Followers

Friday, May 28, 2010

சீர்காழி சதி வழக்கு

சீர்காழி சதி வழக்கு:
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

(சீர்காழி சதி வழக்கு எனப் பெயர் பெற்ற இந்த ஆகஸ்ட் புரட்சியில் கைதாகி சிறையில் வாடிய அத்தனை தியாகிகளுக்கும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கும் அத்தனை பேர் சார்பிலும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். இந்த கட்டுரை அந்தத் தியாகச் செம்மல்களுக்கு அர்ப்பணம்.)

தமிழகத்தில் 1942 ஆகஸ்ட் புரட்சியின்போது தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு அடுத்ததாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவது இந்த சீர்காழி சதி வழக்கு. 1942 ஆகஸ்ட்டில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானமும், அதனையடுத்த தேசத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையும் தொடர்ந்து வடநாடு முழுவதும் தீவிரமான போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாடு அவர்களுக்குப் பின் தங்கியது இல்லை என்று கூறும் வகையில் இங்கும் பல தீவிரவாதப் போராட்டங்கள் நடைபெற்றன.

தொடக்கத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வந்த காங்கிரசார்களை, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளைக்காரனின் பேச்சு விழித்து எழச்செய்து விட்டது. இரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடொன்றில் பேசுகையில் சென்னை கவர்னர் "இந்தியாவின் இதர பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், இரயில்வே பாலங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகள் நடைபெற்று வரும்போது, சென்னை மாகாணம் மட்டும் அப்படிப்பட்ட நாச வேலைகள் எதுவும் நடைபெறாமல் அமைதியாகவே இருக்கிறது என்பது சென்னை மாகாணத்துக்குப் பெருமை, ஆகவே இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி" என்று கூறினார். இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதைப் படித்த தேசபக்தர்களுக்கு, கவர்னரின் பேச்சு ஒரு சவாலாக இருந்தது போலும். ஓகோ! வட இந்திய மக்களைப் போல தென்னிந்திய மக்கள் தேச உணர்வில் பின் தங்கியவர்கள் என்பது போல அல்லவா இவர் பேசியிருக்கிறார். நம் தேசபக்தியையும், வட இந்திய மக்களைப் போலவே நாமும் காண்பித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது போலும். சென்னை மாகாண கவர்னரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து சென்னை மாகாணம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இவைகள் தோன்றலாயின. அந்த வரிசையில் சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம்.

சீர்காழிக்கு அருகில், புகைவண்டி நிலையத்திற்கு மிக அருகில் ஒரு உப்பனாறு உண்டு. அந்த உப்பனாற்றின் மீதுள்ள ரயில்வே பாலத்திற்கு வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டி 8 பேர் மீது இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்குதான் சீர்காழி சதி வழக்கு என்று பெயர் பெற்றது. அந்த எட்டு பேரின் பெயர்கள் வருமாறு:-

1. சென்னை தினமணி உதவி ஆசிரியர் என்.ராமரத்தினம்.
2. சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபர் ஆர்.சுப்பராயன்
3. கும்பகோணம் பந்துலு ஐயரின் முதல் மகன் .வி.சேஷு ஐயர்
4. அவந்திபுரம் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி
5. கும்பகோணம் பந்துலு ஐயரின் 3ஆவது மகன் டி.வி.கணேசன், தினமணி உதவி ஆசிரியர்.
6. சீர்காழி வெங்கடேசன்
7. சீர்காழி வெங்கட்டராமன்
8. சீர்காழி சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் பல படித்த தேசபக்தி மிகுந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் கொண்டனர். எத்தனை தலைவர்கள், அத்தனை பேரும் அஹிம்சை சத்தியம் என்று தங்கள் போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்கள். அவர்களைப் பிடித்து எங்கிருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை செய்யும் இந்த வெள்ளை அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினர். இவர்களோடு தேசபக்த பாமர மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தனர்.

அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்வதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றிய சிந்தனையே அந்த இளைஞர்களுக்கு இல்லை. நம் நாடு, நம் மக்கள், நம் தலைவர்கள், நமக்கு சுதந்திரம், அடக்குமுறையைக் கையாளும் வெள்ளையனுக்கு சரியான பாடம் இதுதான் அவர்கள் மனதில் ஓடிய எண்ண அலைகள். அப்படிப்பட்ட தியாக மனம் படைத்த தஞ்சை மாவட்ட படித்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செயல்படத் துடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நாளில் மிகப் பிரபலமான பத்திரிகைகளாக விளங்கிய, ஆங்கில ஏடு "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்", தமிழ் நாளேடு "தினமணி" இவற்றின் அதிபராக விளங்கியவர் திரு இராம்நாத் கோயங்கா என்பவர். அந்த பத்திரிகைகளில் தினமணியில் பணியாற்றியவரும் பின்னர் அதன் ஆசிரியராகவும் இருந்தவர் மேதை திரு ஏ.என்.சிவராமன் அவர்கள். இவர்களோடு தினமணி என்.இராமரத்தினம் ஆகியோர் ஒன்று கலந்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதியிலுள்ள ஏதாவதொரு பாலத்துக்கு வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதற்கு முதலில் வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொள்ள வேண்டுமே, என்ன செய்வது? இராம்நாத் கோயங்காவுக்கு நாடு முழுவதிலும் நல்ல செல்வாக்கு உண்டு. அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி கோயங்காவும், சிவராமனும் ஆந்திரா, ஒரிசா எல்லையிலுள்ள செல்லூர் எனும் இடத்துக்கு ரகசியமாகச் சென்று அங்கிருந்த மைக்கா சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலருக்குப் பணம் கொடுத்து, அவர்கள் சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டுக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். ஒரு டைனமைட் என்பது சாக்பீஸ் அளவுக்கு இருக்கும். இந்த டைனமைட் குச்சிகளைப் பாதுகாப்பாகச் சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

ஏ.என்.சிவராமன் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் தானே திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு தகுதியான வீரர்களைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைத்து ஏற்பாடுகள் செய்யக் கிளம்பினார். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்த என்.இராமரத்தினம் அவர்கள் சில டைனமைட் குச்சிகளுடன் கும்பகோணம் சென்றார். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஒரு தேசபக்தர் முகாமாகத் திகழ்ந்தது. அந்தக் காலத்தில் கும்பகோணம் காங்கிரசில் தலைவராக பிரபலமாக இருந்தவர் காலம் சென்ற பந்துலு அய்யர் என்பாராகும். இவர் 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போதே நகர காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சத்தியாக்கிரகிகளுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தும், கூட்டங்களில் பேசியும் பாடுபட்டவர். இவர் பாபநாசத்தை அடுத்த திருக்கருகாவூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். அந்த நாளில் அந்த ஊரைத் திருக்களாவூர் என்றே அழைப்பார்கள். இவருடைய குமாரர்கள் சேஷு அய்யர், டி.வி.கணேசன் ஆகியோரும் மிகச் சிறந்த தேச பக்தர்கள். வீரம் செறிந்தவர்கள்.

