Followers

Friday, November 30, 2012

பி.கே.மூக்கையா தேவர்

                                                  பி.கே.மூக்கையா தேவர்

தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.

மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளிர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர் இனத்தில் இந்த பிறமலைக் கள்ளர் இனம் பெரும்பான்மையானது. வீர பரம்பரையினரான இப்பிரிவினரை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து இவர்களுக்கு உரிய இடத்தைப் பெற தேசபக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மூக்கையா தேவரின் முயற்சியும் இந்த இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.

1952இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.

இவருடைய கட்சியின் பெருந்தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். ராமனாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971இல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபா நாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபா நாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பினராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது.

1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும். 1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் "உறங்காப் புலி", அதாவது தூங்காத புலி எனப் பெருமப் படுத்தி அழைக்கப்பட்டார்.

வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்க மூக்கையா தேவர் புகழ்!

டி.எல்.சசிவர்ணத் தேவர்

டி.எல்.சசிவர்ணத் தேவர்
(6-8-1912 டொ 7-11-1973)

தென் தமிழகத்தில் தலை சிறந்த தலைவராகவும், முக்குலத்தோர் போற்றும் மாமனிதராகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வழியில் வாழ்ந்தவருமான முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் இந்த சசிவர்ணத் தேவர். முத்துராமலிங்க தேவருடன் இவரும் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர்.

ராமனாதபுரம் மாவட்டத்தில் டி.லாடசாமி குருவம்மாள் தம்பதியினருக்கு 1912இல் பிறந்தவர் சசிவர்ணம். 1934இல் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியினர் தங்கள் சமூகத்தை குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தியிருந்த கொடுமையை எதிர்த்துப் போராடினார். இவர்களுடைய போராட்டத்தின் காரணமாகத்தான் அந்தக் குற்றப் பரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார்.

1939இல் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 'பார்வார்டு பிளாக்' கட்சியில் சேர்ந்த போது, சசிவர்ணமும் அவருடன் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போசை ஆதரிக்கும் கட்சி. புதிய அரசியல் அமைப்பின்படி நடத்தப்பட்ட முதல் தேர்தலில் இவர் இந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957 தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து பார்வார்டு கட்சி வேட்பாளராக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தேவர் பெரும் வெற்றி பெற்றார். முதுகுளத்தூர் சட்டமன்றத்துக்கும் உறுப்பினராக இருந்த தேவர் அசெம்பிளி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்திற்கு சசிவர்ணத் தேவர் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

தொடர்ந்து முதுகுளத்தூர் பகுதியில் 1957இல் கலவரங்கள் நடந்தன. கலவரங்களை நிறுத்துவதற்காக சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அரசு முயற்சியில் இந்தப் பகுதியில் எல்லா ஜாதியினரும் அமைதியோடு வாழ வழிவகை காண்பதற்கு சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் சசிவர்ணம் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தேவர் சமுதாயத்தினர், நாடார் சமுதாயத்தினர், தேவேந்திர குலத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேவர் குலத் தலைவரும், மக்களின் அன்புக்குப் பாத்திரமானவருமான உ.முத்துராமலிங்கத் தேவர் 1963 அக்டோபர் 30இல் உடல் நலம் குன்றி காலமானார். அதனைத் தொடர்ந்து பார்வார்டு பிளாக் கட்சியின் தலைமைக்குப் போட்டி ஏற்பட்டது. சசிவர்ணத் தேவருக்கும் மூக்கையா தேவருக்கும் போட்டி. இதில் மூக்கையா தேவர் வெற்றி பெற்றதையடுத்து இந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிவர்ணத் தேவர் பிரிந்து போய் சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் எனும் கட்சியைத் தொடங்கினார்.

கட்சி அரசியலில் இவர்கள் பிரிந்திருந்தாலும், இவர்கள் அனைவருமே தேசபக்த சிங்கங்கள் என்பதில் ஐயமில்லை. நாடு சுதந்திரம் பெற்றதற்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் இவர்களுடைய பங்களிப்பு அளப்பற்கரியது. வாழ்க தேசபக்த சிங்கம் சசிவர்ணத் தேவர் புகழ்!

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி

                                      ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி

வலங்கைமான் சங்கர நாராயண ஸ்ரீனிவாச சாஸ்திரி காங்கிரசின் தொடக்க கால மிதவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர். இந்த வரிசையில் வீரம் செறிந்த பல புரட்சிக்காரர்களைப் பற்றியெல்லாம் எழுதிவிட்டு இப்போது முந்தைய மிதவாத காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைக் கொடுத்து வருகிறேன். இவர்களும் தீவிரவாத காங்கிரஸ்காரர்களுக்கு எந்த விதத்திலும் தேசபக்தியில் குறைந்தவர்கள் அல்ல. மிதவாதிகள் என்று பார்த்தால், அவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து, பதவி இவற்றில் இருந்தவர்களாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் சமூக நிலைமையிலிருந்து இறங்கி வந்து சாலையில் நின்று போராடுவதில்லை. தங்கள் அறிவுத் திறன், வெள்ளை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி இவற்றைக் கொண்டு மேல் நிலையில் இருந்து பாடுபட்டவர்கள். ஆகவே தீவிர காங்கிரசார், மிதவாத காங்கிரசார் இடையே எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமெங்கிற நோக்கில் இவைகள் தரப்படுகின்றன. இந்த சுய விளக்கத்தோடு வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி எனும் அறிஞரும் தேசபக்தருமான இவரைப் பற்றிய கட்டுரையைத் தருகிறேன்.

