மதுரை மாவட்ட தியாகிகள்:
சுந்தரராஜ ஐயங்கார்.
இவர் 1899ஆம் ஆண்டில் பிறந்தவர். பத்தாம் வகுப்பு வரை படித்தார். இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். டாக்டர் எஸ்.சுந்தரராஜ ஐயங்கார் எனும் இவருடைய பெயரை பொதுவாக அனைவரும் I.D.F. என்றே குறிப்பிட்டு வந்தனர். இவர் சிறு வயதில் முகவும் முரடனாக இருந்திருக்கிறார். 1918இல் இந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சியைப் பெற்றார். அதன் பயனாக துப்பாக்கி சுடும் பயிற்சியும் இவருக்கு உண்டு. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் புகுந்து இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கிய நாளில் அவருடைய கொள்கை, வழிமுறைகள் இவற்றால் ஈர்க்கப்பட்டு இவர் காந்தி பக்தரானார். முதன்முதலில் காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து மகாத்மா காந்தி அறிவித்த எல்லா போராட்டங்களிலும் இவர் பங்கேற்றார். மிகவும் எளிமையானவர்; எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவர். முதுகுளத்தூர் தாலுகாவில் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக அந்தப் பகுதிகளில் கள்ளுக்கடைகளை இரண்டு முறை மூடும்படியான நிலைமையை உண்டாக்கினார்.
1922இல் மேலூரில் இவர் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1923ஆம் ஆண்டு மறுமுறையும் மறியலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டதற்காக 6 மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருட தண்டனை கிடைத்தது.
பொதுக்கூட்டங்களில் இவர் எளிமையான நடையில் பேசுவார். இவரது பேச்சில் நகைச்சுவை இருக்கும். மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர். பல சின்னஞ்சிறு கதைகளைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பார். இவர் பேசுகிறார் என்றால், அதைக் கேட்பதற்கென்றே மக்கள் திரளாகக் கூடுவர். தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பல தொழிலாளர் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இவர் காலமாகிவிட்டார்.
மு.சுப்பையா பிள்ளை.
மதுரை முனுசாமிப் பிள்ளையின் மகனாக 1911இல் பிறந்தவர் சுப்பையா பிள்ளை. 1930இல் தேசிய காங்கிரசில் இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடவேண்டுமென்கிற எண்ணத்தில் இணைந்தவர். 1930ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கு கொள்ளவிருக்கிறார் என்பதை அறிந்து இவரைப் பிடித்துக் கொண்டு போய் சப் ஜெயிலில் அடைத்து வைத்துவிட்டார்கள். 1932இல் அன்னிய துணி மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு ஒரு ஜவுளிக் கடையின் முன்பாக இவர் மறியல் செய்த போது கைது செய்யப்பட்டு 4 மாத கால சிறை தண்டனை பெற்றார். மதுரை சிறையில் தண்டனை காலத்தைக் கழித்தார். 1933இல் மறுபடியும் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவனந்தபுரம் சமஸ்தானப் பகுதிக்குச் சென்று அங்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டு அங்கு சிறையில் இருந்தார்.
1941இல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டரை வருஷ சிறை தண்டனை பெற்று தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார். 1940இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றார். அதில் இவர் கைதாகி 10 மாத கால சிறை தண்டனை பெற்று, அலிப்புரம் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். மேடைப் பேச்சில் வல்லவர். இவருடைய ஆவேசமான பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு. இவர் காலமாகிவிட்டார்.
ர.சிதம்பர பாரதி.
