சென்னை சதி வழக்கு
நன்றி: (கொடுமுடி இராஜகோபாலன் எழுதி திருச்சி மாவட்ட தியாகிகள் மலரில் அரியலூர் தியாகி சபாபதி வெளியிட்ட கட்டுரையின் தொகுப்பு )
பாரத புண்ணிய பூமியின் சுதந்திரத்துக்காக எவ்வித தியாகத்துக்கும் தயாராக இருந்த ஓர் இளைஞர் கூட்டம் சென்னை மாகாணத்தில் 1932ஆம் ஆண்டில் உருவாகியது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த இளைஞர்கள் பல புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார்கள். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தவர்கள் பத்மாசினி அம்மாள், ஸ்ரீநிவாசவரதன், தஞ்சை பி.வி.ஹனுமந்த ராவ், பி.கே.நாராயணன், எஸ்.ரங்கராஜன் எனும் கல்லூரி மாணவர். இவர்கள் முன்னிலை வகித்துப் பல தீர சாகசங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அனல் கக்கும் பிரச்சாரம் செய்வது; பிரிட்டிஷாரால் தடைசெய்யப்பட்ட தேசபக்தி பிரசுரங்களை இரகசியமாக அச்சிட்டு விநியோகம் செய்வது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வந்தனர்.
இந்த காலகட்டத்தில்தான் சுதந்திரப் போராட்ட வீரர் சவார்க்கர் எழுதிய "1858 முதல் இந்திய சுதந்திரப் போர்" எனும் நூல் வெளியானது. இதனை ஆங்கில சர்க்கார் தடை செய்தது. இந்த நூலை புதுச்சேரியில் மொழிமாற்றம் செய்து அங்கேயே அச்சிட்டு புத்தகங்கள் தமிழகத்துக்குள் கொண்டுவரப்பட்டன. இங்கு அந்த புத்தகம் இரகசியமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்த நூலை மொழிமாற்றம் செய்தவர் டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன். டி.வி.எஸ். குடும்ப விளக்கு அவர். அப்போது டாக்டர் செளந்தரமாக இருந்தவர் பின்னர் இராமச்சந்திரனை மணந்து கொண்ட பிறகு டாக்டர் செளந்தரம் இராமச்சந்திரன் என்று அறியப்பட்டார்.
1932இல் மகாத்மா காந்தியடிகளின் கட்டளையின்படி 'சட்ட மறுப்பு இயக்கம்' நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தில் ஈடுபட்ட தேசபக்தர்கள் மீது அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டது. அரசாங்கம் எத்தனைக்கெத்தனை அடக்குமுறையைக் கையாள்கிறதோ, அதற்கும் மீறி தேசபக்தர்களின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. எண்ணற்ற வீரர்கள் கைதானார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் அனேகமாக திருச்சிராப்பள்ளி சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். தமிழர்கள் தவிர மற்ற மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு இருந்தார்கள். 1918இல் இயற்றப்பட்ட இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளின்படி தண்டிக்கப்பட்டவர்களும், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு லாலா லஜபதிராய் இறக்கக் காரணமாக இருந்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோருடன் தண்டிக்கப்பட்ட பஞ்சாப் உட்பட வடநாட்டுக் கைதிகள் சிலரும் இந்தச் சிறையில் இருந்தனர்.
பின்னாளில் இந்திய பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த அப்போதைய புரட்சிக்காரர் சுரேந்திரமோகன் கோஷ், ஜீவன்லால் சட்டர்ஜி, பிரபுல் சந்திர கங்கூலி, ரொமேஷ் சந்திர ஆச்சார்யா, திரைலோக்யநாத் சக்ரபர்த்தி, சென் குப்தா ஆகிய வங்காளத்து கைதிகளும் இருந்தனர். குந்தன்லால் குப்தா, பி.கே.தத் ஆகியோரும் இந்தச் சிறையில் தண்டனையைக் கழித்தனர். இந்த தத் என்பவர் யார் தெரியுமா?
