Followers

Wednesday, April 21, 2010

திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
37. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி.
தொகுப்பு: வெ.கோபாலன்.


கொடிகாத்த குமரன் வரலாற்றுச் சுருக்கத்தைப் படிக்குமுன்:-

திருப்பூரில் போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)

மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.

"கொடிகாத்த குமரன்" என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் பிறந்தது 1904 அக்டோபர் மாதம். தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பம் குமாரசாமியினுடையது.

சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார். இப்படி ஓர் ஐந்து ஆண்டுகள் இவர் ஓட்டினார். இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள். பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார். இவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், எனவே பஜனைப் பாடல்கள், நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்று நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை. மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.

1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது. ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார். இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை போலீஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை.

நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.

அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை. வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!

பி. ராமமூர்த்தி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
34. பி. ராமமூர்த்தி.
தொகுப்பு: வெ.கோபாலன்.

1940ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை மாகாணத்தில் வெளிவந்த அத்தனை நாளிதழ்களிலும் சென்னை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் இதோ:

" 100 ரூபாய் இனாம்!! இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தேடப்பட்டுவரும் கீழ்கண்ட நபர்களைப் பற்றிய நம்பகரமான தகவல்களைத் தரும் எவருக்கும் ரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சி.ஐ.டி. இலாகாவும் 100 ரூபாய் அன்பளிப்பு தரும். (1) பி.ராமமூர்த்தி, வேப்பத்தூரைச் சேர்ந்த வி.பஞ்சாபகேச சாஸ்திரிகளின் மகன், வயது 36/40, உயரம் 5அடி 4 அங்குலம். பிரவுன் நிறம். மெல்லிய உடல். கிராப்புத் தலை, வலதுகால் ஊனம்". இவர் தவிர அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர். இவர்களுக்கு உதவி செய்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியது அந்த விளம்பர வாசகம். இதிலிருந்தே இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள் என்று தெரிகிறதல்லவா?

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில் கம்யூனிஸ்டுகள் யுத்த எதிர்ப்பில் தீவிரமாக இருந்தார்கள். பின்னர் ஹிட்லர் ரஷ்யாவின் மீது படையெடுத்தபின், இது மக்கள் யுத்தம் என்று பெயரிட்டு, ஆங்கில அரசின் யுத்த முஸ்தீபுகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அப்படி முதலில் யுத்த எதிர்ப்பில் பி.ஆர். எனப்படும் ராமமூர்த்தி தீவிரமாக இருந்ததால், இவரை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள வேப்பத்தூர் எனும் கிராமத்தில் வீட்டுக் காவலில் வைத்தார்கள். ஆனால் இவர் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தலைமறைவாகி விட்டார். இவரது அரசியல் வாழ்க்கை பெரும்பாலும், கடைசிகாலம் தவிர போராட்டக் களமாகவே இருந்தது எனலாம்.

இவர் 1908 செப்டம்பர் 20ஆம் தேதி வேப்பத்தூரில் பஞ்சாபகேச சாஸ்திரிகள், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். படிப்பில் படுசுட்டியான ராமமூர்த்தியை விடுதலை வேட்கைப் பற்றிக் கொண்டது. 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டில் அனைவரும் வீட்டிலேயே உண்ணா நோன்பு இருக்க மகாத்மா பணித்தபோது பி.ஆரும். வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார். காந்திஜியின் அழைப்பை ஏற்று இவர் கதர் மட்டுமே உடுத்தினார். 1920ஆம் ஆண்டில் ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்க்க மரத்தின் மேல் ஏறியபோது கீழே விழுந்து கால் ஊனம் ஆனது. அது கடைசிவரை இருந்தது.

இவர் வீட்டில் சொல்லாமல் திருட்டு ரயில் ஏறி அலஹாபாத் சென்றார். வழியில் பல இடங்களில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். சபர்மதி ஆசிரமம் சென்று சேர விரும்பினார். அப்போது காந்திஜி சிறையில் இருந்தார். ராஜாஜி "யங் இந்தியா" பத்திரிகை நடத்திக் கொண்டு அங்கு இருந்தார். அவர் ராமமூர்த்தியிடம் நீ இப்போது இங்கு செய்யக்கூடியது எதுவுமில்லை. ஊருக்குச் சென்று மீண்டும் படிப்பைத் தொடங்கு என்றார். வேறு வழியின்றி சென்னை திரும்பி இந்து உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். 1926இல் பள்ளி இறுதி தேறினார். பிரசிடென்சி கல்லூரி எனும் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அரசியலுக்காக கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு வெளியேற்றப்பட்டார். காசிக்குச் சென்று அங்கு நான்காண்டு காலம் படித்தார். 1930இல் பி.எஸ்.சி. முடித்ததும் அரசியல் போராட்டத்தில் சிறைப்பட்டார்.

சென்னை திரும்பி ரயில்வே பணியில் சேர்ந்தார். எனினும் சமூகப் பணிகளும், அரசியல் பணிகளும் அவரை இழுத்துக் கொண்டன. 1932இல் திருவல்லிக்கேணியில் சத்தியாக்கிரகம் செய்து ஆறுமாத சிறை தண்டனை பெற்றார். இவரது சமூகத் தொண்டின் ஒரு பகுதியாக இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகக் குழுவில் தாழ்த்தப்பட்டவர்களை உறுப்பினராக ஆக்க எடுத்துக் கொண்ட முயற்சி, வழக்கு விசித்திரமானது. தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பிரபந்தங்கள் சொல்லிக் கொடுத்து கோயிலை வலம் வரச் செய்தார். அவர்களுக்கு கோயில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அப்போது கோயில் தர்மகர்த்தா தேர்தல் வந்தது. இவர் 200 செறுப்பு தைக்கும் தொழிலாளிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு வைணவ முறைப்படி தோளில் சங்கு சக்கரம் பொறிக்கச் செய்து கோயில் உறுப்பினராக ஆக்க முயன்றார். வைணவர்கள் மறுத்துவிட்டனர். இவர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராமப்பா எனும் நீதிபதி விசாரித்தார். இவர்களுக்கு டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி ஆஜரானார். வைணவர்களுக்கு வரதாச்சாரியார் என்பவர் ஆஜரானார். நீதிபதி இவர்களைப் பார்த்துக் கேட்டார் உங்கள் குரு யார் என்று. அதற்கு அவர்கள் சாத்தாணி ஐயங்கார் என்றார்கள். இவ்வழக்கில் பி.ஆர். எடுத்துக் கொடுத்த ஒரு பாயிண்ட் 'பாஞ்சராத்ரம்' எனும் ஆகமப் பிரிவின் கீழ் எந்த ஒரு வைஷ்ணவனும் மற்றொரு வைஷ்ணவனைப் பார்த்து நீ என்ன சாதி என்று கேட்கக்கூடாது. அப்படிக் கேட்பது தன் தாய்;உடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்குச் சமம் என்பதை வக்கீல் வாதத்திற்கு எடுத்துக் கொண்டார். வழக்கில் வெற்றி. செறுப்பு தைக்கும் தொழிலாளிகள் வெற்றி பெற்றாலும், இவர்களுக்கு சொத்து இல்லை என்பதால் யாரும் தர்மகர்த்தா ஆக முடியவில்லை.

