சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.
பாரதி போற்றி!
போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!
பாரதி பற்றி கவிமணி
(மணிமண்டபம் திறக்கப்பட்ட போது பாடியது)
தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய
பாவலராய் வாழமனம் பற்றுவரே - பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்
மாநகரில் கண்டு மகிழ்ந்து.
இறைவனிடம் முறையீடு
பண்டம் மலிய வேண்டும் - எங்கும்
பயிர் செழிக்க வேண்டும்
சண்டைகள் ஓய வேண்டும் - எவரும்
சகோதரர் ஆகவேண்டும்.
இந்த வரங்களெல்லாம் - ஈசா
இரங்கி அளித்திடுவாய்!
சந்ததம் உன்பதமே - போற்றித்
தலை வணங்குகின்றேன். - கவிமணி
பாரதி பற்றி ஒரு கிராமத்து இளைஞன்
(கவிமணி பாடல்)
பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா! - அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
துள்ளும் மறியைப் போலே, துள்ளுமே அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே அடா! - பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!
குயிலும் கிளியும் பாட்டில் கூவுமே, அடா! - மயில்
குதித்துக் குதித்து நடம் ஆடுமே, அடா!
வெயிலும் மழையும் அதில் தோன்றுமே, அடா! - மலர்
விரிந்து விரிந்து மணம் வீசுமே, அடா!
அலைமேலே அலைவந்து மோதுமே, அடா! - அலை
அழகான முத்தை அள்ளிக் கொட்டுமே, அடா!
மலைமேலே மலை வளர்ந்து ஓங்குமே, அடா! - அதை
வனங்கள் அடர்ந்து அடர்ந்து சூழுமே, அடா!
விண்ணில் ஒளிரும் மீன்கள் மின்னுமே, அடா! - விண்ணில்
விளங்கும் மதி நிலவு வீசுமே, அடா!
கண்ணுக்கு இனிய சோலை காணுமே, அடா! - அதில்
களித்து இளமான்கள் விளையாடுமே, அடா!
தேனும் தினையும் பாலில் உண்ணலாம், அடா! - மிகத்
தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா!
கானக் குழலிசையும் கேட்கலாம், அடா! - ஊடே
களிவண்டு பாடுவதும் கேட்கலாம், அடா!
நாட்டு மொழியும் அவன் பாட்டினிசையில் - மிக்க
நல்ல கற்கண்டின் இனிமை சொட்டுமே, அடா!
ஏட்டில் இம்மந்திரந்தான் கண்டவர் உண்டோ? - ஈதவ்
ஈசன் திருவருள் என்றெண்ணுவாய், அடா!
உள்ளம் தெளியுமொரு பாட்டிலே, அடா! - மிக்க
ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலே, அடா!
கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலே, அடா! - ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடும் ஓர் பாட்டிலே, அடா!
"பாரத பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!" என்று அடிமைப்பட்டுக் கிடந்த பாரத வாசிகளுக்கு உரைக்கும்படி எடுத்துரைத்த மாபெரும் தமிழ்க்கவிஞன் மகாகவி பாரதி. நாமெல்லோரும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டவர்கள், இந்த நாடு ஆளுகின்ற அந்த வெள்ளைக்காரர்களுக்கே சொந்தம், அவர்கள் கருணா கடாட்சத்தில்தான் நாமெல்லாம் இங்கு வாழ்கிறோம் என்ற மூடக் கொள்கையில் ஆமைபோல் அடங்கிக் கிடந்த இந்தியர்களிடம் "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்" என்பதைச் சொல்லி உணர்த்துகிறான் அந்த மாக்கவி. இப்படித் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும், பத்திரிகைகள் வாயிலாக தமிழ் மக்கள் உள்ளங்களிலெல்லாம் குடியேறியவன் மகாகவி பாரதி. இந்தப் புரட்சிக் கவி யின் வாழ்க்கை வரலாற்றை இங்கு சிறிது பார்க்கலாம்.