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று சொன்னவுடன் ஆங்கிலத்தில் இவரை "வெள்ளி நாக்கு சாஸ்திரி" என வழங்குவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் இவரது ஆங்கிலப் பேச்சாற்றல். பிறக்கும் போதே அந்தத் திறமையுடன் பிறந்தவர் என்பதைக் குறிக்க அவரைப் பற்றி அப்படிச் சொல்லி வந்தார்கள். அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர், வட்டமேஜை மா நாட்டுப் பிரதி நிதி, காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பு என்று பல்முனை ஆற்றல் படைத்த இவர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22இல் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சங்கர நாராயண சாஸ்திரி.அவர் இருந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி கற்ற இவர் பின்னர் கும்பகோணம் சென்று அங்குள்ள நேட்டிவ் உயர் நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரி படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று 1887இல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் புலமை பெற்று விளங்கினார். பின் சிலகாலம் சேலம் முனிசிபல் கல்லூரியில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர் நிலைப் பள்ளியில் 1894இல் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அங்கு இவர் 1902 வரை சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றி யிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இவருடைய ஆங்கிலப் புலமை நாட்டுக்குத் தெரிய வந்தது. நிர்வாகத்திலும் முத்திரை பதித்தவர் ஸ்ரீனிவாச சாஸ்திரி. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பின்னாளில் துணை வேந்தராகப் பணியாற்றி பெருமை சேர்த்தவர். இவர் பணியாற்றிய காலத்தில் அங்கு பெரும் புலவர்கள் குறிப்பாக ரா.ராகவ ஐயங்கார், சோமசுந்தர பாரதியார் போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

1885இல் இவர் பார்வதி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெயர்த்தி கவுசல்யா பிரபலமான விஞ்ஞானியான சர்.சி.வி.ராமனின் மருமான் எஸ்.ராமசேஷன் என்பவரை மணம் செய்து கொண்டார்.

இவர் அரசியலுக்கு வந்தது 1905ஆம் வருடம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் காங்கிரசில் மகாத்மா காந்தி வரவில்லை. திலகர், கோகலே போன்றவர்கள் இருந்தாலும் நமது கோரிக்கை பரிபூரண சுதந்திரம் என்ற அறிவிப்பு வராத காலம். சுதந்திரத்தை அடைய எந்த வழியில் போராடப் போகிறோம் என்று அறியாத நிலையில் அப்போதைய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசருக்கு வாழ்த்துப்பா பாடி மகா நாடுகள் நடத்தி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த மிதவாத காங்கிரஸார் வாழ்ந்த காலம். இதை மனத்தில் வைத்துக் கொண்டால் நிலைமை நன்கு புரிந்து கொள்ளலாம்.

1908இல் இவர் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். இது 1922 வரை தொடர்ந்தது. பின்னர் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது இவர் காங்கிரசிலிருந்து விலகிவிட்டார். இந்தியன் லிபரல் கட்சி என்றோரு கட்சியை இவரோடு கருத்து ஒற்றுமை உடையவர்களோடு சேர்ந்து தொடங்கினார். பின்னாளில் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் இவர் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் இவர் பணியாற்றினார்.
முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இது இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் இவர் இந்தியப் பிரதி நிதியாக இருந்தார். இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவின் பிரதி நிதியாகவும் இருந்திருக்கிறார்.

இப்போதெல்லாம் மிகப் பெரிய நகரங்களில் வாழ்வோர் மட்டுமே ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக பேசுகிறார்கள் என்கிற எண்ணம் உண்டு. அப்போது கும்பகோணத்தில் அரசு கல்லூரியில் படித்த ஸ்ரீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலம், ஆங்கிலேயர்களே கேட்டு வியக்கும் வண்ணம் இருந்ததாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார். இதனையொட்டியே வெள்ளி நாக்கு படைத்தவர் எனப் பெயர் பெற்றார். மகாத்மா காந்தியோடும், கோபாலகிருஷ்ண கோகலே யுடனும் இவருக்கு நல்ல பழக்கமும் தொடர்பும் இருந்தது. மகாத்மா இவரைத் தன் அண்ணன் என்று அழைப்பது வழக்கம். பிரிட்டிஷ் நகரங்கள் பல இவருக்குப் பல விருதுகளைக் கொடுத்து கெளரவித்திருக்கின்றன.

சென்னை ஆசிரியர்கள் கில்டு எனும் அமைப்பை இவர் தோற்றுவித்தார். தமிழ் நாட்டின் கூட்டுறவு இயக்கம் உருவாகக் காரணகர்த்தர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். திருவல்லிக்கேணி அர்பன் கோ ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் 1904 உருவானது இவரது முன்முயற்சியால்தான்.
1906இல் இவர் கோபாலகிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார். அவர் தொடங்கிய சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியில் இவர் உறுப்பினர் ஆனார். 1915இல் இவர் அதன் தலைவராகவும் ஆனார். 1908 முதல் 1911 வரை இவர் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். 1913இல் இவர் சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உறுப்பினர் ஆனார். பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தை இவர் தீவிரமாக எதிர்த்தார். இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்படும் உரைகளில் ஒன்று.

1930-31இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மகா நாட்டில் இவரும் மகாத்மா காந்தியுடன் கலந்து கொண்டார். மகா நாடு தோல்வியில் முடிந்தாலும் 1935இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்தார். இவர் 1946 ஏப்ரல் 17ஆம் தேதி தனது 76ஆம் வயதில் சென்னை மைலாப்பூரில் தனது இல்லத்தில் காலமானார். வாழ்க ஸ்ரீனிவாச சாஸ்திரி புகழ்!

பி.எஸ்.சிவசாமி ஐயர்

                                 பி.எஸ்.சிவசாமி ஐயர் (7-2-1864 முதல் 5-11-1946)

சர் பழமானேரி சுந்தரம் சிவசாமி ஐயர் பொதுவாழ்விலும், மிதவாத காங்கிரஸ் இயக்கத்திலும், சட்டத்துறையிலும், கல்வித் துறையிலும் பெரும் புகழ் பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் 1864 பிப்ரவரி 7ஆம் தேதி பிறந்தவர். தான் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் இவர் தன் அறிவுத் திறமையால் ஒரு ஸ்டேட்ஸ்மென் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். சட்டத் துறையில் இவரது உச்ச கட்டம் 1907 முதல் 1911இல் இவர் சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய காலமாகும்.

இவருடைய இளம் வயதுக் கல்வி பழமானேரி கிராமத்திலும், பட்டப் படிப்பு சென்னை ராஜதானிக் கல்லூரி (மானிலக் கல்லூரி) யிலும் நடந்தது. வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு மிகத் திறமையுள்ளவராகத் திகழ்ந்ததால் இவர் மா நிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப் பட்டு திறம்பட செயல்பட்டார்.

அவருடைய காலத்தில் இப்போது போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுஜன ஜன நாயக அமைப்புகள், சட்டசபைகள் கிடையாது. மா நில கவர்னருக்கு ஆலோசனை சொல்வதற்கான ஒரு சபை மட்டும் இருந்தது. அந்த சபைக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப் படுவார்கள். மக்கள் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை. அப்படி கவர்னரின் ஆலோசனை சபையில் இவர் அங்கம் வகித்தார். இவர் தனது 82ஆம் வயதில் 1946 நவம்பர் 5ஆம் தேதி காலமானார்.

