Followers

Friday, May 21, 2010

ராஜாஜி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
15. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். (ராஜாஜி)

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் பதவி வகித்த தமிழர்; வங்காளத்தில் நடந்த மதக் கலவரத்துக்குப் பின் மேற்கு வங்க மாநில கவர்னர் பதவி வகிக்க பலரும் தயங்கிய நேரத்தில் துணிந்து அங்கே கவர்னராகப் போன தீரர்; வடக்கே மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்றதை அடுத்து தென்னகத்தில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை வெற்றிகரமாக நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆலயங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலயக் கதவுகளை அவர்களுக்குத் திறந்துவிட்ட சீர்திருத்தச் செம்மல்; தன் வாதத் திறமையாலும் நிர்வாகத் திறமையாலும் ஆளும் கட்சியைக் காட்டிலும் எதிர்கட்சியினர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தபோதும் சிறப்பாக அரசை வழிநடத்திச் சென்ற ராஜ தந்திரி; இசையிலும், இலக்கியங்களிலும் ஆர்வமும் புலமையும் பெற்று, குறையொன்று மில்லை என்று இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் பாடலை எழுதி திருமதி எம்.எஸ்.அவர்களை பாட வைத்தவர்; இராமாயண மகாபாரத இதிகாசங்களைச் சாதாரண மக்களும் படித்துப் பயன்பெறும் வண்ணம் "சக்கரவர்த்தித் திருமகன்" என்று ராமாயணத்தையும் "வியாசர் விருந்து" என்ற பெயரில் மகாபாரதத்தையும் அழியாத இலக்கியச் செல்வமாகப் படைத்தவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

தற்போதய தருமபுரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள தொரப்பள்ளி எனும் சின்னஞ்சிறு கிராமம். தென் பண்ணை ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூர். அவ்வூரில் கிராம முன்சீப்பாக இருந்தவர் சக்கரவர்த்தி ஐயங்கார் என்பவர். சமஸ்கிருதத்தில் பெரும் புலமை வாய்ந்தவர். அவருடைய மனைவி பெயர் சிங்காரம் அம்மாள். நற்குணங்களும், சிறந்த பண்புகளும் நிரம்பப் பெற்றவர். இவர்களுக்கு மூன்று மக்கள். முதலாமவர் நரசிம்மன், இரண்டாமவர் சீனிவாசன், மூன்றாவது பிள்ளைதான் உலகைத் தன் அறிவினால் ஆண்ட ராஜகோபாலன். ஆம்! நம் ராஜாஜிதான். பள்ளிப்படிப்பைத் தொடங்கி தனது பன்னிரெண்டாம் வயதில் மெட்ரிகுலேஷன் தேறினார். பிறகு பெங்களூர் இந்து கல்லூரியில் படித்து பி.ஏ. தேறினார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். அந்த காலகட்டத்தில்தான் சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தார். அவரை தரிசிக்கவும், அவர் இருந்த ரதத்தை இழுத்துச் செல்லவும், அவரிடம் கண்ணன் நிறம் ஏன் நீல நிறம் என்பது பற்றி பதில் சொல்லவும் வாய்ப்புப் பெற்றார்.

மகாத்மா காந்தி படித்தவர்களை சுதந்திரப் போரில் ஈடுபட அழைப்பு விடுத்தபோது அதனை ஏற்று முழுநேர அரசியல் வாதியாக ராஜாஜி மாறினார். சேலம் நகர சபைத் தலைவர் பதவியில் இருந்து பல நல்ல பணிகளைச் செய்தார். 1921ல் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வேலூர் சிறையில் அடைபட்டார். இவருக்குத் தண்டனை அளித்த வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட் இவருக்குத் தண்டனை கொடுத்த மறுகணம், "உங்களைப் போன்ற உத்தமரைத் தண்டிப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயினும் கீதை சொன்ன நெறிப்படி என் கடமையை நான் செய்ய வேண்டியிருக்கிறது" என்று நெஞ்சுருகக் கூறினார். பிறகு ராஜாஜி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரசுடன் சமாதானம் பேச சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் என்பவரை தூது அனுப்பியது. அந்த கிரிப்ஸ் கொண்டு வந்த திட்டத்தில் முதல் அம்சம் உலக யுத்தம் முடிந்த கையோடு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது; இரண்டாவது இந்திய முஸ்லீம்கள் தங்களுக்குத் தனி நாடு கோரி பிரிந்து போக விரும்பினால் நாட்டைப் பிரிப்பது. இதை காந்தி ஏற்கவில்லை. ஆனால் ராஜாஜி நாட்டின் அமைதி கருதியும் மக்கள்


ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதைத் தவிர்க்கவும் வேண்டுமானால் முஸ்லிம்களுக்குத் தனிநாடு பிரித்துக் கொடுப்பதுதான் சரி என்று கருதினார். ஒன்றுபட்டிருந்த காந்தி--ராஜாஜி உறவில் விரிசல் விழுந்தது. ராஜாஜி தனது கருத்தைப் பிரச்சாரம் செய்ய நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரசார் கலாட்டா செய்தனர். எதிர்த்தனர். எனினும் ராஜாஜி தன் கொள்கையினின்றும் சிறிதும் இறங்கி வரவில்லை. தன்னந்தனியாக காங்கிரசை விட்டு வெளியேறி போராடி வந்தார்.

ஆகாகான் மாளிகையில் சிறையிலிருந்த மகாத்மா காந்தி 1942ல் உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் ராஜாஜி அவரைச் சென்று பார்த்தார். பிரிந்த இருவரும் பாசத்தால் இணைந்தனர். காந்தி கேட்டார், உங்கள் நிலைதான் என்ன என்று. ராஜாஜி உடனே தனது திட்டத்தை ஓர் காகிதத்தில் எழுதிக் காட்டினார். இதனைக் கண்ட காந்தி, இவ்வளவுதானா, இது எனக்குப் புரிந்திருந்தால் முன்பே ஒப்புக்கொண்டிருப்பேனே என்றார். இப்படி மகாத்மாவே ராஜாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

1944ல் எல்லா காங்கிரஸ்காரர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போதைய காங்கிரஸ் தலைவர் அபுல் கலாம் ஆசாத் ராஜாஜியை மீண்டும் காங்கிரசில் இணையும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவர் திருச்செங்கோடு தாலுகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகச் சேர்ந்தார். திருச்செங்கோட்டில் ராஜாஜி காந்தி ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தி பல தொண்டர்களை ஒருங்கிணைத்து நன்கு செயல்பட்டு வந்தார். பேராசிரியர் கல்கி அவர்களும் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து, மதுவிலக்குக்காக நடத்தப்பட்ட "விமோசனம்" எனும் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார்.

ராஜாஜி திருச்செங்கோடு தாலுகா காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தும், மாகாண காங்கிரஸ் கமிட்டி மதுரையில் கூடி அவரை காங்கிரசில் அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் போட்டனர். இந்த முடிவுக்கு காமராஜ் அவர்களின் பங்களிப்பு இருந்தது. என்றாலும் கூட மத்திய காங்கிரஸ் கமிட்டி ராஜாஜியின் பணியை முழுமையாகப் பயன்படுத்தி வந்தது. தமிழ்நாட்டின் நஷ்டம் அகில இந்தியாவுக்கும் அதிர்ஷ்டமாக அமைந்தது. அப்போது ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்தியில் இடைக்கால அரசு ஒன்று உருவாகியது. அதில் ராஜாஜி தொழில் துறை அமைச்சராகச் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியப் பிரிவினையின் விளைவாக மேற்கு வங்கத்தில் மதக்கலவரம் பரவியபோது அங்கு கவர்னராகச் செல்ல ஒருவரும் முன்வராதபோது நேரு அவர்கள் ராஜாஜியை அங்கே கவர்னராக நியமிக்க ஏற்பாடு செய்தார். இவர் அங்கே சென்று கல்கத்தாவில் காலடி எடுத்து வைத்தபோது இவருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவர் காங்கிரசில் சுபாஷ்சந்திர போசுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்ததனால், அவரது சகோதரர் சரத் சந்திர போஸ் தலைமையில் பெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இத்தனை விரோதமான சூழ்நிலையில் அந்த மாநிலத் தலைநகர் கல்கத்தாவில் காலடி வைத்த ராஜாஜி நாளடைவில் அம்மாநில மக்களின் அன்புக்குப் பாத்திரமானார்.

இந்திய சுதந்திரம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் கிடைத்த பிறகு சிலகாலம் லார்டு மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு இந்தியர் ஒருவர் அந்த பதவிக்கு வரவேண்டும் என்ற நிலையில் அனைவரும் யோசித்து அந்த பதவிக்கு ராஜாஜியே தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அதன்படியே ராஜாஜி இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். 1952ல் பொதுத் தேர்தல் நடந்து நாட்டுக்கு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜாஜி பதவியில் இருந்தார். பின் ஓய்வு பெற்று சென்னைக்குத் திரும்பினார். அப்போது நடந்து முடிந்திருந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்தது. எதிர்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைகள் அனைவரும் இருந்தனர். காங்கிரசால் மந்திரி சபை அமைக்க முடியவில்லை.