சார்ஜெண்ட் சாண்டர்ஸைக் லாகூரில் கொன்றுவிட்டு மாறுவேடத்தில் தப்பிச் சென்று கல்கத்தாவில் காலம் கழித்த பின் ஆக்ரா வந்து அங்கு வெடிமருந்து செய்து, வெடிகள் தயாரித்து மத்திய அசெம்பிளியில் வெடிகுண்டு வீசிய பகத்சிங்கோடு உடனிருந்து பங்கு வகித்தவர்தான் இந்த தத். தனது ஆயுள் தண்டனையை இங்கு கழித்து வந்தார். இவர் வங்காளத்தில் இயங்கிய ஜுகாந்தர் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சியைத் தோற்றுவித்தவர் அரவிந்த கோஷ். இவர்தான் பின்னர் ஆன்மீக நாட்டத்தில் புதுச்சேரி வந்து தங்கி மகான் அரவிந்த மகரிஷியானவர். இந்த புரட்சி இயக்கத்தில் பிரபலமான பல தலைவர்கள் அன்று தொடர்பு கொண்டிருந்தனர்.
சுப்பிரமணிய சிவா அவர்களின் தலைமையில் சுதந்திரப் போரில் குதித்து சிறைக்கு வந்த பல இளைஞர்கள் இத்தகைய வடநாட்டுப் புரட்சிக்காரர்களோடு பழக்கம் ஏற்பட்ட பின் தாங்களும் புரட்சி இயக்கங்களை நடத்த வேண்டுமென்ற எண்ணம் கொண்டனர். மகாத்மா காந்தியடிகளின் அமைதி வழிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை வந்தவர்கள் இவர்கள். அந்த வடநாட்டுக் கைதிகளோ வன்முறை புரட்சி இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு சிறைக்கு வந்திருப்பவர்கள். அவர்களின் தாக்கம் தமிழ்நாட்டு காந்திய வழி கைதிகள் சிலருக்கு ஏற்பட்டது. புரட்சிக்காரர்களும் காந்திய போராட்டக் கைதிகளும் சிறையில் அடிக்கடி சந்தித்துப் பழகுவதை சிறை அதிகாரிகளும் தடுக்கவில்லை.
ஆனால் சிறையில் அடைபட்டிருந்த மற்ற காந்தியவாத காங்கிரஸ் கைதிகளுக்கு தங்கள் இளைஞர்கள் புரட்சிக்காரர்களோடு பழகுவது பிடிக்கவில்லை. அந்த பழக்கத்தைக் கைவிடுமாறு போராடிப் பார்த்தனர். இந்த போதனைகள் எல்லாம் புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர்களிடம் எடுபடவில்லை. காங்கிரஸ் கைதிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறைவிடத்தில் இவர்கல் புரட்சிக்காரர்களோடு பழகுவதும், பேசுவதுமாக இருந்தனர். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்தப் புரட்சிகர தலைவர்கள் தமிழக காங்கிரஸ் இளைஞர்களுக்குப் பாடங்கள் எடுத்தனர். புரட்சி வழியில் சுதந்திரம் அடைந்த பல வெளிநாட்டு வரலாறுகளை எடுத்துக் காட்டினர். இந்தியாவில் அதுபோன்றதொரு புரட்சி இயக்கம் செயல்பட்டு வருவதையும் தெரிவித்தனர்.
