Followers

Friday, November 5, 2010

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி மாநகரம் பல நூறு தியாகிகளை இந்திய சுதந்திரத்துக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல தியாகிகளில் வக்கீல் ரா.நாராயண ஐயங்கார் என்பவர் முதன்மையானவர். அவர்களுடைய காலம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதால், சுதந்திரப் போர் முக்கியமான கட்டத்தை நெருங்கிய சமயத்தில் இவர்கள் எல்லாம் களத்தில் இல்லை. அதனால் பெரும்பாலும் இவர்களது வரலாறு வெளியே வராமலேயே போய்விட்டது. என்றாலும் இவர்களது பங்களிப்பு மறக்கக்கூடியவைகள் அல்ல.

1919இல் பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையை அடுத்து நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பு அதிகமாகியது. மகாத்மா காந்தி ஒத்துழையாம இயக்கத்தைத் தொடங்கினார். 1919இல் தமிழகத்தில் திருநெல்வேலியில் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவரது தீர்மானத்தை மிதவாத காங்கிரசைச் சேர்ந்த சர் சி.பி.ராமசாமி ஐயரும், சீனிவாச சாஸ்திரியாரும் எதிர்த்துப் பேசினர். அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டு சட்டசபைகளுக்குப் போகவேண்டுமென்பது அவர்களது வாதம். இவர்களது எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக இவ்விருவரும் காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டனர். இவ்விதம் அந்தக் காலத்தில் தீவிர வாதிகள், மித வாதிகள் என்ற ரீதியில் காங்கிரசார் பிரிந்திருந்தனர். இதில் ரா.நாராயண ஐயங்கார் தீவிரவாத கோஷ்டியில் அங்கம் வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நாராயண ஐயங்கார் சட்டக்கல்வி படித்து வக்கீலாகத் தொழில் தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்திலும் இவர் தீவிரமாக பங்குபெறத் தொடங்கினார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் அலுவலகம் சின்னக்கடைத்தெருவின் அருகில் இரட்டை மால் வீதியில் இருந்தது. அப்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சுவாமிநாத சாஸ்திரி, சையத் முர்டூசா சாஹேப் ஆகியோர் முக்கிய பதவிகளில் இருந்தனர். 1920 வாக்கில் வ.வெ.சு.ஐயரும் மாவட்ட காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

அப்போது திருச்சி தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆசிரியர் கல்கி அவர்கள் தனது படிப்பை நிறுத்திவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இப்படி இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக ஊர் ஊராகச் சென்று பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றியும், நாட்டுக்கு சுயராஜ்யம் தேவை என்பதைப் பற்றியும் பேசினார்கள். ரா.கிருஷ்ணமூர்த்திக்கு (கல்கி) நல்ல குரல் வளம். மென்மையான கீச்சுக்குரல். அவர் மகாகவி பாரதியாரின் பாடல்களை அருமையாகப் பாடுவார்.

1921இல் கதர் மற்றும் இந்தி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வடநாட்டுக் காரரான பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் பேசிய பேச்சுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஓராண்டு சிறையும், இவரது உரையை தமிழில் மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு ஓராண்டு சிறையும் கொடுக்கப்பட்டது. பின்னர் இவர் சிறையிலிருந்து வெளிவந்த பின் உடல்நலம் கெட்டு காலமானார். அவரது ஈமக் கிரியைகளை பாலகிருஷ்ண சாஸ்திரியே செய்தார்.

1925இல் அகில இந்திய கதர் நூல் நூற்போர் சங்கத்தின் தலைவராக க.சந்தானம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் செயலாளராக ரா.நாராயண ஐயங்கார் பணி புரிந்தார். திருச்சி தியாகி சங்கிலியாப் பிள்ளை கதர் வஸ்திராலய ஊழியராகப் பணிபுரிந்தார். இந்தக் கதர் கடை திருச்சி பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இருந்தது.

1926-27இல் மகாத்மா காந்தி தென்னிந்திய சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அவர் திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்தில் தங்கினார். அவருடன் ராஜாஜி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய், மீராபென் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வீட்டில் காவல் வேலையைச் செய்தது தொண்டர் ரா.நாராயண ஐயங்கார்.

மகாத்மா காந்தி அப்போது திருச்சியில் இருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயரின் மனைவி வந்து அவரைச் சந்தித்து சேரன்மாதேவி குருகுல உரிமைகள் அனைத்தையும் மகாத்மாவிடம் ஒப்படைத்தார். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இயக்கத்தின் பொறுப்பை போகும் வழியிலுள்ள ஊர்களில் கவனித்துக் கொள்ள ரா.நாராயண ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் கல்லணையில் தொண்டர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது, உணவு அளிக்கக்கூடாது என்று தஞ்சை கலெக்டர் தார்ன் போட்டிருந்த உத்தரவுக்கு எதிராக மக்கள் ரகசியமாக மரத்தில் சோற்று மூட்டைகளைக் கட்டி வைத்து தொண்டர்களை எடுத்துச் சாப்பிடும்படி ரகசிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

உப்பு சத்தியாக்கிரகத்துக்கு உதவுவதற்காக திருச்சியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் நடத்த கிலேதார் தெருவில் இருந்த நீலாம்பாள் எனும் அம்மையார் தனது வீட்டைக் கொடுத்திருந்தார். அவரை போலீசாரும், அரசாங்க அதிகாரிகளும் எவ்வளவோ மிரட்டியும் அவர் படிந்து வரவில்லை. முகாம் அங்குதான் நடந்தது. ஒவ்வொரு நாளும் அந்த முகாமிலிருந்து ஐம்பது தொண்டர்கள் வேதாரண்யம் பயணமாயினர்.

