Followers

Thursday, January 6, 2011

தியாகி பால்பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம் தியாகி பால்பாண்டியன்

சிதம்பரனார் மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் எனும் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.பி.பால்பாண்டியன். சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது வாழ்நாளெல்லாம் உழைத்தவர் இவர். எண்பது வயதினைக் கடந்து பெருவாழ்வு வாழ்ந்து தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர். 1935இல் தனது 18ஆவது வயதிலேயே தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ந்து 80 ஆண்டுகள் வரை நாடு, மக்கள் என்று ஊருக்கு உழைத்த தியாகப் பெருமகன் இவர்.

1942இல் நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டம் கடுமையாக நடந்தது. அந்தப் போராட்ட காலத்தில் இவரது பங்கு பெரிதும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. வெள்ளையர் ஆட்சியை வீழ்த்த இவர் அயராது உழைத்தார். அரசாங்கம் போட்ட அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்தார். தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். இதற்காக ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயிலில் மூன்று மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுக்காக இவர் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

1947ஆம் ஆண்டு முதல் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருந்த ஆதிதிராவிட மக்களின், விவசாயக் கூலிகளின் குறைகளைக் களைந்திட அயராது போராட்டத்தில் ஈடுபட்டார். 1950ஆம் ஆண்டில் தனி மனிதனாக அந்த மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். தூத்துக்குடி சப் கலெக்டர் அனுவலகத்துக்கு முன்பாக இவர் தனியொரு மனிதனாக உண்ணாவிரதம் மேற்கொண்டதை மக்கள் மறக்கமுடியாது.

ராஜாஜியின் வழிகாட்டுதலோடு மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், தென் தமிழ்நாட்டின் மற்ற பல இடங்களிலும் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் இவரும் தீவிரமாகப் பங்கு கொண்டார். நாட்டு மக்களுக்காக, குறிப்பாக விவசாயக் கூலிகளுக்காகத் தனது விளை நிலங்களையும், மனைவியின் நகைகளையும் விற்று போராடியவர் இந்த தியாக சீலர். வாழ்க தியாகி பால்பாண்டியன் புகழ்!

தியாகி முத்துவிநாயகம்

தியாகி முத்துவிநாயகம்

தியாகி முத்துவிநாயகம் 1914இல் தூத்துக்குடியில் பிறந்தார். மகாத்மா காந்தியடிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரசில் சேர்ந்த நாள் முதலாக இறுதி வரை இவர் கதர் உடைகளைத்தான் அணிந்திருந்தார். 1930இல் காங்கிரசில் சேர்ந்த இவர் 1931, 32இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்,                    
        
அன்னிய துணி எதிர்ப்பு இயக்கத்திலும் ஈடுபட்டார். அப்போது இவர் சிறுவனாக இருந்த காரணத்தால் இவர் தண்டிக்கப்படவில்லை.

1943இல் ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ்காரர்களின் மிரட்டல் காரணமாக அந்த கூட்டம் நடைபெற முடியாமல் போனது. இதனைக் கேள்விப் பட்ட முத்துவிநாயகம் தானே ஒரு தமுக்கை எடுத்துக் கொண்டு போய் அடித்துத் தெருத் தெருவாக பொதுக்கூட்டம் நடக்கும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டத்துக்கு அழைத்தார். அந்தக் கூட்டத்தில் இவரே இரண்டு மணி நேரம் பேசினார். மறுநாள் இவர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

1935இல் தூத்துக்குடி ஹார்வி மில் தொழிலாளர்களுக்காகத் தொழிலாளர் சங்கம் அமைத்தார். 1935இல் கோவில்பட்டி கடைத்தெருவில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். அதனை போலீஸ் தடை செய்தது. தடையை மீறி அந்தக் கூட்டத்தில் பேசினார் முத்துவிநாயகம். அப்படி இவர் தடை செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய குற்றத்திற்காக 2 மாதம் 15 நாட்கள் சப் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார்.

