கு மாற்றம் நேரிடும் என்ற உணர்வு வந்தது. அதனால் 1918இல் பாரதியார் இந்திய எல்லைக்குள் நுழைய கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1920இல் ஐயர் இந்திய எல்லைக்குள் வந்தார். வந்த பின் இந்தியா முழுவதும் சில மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹரித்துவார், கவி ரவீந்திரரின் சாந்திநிகேதன், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆகிய ஆசிரமங்களுக்கும் சென்று வந்தார். இது போன்ற குருகுலம் ஒன்றை தமிழகத்தில் தொடங்க ஆர்வம் கொண்டார். ஊர் திரும்பிய பின் "தேசபக்தன்" என்ற பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்தார். அதில் வெளியான கட்டுரை ஒன்று தேச விரோதமானது என்று சொல்லி இவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை கிடைத்தது. அப்போது பெல்லாரி சிறையில் இருந்த போதுதான் கம்ப ராமாயண ஆங்கில கட்டுரையை எழுதி முடித்தார்.

1922இல் சிறையிலிருந்து விடுதலையான ஐயர் திருநெல்வேலி ஜில்லாவில் சேரன்மாதேவி எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓர் ஆசிரமம் நிறுவினார். அதற்கு 'பாரத்துவாஜ ஆசிரமம்' என்று பெயர். மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆசிரமத்தில் அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிதாகச் சேர்ந்த சில பிராமண குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். ஆனால் ஐயர் மற்ற எல்லா குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். அவர் மட்டுமல்ல, அவர் பெண் மற்றும் மற்ற பிராமண குழந்தைகளும் அப்படியே. ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், இப்படி சில பிராமண பிள்ளைகளின் பெற்றொர்கள் ஒரு நிபந்தனையாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனி உணவு அளித்தது ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்தது. அது பிரம்மாண்டமாக வளர்ந்தது. தமிழ்நாட்டு வழக்கப்படி, இங்கு ஜாதியை வைத்துத்தான் அரசியல், ஆகையால் ஐயர் மீது ஜாதி வெறியன் என்ற முலாம் பூசப்பட்டது. பூசிய தலைவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர். மகாத்மா காந்தி வரையில் இந்த பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஐயர் மிகவும் மனம் வருந்தி நொந்து போனார்.

இந்த நிலையில் 1925இல் ஜுன் மாதம் குருகுல குழந்தைகளோடு பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்ற போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்க தாண்டியபோது அவளது தாவணி நீரில் பட்டு அவளை அருவிக்குள் இழுத்துக் கொண்டது. அவளைக் காப்பதற்காக அவளைத் தொடர்ந்து தண்ணீரில் பாய்ந்த ஐயரும் அருவிக்குள் போய்விட்டார். இருவரின் உடலும் கிடைக்கவில்லை. ஒரு மகத்தான வீரபுருஷனின் இறுதிக் காலம் அவலச்சுவையோடு முடிந்து போய்விட்டது.

வ.உ.சிதம்பரம் பிள்ளை


சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
2. வ.உ.சிதம்பரம் பிள்ளை.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்


வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றி நாமக்கல்லார்


சிதம்பரம் பிள்ளையென்று பெயரைச் சொன்னால் - அங்கே
சுதந்திர தீரம் நிற்கும் கண்முன்னால்
விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் - நாட்டின்
விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!

திலக மகரிஷியின் கதைபாடும் - போது
சிதம்பரம் பிள்ளை பெயர் வந்து சுதிபோடும்
வலது புயமெனவே அவர்க்குதவி - மிக்க
வாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும் பதவி.

சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் - அதில்
துன்பம் பல சகித்த அணிமனத்தான்
விதேச மோகமெல்லாம் விட்டவனாம் - இங்கே
வீர சுதந்திரத்தை நட்டவனாம்.

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் கப்பலோட்டிய தமிழன் என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றி வைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். காங்கிரஸ் வரலாற்றில் மிதவாத அரசியல் வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. அவர்கள் போராடினார்.

தென்னாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி அவர்களோடு போரிட்டு தூக்கிலடப்பட்டு மாண்டுபோன பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம்தான் இவர் பிறந்த ஊர். இவர் பிறந்தது 1872 செப்டம்பர் 5ஆம் நாள். கட்டபொம்மனின் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை அவர்களின் உறவினராக வந்தவர்தான் வ.உ.சி. இவரது தந்தை உலகநாதப் பிள்ளை, தாயார் பரமாயி அம்மை. இவருக்கு நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர்.

தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியும் வக்கீல் தொழிலுக்கான பிளீடர் கல்வியை திருச்சியிலும் பயின்று வக்கீலானார். ஒட்டப்பிடாரத்தில் இவர் வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார். 1895இல் தமது 23ஆம் வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆறு ஆண்டு காலத்தில் இறந்து போகவே மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வ.உ.சிக்கு இளமை முதலே தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கொண்டிருந்தார். 1906இல் இவர் மகாகவி பாரதியாரை சென்னை 'இந்தியா' அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இவரும் ஓர் சிறந்த பேச்சாளர்.

1905இல் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர் பிரிட்டிஷ்காரர்கள். நாடெங்கிலும் எதிர்ப்பலை எழுந்தது. விபின் சந்திர பால் சென்னை வந்து கடற்கரையில் ஓர் சொற்பொழிவாற்றினார். 1908இல் சென்னை ஜனசங்கம் எனும் அமைப்பு ஒன்று தோன்றியது. இதில் வ.உ.சி. நிர்வாகக் குழுவின் இருந்தார். வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனும் பெயரில் ஒரு கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இதற்கு முதலீடு செய்வதற்குப் பலரையும் சென்று பங்குகள் சேர்த்து ஒரு கப்பலையும் வாங்கி பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைச் செய்தார். இதற்கு ஆங்கிலேயர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது. போட்டி காரணமாக பிரிட்டிஷ் கம்பல் கம்பெனி பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்வதாகக்கூட அறிவித்தது.

1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குதான் திலகர் தலைமையிலான தீவிரவாதக் கோஷ்டிக்கும், மிதவாதத் தலைவர்களுக்குமிடையே பூசல் எழுந்து மாநாடு நின்று போயிற்று. இதற்கு வ.உ.சி. மகாகவி பாரதி ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னையிலிருந்து ரயிலில் சென்றனர். அங்கிருந்து திருநெல்வேலி திரும்பிய வ.உ.சி. தேசாபிமானச் சங்கம் என்றதொரு அமைப்பைத் தோற்றுவித்தார். சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டார். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். ஆங்கில நிர்வாகம் இவர் மீது ஆத்திரம் கொண்டது. தனது வீரமான மேடைப் பேச்சினால் மக்களை மிகவும் கவர்ந்து வந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா இவரது ஆதரவில் இவரோடு தங்கியிருந்து பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். எங்கும் சுதந்திர வேகத்தையும் 'வந்தேமாதர' கோஷத்தையும் இவர்கள் இருவரும் பரப்பி வந்தனர். அப்போது தூத்துக்குடியில் துணை மாஜிஸ்டிரேட்டாக இருந்த ஆஷ் எனும் ஆங்கிலேயன் வ.உ.சி மீது வன்மம் பாராட்டி இவருக்கு இடையூறு செய்து வந்தான். அதற்கு திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் துரையும் ஆதரவாக இருந்தான்.