அப்போது உருவெடுத்து இந்தியர்களின் கவனத்தை ஈர்த்து வந்த காங்கிரஸ் இயக்கம் உருவாக்கிய சுதந்திர எழுச்சி இவரிடமும் உருவான காரணத்தால் இவரும் இந்திய சுதந்திர தாகத்தோடு செயல்பட்டார். இப்போது உள்ள ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் ஏற்பட்டது. அதற்கு முன்பு லீக் ஆஃப் நேஷன்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு செயல்பட்டு வந்தது. அந்த அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்ற சிவசாமி ஐயர் இந்தியா சுதந்திரம் அடைய வேன்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மக்கள் கல்வி அறிவு பெற நூல்களைப் படிக்கும் அவசியத்தை உணர்ந்து, நூலகங்கள் உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நடவடிக்கைகள் எடுத்தார்.

பழமானேரி என்பது திருக்காட்டுப் பள்ளி அருகே, கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிறு கிராமம். இவ்வூரில் வாழ்ந்தவர் சுந்தரம் ஐயர் என்பவர். இங்கு வாழ்ந்த பிராமணர்களில் பெரும்பாலோர் பிரகசர்ணம் எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். சுந்தரம் ஐயரும் அப்படியே. இவர்களுக்கு பிரகசர்ணம் எனும் பெயர் வரக் காரணமொன்று சொல்கிறார்கள். அதாவது மாமன்னன் இராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு பல நாடுகளை வெற்றி கொண்ட மன்னனாக ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன் விளங்கினார். அவருடைய படைத் தளபதியாக விளங்கியவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர் என்பவர். இவருடைய வாரிசுகள் பிரகசர்ணம் எனும் பிரிவினராகக் கருதப் படுகின்றனர்.
சர் சிவசாமி ஐயர் தன்னுடைய கல்லூரி படிப்பை 1882இல் முடித்தார், அதாவது மகாகவி பாரதியார் பிறந்த ஆண்டு அது. இவர் கல்லூரியில் எடுத்துக் கொண்ட பிரிவு வரலாறு. சம்ஸ்கிருதத்திலும் நல்ல புலமை உடையவர் இவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து முடித்த இவர் வக்கீலாகப் பதிவு செய்து கொண்ட ஆண்டு 1885, காங்கிரஸ் இயக்கம் முதன்முதலாக உருவான ஆண்டு.
புகழ்பெற்ற வக்கீலாக பிராக்டீஸ் செய்து வந்த இவரை கவர்னரின் ஆலோசனை சபைக்கு நியமனம் செய்தது 1904 மே மாதம் 12ஆம் தேதி. கவர்னர் ஆலோசனை சபையில் அட்வகேட் ஜெனரலாக நியமனம் ஆன நாளான 1907அக்டோபர் 25ஆம் தேதி வரை பணியாற்றினார்.

சென்னை பல்கலைக் கழகம் மிகப் புகழ்பெற்றது. அதன் செனட் உறுப்பினராக இவர் 1898இல் நியமனமானார். சென்னை பல்கலைக் கழக துணை வேந்தராக இவர் 1916 முதல் 1918 வரையிலும் இருந்தார். அதன் பின்னர் காசி இந்து சர்வகலாசாலையின் துணை வேந்தராக நியமனமாகி காசிக்குச் சென்றார்.
இவருடைய அரசியல் வாழ்க்கை 1912இல்தான் தொடங்கியது. அப்போது செய்து கொள்ளப்பட்ட மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் விளைவாக இவர் கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினரானார். இந்தப் பதவியில் இவர் 1912 முதல் 1917 வரை நீடித்தார். 1914இல் முதல் உலக யுத்தம் ஐரோப்பாவில் ஆரம்பமானது. அப்போது இந்திய தொண்டர்கள் யுத்த சேவக்குத் தேவைப் பட்டனர். அவர்களைத் தயாரித்து அனுப்பும் பணியிலும் சிவசாமி ஐயர் ஈடுபட்டார்.

இவர் ஒரு மிதவாதி என்பதை முன்பே பார்த்தோம். இவர் ஆங்கில அரசோடு ஒத்துப் போவதையும், அன்னிபெசண்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் முடிவை கவர்னர் கவுன்சில் எடுத்தபோது இவர் எதிர்க்காததோடு ஆதரவாக நடந்து கொண்டதும், தேசிய வாதிகள் மத்தியில் கசப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதற்கு அந்த காலகட்டத்தில் இருந்த மிதவாத காங்கிரசார் ஆங்கில அதிகாரிகள் நிர்வாகம் இவற்றுக்கு எதிரான கருத்து சொல்லவோ, நடவடிக்கை எடுக்கவோ தயங்கிய காலம். இருந்தாலும் 1919இல் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாகில் மக்கள் கொடுமையாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பொது இவர் வெகுண்டெழுந்தார். ஜெனரல் டையரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
1922இல் லீக் ஆஃப் நேஷன்ஸில் தென்னாப்பிரிக்க சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் ஸ்மட்ஸின் நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக இவர் அவரைக் கண்டித்து உரையாற்றினார். பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு எந்தவித சலுகைகளைக் கொடுக்கலாம் என்பதைக் கண்டறிய ஜான் சைமன் தலைமையில் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பிய போது அதனை இந்திய தேசிய வாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல இடங்களில் போலீஸ் தடியடி அராஜகம் நடந்தேறியது. பஞ்சாபில் லாலா லஜபதி ராய் தடியடியில் உயிரிழந்தார். அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு உட்பட கோவிந்த் வல்லப் பந்த் போன்றோர் தடியடியில் காயமடைந்தனர். அந்த சைமன் கமிஷன் இந்தியாவுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சிவசாமி ஐயர்.
1931இல் இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். அவருடைய மூத்த வயதில் இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதறிந்து வேதனையுற்று இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். கல்வித் துறையில் ஆர்வம் காரணமாக சென்னை திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் உயர் நிலைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். அவை இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.

சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியடிகளின் வரவுக்குப் பிறகு உத்வேகம் பெற்று பற்பல தியாகிகளை உருவாக்கியது. ஆனால் காந்தி, திலகர் காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், அதே நேரம் நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர் சர் டி.சிவசாமி ஐயர். வாழ்க அவர் புகழ்!