கும்பகோணம் போய்ச்சேர்ந்த ஏ.என்.சிவராமன், இந்த பந்துலு அய்யரின் மூன்றாவது புதல்வரான டி.வி.கணேசன் (இவரும் தினமணியில் உதவி ஆசிரியர்) என்பாரை அழைத்துக் கொண்டு அவருடைய சொந்த கிராமமான திருக்கருகாவூர் சென்றனர். இருவரும் திட்டங்களை ரகசியமாக வகுக்க அமைதியான இந்த கிராமத்தை நாடி வந்தனர். அந்த கிராமத்தில் இவர்கள் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி எட்டு மைல் தூரத்திலுள்ள அம்மாபேட்டைக்குச் சென்றனர். அங்கு சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அப்படிச் சந்தித்த அவ்வூர் காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டு, இருவரும் திருக்கருகாவூர் திரும்பி வந்தனர்.

அம்மாபேட்டை, பாபநாசம் அல்லது அந்த வட்டாரத்துக்குள் எங்கு எந்த சதிவேலை நடந்தாலும், அது டி.வி.கணேசனின் மீதுதான் விழும் என்று இவர்கள் அந்தப் பகுதியில் வெடி வைக்கும் திட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் பகுதியில் எது நடந்தாலும் போலீசுக்கு முதலில் மூக்கில் வியர்ப்பது கணேசன் என்ற பெயர்தான். அந்த அளவுக்கு அவர்

அந்தப் பகுதியிலும், போலீஸ் ரிக்கார்டுகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கினார். சரி, இந்தப் பகுதி வேண்டாம் என்றால், எந்த இடத்தில்தான் தங்கள் திட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வது. புதிய திட்டம் வகுப்பதற்காகத் திருக்கருகாவூரிலிருந்து புறப்பட்டு இருவரும் சுவாமிமலைக்கு அருகிலுள்ள அவந்திபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு இலட்சுமண அய்யர் என்பார் மிகுந்த தேசபக்தி மிகுந்தவர், தைரியமானவர். அவரைப் போய் பார்க்கலாம் என்று அவர் வீட்டிற்குச் சென்றார்கள். இந்த இலட்சுமண அய்யரை விட அவருடைய தம்பி கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி மகா தைரியசாலி. உற்சாகம் மிகுந்தவர். தீவிரமான காங்கிரஸ்காரர். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர். இவரைப் பார்த்தால் என்ன என்று இவரை தொடர்பு கொண்டனர்.

அவந்திபுரத்தில் கூடிப் பேசிய இம்மூவரும், அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றனர். கும்பகோணத்தில் அப்போது சென்னை விமான நிலையத்தில் பிரதம டெலிகம்யூனிகேஷன் அதிகாரியாக விளங்கிய பொன்னுசாமி ஐயர் என்பவரின் வீடு இருந்தது. இவர்கள் மூவரும் அந்த பொன்னுசாமி ஐயரின் இல்லத்துக்குச் சென்றனர். அங்கே டெலிகம்யூனிகேஷன் அதிகாரி பொன்னுசாமி ஐயர் தவிர, குடந்தை பந்துலு ஐயரின் மூத்த மகன் சேஷு ஐயர், பந்துலு ஐயரின் தம்பி மகன் துரைசாமி ஐயர், அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், பந்துலு ஐயரின் மூன்றாவது மகனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோன்றிய திட்டத்தைக் கூறினர். குறிப்பாக இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது. அது எந்த ஆறு? எந்த பாலம்? யார் செய்வது? போன்றவற்றை அந்தந்த இடத்திற்குப் போய் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.

இவர்களது யோசனைப் படி தெற்கேயிருந்து சென்னைக்குப் போகும் மெயின் லைன் இந்தப் பகுதி வழியாகப் போவதாலும், ஏதாவதொரு முக்கியமான ஆற்று ரயில் பாலம் தகர்க்கப்படுமானால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படும்படி நமது செயல் இருக்க வேண்டும் என்று கணேசன் கூறிய கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். இது நல்ல யோசனை என்று அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். சரி, திட்டம் உருவாகிவிட்டது. அதை யார் அமல் படுத்துவது என்ற கேள்வி பிறந்தது. இதைப் பற்றி பேசுவதற்காக, சேஷு ஐயரும், ராமரத்தினம், கிருஷ்ணமூர்த்தி மூவரும் சீர்காழிக்குச் சென்று அவ்வூரில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த ரகுபதி ஐயரின் குமாரனும், துடிப்பும், தேசபக்தியும், வீரமும் ஒருங்கே பெற்ற காங்கிரஸ்காரராக விளங்கிய சுப்பராயனைச் சந்தித்தனர். வந்த அன்பர்கள் சுப்பராயனிடம் தங்கள் திட்டத்தை விளக்கி அதைச் செயல் படுத்தும் விதம் குறித்து விவாதித்தனர். இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுப்பராயன், தனது உள்ளூர் நண்பர்களிடமும் இதுபற்றி பேசி, விவாதித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறினார். தினமணி ராமரத்தினமும், கணேசனும் சென்னை திரும்பிவிட்டனர்.

சில தினங்களுக்குப் பிறகு சுப்பராயனிடமிருந்து ராமரத்தினத்துக்கு ஒரு கடிதம் வந்தது. ராமரத்தினத்தை டைனமைட்டுடன் சீர்காழி வரும்படி கேட்டுக் கொண்டிருந்தது அந்தக் கடிதத்தில். உடனே ராமரத்தினம் அவ்விதமே டைனமைட் குச்சிகளுடன் சீர்காழி சென்று அவற்றை சுப்பராயனிடம் கொடுத்துவிட்டு, அவர்களது திட்டம் என்ன, எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, திட்டம் செயல்படப்போகும் விதம் குறித்து திருப்தி தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பினார்.

