காந்தி ஜெயந்தி விழா
2-10-2011
1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.
மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.