Followers

Tuesday, October 18, 2011

தோழர் பாலதண்டாயுதம்


பொதுவுடைமைக் கட்சி தோழர் பாலதண்டாயுதம்

தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தொண்டர் தோழர் பாலதண்டாயுதம். இவர் 1918 ஏப்ரல் 4ஆம் நாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள மாக்கினாம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தையார் காளஹஸ்தி முதலியார். பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டுத் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர் படித்தார். 1939இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இவர் இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் இவரை ஓர் புரட்சிகர மாணவனாக ஆக்கியது. நாட்டு சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ஒரு போராட்டம் சாத்வீக, அஹிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. நாடு முன்னேற, சுதந்திரம் பெற விஞ்ஞான சோஷலிசமே சிறந்தது என்று கருதிய இளைஞர் கூட்டத்தில் பாலதண்டாயுதமும் ஒருவர்.

அப்போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இவர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அதற்கு தோழர்கள் மன்றம் அதாவது காம்ரேட்ஸ் கிளப் என்ற பெயரில். இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர் சுப்பிரமணிய சர்மா என்பவர். அந்த சர்மாவின் நெருங்கிய தோழராக விளங்கியவர் பாலதண்டாயுதம்.

ஒரு முறை நிதி வசூல் நடந்த போது ஒரு மாணவன், வசூலித்த தொகையைக் கையாடல் செய்ததை அறிந்து பாலனுக்கு ஆத்திரம் வந்தது. ஆகையால் அந்த மாணவன் பாலன் மீது பகைமை கொண்டு, அவரைப் பற்றி தவறான குற்றச்சாட்டொன்றை துணைவேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியிடம் சென்று முறையிட்டார். பாலதண்டாயுதத்தின் ஆற்றல், திறமை இவற்றின் காரணமாக பாலன் மீது பற்று கொண்டவராயினும், அரசியல் கொள்கை ரீதியாக அவர் மீது குற்றச்சாட்டு என்றதும், துணை வேந்தர் நடவடிக்கை எடுத்தார்.

அதன் பயனாக பாலதண்டாயுதம் உட்பட ஐவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் வெளியேற்றப் பட்டனர். இதன் காரணமாக பாலதண்டாயுதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஏஸ்.வி.காட்டே அவர்களின் வழிகாட்டுதல்படி, மறுபடி சிதம்பரம் வந்து மாணவர்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.

அண்ணாமலை நகர் மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்றத்தில் இருந்தது. வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தினமும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று செய்து வந்தனர். பாலதண்டாயுதம் உட்பட பல மாணவர்கள் ஊரில் பல வேலைகளைச் செய்து கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டே போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் மாணவர்கள் பக்கம் ஆதரவு பெருகி மக்களின் ஆதரவும் கிடைக்கவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணிந்து வந்தது.

பேச்சு வார்த்தை நடைபெற்றது. பல்கலைக்கழக நிர்வாகம் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது ஒரே ஒரு நிபந்தனையோடு. அந்த நிபந்தனை என்னவென்றால், பாலதண்டாயுதத்தை மட்டும் மீண்டும் பல்கலைக் கழகத்தில் அனுமதிப்பதில்லை என்பதுதான் அது.

இங்கு பாலதண்டாயுதத்துக்கு ஒரு தர்ம சங்கடம். மாணவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் போராடுவதா, அல்லது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா? போராட்டம் தொடர்ந்தால் மற்ற மாணவர்களின் வாழ்க்கைப் பாழாகிவிடுமே. நிபந்தனையை ஒப்புக்கொண்டால், விளைவு தன்னை மட்டும்தானே பாதிக்கும். இதில் இரண்டாவதை ஏற்றுக் கொண்டு தன்னைத் தியாக வேள்வியில் ஆஹுதியாக்கிக் கொண்டார் பாலதண்டாயுதம்.

அறிவியல் படிப்பதற்காக உள்ளே நுழைந்த பாலதண்டாயுதம் ஒரு புரட்சிக்காரராக, கம்யூனிஸ்டாக வெளியே வந்தார். வயது முதிர்ந்த நிலையில் அல்ல, அவருடைய இருபதாம் வயதிலேயே இவர் ஒரு புடம் போட்ட பொதுவுடைமை வாதியாகத் திகழ்ந்தார். இந்த மாற்றங்களின் காரணமாக பாலதண்டாயுதத்தை வீட்டில் விரோதித்துக் கொண்டனர்.

நல்ல அழகிய தோற்றம், களையான முகம், கம்பீரம், வீரம் ததும்பும் பேச்சு இவையெல்லாம் பாலதண்டாயுதத்தை இளைஞர்கள் நேசிக்கும் தலைவராக மாற்றியது. பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் துணை வேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியையும் வைத்துக் கொண்டே, பாலதண்டாயுதம் பேசுகையில் Mr.Srinivasa Sasthri is neither right nor honourable என்று விமர்சனம் செய்த துணிச்சலை துணைவேந்தர் உட்பட அனைவருமே பாராட்டினர்.

கல்லூரி நாட்களில் இவர் காதலித்த ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை இவர் மணந்தார், இவரது குடும்பத்தாரின் எதிர்ப்புக்கிடையே. இரண்டாம் உலகப் போரின் போது போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த காரணத்துக்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பதினெட்டு மாதம் சிறைவாசம் இவருக்கு.

1940இல் சிறை சென்று 1942இல் விடுதலையான இவரை உடனே மீண்டும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர். விடுதலையாகி வெளியே வந்தபின் சென்னைக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி"யில் பணியாற்றத் தொடங்கினார்.
இவரது தேசப் பற்றை விளக்க ஒரு நிகழ்ச்சி.

