Followers

Friday, January 7, 2011

டி.செங்கல்வராயன்

தியாகி டி.செங்கல்வராயன்

"விஜயபாரதம்" சுதந்திர தின பொன்விழா மலரில் தியாகி டி.செங்கல்வராயனை பேட்டி கண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தனர். பேட்டி கண்டவர் திரு வெள்ளைதுரை மணிவண்ணன் என்பவர். "விஜயபாரதம்" இதழுக்கு நன்றியோடு அந்த பேட்டியை இங்கு அளிக்கிறேன்.

"காந்தியின் காங்கிரஸோடு இன்றை காங்கிரஸை ஒப்பிடாதீர்"

உலக வரலாற்றில் அடிமைப்பட்ட நாடுகள் "போராடி" சுதந்திரம் பெற்றன. நாம் "போராட்டம்" நடத்திப் பெற்றோம். ஹரிஜனப் பகுதிக்குச் சென்று வகுப்பு நடத்தினோம். குடிக்காதே என்று அவர்களிடம் வேண்டிக் கொண்டபோது, கள்ளை முகத்தில் துப்பினர். முடிவில் கள் குடிக்க ஆளில்லாமல் கடைக்காரன் அடித்தான்.

கதர், கிராம முன்னேற்றம், தேச நலனே என்று இருந்தது அன்றைய காங்கிரஸ். ஊருக்கு ஒரு ஏ.சி.வீடு, ஏ.சி.கார், பட்டு வேஷ்டி, நாற்காலிச் சண்டை இவைகள் அனைத்தும் அடங்கியது இன்றைய காங்கிரஸ். வாழ்க்கையின் கடைசி நாள் வரை தனக்காக எதையும் தேடாது தனது தேச நலனையே குறிக்கோள் எனக் கொண்டு வாழ்ந்து வந்த ஒரு ஒப்பற்ற காந்தியவாதி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைபட்டுக் கிடந்தவர், தமிழகத்தில் இருந்த தேசிய வாதிகளுள் தகுதிக்கும், நேர்மை, எளிமை, அர்ப்பணிப்பு போன்ற குணங்களுக்கு அடையாளமாக விளங்கி வந்தவர் திரு டி.செங்கல்வராயன். சுதந்திர தின பொன்விழா மலருக்காக அவரை பேட்டி கண்டு எழுதிய கட்டுரை இது.

கேள்வி:- மிகவும் சின்ன வயதில் (16 வயதில்) போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அதற்கான உந்து சக்தியாக இருந்தது எது?

* பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது "ஹிந்து" பத்திரிகை மற்றும் சில செய்தித் தாள்களைப் படிப்பேன். அதில் உள்ள விஷயங்களை நண்பர்களுடன் சேர்ந்து பேசுவோம். காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பேச்சுக்களெல்லாம் அதில் வெளிவரும். அவைகளையும் படிப்போம். எங்களை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்தது திலகரின் "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" எனும் வாக்கியமே. அந்த ஒன்றே உந்து சக்தியாக இருந்தது எனலாம்.

போராட்டக் குழுவினர் ஊர்வலம் செல்வார்கள். கோஷமிட்டுக் கொண்டு போவார்கள். அவர்கள் மீது தடியடி நடைபெறும். மண்டைகள் உடையும். போராட்டக் காரர்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவது வழக்கமில்லை. திருப்பூர் குமரன் மண்டை போலீசாரின் தடியடியில் மண்டை உடைந்து கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்தபோதும் கொடையைக் கீழே போடவில்லை. தொடர்ந்து முழக்கமிட்டபடி உயிர் துறந்தார். அவர் கையில் பிடிட்திருந்த கொடிக்கம்பைக் கூட பிடுங்க முடியவில்லை, பிடி அவ்வளவு இறுகிப் போயிருந்தது. அவரது உடல் தீக்கு இறையாகக் கொடுக்கப் பட்டபோது கொடியை மட்டுமே எடுத்துவிட்டு கையில் பிடித்திருந்த கம்போடு எரியூட்டினார்கள். இப்படிப்பட்ட அசாதாரணமான தேசபக்தி, இலட்சியப் பற்று போன்றவை சுதந்திரம் அடைவதற்குக் காரணமாயிற்று.