புரட்சியைத் தூண்டும் பல புத்தகங்கள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. "ஐரிஷ் விடுதலைப் போராட்டம்" குறித்த புத்தகமும், தன்கோபால் முகர்ஜி என்பவர் எழுதிய "என் சகோதரன் முகத்தில்" எனும் புத்தகத்தமும் இவர்களுக்குப் படிக்கக் கொடுக்கப்பட்டன. இவை தவிர வெளியிலிருந்து ரகசியமாக சிறைக்குள் கொண்டுவரப்பட்ட பல புரட்சிகர இயக்க வெளியீடுகளும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. விளவு? தமிழகத்து இளைஞர்கள் சிலர் வன்முறையில் சுதந்திரப் போரில் ஈடுபட ஒரு இயக்கத்தை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் கொள்கைகளின் தாக்கத்தால் பல இளைஞர்கள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
இந்த இளைஞர்கள் கூட்டத்தில் அங்கம் வகித்த சிலரது பெயர்களைத் தெரிந்து கொள்வோமா? ப.ஜீவானந்தம், மதுரை பி.கே.நாராயணன்,நெல்லை வீரபாகுப் பிள்ளை, தூத்துக்குடி பி.சங்கரநாராயணன், ப.இராமசாமி, சி.பி.இளங்கோ, கொடுமுடி ராஜகோபாலன், கள்ளிடைக்குறிச்சி சுப்ரமணியம், டி.ராமச்சந்திரா, டி.பலராம ரெட்டி, பி.பாபிராஜு, கே.நாராயண நம்பியார், சி.ஓ.நாராயண நம்பியார், பட்டாபிராம ரெட்டி, எஸ்.கே.சுந்தரம், கே.அருணாசலம் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்தனர்.
சிறையிலிருந்து விடுதலையான சிலர் 1933 மே மாதம் 15ஆம் தேதி சென்னையில் கூடி தங்கள் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய ஆலோசனை செய்தனர். அப்போது மாணவராக இருந்த எஸ்.ரங்கராஜன் என்பவர் தொடர்பாளராக நியமிக்கப் பட்டார். இந்த ரகசிய இயக்கம் குறித்தும், இதில் யார் யாரைச் சேர்க்கலாம், எங்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தலாம் என்பதைப் பற்றியெல்லாம் இவர்தான் முடிவு செய்வார். மேலும் இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் டெல்லி மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசிய தத் என்பவரிடமிருந்து வெடிகுண்டு செய்வது குறித்தும் கற்றுக் கொண்டனர். இந்த தத் அவர்களும் பகத் சிங்கும் டெல்லி சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு ஓடிவிடவில்லை. அங்கேயே நின்று கைதானார்கள். அவர்கள் சபையில் யாருமில்லாத இடமாகப் பார்த்து உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில்தான் குண்டு எறிந்தனர். மேலும் வழக்கில் அவர்கள் வாக்குமூலம் கொடுக்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கத்தான் இந்த குண்டு வீச்சு, யார் உயிரையும் குடிக்க அல்ல என்றும் கூறியிருந்தனர். ஆக்ராவில் ஒரு பாழடைந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அங்குதான் இவர்கல் குண்டு செய்யக் கற்றுக் கொண்டனர். அந்தத் திறமையை இப்போது தது பிறருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அப்போது சென்னை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார். சென்னை பொது மருத்துவ மனையில் அவருக்கு வைத்தியம் செய்து வந்தார்கள். பிந்நாளில் சென்னை எவரெஸ்ட் ஹோட்டலின் உரிமையாளராக இருந்த எஸ்.கே.சுந்தரமும் சென்னை பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அப்போது இந்த இளைஞர்களுக்கு நேதாஜியின் அறிமுகமும் கிடைத்தது.
திருச்சி சிறையில் புரட்சிக்கு வித்திட்ட இந்த இளைஞர்கள் பிறகு சென்னை தங்கசாலைத் தெருவில் ஓர் இல்லத்தில் கூடினார்கள். புரட்சி இயக்கத்தில் ஒருவரான டி.இராமச்சந்திரா என்பவர் தங்கியிருந்த வீடு அது. பிந்நாளில் அகில இந்திய பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளராக இருந்த தொழிற்சங்கத் தலைவர் முகுந்தலால் சர்க்கார் அவர்களையும், பம்பாயில் 'வானர சேனை' எனும் அமைப்பைத் தோற்றுவித்தவரும், பம்பாய் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவரும், 'வான்கார்டு' இன்சூரன்ஸ் கம்பெனி அதிபரும், 'சுதந்திரம்' எனும் பத்திரிகையை பின்னாளில் நடத்தியவருமான ஹெச்.டி.ராஜா என்பவரையும் இந்த இளைஞர்கள் தொடர்பு கொண்டார்கள். 'ஆனந்த விகடனில்' பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமான மனிதர்களைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதிவந்த எழுத்தாளர் 'அருண்' எனும் கே.அருணாசலம், கே.கோபால சாஸ்திரி, எஸ்.கிருஷ்ணன் எனும் ஓர் முதுகலை பட்டதாரி, டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப் ஆகியோர் இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள்.
