Followers

Wednesday, April 21, 2010

கு. காமராஜ்



சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
31. கு. காமராஜ்
தொகுப்பு: வெ. கோபாலன்.

தமிழக முதலமைச்சர், மதிய உணவு அறிமுகம் செய்து பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்து கல்வி அறிவு புகட்டியவர், காலா காந்தி என்று புகழப்பட்ட ஏழைப் பங்காளன், மக்கள் நலனே தன் நலன் என்று சுயநலம் இல்லாமல் வாழ்ந்த தியாக புருஷன், இவர்தான் காமராஜ். இன்றும்கூட அவர் பெயரால் 'காமராஜ்' ஆட்சி அமைப்போம் என்று சொல்லுகிறார்கள் என்றால், அவரது ஆட்சி பொற்காலமாக இருந்தது என்பதை அறியலாம்.

1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுப்பட்டி எனும் விருதுநகரில் மிகமிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். காமாட்சி என்று பெயர் சூட்டப்பட்ட இவரை எல்லோரும் 'ராஜா' என்று அன்போடு அழைத்ததால் இவர் காமராஜா என்றே வழங்கப்பட்டார். இவர் ஆரம்பக் கல்வி பயின்று வந்த போதே இவரது பாட்டனாரும், தந்தையார் குமாரசாமியும் மறைந்தனர். இவரது கல்வியும் ஆறாம் வகுப்போடு நின்று போனது, மகாகவி பாரதியைப் போலவே, எதிர்காலத்துக்குப் பிறரை அண்டி வாழும் நிலை ஏற்பட்டது. தாய்மாமன் கருப்பையா நாடாரின் ஜவுளிக்கடையில் வேலை செய்தார். அப்போது நாட்டில் சுதந்திர வாஞ்சை மூட்டப்பட்டு எங்கும் சுதந்திரம் என்ற பேச்சாயிருந்தது. சுதந்திர ஜுரம் இவரையும் பிடித்தது.

1919 வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது அந்த ஆண்டுதான். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரெளலட் சட்ட எதிர்ப்புப் போர் நடந்தது. காமராஜ் அவர்களின் சுதந்திர வேட்கையைப் புரிந்து கொண்டு, இவரை திருவனந்தபுரம் அனுப்பி திசை திருப்ப முயன்றனர். காமராஜ் அங்கு வெகு காலம் இருக்கவில்லை. விருதுநகர் திரும்பினார். அந்த நாட்களில் விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. காமராஜரின் முயற்சியால் அந்த கோட்டை தகர்ந்து போகத் தொடங்கியது. கிராமப் பகுதிகளுக்கெல்லாம் சென்று காமராஜ் சுதந்திரத் தீயை மூட்டினார். பெரும் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தினார். 1920இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். வீட்டில் திருமண பேச்சு எழுந்தது. காமராஜ் நாட்டைத் தான் விரும்பினாரே தவிர வீட்டையும் திருமணத்தையும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

இவரது சீரிய பணிகளின் விளைவாக இவர் மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். தீரர் சத்தியமூர்த்தியை இவர் தனது குருநாதராகக் கருதி வந்தார். இந்தியர்கள் யாரும் கையில் வாள் ஏந்தக்கூடாது என்று தடை இருந்தது. அதனை மீறி இவர் வாள் ஏந்தி ஊர்வலம் வந்தார். சென்னை மாகாண அரசு இந்தத் தடையை மலபார் நீங்கலாக மற்ற பகுதிகளில் விலக்கிக் கொண்டது. 1927இல் சென்னையில் நிறுவப்பட்டிருந்த கர்னல் நீல் என்பவனின் சிலையை, அவன் சிப்பாய்கள் போராட்டத்தில் இந்தியர்களுக்குச் செய்த கொடுமையை எண்ணி, அவன் சிலையை நீக்க வேண்டுமென காமராஜ் எண்ணினார். காந்தியடிகளும் அதற்கு ஒப்புக் கொண்டார். 1930இல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1928இல் சைமன் கமிஷன் மதுரை வந்தபோது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை காமராஜ் தலைமையில் தெரிவித்தனர். தொடர்ந்து இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனார். காமராஜ் மீண்டும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். காமராஜ் மற்றும் அவர் நண்பர் முத்துச்சாமி ஆகியோர் மீது கலவரம் செய்ததாக வழக்கு நடந்தது. இதில் காமராஜ் நிரபராதி என்று விடுதலையானார்.

