Followers

Saturday, November 13, 2010

எம்.சங்கையா

பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அப்படி பீராய்ந்து பார்த்துக் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் மதுரை மாவட்டத்தில் தேடியபோது கிடைத்த சில அரிய தொண்டர்கள் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது. இப்படியும் தியாகிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தில் கிடைத்த சுதந்திரம் இன்று என்ன பாடுபடுகிறது. நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கிடக்கட்டும் இன்று பெரியகுளம் தாலுகாவில் வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் கம்மவார் நாயுடு குலத்தில் உதித்த நடுத்தர வசதி படைத்த குடும்பத்தில் வந்த எம்.சங்கையா எனும் தியாகி பற்றி பார்ப்போம்.

வெங்கடாசலபுரத்தில் கி.மாத்தி நாயக்கர் என்பவர் ஒரு கெளரமான மனிதர். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் எம்.சங்கையா. இளம் வயதில் மகாத்மா காந்தியின் பெயரையும் அவரது பேராற்றலையும் பற்றி தெரிந்து கொண்டு ஒரு காந்தி பக்தர் ஆனார். மதுரையில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை வைத்தியநாத ஐயர், ஜார்ஜ் ஜோசப் போன்ற பெரிய காந்திய வாதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். இவரும் தன்னை காந்தி பணியில், நாட்டுச் சுதந்திரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1934இல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து பெரியகுளத்துக்கும் விஜயம் செய்தார். விடுவாரா இந்த சந்தர்ப்பத்தை சங்கையா, ஓடிப்போய் மகாத்மா தரிசனம் செய்தார். மகாத்மாவைப் பார்த்ததாலோ, அல்லது அவர் அருளிய உபதேசத்தாலோ, இவர் தனது பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு சுதந்திர வேள்வியில் கலந்து கொண்டார்.

1936இல் சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதில் சக்திவேல் என்பவர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார். இவரது வெற்றிக்காக கிருஷ்ணசாமி ஐயங்கார், சொக்கலிங்கம் பிள்ளை போன்ற அன்றைய காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ஊர் ஊராகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் பயணம் செய்ய இப்போது போல விரைவு வாகனங்கள் கிடையாது. கால் நடையாக நடந்தே சென்று எல்லா கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தார் இவர்.

தேசிய பத்திரிகைகளுக்கு உள்ளூர் முகவராக இருந்து பத்திரிகைகளை விநியோகம் செய்யலானார். அப்போது தேனி தியாகராஜன் இந்தப் பகுதியில் இருந்த வீறுகொண்ட காங்கிரஸ்காரர். இன்னும் சொல்லப் போனால் தேனி தியாகராஜன் காலத்தில் அந்தப் பகுதிகளில் சுயமரியாதை இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தியாகராஜன். தேனி ஆற்றுப்படுகையில் நடைபெறவிருந்த சுயமரியாதை கூட்டம் நடைபெற முடியாமல் தேனி தியாகராஜனின் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. அந்த தேனி தியாகராஜனுடைய வலது கரமாக இருந்து செயல்பட்டவர்களில் நமது சங்கையாவும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பெரியகுளம் தாலுக்கா குழுவின் செயலாளராகவும் இருந்தார். ராஜாஜி அமைச்சரவை ராஜிநாமா செய்தவுடன் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். அந்த கோரிக்கையை கோஷமிட்டுக்கொண்டு இவர் ஊர்வலமாகச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு இந்தய பாதுகாப்புச் சட்டத்தின்படி 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் உசிலம்பட்டி நிதிமன்றத்தில் நான்கரை மாத தண்டனையும் ஐம்பது ரூபாய் அபராதமும் பெற்றார். அபராதம் கட்ட மறுத்து இவர் மேலும் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மதுரை, வேலூர் ஆகிய ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டார். விடுதலையான பிறகும் கூட இவரைப் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருந்தது.

1941இல் மகாத்மா அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு பல ஊர்களுக்கும் சென்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார். அப்படி அவர் சென்னையில் பாண்டி பஜாரில் கோஷமிட்டுக்கொண்டு சென்றபோது தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனை காலத்தை இவர் அலிப்புரம் சிறையில் கழித்துவிட்டு விடுதலையானார்.

1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது. இவர் மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிவிட்டதாக போலீஸார் இவரை எச்சரிக்கைச் செய்தனர். தேனி போலீசார் இவரை கண்காணித்தபடி இருந்தனர். பாதுகாப்பு கைதியாக பெரியகுளம் சப் ஜெயிலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலையானார். 1943இல் இவரது தந்தையார் ஏற்பாட்டின்படி இவருக்கும் லட்சுமி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. இவருக்கு நாடே குடும்பம் என்பதால் நாட்டுச் சேவையில் சதா கழித்து வந்தார். 1943 முதல் 1947 வரையில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவருக்கு சுதந்திரத்துக்குப் பிறகு அரசாங்கம் தாமரைப் பட்டயம் அளித்து கெளரவித்தது. மத்திய மாநில ஓய்வூதியமும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தன் குடும்பத்தோடு இந்தத் தியாகி சுதந்திரக் காற்றி சுவாசித்து வாழ்ந்தார். வாழ்க எம்.சங்கையா புகழ்.