1905இல் பிறந்தவர் சிதம்பர பாரதி. இவருடைய தந்தையார் பெயர் ரங்கசாமி. 1920இல் தனது 15ஆம் வயதில் அரசியலில் ஈடுபட்டார். மதுரையில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் இவர் பங்கு கொண்டார். முதலில் வன்முறையில் ஆர்வம் இருந்தபோதும், மகாத்மா காந்தியடிகளின் தாக்கம் இவரை சாத்வீகராக மாற்றியது. சுப்பிரமணிய சிவா தனி மனிதனாக ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் பிரச்சாரம் செய்த காலத்தில் இவர் அவருடைய பணிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வீர சவர்க்கார் எழுதிய 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து 1927இல் நடந்த சென்னை காங்கிரஸ் மகாநாட்டில் அனைவருக்கும் விநியோகித்தவர். அந்த நூலை மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ்.குடும்பத்தின் டாக்டர் செளந்தரம் அவர்கள். அந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டது என்பதும் அதை படிப்பதோ விநியோகிப்பதோ குற்றம் என்றிருந்த் நேரத்தில் இவர் அந்தப் பணியில் செயல்பட்டார். அந்த நூலைப் படிப்பதோ, வைத்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இருந்த நேரம் அது. 1928இல் சென்னையில் இவர் ஒரு பத்திரிகையை நடத்தினார். அதன் பெயர் "தேசோபகாரி" என்பது. இவர் தனது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏழுமுறை, அதாவது 1922, 23, 24, 29, 32, 40, 42 ஆகிய ஆண்டுகளில் போராட்டங்களில் கலந்து கொண்டமைக்காகச் சிறை சென்ற தியாகி. மதுரை நகர காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மாகாண காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருந்து வந்தவர். நல்ல சொற்பொழிவாளர். இவரது மேடைப் பேச்சு அனைவரையும் கவர்ந்திழுக்க வல்லது. முன்னாள் சட்டசபை உறுப்பினராக இருந்த இவர் காலமாகிவிட்டார்.
மதுரை தியாகராஜ சிவம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் ஒரு கிராமத்தில் கிராம முன்சீபாக இருந்த சுப்பையர் என்பவரின் குமாரன் இவர். 1900ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆஜானுபாகுவான தேகக் கட்டு, முறுக்கு மீசை, வெள்ளை கதர் ஆடை இவற்றோடு இவர் பெரும் கூட்டத்திலும் பளிச்சென்று தோற்றமளிப்பார். மனதால் மிகவும் மென்மையானவர். இரக்க குணம் படைத்தவர். 1921ஆம் ஆண்டு வாக்கில் சுப்பிரமணிய சிவா மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஊர் ஊராகச் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்த காலத்தில் பல இளைஞர்கள் அவருடைய பேச்சால் கட்டுண்டு காங்கிரஸ் இயக்கத்திற்குள் இணைந்தனர். அப்படி வந்தவர்களில் தியாகராஜ சிவமும் ஒருவர். தான் வகித்து வந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இவர் ஈடுபட்டார். காரியத்திலும் செயலிலும் இவர் மிகவும் கண்டிப்பானவர். அவருடைய பேச்சே மிகவும் கண்டிப்பு மிகுந்ததாக இருக்கும். அவருடைய காலத்தில் இளைஞர்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர் நீலகண்ட பிரம்மச்சாரி. தானும் அவரைப் போல ஒரு தீரமிக்க சுதந்திரப் போராளியாக ஆக வேண்டுமென்பதற்காகத் தன்னுடைய பெயரையும் முதலில் தியாகராஜ பிரம்மச்சாரி என்று வைத்துக் கொண்டார். சுப்பிரமணிய சிவத்திற்கு இவரை மிகவும் பிடிக்கும். இவரை அன்புடன் பீமண்ணா என்றுதான் அழைப்பார். சுப்பிரமணிய சிவம் மதுரையில்ருந்து தொழுநோய் காரணமாக ரயிலில் ஏற அனுமதிக்கப்படாமையால் கால் நடையாகவே நடந்து தொண்டர்களுடன் பாப்பாரப்பட்டிக்குச் சென்று அங்கு உயிர் துறந்தார் அல்லவா? அப்போது சிவம் மகாசமாதி அடைந்த பிறகு அவர் நினைவாக இவர் தன்னுடைய பெயரை தியாகராஜ சிவம் என்று மாற்றிக் கொண்டு, உலகுக்குத் தான் சிவத்தின் வாரிசு என்பதை உணர்த்தினார்.