கேள்வி:- தொடர்ச்சியான அடக்கு முறையால் மனசலிப்பு ஏற்பட்டிருக்குமே?

*வ.உ.சிதம்பரம் பிள்ளை நல்ல தமிழறிஞர். பெரும் செல்வந்தர். அவருடைய போராட்டத்தைக் கடுமையான அடக்குமுறை கொண்டு ஆங்கில அரசாங்கம் அடக்க நினைத்தது. சிறையில் கல்லுடைத்தார், செக்கிழுத்தார். இதுபோன்ற கடுமையான வேலைகள் அவருடைய தண்டனை காலத்தில் கொடுக்கப்பட்டது. மாடு இழுக்க வேண்டிய கல் செக்கை அவரைக் கொண்டு இழுக்க வைத்தனர். "நூலோர்கள் வெஞ்சிறையில் நோவதும்" என்று பாரதி குறிப்பிடுகிறார். படித்த நல்ல வழக்கறிஞர், செல்வந்தர் அவரை மாடுபோல செக்கிழுக்க வைத்தனர். மயக்கம் அடையும் போதெல்லாம் அவருக்கு அடி விழும். 5க்கு 6 அடி அளவுள்ள குறுகிய செல்லில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். சூரிய ஒளியையே அவர் பார்க்க முடியாதபடி இருட்டறையில் பூட்டப்பட்டிருந்தார். மலஜலம் எல்லாம் அந்த இருட்டறைக்குள்தான் கழித்திட வேண்டும். இந்த அளவுக்கு அடக்கு முறையும் கொடுமையும் நடந்த போதும் அந்தப் போராட்ட குணம் தான் அவரைக் காப்பாற்றி வந்தது.

கேள்வி:- சுதந்திர போராட்டத்திற்கான ஒரு சக்தியை மட்டுமே காந்தியால் தர முடிந்தது. அது ஒன்றே இணைப்புச் சங்கிலியாக இருந்தது. ஆனால் தேசியம் பற்றிய தொலைநோக்குப் பார்வை அரிதாக காணப்பட்டது என்று சொல்லலாமா?

* நிச்சயமாக காந்தியிடம் மட்டுமே தொலைநோக்குப் பார்வை இருந்தது. தீண்டாமை ஒழிப்பும், கிராம ராஜ்யமும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கடைசிவரை ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக அவர் பாடுபட்டார். தேசம் பற்றிய தொலைநோக்குப் பார்வை அவரிடமே சிறப்பாகக் காணப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல்களில் முஸ்லிம் அல்லது ஹரிஜனங்கள் போட்டியிட்டால் அவர்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தார். நான் கூட இதற்காக ஆறு முறை விட்டுக் கொடுத்திருந்தேன். தாருல் இஸ்லாம் எனும் முஸ்லிம் பத்திரிகையின் ஆசிரியர் தாவுத் ஷா, வேலாயுதபாணி என்கிற ஹரிஜன சகோதரர் தேசிய மாநாட்டிற்குச் செல்வதற்கு விட்டுக் கொடுத்து காந்திருந்தேன். அப்போது இது மாதிரியான எந்த ஜாதி வித்தியாசமும் இருக்கவில்லை. சுதந்திரம் பெறுவதே ஒரே லட்சியமாக இருந்தது.