சீர்காழி இரகுபதி ஐயரின் குமாரரும், பின்னாளில் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிருவனத்தை நிருவி பெரும் புகழோடு விளங்குபவருமான, சுப்பராயன் தனது சீர்காழி நண்பர்களான வெங்கட்டராமன், வெங்கடேசன், சுப்பிரமணியன் ஆகியவர்களுடன் திட்டம் குறித்து விரிவாக விவாதித்து, சீர்காழி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள உப்பனாறு பாலத்தைத் தங்கள் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டனர். இந்த உப்பனாற்றுக்கு சுக்கனாறு என்று பெயர். இனி அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும், தேவைப்படும் சாதனங்களையும் சேகரிக்கத் தொடங்கினர்.

நாடு முழுவதும் பாலங்களைத் தகர்க்கும் பணி மும்முரமாக நடந்து வந்ததால், இரயில் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு மைல் தூரத்திற்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர். இரயில் தண்டவாளங்கள், பாலங்கள் இவைகளில் எவரும் வெடி வைத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

இந்த இளைஞர் குழுவில் அதி தீவிரவாதிகளாகவும், உறுதியும் துணிச்சல் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள் இருவர். அவர்கள் வெங்கடேசனும், சுப்பிரமணியனும் ஆவர். இவர்கள் இருவரும் திட்டம் உருவானவுடனேயே அதைச் செயல்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாயினர். தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் இவர்கள் எழுந்து விடுவார்கள். அக்கம் பக்கத்திலோ, அல்லது வழியிலோ யார் கண்ணிலும் பட்டுவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருவரும் உப்பனாறுக்குச் செல்வார்கள். கையில் ஒரு பையில் துளைபோடும் இயந்திரம் முதலான உபகரணங்களை எடுத்துச் செல்வார்கள். அங்கு போய் ஒருவர் ஆற்றில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு, ரயில்வே பாலத்தின் தூணில் துளை போடுவார். மற்றவர் பாலத்தின் மீது நின்று கொண்டு யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி யாரும் கண்ணில் தென்பட்டால் உடனே மற்றவரை எச்சரித்து, இருவரும் அந்த இடத்தை விட்டு அந்தர்தியானம் ஆகிவிடுவார்கள். இந்த வேலையை இருவரும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். இப்படி இவர்கள் கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் வரை தினமும் தொடர்ந்து செய்து வந்தனர். ஒரு வழியாக துளையிடும் வேலை முடிந்தது.

இதுவரை எந்தவித அபாயமான சூழ்நிலையும் தோன்றாதபடி வேலையைக் கச்சிதமாக செய்து முடித்து விட்டனர். இனிமேல்தான் இவர்கள் செய்யவேண்டிய, ஆபத்தானதும் மிகவும் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டியதான வேலைகள் இருக்கின்றன. சுவற்றில் போட்ட துளையில் டைனமைட்டைப் பொறுத்தி, அதில் திரியை இணைத்து, அது கீழே உள்ள நீரில் விழுந்து நனைந்து விடாமல் இருக்க திரியோடு ஒரு குடைக்கம்பியை இணைத்துக் கட்டி நீட்டிக் கொண்டிருக்கும்படி வைத்தனர். திரி நீளம் அதிகம் இல்லாமல் இருந்தாலும், நீர் நிரம்பிய இடம் என்பதால் பத்த வைத்தவுடன் உடனே ஓடி மறைவது சிரமம் என்பதாலும், பற்ற வைத்த பிறகு ஓடிவிட போதிய நேரம் தரும் வகையில் அந்தத் திரியை எண்ணெயில் நனைத்து திரி மெதுவாக எரியும்படி செய்து கொண்டனர். இப்போது திட்டப்படி எல்லா ஏற்பாடுகளும் தயார். திரியைப் பற்ற வைக்க வேண்டியதுதான், மெயின் லைனில் உள்ள அந்த பாலம் வெடித்துச் சிதற வேண்டியதுதான், வெள்ளை அரசாங்கம் ஆடிப்போகப் போகிறது. இந்த இளைஞர்கள் பாலத்தில் வெடிகுண்டுகளை வைத்து, திரிகளையும் தயார் செய்து, திரிக்கு தீ வைக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டு, போலீசாரோ அல்லது மற்றவர்கள் கண்ணிலோ படாமல் ஓடிப்போய் புதர்களுக்கிடையில் மறைந்து கொண்டனர். அந்த நேரம் பார்த்து ரயில் தண்டவாளங்களைப் பாதுகாக்கும் போலீஸ் பார்ட்டி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.

அப்போது பாலத்தடியில் வைக்கப்பட்டிருந்த குண்டும், அதன் திரி குடைக்கம்பியோடு நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி விட்டு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். பாலத்துக்கு சேதம் இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை மிகப் பெரிய நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டது.

உப்பனாற்றுப் பாலத்துக்கு யாரோ வெடி வைத்து விட்டார்கள் என்று ஊரெங்கும் பரபரப்பு. போலீஸார் சிண்டைப் பிய்த்துக் கொண்டு புலன் விசாரிக்கத் தொடங்கினர். அங்கு இங்கு சுற்றி அலைந்து தகவல்களைத் திரட்டி, இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டனர். பலரை அழைத்துச் சென்று அவர்கள் பாணியில் விசாரித்தனர். இதில் பங்கு பெற்ற யாரும் கொன்று போட்டாலும் வாயைத் திறக்காத உறுதி படைத்தவர்கள். எங்கு இவர்களுக்கு புக இடம் கிடைத்ததோ தெரியவில்லை, இதைத் தொடர்ந்து போலீஸ் சுறுசுறுப்படைந்தது. இந்த காரியத்தைச் செய்யக்கூடியவர்கள் சீர்காழி பகுதியில் யார் என்று விசாரித்து, அன்று இரவே சுப்பராயன் வீட்டைச் சோதனையிட வந்து சேர்ந்தார்கள்.

