Followers

Thursday, January 6, 2011

தியாகி பால்பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம் தியாகி பால்பாண்டியன்

சிதம்பரனார் மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் எனும் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.பி.பால்பாண்டியன். சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது வாழ்நாளெல்லாம் உழைத்தவர் இவர். எண்பது வயதினைக் கடந்து பெருவாழ்வு வாழ்ந்து தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர். 1935இல் தனது 18ஆவது வயதிலேயே தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ந்து 80 ஆண்டுகள் வரை நாடு, மக்கள் என்று ஊருக்கு உழைத்த தியாகப் பெருமகன் இவர்.

1942இல் நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டம் கடுமையாக நடந்தது. அந்தப் போராட்ட காலத்தில் இவரது பங்கு பெரிதும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. வெள்ளையர் ஆட்சியை வீழ்த்த இவர் அயராது உழைத்தார். அரசாங்கம் போட்ட அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்தார். தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். இதற்காக ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயிலில் மூன்று மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுக்காக இவர் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

1947ஆம் ஆண்டு முதல் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருந்த ஆதிதிராவிட மக்களின், விவசாயக் கூலிகளின் குறைகளைக் களைந்திட அயராது போராட்டத்தில் ஈடுபட்டார். 1950ஆம் ஆண்டில் தனி மனிதனாக அந்த மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். தூத்துக்குடி சப் கலெக்டர் அனுவலகத்துக்கு முன்பாக இவர் தனியொரு மனிதனாக உண்ணாவிரதம் மேற்கொண்டதை மக்கள் மறக்கமுடியாது.

ராஜாஜியின் வழிகாட்டுதலோடு மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், தென் தமிழ்நாட்டின் மற்ற பல இடங்களிலும் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் இவரும் தீவிரமாகப் பங்கு கொண்டார். நாட்டு மக்களுக்காக, குறிப்பாக விவசாயக் கூலிகளுக்காகத் தனது விளை நிலங்களையும், மனைவியின் நகைகளையும் விற்று போராடியவர் இந்த தியாக சீலர். வாழ்க தியாகி பால்பாண்டியன் புகழ்!

தியாகி முத்துவிநாயகம்

தியாகி முத்துவிநாயகம்

தியாகி முத்துவிநாயகம் 1914இல் தூத்துக்குடியில் பிறந்தார். மகாத்மா காந்தியடிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரசில் சேர்ந்த நாள் முதலாக இறுதி வரை இவர் கதர் உடைகளைத்தான் அணிந்திருந்தார். 1930இல் காங்கிரசில் சேர்ந்த இவர் 1931, 32இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்,                    
        
அன்னிய துணி எதிர்ப்பு இயக்கத்திலும் ஈடுபட்டார். அப்போது இவர் சிறுவனாக இருந்த காரணத்தால் இவர் தண்டிக்கப்படவில்லை.

1943இல் ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ்காரர்களின் மிரட்டல் காரணமாக அந்த கூட்டம் நடைபெற முடியாமல் போனது. இதனைக் கேள்விப் பட்ட முத்துவிநாயகம் தானே ஒரு தமுக்கை எடுத்துக் கொண்டு போய் அடித்துத் தெருத் தெருவாக பொதுக்கூட்டம் நடக்கும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டத்துக்கு அழைத்தார். அந்தக் கூட்டத்தில் இவரே இரண்டு மணி நேரம் பேசினார். மறுநாள் இவர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

1935இல் தூத்துக்குடி ஹார்வி மில் தொழிலாளர்களுக்காகத் தொழிலாளர் சங்கம் அமைத்தார். 1935இல் கோவில்பட்டி கடைத்தெருவில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். அதனை போலீஸ் தடை செய்தது. தடையை மீறி அந்தக் கூட்டத்தில் பேசினார் முத்துவிநாயகம். அப்படி இவர் தடை செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய குற்றத்திற்காக 2 மாதம் 15 நாட்கள் சப் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார்.