Thursday, November 29, 2012

பி.எஸ்.குமாரசாமி ராஜா

                                                        பி.எஸ்.குமாரசாமி ராஜா

சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிவதற்கு முன்பு சென்னை மாகாணம் மிகப் பெரிய மாகாணமாக இருந்தது. அந்த பெருமைக்குரிய சென்னை மாகாணத்தின் சுதந்திரத்துக்குப் பின் முதல் பிரதமர் (அதாவது முதலமைச்சரை அப்படித்தான் சொல்வார்கள்) பதவி வகித்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த திரு பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள். 1949 ஏப்ரல் 6 முதல் 1952 ஏப்ரல் 10ஆம் தேதி வரை இவர் அந்தப் பதவியில் இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். 1952இல் புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல்கள் நடந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவி வகித்தார். இவருடைய வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.

பூஜாபதி சஞ்சீவி ராஜா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் இந்த குமாரசாமி ராஜா. இவரது ஊர் முன்பே சொன்னது போல ராஜபாளையம். பிறந்த ஒரு சில நாட்களிலேயே அன்னையை இழந்த துர்ப்பாக்கியசாலி இவர். மூன்று வயது ஆனபோது தந்தையும் இறந்தார். கூடப் பிறந்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் தனிமையில் அவருடைய பாட்டியால் வளர்க்கப்பட்டார். ராஜபாளையம் பகுதிகளில் ஆந்திரப் பகுதிகளிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டில் வந்து குடியேறிய படைவீரர்கள் பரம்பரையினரை ராஜா என்று அழைப்பர். அந்தக் குடியில் வந்த இந்த குமாரசாமி ராஜா பள்ளிக் கல்வியை முடித்தவுடன் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றார். உள்ளாட்சி முறை மூலம் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்பதால், இவர் உள்ளாட்சி விவகாரங்களில் ஆர்வம் காட்டினார்.

அன்னி பெசண்டின் ஹோம்ரூல் இயக்கத்தில் ஆர்வம் காட்டினார். தீரர் சத்தியமூர்த்தியின் வீர முழக்கங்கள் இவரது சுதந்திர நாட்டத்தை அதிகரித்தன. காங்கிரஸ் இயக்கத்தையும், மகாத்மா காந்தியையும் இவர் உயிருக்குயிராக நேசித்தார். முதன் முறையாக மகாத்மா காந்தியை இவர் சந்தித்த பிறகு இவர் தனது வாழ்க்கை முறையையே எளிமையாக மாற்றிக் கொண்டார். காந்திய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் நற்காரியங்களில் இவர் ஈடுபடலானார்.
1932இல் சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் முதன் முறையாக சிறை சென்றார். விடுதலையான பிறகு 1934இல் திரு நெல்வேலி, மதுரை, இராம நாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சார்பாக சென்னை சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெறும் காலகட்டத்தில் ஆந்திர கேசரி டி.பிரகாசம், ராஜாஜி ஆகியோருக்கிடையே சென்னை மாகாணத்திற்கு யார் பிரதமராக வருவது என்ற பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி ராஜாவின் பெயரைத் தேர்ந்தெடுத்தது. 1949 தொடங்கி 1952 வரையிலான காலகட்டத்தில் இவர் சென்னை மாகாண முதலமைச்சராக (பிரதமர்) பதவி வகித்தார்.

 இவருடைய காலத்தில்தான் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறைவாயினர். 1952இல் முதல் தேர்தல் நடந்த போது, காங்கிரஸ் கட்சி வலுவிழந்து போன நிலையில் நேருவின் ஆலோசனைப்படி, காமராஜ் அவர்களின் சம்மதத்துடன் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்க அழைக்கப்பட்டார். இதன் பிறகு குமாரசாமி ராஜா ஒரிசா மானிலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இவருடைய ஆட்சி காலம் சென்னை மாகாணத்தில் பல குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைக் கண்டது. அவை மதுவிலக்கு அமலாகியது. கதர் கைத்தறி ஆடைகளுக்கு புத்துயிர் கிடைத்தது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேசம் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்டது; கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது போன்ற பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

ராஜபாளையத்தில் பலரும் மிகப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தனர். செல்வ செழிப்பு மிக்க சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தனது பிரம்மாண்டமான வீட்டை காந்தி கலை மன்றம் எனும் அமைப்புக்குத் தானமாக அளித்தார். இவர் சென்னை ராஜதானியில் பதவி வகித்த காலத்தில் பவ நகர் மகாராஜா கவர்னராக பதவி வகித்தார்.

கடுமையான சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலும், பிரிட்டிஷ் அடக்குமுறை தாண்டவமாடிய காலகட்டத்திலும் இந்தியா பிளவு பட்டு பாகிஸ்தான் உருவான போதும், சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் நல்வாழ்வுக்காக பாடுபடவேன்டியிருந்த காலகட்டத்திலும், சிக்கலான நேரத்தில் இவர் முதல்வர் பதவி வகித்த காரணத்தால், பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம், இவர் திறமையோடு கையாண்டார் என்பது கவனிக்கத்தக்கது. அமைதியும், பொறுமையும், நடு நிலைமையும் இவரது ஆயுதமாகப் பயன்பட்டது. சிறப்பான இடத்தைத் தனக்கென அமைத்துக் கொண்ட தியாகி குமாரசாமி ராஜா புகழ் வாழ்க!

எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

                                                        எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்

செருகுடி அனந்தராம சுவாமி நாத ஐயர் எனவும் தஞ்சாவூர் சாமி நாத ஐயர் எனவும் எஸ்.ஏ.எஸ். என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞ்சர். அது தவிர பிரம்மஞான சபையில் உறுப்பினர், நல்ல நிர்வாகி இவையெல்லாவற்றையும் காட்டிலும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் கல்வியை அதே ஊரில் இருந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. எனப்படும் இன்டர்மீடியட் படித்தார். தொடர்ந்து சென்னைக்குச் சென்று 1874இல் பட்டப் படிப்பை முடித்த பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

வழக்கறிஞராக இவர் திறமையோடு பணியாற்றியதைத் தொடர்ந்து இவர் நாகப்பட்டினத்தில் அரசாங்க வக்கீலாக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் நகரசபை உறுப்பினராகவும் இவர் இருந்தார். அப்போது சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் போட்டியிட்ட தொகுதி ஊராட்சி நகர் மன்றங்கள் தொகுதியாகும்.

