Followers

Tuesday, June 22, 2010

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்



சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும். ஆனால் ... அந்த மனிதர் சிறைவாசம் கொடுத்த கொடிய வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டவர். சூடான அல்லது காரமான எதையும் சாப்பிட முடியாதவர். தயிர் மட்டும் விரும்பிச் சாப்பிடும் அப்பட்டமான தேசிய வாதி. ஆம்! அந்த தமிழினத் தலைவன்தான் ம.பொ.சி.


இது என்ன? யாருக்கும் இல்லாத தனி நபர் வர்ணனை என்று நினைக்கலாம். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை. வடதமிழ் நாட்டில் கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். தமிழ் இவரது மூச்சு. தமிழ்நாடு இவரது உயிர் உறையும் புனிதமான இடம். முதன்முதலில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு"      என்றும், "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்றும், "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது. தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துக்குச் சொந்தம் என்று போராடினார், "குளமாவது மேடாவது" என்று உடன்பிறந்தோரே கேலி செய்ததன் பலன் இவரது போராட்டம் தோல்வி கண்டது. தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது 'தமிழரசுக்கழக' மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரை நீண்டுவிடும். அந்தப் பெருமகனார் தமிழக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த புடம் போட்டெடுத்த தியாக புருஷன். அவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமா?

வளமையான குடும்பத்தில் பிறந்து, வாய்ப்பும் வசதியும் நிரம்பப்பெற்றதன் பயனாகப் பல பெருந்தலைகளோடு பழக்கம் வைத்துத் தலைவனானவர்கள் பலர். கல்வியில் சிறந்து பட்டம் பெற்று, புகழ் பரவிநின்றதன் பயனாகப் பொது வாழ்க்கையிலும் தலையிட்டு முன்னேறியவர்கள் பலர். பெருந்தலைகளின் உதவியால் கைதூக்கி விடப்பட்டு பிரபலமானவர் சிலர். இப்படி எதுவும்  இல்லாமல், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வறுமை ஒன்றையே சொத்தாகக் கொண்ட ஒருவர், ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்கமுடியாத சூழலில், தான் பிறந்த குடியினரின் குலத்தொழிலான கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எதிர்ப்பைத் தனது கள் எதிர்ப்பினால் ஏற்படுத்திக் கொண்டு திண்டாடிய ஒரு தொழிலாளியின் வரலாறு இது.

இவர் செய்த தொழில்கள் பல. அதிலெல்லாம் இவர் முத்திரை பதித்தார். பின் எப்படிப் படித்தார். இவர் ஏற்றுக்கொண்ட அச்சுக்கோர்க்கும் தொழிலில்தான் அவருக்கு இந்த பலன் கிட்டியது. இப்போது போல அல்லாமல் அன்றைய தினம் அச்சடிப்பதற்கு விஷயத்தை ஒவ்வொரு எழுத்தாக அச்சு கோர்த்துத்தான் செய்து வந்தார்கள். அந்த பணி இவருக்கு. அங்கு விஷயம் அச்சில் ஏற ஏற இவர் மனத்தில் தமிழ் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியது. முதலில் இவரை 'கிராமணி' என்றும் 'கிராமணியார்" என்றும்தான் அழைத்தனர். அவ்வளவு ஏன்? ராஜாஜி கடைசி வரை இவரை 'கிராமணி' என்றுதான் அழைத்து வந்தார். இவர் அவரை ராமராகவும், தன்னை அனுமனாகவும் வர்ணித்து எழுதியும் பேசியும் வந்த உண்மையான ராஜாஜி தொண்டன் இவர். இவரது பணி சிறக்கச் சிறக்க சிலப்பதிகாரத்தை இவர் பிரபலமாக்க "சிலம்புச் செல்வர்" என்ற அடைமொழி இவர் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர்.
                                                            V.O.Chidambaram Pillai

சென்னையில் தேனாம்பேட்டைப் பகுதியில் வாழ்ந்த பொன்னுச்சாமி கிராமணியார்தான் இவரது தந்தை. தாயார் சிவகாமி அம்மையார். இவர்தான் ம.பொ.சியை உருவாக்கியவர். இவர் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள், பாடல்கள் இவைதான் இவரை ஓர் சத்திய புருஷராக உருவாகக் காரணமாக இருந்தன. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம். பிந்நாளில் ஞானப்பிரகாசமாக விளங்குவார் என்று எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ? பெற்றோரிடம் இவருக்கு அதீதமான பக்தி, அதிலும் தாயார் என்றால் அவருக்குக் கடவுளாகவே நினைப்பு. இவரும் படிக்கத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால் உடன் பிறந்த வறுமை, இவரால் புத்தகம் வாங்கக்கூட முடியாமல் மூன்றாம் வகுப்பிலிருந்து துரத்தப்பட்டார். ஆனாலும் அன்னை கொடுத்த கல்வி, அவரது ஆயுளுக்கும் பயன்பட்டது.