1935இல் இவருக்குத் திருமணம். இவரது மனைவியும் காங்கிரஸ்காரர். கதர்தான் அணிவார். ரஞ்சிதம் என்று பெயர். கணவன் மனைவி இருவரும் தேச சேவையில் ஒற்றுமையாக ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லை. 1937இல் இளைஞர்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து அதில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து அதில் ஷாகீத் பகத் சிங்கின் படத்தை எடுத்துச் சென்றார். போலீசார் தடை விதித்திருந்தும் தடையை மீறி இவர் அந்த ஊர்வலத்தை நடத்தினார். ஊர்வலம் பாதி தூரம் போயிருந்த போது போலீஸ் அதனை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தியது. அதில் இவர் மண்டை உடைந்து படு காயம் அடைந்தார்.

1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கோர்ட்டுக்கு முன்பு மறியல் நடத்தினார். அன்றே அவர் கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம், வேலூர், சென்னை ஆகிய ஊர் சிறைகளில் அடைபட்டுக் கிடந்து 2 வருடம் 9 மாதம் கழித்து விடுதலையானார். வாழ்க தியாகி முத்துவிநாயகம் புகழ்!

ஏ.பி.சி.வீரபாகு

விடுதலைப் போராட்ட வீரர் ஏ.பி.சி.வீரபாகு

தென் தமிழ்நாடு சுதந்திர வேள்விக்காகப் பல தொண்டர்களை, வீரர்களைக் கொடுத்திருக்கிறது. அத்தகைய வீரப் பெருமக்களில் ஏ.பி.சி.வீரபாகுவும் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரது தந்தையார் வேலாயுதம் பிள்ளை என்பார். இவர் அப்போதைய பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தன்னுடைய இருபதாவது வயதில் மியன்மாரிலுள்ள (பர்மா) யெங்கூன் (ரங்கூன்) சென்று அங்கு அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்து வந்தது, அதனால்தான் இந்திய எல்லைக்குள் அவர் வேலைக்குப் போகமுடிந்தது.

அவர் ரங்கூனில் இருந்த காலகட்டத்தில் நாட்டின் சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. மகாத்மா காந்தியடிகளின் தலைமையை ஏற்று இவரும் சுதந்திரப் போரில் ஈடுபட முடிவு செய்தார். மகாத்மா 1930இல் தண்டியை நோக்கி உப்பு எடுக்கும் சத்தியாக்கிரகப் போரினைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மகாத்மாவுடன் அந்தப் போரில் ஈடுபட்டுச் சிறை செல்லத் தயாராகினர்.

அன்பர் ஏ.பி.சி.வீரபாகுவும் தனது அரசாங்க வேலையை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து வேலையை ராஜிநாமா செய்தார். திருநெல்வேலிக்குத் திரும்பிய வீரபாகு 1931இல் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராகி கடுமையாக உழைக்கத் தொடங்கினார். இவரது அயராத உழைப்பு, நேர்மை, வீரம் இவற்றால் இவர் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் முக்கியமான உறுப்பினராகச் செயல்படத் தொடங்கினார்.

1932இல் சாத்தான்குளத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சர்தார் வேதரத்தினம், கோவை ஐயாமுத்து, ஏ.பி.சி.வீரபாகு ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு 1930 ஏப்ரலில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது அல்லவா? அப்போது அங்கு வேதரத்தினம் பிள்ளைக்கு மிகவும் வேண்டியவரான நாவிதர் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களுக்கு சவரம் செய்ய மறுத்து வந்தார். ஒரு நாள் ஒரு போலீஸ்காரர், அவர் வெளியூர்க்காரர் வேலையை முன்னிட்டு அங்கு வந்திருந்தவர், இந்த இளைஞரிடம் முகச்சவரம் செய்து கொள்ள வந்து அமர்ந்தார். அவர் ஒரு போலீஸ்காரர் என்பது அந்த இளைஞர்க்குத் தெரியாது. அதனால் அவர் முகத்தில் சோப்பு நுரை போட்டு சவரம் செய்யத் தொடங்கினார். பாதி சவரம் ஆகியிருக்கலாம், அப்போது யாரோ ஒருவர் சவரம் செய்து கொண்டிருந்தவர் போலீஸ்காரர் என்று தெரிந்து கொண்டு, என்னப்பா போலீஸ்காரர்களுக்கு செய்யமாட்டேன் என்று சபதம் செய்தாய், இப்போது செய்து கொண்டிருக்கிறாயே என்று கேட்டு விட்டார். அவ்வளவுதான் அந்த இளைஞர் தனது சவரப் பெட்டியை மூடிவிட்டு நான் தொடர்ந்து சவரம் செய்ய முடியாது, எழுந்து போய்விடுங்கள் என்றார்.