அப்போது சென்னை சதி வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. இதனைக் காண நீதிமன்றம் சென்று வந்த ராமமூர்த்திக்கு பல கம்யூனிஸ நூல்கள் படிக்கக் கிடைத்தன. 1934இல் ப.ஜீவானந்தம் ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தார். தொழிற்சங்கங்கள் உருவாகின. கொடுங்கையூரில் நடந்த ஊர்வலம் காரணமாக இவர்மீது வழக்கு, ஒரு மாதம் சிறைவாசம். 1936இல் உருவான கம்யூனிஸ்ட் கட்சியில் உருப்பினர் ஆனார். பல தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார். இவரோடு தோளோடு தோள் நின்று போராடிய மற்ற கம்யூனிஸ்ட்டுகள் கே.ரமணி, அனந்தன் நம்பியார், வி.பி.சித்தன், கே.பி.ஜானகி அம்மாள், எம்.ஆர்.வெங்கடராமன், என்.சங்கரையா, ஏ.நல்லசிவன் ஆகியோராவர்.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. கம்யூனிஸ்ட்டுகள் தலைமறைவாயினர். எனினும் யாரோ ஒரு கருங்காலி காட்டிக் கொடுக்க அனைவரும் கைதாகிவிட்டனர். 1940-41இல் இவர்கள் மீது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதிசெய்ததாக வழக்கு தொடர்ந்தது. இவர்களுக்காக பிரபலமான இந்திய வழக்கறிஞர்கள் வாதாடினர். இதில் பி.ஆர். நாண்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மோகன் குமாரமங்கலம் மூன்று ஆண்டுகள் இப்படிப் பலரும் பல தண்டனைகள் பெற்றனர். 1943இல் பம்பாயில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டிற்குச் சென்றார். தன் வாழ்நாள் முழுவதும் பற்பல வழக்குகளைச் சந்தித்து, பிரபல கம்யூனிஸ்டாக இருந்து, பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலையின் போதும் தலைமறைவாக இருந்து பல சாகசங்களைப் புரிந்து, இறுதியில் தனது 79ஆம் வயதில் 1987 டிசம்பர் 15ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பி.ஆர்.புகழ்!

பூ.கக்கன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
33. பூ.கக்கன்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

எளிமை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் பூ.கக்கன். அடக்கத்தின் மறு பெயர் பூ.கக்கன். தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒன்பது ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர். வெளி இடங்களுக்குப் போக பேருந்துப் பயணத்தையே நம்பியிருந்தவர், இப்படியெல்லாம் இவரைப்பற்றி மக்கள் சொல்லியும் எழுதியும் வந்ததை நாம் அறிவோம். அந்த எளிய மனிதரை இந்த மாதக் கட்டுரையில் பார்ப்போம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தும்பைப்பட்டி எனும் ஊரில் பூசாரி கக்கன், பெரும்பி அம்மாள் ஆகியோரின் மகனாக 1909ஆம் வருஷம் ஜூன் 18இல் பிறந்தவர் கக்கன். இந்த பூசாரி கக்கன் நகர சுத்தித் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வாழ்ந்தவர். இளமைக் கல்வி மேலூரிலும், பின்னர் வறுமை காரணமாக திருமங்கலத்தையடுத்த காகாதிராய நாடார் உயர் நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி படித்தார். பின்னர் பசுமலையில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்து முடித்தார்.

ஆசிரியர் பயிற்சி முடித்ததும் ஹரிஜனங்கள் வாழும் சேரிகளுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்தார். இவரது ஹரிஜன சேவையைக் கேள்விப்பட்டு, மதுரையில் ஹரிஜன சேவையில் முன்னிலையில் இருந்த மதுரை ஏ.வைத்தியநாத அய்யர் இவரை அழைத்துப் பாராட்டித் தம்முடன் சேர்த்துக் கொண்டார். மதுரை ஏ.வி.அவர்கள் கக்கனை மகாத்மா காந்திக்கு அறிமுகம் செய்வித்தார். அவரது ஹரிஜன சேவையை மகாத்மாவும் பாராட்டி வாழ்த்தினார். மதுரை ஏ.வி.ஐயர் வீட்டில் எடுபிடி வேலை முதல், சமையலறை வரை எல்லா நிர்வாகமும் கக்கன் செய்து வந்தார். ஏ.வி.ஐயரின் மனைவு அகிலாண்டத்தம்மாளும் தேச சேவையில் ஈடுபட்டு சிறை சென்றதால் கக்கன் நிர்வாகத்தைக் கவனித்தார். நாட்டு சேவையில் மட்டுமே இவருக்கு நாட்டம் இருந்த காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். எனினும் பெரியோர்கள் நிர்ப்பந்தப்படுத்தி 1938 செப்டம்பர் 6இல் எளிய திருமணம் செய்து கொண்டார். மனைவி சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணபார்வதி.

1937இல் நடந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி பிரதமர் (முதல்வர்) ஆனார். இந்த அரசு 15-7-1937 முதல் 29-10-1939 வரை இருந்தது. இந்த குறுகிய காலகட்டத்தைல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் ஏராளம் ஏராளம். அவ்வளவுக்கும் ராஜாஜியே காரணம் என்பதை உலகம் அறியும். அதில் முதல்படி, ஹரிஜனங்கள் ஆலயப் பிரவேசம். இதனை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தலைமை ஏற்று நடத்தியவர் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர். அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் கக்கன். இந்த ஆலயப் பிரவேசத்தில் கக்கனோடு பங்குகொண்ட மற்ற ஹரிஜன காங்கிரஸ் தலைவர்கள் சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர்.பூவலிங்கம் ஆகியோராவர். இவர்களோடு ஆலயப்பிரவேசம் செய்தவர் எஸ்.எஸ்.சண்முக நாடார் என்பவர். இந்த இரத்தக் களறி இல்லாத போரை நடத்த கக்கனும் உதவியாக இருந்தார்.

1942ஆம் ஆண்டில் நடந்த பம்பாய் காங்கிரசை அடுத்து, 'வெள்ளையனே வெளியேறு' எனும் ஆகஸ்ட் புரட்சியின்போது கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறையில் ஒன்றரையாண்டு காலம் வைக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் தேசபக்தர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், சிறைக்குள்ளே கடுமையாக அடித்தும் நொறுக்கினர். இந்தத் தாக்குதலுக்கு மிகப் பெரிய தலைவர்கள்கூட தப்பவில்லை. ராஜாஜியைக்கூட அப்போதைய ஆங்கில ஜெயிலர் அவமதித்த செய்திகள் உண்டு. கக்கனை கம்பத்தில் கட்டிவைத்து கசையடி கொடுத்தனர். தன் உடலில் விழுந்த ஒவ்வொரு அடிக்கும் கக்கன் "மகாத்மா காந்திக்கு ஜே" "காமராஜுக்கு ஜே" "ராஜாஜிக்கு ஜே" என்றுதான் கோஷமிட்டாரே தவிர அடிக்கு பணிந்து போகவில்லை. இவரது இந்த வீரச் செயல் காமராஜரையும் கவர்ந்து விட்டதால் காங்கிரசில் கக்கனுக்கு உரிய மரியாதையும் இடமும் கொடுத்தார். 1955இல் ஆவடி காங்கிரஸ் நடந்தபோது தமிழ்நாடு காங்கிரசுக்கு கக்கன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1957 வரை அந்தப் பதவியில் இருந்தார்.

