Followers

Monday, July 11, 2011

பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ஆர்.

P.R.'s Centenary Photo

பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி

(இவர் பிறந்த நூற்றாண்டு விழா 2008இல் நடைபெற்றது. அது சமயம் பி.ராமமூர்த்தி குறித்து சி.ஐ.டி.யு. தலைவராக இருந்த பாண்டே என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" எனும் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. தமிழகத் தியாகிகள் வரிசையில் இதற்கு முன்பு பி.ஆர். பற்றி ஓர் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது முழுக்க முழுக்க அவர்கள் கட்சியின் பார்வையில், அதன் தலைவர்களில் ஒருவரால் எழுதப்பட்டது)

பி.ஆர். என்று கட்சிக்காரர்களாலும், தோழர் பி.ராமமூர்த்தி என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது. 1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
Communist symbol

1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.
P.R. Addressing Public Meeting

1927இல் இங்கிலாந்திலிருந்து சைமன் என்பவர் இந்தியாவில் சுதேசித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தம் காண இந்தியா வந்தார். அவர் வரவை காங்கிரசார் எதிர்த்தனர். நாடு முழுவதும் "சைமன் திரும்பிப் போ" என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்த சைமன் எதிர்ப்புப் போர் சுதேசிகளுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. பஞ்சாபில் லாலா லஜபதி ராய் போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்து பின்னர் இறந்து போனார். அலகாபாத்தில் நேரு உட்பட பல தலைவர்கள் போலீசார் தடியடியில் காயமடைந்தனர். தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் கலந்து கொண்டு சிறைப்பட்டனர். பம்பாயில் சைமன் வந்து இறங்கியதும் ஒரு மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், போலீஸ் தடியடியும் நடந்தது. லாலா லஜபதி ராயைத் தடியால் அடித்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் லாஹூரில் கொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்ட பகத் சிங் தொடங்கிய பாரதி நவ ஜவான் சபா எனும் அமைப்பில் ராமமூர்த்தி ஓர் உறுப்பினர் ஆனார்.
Ajoy Gosh

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். அப்போதெல்லாம் காங்கிரஸ் ஜனவரி 26ஐ சுதந்திர தினம் என்று கொண்டாடி வந்தனர். அந்த விழாவிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார். பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். அங்கு விடுதலை ஆன பிறகு சென்னைக்கு வந்து இங்கு அரசியல் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார். 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மகாநாட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. தடையை மீறி மகாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. குதிரை மீதமர்ந்து போலீஸ் நடத்திய தடியடியில் ராமமூர்த்தி தாக்கப்பட்டார். அங்கு இருந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்க நூல்களையும் காரல் மார்க்ஸ் நூல்களையும் படிக்க நேர்ந்தது. பி.சுந்தரையா எனும் கம்யூனிஸ்ட் தோழரின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. அவரோடு சேர்ந்து கொண்டு ஒரு சதி வழக்கிலும் இவர் பங்கு பெற்றார்.
EMS Namboodripad

அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார். காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார். அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். அங்கு இவருக்கு மலையாளத்தைச் சேர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் தொடர்பு ஏற்பட்டது. சென்னை திரும்பிய ராமமூர்த்தி ஏ.எஸ்.கே.ஐயங்காருடன் சேர்ந்து சென்னை மாகாண புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தொடங்கினார். அதில் பி.சுந்தரையா கலந்துகொண்டு பேசினார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

சென்னை தவிர, மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் இவரது தொழிற்சங்க பணி சிறப்பாக வளர்ந்து வந்தது. 1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், ராஜாஜி பிரதமர் (அந்தக் காலத்தில் மாகாண முதல் மந்திரியை பிரதமர் என்றுதான் சொல்வார்கள்) பதவி வகித்த காலத்தில் இவர் பல தொழிலாளர் போராட்டங்களைத் தலைமை வகித்து நடத்தினார்.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார். அவரும் வெற்றி பெற்றார். காந்தி பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று ஒப்புக் கொண்டார். 1939இல் ஜெர்மனி போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஹிட்லரின் இந்த யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்று முதலில் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். யுத்த எதிர்ப்புக் கொள்கைக்கால பல கம்யூனிஸ்டுகள் கைதானார்கள்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றது. அது குறித்த ஒரு கட்டுரை இதே வலைப்பூவில் வெளியாகியிருக்கிறது. இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். சென்னையில் இவர்கல் ஒரு முகாம் அமைத்து, அங்கிருந்து அரசுக்கு எதிரான வெளியீடுகளை சுற்றுக்கு விட்டும், பிரச்சாரங்களில் ஈடுபட்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்காணித்த போலீஸ் இவர்களைக் கூண்டோடு கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள்.

1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார். 1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். ரஷ்யா மீது ஜெர்மனி படையெடுத்தது என்றவுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஹிட்லர் தங்கள் மீது படையெடுத்ததைப் போல உணர்ந்தனர். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர்.

முந்தைய நிலையில் பிரிட்டிஷ் அரசுக்கு போர் முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடையாது என்று இருந்த நிலையை ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் மாற்றிக் கொண்டு பிரிட்டிஷுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாயினர். அதனால் இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர். ராமமூர்த்தியும் சிறையிலிருந்து வெளி வந்து சுதந்திர மனிதரானார். 1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதில்தான் "வெள்ளையனே வெளியேறு" தீர்மானம் நிறைவேறியது. மகாத்மா காந்தி பேசும்போது இந்தப் போரில் ஒன்று செய்து முடிப்போம் இல்லையேல் செத்து மடிவோம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி "செய் அல்லது செத்து மடி" என்ற அறைகூவல் விடுத்தார். நேரு பேசும்போது, பிரிட்டிஷ் அரசு சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தானாக பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். மக்களால் பிடரியைப் பிடித்துத் தள்ளும் நிலைமை வராமல் அவர்களாகவே போய்விட இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்று பேசினார். பம்பாய் தீர்மானத்துக்கு கம்யூனிஸ்டுகள் பல வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்தனர். அவை தோற்கடிக்கப் பட்டன.

அன்று இரவே எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் கைதாகவில்லை. அவர்கள் வெளியில் இருந்துகொண்டு காங்கிரஸ்காரர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்தினர். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் எனும் இடத்தில் நடந்த ஒரு ஆங்கில போலீஸ் அதிகாரியின் கொலையில் ராஜகோபாலன், காசிராஜன் எனும் இருவர் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அதை எதிர்த்து வழக்காட ராஜாஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதில் ராமமூர்த்தி செயலாளராக இருந்தார். முடிவில் அந்த வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப் பட்டு ஆயுள் தண்டனையாக ஆகியது. அதிலிருந்து அந்த ராஜகோபாலன் தூக்குமேடை ராஜகோபாலன் என்று அழைக்கப்பட்டார். ராமமூர்த்தி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் சென்று பேசினார்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார். அப்போது ராமமூர்த்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் தொழிலாளர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர். எனினும் மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

 1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

 1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். 1953இல் பி.ராமமூர்த்தி மதுரையில் நடந்த கட்சி காங்கிரசில் போலிட் பீரோ உறுப்பினராக ஆனார். கட்சியின் பத்திரிகையான "நியு ஏஜ்" இதழின் ஆசிரியராகவும் ஆனார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பெரும் தலைவராகவும் இவர் விளங்கினார். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி.ஐ.டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார். தமிழகம் தந்த சிறந்த கம்யூனிஸ்ட் தலைவராக பி.ராமமூர்த்தி விளங்கினார். வாழ்க பி.ஆர். புகழ்!

