"தி ஹிந்து" பத்திரிகை ஸ்தாபகர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்
ஜி.சுப்பிரமணிய ஐயர் 'தி ஹிந்து' பத்திரிகையைத் தொடங்கியவர் என்பதோடு, மகாகவி பாரதியாரை மதுரையிலிருந்து அழைத்து வந்து தனது 'சுதேசமித்திரனில்' உதவி ஆசிரியராகச் சேர்த்து விட்டதன் மூலம் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க கால ஸ்தாபகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கம் வளரவும், உள்நாட்டினர் சுதேசி செய்திகளை அறிந்து கொள்ளவும் பத்திரிகைகளைத் தொடங்கியவர். அகில இந்திய காங்கிரஸ் வரை தனது பெயரையும் புகழையும் ஸ்தாபனம் செய்தவர். பேச்சில் மட்டுமல்ல, தனது செயலிலும் சமூக சீர்திருத்தங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிய மாபெரும் சமூகப் புரட்ச்சியாளர். இந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவரான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி இப்போது பார்ப்போம்.
இவர் தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் பாவாசாமி மடம் தெருவில், 1855ஆம் ஆண்டில் கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியரின் தவப்புதல்வனாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன்பிறந்தோர் அறுவர், ஒரு சகோதரி. இளம் வயதில் இவரது தந்தை காலமாகிவிட்டார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவையாற்றில் பயின்ற பின் தஞ்சாவூரில் மிஷினரி பள்ளியொன்றில் படித்து 1869இல் மெட்ரிக் தேறினார். பின்னர் அதே நிர்வாகம் நடத்திய கல்லூரியில் 1871இல் எஃப் ஏ எனும் இண்டர்மீடியட் தேறினார். சிறுவயதிலேயே மீனாட்சியம்மையை மணந்தார்.
சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். அப்போது அதற்கு நார்மல் ஸ்கூல் என்று பெயர். பிறகு இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் 1877இல் சேர்ந்தார். அங்கிருந்தபடியே பி.ஏ. தேறினார். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளி அப்போது ஆங்கிலோ-வர்னாகுலர் பள்ளி என்றிருந்தது. அதன் தலைமை ஆசிரியராக ஆனார். 1888இல் இவரே ஒரு உயர்நிலைப் பள்ளியை ஸ்தாபித்தார்.
திருவல்லிக்கேணியில் அந்தக் காலத்தில் 'இலக்கியக் கழகம்' எனும் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில் பல பெரியவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் டி.டி.விஜயராகவாச்சாரியார், டி.டி.ரெங்காச்சாரியார், பி.வி.ரெங்காச்சாரியார், டி.கேசவராவ் பந்துலு ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த சமயம் 1878இல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒரு இந்தியரை, சர்.டி.முத்துசாமி ஐயரை நீதிபதியாக ஆங்கில அரசு நியமித்தது. அப்போது ஆங்கிலேயர்களே நடத்தி வந்த 'தி மெயில்' போன்ற சில பத்திரிகைகள் இந்த நியமனத்துக்குப் பலத்த கண்டனம் தெரிவித்தன. தலையங்கங்களும் எழுதின. ஒரு கருப்பர் நீதிபதியாகிவிட்டால் இவர்கள் மற்றவர்களிடம் ஜாதிபாகுபாடு பார்ப்பதோடு பாரபட்சமாகவும் நடந்து கொள்வர் என்றெல்லாம் எழுதின. இதைக் கண்டு கொதித்துப் போன இலக்கியக் கழக உறுப்பினர் அறுவரும் தங்களிடமிருந்த ஒன்றே முக்கால் ரூபாய் பணத்தில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி முதலில் 80 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டனர். இப்படித்தான் முதன்முதலில் 'தி ஹிந்து' பத்திரிகை 1878 செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாயிற்று. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொய்ப் பிரச்சாரங்களை இந்த சுதேசி பத்திரிகை முறியடிக்கத் தொடங்கியது.
இந்த பத்திரிகை முதலில் வாரம் இருமுறை, மும்முறை என்றெல்லாம் வெளியாகி பின்னர் தினசரியாக மாறியது. 1898இல் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார், உரிமை விஜயராகவாச்சாரியரிடம் போயிற்று. பிறகு கஸ்தூரி ஐயங்கார் வசம் ஆனது. ஜி.எஸ். ஹிந்துவில் இருபது ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சென்னை மகாஜனசபை எனும் அமப்பு உதயமானது. 1883இல் ரிப்பன் பிரபு ஸ்தலஸ்தாபன சுயாட்சி திட்டத்தை அறிமுகம் செய்தார். இன்றைய கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து போர்டு போன்றவற்றுக்கு மூல காரணம் இந்த திட்டம்தான். சென்னை மகாஜனசபையின் ஆண்டுக் கூட்டம் 1884இல் நடந்தபோது மக்களின் கருத்துக்களை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் அமைப்பு தேவை என உணர்ந்தது. அதன் விளைவு பம்பாயில் அதற்கு அடுத்த ஆண்டு காங்கிரஸ் மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் முயற்சியால் இது தோன்றியது. ஒரு ஆங்கிலேயருக்கு ஏன் இந்த முயற்சி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு (சிப்பாய் கலகம்) இந்தியர்கல் விழித்துக் கொண்டுவிட்டார்கள், இனியும் அவர்களை கவனியாமல் விட்டால் ஆபத்து; ஆகையால் அவர்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு நிர்வாகம் செய்தால் தான் முடியும், மேலும் இந்தியர்களுக்குச் சில சலுகைகளையும் தர வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் எண்ணியதன் பலன் ஒரு ஆங்கிலேயர் காங்கிரசை நிறுவினார்.