1918இல் ஏப்ரல் 13. பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் பயங்கரமாக பொதுமக்களை ஆயிரக்கணக்கில் சுட்டுத் தள்ளினான் ஜெனரல் டயர் என்பவன். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரிய கூட்டம் நடைபெற்றது. வ.உ.சியும் சிவாவும் பேசினர். விபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாள் விழாவாக அது நடைபெற்றது. போலீஸ் அடக்குமுறையாலும், ஆஷ், கலெக்டர் ஆகியோரின் வெறித்தனத்தாலும் அன்று திருநெல்வேலியில் பயங்கர கலவரம் நடைபெற்றது. இதனை நெல்லைச் சதி வழக்கு என்ற பெயரில் விசாரித்தார்கள் இந்த வழக்கின் முடிவில் வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையையும் கொடுத்தார்கள். இதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காகவும் வ.உ.சிக்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வ.உ.சிக்கு வயது முப்பத்தைந்துதான். இதனையடுத்து வ.உ.சி. மேல்முறையீடு செய்து அதில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ராஜ நிந்தனைக்காக ஆறு ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நான்காண்டு தீவாந்தரமும் கொடுத்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். இதன் பின்னரும் இங்கிலாந்தில் இருந்த பிரீவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ததில் தீவாந்தர தண்டனைக்குப் பதிலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவர் கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் இருந்த போது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார். சிறையில் இவரை கல் உடைக்கவும், செக்கிழுக்கவும் வைத்து வேடிக்கை பார்த்தது ஆங்கில ஆளும் வர்க்கம். இவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பிணித்து செக்கிழுக்க வைத்தனர். இந்த செக்கு இரண்டு கருங்கற்களால் ஆனது. இந்த செக்கு பின்னர் 1972இல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கிடையே ஆஷ் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராக ஆனான். அவன் தன் மனைவியுடன் கொடைக்கானலில் படிக்கும் தன் மக்களைப் பார்ப்பதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் மாற்று ரயிலுக்காகத் தன் ரயில் பெட்டியில் காத்திருக்கும்போது, வாஞ்சிநாதன் எனும் செங்கோட்டை வாலிபன் உள்ளே நுழைந்து ஆஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, வெளியே வந்து தானும் சுட்டுக்கொண்டு இறந்து போனான். ஆளுவோரின் சந்தேகம் வ.உ.சி., பாரதி. வ.வெ.சு. ஐயர் ஆகியோர் மீதும் விழுந்தது. சிறையிலிருந்த வ.உ.சிக்கு இதனால் மேலும் சில கஷ்டங்கள் நேர்ந்தன. பாரதியை பிரிட்டிஷ் வேவுகாரர்கள் வேவு பார்த்துத் தொல்லை கொடுத்தனர்.

130 பவுண்டு எடையோடு சிறை சென்ற இவர் வெளிவரும்போது 110 பவுண்டு இருந்தார். இவர் சிறையில் இருந்த காலத்தில் இவரது சுதேசி கப்பல் கம்பெனி ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டு விட்டது. இவர் 24-12-1912இல் விடுதலை செய்யப்பட்டார். சுப்பிரமணிய சிவா 2-11-1912இல் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் இவர் சிறையில் இருந்த போது தொழுநோய் இவரைப் பற்றிக்கொண்டது. வியாதியஸ்தராகத்தான் இவர் வெளியே வந்தார். இது சிறை தந்த சீதனம் என்று மனம் நொந்து கூறினார் சிவா. ஆயிரக்கணக்கான மக்கள் வழியனுப்ப சிறை சென்ற வ.உ.சி. விடுதலையாகி வெளியே வரும்போது எவரும் இல்லை. தொழுநோய் பிடித்த சுப்பிரமணிய சிவா மட்டும் காத்திருந்தார். இதனை பி.ஆர்.பந்துலு எனும் சினிமா தயாரிப்பாளர் தான் தயாரித்த "கப்பலோட்டிய தமிழன்" எனும் படத்தில் காட்டியிருந்தார். பார்த்தோர் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

சிறைவாசம் முடிந்து வ.உ.சி. தூத்துக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ செல்லவில்லை. மாறாக சென்னை சென்றார். இவர் சிறைப்பட்டதால் இவரது வக்கீல் சன்னது பறிக்கப்பட்டது. சென்னையில் என்ன தொழில் செய்வது? மண்ணெண்ணை விற்றார். சரிப்பட்டு வரவில்லை. மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் எனும் தேசபக்தர் இவருக்கு உதவினார். சென்னையில் சில பிரபல தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோர் அவர்கள். சென்னை பின்னி மில், சென்னை டிராம்வே தொழிலாளர்கள், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் ஆகியவற்றில் தீவிர பங்கெடுத்துக் கொண்டார். இந்திய தொழிலாளர் இயக்கத்தில் அன்னிய நாட்டில் பிறந்த அன்னிபெசண்ட் ஈடுபடுவதை இவர் எதிர்த்து குரல் கொடுத்தார்.

சிலகாலம் இவர் கோயம்புத்தூரிலும் சென்று தொழிற்சங்க பணியாற்றினார். எனினும் முன்பு போல காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லை. திலகர் காலமாகிவிட்ட பிறகு மகாத்மா காந்தி 1919இல் இந்திய சுதந்திரப் போரை முன்னின்று நடத்தத் தொடங்கினாரல்லவா? அப்போது அவர் ஒரு சில நேரங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டு மகாத்மாவின் சாத்வீக இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு அவரது நம்பிக்கை தளர்ந்தது போலும். 1920 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இவர் "திலகர் ஒத்துழையாமை மூலம் சுயாட்சி பெற விரும்பவில்லை யென்றும், சட்டப்படியான ஆயுதத்தைப் பயன்படுத்தியே சுதந்திரம் பெறவேண்டும்" என்றும் பேசியிருப்பதிலிருந்து இவருக்குச் சிறுகச் சிறுக மகாத்மாவின் சாத்வீக இயக்கத்தில் நம்பிக்கி இழப்பு நேர்ந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு காங்கிரசிலிருந்து இவர் விலகினார்.

கொள்கை காரணமாக காங்கிரசிலிருந்து விலகிய வ.உ.சி. பிறகு 1827இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மகாநாட்டில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். அந்த மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். எனினும் பிறகு இவர் காங்கிரசில் தொடர்ந்து செயல்படமுடியவில்லை. 1916இல் சென்னை ராஜதானியில் டாக்டர் நாயர் தலைமையில் தோன்றி வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார் இயக்கத்தின்பால் இவருக்கு ஈடுபாடு வந்தது. 1927இல் இவர் கோயம்புத்தூரில் நடந்த மாநாட்டில் தலைமை ஏற்றார். எனினும் இந்த இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியாக மாறியபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்த போதும் வ.உ.சி. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பல துறைகளிலும் பிராமணரல்லாதார் பிந்தங்கி இருப்பதற்காக அவர் வருந்தினார், அவர்கள் முன்னேற பாடுபடவும் விரும்பினார் என்றாலும் அதற்காக பிராமணர் - பிராமணரல்லாதார் எனும் சாதி வேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கம் தோன்றுவதையோ, வளர்வதையோ அவர் விரும்பவில்லை.