கல்கி T. சதாசிவம்


கல்கி T. சதாசிவம்

ராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் T.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி வெளியேறி வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் இருந்தமையால் அதில் பணிபுரிந்தார். சதாசிவம் அவர்கள் பள்ளி இறுதி வரை படித்தவர். 1921ஆம் ஆண்டில் ஒரு மகாமகம் வந்தது. அதற்கு சாரணர் தொண்டராகச் சென்றவர் சதாசிவம். அப்படி கும்பகோணம் போன இடத்தில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவருடைய சிம்ம கர்ஜனை சதாசிவத்தை ஒரு தேசபக்தனாக ஆக்கியது.

அதுமுதல் சுப்பிரமணிய சிவாவின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சதாசிவம். சிவா அவர்கள் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்காகப் பாப்பாரப்பட்டியில் இருந்த நிலத்தில் ஒரு அடிக்கல்லை அப்போதைய பெருந்தலைவர் வங்கத்துச் சிங்கம் சி.ஆர்.தாஸ் அவர்களைக் கொண்டு நாட்டியிருந்தார். பாரதமாதா ஆலயப் பணிக்காக பாரதாஸ்ரமம் அமைக்கப்பட்டது. அதில் சேர்ந்த சதாசிவம் தேசத் தொண்டில் முழு மூச்சாக இறங்கினார்.

பாரதமாதா ஆலயம் அமைப்பதற்காக ஊர் ஊராக பஜனை செய்துகொண்டு செல்லும் தேசபக்தர் கூட்டத்தில் உண்டியல் எடுத்து வசூல் செய்தார். நிதி சேர்ப்பதில் சமர்த்தர் எனும் பெயரை அப்போதே அவர் பெற்றார். 1922இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923இல் மறியல் போராட்டம், அன்னிய துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் இப்படிப்பட்ட காந்திய நெறியில் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.

கதர் இயக்கத்திலும் இவர் பெரும் பங்கு வகித்தார். ஊர் ஊராகச் சென்று கதர் துணி மூட்டைகளை எடுத்துச் சென்று கதர் என்பது தேசியத்தின் அடையாளம் சுதந்திரம் வேண்டுவோர் கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதோடு, சுதந்திரத்துக்கும் பாடுபடுபவர்களாக ஆகமுடியும் என்று சொல்லி பெருமளவு கதர் துணிகளை விற்பனை செய்தார். ஆங்காங்கு போய் மக்கள் மத்தியில் சாங்கோபாங்கமாகப் பேசி கதர் துணி விற்பார், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ப்பார், இப்படி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றார் சதாசிவம்.

இவர் இரக்க குணம் உடையவர். தன் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்படுவது கண்டால் உடனே தன் கையில் இருப்பதைக் கொடுத்து அவர்களது கஷ்டத்தை நீக்க உதவி செய்வார். 1930 சுதந்திரப் போர் வரிசையில் மிக முக்கியமான ஆண்டு. ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் துவங்கிய ஆண்டு. திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். மாநில காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்தமையால் அவர் அங்கு மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்தார்.

இவருக்கு ராஜாஜியையும், அவர் மூலமாக மகாத்மா காந்தியடிகளையும் நன்கு அறிந்திருந்தார். இவர் சிறை சென்று மீண்ட சமயம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி புதிய பத்திரிகை தொடங்க முயன்று கொண்டிருந்தார். சதாசிவம் அவரோடு இணைந்து "கல்கி" எனும் பத்திரிகையைத் தொடங்க ஆலோசனைகளைக் கூறி வேலைகளை ஆரம்பித்தார். எழுத கல்கியும், நிர்வாகம் சதாசிவம் என்றும் அன்று தொடங்கிய கல்கி ராஜநடை போட்டு பயணத்தைத் தொடங்கியது. அடடா! கல்கி படைத்த இலக்கியங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் சதாசிவம் அளித்த ஊக்கம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கல்கியும், சதாசிவமும் இணைபிரியாத ராஜாஜி தொண்டர்களாக விளங்கினார்கள். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள ஆங்கரை எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் பெயர் தியாகராஜன். தியாகராஜனுடைய 16 குழந்தைகளில் இவர் 3ஆவது குழந்தை. 4-9-1902இல் இவர் பிறந்தார். 1936இல் இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைச் சந்தித்தார். 10-7-1940இல் இவர்களது திருமணம் நடந்தேறியது. அதே ஆண்டில்தான் கல்கி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இவர் தனது 95ஆம் வயதில் 22-11-1997இல் அமரத்துவம் அடைந்தார். குருநாதரின் ஆலோசனைக்கிணங்க இசையுலக சக்கரவர்த்தினியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்பலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். அவர்கள் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு உந்துசக்தியாக இருந்து பாடுபட்டவர் சதாசிவம். இந்த தம்பதியினரின் நிதி உதவி கச்சேரி மூலம் இந்திய நாட்டில் பயன்பட்ட ஆலயங்கள், நிறுவனங்கள் எத்தனையோ! இன்று இருவரும் அமரராகி விட்டனர். வாழ்க சதாசிவம் புகழ்!

Friday, November 12, 2010

ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரை ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி வி.கே.டி.பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்கள் அதிகம். மதுரை வைத்தியநாத அய்யர் குடும்பம், என்.எம்.ஆர்.சுப்பராமன் குடும்பம் இப்படி எத்தனையோ குடும்பங்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்கள். அந்த வரிசையில் ஸ்ரீநிவாச ஆழ்வார், பங்கஜத்தம்மாள் தம்பதியினரைக் குறிப்பிடலாம்.