அங்கு சுப்பராயனைக் கைது செய்து கொண்டு, அவருடைய நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த கே.எஸ்.வெங்கட்டராமன், வி.சுப்பிரமணியன், ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விசாரணை செய்ததை அடுத்து சென்னையில் தினமணி என்.ராமரத்தினம், டி.வி.கணேசன் ஆகியோரையும், கணேசனின் அண்ணன் வி.சேஷு ஐயர், கிருஷ்ணய்யர், ஜே.வெங்கடேஸ்வரன் முதலியவர்களையும் அவரவர்கள் ஊரில் இவர்களைப் பிடித்து கைது செய்து வழக்கு தொடுத்தனர். இவர்கள் மீது அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்ததாகவும், அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், உப்பனாறு பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட தேசபக்தர்கள் அனைவரும் சீர்காழி தாலுக்கா சிறையில் ஆறு மாத காலம் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் செங்கல்பட்டு விசேஷ (செஷன்ஸ்) நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் இதற்கென்று இயற்றப்பட்டதல்லவா? அந்த சட்டத்தின்படி தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்தனர். விசாரணை தொடங்கும்போதே போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி சேஷு ஐயர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கின் முடிவில் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தியும், டி.வி.கணேசனும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவரை மட்டும் பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைத்தனர். மற்ற எதிரிகளான தினமணி என்.இராமரத்தினம் அவர்களுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இரகுபதி ஐயரின் புதல்வரும், திருச்சி சிம்கோ மீட்டர் அதிபருமான தொழிலதிபர் சுப்பராயனுக்கு ஐந்து வருஷம் சிறை, வெங்கட்டராமனுக்கும், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணியனுக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்கள் பெல்லாரியில் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் விசாரணையின்போது ராமரத்தினம் பத்து மாத சிறை தண்டனையோடு விடுதலை செய்யப்பட்டார். எனினும் 1944இல் பிரிட்டிஷ் அரசு இவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து ஆறு மாதம் சிறையில் அடைத்தது. ஆறு மாதம் கழித்து விடுதலையான இவரை மறுபடி 1945இல் அரசாங்கம் கைது செய்து ராஜத்துவேஷ வழக்கு தொடர்ந்தது. உயர்நீதி மன்றத்தில் இவர்கள் செய்த மேல் முறையீட்டில் இவர் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலையானார். சுப்பராயனும், இதர தேசபக்தர்களும் 1946ஆம் ஆண்டில் டி.பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சரானபோது விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களை எந்த அவசரச் சட்டத்தின் கீழ் விசாரித்து தனி நீதிமன்றத்தில் தண்டனை அளித்தார்களோ, அந்தச் சட்டம் செல்லாது என்று உயர் நீதி மன்றத்தில் ஓர் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்த அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கை சாதாரண கிரிமினல் சட்டப்படியே விசாரிக்கலாம் என்று உயர்நீதி மன்றம் கூறிவிடவே, வேறு வழியில்லாமல் இவர்கள் மீது திரும்பவும் விசாரணை தொடங்கியது. இதில் சுப்பராயன் அவர்களும், வெங்கட்டராமன், சுப்பிரமணியன்,

வெங்கடேசன் ஆகியோர் மட்டும் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றனர், மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நடந்த காலத்தில் இதன் விசாரணை விவரங்களை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். காரணம் இதில் சம்பந்தப்பட்டவர்கள், மிக பிரபலமான பத்திரிகையாளர்கள், தொழிலதிபர் மற்றும் நன்கு படித்த இளைஞர்கள் என்பதால். வழக்கில் 5ஆவது எதிரியான டி.வி.கணேசன் சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பத்திராதிபர் ராம்நாத் கோயங்கா, தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், தினமணி உதவி ஆசிரியர் வெங்கட்டராஜுலு நாயுடு ஆகியோர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் கணேசன் விடுதலை செய்யப்பட்டாலும், பிரிட்டிஷ் அரசுக்கு இவர் மீது ஒரு கண் இருந்தது. இவர் மிக பயங்கரமான புரட்சிக்காரர் என்பது அவர்களது கணிப்பு. ஆகையால் மறுபடியும் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சுமார் எட்டு மாத காலம் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டாவது எதிரியான சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்றாலும், சிறை தண்டனை பெற்றார். நாட்டுக்காக தனது சொந்த சுக போகங்களையும் மறந்து இவர் செய்த தியாகம் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய செய்தி. இவர் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிருவனத்தைத் தொடங்கி பெரிய தொழிலதிபராகி அந்த ஊரிலேயே வாசம் செய்யலானார். திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் போன்ற பல பொது அமைப்புக்களில் இவர் பொறுப்பு வகித்து சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தார் என்பது நமக்கெல்லாம் நிறைவு தரக்கூடிய செய்தி. இவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று இவரது தந்தையார் ரகுபதி ஐயர் விரும்பினார் ஆயினும், காந்திஜியின் ஆன்ம பலம் வழிகாட்டியதால் திரு சுப்பராயன் சற்றும் அசைந்து கொடுக்காமல் தனது தண்டனை காலத்தை அனுபவித்தார் என்பது அவர் நினைவை தமிழகம் என்றென்றும் போற்றி நினைவில் நிறுத்த வேண்டும். வாழ்க சீர்காழி சதி வழக்குத் தியாகிகள், வளர்க அவர்களது புகழ்!

திருவையாறு கலவர வழக்கு

திருவையாறு கலவர வழக்கு

ஆன்மீகத் துறையில் மட்டுமல்லாது திருவையாறு அரசியலிலும் முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்ச கட்டத்தை அடைந்த 1942 ஆகஸ்ட் புரட்சி எனும் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின்போது அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு புரட்சிகளில் ஒன்று திருவையாற்றிலும், மற்றொன்று சீர்காழி உப்பனாறு பாலத்திற்கு வெடிகுண்டு வைத்த நிகழ்ச்சியாகவும் நடந்திருக்கிறது. சீர்காழி சதி வழக்கில் அன்றைய "தினமணி' இதழைச் சேர்ந்த திரு இராமரத்தினம், ஏ.என்.சிவராமன், திருச்சி சிம்கோ மீட்டர் நிறுவனத்தின் அதிபராக பின்னாளில் விளங்கியவரும் சீர்காழி பெருநிலக்கிழார் எஸ்.இரகுபதி ஐயரின் மகனுமான சுப்பராயன், கும்பகோணம் பந்துலு ஐயரின் குமாரனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன், சேஷு ஐயர் போன்றவர்கள் சம்பந்தப்பட்டு பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள். திருவையாறு நிகழ்ச்சியில் அரசர் கல்லூரி மாணவர்களாயிருந்த சோமசேகர சர்மா, இராம சதாசிவம், ஏ.ஆர்.சண்முகம், கு.ராஜவேலு, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் போன்றவர்களும் மேலும் பெரும்பாலும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவையாற்றை அரசியல் வரைபடத்தில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கும்படி நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களையும் இந்த நூலில் சிறிது பார்க்கலாம்.