அப்போதெல்லாம் இப்போது போல தொகுதிகள் கிடையாது. ஆசிரியர்கள், ஊராட்சி மன்றங்கள் போன்ற தனித்தனி தொகுதிகள் இருந்தன. இவரைத் தோற்கடித்தவர் திருச்சினாப்பள்ளியைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் ஐயர் ஆவார். 1883க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் தஞ்சாவூரில் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமனம் பெற்றார்.

அந்த பதவியை இவர் வகித்த காலத்தில் 1892இல் தஞ்சாவூர் மாவட்ட மிரசுதார்கள் அரசு அப்போது விதித்த நிலவரி அதிகரிப்பை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் சாமி நாத ஐயர்.

மிதவாத காங்கிரசார் மட்டுமே அப்போதைய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். பால கங்காதர திலகர் காலத்துக்குப் பிறகுதான் தீவிர காங்கிரசாரும், சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் கோஷமும் எழுந்தது. சுவாமி நாத ஐயர் காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு பெட்டிஷன் போட்டு சலுகைகளைக் கேட்கும் மிதவாதம் மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட மிதவாத காங்கிரஸ்காரராக திரு சுவாமி நாத ஐயர் விளங்கினார்.

காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாட்டோடு பிரம்மஞான சபையின் பால் ஈர்க்கப்பட்டார் இவர். இந்து மதத்தின் தேவையற்ற கசடுகளை நீக்கி உண்மையான பிரம்ம ஞானத்தைப் பரப்பும் நோக்கத்தோடு உருவான தியாசபிகல் சொசைட்டி எனப்படும் இந்த சபையில் அவர் ஆர்வம் கொள்ளத் தொடங்கி 1880 முதல் அதில் உறுப்பினராக ஆனார். இந்த சபையை உருவாக்கியவர் மேடம் பிளாவ்ட்ஸ்கி என்பவரும் கர்னல் ஹெச்.எஸ்.ஆல்காட் ஆகியோராவர். 1883யில் இவர் நாகப்பட்டினம் பிரம்ம ஞான சபையின் செயலாளராக ஆனார். தொடர்ந்து இவர் தஞ்சாவூர் வந்த பின்னர் தஞ்சை கிளையின் தலைவராக 1892இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையில் இருந்த மஹாஜன சபையின் உறுப்பினர்கள் சேர்ந்து காங்கிரஸ் அமைப்பை உருவாக்க முடிவெடுத்து அதற்கான கூட்டத்தை பம்பாய் நகரத்தில் 1885இல்நடத்தினார்கள். அப்போதுதான் முதன் முதலாக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. முதலில் அது ஒரு வெள்ளையரின் தலைமையில் தொடங்கப்பட்ட போதும், அந்த கூட்டத்துக்குச் சென்று கட்சி தொடங்கியவர்களில் சுவாமி நாத ஐயரும் ஒருவர். காங்கிரஸ் இயக்கம் அப்போது மக்கள் சங்கம் எனும் பெயரில் ஏற்பட்டபோது தஞ்சை மக்கள் சங்கத்தில் இவர் தலைவராக இருந்து செயல்பட்டார். பம்பாயில் நடந்த முதல் கூட்டத்தில் மொத்தமாக 72 பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் சென்னை ராஜதானியிலிருந்து சென்றனர். பம்பாயில் தேஜ்பால் சம்ஸ்கிருத கல்லூரியில் நடந்தது இந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் சுவாமி நாத ஐயர் உப்புக்கு வரி போடும் வழக்கத்தை எதிர்த்து சிறப்பானதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1930இல் மகாத்மா காந்தி உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியதை நாம் அறிவோம். அதற்கு முன்பாகவே இந்தப் பிரச்சினை முதல் காங்கிரசிலேயே விவாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. உப்பு வரி தவிர சுவாமி நாத ஐயர் காங்கிரசில் குரல் கொடுத்த மற்ற பிரச்சினைகளில் கடுமையான சுங்க வரி மற்றும் பர்மாவை இணைத்துக் கொண்டது ஆகிய பிரச்சினைகளும் அடங்கும்.

                                            Delegates in the first Congress Session in 1885

இந்து கோயில்களின் நிர்வாகம் குறித்தும் இவர் ஆர்வம் காட்டினார். கும்பகோணம் தேவஸ்தான தேர்தலில் இவருக்கும் பூண்டி வீரையா வாண்டையார் அவர்களுக்குமிடையே போட்டி இருந்திருக்கிறது. 1888-89 ஆண்டுகளில் இவ்விருவர் கட்சிகளும் சமமான பலத்துடன் இருந்ததால் இவ்விருவர் கட்சியிலிருந்தும் மூன்று நபர்கள் தேவஸ்தானம் போர்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுவாமி நாத ஐயர் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வமுடையவர். இவர் காலத்தில் தஞ்சையில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். சங்கீத ஆய்வில் முன்னணியில் இருந்த எஸ்.ஏ.கே.துர்கா இவருடைய பெயர்த்தி ஆவார்.
பிற்காலத்திய காங்கிரஸ் தலைவர்களோடு ஒப்பிடமுடியாவிட்டாலும் காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்த மிதவாத காங்கிரஸ்காரர் என்ற முறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் காங்கிரஸ் காரர் என்கிற முறையிலும் அவருடைய புகழ் வாழ்க!

ஏ.என்.சிவராமன்

ஏ.என்.சிவராமன்

ஆம்பூர் நாணு ஐயர் சிவராமன் எனும் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் "தினமணி" பத்திரிகையும், அதன் தலையங்கங்களும், கட்டுரைகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அளவு மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டவர் ஆசிரியர் ஏ.என்.சிவராமன். 97 வயது வரை வாழ்ந்து மறைந்த இந்த மாமனிதர் பத்திரிகை உலகுக்கு ஓர் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், சுதந்திரப் போர் தியாகி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும், மிக எளிமையாகக் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றவர் என்பதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.

இவருக்கு 17 மொழிகள் தெரியும், அதில் பிரெஞ், சம்ஸ்கிருதம், உருது இவைகளும் அடங்கும்.1988இல் இவருக்கு பி.டி.கோயங்கா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருது பத்திரிகைத் துறையில் சிறப்பான பணிக்காக அளிக்கப்படும் கெளரவம் ஆகும்.