Sunday, July 10, 2011

வைக்கம் சத்தியாக்கிரகம்

வைக்கம் சத்தியாக்கிரகம்

நம்மில் பலர் 'வைக்கம் சத்தியாக்கிரகம்' என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை வைக்கம் வீரர் என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பெரியவர்கள் பலர் அதைப் பற்றி அறிந்திருப்பார்கள். என்றாலும் இன்றைய அவசர உலகில் இளைஞர்கள் இது குறித்து எத்தனை தூரம் ஆர்வம் காட்டி தெரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்.

எந்தவொரு பழைய நிகழ்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும்போது அந்த நாளில் நிலவிய சமூக அமைப்பு, வாழ்க்கை முறை, மக்களின் கண்ணோட்டம் இவைகளை மனதில் கொண்டு அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்த நிகழ்ச்சியாகத்தான் அதை கவனிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலைகள் எனும் எடைக்கல்லைக் கொண்டு அன்றைய நிகழ்ச்சிகளை, நடவடிக்கைகளை எடைபோடக்கூடாது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய தீண்டாமை, அதிலும் கேரளப் பகுதிகளில் நிலவிய ஆச்சாரம், இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிடமுடியாது. எனவே 1924-25 ஆண்டு வாக்கில் கேரள பிரதேசமான வைக்கத்தில் தீண்டாமை எப்படி கடைப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும், என்பதை மனதில் நிறுத்தி மேலே படியுங்கள்.

தீண்டாமை என்பது நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு. இதை கற்றறிந்த பலரும் சொன்னார்கள். இந்து மத சாஸ்திரங்களில் இதுபோன்ற தீண்டாமை கொள்கைகளுக்கு ஆதாரமே இல்லையென்று பல பெரியோர்கள் சொன்னார்கள். யார் கேட்கிறார்கள். அந்தந்த காலத்துக்கு சில கேடுகள் நம்மை வந்து ஒட்டிக் கொள்கின்றன. இன்றைய முன்னேறிய சமூகத்தில் வேரோடிவிட்ட சில சமுதாயக் கேடுகளும் இருக்கின்றன. இப்போது இங்கு அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்பதால் தீண்டாமையைப் பற்றி மட்டும் கவனிப்போம்.
EVR's statue at Vaikkom

இந்தியாவில் இந்து சமூகத்தில் இடைப்பட்ட காலத்தில் மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாட்டைக் கடைபிடித்து, மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தார்கள். இதன் காரணமாகவே ஒப்பிலாத இந்த சமுதாயம் பலம் இழந்து, ஒற்றுமை கெட்டு, தாழ்ந்து போயிற்று. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமானால் இந்த வேறுபாடுகளை முதலில் களைந்த பின்னர்தான் நாம் சுதந்திரம் பெறவோ, அதனைக் காப்பாற்றவோ முடியும் என்பதை உணரத் தொடங்கினார்கள். இந்தப் பின்னணியில்தான் 1924-25இல் கேரளப் பிரதேசத்தில் வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற போராட்ட களத்தை நாம் பார்க்க வேண்டும்.
Vaikkom Hero E.V.R.

அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் எனும் தலம் ஒரு புண்ணிய க்ஷேத்திரம். இங்கு உள்ள ஆலயத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகள். எல்லா பிரிவு மக்களும் இந்த நான்கு வீதிகளையும் பயன்படுத்திக் கொண்டு ஆலயத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள் ஒரு காலகட்டம் வரை. திடீரென்று ஒரு நாள் இந்த மாட வீதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்று வைதீக இந்துக்கள் சிலர் தடை போட்டனர். நான் முன்பே குறிப்பிட்டபடி கேரள மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்ட மிகக் கடுமையான தீண்டாமை உச்சத்தில் இருந்த காலம் அது. சமூக அந்தஸ்தில் நம்பூதிரிகள் மேலாகவும், ஈழவர்கள் எனப்படும் பிரிவினர் கீழ்தட்டிலும் வைத்துப் பார்க்கப் பட்டனர்.
Travancore Diwan Sir C.P.Ramaswamy Iyer

தீண்டாமை எனும் கொடுமை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கேரளத்தில் சற்று மாறுபட்டிருந்தது. அங்கு மேல் ஜாதியினர் தாழ்த்தப்பட்ட ஈழவர்களை பார்த்தாலோ, கிட்டத்தில் நெருங்கினாலோ, தீண்டினாலோ தீட்டு எனும் எண்ணம் பரவலாக இருந்து வந்தது.
Travancore Maharaja

இப்படிப்பட்ட நிலைமைக் கண்டு காங்கிரஸ்காரர்கள் மகாத்மா காந்தியடிகளின் ஆலோசனையைக் கேட்டு அங்கு இந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்வது என்று முடிவு செய்தனர். சத்தியாக்கிரகம் நினைத்தவுடன் அந்த நாட்களில் தொடங்கிவிட முடியாது. அதிலும் வைக்கம் என்பது திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டது. சுதேச சமஸ்தானங்களில் சுதந்திரப் போராட்டம் விரைந்து நடக்காத காலம் அது. ஆகவே அங்குள்ள சீர்திருத்தக்காரர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.
Mannathu Padmanabhan

சத்தியாக்கிரக முகாம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் நாட்டின் பல பாகங்களிலிருந்து தொண்டர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்த கே.பி.கேசவ மேனன் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தவிர கேளப்பன் நாயர், டி.கே.மாதவன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு, திருவனந்தபுரம் வக்கீல் குஞ்சுகிருஷ்ண பிள்ளை, சாத்தக்குடி நாயர், சிட்டேத்தில் சங்குப் பிள்ளை, செங்கணாச்சேரி பரமசிவம் பிள்ளை, மன்னத்து பத்மநாபன் நாயர் ஆகியோர் இதில் பங்கு கொண்டனர். இந்த மன்னத்து பத்மநாபன் பிந்நாளில் கேரள முதன் மந்திரியாகவும் ஆனார் என்பது நினைவில் கொள்வோம்.
Barristar Madurai George Joseph

பஞ்சாபிலிருந்து ஆர்ய சமாஜத்தினர் இங்கு முகாமிட்டு தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாடு காங்கிரசில் பெரும் தலைவராக விளங்கிய ஈரோடு வே.ராமசாமி நாயக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் வைக்கம் போய்ச்சேர்ந்தனர். அந்தக் குழுவில் பங்கு கொண்டவர்களில் கோவை அய்யாமுத்து, 'சமதர்சினி' பத்திரிகை ஆசிரியர் பாலகிருஷ்ண பிள்ளை, சாமி சத்தியவரதன், கரூர் பி.கே.அய்யா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். கோவை அய்யாமுத்து ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய நண்பர், தமிழகத்தில் கதர் இயக்கத்தின் தந்தையாக இருந்தவர். ஈ.வே.ரா.வுடன் அவரது மனைவி நாகம்மையும் பங்கு கொண்டார்.
Mannath Padmanabhan

மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தத் தொடங்கிய காலத்தில் ஈ.வே.ரா. அதில் தீவிர பங்கு கொண்டார். 1921இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் பெற்றார். அப்போது அவர் கோவை, சென்னை ஆகிய சிறைகளில் இருந்தார். இவருடைய அண்ணனும் மறியலில் ஈடுபட்ட போராட்ட வீரர். ஈ.வே.ரா. ராஜாஜியின் நெருங்கிய நண்பர். திருச்செங்கோடு புதுப்பாளையத்தில் காந்தி ஆஸ்ரமம் அமைக்கும் பணியில் ராஜாஜிக்கு உறுதுணையாக இருந்தவர் ஈ.வே.ரா. கதர் தொண்டில் ஈடுபட்டு கதர் மூட்டைகளைத் தோளில் சுமந்துகொண்டு தெருத் தெருவாக விற்று வந்தவர். ராஜாஜியின் ஆதரவோடு இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார்.