முன்னமேயே சொன்னபடி இவர் பல தொழில்களை வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்தார். நெசவுத்தொழில் செய்தார். அச்சுக்கோக்கும் பணியினைச் செய்தார். இவர் காந்திஜி, ராஜாஜி இவர்களைப் பின்பற்றி மதுவிலக்குக் கொள்கையில் மிக திடமாக இருந்த காரணத்தால் இவரது உறவினர், ஜாதியினர் கூட இவரை வெறுத்து ஒதுக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். இவரை ஜாதிப்பிரஷ்டம்கூட செய்து விட்டனர். இவ்வளவு கஷ்ட தசையிலும் இவர் நாட்டை நினைத்தார், குடிப்பழக்கத்தினால் அழிந்து போய்க்கொண்டிருக்கும் ஏழை எளியவர்களை நினைத்தார், நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை பரங்கியர்களை எப்படி விரட்டுவது என்று எண்ணமிட்டார்.

பதினைந்து ஆண்டுகள் வசித்துவந்த இவர்களது ஓலைக்குடிசை ஒருநாள் தீப்பற்றிக்கொண்டது. இவரது ஆழ்ந்த இறை நம்பிக்கை இவரைக் காப்பாற்றியது. 1928இல் இவருக்குத் திருமணம் ஆயிற்று. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த இளம் மனைவி கூற்றுக்கு இரையாகி விட்டார். இனி தேச சேவைதான் நமக்கு என்று மறுபடி திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். என்றாலும் பெற்றோரும் சுற்றத்தாரும் விடுவார்களா? 1937இல் தனது 31ஆம் வயதில் தனது மாமன் மகளான 17 வயது ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார்.
                                                                        Rajaji
அன்றைய பிரபலமான தேசபக்தரும், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களில் ஒருவரும், "தமிழ்நாடு" எனும் தினப்பத்திரிகையை நடத்தி வந்தவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவிடம் இவர் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு தொழிலாளர் பிரச்சினை. அது முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். போராடிய ம.பொ.சி. மட்டும் வெளியேற்றப்பட்டார். விதி விளையாடியது. மறுபடியும் வேலை தேடி அலையும் நிலைமை. அப்போது அவரது உறவினர் இவரைத் தன் கள்ளுக்கடையில் கணக்கு எழுத அதிக சம்பளம் ரூ.45 கொடுத்துக் கூப்பிட்டார். இவருக்கு கள்ளுக்கடைக்குப் போக இஷ்டமில்லை. மறுபடி அச்சுக்கோக்கும் பணியில் ரூ.18 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இவருக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. மனைவியின் வழியில் வந்த ஒரு வீட்டில் இவர் வாழ்ந்தார். இவரது பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர கிரிமினல்களுடன் வாழும் 'சி' வகுப்பு கைதியாக. கடைசி காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு 'ஏ' வகுப்பு கிட்டியது.

இவர் கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது. 1942 ஆகஸ்ட் 13ம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944 ஜனவரியில் இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். அதனால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர். தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10-30க்குக் கிளம்பும் ராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போகும் போது அரை நினைவிலிருந்த இவருக்கு யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். "ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது" என்று. என்ன கொடுமை?

மறுநாள் சென்னை எழும்பூரில் இவரை அழைத்துச் சென்றனர். இவரது சிறை வாழ்க்கை, பட்ட துன்பங்கள், இவரது உடல் நிலை இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. அடுத்ததைப் பார்ப்போம். இவர் வடசென்னை மதுவிலக்குப் பிரச்சாரக் குழு, ஹரிஜன சேவை, கதர் விற்பனை இப்படியெல்லாம் பணி செய்திருக்கிறார். வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் துன்பம் என்று அனுபவித்த ம.பொசிக்கு சுதந்திரம் கிடைத்த பிறகாவது நல்ல காலம் பிறந்ததா என்றால், அதுவும் இல்லை. அதுவரை அவருக்கு அதாவது சுதந்திரம் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் எதிரி. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான எதிரிகள், உள் கட்சியிலும், எதிர் கட்சியிலும். எல்லாம் அவர் பிறந்த நேரம்.

சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து விஷால் ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர். உடனே கலவரம். நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழு அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன.
                                                                                            Kavi Ka.Mu.Sheriff                          
 இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். காங்கிரஸ்  கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை. என்ன          

செய்வது. காங்கிரசை விட்டு வெளியேறினார். அவர் அதற்கு முன்பே கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த "தமிழரசுக் கழகத்தை" எல்லைப் போராட்டதில் ஈடுபடுத்தித்தானும் போரில் ஈடுபட்டார். எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சி இவரை தூக்கி வெளியில் எறிந்து விட்டது. போர் குணம் இவருக்கு உடன் பிறந்ததாயிற்றே. விடுவாரா. இவரும் முழு மூச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. அதில் இவருக்கு கே.விநாயகம் எனும் ஒரு தளபதியும் கிடைத்தார். இவர் திருத்தணியில் வழக்கறிஞராக இருந்தவர். பின்னாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிங்கம் போல நின்று வாதிட்டவர்.

ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லை போராட்டத்திலும் ஈடுபட்டார். தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேரள முதலமைச்சர், கேரள காங்கிரஸ் இவற்றோடு பேசிய பின், குளமாவது, மேடாவது என்று பேச, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இவர் எந்த இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அங்கு இவருக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் 'திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு" என்று அடிக்கடி நடத்தினார். அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். எதிரியின் காலடியில் விழுந்து விட்டார் ஆதாயம் தேடி என்று. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று இவர் ஒரு கர்ம வீரராக வாழ்ந்தார்.
Kamaraj

சுதந்திரதின பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போடில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந்தெல்லாம் புனித மண் எடுத்து அதையெல்லாம் டில்லியில் காந்திசமாதி ராஜ்காட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930இல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சிக்குக் கொடுத்தார். தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்து வந்து டில்லியில் சேர்த்தார். அதைப்பற்றி அவர் எழுதிய நூலில் அந்த பயணம் முழுவதிலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து கலந்து கொள்ளவோ, சந்திக்கவோ இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தாராம். தஞ்சை ரயில் நிலையத்தில் அன்றைய நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் டில்லி செல்வதற்காக நின்றிருந்த போது ம.பொ.சியைச் சந்தித்துப் பேசினாராம். தன் வாழ்நாள் எல்லாம் ராஜாஜியின் அந்தரங்க தொண்டராக இருந்தவர் இவர். எந்த பதவியையும் கேட்டுப் பெறாதவர் இவர். ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கிய போது எவ்வளவோ கூப்பிட்டும் ம.பொ.சி. அந்தக் கட்சிக்குப் போகவில்லை.

ராஜாஜி 1952இல் மந்திரிசபை அமைத்தபோது தஞ்சை நிலசீர்திருத்த சட்டம் 60:40 அவசரச்சட்டம் அமலாகியது. அந்த அவசரச் சட்டம் அமலாகிய தினம் ராஜாஜி தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில், தஞ்சை நிலப்பிரபுக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு. அதுவரை இப்படியொரு சட்டம் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காலையில் ராஜாஜி வந்து விட்டார். அன்றைய "தி ஹிந்து" பத்திரிகையில் அவசரச்சட்டம் பற்றிய செய்தி வருகிறது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் மத்தியில் என்ன செய்வது கூட்டத்தை ரத்து செய்வதா என்ற நிலை. ராஜாஜி கூட்டத்தில் எதிர்ப்புக்கிடையே பேசினார். அந்தக் கூட்டத்தில் சி.சுப்பிரமணியமும், ம.பொ.சியும்தான் அவசரச் சட்டத்தை விளக்கிப் பேசினர். ஒருவழியாக நிலப்பிரப்புக்கள் சமாதானமாகி கூட்டம் முடிந்தது. ஆனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு அதிகமானதால், ராஜாஜி ம.பொ.சியிடம் நீங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லா இடங்களிலும் சட்டத்தை விளக்கிப் பேசி அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று பணித்தார். அவரும் அதுபோலவே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். மாயவரத்தில் பேசும்போது இவர் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பொதுத் தொண்டில் சுதந்திர இந்தியாவிலும் அடிபட்ட தேசபக்தர் ம.பொ.சி.மட்டும்தான்.

இந்த மாமனிதன் நெடுநாள் வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இவர்1995ஆம் வருடம் அக்டோபர் 3ம் தேதி தனது 89ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்!

2 comments:

  1. "செயற்கரிய செய்வார் பெரியர்"
    தமிழ்நாட்டு காங்கிரஸ் இயக்கத்திற்கு இவ்வளவு சாபங்கள் இருக்கிறதா!

    ReplyDelete
  2. மாமனிதர் மா.பொ.சி. பற்றிய கட்டுரை அற்புதம். திராவிட இயக்கங்களை எதிர்த்து துணிச்சலாகக் குரல் கொடுத்தவர். சிறந்த தேசபக்தர். அன்னாரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவரது வாழக்கை வரலாறு சாதனைகளை ஒரு சிறு நூலாக வெளியிடலாமே.

    ReplyDelete

Please give your comments here