1942 ஆகஸ்ட் புரட்சியின் போது நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ. எனினும் திருவையாற்றில் நடந்த "திருவையாறு கலவர வழக்கு" போராட்டத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். திருவையாறு நகரத்தில் போலீசுக்கு எதிராகக் கலகம் கல்லெறி வைபவம், போலீஸ் தடியடி, அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திருவையாறு தபால் அலுவலகம், முன்சீப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகுந்து அடித்து நொறுக்கி, தீ வைத்த சம்பவங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், இறுதியில் 44 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கைப் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

1942 ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஆங்கில அரசுக்கு காங்கிரசின் மீதும், காந்தியடிகள் மீதும் பயங்கர கோபம். பழிதீர்த்துக் கொள்ள பயங்கர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆகவே நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே அவர்களாகவே பெரும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்தி தலைவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் நடுமே இந்தியா மந்திரி அமெரியின் விஷமத்தனமான வியாக்கியானம் வேறு மக்கள் கையில் கிடைத்ததும், ஓகோ இப்படித்தான் போர் புரிய காந்தியடிகள் கட்டளையிட்டிருக்கிறார் போலும், இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் இந்தியா மந்திரி பொய் சொல்வாரா? என்ற நினைப்பில் அவர் குறிப்பிட்டமாதிரியில் போராட்டம் திசை திரும்பிவிட்டது.

அரசாங்கத் தரப்பில் கூறப்படும் வழக்கின் விவரம் இதோ:

நாடு முழுவதிலும் நடக்கும் மக்கள் எதிர்ப்பின் ஒரு பங்காக திருவையாறு நகரத்திலும் மக்கள் கொதிப்படைந்தனர். காந்திஜி கைதான 9-8-1942க்கு மறுநாள் 10-8-1942 அன்று திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவர்கள் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த அரசர் கல்லூரி என்பது மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்திரங்கள் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. பின்பு ஆங்கில அரசு இவற்றை அரசு சார்பில் சத்திரம் இலாகா மூலமாக நடத்தி வந்தது. அந்த வகையில் திருவையாற்றில் சமஸ்கிருத கல்லூரி தொடங்கப்பட்டு, முதலில் சமஸ்கிருதம் மட்டும் சொல்லித்தரப்பட்டு, பின்பு அதில் தமிழ் வகுப்பும், பிறகு இப்போது மற்ற எல்லா பாடங்களும் சொல்லித்தரப்படும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசர் கல்லூரி மாணவர்கள்தான் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்தோடு தலைவர்கள் கைதையும் எதிர்த்து ஓர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு ஆந்திரா பகுதியிலிருந்து இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிப்பதற்காக வந்து விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்பவர் முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தார்.
அவரோடு கு.ராஜவேலு, பின்னாளில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்டவர் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கீற்றுப் பந்தல் பிறகு தீப்பிடித்து எரிந்து போயிற்று. இந்த விபத்து பற்றி விசாரணை செய்ய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் டி.நடராஜ முதலியார் என்பவர் கல்லூரிக்கு வந்து விசாரணை செய்தார். இதில் இரண்டு மாணவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினார். அவர்கள் கவிஞர் சுந்தரம் மற்றும் கோவிந்தராஜன் என்பவர். இவர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகள் 27, 44 ஆக சேர்க்கப்பட்டவர்கள். இந்த கல்லூரிக்குள் நடந்த இந்த நிகழ்வு, வெளியேயும் பரவும் என்று போலீஸ் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.

12-8-1942 அன்று, அதாவது உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்த நாளுக்கு இரண்டாவது நாள் மாலை 5 மணிக்கு புஷ்யமண்டபத் துறையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவிக்கரை எனும் ஊரைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சிதம்பரம் பிள்ளை என்பவரும் தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல் நிலைப் பள்ளி என வழங்கும் திருவையாறு Central High School முன்னாள் ஆசிரியர் சங்கரய்யர் என்பவரும் பேசினார்கள். இவர்கள் பேச்சில் மக்கள் இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு எந்த வகையிலும், அவர்களது யுத்த முஸ்தீபு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கக்கூடாது என்று பேசினர்.

இந்த கூட்டத்தில் பேசியவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், தேசபக்தியைத் தூண்டியும் பேசினர். மறுநாள் காலை அதாவது 13-8-1942 அன்று திருவையாறு கடைத் தெருவில் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. விசாரித்ததில் மகாத்மா மற்றும் இதர தலைவர்களின் கைதை எதிர்த்து கடைக்காரர்கள் கடையடைப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. அப்போது காலை 7 அல்லது 8 மணி இருக்கும், சுமார் 200 அல்லது 300 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தார்கள். இவர்கள் அனைவர் கையிலும் கழி அல்லது கற்கள் வைத்திருந்தனர். இந்தக் கூட்டம் அப்படியே கடைத்தெருவுக்குள் கிழக்கிலிருந்து மேற்காக நுழைந்து வரத்தொடங்கியது. மற்றொரு கூட்டம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரத் தொடங்கியது. அப்படி அந்தக் கூட்டம் கடைத்தெருவில் வரும்போது திறந்திருந்த கடைக்காரர்களை கடையை மூடும்படியும் அப்படி இல்லாவிட்டால் அதன் விளைவை எதிர்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு வந்தனர். இந்தச் செய்தி போலீசுக்குப் போயிற்று. உடனே சப் இன்ஸ்பெக்டர் T.நடராஜ முதலியார் போலீஸ் காவலர்கள் லோகநாதன், பராங்குச நாயுடு, சிவிக் கார்டுகள் வடிவேலு, அப்துல்லா, அப்துல் அஜீஸ் குப்புசாமி ஆகியோருடன் கடைத்தெருவுக்கு வந்தார். போலீஸ் அதிகாரியும் போலீஸ் மற்றும் சிவிக் கார்டுகளும் கடைக்காரர்களைக் கடைகளைத் திறந்து வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு, தாங்கள் பாதுகாப்பளிப்பதாகவும் உறுதி கூறினர். கூட்டத்தினரை போலீசார் கலைந்து போய்விடுமாறு கேட்டுக் கொண்டனர், அவர்கள் போகாததால் எச்சரித்தனர். பிறகு மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர். ஆனால் கூட்டம் கலைந்து போகாமல் மேலும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை எடுத்து வீசினர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வளவும் ஆட்கொண்டார் சந்நிதி முன்பாகக் கடைத்தெருவின் கிழக்குப்பகுதியில் நடந்து கொண்டிருக்க, கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து மெல்ல நகர்ந்து தபால் ஆபீசுக்குச் சென்று விட்டனர். அங்கு சென்று தபால் ஆபீசின் மீது கற்களை எறிந்தும், கதவை உடைத்துத் திறந்து கொண்டு, மூங்கிலால் ஆன தடுப்பை எடுத்துச் சாலையில் வீசி, மின் பல்புகளை உடைத்து, தந்தி ஒயர்களை அறுத்தெறிந்து அறிவிப்பு பலகையையும் உடைத்துத் தெருவில் விட்டெறிந்தனர்.