இந்தப் புரட்சியாளர்கள் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆயுதப் புரட்சிக்கு ஆங்காங்கே துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சேகரிப்பது, ஆங்கில அரசுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தொடர்பு சாதனங்களுக்கு தடை ஏற்படுத்துவது, நிதி வசதிக்காக வன்முறை நடவடிக்கைகளை எடுப்பது போன்ற பல செயல்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆனால் இவைகள் எல்லாம் ஆலோசனை அளவில் நின்றுவிட நேர்ந்தது. காரணம் அரசாங்கம் இவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட்டார்கள். அப்படி என்னதான் நேர்ந்தது இவர்களுக்கு?
ஒரு நாள் இவர்கள் இயக்கத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்த தேவராஜன் என்பவர் மூர் மார்க்கெட்டில் போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டுவிட்டார். இவரை சோதனை இட்டபோது இவரிடமிருந்த ரிவால்வர் போலீசார் கையில் சிக்கிவிட்டது. புரட்சிக்காரர்கள் சிக்க மாட்டார்களா என்று துழாவிக் கொண்டிருந்த போலீசுக்கு இப்படியொரு பிடி கிடைத்தால் விடுவார்களா? இவரைக் கொண்டு போய் 'நன்றாக' விசாரிக்கத் தொடங்கினார்கள். எத்தனை திட நெஞ்சம் கொண்டவரும் போலீசின் விசாரணையில் உண்மைகளைக் கக்காமல் இருக்க முடியுமா? உடனே தங்கசாலை தெருவில் இவர்கள் தங்கியிருந்த வீடு சோதனைக்கு உள்ளாகியது.
அங்கு துழாவியதில் போலீசுக்குப் பல ஆதாரங்கள் சிக்கின. ஆனால் உருப்படியாக வழக்கு போடும்படியாக எந்த குற்றத்தை முன்னிலைப் படுத்தி இவர்களை உள்ளே தள்ளுவது? அவர்களுக்குச் சொல்லியா தெரிய வேண்டும். ஒரு ஜோடனை தயார் செய்யப்பட்டது. மாநிலத்தின் பல இடங்களிலும் சோதனைகள் நடந்தன. ஒரு கதை உருவானது இந்த இளைஞர்களுக்கு எதிராக. நல்ல கற்பனை வளம் கொண்டு அதிகாரிகள் அத்தனை பேரையும் ஒருசேர உள்ளே தள்ளிட நல்லதொரு வாய்ப்பாக இதனைக் கருதினர்.
