Followers

Sunday, December 2, 2012

1952ஆம் வருட தேர்தல்.

சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த 1952ஆம் வருட தேர்தல்.

இந்திய சுதந்திரமடைந்த பின் புதிய அரசியல் சட்டம் நிறைவேறிய பிறகு, புதிய அரசியல் சட்டத்தின்படி நடந்த முதல் தேர்தலில் மாநிலங்களின் எண்ணிக்கைக் குறைவு. தற்போதைய தமிழ் நாடு, ஆந்திரத்தின் பகுதிகள், கர்னாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்துக்குட்பட்டு இருந்தன. 1952இல் முதல் பொதுத் தேர்தல். மக்கள் பெருமளவில் பங்கு கொண்ட முதல் தேர்தல். சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து போராடிய காங்கிரஸ் கட்சி ஒரு புறமும், அதே சுதந்திரப் போரில் கலந்து கொண்டு போராடி, பின்னர் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் இடது சாரிகளாகப் பிரிந்து போன பொதுவுடமைக் கட்சி ஒரு புறம், தவிர பல சிறு கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.
Rajaji with Jawaharlal Nehru

காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகள் கம்யூனிஸ்டுகள், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, கிருஷிகர் லோக் கட்சி, காமன்வீல் கட்சி, சென்னை மாகாண முஸ்லீம் லீக், பார்வார்டு பிளாக் (மார்க்சீயப் பிரிவு), அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பு பெடரேஷன், ஜஸ்டிஸ் கட்சி இவர்கள் தவிர சுயேச்சைகள் என்று பலமுனைப் போட்டி சென்னை மாகாணத்தில் இருந்தது.
Rajaji addressing a public meeting

21 வயது நிறைந்தவர்கள் வாக்களித்த முதல் பொதுத் தேர்தல் இது. 1952 மார்ச் மாதம் இந்தத் தேர்தல் கோலாகலமாக நடந்தது. மக்கள் இந்தத் தேர்தலைத் திருவிழாவைப் போல மகிழ்ச்சியும், ஆர்வமும் பொங்க கலந்து கொண்டனர். நுகத்தடியில் பூட்டப்பட்ட இரட்டை காளைமாடுகள் சின்னம் காங்கிரசுக்கு. கம்யூனிஸ்டுகளுக்கு வழக்கம் போல அரிவாள் சுத்தியல் சின்னம். மற்ற கட்சிகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிட்டன. அதற்கு முன்பு வெள்ளையர் ஆட்சியில் நடந்த தேர்தல்களில் வாக்குப் பெட்டியின் வண்ணம்தான் அடையாளம் காட்டின. காங்கிரசுக்கு மஞ்சல் பெட்டி. "மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்" என்று அப்போதெல்லாம் பிரச்சாரம் செய்தவர்கள், இப்போது நுகத்தடி பூட்டிய காளைமாட்டுச் சின்னம் என்று வாக்கு கேட்டனர்.
Rajaji at work in Secretariat

சுதந்திரத்துக்கு முன்பு வரை எதிர் கட்சி வரிசயில் இருந்த பலர் இந்த தேர்தலில் காங்கிரசில் சேர்ந்து காங்கிரஸ் வேட்பாளராக இருந்தனர். காங்கிரசில் போராட்டங்களில் ஈடுபட்ட தியாகிகள் பலர் பிரிந்து வெளியேறி வேறு பல கட்சிகளில் காங்கிரசை எதிர்த்து நின்றனர். போட்டியும், பிரச்சாரங்களும் வேகமும் விறுவிறுப்புமாக இருந்தன. இறுதியில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது சென்னை மாகாண தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்காவிட்டாலும், சோர்வை அளித்தது. காரணம் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை.
C.Subramaniam

அப்போதைய சென்னை மாகாண சட்டசபையில் மொத்தம் இருந்த இடங்கள் ... 375.

இவற்றில் காங்கிரசுக்குக் கிடைத்த இடங்கள் ... ... ... 152.