மதுரையில் திருமலை ஆழ்வார் என்பவரின் மகன் ஸ்ரீநிவாச ஆழ்வார். இவருக்கு இசை நன்றாக வரும். அதோடு பாடல்களை இயற்றிப் பாடும் திறன் இருந்ததால் இளம் வயது முதல் தானே பாடல்களை இயற்றிப் பாடிவந்தார். தேசியப் பற்றி ஏற்பட்டுவிட்ட இவருக்கு, எழுதும் பாடல் எல்லாம் தேசியப் பாடல்களாகவே அமைந்துவிடும். அந்தக் காலத்தில் நாட்டில் நிகழும் எந்தவொரு பெரிய நிகழ்ச்சியையும் பாட்டு வடிவில் எழுதி பாடி, புத்தகமாக வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அப்போது நடந்த சில கொலை நிகழ்ச்சிகளைக் கூட பாடலாக வடித்த பாவலர்கள் நம் மத்தியில் இருந்தார்கள். ஸ்ரீநிவாச ஆழ்வாரை தனது இளம் வயதில் மிகவும் பாதித்த நிகழ்ச்சி 1919இல் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் டயர் என்பானால் கொடூரமாக சுடப்பட்டு இறந்தார்கள். இந்த படுகொலை நிகழ்ச்சியை ஸ்ரீநிவாச ஆழ்வார் கவிதைவடிவில் எழுதி, சோகமும் வீரமும் இழைந்தோடும்படியாகப் பாடி மக்கள் மத்தியில் அனுதாபத்தையும், சுதந்திரப் போரின்பால் ஈர்ப்பையும் உண்டாக்கினார்.

1930இல் ராஜாஜி தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரையில் உப்பு எடுக்கும் சத்தியாக்கிரக பாத யாத்திரையை மேற்கொண்டார். இந்தப் போரில் அவரே நேரில் தேர்ந்தெடுத்த நூறு தொண்டர்களை அழைத்துச் சென்றார். அப்படிச் சென்ற மதுரை தொண்டர்களில் ஒருவராக ஸ்ரீநிவாச ஆழ்வார் கலந்து கொண்டு காந்தியத்தில் தனக்கிருந்த ஆழ்ந்த பற்றை வெளிக்காட்டினார். வழியில் நடந்த சிரமங்களையெல்லாம் நாட்டுக்காகப் பொறுத்துக் கொண்டு கைதாகி சிறைப்பட்டு ஓராண்டு திருச்சி சிறையில் கிடந்தார்.

தேசபக்தர் சுப்பிரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் தொடங்கவிருந்த பாரதாஸ்ரமத்தில் சிவாவின் தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். சுதந்திரம் எனும் சூரிய உதயத்தைக் காணாமலே இவர் 1937இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவருக்கு ஏற்ற மனைவியாக அமைந்தவர் பங்கஜத்தம்மாள். இவ்விருவருக்கும் இளம் வயதில் பால்ய விவாகம் நடைபெற்றிருந்தது. அதாவது அந்த அம்மையாருக்குத் திருமணத்தின்போது வயது 7. ஸ்ரீநிவாச ஆழ்வார் நன்றாகப் பாடுவார் என்பதைப் பார்த்தோமல்லவா. அவர் அப்படி தேசியப் பாடல்களை பஜனையாகப் பாடிக்கொண்டு தெருத்தெருவாகப் போவது வழக்கம். அப்போதெல்லாம் அவருடைய மனைவி பங்கஜத்தம்மாளும் அவரோடு பஜனை பாடிக்கொண்டு செல்வார். அது தேசிய பஜனை. இவர்களுக்கு மதுரையில் செல்லுமிடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பஜனை பாடுவது மட்டுமல்லாமல் இந்த அம்மையார் மேடைகளில் ஏறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிவந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காங்கிரசின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இத்தனை தியாகங்களையும் இந்த தம்பதியினர் நம் நாட்டுச் சுதந்திரத்துக்காகச் செய்தனர். இவர்களுக்கு வாரிசுகள் உண்டா? இருந்தால் அவர்கள் யாரேனும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைத்தார்களா? பாவம் ஊருக்கு உழைத்து, சிறையில் அடைபட்டு, ஏழ்மையில் மாண்டுபோன பல்லாயிரக்கணக்கான தேசபக்தர்கள் வரிசையில் இந்த ஏழை பஜனை செய்யும் தியாகிகளையும் சேர்த்துக் கொள்வோம்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசின் போக்குப் பிடிக்காமல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் அம்மையார். சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டு மக்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சுரண்டல் இவைகளால் தாக்குண்டு வருந்தியதைப் பொறாமல் இவர் சோஷலிச இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடினார். ஜனநாயக முறையில் தேர்தலிலும் நின்று பார்த்தார். முடியுமா? சுதந்திரப் போர் காலத்தில் கள்ளுக்கடை மறியலிலும், சுதேசிப் பொருட்களை வாங்கு என்று போராடியும் சிறை சென்ற அம்மையார், பதுக்கலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் போராட்டத்தைத் தொடர்ந்தார். பிறவி போராளியான இந்த அம்மையார் 1979 ஜூலை 1ஆம் தேதி அமரரானார். இந்த புரட்சி தீபத்தின் பெயரை மற்றுமொருமுறை உச்சரித்துப் புண்ணியம் பெறுவோம். வாழ்க பங்கஜத்தம்மாள் புகழ்!

Thursday, November 11, 2010

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

சினிமாவும், தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்குச் சாதனாமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியரும்கூட. இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வைத் தூண்டும்படிதான் எழுதுவார். பார்ப்பவர்களுக்கும் அவை ஓர் புதிய எழுச்சியை உருவாக்கும்.