1882ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி, அதாவது தமிழ் சித்திரபானு வருஷம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் சிற்றூரில் சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் தவப்புதல்வனாக சுப்பிரமணியன் எனும் சுப்பையா வந்து அவதரித்தார். சின்னசாமி ஐயர் நல்ல அறிவாளி, பொறியியல் துறையில் ஆர்வமுள்ளவர், எட்டயபுரத்தில் ஓர் ஜின்னிங் தொழிற்சாலை வைத்திருந்தார். உண்மையாகவும் ஊக்கத்துடனும் உழைத்த இவர் ஏமாற்றப்பட்டார், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நொடித்துப் போனார், பின்னர் அதே கவலையில் இறந்தும் போனார்.
சுப்பையாவின் இளம் வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார், அந்தச் சிற்றன்னை சுப்பையாவை அன்போடு வளர்த்தார். தாய் இல்லாத குறையை சிற்றன்னை போக்கிவிட்டார். அவர் வளர்ந்த இடம் சின்னஞ்சிறு கிராமமாதலின் இவர் சிறு வயதில் தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடும் நாட்டமின்றி, பெரியோர்களிடம் சாஸ்திரப் பயிற்சியும், பெரியவர்களைப் போன்று ஆழ்ந்து சிந்திப்பதிலும் நாட்டம் கொண்டார். இயற்கையிலேயே எந்தவொரு சொல்லைப் பிறர் சொல்லக் கேட்டாலும், அதற்கு இணையான ஓசைகொண்ட பல சொற்களை மனதில் சொல்லிப் பார்த்துக் கொள்வார். இதுவே பிற்காலத்தில் இவர் கவிதைகளுக்கு எதுகை மோனைகள் தாமாகவே வந்து சேர்ந்து கொண்டனவே தவிர இவர் தேடிப்போய் சொற்களைத் தேடியதில்லை.
பள்ளிப்படிப்பில் அதிகம் நாட்டமில்லாமலே இவர் வளர்ந்தாலும், பொது அறிவிலும், இயற்கைக் காட்சிகளிலும் மனதைச் செலுத்தினார். எட்டயபுரம் ஜமீன் அரண்மனையில் இவர் பல புலவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு இவர் இயற்கையாகக் கவி இயற்றி அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டார். காந்திமதிநாதன் என்றொரு மாணவர், சுப்பையாவுக்கும் மூத்தவர், இவர் கவிபாடும் ஆற்றலைச் சோதிக்க வேண்டி "பாரதி சின்னப்பயல்" எனும் ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பா பாடச் சொன்னார். இவரும் "காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்" எனும் பொருள்படும்படி வெண்பா பாடி அவரைத் தலை குனியச் செய்தார். எட்டயபுரத்தில் பெரியோர்கள் தமிழறிஞர்கள் சபையில் இவருக்கு "பாரதி" எனும் பட்டம் சூட்டப்பட்டது. திருநெல்வேலி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் சுப்பையா.
அந்தக் கால வழக்கப்படி பாரதிக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றது. செல்லம்மாள் எனும் பெண் இவருக்கு வாழ்க்கைப் பட்டாள். துள்ளித் திரியும் பருவத்தில் இந்தக் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தது. மறு ஆண்டில் சின்னச்சாமி ஐயர் சிவகதி அடைந்தார். தனித்து விடப்பட்ட பாரதி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தத் தருணத்தில், காசியில் வாழ்ந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ண சிவனும் சுப்பையாவை காசிக்கு அழைத்துச் சென்றனர். காசியில் மெட்றிக் தேர்வில் வென்று, ஜெயநாராயணா கல்லூரியில் சேர நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற்றார். காசி வாழ்க்கையில் பாரதி வாழ்க்கையைப் பற்றியும், இந்த நாடு இருக்கும் நிலையைப் பற்றியும், சமூகத்தில் நிலவி வந்த மூடப் பழக்க வழக்கங்களையும், அவற்றால் ஏற்படும் துன்பங்களையும் புரிந்து கொண்டார். அப்போது டில்லி வந்திருந்த எட்டயபுரம் ராஜா, இவரைத் தன்னுடன் வரும்படி அழைக்கவே சுப்பையா எட்டயபுரம் திரும்பி, மன்னரிடம் வேலையில் சேர்ந்தார்.