இவர் 1922இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டும், 1932இல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் இவர் மொத்தம் பதிமூன்றரை மாதங்கள் சிறையில் இருந்தார். தன்னுடைய சிறை வாசத்தை இவர் கடலூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கழித்தார். இவர் சிறந்த பேச்சாளர். இவருக்கு செல்லம்மாள் எனும் மனைவி இருந்தார்.
மதுரை எஸ்.வி.கே. தாஸ்.
1916ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1936இல் தனது இருபதாம் வயதில் காங்கிரசில் சேர்ந்தார். 1938ஆம் ஆண்டு முதல் பல ஊர்களுக்கும் சென்று கிராம மக்களிடம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரசின் முழு நேர தொண்டனாக இவர் பணியாற்றினார். ஹரிஜன முன்னேற்றம், கள்ளுக்கடை எதிர்ப்பு ஆகிய போராட்டங்களில் இவர் பங்கு கொண்டார். காசியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் மாளவியா அவர்களின் பெயரால் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இவர் பணியாற்றி வந்தார். அடிப்படையில் சோஷலிச எண்ணம் உடைய இவர் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற சோஷலிஸ்ட் கட்சியில் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டார். 1949இல் இவரோடு இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொண்டரான பங்கஜத்தம்மாள் என்பவரை இவர் மறுமணம் செய்து கொண்டார். 1972இல் இவர் காலமானார்.
மதுரை தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்.
இளம் வயதிலேயே பால்ய விவாகம் செய்து கொண்டவர் இவர். கணவர் சீனிவாச ஆழ்வாருடன் பஜனைப் பாடல்களும், மேடைகளில் சுதந்திரப் பாடல்களும் பாடி பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தி வந்தார். இவர் பலமுறை சிறை சென்றார். இரண்டரை ஆண்டுகள் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1972 வரை இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. காந்திஜி தலைமையில் இவர் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் 1979 ஜூலை 1இல் இறந்தார்.
திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து.
மதுரை மாவட்டம் திம்மநத்தம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.ஆர்.தங்கமுத்து. இவர் பிறந்தது 24 பிப்ரவரி 1914ஆம் வருஷம். இவர் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்டவர். 1932ஆம் வருஷம் அன்னிய துணி பகிஷ்காரம் செய்து ஜவுளிக் கடைகளின் வாயிலில் மறியல் செய்தார். எனினும் இவர் வயதை எண்ணி இவரைக் கைது செய்யவில்லை. 1942இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறிய போது பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். ஆங்காங்கே காங்கிரசில் பங்கு பெற்ற தொண்டர்கள் பலரும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இவரும் 1942இல் பாதுகாப்பு கைதியாக ஒரு வருஷ காலம் சிறை வைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் தேசிய இலவச பள்ளிக்கூடமொன்றை நடத்தி வந்தார். ஏழை எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அறிவினை ஊட்ட இவர் அந்தப் பள்ளியைப் பயன்படுத்தினார். அது தவிர கதர் அபிவிருத்தி, கதர் பிரச்சாரம் விற்பனை ஆகியவற்றிலும், ஹரிஜன சேவைகளிலும் இவர் பணியினைத் தொடர்ந்தார். முதலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் உறுப்பினராக இருந்த இவர் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் வாழ்நாளில் ஏழைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தி இருந்தார்.
மதுரை கே.என்.கிருஷ்ணன்.
மதுரை நாகசாமி ஐயரின் மகனாக 15-3-1915இல் பிறந்தவர் கிருஷ்ணன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி இவரும் தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தியடிகள் அறிவித்த போது இவர் அதில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை கிடைத்தது. இவர் மொத்தம் மூன்று முறை சிறை சென்றிருக்கிறார். அலிப்புரம் முதலான பல சிறைகளில் இவர் தண்டனை அனுபவித்து இருக்கிறார்.