முதன்முதலாக 1885இல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மகாசபையின் முதல் மாநாட்டில் மொத்தம் கூடிய 72 பிரதிநிதிகளில் சென்னை மாகாண பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் 21 பிரதிநிதிகள். காங்கிரசின் தோற்றத்துக்குச் சென்னை எந்த அளவுக்குக் காரணமாக விளங்கியிருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் சான்று. இந்த 21 பிரதிநிதிகளில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். அதுமட்டுமல்ல, இந்த முதல் காங்கிரசின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய பெருமை ஜி.சுப்பிரமணிய ஐயரையே சேரும். அப்போது அவருக்கு வயது முப்பது.
இந்தப் பெருமை குறித்து "காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்" எழுதிய மகாகவி பாரதியார் கூறுகிறார்:- "தமிழ்நாடு தவமுடையது. ஏனெனில் காங்கிரஸ் மகாசபையின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் பெருமை தமிழ்நாட்டுத் தலைவராகிய "சுதேசமித்திரன்" ஜி.சுப்பிரமணிய ஐயருக்கே கிடைத்தது".
சரி! அந்த முதல் தீர்மானம் கூறுவது என்ன? ஜி.சுப்பிரமணிய ஐயர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய உரையின் ஒரு பகுதி இது: "இன்று நாம் பேசும் பேறு பெற்றுள்ள நாள். என் முன்னே மரியாதைக்குரிய பெரியோர்கள் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குத் தொடர்பு கொள்ள முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள். லாகூர், சிந்து, பம்பாய், கல்கத்தா, சென்னை முதலிய இடங்களிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள். இது தேசிய வாழ்க்கை நம் நாட்டில் தொடங்கி விட்டதை அறிவிக்கின்ற கூட்டம். மிக விரைவில் நாம் இங்கு ஒரு பெரியத் திருப்பத்தைக் காணப்போகிறோம் என்பதை அறிவிக்கின்ற கூட்டம். இது தொடக்கம்தான். இதுவரை வாழ்ந்தது போலன்றி இனி நாம், நம் நாடு, இந்திய தேசியம், தேசியத்தில் நாட்டம் என்ற உணர்வோடு பேசப்போகிறோம்."
இந்திய தேசியம் பற்றிய முதல் முழக்கம் 1885இல் பம்பாயில் நமது ஜி.சுப்பிரமணிய ஐயரால் முழங்கப்பட்டது என்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செய்தி. பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களுக்கு தேசிய உணர்வு தேவை என்று முழக்கமிட்டதுதான் பம்பாய் காங்கிரசின் முக்கிய விளைவு. எனவேதான் 'காங்கிரஸ்' எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த இயக்கத்துக்கு "தேசிய" எனும் பொருள்படக்கூடிய "நேஷனல்" என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். இந்திய அரசியலை பகுத்து ஆராய்வதற்காக "ராயல் விசாரணைக் கமிஷன்" நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த முதல் தீர்மானத்தின் சாராம்சம். இந்த முதல் தீர்மானத்தை அடுத்து மொத்தம் எட்டு தீர்மானங்கள் நிறைவேறின. இந்த எட்டு தீர்மானங்களையும் முன்மொழிதல் அல்லது வழிமொழிதலைச் செய்தவர்கள் சென்னை மாகாணத்தவர்கள். அவர்கள்:- பி.அனந்தாச்சார்லு, நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர், மு.வீரராகவாச்சாரியார், டி.எஸ்.ஒயிட், பி.ரங்கய்ய நாயுடு, தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர், எஸ்.வெங்கடசுப்பராயலு பந்துலு ஆகியோர். இவர்களில் ஒயிட் என்பார் ஆங்கிலோ இந்திய அசோசியேஷனின் தலைவர். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 62 ஆண்டுகள் கழித்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், அதன் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஜி.சுப்பிரமணிய ஐயரை நினைத்து நாம் பெருமைப் படலாம்.