இவர் 1952 தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். அடுத்து 1957இல் சென்னை சட்டசபைக்கு மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜ் தலைமையில் உருவான அமைச்சரவையில் கக்கன் அமைச்சராகி, ஹரிஜனநலம், வேளாண்மை, பொதுப்பணி, உணவு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பேற்றார். முழுமையாக ஐந்தாண்டுகள் திறம்பட நிர்வகித்தார். 1962இல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் ஆகி, காமராஜ் முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப்பணிக்குச் சென்றபோது, எம்.பக்தவத்ஸலம் முதல்வரான போதும், இவர் அமைச்சர் ஆனார். இம்முறையும் பல துறைகளிலும் இவரது திறமையும் நேர்மையும், எளிமையும் வெளிப்பட்டது. மக்கள் நலன் ஒன்றுதான் இவரது நோக்கமாக இருந்தது. சுயநலம் என்பது ஒரு ஊசிமுனை அளவுகூட இவரிடம் இருந்தது இல்லை.

ஐந்தாண்டு நாடாளுமன்ற பதவி, ஒன்பது ஆண்டுகள் அமைச்சர் பதவி இவ்வளவும் வகித்தும் கரை படியாத கரமுடையார் என்று மக்களால் போற்றப்பட்டார். காங்கிரஸ், காந்தியடிகள், காமராஜ் ஆகிய மூன்று "கா" மட்டுமே இவர் எண்ணத்தில் கடவுளாக இருந்தன. இம்மூன்றும்தான் ஹரிஜனங்களை முன்னேற்றியது என்பது இவரது அசைக்கமுடியாத கருத்து. 1975இல் காமராஜ் மறைவுக்குப் பிறகு இவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார். தன் தனி வாழ்வுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட இவர் விரும்பவில்லை.

1967இல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு 1970 வரை இவர் சென்னை ராயப்பேட்டையில் கிருஷ்ணாபுரம் எனுமிடத்தில் மாதம் ரூ.110 வாடகையில் குடியிருந்தார். 1971இல் தி.நகர், சி.ஐ.டி. நகர் அரசு குடியிருப்புக்கு மாறினார். அந்த காலகட்டத்தில் இவரது பயணம் அனைத்தும் நகரப் பேருந்துகளில்தான். நாலு முழ கதர் வேட்டி, எளிய கதர் சட்டை, ஒரு கதர் துண்டு இவைதான் இவரது உடை. 26-1-1979 குடியரசு தினத்தை யொட்டி இவருக்கு இலவச வீடு, பேருந்துப் பயணத்துக்கு இலவச பாஸ், இலவச மருத்துவச் சலுகை தவிர மாதம் ஐநூறு ரூபாய் ஓய்வூதியம் ஆகியவை அப்போதைய அரசால் வழங்கப்பட்டது. 28-12-1981ஆம் ஆண்டு இந்தத் தியாகச் சுடர் அணைந்தது. வாழ்க கக்கன் புகழ்!

எம்.பக்தவத்சலம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
எம்.பக்தவத்சலம்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

தமிழ்நாட்டில் கடைசி காங்கிரஸ் அரசாங்கத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் எம்.பக்தவத்சலம். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் பல பெரும் தலைவர்களும் தேர்தலில் தோற்றுப் போனார்கள். காங்கிரஸ் கட்சியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த காமராஜ் அவர்கள்கூட விருதுநகர் தொகுதியில் ப.சீனிவாசன் என்னும் மாணவர் தலைவரிடம் தோற்றுப் போனார். இதெல்லாம் கடந்தகால வரலாறு. மூழ்கிப்போன காங்கிரஸ் ஆட்சியின் கப்பல் கேப்டனாக இருந்த எம்.பக்தவத்சலம் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு வந்தது. பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி உணவு விடுதிகளில் இரவு உணவு பரிமாறுவதை நிறுத்தி வைத்தது; தேர்தலுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வன்முறை இயக்கமாக நடந்து முடிந்தது; அதன் பயனாக தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்தது; இவை எல்லாம் சேர்ந்து 1967 தேர்தல் தோல்வியில் முடிந்தது. தோல்விக்கு பக்தவத்சலத்தைக் குறை கூறியவர்களும் உண்டு. இவர் ஓர் நல்ல நிர்வாகி. காந்திய சிந்தனைகளில் தெளிந்த நல்ல அறிவாளி. நேர்மையானவர், காமராஜ் தனது 'காமராஜ் திட்டத்தின்' மூலம் பதவி விலகியபோது இவரைத்தான் தனக்கு அடுத்தபடி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக சிபாரிசு செய்தார். இவ்வளவு இருந்தும், இவரால் வெகுஜன உணர்வை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போயிற்று.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நசரத்பேட்டை எனும் ஊரில் நல்ல செல்வந்தர் குடும்பத்தில் வந்த அவரது தாய்மாமன்களான சி.என்.முத்துரங்க முதலியார், இ.என்.எவளப்ப முதலியார் ஆகியோரிடம் வளர்ந்தார். இவரது தந்தையார் இளம் வயதில் காலமாகி விட்டதால் மாமன்கள் பார்வையில் வளர்ந்தார். ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள பெருநிலக்கிழார் குடும்பத்தின் வாரிசு இவர். எனினும் இவரது பதவிக் காலத்தில் இவரை 'பத்து லட்சம் பக்தவத்சலம்' என்றும், 'அரிசி கடத்தினார்' என்றும் கொச்சையாக அரசியல் பேசி சிலர் இழிவு படுத்தினர். எனினும் 1967 தேர்தல் முடிவு தெரிந்ததும் இவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது இவர் சொன்ன பதில், "தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவிவிட்டது" என்பதுதான். பக்தவத்சலத்தின் மனைவி ஞானசுந்தரத்தம்மாள். மகள் பிரபல சமூக சேவகி சரோஜினி வரதப்பன். மகாத்மா காந்தியடிகளின்பால் இவருக்கிருந்த ஈடுபாடு, அன்னிபெசண்டின் அரசியல், திலகரின் போர் முழக்கம், விபின் சந்திர பாலின் சென்னை கடற்கரைப் பேச்சு இவற்றால் கவரப்பட்டு அரசியலில் குதித்தார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தொழிலை உதறிவிட்டு அரசியலில் முழுக் கவனம் செலுத்தினார். திரு வி.க. வின் தேசபக்தன் இதழ்களில் இவர் நிறைய எழுதினார். 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் காந்திஜி சென்னை வந்தபோது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த பக்தவத்சலம் இவரைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சிக்கு முன்னோடியாக இருந்த சென்னை மகாஜன சபாவின் காரியதரிசியாக இவர் 4 ஆண்டுகள் இருந்தார். மது ஓழிப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். 1927இல் நடைபெற்ற சென்னை காங்கிரசுக்கு இவர் செயலாளராக இருந்து பணிபுரிந்தார். அதே ஆண்டில் சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 1929இல் நடந்த ஊர்வலத்தில் இவர் மீது போலீஸ் தடியடி நடத்தியது. ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 ஆகஸ்ட் புரட்சி அனைத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1933-34இல் துவக்கப்பட்ட தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். 1932இல் போலீஸ் தடியடிக்கு ஆளாகி சிறை சென்றார். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் மீண்டும் கைதாகி சிறை சென்றார். சிறையில் கைதிகளுக்கு ராஜாஜி நடத்திய கம்பராமாயணம், பகவத் கீதை உரைகளைக் கேட்டு பயன் பெற்றார். 1942 பம்பாய் காங்கிரசில் கலந்து கொண்டு கைதானார். அமராவதி சிறையில் பல காலம் வாடினார்.