சுமார் 10 மணிக்கு மக்கள் கூட்டம் மிகப் பெரிதாக ஆனது. 300 அல்லது 400 பேருக்கு மேல் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அத்தனை பேர் கைகளிலும் கழியும்க கற்களும் இருந்தன. இந்தக் கூட்டம் விரைந்து ஊரின் தென்பகுதியில் காவிரி நதியின் தென் கரையில் இருந்த முன்சீப் கோர்ட் வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கூட்டத்தினர் அனைவரும் ஒரே மாதிரியாக "மகாத்மா காந்திக்கு ஜே" என்று கோஷமிட்டுக் கொண்டு சென்றனர். கோர்ட் கட்டடத்தில் கூட்டம் கல்லெடுத்து வீசி, கூறையில் பதித்திருந்த கண்ணாடிகளையும், பெயர் பலகையையும் உடைத்தனர். சிலர் கோர்ட்டுக்கு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மேஜை நாற்காலி இவற்றைப் போட்டு உடைத்தனர். கோர்ட் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் மன்னரின் போட்டோ உடைத்தெறியப்பட்டது. பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்ட புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. இங்க் புட்டிகள் உடைத்தெறியப்பட்டன. டைப் அடிக்கும் மெஷின் உடைக்கப்பட்டு சாலையில் கொண்டு போய் போட்டு நசுக்கப்பட்டு, பின்னர் அருகிலிருந்த காவிரி ஆற்றில் வீசி எறியப்பட்டது. வாசலில் நெருப்பு அணைக்க மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த வாளிகள் நசுக்கி தூக்கி எறியப்பட்டன. கோர்ட் அறை தவிர ஆபீசின் இதர பாகங்களில் இருந்த மேஜை நாற்காலிகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து ஆபீஸ் பணம் சூறையாடப்பட்டது. அலுவலக கேட் உடைக்கப்பட்டு நடு சாலையில் போடப்பட்டு போக்குவரத்தை நிறுத்தினர். இவை அனைத்தும் சுமார் 15 நிமிஷ நேரத்துக்குள் நடந்து முடிந்தன.

கூட்டம் உடனே அங்கிருந்து அடுத்த கட்டடத்தில் இருந்த சப் ரிஜிஸ்டரார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கும் கோர்ட்டில் நடந்தது போன்ற அழிவுகளும், உடைத்தலும் நடைபெற்றன. காலை 11-15 அல்லது 11-30 மணி சுமாருக்கு போலீஸ் அங்கு வந்து சேர்ந்தது. போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து கோர்ட் மற்றும் சப் ரிஜிஸ்டிரார் அலுவலகக் கட்டடங்களில் நடைபெற்ற வன்முறையைக் கண்டு கூடியிருந்த கூட்டத்தைத் தடிகொண்டு தாக்கி விரட்டலாயினர். உடனே கும்பல் நாலா திசைகளிலும் சிதறி ஓடிவிட்டது. அந்தச் சந்தடியில் கு.ராஜவேலு, காவிரி ஆற்று வெள்ளத்தில் குதித்து, நீரின் போக்கிலேயே நீந்திக் கொண்டு போய், திருப்பழனம் எனும் கிராமத்தில் கரை ஏறினார். அங்கு அவர் ஒரு வாழைத் தோட்டத்தில் படுத்திருந்துவிட்டு, பின்னர் அவ்வூரைச் சேர்ந்தவரும், ராஜவேலுவோடு படித்தவருமான ஒரு நண்பர் வீட்டிற்குப் போய்விட்டார்.

சம்பவம் நடந்த நாளன்று மாலையிலிருந்தே நூற்றுக்கணக்கானோரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கடைத்தெருவில் நிறுத்தி, அங்கிருந்த கடைக்காரர்கள், கோர்ட், சப்ரிஜிஸ்டிரார் ஆபீசில் வேலை செய்வோர், பிராசஸ் சர்வர்கள், போஸ்ட் மாஸ்டர், முன்சீப், சப்ரிஜிஸ்டிரார் ஆகியோரைவிட்டு அடையாள அணிவகுப்பு நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பிறகு இறுதியில் 44 பேர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.

கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் போலீசாரைத் தங்கள் கடமையைச் செய்யமுடியாமல் தடுத்ததாகவும் கு.ராஜவேலு உள்ளிட்ட 19 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. முன்சீப் கோர்ட்டையும், ரிஜிஸ்டிரார் ஆபீசையும் அடித்து நொறுக்கியதாக எஸ்.டி.சுந்தரம் உள்ளிட்ட 38 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. சிலர் இந்த இரண்டு வழக்கிலும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அன்று மால சுமார் 4.00 அல்லது 4.30 மணிக்கு மாவட்ட மாஜிஸ்டிரேட், மாவட்ட காவல்துறை அதிகாரி, ரிசர்வ் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சப் இன்ஸ்பெக்டர் டி.நடராஜ முதலியார் விசாரணையை நடத்தினார். இவர் நடத்திய விரிவான விசாரணை, அடையாள அணிவகுப்பு இவற்றை நடத்தி கடைசியாக 28-9-1942 அன்று சம்பவம் நடந்து 1-1/2 மாதம் கழித்து 44 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