1933 ஜூலை மாதத்திற்குள் அனேகமாக எல்லா இளைஞர்களும் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பிடியில் கிடைத்தவர்கள் முகுந்தலால் சர்க்கார் உட்பட மாகாணத்தின் மொத்தம் 19 இளைஞர்கள். இவர்களெல்லாம் வெளியில் இருந்தவர்கள். அதனால் அப்போது சிறையில் இருந்த ப.ஜீவானந்தம், பி.கே.சங்கரநாராயணன், வீ.வீரபாகு பிள்ளை, கொடுமுடி ராஜகோபாலன் ஆகியோர் வழக்கின் கொக்கியில் சிக்காமல் போயினர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது. அரசாங்க அதிகாரிகளைக் கொலை செய்யவும், வங்கிகளைக் கொள்ளை அடிக்கவும் சதி செய்ததாக இந்த இளைஞர்கள் மீது IPC 120 (b) செக்ஷன்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஐ.பி.சி. பிரிவு வளைந்து கொடுக்கக் கூடியது. எத்தனை பேரை வேண்டுமானாலும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் கோர்த்து வாங்க இந்தப் பிரிவு வசதியாக இருக்கும் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்தனர். வழக்கில் குற்றவாளிகள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம், முதல்வரும் பத்தாமவரும் இதில் வருகிறார்கள். பத்தாவது குற்றவாளிக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு என்றால், அவர் முதல் குற்றவாளிக்கும் தெரிந்தவர் என்று அவரையும் இதில் இழுத்து விட்டுவிடலாம். இப்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியல்:
முகுந்தலால் சர்க்கார், கே.அருணாசலம் என்கிற அருண், டி.கோபால சாஸ்திரி, டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப், ஜி.லோகநாதன், டி.கண்ணன், சபாபதி, கண்ணாயிரம், எஸ். ரங்கராஜன், டி.ராமச்சந்திரா, கே. நாராயண நம்பியார், பலராம ரெட்டி, தசரதராம ரெட்டி, ஜி.பாலகிருஷ்ண ரெட்டி, ஜி.காலய்யா ரெட்டி, பட்டணம் பாலி ரெட்டி, பி.பாபிராஜு, சி.ஜெகநாதன், கனூர் ராமானந்த செளதுரி ஆகியோர்.
ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதில் நீதிபதியாக இருந்தவர் நீதிபதி டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யங்கார். சிந்தாதரிப்பேட்டையில் இருந்த ஒரு நூலகம் நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணை இரண்டு மாதங்கள் நடந்தன. இந்த சதி வழக்கில் இருவர் அப்ரூவராக மாறினர். அவர்கள் எஸ்.கிருஷ்ணன், என்.பட்டாமிராம ரெட்டி. போலீசின் சாமர்த்தியத்தால் இவர்கல் அப்ரூவராக மாறியதாகக் கூறுவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஒரு பெரிய வழக்கறிஞர் குழுவினர் ஆஜராயினர். அவர்கள், காங்கிரஸ் தலைவர் கே.பாஷ்யம், டி.எஸ்.வெங்கடராமன், என்.எஸ்.மணி, சூசர்லா சூர்யபிரகாசம், டி.பிரகாச ராவ், வி.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர்.
இந்த வழக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நடத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் பிரபல காங்கிரஸ் தலைவராக இருந்த பி.ஜெகநாத தாஸ் (இவர் பிந்நாளில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) தலைமையில், பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் பி.ஆர். எனப்படும் பி.ராமமூர்த்தி, இவர் செயலாளராக இருந்தார். விசாரணை கைதிகள் சிறையில் மிகுந்த தொல்லைகளை அனுபவித்தனர். ரிமாண்டு கைதிகளுக்கான எந்த வசதிகளும் இவர்களுக்குத் தரப்படவில்லை. எனவே இவர்கள் சிறைக்குள்ளே போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்திலும் இவர்கல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததனால் நீதிமன்றம் நடத்த முடியாமல் போனது. பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இவர்களுக்குச் சிறையில் சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