மற்ற கட்சிகள் நிலவரம்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ... ... 62
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி ... ... 35
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ... ... 19
சோஷலிஸ்ட் கட்சி ... ... 13
கிருஷிகர் லோக் கட்சி ... ... 15
காமன்வீல் கட்சி ... ... 6
சென்னை மாகாண முஸ்லீம் லீக் ... ... 5
பார்வார்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) ... ... 3
அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பு பெடரேஷன் ... 2
ஜஸ்டிஸ் கட்சி ... ... 1
சுயேச்சைகள் ... ... 62
161

இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் காங்கிரஸ் பெரும்பான்மை இல்லாமல் எப்படி அரசு அமைக்க முடியும். தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஆலோசனை செய்து, இதுபோன்ற சூழ்நிலைமையை சமாளிக்கும் ஆற்றலுடையவர் ராஜாஜிதான் என்று முடிவு செய்தனர். திரு சி.சுப்பிரமணியம் அவர்களும் பொள்ளாச்சி திரு என்.மகாலிங்கம் அவர்களும் புது டில்லி சென்று நேருவிடம் இந்தத் தகவலைச் சொன்னார்கள். நேரு காமராஜரின் அபிப்பிராயம் என்ன, அவர் சரி என்று சொன்னால் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை யில்லை, ராஜாஜியை அழைத்து அமைச்சரவை அமைக்கச் சொல்லலாம் என்று சொல்லி அனுப்பினார்.
Madras Assembly at Session

அதன் பின்னர் நடந்தவைகள் அனைத்துமே வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. ராஜாஜி 1952இல் சென்னை மாகாணத்தின் முதல்வராக ஆனார். எதிர் கட்சி வரிசையில் இருந்த பலர் காங்கிரசுக்குள் ஏற்றுக்கொள்ளப் பட்டனர். காங்கிரஸ் பெரும்பான்மைக் கட்சியாக உருவானது. எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி, மாணிக்கவேலு நாயக்கர், பி.பக்தவத்சலு நாயுடு போன்றவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
Omandur Ramasamy Reddiar
                                                                  
                                                                   
1953இல் சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் பகுதிகள் மொழிவழி மாகாணம் பிரிந்து ஆந்திரத்துடன் இணைந்தன. ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் பிரிந்து போனபின் தமிழ்நாடு காங்கிரஸ் காமராஜ் தலைமையில் வலுவாக உருவாயிற்று. ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்கு திராவிட இயக்கம் மட்டுமல்லாமல் காங்கிரசிலும் காமராஜ் உட்பட பலரும் எதிர்த்ததால் ராஜாஜி பதவியை ராஜிநாமா செய்து விட்டார். அதனைத் தொடர்ந்து காங்கிரசின் சட்டசபைக் கட்சிக்குத் தலைமைக்கும் போட்டி நிலவியது. காமராஜ் அவர்களுக்கும் சி.சுப்பிரமனியம் அவர்களுக்குமிடையே போட்டி இருந்தது. காமராஜ் வெற்றி பெற்று 1954 மார்ச் 31இல் முதலமைச்சர் ஆனார்.
P.S.Kumarasamy Raja