வைக்கம் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளிலும் வேலி அமைத்து போலீஸ் காவல் இருந்தது. போராட்ட முகாமிலிருந்து தொண்டர்கள் பலர் சென்று அந்த வேலிக்கருகில் நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் முழுவதும் அங்கு போராட்டக் காரர்கள் பஜனை செய்து கொண்டும், நூல் நூற்றுக் கொண்டும், கோஷங்கள் போட்டுக் கொண்டும் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் களைப்படைந்த பின்னர் வேறொரு கோஷ்டி அங்கு வந்து அதே வழியில் போராட்டம் நடத்துவர். இவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டால், மற்றொரு கோஷ்டி வரும், கைதாகும். இப்படி பல மாதங்கள் சத்தியாக்கிரகம் நடைபெற்று வந்தது. மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலோடு போராட்டம் அமைதியாக நடைபெற்று வந்தது.

வைக்கத்தில் நடக்கும் இந்த போராட்டத்தை காந்திஜி ஆதரிக்கக்கூடாது என்று ஏராளமானோர் அவருக்குக் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் போராட்ட தலைவர் கே.பி.கேசவ மேனன் கைது செய்யப்பட்டார். அவர் இடத்தில் மதுரை தேசபக்தரும், பிரபல காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஜார்ஜ் ஜோசப் என்பவர் தலைமை வகித்து நடத்தினார். அப்போது காந்திஜி இந்து சமூகத்தில் வேரோடியுள்ள இந்த சமுதாயக் கேட்டை எதிர்த்து இந்துக்களே போராடட்டும், ஜார்ஜ் ஜோசப் கிறிஸ்தவர் என்ற பிரச்சினை எழுப்பப்படும், ஆகவே அவர் இதில் நேரடியாக தலையிட வேண்டாமென்று ஒரு கடிதம் எழுதினார். போராட்டத்தில் தெருக்களில் போட்டுள்ள வேலிகளை அப்புறப்படுத்த சிலர் முயன்றபோது, காந்திஜி அப்படிச் செய்ய வேண்டாம், வன்முறை நமது வழி அல்ல என்பதை ஒரு கடிதம் மூலம் தெரியப் படுத்தினார். வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது உண்ணாவிரதம் இருக்க வேண்டாம், உண்ணாவிரதம் யாருக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் ஒரு வறையறை உண்டு. ஒரு கொடுங்கோலனை எதிர்த்து நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அவர்களது உத்தரவுகளை ஏற்க மறுத்து கைது செய்தாலும் தண்டனை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டுமேயொழிய, நீங்களே உங்களுக்கு உண்ணாவிரதம் என்ற தண்டனையைக் கொடுத்துக் கொள்ளக்கூடாது என்றார்.

மகாத்மா காந்தி வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நோக்கம் குறித்து தெளிவு படுத்தினார்.

"இந்துக்களைப் பொறுத்தமட்டில் இந்தப் போராட்டம் ஆழ்ந்த மத முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து மதத்தில் ஏற்பட்டுவிட்ட பெரும் மாசைத் துடைக்க நாம் முயற்சிக் கிறோம். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்மென்று நாம் போராடுகிறோம். நம் குறிக்கோளை அடைய முதல் தொடக்கம் இந்தப் போர். நமது இறுதி லட்சியம் தீண்டாமைக் கொடுமையை அடியோடு ஒழித்து இந்துமதத்தைத் தூய்மைப் படுத்துவது. தீண்டாதவர்களின் நிலைமையை உயர்த்தி மற்ற மக்களுக்குச் சமமாக அவர்களை யும் ஆக்குவதுதான் நமது இறுதி லட்சியம்"

1924இல் தொடங்கிய போராட்டம் ஓராண்டுக்கும் மேல் நடந்தது. ஒவ்வொரு நாளும் பலர் போராடி கைதானார்கள். தொண்டர்கள் அணி அணியாக வைக்கம் வரத் தொடங்கினர். 1925 பிப்ரவரி மாதம் மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். திருவிதாங்கூருக்குச் சென்றார். மகாத்மா வந்ததாலோ என்னவோ, திருவிதாங்கூர் சமஸ்தான அரசு அந்தச் சந்தர்ப்பத்தில், அதுவரை மேல்ஜாதியினருக்குக் கொடுத்து வந்த ஆதரவை நீக்கிக் கொண்டது. கோயிலைச் சுற்றி நான்கு தெருக்களிலும் போடப்பட்டிருந்த வேலிகள் அகற்றப் பட்டன.

போராட்டம் போகும் திசையை உணர்ந்து சநாதனிகளும் ஒதுங்கிக் கொண்டனர். போராட்டம் முடிவுக்கு வந்தது. வெற்றி பெருமிதத்துடன் தீண்டாதார் உட்பட மக்கள் அனைவரும் வைக்கம் தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு வலம் வந்தனர். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு 1924இல் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டும் பணி மகாத்மா காந்தியடிகளின் முயற்சியால் நிறைவேறத் தொடங்கியது.

Saturday, July 9, 2011

சென்னை சதி வழக்கு

சென்னை சதி வழக்கு
நன்றி: (கொடுமுடி இராஜகோபாலன் எழுதி திருச்சி மாவட்ட தியாகிகள் மலரில் அரியலூர் தியாகி சபாபதி வெளியிட்ட கட்டுரையின் தொகுப்பு )

பாரத புண்ணிய பூமியின் சுதந்திரத்துக்காக எவ்வித தியாகத்துக்கும் தயாராக இருந்த ஓர் இளைஞர் கூட்டம் சென்னை மாகாணத்தில் 1932ஆம் ஆண்டில் உருவாகியது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த இளைஞர்கள் பல புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார்கள். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தவர்கள் பத்மாசினி அம்மாள், ஸ்ரீநிவாசவரதன், தஞ்சை பி.வி.ஹனுமந்த ராவ், பி.கே.நாராயணன், எஸ்.ரங்கராஜன் எனும் கல்லூரி மாணவர். இவர்கள் முன்னிலை வகித்துப் பல தீர சாகசங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அனல் கக்கும் பிரச்சாரம் செய்வது; பிரிட்டிஷாரால் தடைசெய்யப்பட்ட தேசபக்தி பிரசுரங்களை இரகசியமாக அச்சிட்டு விநியோகம் செய்வது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வந்தனர்.