மன்னரிடம் வேலை எதுவுமின்றி ஊதியம் பெறுவது பாரதிக்கு வேதனை தந்தது. வேலையை உதறித் தள்ளினார். பிறகு மதுரையில் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஓர் தற்காலிக தமிழ்ப் பண்டிதர் வேலை இருப்பதாக அறிந்து அங்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நான்கு மாதங்களே வேலை செய்த நிலையில், 'தி ஹிந்து' பத்திரிகையின் அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர் இவரது திறமையை அறிந்து, இவரைத் தன்னுடன் கூட்டிச் சென்று தான் நடத்தி வந்த 'சுதேசமித்திரனி'ல் வேலைக்கமர்த்தினார். அங்கு இவர் உதவி ஆசிரியர். உலக நடப்புகளையும், நம் நாட்டின் சீர்கேட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதிக்கு இங்கு கவிதைகள் எழுதும் வாய்ப்பு நிறைய கிடைத்தது. ஆயினும் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் தலையங்கம் எழுத வாய்ப்பிருக்கவில்லை. எனவே மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தொடங்கிய 'இந்தியா' பத்திரிகைக்கு மாறினார். அங்கு இவரது எழுத்தார்வத்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டு திலகரின் தலைமை ஏற்று சூரத் காங்கிரஸ் போன்றவற்றுக்குச் சென்று வந்தார். சென்னையிலும் கடற்கரைக் கூட்டங்களில் பாடல்களைப் பாடியும், பேசியும் வந்தார். இவரது எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தீக்கங்குகளைப் பொழிந்தன. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் பார்வை 'இந்தியா' பத்திரிகை மீது விழுந்தது. ஆனால் அதிகாரபூர்வமாக என்.சீனிவாசன் என்பவர்தான் அதன் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்தார், ஆயினும் எழுதியது முழுவதும் பாரதிதான். அந்த சீனிவாசன் கைது செய்யப்பட்டார். பாரதியும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அவரது நண்பர்கள் வக்கீல் துரைசாமி ஐயர் போன்றவர்கள், இவரை எப்படியாவது கைதிலிருந்து காப்பாற்றிவிட நினைத்தார்கள். காரணம் இவரது உடல்நிலை சிறைவாழ்க்கைக்கு ஒத்து வராது, மேலும் நாட்டு விடுதலைக்கு இவரது எழுத்துக்கள்தான் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடியும், ஆகவே இவர் வெளியில் இருக்க வேண்டுமென்பது தான். ஆகவே நண்பர்கள் இவரை சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் போலீஸ் அங்கு இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று கருதினர்.
புதுச்சேரியில் பாரதி மிகவும் சிரமத்துக்குள்ளானார். இவர் புரட்சிக்காரர் என்று முதலில் இவருக்கு உதவ பயந்தனர். பின்னர் இவருக்கு நல்ல நண்பர்கள் அமைந்தனர். புதுச்சேரியில் 'இந்தியா' பத்திரிகையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இவரது கவிதை, எழுத்துப் பணிகள் தொடர்ந்தன. வழக்கம்போல 'இந்தியா' பத்திரிகையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கட்டுரைகள் வெளியாகின. தொடர்ந்து 'விஜயா' எனும் தினசரி மற்றும் பல பத்திரிகைகளை பாரதி இங்கிருந்து வெளியிட்டார். பொறுமை இழந்த பிரிட்டிஷ் போலீஸ் இவருக்கு எல்லா வகையிலும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இவரை எப்படியாவது கைது செய்து பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் கொண்டு வர முயன்றது. நல்ல காலமாக பாரதிக்குத் துணையாக வ.வே.சு. ஐயரும், அரவிந்த கோஷ் ஆகியோரும் புதுச்சேரி வந்து தங்கினர். இங்குதான் பாரதியின் முப்பெரும் காப்பியங்களான, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகியவை தோன்றின.