ஆந்திரத்தின் பகுதிகள், கர்நாடகப் பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவை ஒன்றாக சென்னை மாகாணத்தில் இணைந்திருந்த காலத்தில் பிரிவினைகள் தமிழகத்து காங்கிரசில் அதிகம் இல்லை. ஆனால் இவைகள் பிரிந்து போன பின்னர் பேதங்கள் உச்ச கட்டத்தை அடைந்தன. 1946இல் சென்னை மாகாணத்தில் தேர்தல் நடனதது. அப்போதும் காங்கிரசில் பிளவுகள், உட்கட்சி பூசல்கள் இருந்தன. 1946-1951 இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரசில் மூன்று முதலமைச்சர்கள் பதவி வகித்தனர். ஆந்திர கேசரி டி.பிரகாசம் 1946இல் பதவிக்கு வந்தார். இவர் தெலுங்கு பேசுபவர். காங்கிரஸ் தலைவர் காமராஜ். இவர்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை. ஆகவே டி.பிரகாசம் பதவியை ராஜிநாமா செய்து விட்டார். 1947இல் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வர் பதவிக்கு வந்தார். இவர் காமராஜ் அவர்களால் முன்மொழியப்பட்டவர். ஓமாந்தூரார் வள்ளலார் இராமலிங்கர் பக்தர். நேர்மையானவர். தனக்குச் சரி என்பதை துணிந்து செய்யக் கூடியவர். இவருக்கும் மற்ற பெரும் தலைவர்களுக்கும் கருத்தொற்றுமை இல்லாமல் போகவே காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்பட்டது. இது 1949 ஏப்ரில்6இல் பதவி ஏற்றது. இவர் காமராஜ் அவர்களின் ஊருக்கருகிலுள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். பெருந் தலைவருக்கும் நெருக்கமானவர். 1952 பொதுத் தேர்தலில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதில் நின்று தோற்றுப் போன பிறகு பதவியையும் இழந்தார். இப்படி மூன்று ஆண்டுகளில் மூன்று முதலமைச்சர்கள் உருவாகக் காரணமாக இருந்தது காங்கிரசின் உட்கட்சி கருத்து வேற்றுமைகள்.
Andhra Kesari T.Prakasam

அந்தக் கால காங்கிரசில் பல குழுக்கள் தனித்தனியாக இருந்தனர். ஆந்திரர்கள் டி.பிரகாசம் தலைமையையும், ராஜாஜியின் தலைமையில் சிலரும், காமராஜ் தலைமையை ஆதரித்து சிலரும், பெஜவாடா கோபால் ரெட்டி, காளா வெங்கட் ராவ் ஆகியோர் பட்டாபி சீத்தாராமையாவின் ஆதரவோடு தனிக் குழுவாகவும் இயங்கி வந்தனர். டி.பிரகாசத்தின் ஆதரவாளர்கள் பின்னாளில் ஐதராபாத் பிரஜா கட்சி என தனி கட்சி தொடங்கி பிறகு கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியாக 1951இல் உருமாறியது.
Communist Leader Com.K.T.K.Thangamani

1948 தொடங்கி 1951 வரையிலான காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆயுதப் புரட்சி மூலம்தான் அதிகாரம் பெறமுடியும் என்பதை நம்பி பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை உணர்ந்து 1951இல் இவர்கள் தேர்தல் ஜனநாயக முறைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டனர். வன்முறையால் அதிகாரம் பெறுவது எனும் நோக்கத்தைக் கைவிட்டு, தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறைக்குள் தங்களை கொண்டு வந்தனர். பழைய சென்னை மாகாணத்தில் மிக அதிக பலம் கொண்ட பகுதியாக இவர்களுக்கு ஆந்திரப் பகுதிகள் இருந்தன. 1952 தேர்தலில் இவர்கள் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டனர். பலர் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆந்திராவில் விவசாயிகள் அளவில் பெரும் ஆதரவு இவர்களுக்கு இருந்தது. தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் நிலமற்ற விவசாயக் கூலிகள் மத்தியில் இந்தக் கட்சிக்கு பெரும் ஆதரவு இருந்தது. தோழர் பி.இராமமூர்த்தி, பி.சீனிவாச ராவ் ஆகியோர் பல ஆண்டுகளாக இந்த ஏழை எளிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்டதன் விளைவு, இவர்களது ஆதரவு கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைத்தது. போதாதற்கு திராவிடக் கழகமும் இவர்களை 1952 தேர்தலில் ஆதரித்தது.
Communist Leader A.K.Gopalan