இப்பொழுதெல்லாம் அரசியல் கட்சிகள் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டமோ, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமோ நடத்துவதற்கு போலீஸ் அனுமதி அளிப்பதில்லை. அப்படி அளித்தாலும் தலைவர் அல்லது அமைச்சர் கண்களில் படாதபடி ஏதாவதொரு மூலையில் இடம் ஒதுக்கித் தருவார்கள். 1952 தேர்தலுக்குப் பின் ராஜாஜி தலைமையில் சென்னையில் அமைச்சரவை அமைந்தது. அதில் எதிர் கட்சியைச் சார்ந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர், பி.பக்தவத்சலு நாயுடு ஆகியோரை ஆளும் கட்சி சார்பாக ராஜாஜி அழைத்து அரவணைத்துக் கொண்டார். ராஜாஜி மந்திரி சபையில் எம்.பக்தவத்ஸலமும் ஒரு அமைச்சராக இருந்தார். இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரக்கோணம் நகருக்கு விஜயம் செய்து அங்குள்ள டவுன் ஹாலில் ஒரு கூட்டத்தில் பேச இருந்தார். இவர் வந்து மேடையில் அமர்ந்ததும், கூட்டத்திலிருந்து தி.க.வைச் சேர்ந்த எல்.சஞ்சீவி என்பவரும் அவரது தம்பிகள் ஏ.எல்.சி.கிருஷ்ணசாமி, எல்.பலராமன் ஆகியோரும் மற்றும் சிலரும் கருப்புத் துணியைக் கையில் வைத்துக் கொண்டு வீசினார்கள். பக்தவத்ஸலம் அது என்ன என்று விசாரித்தார். உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்புத் துணியைக் காட்டுகிறார்கள் என்றார்கள். உடனே பக்தவத்ஸலம் போலீசிடம் அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். அவர்களும் வரிசையில் வந்து பக்தவத்சலத்திடம் தங்கல் கருப்புத் துணிகளைக் கொடுக்க அவர் அவற்றை வாங்கி மேஜை மேல் வைத்துக்கொண்டு, உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன் என்று சொன்னார்; அவர்களும் அமைதியாகக் கலைந்து சென்றார்கள். இதுபோல இன்று யாராவது நடந்து கொள்வார்களா, நடக்கத்தான் முடியுமா என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தான் ஒரு அமைச்சர் அல்லது முதலமைச்சர் என்ற பந்தா சிறிதுகூட இவரிடம் காணமுடிவதில்லை. இவர் முதலமைச்சராக இருந்த போது இவர் எந்த ஊருக்குச் சுற்றுப்பயணம் சென்றாலும், இவருக்கு முன்பாக ஒரு போலீஸ் பைலட் காரும் அதனைத் தொடர்ந்து ஒரு அம்பாசிடர் காரின் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு பக்தவத்சலமும் செல்வார்கள். இவ்வளவு எளிமையை யாரிடமாவது பார்க்க முடியுமா. அன்றைய தினம் இருந்த அமைச்சர்கள் எல்லோருமே அப்படித்தான் எளிமையை மேற்கொண்டிருந்தனர்.

பக்தவத்சலத்துடைய துரதிஷ்டம் அவர் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. மத்திய அரசிலிருந்த ஒரு அமைச்சர் வேறு தாறுமாறான உபதேசங்களை வழங்கி காங்கிரஸ் அமைச்சரவைக்கு சிக்கலை உண்டாக்கினார். மத்திய அரசு ஹோட்டல்களை இரவு நேரத்தில் மூடும்படி அறிவுரை வழங்கியதன் காரணமாக மக்கள் தொல்லைகளுக்கு உள்ளாகினர். போதாத குறைக்கு அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக வெடித்தது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு, பொதுமக்கள் பலி, போலீஸ் அதிகாரிகள் பலி, பல அரசாங்க அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள் இவையெல்லாம் தீக்கிரை என்று பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதை கையாண்ட விதம் சரியில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டதின் விளைவு பக்தவத்சலமும், காங்கிரசும் 1967 தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்று வரை நிமிரவேயில்லை.

இவர் அமைச்சராக, முதலமைச்சராக பல்வேறு பதவிகளையும் வகித்துத் தன் நிர்வாகத் திறமையால் பெருமையோடு திகழ்ந்தவர். பதவி இழந்த பிறகும் பலகாலம் உயிரோடு இருந்து காலமானார். இவரது சிறப்பான நிர்வாகத் திறன், காங்கிரசில் இவருடைய அனுபவம், கல்வி அறிவு, நீண்டகால அரசியல் பயிற்சி, காமராஜ், ராஜாஜி ஆகியோரின் வழிகாட்டுதல்கள், முத்துரங்க முதலியாரின் நெருக்கம் ஆகியவை இருந்தும், இவருக்கு எதிராக நடைபெற்ற மோசமான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இவர் தோற்றார். எனினும் அவருடைய மேதைத்தன்மையையும், அறிவுக்கூர்மையையும் எவராலும் குறைகூற முடியாமல் இருந்தது. இவர் அடைந்த தோல்வி அவருக்கல்ல, அவர் சார்ந்த காங்கிரசுக்கு அல்ல, அன்றைக்கு மாறிவந்த அரசியல் நாகரிகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமையே காரணம். இவருடைய வீழ்ச்சி பலருடைய மனத்திலும் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர மகிழ்ச்சியை அல்ல. போர்க்களத்தில் அபிமன்யுவை வீழ்த்தியதைப் போல இவரை வீழ்த்திவிட்டாலும் இவர் புகழ் வானோங்கிதான் நின்றிருந்தது. இவர் ஆட்சி காலத்தில் இவர் காட்டி வந்த உறுதி, சட்டவழியிலான ஆட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கை அதன்பிறகு காணமுடியாமலே போய்விட்டது.

இவரை மிகவும் மோசமாகத் தாக்கியவர்கள்கூட பின்னர் இவரை 'பெரியவர்' பக்தவத்சலம் என்று அழைத்தும், இவர் மறைந்த போது அனுதாபம் தெரிவித்து, இவருக்குப் புகழாரம் சூட்டியதையும் நாடறியும். தோன்றின் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று எனும் வாக்கிற்கிணங்க புகழோடு வாழ்ந்து, புகழோடு மறைந்தவர் பெரியவர் பக்தவத்சலம். வாழ்க அவரது புகழ்!

கு. காமராஜ்சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
31. கு. காமராஜ்
தொகுப்பு: வெ. கோபாலன்.

தமிழக முதலமைச்சர், மதிய உணவு அறிமுகம் செய்து பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்து கல்வி அறிவு புகட்டியவர், காலா காந்தி என்று புகழப்பட்ட ஏழைப் பங்காளன், மக்கள் நலனே தன் நலன் என்று சுயநலம் இல்லாமல் வாழ்ந்த தியாக புருஷன், இவர்தான் காமராஜ். இன்றும்கூட அவர் பெயரால் 'காமராஜ்' ஆட்சி அமைப்போம் என்று சொல்லுகிறார்கள் என்றால், அவரது ஆட்சி பொற்காலமாக இருந்தது என்பதை அறியலாம்.