பல்முனைச் சிறப்புக்களுக்கு உரியவரான ஏ.என்.சிவராமன் 1904 மார்ச் 1ஆம் தேதி கொச்சியில் பிறந்தவர். நெல்லை மாவட்டத்துக் காரரான இவரது இளம் வயதுக் கல்வி திரு நெல்வேலி மாவட்டத்திலுள்ள அவர்கள் கிராமத்தில்தான் தொடங்கியது. நெல்லை மாவட்டம் பல தேசபக்தர்களை உருவாக்கிய இடம். அந்த வரிசையில் ஏ.என்.சிவராமனும் சேர்ந்து கொண்டார்.

பள்ளிப் பருவத்திலேயே ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசண்ட் அம்மையார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவர் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய போது தனது 17ஆம் வயதில் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த இவர் அதில் பங்கு கொண்டார். அடுத்த ஆண்டிலேயே இவரது முதல் சிறை தண்டனையைப் பெற்றார். இதனால் இவர் கல்லூரி படிப்பு முடிவுக்கு வந்தது.

சில காலம் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்த இவருக்குப் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் இந்த நாட்டின் பாரம்பரியம், வரலாறு, நாம் அடிமைப் பட்ட விவரங்கள், சுதந்திர உணர்வு ஆகியவைகளைக் கற்றுக் கொண்டார். இந்த ஞானமெல்லாம் அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் வெளிப்பட்டு கட்டுரைகளாக வெளிவந்தன. ஒவ்வொரு நாளும் இவர் படிப்புக்காக ஒதுக்கும் நேரம் மிக அதிகம்; இந்தப் பழக்கத்தைத் தன் இறுதி நாட்கள் வரை கடைப்பிடித்து வந்தார்.

அந்தக் காலத்தில் டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் பிரபலமான பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவர் அப்போது "காந்தி" என்றொரு பத்திரிகையை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையில் சிவராமன் முதலில் பத்திரிகைத் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்துக்காகத் திருச்சியிலிருந்து நடைப்பயணமாக வேதாரண்யம் சென்று உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரில் இவரும் நூறு பேரில் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டார். அந்தப் போராட்டம் காரணமாக இவருக்கு 20 மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அந்த தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் இவர் பத்திரிகைத் தொழிலுக்குத் திரும்பினார்.

முதன்முதலாக இவரைப் பத்திரிகைத் தொழிலுக்குக் கொண்டு வந்த டி.எஸ்.சொக்கலிங்க்கம் 1934இல் தொடங்கப்பட்ட "தினமணி" இதழில் ஆசிரியர் ஆனார். அப்போது ஏ.என்.சிவராமன் அவரிடம் துணை ஆசிரியராகப் பதவி ஏற்றார். 1944 வரை அதன் ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் பதவி விலகியபின்னர் ஏ.என்.சிவராமன் "தினமணி"யின் ஆசிரியர் ஆனார். அப்போது தொடங்க்கி 1987 வரை அந்த தேசியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு இவரது தலையங்கங்கள் மூலமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சீர்காழியில் உப்பனாறு பாலத்தில் சில இளைஞ்சர்கள் வெடிவைத்த வழக்கில் இவரும், தினமணி இராமரத்தினம் போன்றவர்களும் கைதாகி குற்றவாளிகளாக ஆக்கப் பட்டனர்.
"தினமணி"யில் இவர் ஆசிரியராக இருந்த அந்த காலம் தான் இந்திய வரலாற்றின் சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டமாக இருந்தது. இயற்கையிலேயே தேசபக்தி மிக்க இவரிடம் சக்தி மிகுந்த பத்திரிகைத் துறை கிடைத்த போது இவருடைய பங்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். தினமணி சுதந்திர எழுச்சிக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. "தினமணி" என்றால் தேசியம் என்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். 1947இல் இந்தியா சுதந்திரம் அடையும் நேரம் நெருங்கி வந்து கொண்டிருந்த காலத்தில் அதுவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் நாட்டம் காட்டிக் கொண்டிருந்த தினமணி இப்போது சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி, தொழில் வளர்ச்சி குறித்தெல்லாம் அக்கறை காட்டத் தொடங்கியது.

அந்த காலத்தில் "தி ஹிந்து" எனும் ஆங்கில நாளிதழுக்கு ஒரு நற்சான்று உண்டு. அந்தப் பத்திரிகையில் செய்தி என்றால் அது முழு உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதே நம்பகத் தன்மையையும், தேசபக்தி உணர்வையும், முன்னேற்றத்துக்குப் பாடுபட வேன்டிய அவசியத்தையும் தினமணி மக்கள் மனங்களில் விதைத்தது. 'தேசியம்' எனும் சொல்லுக்கு எடுத்துக் காட்டு 'தினமணி' என்பதை எல்லா வகையிலும் நிரூபித்து வந்தது.

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்பாடுகள் சாதாரண மக்களிடம் சென்றடையவில்லை என்பதை கவனித்த ஏ.என்.சிவராமன் அரசின் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கியது. அப்போது ராஜாஜி தலைமையில் உருவான சுதந்திராக் கட்சி, சுயராஜ்யா பத்திரிகை போன்றவற்றின் கருத்துக்களையொட்டி 'தினமணி'யின் எண்ணங்களும் சார்புடையனவாக அமைந்தன. 1967 தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பதவி இழந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தி.மு.க.வின் வெற்றி சாத்தியமாகியது. இந்த மாற்றத்தில் ஏ.என்.சிவராமனின் எழுத்துக்களும் காங்கிரசுக்கு எதிராக அமைந்தன என்பது பலரது எண்ணம்.

1975இல் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. பத்திரிகை தணிக்கை முறை அறிமுகமானது. அரசியல் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சிவராமன் பலத்த குரல் எழுப்பினார். அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும் வகையில் இவர் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்படும் இடம் காலியாக விடப்பட்டு பத்திரிகை வெளிவந்தது.

ஸ்தாபன காங்கிரசில் இருந்த காமராஜ் இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி திடீரென்று காலமாகி விட்டார். நெருக்கடி நிலையின் முதல் களபலி காமராஜரின் மரணம் என்று ஏ.என்.சிவராமன் தன் பத்திரிகையில் எழுதினார். காமராஜரின் மரணத்தோடு தன்னுடைய பேனாவும் எழுதும் வேகத்தை இழந்து போனது என்றார். நெருக்கடி நிலை அகற்றப்பட்ட பிறகு சிவராமன் சொன்னார், இந்த நிலைமைக்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று.

