Followers

Wednesday, April 21, 2010

தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
29. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி.
தொகுப்பு. வெ. கோபாலன்.

சுவாமி விவேகானந்தர் அறிவுரையென்னும் நூலில் வரும் ஒரு பகுதி: "மரணம் வரும் வரையிலும் வேலை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும். இந்த வாழ்க்கை வருவதும் போவதுமாக இருக்கிறது. செல்வம், புகழ், இன்பங்கள் எல்லாமே ஏதோ ஒரு சில நாட்கள்தான் நிலைத்திருக்கும். உலகப்பற்று நிறைந்த ஒரு புழுவைப்போல வாழ்ந்து இறப்பதைவிட, உண்மையை போதித்துக் கொண்டே, கடமையைச் செய்யும்போது உயிர் விடுவது மிக மிக மேலானது. முன்னேறிச் செல்! உனக்கு அனைத்து நலன்களும் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".

இந்த அருள் வாக்குக்கேற்ப வையத்தில் ஏழை எளிய உழைப்பாளர்களுக்காக வாழ்வாங்கு வாழ்ந்து, நாட்டிற்கு உழைத்து, நீங்கா புகழும் பெருமையும் பெற்று தனது 31ஆம் வயதிலேயே மரணத்தைத் தழுவிவிட்ட ஒரு தியாக புருஷனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம்.

ஒரு தொழிலாளர் தலைவரை, தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு இளைஞரை, பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலை வெறியோடு தாக்கி அவரை சின்னாபின்னப்படுத்தியும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட கோவை என்.ஜி.ராமசாமிதான் சுவாமி விவேகானந்தரின் வாக்குக்கேற்ப வாழ்ந்து மாண்டு போனவர்.

1912ஆம் வருஷம் மார்ச் 11ஆம் நாள் இவர் பிறந்தார். தந்தை கோவிந்தசாமி நாயுடு, தாயார் சித்தம்மாள். பெற்றோர்கள் இவரது சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர். இவரது அண்ணன் ராஜு என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 1930இல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதானபோது, இவர் தனது மாணவத்தோழர்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவர் இளம் மனம் புரட்சியை நாடினாலும், மகாத்மாவின் அஹிம்சை, சத்தியம் ஆகிய கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன. இவர் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து "உண்மை உள்ள கழகம்" என்ற பெயரில் ஒரு சங்கம் நிருவி வாரம் ஒருமுறை ஒளிவு மறைவின்றி தத்தமது கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தைக் கையாண்டனர். இவர்கள் ஒரு அச்சகத்தையும் நிருவினர்.

இவர் ஜீவனத்திற்காக சரோஜா மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் அங்குள்ள இயந்திரங்களில் பழுது நீக்குவதில் தலைசிறந்த நிபுணர் என்று பெயர் பெற்று, அந்த ஆலையில் 'மாஸ்டர்' எனும் தகுதி பெற்றார். மக்களை ஒன்று திரட்டுவதிலும், திறமையாக வழிநடத்திச் செல்வதிலும், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையிலும் காங்கிரஸ் கட்சி இவர் மீது கண் வைத்து, இவரை தேர்தலில் போட்டியிட வைத்தது. இவருக்கு எதிராக பலமான போட்டி இருந்தும், மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவில் இவரே வெற்றி பெற்று தனது 25ஆம் வயதில் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1937இல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை சட்டசபையில் இவரே வயதில் இளையவர். இவரது தொழிலாளர் சார்பு நடவடிக்கைகள், கோவை மில் அதிபர்களுக்கு வருத்தத்தை அளித்தபோதும், இவர் தொழிலாளர் நலனையே முக்கியமாக நினைத்தார். ஆனால் இவரது நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த முதலாளிகள் சிலர் இவரை ஒழித்துக் கட்ட முனைந்தனர். அந்த முயற்சியில் தொழிலாளர்களையே பயன்படுத்துவது என்றும் முடிவு செய்தனர்.
புலியகுளம் எனும் இடத்தில் ஓர் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்புகையில் சிலர் இவரைத் தாக்கி விட்டு, இறந்துவிட்டார் என்று ஓடிவிட்டனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. ஆத்திரமடைந்த தொழிலாளர்களை என்.ஜி.ராமசாமி அழைத்து "அமைதியாக இருங்கள். ஆத்திரப்படாதீர்கள். கொதிப்பும் ஆத்திரமும் காந்திய கொள்கைகளுக்கு முரணானவை" என்று எடுத்துரைத்தார். தொழிலாளர் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1937இல் கோவை ஜில்லா சோஷலிச பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் நிருவப்பட்டது. அதற்கு என்.ஜி.ராமசாமி துணைத் தலைவராக இருந்தார். சோஷலிசம் என்ற பெயரை அரசாங்கம் ஏற்காததால் அந்த சொல்லை நீக்கியே சங்கம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் என்.ஜி.ராமசாமி இந்த சங்கத்தின் தலைவராக ஆனார்.