கடைத் தெருவில் கூட்டமாக ஆயுதங்களுடன் சென்று கடைக்காரர்களை மிரட்டி, கடைகளை மூடச்சொல்லியும், அப்படி மூடாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லி வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீசார் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் இந்திய பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்படி, ஏ.ஆர்.சண்முகம், கருப்பையா, கிருஷ்ணசாமி செட்டி, சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், ரெங்கநாதன், கு.ராஜவேலு, எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, கோவிந்தசாமி, ரெத்தினம் சேர்வை, குஞ்சு பிள்ளை, மாணிக்கம் பிள்ளை, ஏகாம்பரம் பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, பஞ்சன், ராம சதாசிவம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதுபோலவே, ராஜாராம் ராவ், நல்லதம்பி, ஏ.ஆர்.சண்முகம், சன்னாசி சேர்வை, ஊமையன் சுப்ரமணியன், எஸ்.வி.பழனி, கருப்பையன், கோவிந்தராஜுலு, சிதம்பரம், பங்காருசாமி, கிருஷ்ணசாமி செட்டி, மணி பிள்ளை, ராஜா வன்னியர், அமர்சிங் வன்னியர், சந்தானம் செட்டி, கோவிந்தராஜன் செட்டி, ஜெகன்னாத செட்டி, கோபால்சாமி செட்டி, சாமிநாத செட்டி, கருப்பன் வன்னியர், சாமிநாத பிள்ளை, காளி வன்னியர், சுந்தரேசன், குஞ்சு ஆகியவர்கள் மீது முன்சீப் கோர்ட், சப் ரிஜிஸ்டிரார் அலுவலகம் ஆகியவற்றைத் தாக்கி உபகரணங்களை உடைத்தல், ஆவணங்களை எரித்தல், ஆற்றில் போட்டு அழித்தல் போன்ற செயல்களுக்காக வழக்கு பதிவு செய்தனர்.

அரசாங்கத் தரப்பில் மொத்தம் 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் முன்சீப், போஸ்ட் மாஸ்டர், சப் ரிஜிஸ்டிரார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் அடங்குவர். இந்த வழக்கு நாம் முன்பே சொன்னவாறு 27-2-1943 அன்று அதாவது சம்பவம் நடந்து 6 மாத காலத்துக்குப் பிறகு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு 4-1/2 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 85 பேர் எதிரிகளின் தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளில் பெரும்பாலோர் குற்றவாளிகளுக்கு அலிபி, அதாவது குற்றம் நடந்த நேரத்தில் அவர்கள் அங்கு இல்லை என்றே சொன்னார்கள். அவை எதுவுமே ஏற்கப்படவில்லை.

போலீசாருக்கும், கோர்ட் சிப்பந்திகளுக்கும் கல்லூரி மாணவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னதாகக் கூறப்பட்டது. என்றாலும், வலுவான சான்றுகள் எதுவும் சொல்லி நிரூபிக்கப்படவில்லை. மேலும் மாணவர்களுக்கும் இவர்களுக்கும் விரோதம் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் வாதிடப்பட்டது. குறிப்பாக உண்ணாவிரதம் இருந்த பந்தல் எரிந்த சம்பவத்திற்காக மூன்று மாணவர்களை சப் இன்ஸ்பெக்டர் நடராஜ முதலியார் போலீஸ் நிலையத்துக்கு 17-8-1942 அன்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். என்றாலும் அவர்கள் மறுநாள் விடுவிக்கப்பட்டு விட்டனர். உண்மையில் போலீசுக்கு மாணவர்கள் மீது விரோதம் இருந்திருக்குமாயின் இவர்களைக் கைது செய்திருப்பார்களே என்றும் கூறப்பட்டது.

குற்றவாளிகளில் முதல் 11 பேர் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு விட்டனர். இப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறை, அராஜகம், அடித்து நொறுக்குதல் எல்லாம் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுவதும், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக சகஜமாக போய்விட்டதையும் நாம் அறிவோம். ஆனால், அன்று 1942இல் “க்விட் இந்தியா” தீர்மானத்தை காந்திஜி நிறைவேற்றிய காரணத்தால், இந்திய பாதுகாப்புச் சட்டம் என்ற கடுமையான சட்டத்தை அமல் படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாலும் இந்த வீரர்கள், வன்முறைதான் என்றாலும், தேசபக்தி காரணமாகச் செய்து பல ஆண்டுகள் சிறையில் தவம் செய்த வீரவரலாற்றை எங்ஙனம் மறக்க இயலும். குறுகிய நோக்கில் தற்போது நடைபெறும் வன்முறையோடு ஒப்பிடுகையில், தேசபக்தி காரணமாக நடந்த இந்தச் செயல் வீரச்செயலாகவே கருத வேண்டும்.

கு.ராஜவேலு சிறை சென்று மீண்ட பின்னர் சென்னை சென்று தமிழ். எம்.ஏ. தேர்வு பாஸ் செய்து, காமராஜ் முதல்வராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் தமிழ்த்துறையில் பணியாற்றி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து, வீர சாவர்க்கரின் எரிமலையைத் தமிழில் எழுதி, சிலப்பதிகாரத்துக்கு விளக்க உரை எழுதி, “வைகறை வான மீன்கள்” எனும் தலைப்பில், விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி நாவல் எழுதி, பாரதியின் குயில் பாட்டுக்கு விளக்கம் எழுதி, இன்றும் நம்மிடையே பெரும் புகழோடு வாழ்ந்து வருபவர். இவரைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளரும், பாரதி அன்பரும், தேசிய வாதியுமான பெ.சு.மணி அவர்கள் எழுதியிருக்கும் பகுதி பயனுள்ளதாக இருக்கும். அது, "பழந்தமிழ் இலக்கிய மரபையும், நவீன படைப்பிலக்கியத் தமிழ் மரபையும் இணைக்கும் தமிழ் பேரறிஞர்களுள் கு.ராஜவேலும் ஒருவர். இவ்வகையில் திருமணம் பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார், டாக்டர் மு.வரதராசனார் வரிசையில் புகழ் எய்தியவர் கு.ராஜவேலு. பதினான்கு வயதிலேயே சிறுகதை எழுதி நவீன படைப்பிலக்கியத் துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர். புதினங்கள் (Novels) பலவற்றைப் படைத்தவர்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், தமது சிறைவாசத்தையும் புதிய படைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். காந்தியடிகள் தலைமையில் நிகழ்ந்த வீறார்ந்த "வெள்ளையனே வெளியேறு" (Quit India Movement) எனும் ஆகஸ்ட் சுதந்திர போராட்ட இயக்கத்தை, சுய அனுபவ வெளியீடாக "ஆகஸ்ட்-1942" எனும் பெயரில் புதினமாக எழுதியவர். புகழ் பூத்த இலக்கிய இதழான "கலைமகள்" இவருடைய "காதல் தூங்குகிறது" எனும் புதினத்திற்கு முதல் பரிசு அளித்து கெளரவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில், இரண்டு ஆண்டுகளைச் சிறை வாசத்தில் கழித்த தியாகியாகவும் பாராட்டப்பெற்று வருபவர்.