தமிழ் நாட்டைப் பொறுத்த வரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பலம் பொருந்திய கட்சியாக இருந்து வந்தது. சுதந்திரப் போராட்டம் வலுவடைந்த காலகட்டத்தில் காங்கிரஸ் பலம் பெற்று பெரும்பான்மை ஆதரவு பெற்றுத் திகழ்ந்தது. இந்த ஜஸ்டிஸ் கட்சி, பிராமணரல்லாதர் நல்வாழ்வு இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் பின்னர் திராவிடர் கழகமாகவும் உருப்பெற்றது. காங்கிரசுக்கு இணையாக வலுவான இயக்கமாக இருந்த திராவிடர் கழகம் 1949இல் பிளவு பட்டது. சி.என்.அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் உருவானது. தொடக்க காலத்தில் இவ்விரு கட்சிகளுமே தனி திராவிட நாடு கேட்டு வந்தது. 1944இல் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து திராவிடர் கழகம் உருவானபோது பி.டி.ராஜன் தலைமையை ஏற்று சில 'ஜஸ்டிஸ் கட்சி' எனும் பெயரில் தராசு சின்னத்தில் 1952 தேர்தலில் போட்டியிட்டனர்.
Comrade P.Jeeva

1952இல் சென்னை சட்டமன்றத்தில் 375 இடங்கள். இவற்றில் 309 தொகுதிகள் நேரடியாகவும் 66இல் இரண்டு பேர் தொகுதிகள் -- அதாவது பொது உறுப்பினர் ஒருவர்; ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஒருவர் என்று தேர்தல் நடைபெற்றது. 1952இல் மூன்று பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 372 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது.

இரண்டு பேர் போட்டியிடும் தொகுதிகள் 66இல், 62இல் ஷெட்யூல்டு வகுப்பினரும், 4இல் ஷெட்யூல்டு மலைஜாதியினரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
CPI leadees right side last A.M.Gopu

இனி கட்சிகளின் நிலைமை பற்றி பார்ப்போம். காங்கிரசில் காமராஜ் தலைமையில் ஒரு பெரும் படையே வேலை செய்தது. எதிர் வரிசையில் டி.பிரகாசத்தின் கிசான் மஜ்தூர் கட்சி, என்.ஜி.ரங்காவின் கிரிஷிகர் லோக் கட்சி, பற்பல பெருந்தலைவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை குறிப்பிடத் தக்கவை. தி.மு.க. இந்த தேர்தலில் போட்டி யிடவில்லை. ஆனால் வன்னியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் இவர்கள் காமன்வீல் கட்சியை ஆதரித்தனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு நல்கினர். இவர்கள் தவிர ஐந்து சுயேச்சைகளும் இவர்களது ஆதரவைப் பெற்றனர். இவர்கள் ஆதரவு கொடுத்த வேட்பாளர்களிடம் ஒரு உத்தரவாகம் எழுதி வாங்கினர். அது சட்டமன்றத்தில் இவர்களது கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதாகும். திராவிடர் கழகம் எப்போதுமே தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக் கும் நோக்கத்தில் இவர்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் நோக்கில் காங்கிரஸ் 'பார்ப்பனர் கட்சி' என்பது அவர்கள் எழுப்பிய கோஷம். தி.க. கம்யூனிஸ்டுகளைத் தவிர ஏனைய சில கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்தனர். ஜஸ்டிஸ் கட்சி பெயரால் போட்டியிட்ட பி.டி.ராஜன் 9 தொகுதிகளில் போட்டியிட்டார்.
Sir P.T.Rajan

1952 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி ஒன்பது கட்டமாக நடந்தது. மொத்தம் 2507 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர், 2472 பேர் இறுதியில் போட்டியிட்டனர். இவர்களில் 35 பேர் பெண்கள். 79 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, இவற்றில் ஒருவர் பெண். 751 பேர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. முடிவை இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். காங்கிரஸ் வெற்றி பெற்ற 152 இடங்களில் மலபார் பகுதியிலிருந்த 29இல் 4 இடங்களிலும், ஆந்திரா பகுதியில் இருந்த 143இல் 43இல் மட்டும், தமிழகப் பகுதியில் இருந்த 190இல் 96லும், கன்னடப் பகுதிகளில் இருந்த 11இல் 9லும் வெற்றி பெற்றனர். மொத்தத்தில் இவர்களைக் காலை வாரிவிட்டது கேரளமும், மலபாரும்.
Justice Party Leaders

