Followers

Friday, November 12, 2010

ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரை ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி வி.கே.டி.பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்கள் அதிகம். மதுரை வைத்தியநாத அய்யர் குடும்பம், என்.எம்.ஆர்.சுப்பராமன் குடும்பம் இப்படி எத்தனையோ குடும்பங்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்கள். அந்த வரிசையில் ஸ்ரீநிவாச ஆழ்வார், பங்கஜத்தம்மாள் தம்பதியினரைக் குறிப்பிடலாம்.

மதுரையில் திருமலை ஆழ்வார் என்பவரின் மகன் ஸ்ரீநிவாச ஆழ்வார். இவருக்கு இசை நன்றாக வரும். அதோடு பாடல்களை இயற்றிப் பாடும் திறன் இருந்ததால் இளம் வயது முதல் தானே பாடல்களை இயற்றிப் பாடிவந்தார். தேசியப் பற்றி ஏற்பட்டுவிட்ட இவருக்கு, எழுதும் பாடல் எல்லாம் தேசியப் பாடல்களாகவே அமைந்துவிடும். அந்தக் காலத்தில் நாட்டில் நிகழும் எந்தவொரு பெரிய நிகழ்ச்சியையும் பாட்டு வடிவில் எழுதி பாடி, புத்தகமாக வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அப்போது நடந்த சில கொலை நிகழ்ச்சிகளைக் கூட பாடலாக வடித்த பாவலர்கள் நம் மத்தியில் இருந்தார்கள். ஸ்ரீநிவாச ஆழ்வாரை தனது இளம் வயதில் மிகவும் பாதித்த நிகழ்ச்சி 1919இல் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் டயர் என்பானால் கொடூரமாக சுடப்பட்டு இறந்தார்கள். இந்த படுகொலை நிகழ்ச்சியை ஸ்ரீநிவாச ஆழ்வார் கவிதைவடிவில் எழுதி, சோகமும் வீரமும் இழைந்தோடும்படியாகப் பாடி மக்கள் மத்தியில் அனுதாபத்தையும், சுதந்திரப் போரின்பால் ஈர்ப்பையும் உண்டாக்கினார்.

1930இல் ராஜாஜி தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரையில் உப்பு எடுக்கும் சத்தியாக்கிரக பாத யாத்திரையை மேற்கொண்டார். இந்தப் போரில் அவரே நேரில் தேர்ந்தெடுத்த நூறு தொண்டர்களை அழைத்துச் சென்றார். அப்படிச் சென்ற மதுரை தொண்டர்களில் ஒருவராக ஸ்ரீநிவாச ஆழ்வார் கலந்து கொண்டு காந்தியத்தில் தனக்கிருந்த ஆழ்ந்த பற்றை வெளிக்காட்டினார். வழியில் நடந்த சிரமங்களையெல்லாம் நாட்டுக்காகப் பொறுத்துக் கொண்டு கைதாகி சிறைப்பட்டு ஓராண்டு திருச்சி சிறையில் கிடந்தார்.

தேசபக்தர் சுப்பிரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் தொடங்கவிருந்த பாரதாஸ்ரமத்தில் சிவாவின் தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். சுதந்திரம் எனும் சூரிய உதயத்தைக் காணாமலே இவர் 1937இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவருக்கு ஏற்ற மனைவியாக அமைந்தவர் பங்கஜத்தம்மாள். இவ்விருவருக்கும் இளம் வயதில் பால்ய விவாகம் நடைபெற்றிருந்தது. அதாவது அந்த அம்மையாருக்குத் திருமணத்தின்போது வயது 7. ஸ்ரீநிவாச ஆழ்வார் நன்றாகப் பாடுவார் என்பதைப் பார்த்தோமல்லவா. அவர் அப்படி தேசியப் பாடல்களை பஜனையாகப் பாடிக்கொண்டு தெருத்தெருவாகப் போவது வழக்கம். அப்போதெல்லாம் அவருடைய மனைவி பங்கஜத்தம்மாளும் அவரோடு பஜனை பாடிக்கொண்டு செல்வார். அது தேசிய பஜனை. இவர்களுக்கு மதுரையில் செல்லுமிடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பஜனை பாடுவது மட்டுமல்லாமல் இந்த அம்மையார் மேடைகளில் ஏறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிவந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காங்கிரசின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இத்தனை தியாகங்களையும் இந்த தம்பதியினர் நம் நாட்டுச் சுதந்திரத்துக்காகச் செய்தனர். இவர்களுக்கு வாரிசுகள் உண்டா? இருந்தால் அவர்கள் யாரேனும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைத்தார்களா? பாவம் ஊருக்கு உழைத்து, சிறையில் அடைபட்டு, ஏழ்மையில் மாண்டுபோன பல்லாயிரக்கணக்கான தேசபக்தர்கள் வரிசையில் இந்த ஏழை பஜனை செய்யும் தியாகிகளையும் சேர்த்துக் கொள்வோம்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசின் போக்குப் பிடிக்காமல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் அம்மையார். சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டு மக்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சுரண்டல் இவைகளால் தாக்குண்டு வருந்தியதைப் பொறாமல் இவர் சோஷலிச இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடினார். ஜனநாயக முறையில் தேர்தலிலும் நின்று பார்த்தார். முடியுமா? சுதந்திரப் போர் காலத்தில் கள்ளுக்கடை மறியலிலும், சுதேசிப் பொருட்களை வாங்கு என்று போராடியும் சிறை சென்ற அம்மையார், பதுக்கலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் போராட்டத்தைத் தொடர்ந்தார். பிறவி போராளியான இந்த அம்மையார் 1979 ஜூலை 1ஆம் தேதி அமரரானார். இந்த புரட்சி தீபத்தின் பெயரை மற்றுமொருமுறை உச்சரித்துப் புண்ணியம் பெறுவோம். வாழ்க பங்கஜத்தம்மாள் புகழ்!

1 comment:

  1. கணவன் மனைவியாக ஈடுபடும் போது தான் எந்த இயக்கமும் நன்கு வேர் பிடிக்கும். இது மிகவும் சிரமமான காரியம். சாதாரணமாக அன்றாட வாழ்க்கைப் பிரச்ச‌னைகளை எதிர்கொள்ளும் போதே கண‌வனும் மனைவியும் ஒரே பார்வையாகப் பார்க்கமுடியவில்லை.
    அப்படியிருக்கும் போது கொள்கையில் மனைவியுடன் உடன்பாடு என்பது அதிசயமே. காந்தி செய்த அற்புத ரசாயனம் இது.

    ReplyDelete

Please give your comments here