திருநெல்வேலியில் ஒரு ரயில்வே தொழிலாளர் மாநாடு நடந்தது. ஆண்டு 1945 ஜூலை மாதம். அதில் ஒருவர் பேசுகையில், "கம்யூனிஸ்டுகளுக்கு தேசப் பற்றோ, மனிதாபிமானமோ கிடையாது" என்றார். பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பாலதண்டாயுதம், கூட்ட நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பேசினார்.

அவர் சொன்னார், "நான் ஒரு கம்யூனிஸ்ட். என் பெயர் பாலதண்டாயுதம். பகத் சிங்கின் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்று ஒருவர் சொன்னார். எது மனிதாபிமானம்? வயிற்றுக்குச் சோறு இல்லாத தாய் ஒருத்தி தன் ரத்தத்தையே பாலாக ஊட்டியும், அவளது குழந்தை உடல் வற்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், அந்தக் குழந்தையை வாங்கி தன் பிள்லையாக வளர்க்கிறார் ஒரு கம்யூனிஸ்ட். அவர் மனிதாபிமானி இல்லையா?" என்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க இவர் அனுப்பப் பட்டார். நெல்லை மட்டுமல்லாமல் இவர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தொழிலாளர் இயக்கங்களிலும், பொதுமக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். பதுக்கல், கள்ளச் சந்தை போன்றவர்களுக்கு எதிராக இவரது போராட்டத்தால் அவர்கள் கலக்கம் அடைந்தனர்.

1946ஆம் ஆண்டு, இந்திய சுதந்திரம் கிழக்கு அடிவானத்தைல் தோன்றும் நேரம். அப்போது காங்கிரஸ்காரர் டி.பிரகாசம் சென்னை மாகாண முதல்வரானார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடங்கியது. மதுரை சதி வழக்கு என்றொரு வழக்கில் பலர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாலதண்டாயுதம் போலீசிடம் சிக்காமல் தலைமறைவானார்.

தலைமறைவு என்றால் ஓடி ஒளிந்து கொள்வது அல்ல. போலீசுக்குத் தெரியாமல் ஊர் ஊராகச் சென்று கட்சிப் பணி, தொழிலாளர் நலப் பணி, சமூகப் பணி என்று ஊக்கத்தோடு செயலாற்றி வந்தார். தலைமறைவு வாழ்க்கை நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் போலீசார் பெரும் கூட்டமாக இவரைக் கைது செய்யக் கூடியிருக்க அந்தக் கூட்டத்தில் திடீரென்று தோன்றி பேசிவிட்டு மாயமாக மறைந்து போன சாகசமும் இவர் வாழ்க்கையில் நடந்தது.

சுதந்திரத்துக்குப் பின் 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பாலதண்டாயுதம் மறுபடியும் தலைமறைவானார். மொத்தம் ஐந்து ஆண்டுகள் நெல்லையிலும், பின்னர் சென்னையிலுமாக தலைமறைவாக இருந்தார் பல இன்னல்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு. தியாகத் தழும்பேறிய வாழ்க்கை இவருடையது.

இந்த காலகட்டத்தில் ஒரு சதிவழக்கு புனையப் பட்டது. அதில் ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, கே.பி.எஸ்.மணி, பொன்னு வேலாயுதம், அழகமுத்து, வேலுச்சாமித் தேவர், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் ஆயுள் தணடனை விதிக்கப்பட்டனர். மற்றொரு வழக்கில் பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1952 தொடங்கி 1962 வரை இவர் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தார். பத்தாண்டு கால சிறை வாழ்க்கை.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு 1962இல் ஆனந்த விகடனில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார் பாலதண்டாயுதம். அப்போது பரவலாக தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியிருந்த திராவிட இயக்கத்துக்கு எதிராக இவர் போர்க்கொடி உயர்த்தினார். அதன் பலனாக திராவிட இயக்கத்தார் இவர் மீது ஆத்திரம் கொண்டு பலவாறாக விமர்சித்தார்கள்.

1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. சீனா இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு செய்ததன் பின்னணியில் இந்தப் பிளவு ஏற்பட்டது. சீனாவுக்கு எதிராக இந்திய தேசிய ஒருமைப்பாட்டை ஆதரித்த பாலதண்டாயுதம் சீனாவை ஆதரித்த தோழர்களைக் கடுமையாக எதிர்த்தார். சீன ஆதரவாளர்கள் மார்க்சிய கம்யூனிஸ்ட் என்றும், இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க குரல் கொடுத்தோர் இந்திய கம்யூனிஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்தியாவின் உறுதிப்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம் இவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார் பாலதண்டாயுதம். மோகன் குமாரமங்கலம் காங்கிரசில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக அமைச்சராகவும் இருந்து பாடுபட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பாலதண்டாயுதம். நந்தினி சத்பதி, கணேஷ் போன்ற தோழர்களும் இவர்களோடு காங்கிரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.

1973 மே மாதம் 31ஆம் தேதி. சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்ற ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் விலை மதிக்கமுடியாத பல அரிய உயிர்கள் பலியாயின. அதில் 55 வயதே ஆகியிருந்த பாலதண்டாயுதமும் பலியானார். ஒப்புயர்வில்லாத ஒரு உயிர் பிரிந்தது, இந்த நாடு ஏழ்மையடைந்தது. வாழ்க பாலதண்டாயுதம் புகழ்!

Saturday, October 1, 2011


காந்தி ஜெயந்தி விழா
2-10-2011

1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.

மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!