1980களில் போஃபார்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே குலுக்கியது. ஜனாதிபதி ஜெயில் சிங்குக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து பேதங்கள் சிவராமனை வருத்தியது. 'தினமணி'யில் அவருடைய கையெழுத்திட்டு வெளியான ஒரு தலையங்கத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லையென்றால் அது இந்த நாட்டின் ஜனனாயக முறைக்குக் கேடு விளைவிக்கும் என்று எழுதினார். 1987இல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தன் வாழ் நாள் இறுதி வரை படித்தும், எழுதியும் வந்தார். வாழ்க ஏ.என்.சிவராமன் புகழ்!

Wednesday, November 28, 2012

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

தமிழ் நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலரை  நாம் மறந்தே போய்விட்டோம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகி ஒருவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் ஆர்.சிதம்பர பாரதி.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த 'ராமாயணச் சாவடி' எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார். வறுமை காரணமாக இவரது படிப்பு நின்று போயிற்று. அப்போது தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்து வீர கர்ஜனை புரிந்து வந்த சுப்பிரமணிய சிவாவின் பால் இவருக்கு பற்று ஏற்பட்டு அவரது அடியொற்றி இவரும் சுதந்திர தாகத்துடன் செயல்படத் தொடங்கினார். சிவா தொடங்கிய பாப்பாரப்பட்டி ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகள் இவர் இருந்திருக்கிறார். காங்கிரஸ் தொண்டராக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலம் இது.

காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரிந்து கிடந்த நேரத்தில் இவர் பால கங்காதர திலகரின் தலைமையில் இயங்கிய தீவிர வாதப் பிரிவில் வ.உ.சி., சிவா ஆகியோரைப் போல தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டு வந்தார். பிரிட்டிஷ் அரசு இவரைப் பல வழக்குகளில் குற்றவாளியாகக் கருதி இவரைத் தேடியது. மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப் பட்டது. பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட சூழ் நிலையில் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் ஒரு ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்துப் பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு போலீசார் திரும்பி விட்டனர். அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்த கொடுஞ்செயலைச் செய்தவர் போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயர் எனப்படும் தீச்சட்டி கோவிந்தன் ஆவார். அவரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து விஸ்வனாதன் நாயர் மீது திராவகம் வீசி அவரை அலங்கோலப் படுத்திவிட்டனர். அந்தக் குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டவர்களுள் சிதம்பர பாரதியும் ஒருவர். இதனையும் சேர்த்து இவர் மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து விடுதலை ஆனபின் தனது மாமன் மகளான பிச்சை அம்மாளை மணந்து கொண்டார். இவரது ஒரே மகள்தான் சண்முகவல்லி.

சுதந்திரத்துக்குப் பிறகு இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். இதன் பின்னர் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. இந்திரா காந்தியின் தலைமையில் இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் ஆகியோரின் தலைமையில் சின்டிகேட் காங்கிரசும் உருவாகின. சிதம்பர பாரதி காமராஜ் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டவரானபடியால் இவரும் சின்டிகேட் காங்கிரசில் செயல்பட்டார்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் எந்த காலத்திலும் ஒரு சிறு குற்றச்சாட்டுக்குக்கூட ஆளாகாமல் ஒரு உண்மையான காந்தியத் தொண்டராகவே விளங்க்கினார். மத்திய அரசு தியாகிகளுக்குக் கொடுக்கும் மரியாதைச் சின்னமான 'தாமிரப் பட்டயம்' பெற்ற தியாகி இவர்.
இவரது மனைவி பிச்சை அம்மாள். இவர்களுக்கு ஒரேயொரு மகள் சண்முகவல்லி கணேஷ், மூன்று பேரப் பிள்ளைகள். இவர் மதுரையில் இருந்த இவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30இல் தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். வாழ்க தியாகி சிதம்பர பாரதி புகழ்!

சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்

சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்

காங்கிரஸ்காரராக இருந்த போதோ அல்லது இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை புகுந்தபோதோ, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது கிடைக்காத பெயரும், புகழும், விளம்பரமும் இவர் செய்த ஒரு வீரதீர சாகசத்தினால் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. திறந்த ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திரா காந்திமீது கல்லும், தடிகளும் வீசப்பட்டன. கும்பல் அருகில் வந்து தாக்கவும் தொடங்கினர். அவர் இருந்த ஜீப் மீது கற்கள் விழுந்து கொண்டிருந்தன. அப்பொது அருகில் இருந்த ஆர்.வி.சுவாமி நாதனும், மதுரை நெடுமாறனும், இந்திரா காந்திமீது கற்கள் விழாமலும், அவர் அடிபடாமலும் அவருக்குக் கேடயமாக இருந்து காப்பாற்றினார்கள். அந்த செய்தி மறு நாள் செய்தித் தாள்களில் வந்தபோது ஆர்.வி.சுவாமி நாதனுக்கு அதுவரை கிடைக்காத பெயரும், புகழும் பாராட்டுகளும் வந்து குவிந்தன. யார் இந்த ஆர்.வி.சுவாமி நாதன் என்பதை இப்போது பார்ப்போம்.

அன்றைய இராமனாதபுரம் மாவட்டம் பாகனேரி வரலாற்றுப் புகழ் கொண்ட ஊர். அந்த ஊரில் வாழ்ந்த வெள்ளையப்பத் தேவருக்கு 1910, ஆகஸ்ட் 5இல் மகனாகப் பிறந்தவர் காங்கிரஸ் தலைவர், தியாகி ஆர்.வி.சுவாமி நாதன். இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னுடைய 19ஆம் வயதிலேயே தன்னை முழு மூச்சுடன் இணைத்துக் கொண்டார். இவர் தன்னுடைய உண்மையான உழைப்பாலும், நேர்மையாலும் காங்கிரஸ் தொண்டராக இருந்து படிப்படியாக உள்ளூர் காங்கிரஸ் கமிட்டி முதல், தாலுகா கமிட்டி, மாவட்ட கமிட்டி, மா நில கமிட்டி என்று பதவி உயர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சரவையில் விவசாயத்துறை துணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் திறமையாகப் பணிபுரிந்து, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, காமராஜ் ஆகியோருடைய பாராட்டுக்களைப் பெற்றவர்.