பத்தாண்டுகள் புதுவை வாழ்க்கைக்குப் பிறகு, பாரதி இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அங்கு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டார். இவரை ஜாமீனில் கொண்டு வர நண்பர் துரைசாமி ஐயர், சர் சி.பி.ராமசாமி ஐயர், அன்னிபெசண்ட் போன்றவர்கள் முயன்று இவரை நிபந்தனை ஜாமீனில் வெளிக் கொணர்ந்தனர். பின்னர் இவர் மீது வழக்கு ஒன்றும் இல்லை என்று விடுதலையானார். சிறிது நாள் தன் மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்தார். இந்த காலகட்டத்தில் பொட்டல்புதூர் எனும் ஊரில் இஸ்லாமியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அல்லா அல்லா அல்லா' எனும் பாடலை இயற்றிப் பாடிவிட்டு, ரம்ஜான் தினத்தில் இஸ்லாம் பற்றியதொரு அருமையான சொற்பொழிவையும் நிகழ்த்தினார். பின்னர் கடையத்திலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
மகாகவி பாரதியார் தன்னுடைய "இந்தியா" பத்திரிகையைப் பற்றி குறிப்பிடும் செய்தி என்ன தெரியுமா? புதிய கட்சியின் (திலகர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பெயர்) ஒரே தமிழ்ப் பத்திரிகை - "இந்தியா" என்பது. இந்தப் பத்திரிகைக்குத் துணை புரிவதற்கு "பாலபாரதா" எனும் ஆங்கில இதழும், 'சுதேசமித்திரன்', 'சூர்யோதயம்', "விஜயா" நாளிதழ் இவைகளும் இவர் ஆசிரியராக இருந்த நடத்தியப் பத்திரிகைகள்.
1905இல் கயாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் இவர் பத்திரிகை நிருபராகக் கலந்து கொண்டார். அவருடைய தேசிய உணர்வுகளின் வெளிப்பாடுதான் இவர் 1906 முதல் 1908 வரையில் எழுதி வெளியிட்ட தேசிய கீதங்கள். அவைகளுக்கு இவர் இட்ட பெயர் "தேசோபநிஷத்" என்பது. இவர் சென்னை வந்து சுதேசமித்திரனில் பணியாற்றத் தொடங்குமுன்னதாகவே மதுரையில் இருந்தபோது "விவேகபானு" எனும் பத்திரிகையில் "தனிமையிரக்கம்" எனும் பாடலை எழுதினார். இவரது மற்ற பாடால்களில் உள்ள எளிமையான சொற்கள் போலவல்லாமல் இதில் கடுமையான பண்டிதத் தமிழ் இருப்பதைக் காணலாம்.
"வங்கமே வாழிய" எனும் பாடல்தான் இவரது முதல் அரசியல் கவிதை. இது 1905இல் செப்டம்பர் 15 "சுதேசமித்திரனில்" வெளியாகியது. லார்டு கர்சான் வங்கத்தைப் பிரித்த போது நாட்டில் எழுந்த மிகப்பெரிய கிளர்ச்சியை ஆதரித்து எழுதியது இந்தக் கவிதை. பாரதியார் புனா சென்று தனது ஆதர்ச குருவாகிய பால கங்காதர திலகரை 1905ல் சந்திக்கிறார். அது பற்றி அவர் கூறும் செய்தி:- "யான் 1905 வருடம் புனா தேசம் போயிருக்கையில் அவருடைய நண்பரொருவர் திலகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அச்சமயம் அவருடன் பேசினதில் யான் அறிந்ததென்னவெனில் அவருடைய பக்தியும், மருவில்லாத அவருடைய சாந்த குணமுமன்றி வேறில்லை."
1906இல் இவர் விபின் சந்திர பாலருடைய அழைப்பின் பேரில் நான்கு பிரதிநிதிகளில் ஒருவராகக் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்றார். இந்த கல்கத்தா விஜயத்தின் போதுதான் 1906 டிசம்பரில் பாரதி கல்கத்தா அருகிலுள்ள டம்டம் எனுமிடத்தில் தங்கியிருந்த சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும், பாரதியார் தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்ட சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார். பாரதி திலகர் மீது வைத்திருந்த பக்திக்கு ஓர் சான்று, "உண்மையான தேசாபிமானத்தில் ஸ்ரீ திலகருக்கு மேலான இந்தியன் இவ் இந்தியாவிலும் இல்லை, இவ்வுலகத்திலும் இல்லை என்பது என் அபிப்பிராயம்" என்று சொல்வதிலிருந்து புரிகிறது.
