Followers

Saturday, November 13, 2010

எம்.சங்கையா

பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அப்படி பீராய்ந்து பார்த்துக் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் மதுரை மாவட்டத்தில் தேடியபோது கிடைத்த சில அரிய தொண்டர்கள் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது. இப்படியும் தியாகிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தில் கிடைத்த சுதந்திரம் இன்று என்ன பாடுபடுகிறது. நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கிடக்கட்டும் இன்று பெரியகுளம் தாலுகாவில் வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் கம்மவார் நாயுடு குலத்தில் உதித்த நடுத்தர வசதி படைத்த குடும்பத்தில் வந்த எம்.சங்கையா எனும் தியாகி பற்றி பார்ப்போம்.

வெங்கடாசலபுரத்தில் கி.மாத்தி நாயக்கர் என்பவர் ஒரு கெளரமான மனிதர். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் எம்.சங்கையா. இளம் வயதில் மகாத்மா காந்தியின் பெயரையும் அவரது பேராற்றலையும் பற்றி தெரிந்து கொண்டு ஒரு காந்தி பக்தர் ஆனார். மதுரையில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை வைத்தியநாத ஐயர், ஜார்ஜ் ஜோசப் போன்ற பெரிய காந்திய வாதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். இவரும் தன்னை காந்தி பணியில், நாட்டுச் சுதந்திரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1934இல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து பெரியகுளத்துக்கும் விஜயம் செய்தார். விடுவாரா இந்த சந்தர்ப்பத்தை சங்கையா, ஓடிப்போய் மகாத்மா தரிசனம் செய்தார். மகாத்மாவைப் பார்த்ததாலோ, அல்லது அவர் அருளிய உபதேசத்தாலோ, இவர் தனது பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு சுதந்திர வேள்வியில் கலந்து கொண்டார்.

1936இல் சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதில் சக்திவேல் என்பவர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார். இவரது வெற்றிக்காக கிருஷ்ணசாமி ஐயங்கார், சொக்கலிங்கம் பிள்ளை போன்ற அன்றைய காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ஊர் ஊராகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் பயணம் செய்ய இப்போது போல விரைவு வாகனங்கள் கிடையாது. கால் நடையாக நடந்தே சென்று எல்லா கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தார் இவர்.

தேசிய பத்திரிகைகளுக்கு உள்ளூர் முகவராக இருந்து பத்திரிகைகளை விநியோகம் செய்யலானார். அப்போது தேனி தியாகராஜன் இந்தப் பகுதியில் இருந்த வீறுகொண்ட காங்கிரஸ்காரர். இன்னும் சொல்லப் போனால் தேனி தியாகராஜன் காலத்தில் அந்தப் பகுதிகளில் சுயமரியாதை இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தியாகராஜன். தேனி ஆற்றுப்படுகையில் நடைபெறவிருந்த சுயமரியாதை கூட்டம் நடைபெற முடியாமல் தேனி தியாகராஜனின் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. அந்த தேனி தியாகராஜனுடைய வலது கரமாக இருந்து செயல்பட்டவர்களில் நமது சங்கையாவும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பெரியகுளம் தாலுக்கா குழுவின் செயலாளராகவும் இருந்தார். ராஜாஜி அமைச்சரவை ராஜிநாமா செய்தவுடன் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். அந்த கோரிக்கையை கோஷமிட்டுக்கொண்டு இவர் ஊர்வலமாகச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு இந்தய பாதுகாப்புச் சட்டத்தின்படி 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் உசிலம்பட்டி நிதிமன்றத்தில் நான்கரை மாத தண்டனையும் ஐம்பது ரூபாய் அபராதமும் பெற்றார். அபராதம் கட்ட மறுத்து இவர் மேலும் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மதுரை, வேலூர் ஆகிய ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டார். விடுதலையான பிறகும் கூட இவரைப் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருந்தது.

1941இல் மகாத்மா அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு பல ஊர்களுக்கும் சென்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார். அப்படி அவர் சென்னையில் பாண்டி பஜாரில் கோஷமிட்டுக்கொண்டு சென்றபோது தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனை காலத்தை இவர் அலிப்புரம் சிறையில் கழித்துவிட்டு விடுதலையானார்.

1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது. இவர் மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிவிட்டதாக போலீஸார் இவரை எச்சரிக்கைச் செய்தனர். தேனி போலீசார் இவரை கண்காணித்தபடி இருந்தனர். பாதுகாப்பு கைதியாக பெரியகுளம் சப் ஜெயிலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலையானார். 1943இல் இவரது தந்தையார் ஏற்பாட்டின்படி இவருக்கும் லட்சுமி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. இவருக்கு நாடே குடும்பம் என்பதால் நாட்டுச் சேவையில் சதா கழித்து வந்தார். 1943 முதல் 1947 வரையில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவருக்கு சுதந்திரத்துக்குப் பிறகு அரசாங்கம் தாமரைப் பட்டயம் அளித்து கெளரவித்தது. மத்திய மாநில ஓய்வூதியமும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தன் குடும்பத்தோடு இந்தத் தியாகி சுதந்திரக் காற்றி சுவாசித்து வாழ்ந்தார். வாழ்க எம்.சங்கையா புகழ்.

1 comment:

  1. தேடிப் பிடித்து வலையேற்றும் உங்க‌ள் பணி பாராட்டத் தகுந்தது.சங்கைய்யா
    போன்ற சாதாரணர்களையும் நாட்டுப்பற்றுக் கொண்டவர்களாக மாற்றிய காந்தி என்ற காந்த சக்திக்குத் தலை வணங்குவோம்.

    ReplyDelete

Please give your comments here