மதுரையில் 'தீச்சட்டி' கோவிந்தன் எனும் போலீஸ் அதிகாரி இருந்தார். இவர் 1942 அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்ற பெண்களைப் பிடித்து போலீஸ் வண்டியில் ஏற்றி வெகுதூரம் கொண்டு சென்று ஒருவரும் வரமுடியாத காட்டுப் பகுதியில் அவர்களது துணிகளை உருவிக்கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் கொடுத்த துணிகளை அணிந்து கொண்டு அந்தப் பெண்கள் அழுதுகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். இந்தச் செய்தியைக் கேட்ட மதுரை தேசபக்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அந்த இன்ஸ்பெக்டர் 'தீச்சட்டி' கோவிந்தனை பழிவாங்குவது என முடிவெடுத்தனர். அந்த இன்ஸ்பெக்டரின் உண்மையான பெயர் விஸ்வநாதன் நாயர் என்பது. ஒரு நாள் அந்த இன்ஸ்பெக்டர் தனியாக மாட்டிக் கொண்ட நேரத்தில் தேசபக்த இளைஞர்கள் ஒன்றுகூடி அவர் மீது அக்கினி திராவகத்தை ஊற்றி, அவர் முகத்தையும் உடலையும் சேதப்படுத்தி விட்டுத் தப்பிவிட்டனர். அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் கே.என்.கிருஷ்ணனும் ஒருவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அதில் அக்கினி திராவகம் வீசியதாக இவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
இருந்தாலும் போலீஸ் இவர்களை விடுவதாக இல்லை. வேறு ஏதாவது வழக்கில் இவர்களை கைது செய்துவிட துடித்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள் தூக்கிச் சட்டத்தின்படி இவர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி ஒரு வருடமும் மூன்று மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் இவர் இருந்தார்.
அநீதிகளைக் கண்டு பொங்கும் குணமுள்ளவர் இவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தியாகி. நல்ல உழைப்பாளி. தமிழ்நாடு தியாகிகள் சமிதியின் மதுரை நகரப் பொதுச் செயலாளராக இருந்தவர். மாகாண தியாகிகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர்களில் இவரும் ஒருவர். மதுரை நகர முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அமரர் ந.சோமையாஜுலுவுக்கு உறுதுணையாக இருந்து வந்தவர். மக்கள் போற்றும் மாபெரும் தியாகி.
மு. பழனியாண்டி சேர்வை.
இவர் 1930இல் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போரில் தொண்டராகச் சென்று கைதாகி சிறை சென்றவர். அந்த வழக்கில் இவருக்கு 6 மாத சிறை தண்டனை கிடைத்தது. ஊர் ஊராகப் பயணம் செய்து காங்கிரஸ் கொள்கைகளை மக்களுக்கு விளக்கி வந்தவர். 1942இல் நடந்த குவிட் இந்தியா போரில் இவருக்கு ஒன்றரை வருட ஜெயில் தண்டனை கிடைத்தது. வேலூரில் இவர் பாதுகாப்பு கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். காந்தியக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சிறந்த காந்தி பக்தர். அகிம்சை கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய குடும்பத்தில் இவரது சகோதரர்களும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு தியாகங்கள் புரிந்தவர்கள். தம்பி சண்முகம் மற்றும் பல நண்பர்கள் இவருடன் தேச சேவையில் ஈடுபட்டனர்.
மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.
1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.
மதுரை எம்.என்.ஆதிநாராயணன்.
