இந்திய தேசபக்தர்களின் முன்னோடிகள்.
1.
தாதாபாய்
நெளரோஜி

தாதாபாய் நெளரோஜி, இந்தப் பெயரை ஒவ்வொரு
இந்தியனும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி
ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், இந்திய மக்களுக்கு தங்கள் நாட்டின் முந்தைய பெருமை எது,
இன்றைய நம் நிலைமை எது, இதிலிருந்து மீண்டு வர நாம் என்ன செய்ய வேண்டுமென்கிற உணர்வை
முதன்முதலில் உணர்த்திய பலருள் ஒருவர் இவர். இந்தியர்களின் விடிவெள்ளியாக இந்திய தேசிய காங்கிரஸ்
எனும் ஓர் இயக்கத்தை உருவாக்கி அதில் தீவிரமாகச் செயல்பட்டவர் இவர். 1885இல் மும்பை
நகரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பு தோன்றி வளர்ந்து வந்த நிலைமையில் முதலில்
ஆங்கில கவர்னர்களுக்கும், இங்கிலாந்து அரசிக்கும் வணக்கம் சொல்லித் தொடங்கிய இயக்கம்
1906இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டிற்கு இவர் தலைமை வகித்த போதுதான் “சுயராஜ்யம்” என்ற தற்சார்பு ஆட்சி இந்தியர்களுக்குத்
தேவை என்பதை முதன்முதலில் எடுத்துரைத்தவர் இவர். இவர் 1886, 1893, 1906 ஆகிய ஆண்டுகளில் காங்கிரசின்
தலைவராக இருந்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் இவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச்
செயலாற்ற யிருக் கிறார். மகாத்மா காந்தியின்
கீழ் இந்திய சுதந்திரப்போர் கிளர்ந்தெழுந்தபோது இவருடைய பேத்திகள் அதில் பெரும்பங்கு
வகித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.