பெறுதர்கரிய ஓர் சிறந்த தேசபக்தரான வ.உ.சிதம்பரம் பிள்ளை1936 நவம்பர் 18ஆம் தேதி இரவு 11-30 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் தருவாயில் மகாகவியின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனும் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிந்தது. வாழ்க கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்!


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பற்றி நாமக்கல்லார் பாடிய பாடல்.

சிதம்பரம் பிள்ளை என்று பெயர் சொன்னால் - அங்கே
சுதந்திர தீரம் நிற்கும் கண் முன்னால்
விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் - நாட்டின்
விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!

திலக மகரிஷியின் கதை பாடும் - போது
சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்
வலது புயமெனவே அவர்க்குதவி - மிக்க
வாழ்த்துக்கு உரிமை பெற்றான் பெரும் பதவி.

சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் - அதில்
துன்பம் பல சகித்த அணி மனத்தான்
விதேச மோகமெல்லாம் விட்டவனாம் - இங்கே
வீர சுதந்திரத்தை நட்டவனாம்.

நன்றி: "தமிழன் இதயம்" நாமக்கல்லார்.

தமிழ்த் தென்றல் திரு வி. க

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

இந்திய சுதந்திரப் போர் பல அரிய தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியல் மட்டும் சார்ந்தவர்கள்தான் இவர்களில் பெரும்பாலோர். அரசியல் வாதியாகவும், மொழிப்புலமையும் பெற்ற பலரும் சுதந்திரப் போர் வீரர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர் அரசியல், மொழிப்புலமை, சைவம், தொழிற்சங்கப் பணி, சமூக சீர்திருத்தங்கள் என்று பல துறைகளிலும் பாடுபட்டவர் இவர் போல வேறு யாரும் உண்டா என்பது தெரியவில்லை. தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் தமிழ்த்தென்றல் என்று போற்றப்படும் திரு வி.க. ஆவார். இவரது தனித்தமிழ் எழுத்தும் பேச்சும் இவருக்குத் தனி முத்திரைப் பதித்தது.

திருவாரூர் விருத்தாசல கலியாணசுந்தர முதலியார் என்பதன் சுருக்கமே திரு. வி.க. என்பது. இவர் 1883இல் பிறந்தார். இவரது பாட்டனார் காலத்திலேயே இவர்கள் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டது. இவரது தந்தையார் விருத்தாசல முதலியார். இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி இறந்த பின், சின்னம்மாள் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் பிறந்தனர். இவர்களில் ஆறாவது குழந்தைதான் திரு.வி.க.

இவரது தந்தையாருக்கு சென்னை ராயப்பேட்டையில் வியாபரம் தொழில். இவர் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை மராமத்து செய்யும் பணியை ஏற்றுக்கொண்டு துள்ளம் எனும் கிராமத்தில் குடியேறினார். அங்கு இருக்கும்போதுதான் 26-8-1883இல் திரு.வி.க. பிறந்தார். இவருக்கு ஆரம்பகால கல்வியை அவ்வூரில் பள்ளிக்கூடம் இல்லாததால் இவரது தந்தையே புகட்டி வந்தார். பின்னர் சென்னையில் வந்து பள்ளியில் சேர்ந்தார். இவரது குடும்ப சூழல் காரணமாகவும், இவரது சொந்த காரணங்களாலும் பத்தாவதோடு இவரது பள்ளிக்கல்வி முடிவடைந்தது. ஆனால் இவரது புறக்கல்வி தேவாரம், திருவாசகம் என்று தொடர்ந்தது. இவரது மரியாதைக்கு உரியவரான கதிரைவேற் பிள்ளை என்பவரிடம் இவர் தமிழ் பயின்றார். அவர் காலமான பின் மயிலை வித்வான் தணிகாசல முதலியார் என்பவரிடம் தமிழ் பயின்றார். தமிழோடு இவர் சமஸ்கிருதமும் நன்கு பயின்றார். இவரது சொந்த முயற்சியால் ஆங்கிலம், வேதாந்தம், பிரம்மஞானதத்துவம் போன்ற பல துறைகளில் இவர் முயன்று கற்றுத் தேர்ந்தார்.

கல்வி ஒருபுறமிருந்தாலும் வாழ்வதற்கு ஒரு தொழில் வேண்டுமே. அதனால் சில காலம் ஸ்பென்சர் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது தேசிய உணர்வு அந்த கம்பெனியின் வெள்ளை முதலாளிகளுக்குப் பிடிக்காமல் வேலை போயிற்று. அப்போது சென்னை வந்து சொற்பொழிவு ஆற்றிய வங்கதேசபக்தர் விபின் சந்திர பாலின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அரவிந்தரின் பத்திரிகையும் இவரை ஒரு தேசபக்தனாக உருவாக்கின. வேலை போன பிறகு தனது தமையனார் நடத்திய அச்சகம் வாயிலாக பெரிய புராணக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். திருமந்திரத்துக்கும் விளக்கம் எழுதி வெளியிட்டார். பிறகு சிலகாலம் வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தம்மை இணைத்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். 'தேசபக்தன்' எனும் பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தினார். பிறகு அதிலிருந்தும் வெளியேறி "நவசக்தி" பத்திரிகையின் ஆசிரியரானார். 1941இல் இந்த பத்திரிகையும் நின்று போயிற்று. 1917இல் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்ட திரு வி.க. 1934 வரை அதில் முழுமையாக பங்கேற்றார். இவர் காலத்தில் காங்கிரசில் முன்னணி வகித்தவர்கள் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வே.ராமசாமி நாயக்கர், திரு வி.க. ஆகியோராவர். எனினும் கால ஓட்டத்தில் இந்தக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனி வழியே பயணிக்க வேண்டியதாகி விட்டது. இதில் முதல் இருவரும் காங்கிரசை விட்டுப் போய்விட்டாலும் திரு வி.க மட்டும் கட்சியை விட்டு விலகாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். 1918இல் வாடியா என்பவராம் தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சங்கத்தில் இவர் ஈடுபாடு காட்டினார். இந்த சென்னை தொழிலாளர் சங்கம்தான் இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்கென உண்டான சங்கங்களில் முதல் சங்கமாகும். இவரது காங்கிரஸ் அரசியல் பணியில் இவர் சிறை சென்றதில்லை. ஆனால் 1947இல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் போராட்டத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இவர் 1919இல் மகாத்மா காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தார். லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ.சிதம்பரனாருடன் சென்று கண்டு உரையாடினார். அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் என்பவர் இவரை அழைத்துக் கடுமையாக எச்சரித்தார். நாடுகடத்த வேண்டியிருக்கும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். அப்படியொரு எண்ணம் கவர்னருக்கு இருப்பது அறிந்து அப்போதிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராசர் கவர்னரிடம் அப்படிச் செய்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்று கூறி நாடுகடத்தலைத் தடுத்து நிறுதினாராம்.

