Followers

Wednesday, November 3, 2010

தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்

A.Y.S. பரிசுத்த நாடார்

ஒரு ஊரின் பெயரைச் சொன்னவுடன் சிலரது பெயர்கள் நினைவுக்கு வரும்; அதுபோல தஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வரும் பெயர் A.Y.S. பரிசுத்த நாடார். தேசியப் பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியில் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி A.யாகப்ப நாடார் - ஞானம்மாள் தம்பதியருக்குப் பிறந்த அருந்தவச் செல்வங்கள் மூவரில் இளைய மகன் இவர். இவரது மூத்த சகோதரர் A.Y.அருளானந்தசாமி நாடார், இவரது சகோதரி இதயமேரி அம்மாள்.

இவர் தஞ்சாவூர் நகராட்சியின் சேர்மனாக நீண்ட காலம் பதவி வகித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர். மூன்று முறை தேர்தலில் வென்று பதினைந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றிய இவர் தி.மு.க.வின் தலைவர் தஞ்சையில் போட்டியிட்டபோது மட்டும், ஒரே ஒரு முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர். நாட்டுப் பற்றோடும், மக்கள் நலனில் அக்கறை உணர்வோடும் இவர் சமூகப் பணிகளில் செயலாற்றியவர். இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் Air Raid Warden பொறுப்பில் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பாளராகப் பணியாற்றியவர் இவர். அவரது உயரிய செயல்பாடு காரணமாக அன்றைய அரசாங்கம் இவருக்கு "ராவ் சாஹேப்" விருதை வழங்கி கெளரவித்தது. தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றினார். தஞ்சை நகர காங்கிரஸ் தலைவராக 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியக்கமிட்டி உறுப்பினராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இப்படி பல நிலைகளில் இவர் கட்சிப்பணியாற்றியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் இவரது நேர்மையையும், நிர்வாகத் திறமையையும், கடுமையான உழைப்பையும், தொண்டுள்ளத்தையும் கண்டு இவரிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

சிறுபான்மை இன ரோமன் கத்தோலிக்க நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரான இவருக்கு எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், நல்லெண்ணமும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரும் இவரது மூதாதையர்களும் இந்தப் பகுதி மக்களுக்கு, அவர்கள் எந்த சாதி, இனத்தைச் சேர்ந்தவராயினும் பாகுபாடின்றி நான்கு தலைமுறைகளாகப் பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி, அவர்களை உயர்த்துவதற்காக இடைவிடாது பாடுபட்டிருக்கிறார்கள். அந்த நன்றியுணர்வை இன்றளவும் சுற்றுப்புற கிராம மக்களிடம் பார்த்து உணர முடிகிறது. தர்ம காரியங்களுக்கும், உதவிகள் தேவைப்படும் தகுதி வாய்ந்த இளைய தலைமுறையினருக்கும் இந்தக் குடும்பம் விளம்பரமின்றி செய்து வரும் பெரும் பணிகளை மக்கள் மனதார பாராட்டி மகிழ்கிறார்கள்.

A.Y.S. பரிசுத்த நாடார், தஞ்சை தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இவற்றில் கல்வி பயின்றார். விளையாட்டுகளில் ஆர்வமுடையவர் இவர்; குறிப்பாக கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டு சென்னை மாகாண கால்பந்துக் குழுவில் விளையாடியிருக்கிறார். மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். டென்னிஸ் ஆட்டத்திலும் இவர் வல்லவராக விளங்கியிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி, இவர் தனது 61ம் வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று அதற்கான உரிமம் பெற்றுத் தன்னந்தனியராக விமானம் ஓட்டி பாராட்டுதல்களைப் பெற்றவர் என்பதுதான்.

அரசியல், வணிகம், விளையாட்டு போன்ற துறைகளைத் தவிர இவர் ஈடுபட்டு பெருமை சேர்த்த வேறு பல துறைகளும் உண்டு. பாரத சாரண இயக்கத்தில் உதவி இயக்குனராக இருந்தவர்; தஞ்சை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூர் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூரில் இருக்கும் யூனியன் கிளப்பின் தலைவர்; காஸ்மாபாலிடன் கிளப்பின் தலைவர்; தோல்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இப்படிப் பலப்பல. இவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அங்கு இவரது அயராத உழைப்பாலும், நேர்மை நெறிகளாலும் சிறப்பிடம் பெற்று விளங்கியிருக்கிறார்.