அப்போது நாராயண ஐயங்காருக்கு விருதுநகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் கல்யாண கோஷ்டியொன்று விருதுநகரிலிருந்து வருகிறது. அவர்களை ரயில் நிலையத்துக்கு வந்து சந்திக்கவும் என்று இருந்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. யாருக்குக் கல்யாணம். அந்த கல்யாண கோஷ்டியில் வருபவர்கள் யார்? ஒன்றும் தெரியவில்லை. விலாசமும் சரியாகத்தான் இருந்தது. சரி எதற்கும் போய் பார்க்கலாம் என்று இவரும் போய் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ரயில் நின்றது. அதிலிருந்து ஒரு கோஷ்டி. அதில் ஒருவருக்கு மஞ்சள் வேட்டியணிந்து மாலையுடன் இருந்தார். அவருடன் அவர் தோழர் ஒருவர். இவர்களுக்குப் பாதுகாப்பாக போலீசார். பார்த்தால் ஒருவர் காமராஜ், மஞ்சள் வேட்டிக்காரர் அவரது தோழர் முத்துச்சாமி. அவரது திருமண வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு திருச்சி அழைத்து வரப்பட்டிருந்தார் முத்துச்சாமி. உடன் காமராஜ். அந்த கோஷ்டியை டாக்டர் ராஜன் இல்லம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

உப்பு சத்தியாக்கிரகம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் நாராயண ஐயங்காருக்கு வேதாரண்யத்திலிருந்து ஒரு கடிதம். கு.லட்சுமணசாமி முதலியார் என்பவர் எழுதியிருந்தார். அதில் "இங்கு கிரெளன் பிராண்ட் சரக்கு ரொம்பவும் மும்முரமாக எடுபடுவதால், அதனுடன் போட்டிபோடக்கூடிய நல்ல சரக்குகளை அனுப்பவும்" என்றிருந்தது. இது என்ன? ஒன்றும் புரியவில்லையே என்று இவருக்குக் குழப்பம். அதன் பொருள் பின்னர் இவருக்குப் புரிந்தது. அது "அங்கு போலீசின் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது. ஆகையால் அதனை எதிர்த்து நிற்கக்கூடிய தொண்டர்களை அனுப்பவும் என்று இருந்தது.

இவர்கள் முகாம் நடத்த இடம் கொடுத்த நீலாம்பாள் பற்றி சொன்னோமல்லவா? போலீஸ் அவரை மிரட்டியபோது, வீடு தன்னுடையது அதனை இவர்களுக்கு வாடகைக்குத் தந்திருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியும் அவருடைய வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் விரும்பிதான் இந்தப் பணிக்காக தனது வீட்டைக் கொடுத்ததாகக் கூறி சிறை புகுந்தார்.

ரா.நாராயண ஐயங்கார் தண்டிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவருக்குக் கல் உடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. வக்கீலாக இருந்தவர் அங்கு போய் கல் உடைத்தார். வக்கீலான இவரை சிறையில் 'சி' வகுப்பில் வைத்திருந்ததனால் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் கிளர்ச்சி செய்து இவருக்கு 'பி' வகுப்பு கிடைக்க வகை செய்தது. விடுதலையாகி இவர் திருச்சி வந்தபோது இவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. "சங்கு" கணேசனுடன் சேர்ந்து "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகை நடத்தினார். திருச்சி தியாகி எஸ்.வெங்கட்டராமன் தொடங்கி நடத்திய "ஜெயபாரதி" எனும் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ஆண்டுகள் பணி. 'தினமணி', 'சுதேசமித்திரன்' ஆகியவற்றில் சுதந்திர எழுத்தாளராக அடிக்கடி எழுதிவந்தார். தனது எண்பதாவது வயதைத் தாண்டி வாழ்ந்த இவர் திருச்சியில் காலமானார். திருச்சி மாவட்டம் அளித்த சிறந்த தியாகிகளில் ரா.நாராயண ஐயங்காரும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

1 comment:

  1. அருமையான தகவல்கள்.அய்யங்கார் போன்றோர் போன இடம் தெரியவில்லை. சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று ரஜபோகத்தில்
    திளைக்கிறார்கள்.

    //"இவர்கள் முகாம் நடத்த இடம் கொடுத்த நீலாம்பாள் பற்றி சொன்னோமல்லவா? போலீஸ் அவரை மிரட்டியபோது, வீடு தன்னுடையது அதனை இவர்களுக்கு வாடகைக்குத் தந்திருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியும் அவருடைய வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் விரும்பிதான் இந்தப் பணிக்காக தனது வீட்டைக் கொடுத்ததாகக் கூறி சிறை புகுந்தார்"//.

    இதுவ‌ல்ல‌வோ காந்தி சொன்ன‌ ச‌த்திய‌ம்!

    ReplyDelete

Please give your comments here