இவர் பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். பீஹார் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் மூலம் உதவிகளைச் செய்தார். நேரு தமிழகம் விஜயம் செய்த போதெல்லாம் காமராஜ் அவர் உடனிருந்தார். 1937இல் நடந்த தேர்தலில் விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இவர் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார். 1940இல் தீரர் சத்தியமூர்த்தி காமராஜை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார். தலைவர் தேர்தலில் கடுமையான போட்டியும், எதிர் தரப்பில் பலம் பொருந்திய தலைவர்கள் இருந்தும் காமராஜ் வெற்றி பெற்றது சாதாரண தொண்டனுக்குக் கிடைத்த வெற்றியாக கொண்டாடப்பட்டது. 1940இல் மீண்டும் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் நகர் மன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இவர் ஒரு நாள் மட்டும் அந்தப் பதவியில் இருந்து விட்டு விலகிக் கொண்டார்.

1942இல் நடந்த பம்பாய் காங்கிரஸ் தீர்மானத்தின்படி 'வெள்ளையனே வெளியேறு' என்று ஆகஸ்ட் புரட்சி எழுந்தது. பம்பாயிலிருந்து சாமர்த்தியமாக தப்பி வந்து தலைமறைவாக சில ஏற்பாடுகளைச் செய்தபின் தானே முன்வந்து கைதானார். மகாத்மா காந்தி ஒருமுறை தமிழக காங்கிரசில் இருந்த கோஷ்டிப் பூசலை 'க்ளிக்' என்று வர்ணித்தார். இதனை காமராஜ் கடுமையாக கண்டித்து காந்தியடிகளிடம் போராடினார். 1952 தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை. நேருவின் சம்மதத்தோடு ராஜாஜியை முதலமைச்சராகும்படி காமராஜ் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் ராஜிநாமா செய்தபின் 1954இல் காமராஜ் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இவர் ஆலோசனைப்படி அகில இந்திய காங்கிரசில் "காமராஜ் திட்டம்" நேருஜியால் கொண்டு வரப்பட்டு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்க பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவாகியது. காமராஜ் தனது முதல்வர் பதவியைத் துறந்து முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார்.

1956இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டை மிக விமரிசையாக நடத்திக் காட்டினார். இங்குதான் "சோஷலிச மாதிரியான சமுதாயம்" அமைத்திட தீர்மானம் நிறைவேறியது. 1963இல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புவனேஷ்வர் காங்கிரசுக்குத் தலைமை ஏற்றார். 1964இல் நேருஜி காலமானதும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கும், அவர் தாஷ்கண்டில் இறந்தபின் இந்திரா காந்தி பிரதமராக வருவதற்கும் காமராஜ் காரணமாக இருந்தார். இதனால் மொரார்ஜி தேசாய்க்கு வருத்தம் இருந்தது. 1969இல் காங்கிரஸ் பிளவுபட்டது. நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டில், அதுல்யா கோஷ், காமராஜ் ஆகியோர் இந்திரா காந்திக்கு எதிராக ஆயினர். பின்னர் 1974இல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது காமராஜ் வருந்தினார். மற்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இந்திரா காந்தி, காமராஜ் பக்கம் வரவில்லை. 1967 தேர்தலில் அவரும் தோற்று, தமிழகத்தில் காங்கிரசும் பதவி இழந்த பிறகு மன வருத்தத்தில்தான் காமராஜ் இருந்தார். மீண்டும் காங்கிரசுக்குப் புத்துயிரூட்ட முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் விதி 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி பிறந்த நாளில் இவரது ஆவியைக் கொண்டு சென்றது. காமராஜ் அமரரானார். வாழ்க காமராஜ் புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here