இவர் நாடகங்களில் மக்கள் உணர்வுகளைத் தூண்டச் செய்யும் விதத்தில் மகாகவி பாரதியாரின் "கரும்புத் தோட்டத்திலே" எனும் பாடலையும், ஜாடையாக வெள்ளைக்காரர்களைக் குறிப்பிட்டு "கொக்கு பறக்குதடி" என்ற பாடலும் பிரசித்தம். "கதர் கப்பல் வருகுதே" என்றொரு பாடல். அது தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது. காங்கிரஸ் இயக்கத்துக்காக யார் யாரெல்லாம் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் போய் நாடகம் போட்டு ஆங்காங்கு தேசபக்தியை ஊட்டிவந்தார் இவர். இவர் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தையும் தேச சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வந்தார். பல நேரங்களில் போலீசார் வந்து நாடகத்தைப் பாதியில் நிறுத்தி விடுவார்கள். இவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட்டால், இவர் சிறை செல்வதையே வழக்கமாகக் கொண்டார்.

விடுதலையாகி வெளியே வந்த பிறகும் மீண்டும் அதே நாடகத்தைப் போடுவார், அதே வசனங்களைப் பேசுவார். தடையை மீறியும் பல நேரங்களில் இவர் நாடகங்களை நடத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய நாடகங்கள் அனேகமாக புராண நாடகங்கள்தான். அதில் இவர் முருகனாகவோ, சிவனாகவோ நடித்துக் கொண்டிருப்பார். இவரை மேடையிலேயே வைத்து கைது செய்து கொண்டு போவார்கள். அப்போது விஸ்வநாத தாஸாக இல்லாமல் முருகனாகவோ, சிவனாகவோதான் சிறைக்குச் செல்வார். ஒரு முறை இவர் திருநெல்வேலியில் நாடகம் போட்டு கைதானபோது இவருக்காக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வழக்கில் வந்து வாதாடியிருக்கிறார்.

இவர் சிறைப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கொதித்தெழத் தொடங்கினர். போலீசாரோடு மோதினர். இவர் மதுரை ஜில்லா போர்டு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். திருமங்கலம் காங்கிரஸ் கமிட்டிக்கு இவர் நிறைய நிதி சேர்த்துக் கொடுத்திருக்கிறார். இப்படி தன் வாழ் நாளெல்லாம் நாடகம், நாட்டுப்பணி, சிறைவாசம் என்றிருந்தவரின் முடிவு அற்புதமானது.

சென்னையில் இவர் ஒரு நாடகத்தில் முருகனாக வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். நாடகத்தின் முடிவில் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் அப்போதே அவர் ஆவி பிரிந்து காலமாகிவிட்டார். மக்கள் கலங்கிப் போனார்கள். மயில் வாகனத்தின் மீது முருகனாகக் காட்சியளித்தவர் அடுத்த நொடி பிணமாகப் போனது அனைவரையும் பாதித்து விட்டது. வாழ்க தியாக விஸ்வநாததாஸ் புகழ்!

எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பாடிய "கொக்கு பறக்குதடி"

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு தனது நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை நாடெங்கும் பறப்பிய தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களை அறியாதார் யார்? அவருடைய 'வெள்ளை கொக்கு பறக்குதடி" எனும் அது எந்த நாடகமாக இருந்தாலும் மக்கள் பலமுறை பாடச் சொல்லிக் கேட்பார்கள். அந்த முழுப்பாடலும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய அந்தப் பாடலை இயற்றியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். அதனை நாடக மேடைகளில் பாடி பெருமை சேர்த்தவர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ். தன் நாடகமொன்றில் முருகன் வேடமிட்டு மயில் மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர் பாடிய அந்தப் பாட்டிப் படியுங்கள். அந்த தியாக புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கொக்கு பறக்குதடி பாப்பா!

கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)

கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)

வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)

தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு - அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)

கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)

மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)

பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)

Friday, November 5, 2010

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி மாநகரம் பல நூறு தியாகிகளை இந்திய சுதந்திரத்துக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல தியாகிகளில் வக்கீல் ரா.நாராயண ஐயங்கார் என்பவர் முதன்மையானவர். அவர்களுடைய காலம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதால், சுதந்திரப் போர் முக்கியமான கட்டத்தை நெருங்கிய சமயத்தில் இவர்கள் எல்லாம் களத்தில் இல்லை. அதனால் பெரும்பாலும் இவர்களது வரலாறு வெளியே வராமலேயே போய்விட்டது. என்றாலும் இவர்களது பங்களிப்பு மறக்கக்கூடியவைகள் அல்ல.

1919இல் பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையை அடுத்து நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பு அதிகமாகியது. மகாத்மா காந்தி ஒத்துழையாம இயக்கத்தைத் தொடங்கினார். 1919இல் தமிழகத்தில் திருநெல்வேலியில் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவரது தீர்மானத்தை மிதவாத காங்கிரசைச் சேர்ந்த சர் சி.பி.ராமசாமி ஐயரும், சீனிவாச சாஸ்திரியாரும் எதிர்த்துப் பேசினர். அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டு சட்டசபைகளுக்குப் போகவேண்டுமென்பது அவர்களது வாதம். இவர்களது எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக இவ்விருவரும் காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டனர். இவ்விதம் அந்தக் காலத்தில் தீவிர வாதிகள், மித வாதிகள் என்ற ரீதியில் காங்கிரசார் பிரிந்திருந்தனர். இதில் ரா.நாராயண ஐயங்கார் தீவிரவாத கோஷ்டியில் அங்கம் வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நாராயண ஐயங்கார் சட்டக்கல்வி படித்து வக்கீலாகத் தொழில் தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்திலும் இவர் தீவிரமாக பங்குபெறத் தொடங்கினார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் அலுவலகம் சின்னக்கடைத்தெருவின் அருகில் இரட்டை மால் வீதியில் இருந்தது. அப்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சுவாமிநாத சாஸ்திரி, சையத் முர்டூசா சாஹேப் ஆகியோர் முக்கிய பதவிகளில் இருந்தனர். 1920 வாக்கில் வ.வெ.சு.ஐயரும் மாவட்ட காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