1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுப்பட்டி எனும் விருதுநகரில் மிகமிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். காமாட்சி என்று பெயர் சூட்டப்பட்ட இவரை எல்லோரும் 'ராஜா' என்று அன்போடு அழைத்ததால் இவர் காமராஜா என்றே வழங்கப்பட்டார். இவர் ஆரம்பக் கல்வி பயின்று வந்த போதே இவரது பாட்டனாரும், தந்தையார் குமாரசாமியும் மறைந்தனர். இவரது கல்வியும் ஆறாம் வகுப்போடு நின்று போனது, மகாகவி பாரதியைப் போலவே, எதிர்காலத்துக்குப் பிறரை அண்டி வாழும் நிலை ஏற்பட்டது. தாய்மாமன் கருப்பையா நாடாரின் ஜவுளிக்கடையில் வேலை செய்தார். அப்போது நாட்டில் சுதந்திர வாஞ்சை மூட்டப்பட்டு எங்கும் சுதந்திரம் என்ற பேச்சாயிருந்தது. சுதந்திர ஜுரம் இவரையும் பிடித்தது.

1919 வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது அந்த ஆண்டுதான். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரெளலட் சட்ட எதிர்ப்புப் போர் நடந்தது. காமராஜ் அவர்களின் சுதந்திர வேட்கையைப் புரிந்து கொண்டு, இவரை திருவனந்தபுரம் அனுப்பி திசை திருப்ப முயன்றனர். காமராஜ் அங்கு வெகு காலம் இருக்கவில்லை. விருதுநகர் திரும்பினார். அந்த நாட்களில் விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. காமராஜரின் முயற்சியால் அந்த கோட்டை தகர்ந்து போகத் தொடங்கியது. கிராமப் பகுதிகளுக்கெல்லாம் சென்று காமராஜ் சுதந்திரத் தீயை மூட்டினார். பெரும் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தினார். 1920இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். வீட்டில் திருமண பேச்சு எழுந்தது. காமராஜ் நாட்டைத் தான் விரும்பினாரே தவிர வீட்டையும் திருமணத்தையும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

இவரது சீரிய பணிகளின் விளைவாக இவர் மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். தீரர் சத்தியமூர்த்தியை இவர் தனது குருநாதராகக் கருதி வந்தார். இந்தியர்கள் யாரும் கையில் வாள் ஏந்தக்கூடாது என்று தடை இருந்தது. அதனை மீறி இவர் வாள் ஏந்தி ஊர்வலம் வந்தார். சென்னை மாகாண அரசு இந்தத் தடையை மலபார் நீங்கலாக மற்ற பகுதிகளில் விலக்கிக் கொண்டது. 1927இல் சென்னையில் நிறுவப்பட்டிருந்த கர்னல் நீல் என்பவனின் சிலையை, அவன் சிப்பாய்கள் போராட்டத்தில் இந்தியர்களுக்குச் செய்த கொடுமையை எண்ணி, அவன் சிலையை நீக்க வேண்டுமென காமராஜ் எண்ணினார். காந்தியடிகளும் அதற்கு ஒப்புக் கொண்டார். 1930இல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1928இல் சைமன் கமிஷன் மதுரை வந்தபோது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை காமராஜ் தலைமையில் தெரிவித்தனர். தொடர்ந்து இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனார். காமராஜ் மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். காமராஜ் மற்றும் அவர் நண்பர் முத்துச்சாமி ஆகியோர் மீது கலவரம் செய்ததாக வழக்கு நடந்தது. இதில் காமராஜ் நிரபராதி என்று விடுதலையானார்.

இவர் பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். பீஹார் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் மூலம் உதவிகளைச் செய்தார். நேரு தமிழகம் விஜயம் செய்த போதெல்லாம் காமராஜ் அவர் உடனிருந்தார். 1937இல் நடந்த தேர்தலில் விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இவர் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார். 1940இல் தீரர் சத்தியமூர்த்தி காமராஜை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார். தலைவர் தேர்தலில் கடுமையான போட்டியும், எதிர் தரப்பில் பலம் பொருந்திய தலைவர்கள் இருந்தும் காமராஜ் வெற்றி பெற்றது சாதாரண தொண்டனுக்குக் கிடைத்த வெற்றியாக கொண்டாடப்பட்டது. 1940இல் மீண்டும் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் நகர் மன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இவர் ஒரு நாள் மட்டும் அந்தப் பதவியில் இருந்து விட்டு விலகிக் கொண்டார்.

1942இல் நடந்த பம்பாய் காங்கிரஸ் தீர்மானத்தின்படி 'வெள்ளையனே வெளியேறு' என்று ஆகஸ்ட் புரட்சி எழுந்தது. பம்பாயிலிருந்து சாமர்த்தியமாக தப்பி வந்து தலைமறைவாக சில ஏற்பாடுகளைச் செய்தபின் தானே முன்வந்து கைதானார். மகாத்மா காந்தி ஒருமுறை தமிழக காங்கிரசில் இருந்த கோஷ்டிப் பூசலை 'க்ளிக்' என்று வர்ணித்தார். இதனை காமராஜ் கடுமையாக கண்டித்து காந்தியடிகளிடம் போராடினார். 1952 தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை. நேருவின் சம்மதத்தோடு ராஜாஜியை முதலமைச்சராகும்படி காமராஜ் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் ராஜிநாமா செய்தபின் 1954இல் காமராஜ் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இவர் ஆலோசனைப்படி அகில இந்திய காங்கிரசில் "காமராஜ் திட்டம்" நேருஜியால் கொண்டு வரப்பட்டு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்க பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவாகியது. காமராஜ் தனது முதல்வர் பதவியைத் துறந்து முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார்.

1956இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டை மிக விமரிசையாக நடத்திக் காட்டினார். இங்குதான் "சோஷலிச மாதிரியான சமுதாயம்" அமைத்திட தீர்மானம் நிறைவேறியது. 1963இல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஷ்வர் காங்கிரசுக்குத் தலைமை ஏற்றார். 1964இல் நேருஜி காலமானதும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கும், அவர் தாஷ்கண்டில் இறந்தபின் இந்திரா காந்தி பிரதமராக வருவதற்கும் காமராஜ் காரணமாக இருந்தார். இதனால் மொரார்ஜி தேசாய்க்கு வருத்தம் இருந்தது. 1969இல் காங்கிரஸ் பிளவுபட்டது. நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டில், அதுல்யா கோஷ், காமராஜ் ஆகியோர் இந்திரா காந்திக்கு எதிராக ஆயினர். பின்னர் 1974இல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது காமராஜ் வருந்தினார். மற்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இந்திரா காந்தி, காமராஜ் பக்கம் வரவில்லை. 1967 தேர்தலில் அவரும் தோற்று, தமிழகத்தில் காங்கிரசும் பதவி இழந்த பிறகு மன வருத்தத்தில்தான் காமராஜ் இருந்தார். மீண்டும் காங்கிரசுக்குப் புத்துயிரூட்ட முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் விதி 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி பிறந்த நாளில் இவரது ஆவியைக் கொண்டு சென்றது. காமராஜ் அமரரானார். வாழ்க காமராஜ் புகழ்!