1938இல் பீளைமேட்டில் ஒரு கூட்டம். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி பேசினார். இந்தக் கூட்டத்தில் என்.ஜி.ஆரை. தீர்த்துக் கட்ட ஒரு கூட்டம் காத்திருந்தது. அதுபோலவே கூட்டம் முடிந்து அனைவரும் திரும்பும் வேளையில் என்.ஜி.ஆரை இரும்புத் தடிகள் கொண்டு தாக்கி வீழ்த்தினார்கள். தொழிலாளர்களின் முடிசூடா மன்னனாக இவர் விளங்கியது இவரது உயிருக்கே ஆபத்தாக வந்து சேர்ந்தது. இவர் மருத்துவ மனையில் இரண்டு மாத காலம் சிகிச்சை பெற்றுத் தேறினார். பிறகு 1940இல் உடுமலைபேட்டையில் நடந்த கூட்டத்திலும் இவர் தாக்கப்பட்டார். இதில் இவரது தொடை எலும்பு முறிந்தது. முதுகிலும், தலையிலும் நல்ல அடி. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின் இவர் தேறினாலும் தனது 28ஆம் வயதிலேயே கைத்தடி கொண்டு நடக்கும் நிலைக்கு ஆளானார்.

இரண்டாம் உலகப் போர காலத்தில், பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடாது என்று சத்தியாக்கிரகம் நடந்தபோது, கோவை பகுதியில் இவர் 1940 ஆகஸ்ட் 22ஆம் தேதி சிங்காநல்லூரில் சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்டு, வேலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நோய் வாய்ப்பட்டார். 1941 நவம்பர் 6இல் தண்டனை முடிந்து விடுதலையானார். இவர் கோவையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் எதிரிகள் இவரைக் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். தெய்வாதீனமாக உயிர் தப்பினார். பிறகு இவரது தலைமையில் இருந்த தொழிற் சங்கம் பல காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்தி சுதந்திரப் போராட்ட வேகத்தை அதிகப்படுத்தினார். இந்தச் சூழ்நிலையில் கோவை முருகன் மில்லில் ஒரு ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் வேலை நீக்கம் செய்தனர். நியாயம் கேட்கச் சென்றபோது என்.ஜி.ஆரும், கே.பி.திருவேங்கடம் எனும் தலைவரும் தாக்கப்பட்டனர். இதன் பயனாகப் பெரும் கலவரம் மூண்டது. ஒரு தொழிலாளி இறந்தார்.

இதற்கிடையே 1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் கூடிய காங்கிரசில் மகாத்மா "வெள்ளையனே வெளியேறு" எனும் கோஷத்தைக் கொடுத்தார். எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கோவையில் 1942 ஆகஸ்ட் 13ஆம் தேதி என்.ஜி.ஆர் அவர்கள் கைதானார். வேலூர் சிறையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே, யாராவது கோவையிலிருந்து வந்து அவரை அழைத்துப் போகுமாறு சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அப்படி யாரும் போய் அழைத்து வருவதற்கு முன்பே இவரை ரயிலில் ஏற்றித் தனியாக அனுப்பிவிட்டது. கோவையில் மயக்க நிலையில் வந்திறங்கிய இவரை டாக்டர் சிவானந்தம் என்பவர் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு மூன்று மாதங்களே உயிரோடு இருந்த என்.ஜி.ராமசாமி தனது 31ஆம் வயதில், 1943 பிப்ரவரி 12ஆம் நாள் கோவையில் காலமானார். அன்று கோவை நகரமே அழுதது. மில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் தம் குடும்பத்தலைவர் இறந்ததைப் போல தவித்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அழுதனர். நாட்டிற்குழைத்த ஒரு தியாகச் சுடர் மறைந்தது, அதுவும் மிக இளம் வயதில், கொடுமதியாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகி! நாட்டு விடுதலையைக் காணாமலே அந்த இளம் சிங்கம் மறைந்தது. வாழ்க தியாகசீலர் என்.ஜி.ராமசாமி புகழ்!.

No comments:

Post a Comment

Please give your comments here