1908இல் சென்னை திருவல்லிக்கேணி கங்கைகொண்டான் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "சென்னை ஜனசங்கம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் வ.உ.சி., சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, கே.வெங்கட்டரமணராவ், எஸ்.ஸ்ரீநிவாசாச்சாரி, வரதராஜ சர்மா ஆகியோருடன் சுப்பிரமனிய பாரதியாரும் நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தனர். இந்த ஜனசங்கம் தான் சென்னையில் 'இந்தி' மொழி கற்றுக் கொடுக்கும் வகுப்புக்களைத் தொடங்கியது. இந்த ஆண்டு (1908) சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடுதான் வரலாற்றுப் புகழ் பெற்ற மகாநாடாக அமைந்து மிதவாதிகளுக்கும், திலகர் தலைமையிலான காங்கிரசாருக்கும் தகறாறு உண்டாகி பாதியில் நின்ற மகாநாடு. இதில் பாரதியார் கலந்து கொண்ட வரலாற்றை அவர் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
பாரதியார் இந்திய அரசியலை மட்டும் கவனித்து எழுதியவரில்லை. உலக அரசியல் அரங்கில் நடைபெறும் அனைத்தையும் கவனித்து எழுதியவர். தான் சாகும் தருணத்தில் கூட செப்டம்பர் 11 அன்று அரை மயக்க நிலையில் அவர் சுதேசமித்திரனில் ஆப்கானிஸ்தான் மன்னரைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்று புலம்பியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சி, ஐரிஷ் விடுதலை இயக்கம், அமெரிக்க விடுதலைப் போர் போன்ற அயல்நாட்டுப் புரட்சிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1917இல் ரஷ்யாவில் கொடுங்கோலன் ட்ஸார் மன்னனுடைய வீழ்ச்சி பற்றியும் புரட்சியாளர் லெனினின் எழுச்சி பற்றியும் அவர் எழுதிய பாடல்தான் பிற்காலத்தில் ரஷ்யா முழுவதிலும் பாரதியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது.
1857இல் வடநாட்டில் நடந்த "சிப்பாய் கலகம்" என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட நிகழ்ச்சியை பாரதி "இந்துஸ்தான சுதந்திர யுத்தம்" என்றே குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தப் புரட்சியை அடுத்து பிரிட்டிஷ் அரசியார் வெளியிட்ட மகாசாசனத்தை அனைவரும் ஆகா, ஓகோ என்று வானளாவப் புகழ்ந்து தள்ளியபோது, பாரதி மட்டும் "அதன் ஒரு வார்த்தையாவது உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. அந்த சாசனம் நாக்கு முதல் நாபி வரையில் இரண்டு தீவட்டிகள் ஏற்றிப் பார்த்தாலும் எள் அளவுகூட உண்மை கிடையாது" என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் திலகரின் காங்கிரசின் பிரசாரகராக பாரதி விளங்கியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது எவ்வளவு ஆபத்தானது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அவர் ஆளாக வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தியது என்பதையும் எண்ணிப்பார்த்தால்தான் பாரதியின் தீவிரமான தேசபக்தி நமக்கு விளங்கும்.
இங்கு 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி கோயில் யானை இவரை தூக்கித் தள்ளிவிட்டது. அதன் காரணமாக இவர் சில காலம் படுத்திருந்தார். பின்னர் உடல்நலம் தேறி வேலைக்குச் சென்றார். அப்போது ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரிலிருந்த காங்கிரஸ் வக்கீல் ஒருவர் அழைப்பின் பேரில் அங்கு சென்று 'சாகாதிருப்பது எப்படி' எனும் தலைப்பில் உரையாற்றித் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் உண்டாகி அவதிப்பட்டார். வியாதியின் உக்கிரம் தாங்காமால் மருந்துண்ண மறுத்தார். செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, 12ஆம் தேதி விடியற்காலை 2 மணி சுமாருக்கு இவர் உயிர் பிரிந்தது. இவரது இறுதி யாத்திரையில் சுமார் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனராம். இப்படி யொரு மகாகவியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க மகாகவி பாரதியாரின் புகழ்
Interesting article describing some unique features of Bharathi. One of the great souls that India produced ever.
ReplyDelete