அப்போது திருச்சி தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆசிரியர் கல்கி அவர்கள் தனது படிப்பை நிறுத்திவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இப்படி இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக ஊர் ஊராகச் சென்று பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றியும், நாட்டுக்கு சுயராஜ்யம் தேவை என்பதைப் பற்றியும் பேசினார்கள். ரா.கிருஷ்ணமூர்த்திக்கு (கல்கி) நல்ல குரல் வளம். மென்மையான கீச்சுக்குரல். அவர் மகாகவி பாரதியாரின் பாடல்களை அருமையாகப் பாடுவார்.

1921இல் கதர் மற்றும் இந்தி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வடநாட்டுக் காரரான பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் பேசிய பேச்சுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஓராண்டு சிறையும், இவரது உரையை தமிழில் மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு ஓராண்டு சிறையும் கொடுக்கப்பட்டது. பின்னர் இவர் சிறையிலிருந்து வெளிவந்த பின் உடல்நலம் கெட்டு காலமானார். அவரது ஈமக் கிரியைகளை பாலகிருஷ்ண சாஸ்திரியே செய்தார்.

1925இல் அகில இந்திய கதர் நூல் நூற்போர் சங்கத்தின் தலைவராக க.சந்தானம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் செயலாளராக ரா.நாராயண ஐயங்கார் பணி புரிந்தார். திருச்சி தியாகி சங்கிலியாப் பிள்ளை கதர் வஸ்திராலய ஊழியராகப் பணிபுரிந்தார். இந்தக் கதர் கடை திருச்சி பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இருந்தது.

1926-27இல் மகாத்மா காந்தி தென்னிந்திய சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அவர் திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்தில் தங்கினார். அவருடன் ராஜாஜி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய், மீராபென் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வீட்டில் காவல் வேலையைச் செய்தது தொண்டர் ரா.நாராயண ஐயங்கார்.

மகாத்மா காந்தி அப்போது திருச்சியில் இருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயரின் மனைவி வந்து அவரைச் சந்தித்து சேரன்மாதேவி குருகுல உரிமைகள் அனைத்தையும் மகாத்மாவிடம் ஒப்படைத்தார். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இயக்கத்தின் பொறுப்பை போகும் வழியிலுள்ள ஊர்களில் கவனித்துக் கொள்ள ரா.நாராயண ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் கல்லணையில் தொண்டர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது, உணவு அளிக்கக்கூடாது என்று தஞ்சை கலெக்டர் தார்ன் போட்டிருந்த உத்தரவுக்கு எதிராக மக்கள் ரகசியமாக மரத்தில் சோற்று மூட்டைகளைக் கட்டி வைத்து தொண்டர்களை எடுத்துச் சாப்பிடும்படி ரகசிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

உப்பு சத்தியாக்கிரகத்துக்கு உதவுவதற்காக திருச்சியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் நடத்த கிலேதார் தெருவில் இருந்த நீலாம்பாள் எனும் அம்மையார் தனது வீட்டைக் கொடுத்திருந்தார். அவரை போலீசாரும், அரசாங்க அதிகாரிகளும் எவ்வளவோ மிரட்டியும் அவர் படிந்து வரவில்லை. முகாம் அங்குதான் நடந்தது. ஒவ்வொரு நாளும் அந்த முகாமிலிருந்து ஐம்பது தொண்டர்கள் வேதாரண்யம் பயணமாயினர்.

அப்போது நாராயண ஐயங்காருக்கு விருதுநகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் கல்யாண கோஷ்டியொன்று விருதுநகரிலிருந்து வருகிறது. அவர்களை ரயில் நிலையத்துக்கு வந்து சந்திக்கவும் என்று இருந்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. யாருக்குக் கல்யாணம். அந்த கல்யாண கோஷ்டியில் வருபவர்கள் யார்? ஒன்றும் தெரியவில்லை. விலாசமும் சரியாகத்தான் இருந்தது. சரி எதற்கும் போய் பார்க்கலாம் என்று இவரும் போய் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ரயில் நின்றது. அதிலிருந்து ஒரு கோஷ்டி. அதில் ஒருவருக்கு மஞ்சள் வேட்டியணிந்து மாலையுடன் இருந்தார். அவருடன் அவர் தோழர் ஒருவர். இவர்களுக்குப் பாதுகாப்பாக போலீசார். பார்த்தால் ஒருவர் காமராஜ், மஞ்சள் வேட்டிக்காரர் அவரது தோழர் முத்துச்சாமி. அவரது திருமண வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு திருச்சி அழைத்து வரப்பட்டிருந்தார் முத்துச்சாமி. உடன் காமராஜ். அந்த கோஷ்டியை டாக்டர் ராஜன் இல்லம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

உப்பு சத்தியாக்கிரகம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் நாராயண ஐயங்காருக்கு வேதாரண்யத்திலிருந்து ஒரு கடிதம். கு.லட்சுமணசாமி முதலியார் என்பவர் எழுதியிருந்தார். அதில் "இங்கு கிரெளன் பிராண்ட் சரக்கு ரொம்பவும் மும்முரமாக எடுபடுவதால், அதனுடன் போட்டிபோடக்கூடிய நல்ல சரக்குகளை அனுப்பவும்" என்றிருந்தது. இது என்ன? ஒன்றும் புரியவில்லையே என்று இவருக்குக் குழப்பம். அதன் பொருள் பின்னர் இவருக்குப் புரிந்தது. அது "அங்கு போலீசின் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது. ஆகையால் அதனை எதிர்த்து நிற்கக்கூடிய தொண்டர்களை அனுப்பவும் என்று இருந்தது.