மேலிட உத்தரவின் பேரில் தமிழக காங்கிரசார் ராஜாஜி அவர்களை அணுகி அவரைப் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டினர். ராஜாஜியும் பெரும்பதவிகளில் இருந்தபின் மாநில முதலமைச்சர் பதவியா என்று தயங்காமல் சில நிபந்தனைகளுடன் சம்மதித்தார். அப்படிப்பட்ட ஒரு நிபந்தனை கட்சிக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் செயல்பாட்டில் தலையிடக் கூடாது என்பதுதான். ஊழலை அண்ட விடாமல் இருக்க அந்த மேதை எடுத்த நடவடிக்கை பின்னர் காற்றில் விடப்பட்டதனால் ஏற்பட்ட பல விபரீதங்களை, அதன் பிறகு நாம் பார்த்தோமே!

அமைச்சரவை அமைக்க காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை. என்ன செய்வது? சில எதிர்கட்சி உறுப்பினர்களைக் காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். காமன்வீல் கட்சியிலிருந்து மாணிக்கவேலு நாயக்கர், ராமசாமி படையாச்சியார், சுயேச்சை பி.பக்தவத்சலு நாயுடு போன்றவர்கள் ராஜாஜிக்கு ஆதரவு கொடுத்தனர். 1952ல் சென்னை மாகாணத்தில் அமைந்த ஆட்சியில் ராஜாஜி பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். உணவுப் பொருட்களுக்கு இருந்த ரேஷனை நீக்கினார். மதுவிலக்கு தீவிரமாக அமல் செய்யப்பட்டது. விற்பனை வரி மூலம் வருவாய் இழப்பை ஈடுகட்டினார். தஞ்சையில் நிலவிய நிலவுடைமையாளர் விவசாயிகளுக்கிடைய பகை முற்றி போராட்டம் நடந்த நிலையில் "பண்ணையாள் சட்டம்" கொண்டு வந்து உழைக்கும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார். பழைய ஆங்கில முறை கல்வியில் மாற்றம் கொண்டுவரவும், ஏராளமானவர் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் ஓர் புதிய திட்டத்தைக் கொணர்ந்தார். அதனை 'குலக்கல்வித் திட்டம்' என்று சொல்லி திராவிட இயக்கங்களும், அவர்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரசில் காமராஜ் உட்பட அனைவரும் எதிர்த்து போராட்டம் நடத்தவே, ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

மத்தியில் நடந்த ஆட்சி லைசன்ஸ் அண்டு பர்மிட் ராஜ் என்று சொல்லி நேருவின் சோசலிசத்தை எதிர்க்கும் வகையில், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி போன்ற அமைப்பில் "சுதந்திராக் கட்சி"யைத் தொடங்கினார். 'சுயராஜ்யா' எனும் பத்திரிகை மூலம் தன் கருத்தை வலியுறுத்தினார். காசா சுப்பா ராவ் சுயராஜ்யாவின் ஆசிரியர். பெரும் முதலாளிகளும், ஆலைச் சொந்தக்காரர்களும் மட்டுமல்லாமல், சாதாரண மக்களும் சுதந்திராக் கட்சியில் சேர்ந்தனர். கட்சி நன்கு வளர்ந்தாலும் பின்னர் அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

அணுகுண்டு உலகை பேரழிவில் கொண்டு சேர்க்கும் என்று கருதி அதனை ஒழிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியிடம் தூது போனார். திராவிடக் கட்சிகள் மதுவிலக்கை நீக்கிக் கள்ளுக் கடைகளை மறுபடியும் திறந்த போது அன்றைய முதல்வர் வீடு தேடிச் சென்று 'வேண்டாம் கள்ளுக் கடை" என்று வேண்டுகோள் விடுத்தார். அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. இன்று மக்களில் பெரும்பலோர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வீணாகின்றனர்.

தன் கடைசி நாட்களை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களைத் தமிழில் படைக்கத் தன் நேரத்தைச் செலவிட்டபின் 1972ல் டிசம்பர் 25ம் தேதி இம்மண்ணுலகை நீத்து ஆச்சார்யன் திருவடிகளை அடந்தார். வாழ்க ராஜாஜியின் புகழ்.

No comments:

Post a Comment

Please give your comments here