இந்த காலகட்டத்தில்தான் சுதந்திரப் போராட்ட வீரர் சவார்க்கர் எழுதிய "1858 முதல் இந்திய சுதந்திரப் போர்" எனும் நூல் வெளியானது. இதனை ஆங்கில சர்க்கார் தடை செய்தது. இந்த நூலை புதுச்சேரியில் மொழிமாற்றம் செய்து அங்கேயே அச்சிட்டு புத்தகங்கள் தமிழகத்துக்குள் கொண்டுவரப்பட்டன. இங்கு அந்த புத்தகம் இரகசியமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்த நூலை மொழிமாற்றம் செய்தவர் டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன். டி.வி.எஸ். குடும்ப விளக்கு அவர். அப்போது டாக்டர் செளந்தரமாக இருந்தவர் பின்னர் இராமச்சந்திரனை மணந்து கொண்ட பிறகு டாக்டர் செளந்தரம் இராமச்சந்திரன் என்று அறியப்பட்டார்.

1932இல் மகாத்மா காந்தியடிகளின் கட்டளையின்படி 'சட்ட மறுப்பு இயக்கம்' நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தில் ஈடுபட்ட தேசபக்தர்கள் மீது அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டது. அரசாங்கம் எத்தனைக்கெத்தனை அடக்குமுறையைக் கையாள்கிறதோ, அதற்கும் மீறி தேசபக்தர்களின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. எண்ணற்ற வீரர்கள் கைதானார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் அனேகமாக திருச்சிராப்பள்ளி சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். தமிழர்கள் தவிர மற்ற மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு இருந்தார்கள். 1918இல் இயற்றப்பட்ட இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளின்படி தண்டிக்கப்பட்டவர்களும், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு லாலா லஜபதிராய் இறக்கக் காரணமாக இருந்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோருடன் தண்டிக்கப்பட்ட பஞ்சாப் உட்பட வடநாட்டுக் கைதிகள் சிலரும் இந்தச் சிறையில் இருந்தனர்.

பின்னாளில் இந்திய பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த அப்போதைய புரட்சிக்காரர் சுரேந்திரமோகன் கோஷ், ஜீவன்லால் சட்டர்ஜி, பிரபுல் சந்திர கங்கூலி, ரொமேஷ் சந்திர ஆச்சார்யா, திரைலோக்யநாத் சக்ரபர்த்தி, சென் குப்தா ஆகிய வங்காளத்து கைதிகளும் இருந்தனர். குந்தன்லால் குப்தா, பி.கே.தத் ஆகியோரும் இந்தச் சிறையில் தண்டனையைக் கழித்தனர். இந்த தத் என்பவர் யார் தெரியுமா?

சார்ஜெண்ட் சாண்டர்ஸைக் லாகூரில் கொன்றுவிட்டு மாறுவேடத்தில் தப்பிச் சென்று கல்கத்தாவில் காலம் கழித்த பின் ஆக்ரா வந்து அங்கு வெடிமருந்து செய்து, வெடிகள் தயாரித்து மத்திய அசெம்பிளியில் வெடிகுண்டு வீசிய பகத்சிங்கோடு உடனிருந்து பங்கு வகித்தவர்தான் இந்த தத். தனது ஆயுள் தண்டனையை இங்கு கழித்து வந்தார். இவர் வங்காளத்தில் இயங்கிய ஜுகாந்தர் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சியைத் தோற்றுவித்தவர் அரவிந்த கோஷ். இவர்தான் பின்னர் ஆன்மீக நாட்டத்தில் புதுச்சேரி வந்து தங்கி மகான் அரவிந்த மகரிஷியானவர். இந்த புரட்சி இயக்கத்தில் பிரபலமான பல தலைவர்கள் அன்று தொடர்பு கொண்டிருந்தனர்.

சுப்பிரமணிய சிவா அவர்களின் தலைமையில் சுதந்திரப் போரில் குதித்து சிறைக்கு வந்த பல இளைஞர்கள் இத்தகைய வடநாட்டுப் புரட்சிக்காரர்களோடு பழக்கம் ஏற்பட்ட பின் தாங்களும் புரட்சி இயக்கங்களை நடத்த வேண்டுமென்ற எண்ணம் கொண்டனர். மகாத்மா காந்தியடிகளின் அமைதி வழிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை வந்தவர்கள் இவர்கள். அந்த வடநாட்டுக் கைதிகளோ வன்முறை புரட்சி இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு சிறைக்கு வந்திருப்பவர்கள். அவர்களின் தாக்கம் தமிழ்நாட்டு காந்திய வழி கைதிகள் சிலருக்கு ஏற்பட்டது. புரட்சிக்காரர்களும் காந்திய போராட்டக் கைதிகளும் சிறையில் அடிக்கடி சந்தித்துப் பழகுவதை சிறை அதிகாரிகளும் தடுக்கவில்லை.

ஆனால் சிறையில் அடைபட்டிருந்த மற்ற காந்தியவாத காங்கிரஸ் கைதிகளுக்கு தங்கள் இளைஞர்கள் புரட்சிக்காரர்களோடு பழகுவது பிடிக்கவில்லை. அந்த பழக்கத்தைக் கைவிடுமாறு போராடிப் பார்த்தனர். இந்த போதனைகள் எல்லாம் புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர்களிடம் எடுபடவில்லை. காங்கிரஸ் கைதிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறைவிடத்தில் இவர்கல் புரட்சிக்காரர்களோடு பழகுவதும், பேசுவதுமாக இருந்தனர். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்தப் புரட்சிகர தலைவர்கள் தமிழக காங்கிரஸ் இளைஞர்களுக்குப் பாடங்கள் எடுத்தனர். புரட்சி வழியில் சுதந்திரம் அடைந்த பல வெளிநாட்டு வரலாறுகளை எடுத்துக் காட்டினர். இந்தியாவில் அதுபோன்றதொரு புரட்சி இயக்கம் செயல்பட்டு வருவதையும் தெரிவித்தனர்.

புரட்சியைத் தூண்டும் பல புத்தகங்கள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. "ஐரிஷ் விடுதலைப் போராட்டம்" குறித்த புத்தகமும், தன்கோபால் முகர்ஜி என்பவர் எழுதிய "என் சகோதரன் முகத்தில்" எனும் புத்தகத்தமும் இவர்களுக்குப் படிக்கக் கொடுக்கப்பட்டன. இவை தவிர வெளியிலிருந்து ரகசியமாக சிறைக்குள் கொண்டுவரப்பட்ட பல புரட்சிகர இயக்க வெளியீடுகளும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. விளவு? தமிழகத்து இளைஞர்கள் சிலர் வன்முறையில் சுதந்திரப் போரில் ஈடுபட ஒரு இயக்கத்தை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் கொள்கைகளின் தாக்கத்தால் பல இளைஞர்கள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