1925இல் காஞ்சிபுரம் நகரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பெரியார் ஈ.வே.ரா. வகுப்பு வாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் திரு வி.க. இந்த தீர்மானத்தை தலைவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பெரியார் மாநாட்டை விட்டு வெளியேறினார். காங்கிரசுக்கும் தலை முழுகிவிட்டு தனி இயக்கம் கண்டது நாடறிந்த வரலாறாகிவிட்டது.

பன்முகத் திறமை கொண்டவராக திரு வி.க. விளங்கினார். அரசியலில், தொழிற்சங்க இயக்கத்தில், தமிழிலக்கியத்தில், சைவ சமயத்தில் இப்படி இவரது பணி பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. மிக எளிமையானவராக இவர் திகழ்ந்தார். 1943இல் இவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு மலர்கள் வெளியிட்டன. மணிவிழாவுக்குப் பிறகு இவர் மேலும் பத்தாண்டுகள் பயனுள்ள பணிகளைச் செய்துகொண்டு வாழ்ந்தார். ஏராளமான நூல்களை எழுதினார். தொழிலாளர் இயக்கங்களிலெல்லாம் பங்கு கொண்டார். இவரது தொழிற்சங்க பணிகளில் வ.உ.சி.யும் பங்கெடுத்துக் கொண்டு, சென்னை துறைமுகத் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் உரியவரான திரு வி.க. சொந்த வீடு இன்றி, வங்கிக் கணக்கு இன்றி, காலில் காலணி இன்றி, எளிய கதராடையில் நான்கு முழ வேட்டி, சட்டை, அல்லது சில சமயங்களில் மேல் துண்டு மட்டும் என்று இப்படி மிக எளியவராகவே இருந்தார். இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண்பார்வை இழந்து முதுமை வாட்ட தனது எழுபதாவது வயதில் ஒரு வாடகை வீட்டில் 1953 செப்டம்பர் 17ல் உயிர் நீத்தார்.

இவரைப் பற்றி நூல் எழுதியுள்ள பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி இவரைப் பற்றி கூறியுள்ள கருத்து "படிப்பால் இமயம், பண்பால் குளிர் தென்றல், பணியால் திருநாவுக்கரசர், சுருங்கச் சொன்னால் தமிழகம் கண்ணாரக் கண்ட ஒரு காந்தி. பல சாரார்க்குப் படிப்பினை நிறைந்த வாழ்க்கை, இன்று அவரது நூல்களில் ஒளிமயமாய் வாழ்கிறது". வாழ்க திரு வி.க. வின் புகழ்!

ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

பாரதி போற்றி!

போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!

பாரதி பற்றி கவிமணி
(மணிமண்டபம் திறக்கப்பட்ட போது பாடியது)

தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய
பாவலராய் வாழமனம் பற்றுவரே - பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்
மாநகரில் கண்டு மகிழ்ந்து.

இறைவனிடம் முறையீடு

பண்டம் மலிய வேண்டும் - எங்கும்
பயிர் செழிக்க வேண்டும்
சண்டைகள் ஓய வேண்டும் - எவரும்
சகோதரர் ஆகவேண்டும்.
இந்த வரங்களெல்லாம் - ஈசா
இரங்கி அளித்திடுவாய்!
சந்ததம் உன்பதமே - போற்றித்
தலை வணங்குகின்றேன். - கவிமணி

பாரதி பற்றி ஒரு கிராமத்து இளைஞன்
(கவிமணி பாடல்)

பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா! - அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப் போலே, துள்ளுமே அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே அடா! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

குயிலும் கிளியும் பாட்டில் கூவுமே, அடா! - மயில்
குதித்துக் குதித்து நடம் ஆடுமே, அடா!
வெயிலும் மழையும் அதில் தோன்றுமே, அடா! - மலர்
விரிந்து விரிந்து மணம் வீசுமே, அடா!

அலைமேலே அலைவந்து மோதுமே, அடா! - அலை
அழகான முத்தை அள்ளிக் கொட்டுமே, அடா!
மலைமேலே மலை வளர்ந்து ஓங்குமே, அடா! - அதை
வனங்கள் அடர்ந்து அடர்ந்து சூழுமே, அடா!

விண்ணில் ஒளிரும் மீன்கள் மின்னுமே, அடா! - விண்ணில்
விளங்கும் மதி நிலவு வீசுமே, அடா!
கண்ணுக்கு இனிய சோலை காணுமே, அடா! - அதில்
களித்து இளமான்கள் விளையாடுமே, அடா!

தேனும் தினையும் பாலில் உண்ணலாம், அடா! - மிகத்
தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா!
கானக் குழலிசையும் கேட்கலாம், அடா! - ஊடே
களிவண்டு பாடுவதும் கேட்கலாம், அடா!

நாட்டு மொழியும் அவன் பாட்டினிசையில் - மிக்க
நல்ல கற்கண்டின் இனிமை சொட்டுமே, அடா!
ஏட்டில் இம்மந்திரந்தான் கண்டவர் உண்டோ? - ஈதவ்
ஈசன் திருவருள் என்றெண்ணுவாய், அடா!

உள்ளம் தெளியுமொரு பாட்டிலே, அடா! - மிக்க
ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலே, அடா!
கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலே, அடா! - ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடும் ஓர் பாட்டிலே, அடா!

"பாரத பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!" என்று அடிமைப்பட்டுக் கிடந்த பாரத வாசிகளுக்கு உரைக்கும்படி எடுத்துரைத்த மாபெரும் தமிழ்க்கவிஞன் மகாகவி பாரதி. நாமெல்லோரும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டவர்கள், இந்த நாடு ஆளுகின்ற அந்த வெள்ளைக்காரர்களுக்கே சொந்தம், அவர்கள் கருணா கடாட்சத்தில்தான் நாமெல்லாம் இங்கு வாழ்கிறோம் என்ற மூடக் கொள்கையில் ஆமைபோல் அடங்கிக் கிடந்த இந்தியர்களிடம் "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்" என்பதைச் சொல்லி உணர்த்துகிறான் அந்த மாக்கவி. இப்படித் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும், பத்திரிகைகள் வாயிலாக தமிழ் மக்கள் உள்ளங்களிலெல்லாம் குடியேறியவன் மகாகவி பாரதி. இந்தப் புரட்சிக் கவி யின் வாழ்க்கை வரலாற்றை இங்கு சிறிது பார்க்கலாம்.

1882ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி, அதாவது தமிழ் சித்திரபானு வருஷம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் சிற்றூரில் சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் தவப்புதல்வனாக சுப்பிரமணியன் எனும் சுப்பையா வந்து அவதரித்தார். சின்னசாமி ஐயர் நல்ல அறிவாளி, பொறியியல் துறையில் ஆர்வமுள்ளவர், எட்டயபுரத்தில் ஓர் ஜின்னிங் தொழிற்சாலை வைத்திருந்தார். உண்மையாகவும் ஊக்கத்துடனும் உழைத்த இவர் ஏமாற்றப்பட்டார், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நொடித்துப் போனார், பின்னர் அதே கவலையில் இறந்தும் போனார்.

