Followers

Wednesday, April 21, 2010

கோவை சி.பி.சுப்பையா

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
30. கோவை சி.பி.சுப்பையா.
தொகுப்பு: வெ.கோபாலன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு பெயர் பெற்றது. அந்தக் காலத்திலேயே ராஜாஜி கோஷ்டி என்றும் சத்தியமூர்த்தி கோஷ்டி என்றும் பிரிந்திருந்தது. இந்த பிரிவு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தல் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற போது ராஜாஜி கோவை சி.பி.சுப்பையாவை நிறுத்த சத்தியமூர்த்தி காமராஜை நிறுத்தினார். இறுதியில் காமராஜ் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சுப்பையாவைத் தோற்கடித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். அது முதல் தமிழ்நாட்டில் காமராஜ் சகாப்தம் தொடங்கியது. அந்த தேர்தலில் காமராஜிடம் தோற்றவர்தான் நாம் இப்போது பார்க்கப்போகும் கோவை சி.பி.சுப்பையா.

சி.பி.எஸ். என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்பட்ட சுப்பையா, 1901ஆம் ஆண்டு கோவை நகரில் பெரியண்ண முதலியார் மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் அதாவது 1920 முதல் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் சுப்பையா. மகாத்மா காந்தியடிகளிடம் அளவற்ற பக்தியும், தேசப்பற்றும் மிகுதியாக உடையவர். இவர் அந்தக் காலத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த முறையே வித்தியாசமானது. ஒரு சிறுவன் கையில் ஒரு தகர டப்பாவைக் கொடுத்து அதை ஒரு குச்சியால் தட்டிக் கொண்டே சென்று ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் நின்று இவர் பிரச்சாரம் செய்வார். பொதுக்கூட்ட விளம்பரங்களும் இதே முறையில்தான் இவர் செய்து வந்தார். இவரது இந்த செய்கையால், இவரது எதிரிகள் இவருக்குக் கொடுத்த பட்டம் "தகர டப்பா" என்பதாகும்.

இவருக்கு நல்ல பேச்சு வன்மை இருந்தது. கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார். இவரது பேச்சு தேசபக்தியைத் தூண்டுவதாக இருக்கும். மகாகவி பாரதி உட்பட பல தேசிய கவிஞர்களின் கருத்துக்களை உரத்த குரலில் இவர் பாடி உரையாற்றும்போது மக்கள் மெய்மறந்து கேட்பர். தேசபக்த விதை மக்கள் மனதில் பதியும் வண்ணம் இவரது உணர்ச்சிகரமான பேச்சு அமைந்திருக்கும். 1920 தொடங்கி 1942 வரையில் இவர் பங்கேற்காத காங்கிரஸ் போராட்ட களமே கோவை பகுதியில் கிடையாது எனும்படி எங்கும் எதிலும் முன்னணியில் இருந்தார்.

1930ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பின்னர் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கோவையிலிருந்து இவரும், இவரோடு தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம் ஆகியோர் பங்கு கொண்டு சிறை சென்றனர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கள் குடியால் ஏழை எளியவர்கள் படும் துயரங்களை எடுத்துக்கூறி 'மது அருந்த வேண்டாம்' என்று இவர் கேட்டுக் கொண்டதற்காக இவர் பட்ட அடிகளும், அவமானங்களும் எண்ணில் அடங்கா. கள்ளுக்கடை மறியல் நடந்தபோது, கள்ளுக்கடை அதிபர்கள் அடியாட்களை வைத்து இவரை நையப் புடைத்தனர். ஒரு இடத்தில் செருப்பால் அடித்து அவமானம் செய்தனர். இவ்வளவும் இந்த நாட்டுக்காக, இந்த ஏழை உழைக்கும் மக்களுக்காக என்ற உணர்வோடு அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டார். அப்படி இவர் அடிபடும்போது கூட இவர் கேட்டுக் கொண்டது என்ன தெரியுமா, என்னை அடியுங்கள், கொல்லுங்கள், ஆனால் கள் குடிப்பதை மட்டும் நிறுத்தி விடுங்கள். உங்கள் பெண்டு பிள்ளைகளை வாழ விடுங்கள் என்று கெஞ்சினார். பல இடங்களில் கள்ளுக்கடை அதிபர்கள் இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான அவமானங்களைத் தொண்டர்களுக்கு இழைத்திருக்கின்றனர். சிலர் தலையில் கள்ளை ஊற்றி அபிஷேகம் கூட செய்திருக்கின்றனர்.

இவர் அப்பட்டமான தேசிய வாதி. அப்போது சென்னை மாகாணத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சியினரை இவர் தனது சொற்பொழிவுகளில் கேலியும் நையாண்டியும் செய்வார். மக்கள் ரசிப்பார்கள். அவர்களுக்கு மகாராஜாக்களும், ஜமீந்தார்களும் பக்கபலமாக இருக்க எங்களுக்கு இரட்டை ஆடை பக்கிரியான காந்தி இருக்கிறார். கோடானுகோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பார்.

கோவையில் ஆர்.எஸ்.புரம் என்ற பகுதியின் முழுப் பெயர் தெரியுமா? அது ரத்தின சபாபதி முதலியார் புரம் என்பதாகும். இந்த சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் என்பவர் கோவை நகரசபை தலைவராகவும், அந்த நகரத்தில் ஒரு கெளரவமான தலைவராகவும் இருந்தவர். இவரைப்பற்றி கோவை அய்யாமுத்து “எனது நினைவுகள்” எனும் நூலில் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இவர் காங்கிரஸ்காரர் இல்லையென்றாலும், காங்கிரஸ் தொண்டர்களிடம் அனுதாபம் கொண்டே இருந்திருக்கிறார். இவர் 1936ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சாதாரண தொண்டரான சி.பி.சுப்பையா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகாத்மா காந்தி அறிவித்த 1942 'க்விட் இந்தியா' போராட்டத்தில் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகி யிருந்தமையால் கலந்து கொள்ள வில்லையாயினும், இவர் கலந்து கொண்டு சிறை சென்றார்.

இவர் மகாத்மா காந்தியை ஒரு தலைவராக பார்த்ததை விட அவரை கடவுளாக மதித்து அவரிடம் பக்தி கொண்டிருந்தார். 1948இல் மகாத்மா கொலையுண்ட பின் இவர் மனம் தளர்ந்து போனார். அந்த துயரம் அவரை பெரிதும் தாக்கிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர்களுக்கு இலவச நிலம் கொடுக்கப்பட்ட போதும், தியாகிகள் ஓய்வூதியம் தரப்பட்ட போதும் அவற்றை வாங்க மறுத்துவிட்டார். தான் வாங்காவிட்டால் போகட்டும் தன் சகோதரர் ஒருவரையும் இவர் வாங்கக்கூடாது என்று தடுத்து விட்டார். இப்படி சுயநலம் என்பதே என்னவென்றறியாத தியாகக்கூட்டம் இங்கு தடியடிபட்டு, சிறை தண்டனை பெற்று, காலமெல்லாம் தன் இளமையையும், முதுமையையும் நாடு நாடு என்று பாடுபட்டவர்களுக்கு, நாம் செய்யும் கைமாறு, குறைந்த பட்சம் இந்தத் தியாகிகள் பெயரையாவது ஒரு முறை சொல்லி நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுதான். அதையாவது நல்ல மனதோடு செய்வோமே. வாழ்க தியாகி சி.பி.சுப்பையா புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here