இந்த இளைஞர்கள் கூட்டத்தில் அங்கம் வகித்த சிலரது பெயர்களைத் தெரிந்து கொள்வோமா? ப.ஜீவானந்தம், மதுரை பி.கே.நாராயணன்,நெல்லை வீரபாகுப் பிள்ளை, தூத்துக்குடி பி.சங்கரநாராயணன், ப.இராமசாமி, சி.பி.இளங்கோ, கொடுமுடி ராஜகோபாலன், கள்ளிடைக்குறிச்சி சுப்ரமணியம், டி.ராமச்சந்திரா, டி.பலராம ரெட்டி, பி.பாபிராஜு, கே.நாராயண நம்பியார், சி.ஓ.நாராயண நம்பியார், பட்டாபிராம ரெட்டி, எஸ்.கே.சுந்தரம், கே.அருணாசலம் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான சிலர் 1933 மே மாதம் 15ஆம் தேதி சென்னையில் கூடி தங்கள் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய ஆலோசனை செய்தனர். அப்போது மாணவராக இருந்த எஸ்.ரங்கராஜன் என்பவர் தொடர்பாளராக நியமிக்கப் பட்டார். இந்த ரகசிய இயக்கம் குறித்தும், இதில் யார் யாரைச் சேர்க்கலாம், எங்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தலாம் என்பதைப் பற்றியெல்லாம் இவர்தான் முடிவு செய்வார். மேலும் இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் டெல்லி மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசிய தத் என்பவரிடமிருந்து வெடிகுண்டு செய்வது குறித்தும் கற்றுக் கொண்டனர். இந்த தத் அவர்களும் பகத் சிங்கும் டெல்லி சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு ஓடிவிடவில்லை. அங்கேயே நின்று கைதானார்கள். அவர்கள் சபையில் யாருமில்லாத இடமாகப் பார்த்து உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில்தான் குண்டு எறிந்தனர். மேலும் வழக்கில் அவர்கள் வாக்குமூலம் கொடுக்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கத்தான் இந்த குண்டு வீச்சு, யார் உயிரையும் குடிக்க அல்ல என்றும் கூறியிருந்தனர். ஆக்ராவில் ஒரு பாழடைந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அங்குதான் இவர்கல் குண்டு செய்யக் கற்றுக் கொண்டனர். அந்தத் திறமையை இப்போது தது பிறருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அப்போது சென்னை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார். சென்னை பொது மருத்துவ மனையில் அவருக்கு வைத்தியம் செய்து வந்தார்கள். பிந்நாளில் சென்னை எவரெஸ்ட் ஹோட்டலின் உரிமையாளராக இருந்த எஸ்.கே.சுந்தரமும் சென்னை பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அப்போது இந்த இளைஞர்களுக்கு நேதாஜியின் அறிமுகமும் கிடைத்தது.

திருச்சி சிறையில் புரட்சிக்கு வித்திட்ட இந்த இளைஞர்கள் பிறகு சென்னை தங்கசாலைத் தெருவில் ஓர் இல்லத்தில் கூடினார்கள். புரட்சி இயக்கத்தில் ஒருவரான டி.இராமச்சந்திரா என்பவர் தங்கியிருந்த வீடு அது. பிந்நாளில் அகில இந்திய பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளராக இருந்த தொழிற்சங்கத் தலைவர் முகுந்தலால் சர்க்கார் அவர்களையும், பம்பாயில் 'வானர சேனை' எனும் அமைப்பைத் தோற்றுவித்தவரும், பம்பாய் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவரும், 'வான்கார்டு' இன்சூரன்ஸ் கம்பெனி அதிபரும், 'சுதந்திரம்' எனும் பத்திரிகையை பின்னாளில் நடத்தியவருமான ஹெச்.டி.ராஜா என்பவரையும் இந்த இளைஞர்கள் தொடர்பு கொண்டார்கள். 'ஆனந்த விகடனில்' பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமான மனிதர்களைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதிவந்த எழுத்தாளர் 'அருண்' எனும் கே.அருணாசலம், கே.கோபால சாஸ்திரி, எஸ்.கிருஷ்ணன் எனும் ஓர் முதுகலை பட்டதாரி, டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப் ஆகியோர் இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள்.

இந்தப் புரட்சியாளர்கள் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆயுதப் புரட்சிக்கு ஆங்காங்கே துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சேகரிப்பது, ஆங்கில அரசுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தொடர்பு சாதனங்களுக்கு தடை ஏற்படுத்துவது, நிதி வசதிக்காக வன்முறை நடவடிக்கைகளை எடுப்பது போன்ற பல செயல்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆனால் இவைகள் எல்லாம் ஆலோசனை அளவில் நின்றுவிட நேர்ந்தது. காரணம் அரசாங்கம் இவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட்டார்கள். அப்படி என்னதான் நேர்ந்தது இவர்களுக்கு?

ஒரு நாள் இவர்கள் இயக்கத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்த தேவராஜன் என்பவர் மூர் மார்க்கெட்டில் போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டுவிட்டார். இவரை சோதனை இட்டபோது இவரிடமிருந்த ரிவால்வர் போலீசார் கையில் சிக்கிவிட்டது. புரட்சிக்காரர்கள் சிக்க மாட்டார்களா என்று துழாவிக் கொண்டிருந்த போலீசுக்கு இப்படியொரு பிடி கிடைத்தால் விடுவார்களா? இவரைக் கொண்டு போய் 'நன்றாக' விசாரிக்கத் தொடங்கினார்கள். எத்தனை திட நெஞ்சம் கொண்டவரும் போலீசின் விசாரணையில் உண்மைகளைக் கக்காமல் இருக்க முடியுமா? உடனே தங்கசாலை தெருவில் இவர்கள் தங்கியிருந்த வீடு சோதனைக்கு உள்ளாகியது.

அங்கு துழாவியதில் போலீசுக்குப் பல ஆதாரங்கள் சிக்கின. ஆனால் உருப்படியாக வழக்கு போடும்படியாக எந்த குற்றத்தை முன்னிலைப் படுத்தி இவர்களை உள்ளே தள்ளுவது? அவர்களுக்குச் சொல்லியா தெரிய வேண்டும். ஒரு ஜோடனை தயார் செய்யப்பட்டது. மாநிலத்தின் பல இடங்களிலும் சோதனைகள் நடந்தன. ஒரு கதை உருவானது இந்த இளைஞர்களுக்கு எதிராக. நல்ல கற்பனை வளம் கொண்டு அதிகாரிகள் அத்தனை பேரையும் ஒருசேர உள்ளே தள்ளிட நல்லதொரு வாய்ப்பாக இதனைக் கருதினர்.