வழக்கில் சுமார் நூறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணைக்குப் பிறகு செஷன்சுக்கென்று உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. M.C.C. 1/1934 எனும் இந்த வழக்கு 1934ஆம் வருஷம் ஜனவரி 8ஆம் தேதி நீதிபதி பெர்க்கென்ஹாம் வால்ஷ் என்பவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிரெளன் பிராசிகியூட்டர் கே.பி.எம்.மேனன் அரசாங்க சார்பில் வழக்கு நடத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு குழு ஆஜராகவிருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் ஈடுபட்டு வழக்குகளில் ஆஜராகமலிருந்த ஆந்திர கேசரி டி.பிரகாசம் எதிரிகளுக்கு ஆஜராவதற்காக வந்தார். பிரபல கிரிமினல் லாயர் ப.ராஜகோபாலாச்சாரியார், பி.நாராயண குருப், அரசாங்கத்தால் எதிரிகளுக்காக நியமிக்கப்பட்ட பி.ஜெகநாதன் ஆகியோரும் ஆஜராயினர். வழக்கு நீண்ட நாட்கள் நடந்தது. இடைப்பட்ட காலத்தில் கிரெளன் பிராசிகியூட்டர் மேனன் இறந்து போனார். மாற்று ஏற்பாட்டில் ஒரு ஆங்கிலேயர் அனந்தராமன் என்பவரை உதவியாளராக வைத்துக் கொண்டு வழக்கை நடத்தினார். குறுக்கு விசாரணைகள் முடிந்து ஜூரர்கள் அபிப்பிராயம் கொடுத்ததில் இருவர் தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் என்று முடிவாகியது. அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
முகுந்தலால் சர்க்காருக்கு நான்கு ஆண்டுகள் சிறைவாசம். பத்து பேருக்கு தலா மூன்று ஆண்டுகள், சபாபதி, கண்ணாயிரம் விடுதலை ஆகினர். இரண்டு அப்ரூவர்கள் விடுதலையாகினர். இதில் சிறை ஐ.ஜி. என்ன செய்தார் தெரியுமா? வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னாலேயே எல்லோரும் தண்டனை பெறுவார்கள் என்ற நினைப்பில் அவர்களைப் பிரித்து குழுக்களாக பல சிறைகளுக்கு வைத்து விட்டார். பெல்லாரி சிறைக்கு இவர் ஐந்து பேரை அனுப்பினார். இருவர் விடுதலையானது அவர் தெரிந்திருக்கவில்லை அல்லவா? அங்கு சிறை அதிகாரி ஐந்து பேருக்கு நான்கு பேர்தான் இருக்கிறார்கள். மீதி ஒருவர் எங்கே என்கிறார். அவர் விடுதலை என்று சொன்னார்கள். அதற்கு முன்பே இந்த ஆங்கில அதிகாரி அனைவருக்கும் தண்டனை என்று எப்படி முடிவு செய்தார். எல்லாம் அவர்கள் சர்வாதிகாரம் தானே!
அப்போதைய சிறைவாசம் இப்போது போலவா? கொடுமையிலும் கொடுமை. அந்தக் கொடுமையில் கோபால சாஸ்திரி சிறையில் இறந்தே போனார். நல்ல உடல்வாகு உள்ள அவர் வயிற்றுக் கடுப்பு உண்டாகி நல்ல சிகிச்சையும் இன்றி, உணவும் அருந்த முடியாமல் இறந்தார். உடல் உபாதை பொறுக்க முடியாமல் ஒரு முறை அவர் தற்கொலைகும் முயன்றிருக்கிறார். அதற்காகத் தற்கொலை முயற்சி வழக்கு போட்டார்கள். ஆனால் அந்த வழக்கு முடியும் முன்பாக அவர் சிறையில் இறந்து போனார்.
கோவை சிறையில் இரு கைதிகள் தனிமைப் படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். மகாத்மா காந்தி கூட இந்த இளைஞர்கள் ஏற்றுக் கொண்ட பாதை காந்திய வழிக்கு எதிரானது என்றாலும், அவர்கள் தேசபக்தி கருதி நல்ல பாரிஸ்டரை அனுப்பி வாதாடச் சொல்கிறேன் என்று முன்வந்தாராம். எனினும் இந்த இளைஞர்கள் தங்கள் தண்டனைக் காலத்தை சிறையில் அனுபவித்துவிட்டு வெளிவந்தனர். இந்த நாடு அந்தத் தியாகிகளை நினைவில் வைத்திருக்கிறதா? இதனைப் படிக்கும் அன்பர்கள்தான் சொல்ல வேண்டும்.