கம்யூனிஸ்ட் கட்சியில் வண்ண மயமான பெரும் தலைவர்கள் இருந்தனர். எம்.கல்யாண சுந்தரம், பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, கே.டி.ராஜு, அனந்தன் நம்பியார் போன்ற பிரபலங்கள் அங்கே. 1952 ஏப்ரல் 1இல் கவர்னர் ஸ்ரீ பிரகாசா ராஜாஜியை மந்திரிசபை அமைக்க அழைத்தார். ஏப்ரல் 10இல் அமைச்சரவை பதவி ஏற்றது. ராஜாஜி மேலவை உறுப்பினராக கவர்னரால் நியமிக்கப்பட்டார். இந்த வழிமுறையை பலரும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.

1952 மே 6ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் J. சிவசண்முகம் பிள்ளை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை உறுப்பினர் சுயம்பிரகாசத்தை 206க்கு 162 என்று தோற்கடித்து வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் தன் பலத்தை உறுதி செய்து கொண்டது. ராஜாஜி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக 200 பேரும் எதிர்த்து 151 பேரும் வாக்களித்து ராஜாஜியின் நிலைமையை ஸ்திரப்படுத்தினர். இப்போதெல்லாம் அடிக்கடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறதே, அதற்கு முன்னோடியாக இந்திய அரசியலில் முதன் முதல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு இதுதான் என்பது பலருக்கும் புது செய்தியாகக்கூட இருக்கலாம். முஸ்லீம் லீக்கின் 5 உறுப்பினர்களும் ராஜாஜி ஆட்சிக்கு ஆதரவு நல்கினர்.

ராஜாஜி அமைச்சரவை:
திரு சி.ராஜகோபாலாச்சாரியார் -- முதலமைச்சர்.
திரு ஜே.சிவசண்முகம் பிள்ளை -- சபாநாயகர்.

மற்ற அமைச்சர்களும் இலாகாக்களும்:

1. ராஜாஜி -- முதல்வர், பொதுத்துறை, உள்துறை (போலீஸ்)
2. ஏ.பி.ஷெட்டி -- சுகாதாரம்
3. சி.சுப்பிரமணியம் -- நிதி, உணவு, தேர்தல்கள்
4. கே.வெங்கடசாமி நாயுடு -- இந்து அறநிலையத் துறை, பதிவுத் துறை
5. என்.ரங்கா ரெட்டி -- பொதுப்பணித் துறை
6. எம்.வி.கிருஷ்ணா ராவி -- கல்வி, அரிஜன முன்னேற்றம், தகவல் தொடர்பு
7. வி.சி.பழனிசாமி கவுண்டர் -- மதுவிலக்கு
8. உ.கிருஷ்ணா ராவ் -- தொழில், தொழிலாளர், போக்குவரத்து
9. ஆர்.நாகண்ண கவுடா -- விவசாயம், காட்டிலாகா, கால்நடைத் துறை, மீன் வளம்
10. என்.சங்கர ரெட்டி -- உள்ளாட்சித் துறை
11. என்.ஏ.மாணிக்கவேல் நாயக்கர் -- நில வருவாய்
12. கே.பி.குட்டிகிருஷ்ணன் நாயர் -- நீதிமன்றங்கள், சிறைத் துறை, சட்டம்.
13. ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி -- வீட்டு வாடகை
14. எஸ்.பி.பி.பட்டாபிராமராவ் -- கிராம நலம், விற்பனை வரி.
15. டி.சஞ்சீவையா -- கூட்டுறவு, வீட்டு வசதி.
                                                         
                                                          Karma Veerar K.Kamaraj
இந்த அமைச்சரவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1954இல் திரு காமராஜ் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அது தனிக் கதை. அதனை வேறொரு கட்டுரையில் பார்ப்போம். வணக்கம்!

3 comments:

  1. அய்யா. பல செய்திகள் புதிதாய் இருந்தது. தங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
    இங்கனம்,
    சக தஞ்சாவூரான்.

    ReplyDelete

Please give your comments here