இவர்கள் முகாம் நடத்த இடம் கொடுத்த நீலாம்பாள் பற்றி சொன்னோமல்லவா? போலீஸ் அவரை மிரட்டியபோது, வீடு தன்னுடையது அதனை இவர்களுக்கு வாடகைக்குத் தந்திருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியும் அவருடைய வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் விரும்பிதான் இந்தப் பணிக்காக தனது வீட்டைக் கொடுத்ததாகக் கூறி சிறை புகுந்தார்.

ரா.நாராயண ஐயங்கார் தண்டிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவருக்குக் கல் உடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. வக்கீலாக இருந்தவர் அங்கு போய் கல் உடைத்தார். வக்கீலான இவரை சிறையில் 'சி' வகுப்பில் வைத்திருந்ததனால் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் கிளர்ச்சி செய்து இவருக்கு 'பி' வகுப்பு கிடைக்க வகை செய்தது. விடுதலையாகி இவர் திருச்சி வந்தபோது இவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. "சங்கு" கணேசனுடன் சேர்ந்து "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகை நடத்தினார். திருச்சி தியாகி எஸ்.வெங்கட்டராமன் தொடங்கி நடத்திய "ஜெயபாரதி" எனும் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ஆண்டுகள் பணி. 'தினமணி', 'சுதேசமித்திரன்' ஆகியவற்றில் சுதந்திர எழுத்தாளராக அடிக்கடி எழுதிவந்தார். தனது எண்பதாவது வயதைத் தாண்டி வாழ்ந்த இவர் திருச்சியில் காலமானார். திருச்சி மாவட்டம் அளித்த சிறந்த தியாகிகளில் ரா.நாராயண ஐயங்காரும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை தந்த பல தேசபக்தர்களில் பழனிக்குமாரு பிள்ளையும் ஒருவர். இவர் 24-9-1898இல் பிறந்தார். 1908இல் தேச விடுதலைக்காக நடைபெற்ற போராட்டம் இவரை இழுத்துக் கொண்டது. அப்போது சுயராஜ்ய வேட்கை உள்ளவர்கள் பலர் இந்தியாவில் புதிது புதிதாகத் தோன்றிய பல ஆன்மிக, அரசியல் இயக்கங்களில் சேரந்தனர். அதன்படி இவர் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினர் ஆனார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு சுயராஜ்யக் கட்சி என்று தனியாக காங்கிரசிலிருந்து பிரிந்து போய் ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பழனிக்குமாரு பிள்ளை பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டம் நேரடியாக இந்திய சுதந்திரம் எனும் கோரிக்கையை வைத்துப் போராடுவதற்கு முன்பாக மகாத்மா காந்தியின் ஆணைக்கிணங்க பல சமூக, அடித்தட்டு மக்களைக் காப்பாற்றும் பல இயக்கங்களை அறிவித்தார். அதில் ஒன்றுதான் ஏழை உழைப்பாளிகளை குடியின் கேட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற கள்ளுக்கடை மறியல் போராட்டம். 1922இல் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஒரு வாரம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கூட்டங்களில் பேசும்போது எதிர்கட்சியாக இருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி இவர் பல முறை அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். 1930இல் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். அதில் இவர் தொண்டராகக் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், உப்பு சத்தியாக்கிரகத்தை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிவகாசி சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இவர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1932ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். ராமநாதபுரம், மதுரை ஆகிய ஜில்லாக்களில் காங்கிரஸ் கமிட்டியில் போராட்டக் குழுவில் தலைமை வகித்து இவர் வழிநடத்திச் சென்றதால் இவர் மீது வழக்கு வந்தது. மறியல் நடத்தியக் குற்றத்துக்காக இவருக்கு 2 வருட தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் தண்டனைகளை அலிப்பூர், திருச்சி சிறைகளில் கழித்து விடுதலையானார்.

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் (தீச்சட்டி கோவிந்தன்) மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவருக்கெதிராக வலுவான சாடிசிகள் எதுவும் இல்லாமல் போகவே இவர் விடுவிக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரது தீவிரமான ஈடுபாட்டைக் கவனித்த போலீஸ் இவரை போலீஸ் காவலில் வைத்துக் கொண்டு, சில நாட்களுக்குப் பின் வெளியே விட்டனர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ந.சோமையாஜுலு, காமராஜ் ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழனிக்குமாரு பிள்ளை. பெருந்தலைவர் காமராஜருடன் ஒன்றாக இவரும் அவரும் ஒரே சிறையில் இருந்திருக்கின்றனர். இவருக்கு காமராஜருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது விருதுநகரில். அப்போது இவர் அவ்வூரில் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். இவர் பொது நலனுக்காக அயராது பாடுபட்டு எப்போதும் பிறருக்கு உதவுவதிலேயே காலத்தைச் செலவிட்டார். இவர் 14-7-1977இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பழனிக்குமாரு பிள்ளையின் தியாகம்!

ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரை ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரையைச் சேர்ந்த இந்த இஸ்லாமியப் பெரியவர் தன்னுடைய சுதந்திரப் போராட்ட வாழ்க்கையை 1910இல் அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தோடு தொடங்கினார். இவர் பல மொழிகளில் வல்லுனர். இவர் மேடையேறி பேசினால் அனைவரும் ஆழ்ந்து கவனிப்பர். இவருடைய பேச்சுக்கள் எப்போதும் வீண் பேச்சாக இருந்ததில்லை. பல மொழி நூல்களிலிருந்தும், பல்நாட்டு அறிஞர் பெருமக்களின் உரைகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவார். அவர் பேசுகிறார் என்றால் மதுரையிலும் சுற்று வட்டாரங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வர். அன்றைய ஆங்கில ஆளும் வர்க்கத்தை இவர் தனது பேச்சினால் கலங்க அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். தேசபக்தி, மதபக்தி இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!

Wednesday, November 3, 2010

தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்

A.Y.S. பரிசுத்த நாடார்

ஒரு ஊரின் பெயரைச் சொன்னவுடன் சிலரது பெயர்கள் நினைவுக்கு வரும்; அதுபோல தஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வரும் பெயர் A.Y.S. பரிசுத்த நாடார். தேசியப் பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியில் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி A.யாகப்ப நாடார் - ஞானம்மாள் தம்பதியருக்குப் பிறந்த அருந்தவச் செல்வங்கள் மூவரில் இளைய மகன் இவர். இவரது மூத்த சகோதரர் A.Y.அருளானந்தசாமி நாடார், இவரது சகோதரி இதயமேரி அம்மாள்.

இவர் தஞ்சாவூர் நகராட்சியின் சேர்மனாக நீண்ட காலம் பதவி வகித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர். மூன்று முறை தேர்தலில் வென்று பதினைந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றிய இவர் தி.மு.க.வின் தலைவர் தஞ்சையில் போட்டியிட்டபோது மட்டும், ஒரே ஒரு முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர். நாட்டுப் பற்றோடும், மக்கள் நலனில் அக்கறை உணர்வோடும் இவர் சமூகப் பணிகளில் செயலாற்றியவர். இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் Air Raid Warden பொறுப்பில் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பாளராகப் பணியாற்றியவர் இவர். அவரது உயரிய செயல்பாடு காரணமாக அன்றைய அரசாங்கம் இவருக்கு "ராவ் சாஹேப்" விருதை வழங்கி கெளரவித்தது. தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றினார். தஞ்சை நகர காங்கிரஸ் தலைவராக 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியக்கமிட்டி உறுப்பினராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இப்படி பல நிலைகளில் இவர் கட்சிப்பணியாற்றியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் இவரது நேர்மையையும், நிர்வாகத் திறமையையும், கடுமையான உழைப்பையும், தொண்டுள்ளத்தையும் கண்டு இவரிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

சிறுபான்மை இன ரோமன் கத்தோலிக்க நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரான இவருக்கு எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், நல்லெண்ணமும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரும் இவரது மூதாதையர்களும் இந்தப் பகுதி மக்களுக்கு, அவர்கள் எந்த சாதி, இனத்தைச் சேர்ந்தவராயினும் பாகுபாடின்றி நான்கு தலைமுறைகளாகப் பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி, அவர்களை உயர்த்துவதற்காக இடைவிடாது பாடுபட்டிருக்கிறார்கள். அந்த நன்றியுணர்வை இன்றளவும் சுற்றுப்புற கிராம மக்களிடம் பார்த்து உணர முடிகிறது. தர்ம காரியங்களுக்கும், உதவிகள் தேவைப்படும் தகுதி வாய்ந்த இளைய தலைமுறையினருக்கும் இந்தக் குடும்பம் விளம்பரமின்றி செய்து வரும் பெரும் பணிகளை மக்கள் மனதார பாராட்டி மகிழ்கிறார்கள்.

A.Y.S. பரிசுத்த நாடார், தஞ்சை தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இவற்றில் கல்வி பயின்றார். விளையாட்டுகளில் ஆர்வமுடையவர் இவர்; குறிப்பாக கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டு சென்னை மாகாண கால்பந்துக் குழுவில் விளையாடியிருக்கிறார். மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். டென்னிஸ் ஆட்டத்திலும் இவர் வல்லவராக விளங்கியிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி, இவர் தனது 61ம் வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று அதற்கான உரிமம் பெற்றுத் தன்னந்தனியராக விமானம் ஓட்டி பாராட்டுதல்களைப் பெற்றவர் என்பதுதான்.

அரசியல், வணிகம், விளையாட்டு போன்ற துறைகளைத் தவிர இவர் ஈடுபட்டு பெருமை சேர்த்த வேறு பல துறைகளும் உண்டு. பாரத சாரண இயக்கத்தில் உதவி இயக்குனராக இருந்தவர்; தஞ்சை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூர் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூரில் இருக்கும் யூனியன் கிளப்பின் தலைவர்; காஸ்மாபாலிடன் கிளப்பின் தலைவர்; தோல்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இப்படிப் பலப்பல. இவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அங்கு இவரது அயராத உழைப்பாலும், நேர்மை நெறிகளாலும் சிறப்பிடம் பெற்று விளங்கியிருக்கிறார்.