காங்கிரசில் கோபாலகிருஷ்ண கோகலே ஒரு மிதவாதி. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி. (இங்கு பயங்கரவாதி என்று பொருள்கொள்ளக் கூடாது - காங்கிரஸ் கொள்கைகளில் புரட்சிகரமான எண்ணங்கொண்டவர் என்பது பொருள்). ஜி.எஸ். திலகரின் வழித்தோன்றல். 1908இல் ஜி.எஸ். சுதேசமித்திரனில் எழுதிய ஒரு கட்டுரைக்காகக் கைது செய்யப்பட்டார். இவர் 1882 லேயே சுதேசமித்திரனைத் தொடங்கி விட்டார். தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் சுதேசமித்திரன் தான். அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்பது பெருமைக்குரிய விஷயம். இவர் ஒரு முறை மதுரைக்குச் சென்றிருந்த சமயம் அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக இருந்த பாரதியின் அறிவு கூர்மையையும், எழுதும் ஆற்றலையும் கண்டு அவரை சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்து உதவி ஆசிரியராக்கினார். நாட்டுக்கு ஒரு எழுத்தாளர், கவிஞர், நல்ல பத்திரிகை ஆசிரியர் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்.
ஜி.சுப்பிரமணிய ஐயர் தான் பேசும் பொதுக்கூட்டங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்ட பிறகு சிறு சிறு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார். அதற்காக இவர் தன்னுடன் ஒரு பெரிய பையையும் வைத்திருப்பார். அதில் அரசியல், சமூக சீர்திருத்தம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் போன்ற பல சிறு வெளியீடுகள் இருக்கும். அப்படி அவர் விநியோகம் செய்த ஒரு வெளியீடு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரைன் (Bryan) என்பவர் ஆற்றிய ஒரு உரையாகும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவு அது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வெளியிட்டார். அதைத்தான் அவர் எல்லா கூட்டங்களிலும் மக்களிடம் விநியோகித்தார். இது குறித்த புகார் ஒன்று சென்னை போலீஸ் கமிஷருக்குச் சென்றது. இந்த விவரங்கள் சென்னை போலீஸ் ஆவணங்களில் காணப்பட்டது.
இவருக்கு ஒரு மகள். அவர் இளம் வயதிலேயே விதவையானார். அந்த காலத்தில் எந்த வயதானாலும் அவர்கள் விதவைக் கோலம் பூண்டு வாழ்நாள் முழுவதும் உள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும். ஆனால் ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தன் மகளுக்கு மறுமணம் செய்விக்க முயற்சிகள் எடுத்து பம்பாய் சென்று அங்கு அந்தப் பெண்ணுக்குத் திருமணமும் செய்து வைத்தார். வைதீகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவர் அஞ்சாமல் செய்ததோடு, விதவைகள் மறுமணத்தை ஆதரித்து எழுதியும் வந்தார். பாரதியின் 'சந்திரிகையின் கதை' எனும் புதினத்தில் இந்த விவரங்கள் அனைத்தையும் சேர்த்திருப்பதைப் பார்க்கலாம்.
ஜி.எஸ். ஐயருக்கு தோலில் ஒரு வித நோய் ஏற்பட்டு மேலேயிருந்து நீர்வடியத் தொடங்கி அது மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது. வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த இவரைப் பார்க்க மகாத்மா காந்திஜியே வந்து அவரது புண்களைத் தன் மேல் துண்டால் துடைத்து ஆறுதல் கூறிச் சென்றார். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு இவர் 1916ஆம் ஆண்டில் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்!
சுவாமி விவேகானந்தர் ஜி. சுப்ரமணிய அய்யரைப் பற்றி தன் சென்னைப்
ReplyDeleteபிரசங்கத்தில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.
மஹாகவி பாரதியார் ஜி.எஸ் காஃபியை அனுப்பி வைத்து எப்படி வேலை வங்குவார் என்று நகைச்சுவையாக எழுதியுள்ளார்.
அஹா அற்புதம்! நான் அறிந்திடாத அருமையானத் தகவல்கள் தாங்கியக் கட்டுரை.
ReplyDeleteஜி.சுப்ரமணிய ஐயர், சி.சுப்ரமணிய ஐயர் (நிவேதிதா தாசன் மஹாகவி பாரதி). பெயரில் மட்டும் அல்ல, கொள்கையிலும் கூட மிகவும் பொருந்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
பாரதி பாடியது போல் ஜாதியில் பெருமை இல்லை (ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பின்னாளில் உரு மாறியது) என்பதைப் போல் ஐயராகப் பிறந்து ஐயராகவே (ஐயர் என்றால் உயர்ந்தவர் என்று தானே பொருள் / இராமாயணத்தில் வசிஷ்டர் வழி கம்பர் அதற்கு நல்ல விளக்கம் தந்திருப்பார் ) வாழ்ந்து காட்டியவர் இம் மாமனிதர் ஜி.எஸ்.ஐயர் அவர்கள் என்பதை படிக்கும் பொது மிகவும் சந்தோசமளிக்கிறது.
இவரைப் போன்ற மிகவும் உயர்ந்த சிந்தனையும் செயல்த் திறனும் பெற்றிருந்த திருநாட்டைத் தானே பாரதி "தந்தையர் நாடென்னும் பேச்சினிலே, ஒரு சக்தி பிறக்கிறது மூச்சினிலே" என்றான்.
புரட்சியாளர்கள் மறையலாம், அவர்களின் புரட்சியால் சமூகம் பலப் புதிய பாதையைப் பெற்றுள்ளது என்பது தான் உண்மை. இந்த தேவ தூதர்கள் இப் பூமியில் இன்னும் நிறைய உதயமாகட்டும்.
நன்றி.