கேள்வி:- காந்தியின் நிதான போக்குதானே திலகர், நேதாஜி போன்றவர்களை காங்கிரஸ் இயக்கத்தைவிட்டு வெளியேறத் தூண்டியது.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் காங்கிரசில் பிளவு என்பதே இல்லை. திலகருக்கோ காந்திக்கோ சுதந்திரம் பெற வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை அடைவதில் வித்தியாசம் இருந்தது. திலகர் "சுதந்திரம் எனது பிறப்புரிமை" என முழங்கினார். அதனால் மாண்டலே சிறையில் நான்கு ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சமயம் திலகரின் மனைவியின் உடல்நிலை கெட்டு கவலைக்கிடமாக இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே ஒரு முயற்சி மேற்கொண்டார். மனைவி உடல் நிலையை காரணமாகக் காட்டி திலகரின் விடுதலையைக் கோரினார் கோகலே. அரசும் தயாராக இருந்தது. எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்பது போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பரோலில் விடுவதாக அரசாங்கம் கூறியது. திலகர் ஒப்புக் கொள்ளவில்லை. அவரது மனைவியும் உடல்நிலை தேறாமல் இறந்து போனார். அப்போதும் கூட திலகர் மன உறுதியோடு இருந்தார். அந்த அளவுக்கு திலகருக்கு ஒரு லட்சிய வேட்கை இருந்தது. திலகர் இறந்து போவதற்கு முன்பாக காந்தியடிகளிடம் "நீங்கள் வருகிறீர்கள், நான் சென்று கொண்டிருக்கிறேன்" என்று தன் காலம் முடிவடைகிறது என்பதையும், மகாத்மாவின் காலம் தொடங்குவதையும் குறிப்பிட்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமை ஏற்ற காலம் உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர வேண்டுமென்கிற உணர்வு மேலோங்கியிருந்த காலம். இதற்காக காங்கிரஸ் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். தற்போது சொல்லிக் கொண்டிருக்கும் அகிம்சையினால் அது சாத்தியமில்லை என்பது சுபாஷின் எண்ணம். ஆனால் காந்தியடிகளின் அகிம்சைப் பாதையைக் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்டது. அந்த காரணம் கொண்டே நேதாஜியினால் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. விலகிவிட்டார். தனியாக ஒரு கட்சியைத் தொடங்கினார். காங்கிரசை உடைத்துவிட்டு அல்ல. தனியாக தனது லட்சியத்தை அடையும் மார்க்கம் தேடி தனிக்கட்சி துவக்கினார். அதுதான் பார்வர்டு பிளாக் கட்சி. உண்மையிலேயே காங்கிரஸ் பிளவு பட்டது என்றால் அது இந்திரா காந்தி காலத்தில்தான். மற்றபடி அதற்கு முன்பு பிளவு என்பது காங்கிரசில் ஏற்பட்டதே இல்லை.

கேள்வி:- வடக்கு தெற்கு என்ற பேதமின்றி சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒற்றுமையாக இருந்தது போலன்றி, சுதந்திரத்துக்குப் பிறகு இந்த
பிரிவினை வாதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?

* தற்போதைய பிரச்சினை தெற்கில் தேசிய தலைவர்கள் எவரும் இல்லை என்கிற நிலை உள்ளது. முன்பு காந்திக்கு இணையாக ராஜாஜியும், நேருவுக்கு இணையாக காமராஜரும் இருந்தது போன்ற நிலை மாறி இன்று எவருமே அந்த அளவுக்கு இல்லை என்ற நிலை உள்ளது. அதற்குக் காரணம் வாரிசு முறையிலான தலைவர்கள். "வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது" என்று அண்ணா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அவரும் நானும் ஒரு முறை ரயிலில் டெல்லி சென்று கொண்டிருந்தபோது, ரயில் செல்லும் பாதையில் இருபுறமும் உள்ள வறட்சியான நிலைமையைப் பார்த்து அண்ணா சொன்னார் "எவ்வளவு வறட்சி". எங்கு பார்த்தாலும் மக்களின் முகங்களில் சோகம் படர்ந்திருக்கிறது. அவர்கள் உடைகள் கூட கந்தலான உடைகள். நம்முடைய சோழவந்தான் பகுதியில் எங்கு பார்த்தாலும் பல மைல் சுற்றளவுக்கு பச்சை பசேலென்று காட்சியளிக்கும். நம்முடைய தமிழ் நாடே பரவாயில்லை போலிருக்கிறதே என்று கூறினார். நான் சொன்னேன், 'நீங்கள் தானே கூறினீர்கள், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று, பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:- அன்றைய காங்கிரஸ் - இன்றைய காங்கிரஸ். ஒப்பிடுங்களேன்.

* ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் தேச சேவைகளில் மட்டுமே குறிப்பாக இருந்தனர். 100ஆவது பிறந்த தினம் காணும் குல்சாரிலால் நந்தா போன்றவர்கள் தங்கள் பிறந்தநாளைக் கூட கொண்டாடுவதில்லை. அரசியலில் பதவிகள் எதுவுமின்றி அமைதியாகத் தங்கள் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றுள்ள காங்கிரசையோ, காங்கிரஸ் தலைவர்களையோ காந்தி கால காங்கிரஸ் காரர்களோடு ஒப்பிடாதீர்கள். கதர் என்பது பற்றி ஒன்றுமே தெரியாமலும், ஏ.சி.காரிலும், ஏசி.வீட்டிலும் வாழ்ந்து வருபவர்களை நிச்சயமாக காந்தி கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. லஞ்ச ஊழல் என்று குற்றம் சாட்டப்பட்ட நபர் அரசியலில் தார்மிக ந்றிப்படி பதவி விலகுவதுதான் இயல்பு. இதைத்தான் 'ஹவாலா' வழக்கில் அத்வானி பின்பற்றினார். அரசியலில் நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் இருக்கிறது என்பதறு இது ஒரு எடுத்துக்காட்டு. இதையெல்லாம் மீறுகிறவர்கள் என்பதற்கு லாலு பிரசாத் போன்றவர்கள் உதாரணம்.

கேள்வி:- சமீபத்தில் புகைவண்டி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்டு வந்த காந்தியின் பிரார்த்தனை பாடல்களில் ஒன்றான "வைஷ்ணவ ஜனதோ"
ரயில்வே நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது பற்றி.

* ஒரு காலத்தில் தமிழகத்தில் நீதிக்கட்சியினர் பாரதியின் பாடல்களைக்கூட தடை செய்தனர். அதனால் இன்று பாரதி பாடல்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் மறைந்தா போய்விட்டன. அதுபோல அரசு தடை செய்தாலும் மக்கள் பாடினால் என்ன செய்ய முடியும்?

நன்றி: "விஜயபாரதம்" பொன்விழா மலர். பேட்டியாளர் வெள்ளைதுரை மணிவண்ணன்.

2 comments:

  1. ///"இன்றுள்ள காங்கிரசையோ, காங்கிரஸ் தலைவர்களையோ காந்தி கால காங்கிரஸ் காரர்களோடு ஒப்பிடாதீர்கள். கதர் என்பது பற்றி ஒன்றுமே தெரியாமலும், ஏ.சி.காரிலும், ஏசி.வீட்டிலும் வாழ்ந்து வருபவர்களை நிச்சயமாக காந்தி கற்பனைகூட செய்து
    பார்க்கவில்லை"///

    HOW MUCH TRUE!NOT ONLY THAT.He would not have imagined that an ITALIAN WOULD BECOME CONGRESS PRESIDENT.

    ReplyDelete
  2. அன்று சமூகத்திற்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்று அரசியலுக்கு சென்றார்கள்.... அவர்கள் சமூகத் தியாகிகள்... ஆனால் இன்றோ பலர் தனது எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு செல்கிறார்கள்.... இவர்கள் சமூக வியாதிகள்..... காலம் தான் தீர்வு தரனும்...

    ReplyDelete

Please give your comments here