கோவை சி.பி.சுப்பையா

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
30. கோவை சி.பி.சுப்பையா.
தொகுப்பு: வெ.கோபாலன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு பெயர் பெற்றது. அந்தக் காலத்திலேயே ராஜாஜி கோஷ்டி என்றும் சத்தியமூர்த்தி கோஷ்டி என்றும் பிரிந்திருந்தது. இந்த பிரிவு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தல் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற போது ராஜாஜி கோவை சி.பி.சுப்பையாவை நிறுத்த சத்தியமூர்த்தி காமராஜை நிறுத்தினார். இறுதியில் காமராஜ் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுப்பையாவைத் தோற்கடித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். அது முதல் தமிழ்நாட்டில் காமராஜ் சகாப்தம் தொடங்கியது. அந்த தேர்தலில் காமராஜிடம் தோற்றவர்தான் நாம் இப்போது பார்க்கப்போகும் கோவை சி.பி.சுப்பையா.

சி.பி.எஸ். என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்பட்ட சுப்பையா, 1901ஆம் ஆண்டு கோவை நகரில் பெரியண்ண முதலியார் மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் அதாவது 1920 முதல் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் சுப்பையா. மகாத்மா காந்தியடிகளிடம் அளவற்ற பக்தியும், தேசப்பற்றும் மிகுதியாக உடையவர். இவர் அந்தக் காலத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த முறையே வித்தியாசமானது. ஒரு சிறுவன் கையில் ஒரு தகர டப்பாவைக் கொடுத்து அதை ஒரு குச்சியால் தட்டிக் கொண்டே சென்று ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் நின்று இவர் பிரச்சாரம் செய்வார். பொதுக்கூட்ட விளம்பரங்களும் இதே முறையில்தான் இவர் செய்து வந்தார். இவரது இந்த செய்கையால், இவரது எதிரிகள் இவருக்குக் கொடுத்த பட்டம் "தகர டப்பா" என்பதாகும்.

இவருக்கு நல்ல பேச்சு வன்மை இருந்தது. கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார். இவரது பேச்சு தேசபக்தியைத் தூண்டுவதாக இருக்கும். மகாகவி பாரதி உட்பட பல தேசிய கவிஞர்களின் கருத்துக்களை உரத்த குரலில் இவர் பாடி உரையாற்றும்போது மக்கள் மெய்மறந்து கேட்பர். தேசபக்த விதை மக்கள் மனதில் பதியும் வண்ணம் இவரது உணர்ச்சிகரமான பேச்சு அமைந்திருக்கும். 1920 தொடங்கி 1942 வரையில் இவர் பங்கேற்காத காங்கிரஸ் போராட்ட களமே கோவை பகுதியில் கிடையாது எனும்படி எங்கும் எதிலும் முன்னணியில் இருந்தார்.

1930ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பின்னர் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கோவையிலிருந்து இவரும், இவரோடு தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம் ஆகியோர் பங்கு கொண்டு சிறை சென்றனர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கள் குடியால் ஏழை எளியவர்கள் படும் துயரங்களை எடுத்துக்கூறி 'மது அருந்த வேண்டாம்' என்று இவர் கேட்டுக் கொண்டதற்காக இவர் பட்ட அடிகளும், அவமானங்களும் எண்ணில் அடங்கா. கள்ளுக்கடை மறியல் நடந்தபோது, கள்ளுக்கடை அதிபர்கள் அடியாட்களை வைத்து இவரை நையப் புடைத்தனர். ஒரு இடத்தில் செருப்பால் அடித்து அவமானம் செய்தனர். இவ்வளவும் இந்த நாட்டுக்காக, இந்த ஏழை உழைக்கும் மக்களுக்காக என்ற உணர்வோடு அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டார். அப்படி இவர் அடிபடும்போது கூட இவர் கேட்டுக் கொண்டது என்ன தெரியுமா, என்னை அடியுங்கள், கொல்லுங்கள், ஆனால் கள் குடிப்பதை மட்டும் நிறுத்தி விடுங்கள். உங்கள் பெண்டு பிள்ளைகளை வாழ விடுங்கள் என்று கெஞ்சினார். பல இடங்களில் கள்ளுக்கடை அதிபர்கள் இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான அவமானங்களைத் தொண்டர்களுக்கு இழைத்திருக்கின்றனர். சிலர் தலையில் கள்ளை ஊற்றி அபிஷேகம் கூட செய்திருக்கின்றனர்.

இவர் அப்பட்டமான தேசிய வாதி. அப்போது சென்னை மாகாணத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சியினரை இவர் தனது சொற்பொழிவுகளில் கேலியும் நையாண்டியும் செய்வார். மக்கள் ரசிப்பார்கள். அவர்களுக்கு மகாராஜாக்களும், ஜமீந்தார்களும் பக்கபலமாக இருக்க எங்களுக்கு இரட்டை ஆடை பக்கிரியான காந்தி இருக்கிறார். கோடானுகோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பார்.

கோவையில் ஆர்.எஸ்.புரம் என்ற பகுதியின் முழுப் பெயர் தெரியுமா? அது ரத்தின சபாபதி முதலியார் புரம் என்பதாகும். இந்த சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் என்பவர் கோவை நகரசபை தலைவராகவும், அந்த நகரத்தில் ஒரு கெளரவமான தலைவராகவும் இருந்தவர். இவரைப்பற்றி கோவை அய்யாமுத்து “எனது நினைவுகள்” எனும் நூலில் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இவர் காங்கிரஸ்காரர் இல்லையென்றாலும், காங்கிரஸ் தொண்டர்களிடம் அனுதாபம் கொண்டே இருந்திருக்கிறார். இவர் 1936ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சாதாரண தொண்டரான சி.பி.சுப்பையா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகாத்மா காந்தி அறிவித்த 1942 'க்விட் இந்தியா' போராட்டத்தில் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகி யிருந்தமையால் கலந்து கொள்ள வில்லையாயினும், இவர் கலந்து கொண்டு சிறை சென்றார்.

இவர் மகாத்மா காந்தியை ஒரு தலைவராக பார்த்ததை விட அவரை கடவுளாக மதித்து அவரிடம் பக்தி கொண்டிருந்தார். 1948இல் மகாத்மா கொலையுண்ட பின் இவர் மனம் தளர்ந்து போனார். அந்த துயரம் அவரை பெரிதும் தாக்கிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர்களுக்கு இலவச நிலம் கொடுக்கப்பட்ட போதும், தியாகிகள் ஓய்வூதியம் தரப்பட்ட போதும் அவற்றை வாங்க மறுத்துவிட்டார். தான் வாங்காவிட்டால் போகட்டும் தன் சகோதரர் ஒருவரையும் இவர் வாங்கக்கூடாது என்று தடுத்து விட்டார். இப்படி சுயநலம் என்பதே என்னவென்றறியாத தியாகக்கூட்டம் இங்கு தடியடிபட்டு, சிறை தண்டனை பெற்று, காலமெல்லாம் தன் இளமையையும், முதுமையையும் நாடு நாடு என்று பாடுபட்டவர்களுக்கு, நாம் செய்யும் கைமாறு, குறைந்த பட்சம் இந்தத் தியாகிகள் பெயரையாவது ஒரு முறை சொல்லி நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுதான். அதையாவது நல்ல மனதோடு செய்வோமே. வாழ்க தியாகி சி.பி.சுப்பையா புகழ்!

தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
29. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி.
தொகுப்பு. வெ. கோபாலன்.

சுவாமி விவேகானந்தர் அறிவுரையென்னும் நூலில் வரும் ஒரு பகுதி: "மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும். இந்த வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது. செல்வம், புகழ், இன்பங்கள் எல்லாமே ஏதோ ஒரு சில நாட்கள்தான் நிலைத்திருக்கும். உலகப்பற்று நிறைந்த ஒரு புழுவைப்போல வாழ்ந்து இறப்பதைவிட, உண்மையை போதித்துக் கொண்டே, கடமையைச் செய்யும்போது உயிர் விடுவது மிக மிக மேலானது. முன்னேறிச் செல்! உனக்கு அனைத்து நலன்களும் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".