1935இல் இவருக்குத் திருமணம். இவரது மனைவியும் காங்கிரஸ்காரர். கதர்தான் அணிவார். ரஞ்சிதம் என்று பெயர். கணவன் மனைவி இருவரும் தேச சேவையில் ஒற்றுமையாக ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லை. 1937இல் இளைஞர்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து அதில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து அதில் ஷாகீத் பகத் சிங்கின் படத்தை எடுத்துச் சென்றார். போலீசார் தடை விதித்திருந்தும் தடையை மீறி இவர் அந்த ஊர்வலத்தை நடத்தினார். ஊர்வலம் பாதி தூரம் போயிருந்த போது போலீஸ் அதனை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தியது. அதில் இவர் மண்டை உடைந்து படு காயம் அடைந்தார்.

1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கோர்ட்டுக்கு முன்பு மறியல் நடத்தினார். அன்றே அவர் கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம், வேலூர், சென்னை ஆகிய ஊர் சிறைகளில் அடைபட்டுக் கிடந்து 2 வருடம் 9 மாதம் கழித்து விடுதலையானார். வாழ்க தியாகி முத்துவிநாயகம் புகழ்!

ஏ.பி.சி.வீரபாகு

விடுதலைப் போராட்ட வீரர் ஏ.பி.சி.வீரபாகு

தென் தமிழ்நாடு சுதந்திர வேள்விக்காகப் பல தொண்டர்களை, வீரர்களைக் கொடுத்திருக்கிறது. அத்தகைய வீரப் பெருமக்களில் ஏ.பி.சி.வீரபாகுவும் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரது தந்தையார் வேலாயுதம் பிள்ளை என்பார். இவர் அப்போதைய பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தன்னுடைய இருபதாவது வயதில் மியன்மாரிலுள்ள (பர்மா) யெங்கூன் (ரங்கூன்) சென்று அங்கு அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்து வந்தது, அதனால்தான் இந்திய எல்லைக்குள் அவர் வேலைக்குப் போகமுடிந்தது.

அவர் ரங்கூனில் இருந்த காலகட்டத்தில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. மகாத்மா காந்தியடிகளின் தலைமையை ஏற்று இவரும் சுதந்திரப் போரில் ஈடுபட முடிவு செய்தார். மகாத்மா 1930இல் தண்டியை நோக்கி உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரினைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மகாத்மாவுடன் அந்தப் போரில் ஈடுபட்டுச் சிறை செல்லத் தயாராகினர்.

அன்பர் ஏ.பி.சி.வீரபாகுவும் தனது அரசாங்க வேலையை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து வேலையை ராஜிநாமா செய்தார். திருநெல்வேலிக்குத் திரும்பிய வீரபாகு 1931இல் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராகி கடுமையாக உழைக்கத் தொடங்கினார். இவரது அயராத உழைப்பு, நேர்மை, வீரம் இவற்றால் இவர் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் முக்கியமான உறுப்பினராகச் செயல்படத் தொடங்கினார்.

1932இல் சாத்தான்குளத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சர்தார் வேதரத்தினம், கோவை ஐயாமுத்து, ஏ.பி.சி.வீரபாகு ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு 1930 ஏப்ரலில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது அல்லவா? அப்போது அங்கு வேதரத்தினம் பிள்ளைக்கு மிகவும் வேண்டியவரான நாவிதர் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மறுத்து வந்தார். ஒரு நாள் ஒரு போலீஸ்காரர், அவர் வெளியூர்க்காரர் வேலையை முன்னிட்டு அங்கு வந்திருந்தவர், இந்த இளைஞரிடம் முகச்சவரம் செய்து கொள்ள வந்து அமர்ந்தார். அவர் ஒரு போலீஸ்காரர் என்பது அந்த இளைஞர்க்குத் தெரியாது. அதனால் அவர் முகத்தில் சோப்பு நுரை போட்டு சவரம் செய்யத் தொடங்கினார். பாதி சவரம் ஆகியிருக்கலாம், அப்போது யாரோ ஒருவர் சவரம் செய்து கொண்டிருந்தவர் போலீஸ்காரர் என்று தெரிந்து கொண்டு, என்னப்பா போலீஸ்காரர்களுக்கு செய்யமாட்டேன் என்று சபதம் செய்தாய், இப்போது செய்து கொண்டிருக்கிறாயே என்று கேட்டு விட்டார். அவ்வளவுதான் அந்த இளைஞர் தனது சவரப் பெட்டியை மூடிவிட்டு நான் தொடர்ந்து சவரம் செய்ய முடியாது, எழுந்து போய்விடுங்கள் என்றார்.