காந்தியடிகள், நேருஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராசர் முதலான தேசியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பெரும் பேற்றினைப் பெற்றவர். குறிப்பாக பெருந்தலைவர் காமராசரின் 'நம்பற்குரிய வீரராக' என்றும் திகழ்ந்தவர். ஆசிரியரான பின்பும், மாணவராகவே இருந்து படித்துக் கொண்டிருப்பவர் என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் போற்றப்பட்டவர் கு.ராஜவேலு. "சிந்திப்பவர்க்கே நெஞ்சில் களி வளர" புதிய சிந்தனைகளைத் தமிழ் மணக்கும் உரைநடையில் வழங்கும் இவருடைய உரைநடை ஆற்றலை, டாக்டர் மு.வ., "கு.ராஜவேலுவின் உரைநடையே கவிதை" என்று புகழ்ந்துள்ளார். பெரியோரைப் போற்றலும், நடுவுநிலை தவறாத நேர்மைத் திறனும், கூரிய அறிவும், சீரிய பண்பும், பரந்த உள்ளமும் தெளிந்த நீரோடை போன்ற நடையும், கவிஞரின் உள்ளக் குறிப்பைத் தெள்ளத் தெளிய அறிந்து அதைத் தயங்காது உரைக்கும் அவரது பண்புகள்"

விடுதலையான கவிஞர் எஸ்.டி.சுந்தரம், சுதந்திர இந்தியாவில் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திரு கு.ராஜவேலு, எம்.ஏ., அவர்கள் அரசு உயர் அலுவலராக இருந்து இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இதில் கு.ராஜவேலுவின் சார்பில் 4 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் கல்லூரி தங்கும் விடுதியின் மேற்பார்வையாளர் ஒருவரும், கல்லூரி பேராசிரியர் ஒருவருமாவர். அவர்கள் 13-4-1942 அன்று ராஜவேலு விடுப்பு கேட்டு விண்ணப்பித்ததைச் சுட்டிக் காட்டினர். ஆனால் அரசாங்கத் தரப்பு சாட்சி ஒருவர் இவர் அன்று கூட்டத்தில் இருந்ததை உறுதிப்படுத்தினார். ஈரோட்டைச் சேர்ந்த முனிசிபல் கவுன்சிலர் முத்துச்சாமி அய்யர் என்பவர், ராஜவேலு ஈரோட்டுக்கு வந்திருந்ததாகச் சொன்னதும் ஏற்கப்படவில்லை. ராஜவேலுவின் சகோதரர் ஒருவர் பிரபலமான கேசவதாஸ் காளிதாஸ் சேட் என்பவரிடம் பணியாற்றி யிருக்கிறார்.

ராஜவேலு திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் படிக்கும் மாணவர். இவரும் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்களும் அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சாட்சியத்தின் வாயிலாக ராஜவேலு ஈரோட்டில் மாணவர்கள் கூட்டங்களை நடத்தி வந்தார் என்றும், அவர் நல்ல பேச்சாளர் என்றும், அவர் ஒரு தொழிற்சங்க செயலாளர் என்றும் கூறப்பட்டது. ராஜவேலு ஈரோட்டைச் சேர்ந்தவர், அரசர் கல்லூரியில் தமிழ் படிப்பதற்காக இங்கே இருந்தார் என்பதையும் நாம் சொல்ல வேண்டும்., இவர் சம்பவம் நடந்த அன்று கல்லூரியில் காலை 8 முதல் பகல் 1 வரை இருந்தார் என்று ஒரு சாட்சி. அன்று இவர் பிரின்சிபாலைச் சந்தித்து ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகிக்க அழைத்ததாகவும் சாட்சி இருந்தது. இவற்றை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

சோமசேகர சர்மா என்றொரு கல்லூரி மாணவர். அதே கல்லூரியைச் சேர்ந்தவர். இவரும் காலையிலிருந்து கல்லூரியில் இருந்ததாக உடன் படிக்கும் மாணவர் ஒருவர் சாட்சியம் அளித்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. ஆர்.கணேச அய்யர் எனும் பேராசிரியரும் இந்த மாணவன் கல்லூரியில் இருந்ததை சாட்சியம் அளித்தும் பலனில்லை. அதற்கு இந்த மாணவர் கலவரத்திலும் ஈடுபட்டுவிட்டு, கல்லூரியிலும் தலை காட்டியிருக்கலாம் என்பது போல தீர்ப்பளித்திருக்கிறார்.

13-8-1942 அன்று திருவையாற்றில் கடையடைப்பும், அதையொட்டிய பொது மக்கள் கலவரம், போலீஸ் தடியடியும், பிறகு தபால் அலுவலகம், மாவட்ட முன்சீஃப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் கோர்ட்டில் நீதிபதி கே.வி.கண்ணப்ப முதலியார், அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திருவையாறு மாவட்ட முன்சீப், மாவட்ட நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை, திருவையாறு சார்பதிவாளர் மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கை 12-8-1942, திருவையாறு போஸ்ட் மாஸ்டர், திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்குக் கொடுத்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இந்திய பாதுகாப்புச் சட்டப்படி பதிவானது. வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலை யானார்கள். மீதமுள்ள 40 பேருக்குத் தண்டனை.

மேற்படியான தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெல்லாரியில் உள்ள அலிப்பூர் ஜெயிலுக்கு அனுப்பி "C" வகுப்பில் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வாழ்க திருவையாற்றுத் தியாகிகள் புகழ்! (நன்றி: ஆவணங்களைச் சேகரித்துக் கொடுத்த வழக்கறிஞர் நா.பிரேமசாயி அவர்களுக்கு நன்றி.)