சுப்பையாவின் இளம் வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார், அந்தச் சிற்றன்னை சுப்பையாவை அன்போடு வளர்த்தார். தாய் இல்லாத குறையை சிற்றன்னை போக்கிவிட்டார். அவர் வளர்ந்த இடம் சின்னஞ்சிறு கிராமமாதலின் இவர் சிறு வயதில் தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடும் நாட்டமின்றி, பெரியோர்களிடம் சாஸ்திரப் பயிற்சியும், பெரியவர்களைப் போன்று ஆழ்ந்து சிந்திப்பதிலும் நாட்டம் கொண்டார். இயற்கையிலேயே எந்தவொரு சொல்லைப் பிறர் சொல்லக் கேட்டாலும், அதற்கு இணையான ஓசைகொண்ட பல சொற்களை மனதில் சொல்லிப் பார்த்துக் கொள்வார். இதுவே பிற்காலத்தில் இவர் கவிதைகளுக்கு எதுகை மோனைகள் தாமாகவே வந்து சேர்ந்து கொண்டனவே தவிர இவர் தேடிப்போய் சொற்களைத் தேடியதில்லை.

பள்ளிப்படிப்பில் அதிகம் நாட்டமில்லாமலே இவர் வளர்ந்தாலும், பொது அறிவிலும், இயற்கைக் காட்சிகளிலும் மனதைச் செலுத்தினார். எட்டயபுரம் ஜமீன் அரண்மனையில் இவர் பல புலவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு இவர் இயற்கையாகக் கவி இயற்றி அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டார். காந்திமதிநாதன் என்றொரு மாணவர், சுப்பையாவுக்கும் மூத்தவர், இவர் கவிபாடும் ஆற்றலைச் சோதிக்க வேண்டி "பாரதி சின்னப்பயல்" எனும் ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பா பாடச் சொன்னார். இவரும் "காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்" எனும் பொருள்படும்படி வெண்பா பாடி அவரைத் தலை குனியச் செய்தார். எட்டயபுரத்தில் பெரியோர்கள் தமிழறிஞர்கள் சபையில் இவருக்கு "பாரதி" எனும் பட்டம் சூட்டப்பட்டது. திருநெல்வேலி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் சுப்பையா.
அந்தக் கால வழக்கப்படி பாரதிக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றது. செல்லம்மாள் எனும் பெண் இவருக்கு வாழ்க்கைப் பட்டாள். துள்ளித் திரியும் பருவத்தில் இந்தக் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தது. மறு ஆண்டில் சின்னச்சாமி ஐயர் சிவகதி அடைந்தார். தனித்து விடப்பட்ட பாரதி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தத் தருணத்தில், காசியில் வாழ்ந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ண சிவனும் சுப்பையாவை காசிக்கு அழைத்துச் சென்றனர். காசியில் மெட்றிக் தேர்வில் வென்று, ஜெயநாராயணா கல்லூரியில் சேர நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற்றார். காசி வாழ்க்கையில் பாரதி வாழ்க்கையைப் பற்றியும், இந்த நாடு இருக்கும் நிலையைப் பற்றியும், சமூகத்தில் நிலவி வந்த மூடப் பழக்க வழக்கங்களையும், அவற்றால் ஏற்படும் துன்பங்களையும் புரிந்து கொண்டார். அப்போது டில்லி வந்திருந்த எட்டயபுரம் ராஜா, இவரைத் தன்னுடன் வரும்படி அழைக்கவே சுப்பையா எட்டயபுரம் திரும்பி, மன்னரிடம் வேலையில் சேர்ந்தார்.

மன்னரிடம் வேலை எதுவுமின்றி ஊதியம் பெறுவது பாரதிக்கு வேதனை தந்தது. வேலையை உதறித் தள்ளினார். பிறகு மதுரையில் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஓர் தற்காலிக தமிழ்ப் பண்டிதர் வேலை இருப்பதாக அறிந்து அங்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நான்கு மாதங்களே வேலை செய்த நிலையில், 'தி ஹிந்து' பத்திரிகையின் அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர் இவரது திறமையை அறிந்து, இவரைத் தன்னுடன் கூட்டிச் சென்று தான் நடத்தி வந்த 'சுதேசமித்திரனி'ல் வேலைக்கமர்த்தினார். அங்கு இவர் உதவி ஆசிரியர். உலக நடப்புகளையும், நம் நாட்டின் சீர்கேட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதிக்கு இங்கு கவிதைகள் எழுதும் வாய்ப்பு நிறைய கிடைத்தது. ஆயினும் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் தலையங்கம் எழுத வாய்ப்பிருக்கவில்லை. எனவே மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தொடங்கிய 'இந்தியா' பத்திரிகைக்கு மாறினார். அங்கு இவரது எழுத்தார்வத்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டு திலகரின் தலைமை ஏற்று சூரத் காங்கிரஸ் போன்றவற்றுக்குச் சென்று வந்தார். சென்னையிலும் கடற்கரைக் கூட்டங்களில் பாடல்களைப் பாடியும், பேசியும் வந்தார். இவரது எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தீக்கங்குகளைப் பொழிந்தன. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பார்வை 'இந்தியா' பத்திரிகை மீது விழுந்தது. ஆனால் அதிகாரபூர்வமாக என்.சீனிவாசன் என்பவர்தான் அதன் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்தார், ஆயினும் எழுதியது முழுவதும் பாரதிதான். அந்த சீனிவாசன் கைது செய்யப்பட்டார். பாரதியும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அவரது நண்பர்கள் வக்கீல் துரைசாமி ஐயர் போன்றவர்கள், இவரை எப்படியாவது கைதிலிருந்து காப்பாற்றிவிட நினைத்தார்கள். காரணம் இவரது உடல்நிலை சிறைவாழ்க்கைக்கு ஒத்து வராது, மேலும் நாட்டு விடுதலைக்கு இவரது எழுத்துக்கள்தான் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடியும், ஆகவே இவர் வெளியில் இருக்க வேண்டுமென்பது தான். ஆகவே நண்பர்கள் இவரை சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் போலீஸ் அங்கு இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று கருதினர்.

புதுச்சேரியில் பாரதி மிகவும் சிரமத்துக்குள்ளானார். இவர் புரட்சிக்காரர் என்று முதலில் இவருக்கு உதவ பயந்தனர். பின்னர் இவருக்கு நல்ல நண்பர்கள் அமைந்தனர். புதுச்சேரியில் 'இந்தியா' பத்திரிகையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இவரது கவிதை, எழுத்துப் பணிகள் தொடர்ந்தன. வழக்கம்போல 'இந்தியா' பத்திரிகையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கட்டுரைகள் வெளியாகின. தொடர்ந்து 'விஜயா' எனும் தினசரி மற்றும் பல பத்திரிகைகளை பாரதி இங்கிருந்து வெளியிட்டார். பொறுமை இழந்த பிரிட்டிஷ் போலீஸ் இவருக்கு எல்லா வகையிலும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இவரை எப்படியாவது கைது செய்து பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் கொண்டு வர முயன்றது. நல்ல காலமாக பாரதிக்குத் துணையாக வ.வே.சு. ஐயரும், அரவிந்த கோஷ் ஆகியோரும் புதுச்சேரி வந்து தங்கினர். இங்குதான் பாரதியின் முப்பெரும் காப்பியங்களான, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகியவை தோன்றின.