1933 ஜூலை மாதத்திற்குள் அனேகமாக எல்லா இளைஞர்களும் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பிடியில் கிடைத்தவர்கள் முகுந்தலால் சர்க்கார் உட்பட மாகாணத்தின் மொத்தம் 19 இளைஞர்கள். இவர்களெல்லாம் வெளியில் இருந்தவர்கள். அதனால் அப்போது சிறையில் இருந்த ப.ஜீவானந்தம், பி.கே.சங்கரநாராயணன், வீ.வீரபாகு பிள்ளை, கொடுமுடி ராஜகோபாலன் ஆகியோர் வழக்கின் கொக்கியில் சிக்காமல் போயினர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது. அரசாங்க அதிகாரிகளைக் கொலை செய்யவும், வங்கிகளைக் கொள்ளை அடிக்கவும் சதி செய்ததாக இந்த இளைஞர்கள் மீது IPC 120 (b) செக்ஷன்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஐ.பி.சி. பிரிவு வளைந்து கொடுக்கக் கூடியது. எத்தனை பேரை வேண்டுமானாலும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் கோர்த்து வாங்க இந்தப் பிரிவு வசதியாக இருக்கும் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்தனர். வழக்கில் குற்றவாளிகள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம், முதல்வரும் பத்தாமவரும் இதில் வருகிறார்கள். பத்தாவது குற்றவாளிக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு என்றால், அவர் முதல் குற்றவாளிக்கும் தெரிந்தவர் என்று அவரையும் இதில் இழுத்து விட்டுவிடலாம். இப்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியல்:

முகுந்தலால் சர்க்கார், கே.அருணாசலம் என்கிற அருண், டி.கோபால சாஸ்திரி, டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப், ஜி.லோகநாதன், டி.கண்ணன், சபாபதி, கண்ணாயிரம், எஸ். ரங்கராஜன், டி.ராமச்சந்திரா, கே. நாராயண நம்பியார், பலராம ரெட்டி, தசரதராம ரெட்டி, ஜி.பாலகிருஷ்ண ரெட்டி, ஜி.காலய்யா ரெட்டி, பட்டணம் பாலி ரெட்டி, பி.பாபிராஜு, சி.ஜெகநாதன், கனூர் ராமானந்த செளதுரி ஆகியோர்.

ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதில் நீதிபதியாக இருந்தவர் நீதிபதி டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யங்கார். சிந்தாதரிப்பேட்டையில் இருந்த ஒரு நூலகம் நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணை இரண்டு மாதங்கள் நடந்தன. இந்த சதி வழக்கில் இருவர் அப்ரூவராக மாறினர். அவர்கள் எஸ்.கிருஷ்ணன், என்.பட்டாமிராம ரெட்டி. போலீசின் சாமர்த்தியத்தால் இவர்கல் அப்ரூவராக மாறியதாகக் கூறுவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஒரு பெரிய வழக்கறிஞர் குழுவினர் ஆஜராயினர். அவர்கள், காங்கிரஸ் தலைவர் கே.பாஷ்யம், டி.எஸ்.வெங்கடராமன், என்.எஸ்.மணி, சூசர்லா சூர்யபிரகாசம், டி.பிரகாச ராவ், வி.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர்.

இந்த வழக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நடத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் பிரபல காங்கிரஸ் தலைவராக இருந்த பி.ஜெகநாத தாஸ் (இவர் பிந்நாளில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) தலைமையில், பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் பி.ஆர். எனப்படும் பி.ராமமூர்த்தி, இவர் செயலாளராக இருந்தார். விசாரணை கைதிகள் சிறையில் மிகுந்த தொல்லைகளை அனுபவித்தனர். ரிமாண்டு கைதிகளுக்கான எந்த வசதிகளும் இவர்களுக்குத் தரப்படவில்லை. எனவே இவர்கள் சிறைக்குள்ளே போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்திலும் இவர்கல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததனால் நீதிமன்றம் நடத்த முடியாமல் போனது. பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இவர்களுக்குச் சிறையில் சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

வழக்கில் சுமார் நூறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணைக்குப் பிறகு செஷன்சுக்கென்று உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. M.C.C. 1/1934 எனும் இந்த வழக்கு 1934ஆம் வருஷம் ஜனவரி 8ஆம் தேதி நீதிபதி பெர்க்கென்ஹாம் வால்ஷ் என்பவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிரெளன் பிராசிகியூட்டர் கே.பி.எம்.மேனன் அரசாங்க சார்பில் வழக்கு நடத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு குழு ஆஜராகவிருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் ஈடுபட்டு வழக்குகளில் ஆஜராகமலிருந்த ஆந்திர கேசரி டி.பிரகாசம் எதிரிகளுக்கு ஆஜராவதற்காக வந்தார். பிரபல கிரிமினல் லாயர் ப.ராஜகோபாலாச்சாரியார், பி.நாராயண குருப், அரசாங்கத்தால் எதிரிகளுக்காக நியமிக்கப்பட்ட பி.ஜெகநாதன் ஆகியோரும் ஆஜராயினர். வழக்கு நீண்ட நாட்கள் நடந்தது. இடைப்பட்ட காலத்தில் கிரெளன் பிராசிகியூட்டர் மேனன் இறந்து போனார். மாற்று ஏற்பாட்டில் ஒரு ஆங்கிலேயர் அனந்தராமன் என்பவரை உதவியாளராக வைத்துக் கொண்டு வழக்கை நடத்தினார். குறுக்கு விசாரணைகள் முடிந்து ஜூரர்கள் அபிப்பிராயம் கொடுத்ததில் இருவர் தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் என்று முடிவாகியது. அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

முகுந்தலால் சர்க்காருக்கு நான்கு ஆண்டுகள் சிறைவாசம். பத்து பேருக்கு தலா மூன்று ஆண்டுகள், சபாபதி, கண்ணாயிரம் விடுதலை ஆகினர். இரண்டு அப்ரூவர்கள் விடுதலையாகினர். இதில் சிறை ஐ.ஜி. என்ன செய்தார் தெரியுமா? வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னாலேயே எல்லோரும் தண்டனை பெறுவார்கள் என்ற நினைப்பில் அவர்களைப் பிரித்து குழுக்களாக பல சிறைகளுக்கு வைத்து விட்டார். பெல்லாரி சிறைக்கு இவர் ஐந்து பேரை அனுப்பினார். இருவர் விடுதலையானது அவர் தெரிந்திருக்கவில்லை அல்லவா? அங்கு சிறை அதிகாரி ஐந்து பேருக்கு நான்கு பேர்தான் இருக்கிறார்கள். மீதி ஒருவர் எங்கே என்கிறார். அவர் விடுதலை என்று சொன்னார்கள். அதற்கு முன்பே இந்த ஆங்கில அதிகாரி அனைவருக்கும் தண்டனை என்று எப்படி முடிவு செய்தார். எல்லாம் அவர்கள் சர்வாதிகாரம் தானே!

அப்போதைய சிறைவாசம் இப்போது போலவா? கொடுமையிலும் கொடுமை. அந்தக் கொடுமையில் கோபால சாஸ்திரி சிறையில் இறந்தே போனார். நல்ல உடல்வாகு உள்ள அவர் வயிற்றுக் கடுப்பு உண்டாகி நல்ல சிகிச்சையும் இன்றி, உணவும் அருந்த முடியாமல் இறந்தார். உடல் உபாதை பொறுக்க முடியாமல் ஒரு முறை அவர் தற்கொலைகும் முயன்றிருக்கிறார். அதற்காகத் தற்கொலை முயற்சி வழக்கு போட்டார்கள். ஆனால் அந்த வழக்கு முடியும் முன்பாக அவர் சிறையில் இறந்து போனார்.

கோவை சிறையில் இரு கைதிகள் தனிமைப் படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். மகாத்மா காந்தி கூட இந்த இளைஞர்கள் ஏற்றுக் கொண்ட பாதை காந்திய வழிக்கு எதிரானது என்றாலும், அவர்கள் தேசபக்தி கருதி நல்ல பாரிஸ்டரை அனுப்பி வாதாடச் சொல்கிறேன் என்று முன்வந்தாராம். எனினும் இந்த இளைஞர்கள் தங்கள் தண்டனைக் காலத்தை சிறையில் அனுபவித்துவிட்டு வெளிவந்தனர். இந்த நாடு அந்தத் தியாகிகளை நினைவில் வைத்திருக்கிறதா? இதனைப் படிக்கும் அன்பர்கள்தான் சொல்ல வேண்டும்.