1949ம் ஆண்டில் முதன்முதலாக தஞ்சாவூரில் ROTARY CLUB OF THANJAVUR என்ற பெயரில் முதல் ரோட்டரி சங்கத்தைத் தோற்றுவித்து அதன் சாசனச் செயலாளராக இருந்திருகிறார். தஞ்சாவூரில் ரோட்டரி இயக்கத்தின் முன்னோடியாக இவர் திகழ்ந்திருக்கிறார். 1946ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான புதுச்சேரி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென்மாநில தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் குழு அமைத்தபோது, சிறுபான்மையினரின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நோக்கில் Rev.Fr. Jerome D'Souza அவர்களின் தலைமையில் அமைந்த சிறுபான்மையோர் குழுவில் இவரும் அங்கம் வகித்து அரிய பணியாற்றியிருக்கிறார். இந்தப் பெருமகனார் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் திரைப்படம் அறிமுகமான காலத்திலேயே திரைப்படக் கொட்டகைகளை அமைத்து மக்கள் பார்க்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

அரசியல், சமூகத்தொண்டு, கல்விப்பணி, தொழில்துறை என்று பல்முனை வித்தகராக விளங்கிய பெருந்தகையாளர் A.Y.S.பரிசுத்த நாடார் திருமதி பிலோமினா சூசையம்மாள் தம்பதியருக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் குலவிளக்குகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் S.P.ஜெரோம், S.P.ஜேம்ஸ், S.P.ஜார்ஜ், S.P.பெஞ்சமின், S.P.பெலிக்ஸ், S.P.செல்வராஜ், S.P.அந்தோணிசாமி, S.P.அருள்தாஸ் ஆகியோராவர். இவர்களுக்கு ஒரு சகோதரி; அவர் பெயர் S.P.மேரி ஞானம் அருள்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"

என்பது வள்ளுவர் வாக்கு. “உலகத்தில் பேரறிவாளரிடம் இருக்கும் செல்வமானது, ஊருக்கு நடுவில் இருக்கும் குளத்து நீர் எல்லோருக்கும் பயன்படுவதைப் போன்றது” என்பது இதன் பொருள். அப்படிப்பட்ட பேரருளாளர்கள் புகழ் ஓங்கட்டும்!

அக்கினித் திராவக அபிஷேகம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயருக்கு அக்கினித் திராவக அபிஷேகம்.

1942 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம். மதுரையில் தேசியத் தொண்டர்கள், சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட பெண்கள் உட்பட பலர் ஊர்வலமாகச் சென்று மகாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்படி அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஊர்வலத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது. ஊர்வலத்தில் வந்த சில தொண்டர்களையும், இரண்டு பெண்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி ஊருக்கு எட்டு மைல் தள்ளி ஒரு வனாந்திரப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்று, அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு வந்து விட்டார்கள். நட்ட நடுக் காட்டில் நிர்வாண கோலத்தில் அந்த தாய்மார்களும், தொண்டர்களும் அன்று பட்ட வேதனை. அப்பப்பா, கொடுமை. இந்தக் கொடுமையைச் செய்தவன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். பெயர் விஸ்வநாதன் நாயர். இவரைத் தீச்சட்டி கோவிந்தன் என்று குறிப்பிடுவார்கள். தேசபக்தர்களுக்கு கொடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றவர்.


இந்த நிகழ்ச்சியின் காரணமாக மதுரை இளைஞர்களுக்கு இந்த விஸ்வநாதன் நாயர் மீது ஒரு கண். அவனை பழி தீர்த்துக் கொள்வதற்காக நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது. அவர்கள் அந்த கொடுங்கோல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயரை நடுவில் விட்டு அக்கினித் திராவகத்தால் அபிஷேகம் செய்து ஆனந்தப் பட்டனர். பழிக்குப் பழி. எங்கள் தாய்க்குலத்தை நிர்வாணமாக்கி அவமதித்த விஸ்வநாத நாயரே, இனி வாழ்நாள் முழுவதும் நீ செய்த அந்த கொடுமையை உன் முகத்தையும் உடம்பையும் பார்த்துப் பார்த்து நினைவு படுத்திக் கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது அக்கினித் திராவகம் வீசிய நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கை நிரூபிக்கப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை. எனவே அக்கினித் திராவகம் வீசினார்கள் என்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ராமானுஜம் ஐயங்கார், கோ.குப்புசாமி, டி.தர்மராஜ் சந்தோஷம், முதலான வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் பழிக்குப் பழி வாங்கும் செயலை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரத் திலகங்கள் K.B.ராஜகோபால், D.ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டன் என்பாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், லட்சுமணன், காயாம்பு தேவர், கோமதிநாயகம் ஆகியோருக்கு தலைக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.

மற்ற எதிரிகளான ஓ.ஆர்.சுந்தர ராவ், டி.எம்.கோபாலாச்சாரி, ஏ.என்.விசுவநாதன், ரத்தினம் பிள்ளை, சோமுப் பிள்ளை, கணபதி பிள்ளை, சங்கிலித்தேவர், நாராயணன், குருநாதன் ஆகியோர் செஷன்ஸ் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் இவர்களில் பலர் மறுபடியும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு செய்தனர். திரு ஜெயராமன் என்ற வழக்கறிஞர் எதிரிகளுக்காக வாதிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. இவர்கள் தவிர மேலும் பலர் தடையை மீறியதற்காகவும், ராஜதுவேஷப் பேச்சிற்காகவும் சிறை தண்டனை பெற்று மதுரையின் பெருமையை உலகறியச் செய்தனர். வாழ்க மதுரை தியாகசீலர்களின் புகழ்!