பத்தாண்டுகள் புதுவை வாழ்க்கைக்குப் பிறகு, பாரதி இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அங்கு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டார். இவரை ஜாமீனில் கொண்டு வர நண்பர் துரைசாமி ஐயர், சர் சி.பி.ராமசாமி ஐயர், அன்னிபெசண்ட் போன்றவர்கள் முயன்று இவரை நிபந்தனை ஜாமீனில் வெளிக் கொணர்ந்தனர். பின்னர் இவர் மீது வழக்கு ஒன்றும் இல்லை என்று விடுதலையானார். சிறிது நாள் தன் மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்தார். இந்த காலகட்டத்தில் பொட்டல்புதூர் எனும் ஊரில் இஸ்லாமியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அல்லா அல்லா அல்லா' எனும் பாடலை இயற்றிப் பாடிவிட்டு, ரம்ஜான் தினத்தில் இஸ்லாம் பற்றியதொரு அருமையான சொற்பொழிவையும் நிகழ்த்தினார். பின்னர் கடையத்திலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

மகாகவி பாரதியார் தன்னுடைய "இந்தியா" பத்திரிகையைப் பற்றி குறிப்பிடும் செய்தி என்ன தெரியுமா? புதிய கட்சியின் (திலகர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பெயர்) ஒரே தமிழ்ப் பத்திரிகை - "இந்தியா" என்பது. இந்தப் பத்திரிகைக்குத் துணை புரிவதற்கு "பாலபாரதா" எனும் ஆங்கில இதழும், 'சுதேசமித்திரன்', 'சூர்யோதயம்', "விஜயா" நாளிதழ் இவைகளும் இவர் ஆசிரியராக இருந்த நடத்தியப் பத்திரிகைகள்.

1905இல் கயாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் இவர் பத்திரிகை நிருபராகக் கலந்து கொண்டார். அவருடைய தேசிய உணர்வுகளின் வெளிப்பாடுதான் இவர் 1906 முதல் 1908 வரையில் எழுதி வெளியிட்ட தேசிய கீதங்கள். அவைகளுக்கு இவர் இட்ட பெயர் "தேசோபநிஷத்" என்பது. இவர் சென்னை வந்து சுதேசமித்திரனில் பணியாற்றத் தொடங்குமுன்னதாகவே மதுரையில் இருந்தபோது "விவேகபானு" எனும் பத்திரிகையில் "தனிமையிரக்கம்" எனும் பாடலை எழுதினார். இவரது மற்ற பாடால்களில் உள்ள எளிமையான சொற்கள் போலவல்லாமல் இதில் கடுமையான பண்டிதத் தமிழ் இருப்பதைக் காணலாம்.

"வங்கமே வாழிய" எனும் பாடல்தான் இவரது முதல் அரசியல் கவிதை. இது 1905இல் செப்டம்பர் 15 "சுதேசமித்திரனில்" வெளியாகியது. லார்டு கர்சான் வங்கத்தைப் பிரித்த போது நாட்டில் எழுந்த மிகப்பெரிய கிளர்ச்சியை ஆதரித்து எழுதியது இந்தக் கவிதை. பாரதியார் புனா சென்று தனது ஆதர்ச குருவாகிய பால கங்காதர திலகரை 1905ல் சந்திக்கிறார். அது பற்றி அவர் கூறும் செய்தி:- "யான் 1905 வருடம் புனா தேசம் போயிருக்கையில் அவருடைய நண்பரொருவர் திலகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அச்சமயம் அவருடன் பேசினதில் யான் அறிந்ததென்னவெனில் அவருடைய பக்தியும், மருவில்லாத அவருடைய சாந்த குணமுமன்றி வேறில்லை."

1906இல் இவர் விபின் சந்திர பாலருடைய அழைப்பின் பேரில் நான்கு பிரதிநிதிகளில் ஒருவராகக் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்றார். இந்த கல்கத்தா விஜயத்தின் போதுதான் 1906 டிசம்பரில் பாரதி கல்கத்தா அருகிலுள்ள டம்டம் எனுமிடத்தில் தங்கியிருந்த சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும், பாரதியார் தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்ட சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார். பாரதி திலகர் மீது வைத்திருந்த பக்திக்கு ஓர் சான்று, "உண்மையான தேசாபிமானத்தில் ஸ்ரீ திலகருக்கு மேலான இந்தியன் இவ் இந்தியாவிலும் இல்லை, இவ்வுலகத்திலும் இல்லை என்பது என் அபிப்பிராயம்" என்று சொல்வதிலிருந்து புரிகிறது.

1908இல் சென்னை திருவல்லிக்கேணி கங்கைகொண்டான் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "சென்னை ஜனசங்கம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் வ.உ.சி., சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, கே.வெங்கட்டரமணராவ், எஸ்.ஸ்ரீநிவாசாச்சாரி, வரதராஜ சர்மா ஆகியோருடன் சுப்பிரமனிய பாரதியாரும் நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தனர். இந்த ஜனசங்கம் தான் சென்னையில் 'இந்தி' மொழி கற்றுக் கொடுக்கும் வகுப்புக்களைத் தொடங்கியது. இந்த ஆண்டு (1908) சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடுதான் வரலாற்றுப் புகழ் பெற்ற மகாநாடாக அமைந்து மிதவாதிகளுக்கும், திலகர் தலைமையிலான காங்கிரசாருக்கும் தகறாறு உண்டாகி பாதியில் நின்ற மகாநாடு. இதில் பாரதியார் கலந்து கொண்ட வரலாற்றை அவர் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

பாரதியார் இந்திய அரசியலை மட்டும் கவனித்து எழுதியவரில்லை. உலக அரசியல் அரங்கில் நடைபெறும் அனைத்தையும் கவனித்து எழுதியவர். தான் சாகும் தருணத்தில் கூட செப்டம்பர் 11 அன்று அரை மயக்க நிலையில் அவர் சுதேசமித்திரனில் ஆப்கானிஸ்தான் மன்னரைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்று புலம்பியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சி, ஐரிஷ் விடுதலை இயக்கம், அமெரிக்க விடுதலைப் போர் போன்ற அயல்நாட்டுப் புரட்சிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1917இல் ரஷ்யாவில் கொடுங்கோலன் ட்ஸார் மன்னனுடைய வீழ்ச்சி பற்றியும் புரட்சியாளர் லெனினின் எழுச்சி பற்றியும் அவர் எழுதிய பாடல்தான் பிற்காலத்தில் ரஷ்யா முழுவதிலும் பாரதியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது.

1857இல் வடநாட்டில் நடந்த "சிப்பாய் கலகம்" என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட நிகழ்ச்சியை பாரதி "இந்துஸ்தான சுதந்திர யுத்தம்" என்றே குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தப் புரட்சியை அடுத்து பிரிட்டிஷ் அரசியார் வெளியிட்ட மகாசாசனத்தை அனைவரும் ஆகா, ஓகோ என்று வானளாவப் புகழ்ந்து தள்ளியபோது, பாரதி மட்டும் "அதன் ஒரு வார்த்தையாவது உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. அந்த சாசனம் நாக்கு முதல் நாபி வரையில் இரண்டு தீவட்டிகள் ஏற்றிப் பார்த்தாலும் எள் அளவுகூட உண்மை கிடையாது" என்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் திலகரின் காங்கிரசின் பிரசாரகராக பாரதி விளங்கியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது எவ்வளவு ஆபத்தானது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அவர் ஆளாக வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தியது என்பதையும் எண்ணிப்பார்த்தால்தான் பாரதியின் தீவிரமான தேசபக்தி நமக்கு விளங்கும்.