Thursday, April 28, 2011

ஹாஜி முகமது மெளலானா சாகிப்.


ஹாஜி முகமது மெளலானா சாகிப்.

மதுரையைச் சேர்ந்தவர் இவர். தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. 1886இல் பிறந்த முகமது மெளலானா 1910இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பர். பல அறிஞ்சர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. இவர் அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பேசினால், அரசுத் தரப்பினர் அச்சம் கொள்வர்.

1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. அப்போது மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலர் கள்ளுக்கடை முதலாளிகளின் ஏவலால் சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்த அங்கு ஓர் கலவரம் உருவாகி, கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறை தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுக்காக, மக்களைத் தூண்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு மறுமுறை இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தீவிரமான மதப் பற்று உள்ளவர் இவர். அதே அளவுக்கு தேசபக்தியும் மிகுந்தவர். இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்திருக்கிறார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.

இவரது இடைவிடாத பணிகளுக்கிடையிலும் ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்தத் தவற மாட்டார். சிறையிலும்கூட சிறை அதிகாரிகளிடம் போராடி முஸ்லிம்களுக்காகத் தொழுகைக்கென்று தனியிடம் கேட்டு வாங்கி, பாய், விளக்கு, தண்ணீர் இவை கிடைத்திட வழிவகுத்தவர். வாழ்க ஹாஜியார் முகமது மெளலானா சாஹிப் புகழ்!

Wednesday, April 27, 2011

மதுரை திரு கிருஷ்ண குந்து


மதுரை திரு கிருஷ்ண குந்து

வ.உ.சி.யின் நண்பரும், தீப்பொறி பறக்க உரையாற்றும் ஆற்றல் பெற்றவரும், மிகச் சிறந்த தேசபக்தருமான சுப்பிரமணிய சிவாவின் சீடர்களில் முக்கியமானவர் இந்த கிருஷ்ண குந்து என்பவர். இவர் மதுரையில் செளராஷ்டிர சமுதாயத்தைச் சேர்ந்த குப்புசாமி ஐயர் என்பவரின் மகனாகப் பிறந்தவர். தனி நபர் சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு பெற்று சிறை புகுந்தவர். உயர் நிலைப் பள்ளி கல்வி முடித்த கிருஷ்ண குந்து 1918ஆம் ஆண்டிலிருந்து தேச சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கு பெறத் தொடங்கினார். சொந்தத்தில் தங்கம் வெள்ளி நகை செய்யும் பட்டறை வைத்து நடத்தி வந்தார். மதுரை மாநகரத்தில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை காந்தி எனப் புகழ்பெற்ற மதுரை வைத்தியநாத ஐயர் போன்றவர்களோடு சேர்ந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றார். 1932இல் மகாத்மா காந்தி அறிவித்த சட்ட மறுப்பு இயக்கத்தில் சேர்ந்து இவர் மனையோடு கைதாகி சிறை புகுந்தார். சுப்பிரமணிய சிவாவின் பாரதாஸ்ரமத் தொண்டர்களோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேசபக்தியைத் தூண்டியவர். 1930லும், தொடர்ந்து 1932லும் இவர் சுதந்திரப் போரில் பங்கு கொண்டு ஒரு வருட தண்டனை பெற்று சிறை சென்றார். 1940இல் மறுபடி தண்டிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் 1941ல் மீண்டும் கைதாகி 4 மாத தண்டனையும் பெற்றார். இவர் திருச்சி, கண்ணனூர், அலிப்புரம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்தார். 1941இல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு உடல் நலம் கெட்டு காலமானார். வாழ்க கிருஷ்ண குந்துவின் புகழ்!

Thursday, February 10, 2011

கம்பன் அடிப்பொடி சா.கணேசன்


கம்பன் அடிப்பொடி சா.கணேசன்

காந்தியடிகள் 1927இல் காரைக்குடிக்கு வந்தபோது அவரைத் தமது "கற்பக நிலையத்துக்கு" அழைத்து பணியாற்றும் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் சா.கணேசன். அந்த நாள் முதல் அரசியலில் ஆர்வம் காட்டிய சா.கணேசன் 1936க்குப் பிறகு தேசியத்தில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்திய காந்தியடிகளின் தனிநபர் சத்தியாக்கிரக அறப்போர் மதுக்கடை மறியலாக கண்காட்சி என்ற பெயரில் நடந்த சூதாட்டக் கள மறியலாக ஆங்காங்கே பரிணமித்தபோது சா.கணேசன் 1941இல் காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் அந்த மறியல்களை நாடறிய நடத்தி காரைக்குடியிலிருந்து தன்னந்தனியராய்ப் பாதயாத்திரையாகச் சென்னைக்குச் சென்றார். வழியில் ஏற்பட்ட துன்ப அனுபவங்கள் அவரின் சுதந்திர தாகத்தை மேலும் தூண்டின. அவரது உடலின் ஒவ்வொரு ரத்த நாளமும் ராணுவ வீரனைப் போன்ற யுத்த எதிர்ப்பைக் காட்டிக் கொடுத்ததால் அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதன் பயனாய் நான்கு மாதம் உத்தரப் பிரதேசம் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கச் சூறாவளி எங்கும் பரவியது. அதனால் அந்நிய ஆதிக்கத்தின் அடக்குமுறை சூடேறிக் கனன்று கொண்டிருந்த உச்சமான காலம் அது. ஆகஸ்ட் போராட்டம் எனப் பிரகடனப் படுத்தப்பட்ட அந்தச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மறைந்திருந்தே வாலி மீது அம்பு தொடுத்த ராமனைப் போல தலைமறைவாயிருந்தே சா.கணேசன் போராட்டத்தை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

கணேசனாரை எங்கு கண்டாலும் சுடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது பிரிட்டிஷ் அரசு. மாறு வேஷம் தரித்துக் கொண்ட நிலையில் பதுங்கிய்ப் பாய்ந்து கொண்டிருந்த சா.கணேசனின் இல்லம் அந்நிய அரசின் அநியாய ஜப்தியால் சின்னா பின்னப்பட்டது. அன்றைய மதிப்பில் மூன்று லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால் ஜப்தி இரகசியத்தை முன்பே தெரிந்து கொண்ட சா.கணேசன் நாம் அரிதாக முயன்று சேகரித்து வைத்திருந்த 5000 புத்தகங்களைக் கொண்ட நூல் நிலையத்தை மட்டும் காமதகனத்தில் தீக்கிரையாகாத கிளியைப் போல உறவினர்கள் நண்பர்கள் மூலமாகக் காப்பாற்றிக் கொண்ட திறன், அவர் கம்பன் அடிப்பொடியாக இலக்கிய உலகில் நிலைத்த புகழ் பெருமை பாராட்டு முதலியவையெல்லாம் பெறுவதற்குரிய அச்சாரத்தைத் தந்தது என்றால் அதில் மிகையில்லை.