1949ம் ஆண்டில் முதன்முதலாக தஞ்சாவூரில் ROTARY CLUB OF THANJAVUR என்ற பெயரில் முதல் ரோட்டரி சங்கத்தைத் தோற்றுவித்து அதன் சாசனச் செயலாளராக இருந்திருகிறார். தஞ்சாவூரில் ரோட்டரி இயக்கத்தின் முன்னோடியாக இவர் திகழ்ந்திருக்கிறார். 1946ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான புதுச்சேரி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென்மாநில தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் குழு அமைத்தபோது, சிறுபான்மையினரின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நோக்கில் Rev.Fr. Jerome D'Souza அவர்களின் தலைமையில் அமைந்த சிறுபான்மையோர் குழுவில் இவரும் அங்கம் வகித்து அரிய பணியாற்றியிருக்கிறார். இந்தப் பெருமகனார் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் திரைப்படம் அறிமுகமான காலத்திலேயே திரைப்படக் கொட்டகைகளை அமைத்து மக்கள் பார்க்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

அரசியல், சமூகத்தொண்டு, கல்விப்பணி, தொழில்துறை என்று பல்முனை வித்தகராக விளங்கிய பெருந்தகையாளர் A.Y.S.பரிசுத்த நாடார் திருமதி பிலோமினா சூசையம்மாள் தம்பதியருக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் குலவிளக்குகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் S.P.ஜெரோம், S.P.ஜேம்ஸ், S.P.ஜார்ஜ், S.P.பெஞ்சமின், S.P.பெலிக்ஸ், S.P.செல்வராஜ், S.P.அந்தோணிசாமி, S.P.அருள்தாஸ் ஆகியோராவர். இவர்களுக்கு ஒரு சகோதரி; அவர் பெயர் S.P.மேரி ஞானம் அருள்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"

என்பது வள்ளுவர் வாக்கு. “உலகத்தில் பேரறிவாளரிடம் இருக்கும் செல்வமானது, ஊருக்கு நடுவில் இருக்கும் குளத்து நீர் எல்லோருக்கும் பயன்படுவதைப் போன்றது” என்பது இதன் பொருள். அப்படிப்பட்ட பேரருளாளர்கள் புகழ் ஓங்கட்டும்!

அக்கினித் திராவக அபிஷேகம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயருக்கு அக்கினித் திராவக அபிஷேகம்.

1942 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம். மதுரையில் தேசியத் தொண்டர்கள், சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட பெண்கள் உட்பட பலர் ஊர்வலமாகச் சென்று மகாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்படி அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஊர்வலத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது. ஊர்வலத்தில் வந்த சில தொண்டர்களையும், இரண்டு பெண்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி ஊருக்கு எட்டு மைல் தள்ளி ஒரு வனாந்திரப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்று, அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு வந்து விட்டார்கள். நட்ட நடுக் காட்டில் நிர்வாண கோலத்தில் அந்த தாய்மார்களும், தொண்டர்களும் அன்று பட்ட வேதனை. அப்பப்பா, கொடுமை. இந்தக் கொடுமையைச் செய்தவன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். பெயர் விஸ்வநாதன் நாயர். இவரைத் தீச்சட்டி கோவிந்தன் என்று குறிப்பிடுவார்கள். தேசபக்தர்களுக்கு கொடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றவர்.


இந்த நிகழ்ச்சியின் காரணமாக மதுரை இளைஞர்களுக்கு இந்த விஸ்வநாதன் நாயர் மீது ஒரு கண். அவனை பழி தீர்த்துக் கொள்வதற்காக நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது. அவர்கள் அந்த கொடுங்கோல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயரை நடுவில் விட்டு அக்கினித் திராவகத்தால் அபிஷேகம் செய்து ஆனந்தப் பட்டனர். பழிக்குப் பழி. எங்கள் தாய்க்குலத்தை நிர்வாணமாக்கி அவமதித்த விஸ்வநாத நாயரே, இனி வாழ்நாள் முழுவதும் நீ செய்த அந்த கொடுமையை உன் முகத்தையும் உடம்பையும் பார்த்துப் பார்த்து நினைவு படுத்திக் கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது அக்கினித் திராவகம் வீசிய நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கை நிரூபிக்கப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை. எனவே அக்கினித் திராவகம் வீசினார்கள் என்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ராமானுஜம் ஐயங்கார், கோ.குப்புசாமி, டி.தர்மராஜ் சந்தோஷம், முதலான வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் பழிக்குப் பழி வாங்கும் செயலை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரத் திலகங்கள் K.B.ராஜகோபால், D.ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டன் என்பாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், லட்சுமணன், காயாம்பு தேவர், கோமதிநாயகம் ஆகியோருக்கு தலைக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.

மற்ற எதிரிகளான ஓ.ஆர்.சுந்தர ராவ், டி.எம்.கோபாலாச்சாரி, ஏ.என்.விசுவநாதன், ரத்தினம் பிள்ளை, சோமுப் பிள்ளை, கணபதி பிள்ளை, சங்கிலித்தேவர், நாராயணன், குருநாதன் ஆகியோர் செஷன்ஸ் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் இவர்களில் பலர் மறுபடியும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு செய்தனர். திரு ஜெயராமன் என்ற வழக்கறிஞர் எதிரிகளுக்காக வாதிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. இவர்கள் தவிர மேலும் பலர் தடையை மீறியதற்காகவும், ராஜதுவேஷப் பேச்சிற்காகவும் சிறை தண்டனை பெற்று மதுரையின் பெருமையை உலகறியச் செய்தனர். வாழ்க மதுரை தியாகசீலர்களின் புகழ்!