இந்த அருள் வாக்குக்கேற்ப வையத்தில் ஏழை எளிய உழைப்பாளர்களுக்காக வாழ்வாங்கு வாழ்ந்து, நாட்டிற்கு உழைத்து, நீங்கா புகழும் பெருமையும் பெற்று தனது 31ஆம் வயதிலேயே மரணத்தைத் தழுவிவிட்ட ஒரு தியாக புருஷனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம்.

ஒரு தொழிலாளர் தலைவரை, தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு இளைஞரை, பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலை வெறியோடு தாக்கி அவரை சின்னாபின்னப்படுத்தியும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட கோவை என்.ஜி.ராமசாமிதான் சுவாமி விவேகானந்தரின் வாக்குக்கேற்ப வாழ்ந்து மாண்டு போனவர்.

1912ஆம் வருஷம் மார்ச் 11ஆம் நாள் இவர் பிறந்தார். தந்தை கோவிந்தசாமி நாயுடு, தாயார் சித்தம்மாள். பெற்றோர்கள் இவரது சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர். இவரது அண்ணன் ராஜு என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 1930இல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதானபோது, இவர் தனது மாணவத்தோழர்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவர் இளம் மனம் புரட்சியை நாடினாலும், மகாத்மாவின் அஹிம்சை, சத்தியம் ஆகிய கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன. இவர் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து "உண்மை உள்ள கழகம்" என்ற பெயரில் ஒரு சங்கம் நிருவி வாரம் ஒருமுறை ஒளிவு மறைவின்றி தத்தமது கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தைக் கையாண்டனர். இவர்கள் ஒரு அச்சகத்தையும் நிருவினர்.

இவர் ஜீவனத்திற்காக சரோஜா மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் அங்குள்ள இயந்திரங்களில் பழுது நீக்குவதில் தலைசிறந்த நிபுணர் என்று பெயர் பெற்று, அந்த ஆலையில் 'மாஸ்டர்' எனும் தகுதி பெற்றார். மக்களை ஒன்று திரட்டுவதிலும், திறமையாக வழிநடத்திச் செல்வதிலும், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையிலும் காங்கிரஸ் கட்சி இவர் மீது கண் வைத்து, இவரை தேர்தலில் போட்டியிட வைத்தது. இவருக்கு எதிராக பலமான போட்டி இருந்தும், மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவில் இவரே வெற்றி பெற்று தனது 25ஆம் வயதில் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1937இல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை சட்டசபையில் இவரே வயதில் இளையவர். இவரது தொழிலாளர் சார்பு நடவடிக்கைகள், கோவை மில் அதிபர்களுக்கு வருத்தத்தை அளித்தபோதும், இவர் தொழிலாளர் நலனையே முக்கியமாக நினைத்தார். ஆனால் இவரது நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த முதலாளிகள் சிலர் இவரை ஒழித்துக் கட்ட முனைந்தனர். அந்த முயற்சியில் தொழிலாளர்களையே பயன்படுத்துவது என்றும் முடிவு செய்தனர்.
புலியகுளம் எனும் இடத்தில் ஓர் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்புகையில் சிலர் இவரைத் தாக்கி விட்டு, இறந்துவிட்டார் என்று ஓடிவிட்டனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. ஆத்திரமடைந்த தொழிலாளர்களை என்.ஜி.ராமசாமி அழைத்து "அமைதியாக இருங்கள். ஆத்திரப்படாதீர்கள். கொதிப்பும் ஆத்திரமும் காந்திய கொள்கைகளுக்கு முரணானவை" என்று எடுத்துரைத்தார். தொழிலாளர் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1937இல் கோவை ஜில்லா சோஷலிச பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் நிருவப்பட்டது. அதற்கு என்.ஜி.ராமசாமி துணைத் தலைவராக இருந்தார். சோஷலிசம் என்ற பெயரை அரசாங்கம் ஏற்காததால் அந்த சொல்லை நீக்கியே சங்கம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் என்.ஜி.ராமசாமி இந்த சங்கத்தின் தலைவராக ஆனார்.

1938இல் பீளைமேட்டில் ஒரு கூட்டம். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி பேசினார். இந்தக் கூட்டத்தில் என்.ஜி.ஆரை. தீர்த்துக் கட்ட ஒரு கூட்டம் காத்திருந்தது. அதுபோலவே கூட்டம் முடிந்து அனைவரும் திரும்பும் வேளையில் என்.ஜி.ஆரை இரும்புத் தடிகள் கொண்டு தாக்கி வீழ்த்தினார்கள். தொழிலாளர்களின் முடிசூடா மன்னனாக இவர் விளங்கியது இவரது உயிருக்கே ஆபத்தாக வந்து சேர்ந்தது. இவர் மருத்துவ மனையில் இரண்டு மாத காலம் சிகிச்சை பெற்றுத் தேறினார். பிறகு 1940இல் உடுமலைபேட்டையில் நடந்த கூட்டத்திலும் இவர் தாக்கப்பட்டார். இதில் இவரது தொடை எலும்பு முறிந்தது. முதுகிலும், தலையிலும் நல்ல அடி. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின் இவர் தேறினாலும் தனது 28ஆம் வயதிலேயே கைத்தடி கொண்டு நடக்கும் நிலைக்கு ஆளானார்.

இரண்டாம் உலகப் போர காலத்தில், பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடாது என்று சத்தியாக்கிரகம் நடந்தபோது, கோவை பகுதியில் இவர் 1940 ஆகஸ்ட் 22ஆம் தேதி சிங்காநல்லூரில் சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்டு, வேலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நோய் வாய்ப்பட்டார். 1941 நவம்பர் 6இல் தண்டனை முடிந்து விடுதலையானார். இவர் கோவையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் எதிரிகள் இவரைக் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். தெய்வாதீனமாக உயிர் தப்பினார். பிறகு இவரது தலைமையில் இருந்த தொழிற் சங்கம் பல காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்தி சுதந்திரப் போராட்ட வேகத்தை அதிகப்படுத்தினார். இந்தச் சூழ்நிலையில் கோவை முருகன் மில்லில் ஒரு ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் வேலை நீக்கம் செய்தனர். நியாயம் கேட்கச் சென்றபோது என்.ஜி.ஆரும், கே.பி.திருவேங்கடம் எனும் தலைவரும் தாக்கப்பட்டனர். இதன் பயனாகப் பெரும் கலவரம் மூண்டது. ஒரு தொழிலாளி இறந்தார்.