அந்த போலீஸ்காரர் கேட்க மறுத்தார். இப்போது நீ சவரம் முழுவதையும் செய்து முடிக்கிறாயா அல்லது கோர்ட்டுக்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கித் தரட்டுமா என்றார். அப்போதும் அந்த இளைஞர் சளைக்கவில்லை. அவரைப் பிடித்துக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினார். அங்கிருந்த அதிகாரி, போடா, போய் அவருடைய சவரத்தை முடித்துவிட்டுப் போ என்றபோதும் அவர் மறுத்து விட்டார். உடனே அவரைக் கொண்டு போய் ஒரு மாஜிஸ்டிரேட் முன்பாக நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். அந்த மாஜிஸ்டிரேட் இளைஞரிடம் என்னப்பா ஏன் இப்படி செய்கிறாய். முரண்டு பிடித்தால் தண்டிக்கப்படுவாய். போய் ஒழுங்காக அவரது சவரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வீட்டுக்குப் போ என்றார். அந்த இளைஞர் சாவதானமாக தன்னுடைய சவரப் பெட்டியைக் கொண்டு போய் மேஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போய் வைத்துவிட்டு, ஐயா, அதுமட்டும் நம்மால முடியாதுங்க. நான் சபதம் எடுத்தது எடுத்ததுதாங்க. வேணும்னா நீங்க செஞ்சுவிட்டுடுங்க என்று சொன்னார். கோர்ட் கொல்லென்று சிரித்தது. முடிவு கேட்க வேண்டுமா, இளைஞருக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை.

கதை அதோடு முடிந்ததா? இல்லை இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை இந்த நிகழ்ச்சியை வர்ணித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நீதிபதி அங்கு வந்தார் தன்னுடைய காரில். கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அவர் காரை சூழ்ந்துகொண்டு கேலி செய்து அவரை விரட்டிவிட்டனர். உடனே அவர் வேதரத்தினம் பிள்ளை மீது ஒரு வழக்குப் போட்டு அவருக்கு ஆறுமாத தண்டனை வாங்கிக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை சாத்தான்குளத்திலும் போய் இவர்கள் பேச அங்கும் இவர்களுக்கு தண்டனை கிடைத்தது. அதில் சிறைக்குப் போனார் ஏ.பி.சி.வீரபாகு. இவருக்குக் கிடைத்தது இரண்டரை ஆண்டு கடுங்காவல்.

வெள்ளைக்காரர்கள் அரசாங்கத்தில் போலீசும், சிறைக்கூடமும் சித்திரவதைக் கூடமாக விளங்கி வந்தது. வீரபாகு அப்போது பெல்லாரி சிறையில் இருந்தார். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்து இரண்டு சுதந்திரப் போர் வீரர்கள் மகாவீர் சிங், தத்தா ஆகியோர் மீது போலீசுக்கு அடக்க முடியாத வெறி. அவர்களைத் தினந்தோறும் காலையில் வரிசையில் நிற்கும்படி கூறி, காவல் கைதிகளாக வந்த அவர்களைக் கிரிமினல்கள் போல நடத்தினர். இதைக் கண்டு அவர்கள் கொதித்து எதிர்த்தனர். அதனால் ஆத்திரமடைந்த இன்ஸ் எனும் சிறை அதிகாரி அவர்கள் இருவருக்கும் இரண்டு டஜன் கசையடி கொடுக்க ஆணையிட்டான். அப்படி அவர்கள் அடிபடுவதை மற்ற கைதிகள் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டான்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஏ.பி.சி.வீரபாகு அந்தச் சிறை அதிகாரியிடம் பாய்ந்து சென்று ஆட்சேபம் தெரிவித்தார். அந்த அதிகாரி இன்சிடம் இவர் போய், நீ அடிப்பது போதாதென்று எங்களையும் பார்க்கச் சொல்லுகிறாயா? என்று உறுமினார். அவன் வீரபாகுவை மிருகத் தனமாக தடிகொண்டு அடித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்தான். அத்தகைய உரமும், நேர்மையும் உடைய தேசபக்தர் வீரபாகு. வாழ்க ஏ.பி.சி.வீரபாகுவின் புகழ்!