மதுரையில் நாராயணசாமி நாயக்கரின் மகனாக 1913ஆம் வருஷம் பிறந்தவர் ஆதிநாராயணன். 1930இல் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பி காங்கிரசில் உறுப்பினரானார். 1932இல் அன்னிய துணி பகிஷ்காரம் நடந்து வந்த போது, இவர் தொண்டர்களுடன் அன்னிய துணிகளை விற்கும் ஜவுளிக் கடைகளின் முன்பு அன்னிய துணிகளை வாங்காதீர்கள் என்று மறியல் செய்தார். அதற்காக இவருக்கு 6 மாத சிறை தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனை என்பது தீர்ப்பு. அபராதம் கட்ட மறுத்து சிறை தண்டனையை அனுபவித்த பின் இவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். 1930 உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி, பல போராட்டங்களில் 1942 வரை இவர் பங்கு பெற்றிருக்கிறார். பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சிறைகள் இவருக்கு சிறை வாசம் செய்யும் இடமாக இருந்தன. தொழிலாளர் நலனில் அக்கறையுடன் தொழிற்சங்கங்களிலும் பங்கு பெற்றார் இவர். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சங்கத்துக்குத் தலைவராகவும் இருந்தார்.
எம்.ஆர்.எஸ்.மணி.
1912இல் மதுரையில் எஸ்.ராமசாமி சேர்வை என்பவரின் மகனாகப் பிறந்தவர் மணி. 1930இல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்துக்கு மதுரையில் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில் தேர்வாகி திருச்சி செல்ல காத்திருந்த சமயம் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரை பாளையங்கோட்டையில் கொண்டு போய் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது 4 மாத காலம் சிறைவாசம் முடிந்த நிலையில் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1941இல் இவர் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு 11 மாத காலம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து 1942இல் விடுதலையாகி வெளியே வந்த இவரை மறுபடியும் கைது செய்து மதுரையில் 1 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் சிறை சென்றார். இப்போது அவர் சென்றது அலிப்புரம் ஜெயில். 1943இல் விடுதலையானார். ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. மீண்டும் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூரில் 1 மாதம், தஞ்சையில் 18 மாதங்களும் காவலில் வைக்கப்பட்டார். மதுரையில் இருந்த தேசபக்தர்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போனவர்களில் இவரும் ஒருவர். தொழிலாளர் சங்கங்களில் ஈடுபாடு கொண்டவர். பெருந்தலைவர்களாக இருந்த பசும்பொன் தேவர், ப.ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். மதுரையில் மணீஸ் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.
ஏ.வி.செல்லையா.
இவரது தந்தையார் ஒரு சிறந்த தேசபக்தர். எனவே அவருடைய பிள்ளைகளும் அப்படியே. இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது. இவருடைய சகோதரர் அணுகுண்டு ஏ.வி.அய்யாவு ஓர் பிரபலமான போராட்டக்காரர். தேசபக்தர். இவரும் பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையா.
எம். சிவசாமி.
மா.இருளாண்டி பிள்ளை என்பவரின் மகன் இவர். 1920இல் பிறந்தவர். 1940இல் இவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். 1942 புரட்சியில் இவர் பல இடங்களில் புரட்சியைத் தூண்டியமைக்காகக் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு 6 மாத சிறை தண்டனை கொடுத்து பெல்லாரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
து. நவநீதகிருஷ்ணன்.
மதுரையில் துரைசாமி நாயுடு என்பவருக்கு 1909இல் பிறந்தவர் து.நவநீதகிருஷ்ணன். 1930இல் சட்ட மறுப்பு இயக்கத்தின் மூலம் இவர் சுதந்திரப் போரில் குதித்தார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. 1930 ஆகஸ்ட் முதல் இவர் பாளையங்கோட்டை, ராஜமகேந்திரபுரம், சிறைகளில் அடைக்கப்பட்டார். காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சிறந்த நிர்வாகி, சிறந்த தேசபக்தர்.
நல்ல தகவல். அய்யா !! உங்கள் தகவலில் சுதந்திர போராட்டத்தில்முஸீம்களின் பங்கு பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும் ! விரைவில் எதிர் பார்க்கிறேன்.
ReplyDelete