இந்திய பாராளுமன்ற குழுவோடு இவர் நியுசிலாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, இங்கிலாந்து, கொரியா, பிலிப்பனிஸ் போன்ற நாடுகளுக்கும் ஸ்காண்டினேவியன் நாடுகள் எனப்படும் டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அகில உலக விவசாய மானாட்டுக்காகவும் இவர் வெளினாடு பயணம் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் தேவர் வகுப்பு பின் தங்கிய ஜாதியாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிற்பட்ட இந்த ஜாதியார்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான தனிப்பெரும் குழுவாகவும் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த வகுப்பினருக்குப் பல கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு அளித்து வேட்டையாடியது. இந்த கொடுமையான சட்டத்தை நீக்கி இவர்களின் நிலை உயர 1947-48 காலகட்டத்தில் சென்னை சட்டசபையில் சட்டம் கொண்டு வந்து இவர்களின் விடிவெள்ளியாக உருவானார் ஆர்.வி.சுவாமி நாதன். அரசியலில் நுழைந்த நாள் முதல் தனது கடைசி மூச்சு ஓயும் வரையிலும் ஒரு சுத்தமான காந்தியவாதியாகவும், காந்தி விரும்பிய உண்மையான காங்கிரஸ்காரராகவும், உயர்ந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர் ஆர்.வி.எஸ். வாழ்க ஆர்.வி.சுவாமி நாதன் புகழ்!

கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர்

தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் பெருந்தலைவர்களுள் திரு கோமதிசங்கர தீட்சிதருக்குத் தனியிடம் உண்டு. மிகவும் மரியாதைக்குரியவராகவும் அவர் கருதப்பட்டார். காந்தியம் எனும் தத்துவத்துக்கு ஓர் வடிவம் கொடுத்ததைப் போல தன்னை உருவாக்கிக் கொண்டவர் 'தாத்தா' என்று பலராலும் அழைக்கப்பட்ட இந்த கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் பிறந்தவர்..பின்னர் சேரன்மாதேவிக்குக் குடிபெயர்ந்தவர். இளம் வயதிலேயே திரு நெல்வேலி மாவட்டத்தில் அப்போது வேகமாகப் பரவிய தேசபக்தி உணர்வின் காரணமாக தீட்சிதரும் சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மகாத்மா காந்தியின் ஆணைப்படி சற்றும் மகாத்மாவின் ஆணையிலிருந்து பிறழாமல் தன்னையொரு காந்தியத் தொண்டனாக ஆக்கிக் கொண்டார். எப்போதும் தூய கதராடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, எங்கு போவதென்றாலும் நடந்தே போவது என்ற கொள்கையைக் கடைசி வரை கடைபிடித்து வாழ்ந்தவர் தீட்சிதர்.

சுதந்திரத்துக்காகப் போராடிய காலத்தில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய இவர் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை சட்டசபையில் மூன்று முறை உறுப்பினராக இருந்திருக்கிறார். அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இவர் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றவர் இவர். தமிழக அரசியலில் திரு காமராஜ் தலைமையை ஏற்றுக் கொண்டு உண்மையான காங்கிரஸ்காரராக திரு காமராஜ் காலத்திலும், பின்னர் அமைந்த திரு எம்.பக்தவத்சலம் அவர்கள் காலத்திலும் இவருடைய பங்களிப்பு சட்டசபையில் குறிப்பிடத்தக்கதொன்று. 1967 தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் தோற்று அந்த ஆண்டில் தி.மு.க.முதன்முறையாக அரசு அமைத்தபோதும், இவர் போட்டியிட்ட அம்பாசமுத்திரத் தொகுதி மக்கள் இவர்பால் காட்டிய நம்பிக்கை, அன்பு காரணமாக இவர் அபாரமான வெற்றியைப் பெற்றார்.

எந்த பதவிக்கோ அல்லது தனது பதவியைக் கொண்டு எந்தவிதமான ஆதாயங்களுக்கோ ஆசைப்படாமல் ஒரு துறவியைப் போல் வாழ்ந்தவர் தீட்சிதர். அரசாங்கத்திலாகட்டும், வெளியிலாகட்டும் தனது பதவி, அந்தஸ்து இவற்றைக் கொண்டு தனக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ எந்தவித ஆதாயத்தையும் தேடவும் இல்லை, மற்றவர்கள் தேடவும் விடவில்லை. அத்தனை கெடுபிடியான தூய வாழ்க்கையை வாழ்ந்தவர் இந்த முரட்டுக் கதருடை அணிந்த காங்கிரஸ்காரர்.

சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் தொடங்கிய பாரத்வாஜ ஆசிரமம், அவர் காலத்துக்குப் பிறகு கைமாறி இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆளுமைக்குள் வந்திருக்கிறது. வ.வெ.சு.ஐயர் காலமான பின் இவருடைய மகன் திரு மகாதேவன் என்பவர் இங்கு மேலாளராகவும், விடுதி காப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். தேசிய பாரம்பரிய உறவு, சேவைக்காக மட்டுமே பயன்பட்டது, ஆதாயத்துக்காக அல்ல என்பது இவரது வாழ்வு காட்டுகிறது.

இவருடைய தொகுதி மக்கள் தங்கள் குறைகளுடன் இவரிடம் வந்துவிட்டால், உடனே அந்தக் குறைகளைக் களைய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வார். அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த பிரதிபலனையும் இவர் எதிர்பார்த்ததில்லை. சேரன்மாதேவியில் தாமிரவருணி ஆற்றைக் கடந்து செல்ல மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையை அங்கொரு பாலம் அமைத்து அவர்கள் சிரமத்துக்கு முடிவு கட்டினார். இவருடைய முன் முயற்சியால் கட்டப்பட்டப் பாலத்தைத் திறந்து வைக்க அப்போதைய சென்னை கவர்னர் ஜெயசாமராஜ உடையார் வந்தார். இந்தப் பாலத்தால் பயண தூரம் மிகக் குறைந்தது கண்டு மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை சட்டமன்றத்தில் இவர் பதவி வகித்த காலத்தில் சும்மா சென்று உட்கார்ந்துவிட்டு வரும் பழக்கம் இவரிடத்தில் கிடையாது. தினமும் இவருடைய பங்கேற்பு இருக்கும். அவை அத்தனையும் சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. சட்டமன்றம் நடக்கும் நாட்களில் தினமும் செய்தித் தாட்களில் இவர் கேட்ட கேள்வி அல்லது எழுப்பிய பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். அந்த அளவுக்குத் தன்னை மக்கள் சேவையில் இணைத்துக் கொண்டவர் கோமதிசங்கர தீட்சிதர். வாழ்க கோமதிசங்கர தீட்சிதர் புகழ்!