இதற்கிடையே 1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் கூடிய காங்கிரசில் மகாத்மா "வெள்ளையனே வெளியேறு" எனும் கோஷத்தைக் கொடுத்தார். எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கோவையில் 1942 ஆகஸ்ட் 13ஆம் தேதி என்.ஜி.ஆர் அவர்கள் கைதானார். வேலூர் சிறையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே, யாராவது கோவையிலிருந்து வந்து அவரை அழைத்துப் போகுமாறு சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அப்படி யாரும் போய் அழைத்து வருவதற்கு முன்பே இவரை ரயிலில் ஏற்றித் தனியாக அனுப்பிவிட்டது. கோவையில் மயக்க நிலையில் வந்திறங்கிய இவரை டாக்டர் சிவானந்தம் என்பவர் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு மூன்று மாதங்களே உயிரோடு இருந்த என்.ஜி.ராமசாமி தனது 31ஆம் வயதில், 1943 பிப்ரவரி 12ஆம் நாள் கோவையில் காலமானார். அன்று கோவை நகரமே அழுதது. மில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் தம் குடும்பத்தலைவர் இறந்ததைப் போல தவித்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அழுதனர். நாட்டிற்குழைத்த ஒரு தியாகச் சுடர் மறைந்தது, அதுவும் மிக இளம் வயதில், கொடுமதியாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகி! நாட்டு விடுதலையைக் காணாமலே அந்த இளம் சிங்கம் மறைந்தது. வாழ்க தியாகசீலர் என்.ஜி.ராமசாமி புகழ்!.

கோவை சுப்ரமணியம் என்கிற "சுப்ரி"

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
28. கோவை சுப்ரமணியம் என்கிற "சுப்ரி".
தொகுப்பு: வெ.கோபாலன்.

கொங்கு நாடு தந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வரிசையில் கோவை சுப்ரமணியம் என்கிற "சுப்ரி" அவர்களுக்கு ஓர் முக்கிய இடம் உண்டு. நம் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சர்வபரித்தியாகம் செய்தவர்களில் பலருடையெ பெயர் இன்று எவருக்கும் தெரியாமல் போனது நமது பாரத தேவியின் துரதிருஷ்டமே. தமிழ்நாட்டில் எதிர்மறை நாயகர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கதாநாயகர்களுக்குத் தரப்படுவதில்லை. ஒரு கோயில் பட்டாச்சாரியார் கோயில் கருவறையில் படுகொலைச் செய்யப்படுகிறார். கொலைகாரர்கள் பெருமாளின் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட அந்த பட்டாச்சாரியாரின் குடும்பம் எப்படியெல்லாம் வருந்துகிறது என்பது நமது ஊடகங்களின் கண்களுக்குத் தென்படவில்லை. ஆனால், அந்த கொலைகாரன் சிறையில் எப்படி வருந்துகிறான் என்று எழுதியது தமிழ்நாட்டின் மிகப்பெரிய வாரமிருமுறை தமிழ்ப் பத்திரிகை. நமது பத்திரிகை தர்மத்தை நினைத்து வருத்தப்படுவதா, நமக்காக உயிர்த்தியாகம் செய்த நாட்டு விடுதலைப் போராட்டத் தியாகிகளை அறவே மறந்துபோன தமிழ்ச் சமுதாயத்தை நினைத்து வருத்தப்படுவதா? வேண்டாம் இந்தக் கவலையைத் தூர எறிந்துவிட்டு "சுப்ரி" அவர்களின் வரலாற்றைப் பார்ப்போம்.

கோயம்புத்தூரில் அந்த காலத்தில் சலிவன் தெரு என்று ஒரு தெரு உண்டு. கோவை வேணுகோபால சுவாமி தெப்பக்குள வீதிதான் அது. அதற்கு "சுப்ரி" தெரு என்றொரு பெயர் உண்டு. கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் தோன்றி வளர காரணமாக இருந்தவர்களுள் சுப்ரி அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தோற்றத்தில் மிகவும் மெலிந்தவர், மன உறுதியில் எஃகினைக் காட்டிலும் உறுதி படைத்தவர். இவர் அப்போதைய கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவுக்குச் செயலாளராக இருந்து ஏறக்குறைய எல்லா அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு களுக்கெல்லாம் சென்று வந்தவர். கோவை மாவட்டத்தில் கட்சிக்கு கிராமம் தோறும் கிளைகளைத் தோற்றுவித்தவர். 1921இல் நாக்பூரில் நடந்த கொடிப் போராட்டத்துக்கு இவர் சுமார் 12 தொண்டர்களோடு சென்று கலந்து கொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவருடைய தந்தையார் பெயர் கிருஷ்ண ஐயர்.

1924ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் பயங்கர வரட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் மடிந்தனர். அரசாங்கம் இதை அதிகம் பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியது. ஆனால் சுப்ரி அவர்கள் அவிநாசிலிங்கம் செட்டியார், சி.பி.சுப்பையா ஆகியோருடன் சேர்ந்து பல நிவாரண உதவிகளைச் செய்து மக்கள் மாண்டுபோகாமல் காத்தனர். 1925இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித்தது. 1929இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் பூரண சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதியை நாட்டின் விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினை கோவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுப்ரி அவர்களும் மற்ற தேசபக்தர்களும் மக்களுக்குத் தெரிவித்தனர்.

1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தில் சுப்ரி ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவிநாசிலிங்கம் செட்டியார், பாலாஜி போன்றவர்களும் தண்டிக்கப்பட்டனர். 1932இல் அந்நிய ஆங்கில அரசு இந்திய காங்கிரஸ் இயக்கத்தை சட்ட விரோதமானது என்று தடை

செய்தபோது தலைவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகினர். அப்போது அந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக சுப்ரி, அவரது இளம் மனைவி கமலம், தாயார் பாகீரதி
அம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவருக்கும் ஆறுமாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் திருப்பூரில் போலீசாரின் தடியடியில் குமாரசாமி எனும் தொண்டர் (திருப்பூர் குமரன்) காலமானார். 1933இல் மறுபடியும் அந்நிய துணிக்கடை மறியலில் ஈடுபட்டு இவரது மனைவி கமலம், மற்ற தொண்டர்களான அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி, நாராயண சாஸ்திரி ஆகியோர் நான்கு மாத சிறை தண்டனை பெற்றனர்.

அதே ஆண்டில் ராஜாஜி தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக சுப்ரி, திருமதி சுப்ரி, கோவிந்தம்மாள், அய்யாமுத்து, உடுமலை சாவித்திரி அம்மாள், பி.எஸ்.சுந்தரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் கைதாகி ஆறுமாத தண்டனை பெற்றனர். சுப்ரி அகில இந்திய தலைவர்கள் பலரை அழைத்து வந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜியுடன் இவர் வேலூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார்.

சுப்ரி அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உண்டு. காந்தியடிகளின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்ததனால், இவரை "மை லெளட் ஸ்பீக்கர்" என்றே காந்தி அன்போடு அழைத்தார். 1934இல் நடந்த தேர்தலில் அவிநாசிலிங்கம் செட்டியாரின் வெற்றிக்காக இவர் மிகவும் பாடுபட்டார். 1937இல் நடந்த சட்ட சபை தேர்தலிலும் கோவை நீலகிரி மாவட்டங்களில் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தார். 1941இல் ஜாலியன்வாலாபாக் தினமாக அனுசரித்து கூட்டம் நடத்திய காரணத்துக்காக சிறை தண்டனை பெற்று பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டார். 1942இல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் இவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பிறகு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தபின் பொது விடுதலையின்போது விடுதலையாகி வெளியே வந்தார்.

இவர் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகர சபை தலைவர்; 1947-52 காலகட்டத்தில் சென்னை சட்டசபை உறுப்பினர் இப்படி பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் முருகப் பெருமானைக் குறித்து ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதற்கு "முருக கானம்" என்று பெயரிட்டார். 90 வயதையும் தாண்டி இளமையோடு வாழ்ந்த மறக்கமுடியாத விடுதலை வீரர் "சுப்ரி". வாழ்க அவரது புகழ்!