இப்படி அஞ்ஞாதவாசம் போல் ஓராண்டு தலைமறைவாக இருந்தவர் மாறு வேடத்தில் மறைந்தே ரேக்ளா வண்டியில் சென்னை வந்தார். தம் பால் பரிவும் பாசமும் மிக்க நண்பர்களான மெ.நா.சித.சிதம்பரம் செட்டியார், எம்.என்.எம்.மெய்யப்பன், கி.நாராயணன் செட்டியார் போன்றவர்கள் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதைக் கேட்டறிந்து கண்ணீர் மல்கி கசிந்துருகினார். தம் அரசியல் குருவான ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் வேடம் கலைந்து வெளியே வந்து சென்னையில் காவல் துறையினரிடம் சரணடைந்து இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றார். சிறையிலிருந்த செல்வராக வெளியேறிய வீரத் தழும்பின் அரசியல் அடையாளம் தான் அவரைச் சட்டை அணியாத சா.கணேசனாகக் கண்டு கொண்டது உலகம்.
= தெ. முருகசாமி. நன்றி: தினமணி சுதந்திர பொன்விழா மலர்.

Wednesday, February 9, 2011

ராம்நாத் கோயங்கா



ராம்நாத் கோயங்கா

(தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிகைகளின் அதிபர். இந்திய சுதந்திரப் போரில் பல அதிசயிக்கத்தக்க காரியங்களைச் செய்து புகழ் பெற்றவர். இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் நடத்திய இரண்டாவது சுதந்திரப் போர் எனப்பட்ட புரட்சியின் ஆணி வேராக இருந்து செயல்பட்டவர். பத்திரிகைகளுக்கு எதிரான பிரிட்டிஷ் மற்றும் இந்திரா காலத்து அடக்குமுறைகளை எதிர்த்து நின்றவர். இவரைப் பற்றி இவரிடம் பணிபுரிந்த திரு ரா.அ.பத்மநாபன் தினமணி சுதந்திர தின பொன்விழா மலரில் ஒரு கட்டுரை எழுதினார். அதனை இப்போது மறுபடி படியுங்கள். நன்றி: திரு ரா.அ.பத்மநாபன் & 'தினமணி")

அக்கிரமத்தை அம்பலப்படுத்திய கோயங்கா

"தினமணி", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" அதிபர் ஸ்ரீ ராம்நாத் கோயங்கா சிறந்த தேசபக்தர். தேச பக்தரிலும், நிகரற்ற துணிச்சல் கொண்டவர். ஒவ்வொரு சமயம், வேறு யாருக்குமே தோன்றாத ஒரு செயலைத் தைரியமாகத் தன்னந்தனியே செய்து முடித்து நாட்டின் மதிப்பை உயர்த்தும் திறன் படைத்தவரும்கூட.

1942-ஆம் ஆண்டு நமது நாட்டின் அரசியல் சரித்திரத்தில் நெருக்கடியான ஆண்டு. அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. சர்வாதிகாரிகளான ஹிட்லரும், முசோலினியும் அவர்களது கிழக்குக் கோடிக் கூட்டாளியுமான ஜப்பான் பிரதமர் டோஜோவும் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தார்கள். பிரிட்டனும், பிரான்சும் பல தோல்விகளைத் தழுவி வந்தன. மக்கள் சுதந்திரத்துக்காகப் போரிடுவதாக பிரிட்டன் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியர்களைப் படை திரட்டி போரில் ஈடுபடுத்தி இந்திய சிப்பாய்களின் ரத்தத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காக்க முயன்று வந்தது.

இந்தியப் படை வீரர்களின் தீரத்துக்கும் போர்த்திறனுக்கும் நிறையப் பாராட்டுக் கிடைத்தது. ஆனால், பிரிட்டனோ, "சண்டை முடிந்த பின் பொறுப்பாட்சி தருவதைப் பற்றிப் பார்க்கலாம்" என்று மழுப்பி வந்தது.

இந்த நிலையில் பொறுமையின் பூஷணமான மகாத்மா காந்தியும் பொறுமை இழந்தார். "இனி பொறுக்க முடியாது. வெள்ளையனே வெளியேறு. இந்திய மக்களே, சாவு நேர்ந்தாலும் சரி, விடாமல் போரிடுங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

அவ்வளவுதான், நாடெங்கும் பிரிட்டனுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்தார்கள். பிரிட்டிஷ் யுத்த முயற்சிக்கெதிராக குக்கிராமங்கள் முதல் தலைநகரம் வரை ஒரே எதிர்ப்பு. லட்சோபநட்சம் மக்களைச் சிறையில் தள்ளினார்கள்.

பேச்சுச் சுதந்திரமோ, எழுத்துச் சுதந்திரமோ, பத்திரிகை சுதந்திரமோ ஏதும் இல்லை. பாரதமே ஒரு பெரிய சிறைச் சாலையாக விளங்கியது.

இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் கூடி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள். பிரிட்டிஷ் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாட்டிலுள்ள எல்லாப் பத்திரிகைகளும் கால வரையின்றி மூடிவிட வேண்டும் என்றார் காந்தியடிகள். தமது "ஹரிஜன்" முதலிய பத்திரிகைகளையும் அவ்வாறே மூடிவிட்டார். மற்ற பத்திரிகைகளோ ஒரு நாள் அடையாள நிறுத்தம் செய்தால் போதுமென தீர்மாந்திதன.

ராம்நாத் கோயங்காவோ காந்தியடிகளின் விருப்பப்படி நடப்பதே சிறந்ததென தமது பத்திரிகைகள் எல்லாவற்றையும் காலவரையின்றி நிறுத்திவிட்டார்.

ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக பிரிட்டிஷ் கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். அநியாயம் நடக்கும்போது சும்மா இருப்பதாவது. தமது பத்திரிகைகளை நிறுத்தி விட்டதால் தூங்கிக் கொண்டிருந்த பெரிய அச்சகத்திற்கு ரகசியமாக ஒரு வேலை கொடுத்தார். நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவைகளை எல்லாம் திரட்டிக் கணிசமான ஒரு நூலாக உருவாக்கினார். காதோடு காதாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு "இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார்.

நூலின் பிரதிகளை, பரம ரகசியமாக பிரிட்டிஷ் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அனுப்பி வைத்தார். பிரிட்டிஷ் மந்திரிகளுக்கும்தான் அது மட்டுமல்ல. அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா முதலிய வேறு பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் நூலை அனுப்பினார். இதை பிரிட்டிஷார் அறியா வண்ணம் அவர் அனுப்பி வைத்தது சாதனையிலும் சாதனை எனலாம்.

அவ்வளவுதான், பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கேள்விகள் மேல் கேள்வி எழுந்தது. பிரிட்டிஷ் அரசு பதில் சொல்ல முடியாமல் திகைத்தது. சுதந்திரத்துக்காகப் போரிடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவில் லட்சக்கணக்கான ஜனங்களை சிறையில் தள்ளி கெடுபடி ஆட்சி நடத்தி வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் போலி வேஷம் உலகறியத் தெரியலாயிற்று. உலக அரங்கில் பிரிட்டனின் புகழுக்குப் பெரிய அடி கிடைத்தது. தீரர் ராம்நாத் கோயங்காவின் அதிசயச் சாதனையால் உண்மையை உலகம் உணர்ந்தது. பிற்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரலாம் என பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசு முடிவு செய்ய இந்த அபிப்பிராய மாற்றம் உதவியது என்று சொல்லலாம்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.