இங்கு 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி கோயில் யானை இவரை தூக்கித் தள்ளிவிட்டது. அதன் காரணமாக இவர் சில காலம் படுத்திருந்தார். பின்னர் உடல்நலம் தேறி வேலைக்குச் சென்றார். அப்போது ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரிலிருந்த காங்கிரஸ் வக்கீல் ஒருவர் அழைப்பின் பேரில் அங்கு சென்று 'சாகாதிருப்பது எப்படி' எனும் தலைப்பில் உரையாற்றித் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் உண்டாகி அவதிப்பட்டார். வியாதியின் உக்கிரம் தாங்காமால் மருந்துண்ண மறுத்தார். செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, 12ஆம் தேதி விடியற்காலை 2 மணி சுமாருக்கு இவர் உயிர் பிரிந்தது. இவரது இறுதி யாத்திரையில் சுமார் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனராம். இப்படி யொரு மகாகவியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க மகாகவி பாரதியாரின் புகழ்

ராஜாஜி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
15. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். (ராஜாஜி)

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் பதவி வகித்த தமிழர்; வங்காளத்தில் நடந்த மதக் கலவரத்துக்குப் பின் மேற்கு வங்க மாநில கவர்னர் பதவி வகிக்க பலரும் தயங்கிய நேரத்தில் துணிந்து அங்கே கவர்னராகப் போன தீரர்; வடக்கே மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்றதை அடுத்து தென்னகத்தில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை வெற்றிகரமாக நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆலயங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலயக் கதவுகளை அவர்களுக்குத் திறந்துவிட்ட சீர்திருத்தச் செம்மல்; தன் வாதத் திறமையாலும் நிர்வாகத் திறமையாலும் ஆளும் கட்சியைக் காட்டிலும் எதிர்கட்சியினர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தபோதும் சிறப்பாக அரசை வழிநடத்திச் சென்ற ராஜ தந்திரி; இசையிலும், இலக்கியங்களிலும் ஆர்வமும் புலமையும் பெற்று, குறையொன்று மில்லை என்று இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் பாடலை எழுதி திருமதி எம்.எஸ்.அவர்களை பாட வைத்தவர்; இராமாயண மகாபாரத இதிகாசங்களைச் சாதாரண மக்களும் படித்துப் பயன்பெறும் வண்ணம் "சக்கரவர்த்தித் திருமகன்" என்று ராமாயணத்தையும் "வியாசர் விருந்து" என்ற பெயரில் மகாபாரதத்தையும் அழியாத இலக்கியச் செல்வமாகப் படைத்தவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

தற்போதய தருமபுரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள தொரப்பள்ளி எனும் சின்னஞ்சிறு கிராமம். தென் பண்ணை ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூர். அவ்வூரில் கிராம முன்சீப்பாக இருந்தவர் சக்கரவர்த்தி ஐயங்கார் என்பவர். சமஸ்கிருதத்தில் பெரும் புலமை வாய்ந்தவர். அவருடைய மனைவி பெயர் சிங்காரம் அம்மாள். நற்குணங்களும், சிறந்த பண்புகளும் நிரம்பப் பெற்றவர். இவர்களுக்கு மூன்று மக்கள். முதலாமவர் நரசிம்மன், இரண்டாமவர் சீனிவாசன், மூன்றாவது பிள்ளைதான் உலகைத் தன் அறிவினால் ஆண்ட ராஜகோபாலன். ஆம்! நம் ராஜாஜிதான். பள்ளிப்படிப்பைத் தொடங்கி தனது பன்னிரெண்டாம் வயதில் மெட்ரிகுலேஷன் தேறினார். பிறகு பெங்களூர் இந்து கல்லூரியில் படித்து பி.ஏ. தேறினார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். அந்த காலகட்டத்தில்தான் சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தார். அவரை தரிசிக்கவும், அவர் இருந்த ரதத்தை இழுத்துச் செல்லவும், அவரிடம் கண்ணன் நிறம் ஏன் நீல நிறம் என்பது பற்றி பதில் சொல்லவும் வாய்ப்புப் பெற்றார்.

மகாத்மா காந்தி படித்தவர்களை சுதந்திரப் போரில் ஈடுபட அழைப்பு விடுத்தபோது அதனை ஏற்று முழுநேர அரசியல் வாதியாக ராஜாஜி மாறினார். சேலம் நகர சபைத் தலைவர் பதவியில் இருந்து பல நல்ல பணிகளைச் செய்தார். 1921ல் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வேலூர் சிறையில் அடைபட்டார். இவருக்குத் தண்டனை அளித்த வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட் இவருக்குத் தண்டனை கொடுத்த மறுகணம், "உங்களைப் போன்ற உத்தமரைத் தண்டிப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயினும் கீதை சொன்ன நெறிப்படி என் கடமையை நான் செய்ய வேண்டியிருக்கிறது" என்று நெஞ்சுருகக் கூறினார். பிறகு ராஜாஜி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரசுடன் சமாதானம் பேச சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் என்பவரை தூது அனுப்பியது. அந்த கிரிப்ஸ் கொண்டு வந்த திட்டத்தில் முதல் அம்சம் உலக யுத்தம் முடிந்த கையோடு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது; இரண்டாவது இந்திய முஸ்லீம்கள் தங்களுக்குத் தனி நாடு கோரி பிரிந்து போக விரும்பினால் நாட்டைப் பிரிப்பது. இதை காந்தி ஏற்கவில்லை. ஆனால் ராஜாஜி நாட்டின் அமைதி கருதியும் மக்கள்


ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதைத் தவிர்க்கவும் வேண்டுமானால் முஸ்லிம்களுக்குத் தனிநாடு பிரித்துக் கொடுப்பதுதான் சரி என்று கருதினார். ஒன்றுபட்டிருந்த காந்தி--ராஜாஜி உறவில் விரிசல் விழுந்தது. ராஜாஜி தனது கருத்தைப் பிரச்சாரம் செய்ய நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரசார் கலாட்டா செய்தனர். எதிர்த்தனர். எனினும் ராஜாஜி தன் கொள்கையினின்றும் சிறிதும் இறங்கி வரவில்லை. தன்னந்தனியாக காங்கிரசை விட்டு வெளியேறி போராடி வந்தார்.

ஆகாகான் மாளிகையில் சிறையிலிருந்த மகாத்மா காந்தி 1942ல் உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் ராஜாஜி அவரைச் சென்று பார்த்தார். பிரிந்த இருவரும் பாசத்தால் இணைந்தனர். காந்தி கேட்டார், உங்கள் நிலைதான் என்ன என்று. ராஜாஜி உடனே தனது திட்டத்தை ஓர் காகிதத்தில் எழுதிக் காட்டினார். இதனைக் கண்ட காந்தி, இவ்வளவுதானா, இது எனக்குப் புரிந்திருந்தால் முன்பே ஒப்புக்கொண்டிருப்பேனே என்றார். இப்படி மகாத்மாவே ராஜாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

1944ல் எல்லா காங்கிரஸ்காரர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போதைய காங்கிரஸ் தலைவர் அபுல் கலாம் ஆசாத் ராஜாஜியை மீண்டும் காங்கிரசில் இணையும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவர் திருச்செங்கோடு தாலுகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகச் சேர்ந்தார். திருச்செங்கோட்டில் ராஜாஜி காந்தி ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தி பல தொண்டர்களை ஒருங்கிணைத்து நன்கு செயல்பட்டு வந்தார். பேராசிரியர் கல்கி அவர்களும் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து, மதுவிலக்குக்காக நடத்தப்பட்ட "விமோசனம்" எனும் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார்.

ராஜாஜி திருச்செங்கோடு தாலுகா காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தும், மாகாண காங்கிரஸ் கமிட்டி மதுரையில் கூடி அவரை காங்கிரசில் அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் போட்டனர். இந்த முடிவுக்கு காமராஜ் அவர்களின் பங்களிப்பு இருந்தது. என்றாலும் கூட மத்திய காங்கிரஸ் கமிட்டி ராஜாஜியின் பணியை முழுமையாகப் பயன்படுத்தி வந்தது. தமிழ்நாட்டின் நஷ்டம் அகில இந்தியாவுக்கும் அதிர்ஷ்டமாக அமைந்தது. அப்போது ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்தியில் இடைக்கால அரசு ஒன்று உருவாகியது. அதில் ராஜாஜி தொழில் துறை அமைச்சராகச் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியப் பிரிவினையின் விளைவாக மேற்கு வங்கத்தில் மதக்கலவரம் பரவியபோது அங்கு கவர்னராகச் செல்ல ஒருவரும் முன்வராதபோது நேரு அவர்கள் ராஜாஜியை அங்கே கவர்னராக நியமிக்க ஏற்பாடு செய்தார். இவர் அங்கே சென்று கல்கத்தாவில் காலடி எடுத்து வைத்தபோது இவருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவர் காங்கிரசில் சுபாஷ்சந்திர போசுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்ததனால், அவரது சகோதரர் சரத் சந்திர போஸ் தலைமையில் பெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இத்தனை விரோதமான சூழ்நிலையில் அந்த மாநிலத் தலைநகர் கல்கத்தாவில் காலடி வைத்த ராஜாஜி நாளடைவில் அம்மாநில மக்களின் அன்புக்குப் பாத்திரமானார்.

இந்திய சுதந்திரம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் கிடைத்த பிறகு சிலகாலம் லார்டு மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு இந்தியர் ஒருவர் அந்த பதவிக்கு வரவேண்டும் என்ற நிலையில் அனைவரும் யோசித்து அந்த பதவிக்கு ராஜாஜியே தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அதன்படியே ராஜாஜி இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். 1952ல் பொதுத் தேர்தல் நடந்து நாட்டுக்கு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜாஜி பதவியில் இருந்தார். பின் ஓய்வு பெற்று சென்னைக்குத் திரும்பினார். அப்போது நடந்து முடிந்திருந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தது. எதிர்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைகள் அனைவரும் இருந்தனர். காங்கிரசால் மந்திரி சபை அமைக்க முடியவில்லை.


மேலிட உத்தரவின் பேரில் தமிழக காங்கிரசார் ராஜாஜி அவர்களை அணுகி அவரைப் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டினர். ராஜாஜியும் பெரும்பதவிகளில் இருந்தபின் மாநில முதலமைச்சர் பதவியா என்று தயங்காமல் சில நிபந்தனைகளுடன் சம்மதித்தார். அப்படிப்பட்ட ஒரு நிபந்தனை கட்சிக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் செயல்பாட்டில் தலையிடக் கூடாது என்பதுதான். ஊழலை அண்ட விடாமல் இருக்க அந்த மேதை எடுத்த நடவடிக்கை பின்னர் காற்றில் விடப்பட்டதனால் ஏற்பட்ட பல விபரீதங்களை, அதன் பிறகு நாம் பார்த்தோமே!

அமைச்சரவை அமைக்க காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை. என்ன செய்வது? சில எதிர்கட்சி உறுப்பினர்களைக் காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். காமன்வீல் கட்சியிலிருந்து மாணிக்கவேலு நாயக்கர், ராமசாமி படையாச்சியார், சுயேச்சை பி.பக்தவத்சலு நாயுடு போன்றவர்கள் ராஜாஜிக்கு ஆதரவு கொடுத்தனர். 1952ல் சென்னை மாகாணத்தில் அமைந்த ஆட்சியில் ராஜாஜி பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். உணவுப் பொருட்களுக்கு இருந்த ரேஷனை நீக்கினார். மதுவிலக்கு தீவிரமாக அமல் செய்யப்பட்டது. விற்பனை வரி மூலம் வருவாய் இழப்பை ஈடுகட்டினார். தஞ்சையில் நிலவிய நிலவுடைமையாளர் விவசாயிகளுக்கிடைய பகை முற்றி போராட்டம் நடந்த நிலையில் "பண்ணையாள் சட்டம்" கொண்டு வந்து உழைக்கும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார். பழைய ஆங்கில முறை கல்வியில் மாற்றம் கொண்டுவரவும், ஏராளமானவர் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் ஓர் புதிய திட்டத்தைக் கொணர்ந்தார். அதனை 'குலக்கல்வித் திட்டம்' என்று சொல்லி திராவிட இயக்கங்களும், அவர்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரசில் காமராஜ் உட்பட அனைவரும் எதிர்த்து போராட்டம் நடத்தவே, ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

மத்தியில் நடந்த ஆட்சி லைசன்ஸ் அண்டு பர்மிட் ராஜ் என்று சொல்லி நேருவின் சோசலிசத்தை எதிர்க்கும் வகையில், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி போன்ற அமைப்பில் "சுதந்திராக் கட்சி"யைத் தொடங்கினார். 'சுயராஜ்யா' எனும் பத்திரிகை மூலம் தன் கருத்தை வலியுறுத்தினார். காசா சுப்பா ராவ் சுயராஜ்யாவின் ஆசிரியர். பெரும் முதலாளிகளும், ஆலைச் சொந்தக்காரர்களும் மட்டுமல்லாமல், சாதாரண மக்களும் சுதந்திராக் கட்சியில் சேர்ந்தனர். கட்சி நன்கு வளர்ந்தாலும் பின்னர் அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

அணுகுண்டு உலகை பேரழிவில் கொண்டு சேர்க்கும் என்று கருதி அதனை ஒழிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியிடம் தூது போனார். திராவிடக் கட்சிகள் மதுவிலக்கை நீக்கிக் கள்ளுக் கடைகளை மறுபடியும் திறந்த போது அன்றைய முதல்வர் வீடு தேடிச் சென்று 'வேண்டாம் கள்ளுக் கடை" என்று வேண்டுகோள் விடுத்தார். அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. இன்று மக்களில் பெரும்பலோர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வீணாகின்றனர்.

தன் கடைசி நாட்களை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களைத் தமிழில் படைக்கத் தன் நேரத்தைச் செலவிட்டபின் 1972ல் டிசம்பர் 25ம் தேதி இம்மண்ணுலகை நீத்து ஆச்சார்யன் திருவடிகளை அடந்தார். வாழ்க ராஜாஜியின் புகழ்.