அந்த போலீஸ்காரர் கேட்க மறுத்தார். இப்போது நீ சவரம் முழுவதையும் செய்து முடிக்கிறாயா அல்லது கோர்ட்டுக்குக் கொண்டு சென்று தண்டனை வாங்கித் தரட்டுமா என்றார். அப்போதும் அந்த இளைஞர் சளைக்கவில்லை. அவரைப் பிடித்துக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினார். அங்கிருந்த அதிகாரி, போடா, போய் அவருடைய சவரத்தை முடித்துவிட்டுப் போ என்றபோதும் அவர் மறுத்து விட்டார். உடனே அவரைக் கொண்டு போய் ஒரு மாஜிஸ்டிரேட் முன்பாக நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். அந்த மாஜிஸ்டிரேட் இளைஞரிடம் என்னப்பா ஏன் இப்படி செய்கிறாய். முரண்டு பிடித்தால் தண்டிக்கப்படுவாய். போய் ஒழுங்காக அவரது சவரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வீட்டுக்குப் போ என்றார். அந்த இளைஞர் சாவதானமாக தன்னுடைய சவரப் பெட்டியைக் கொண்டு போய் மேஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போய் வைத்துவிட்டு, ஐயா, அதுமட்டும் நம்மால முடியாதுங்க. நான் சபதம் எடுத்தது எடுத்ததுதாங்க. வேணும்னா நீங்க செஞ்சுவிட்டுடுங்க என்று சொன்னார். கோர்ட் கொல்லென்று சிரித்தது. முடிவு கேட்க வேண்டுமா, இளைஞருக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை.

கதை அதோடு முடிந்ததா? இல்லை இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை இந்த நிகழ்ச்சியை வர்ணித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நீதிபதி அங்கு வந்தார் தன்னுடைய காரில். கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அவர் காரை சூழ்ந்துகொண்டு கேலி செய்து அவரை விரட்டிவிட்டனர். உடனே அவர் வேதரத்தினம் பிள்ளை மீது ஒரு வழக்குப் போட்டு அவருக்கு ஆறுமாத தண்டனை வாங்கிக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை சாத்தான்குளத்திலும் போய் இவர்கள் பேச அங்கும் இவர்களுக்கு தண்டனை கிடைத்தது. அதில் சிறைக்குப் போனார் ஏ.பி.சி.வீரபாகு. இவருக்குக் கிடைத்தது இரண்டரை ஆண்டு கடுங்காவல்.

வெள்ளைக்காரர்கள் அரசாங்கத்தில் போலீசும், சிறைக்கூடமும் சித்திரவதைக் கூடமாக விளங்கி வந்தது. வீரபாகு அப்போது பெல்லாரி சிறையில் இருந்தார். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்து இரண்டு சுதந்திரப் போர் வீரர்கள் மகாவீர் சிங், தத்தா ஆகியோர் மீது போலீசுக்கு அடக்க முடியாத வெறி. அவர்களைத் தினந்தோறும் காலையில் வரிசையில் நிற்கும்படி கூறி, காவல் கைதிகளாக வந்த அவர்களைக் கிரிமினல்கள் போல நடத்தினர். இதைக் கண்டு அவர்கள் கொதித்து எதிர்த்தனர். அதனால் ஆத்திரமடைந்த இன்ஸ் எனும் சிறை அதிகாரி அவர்கள் இருவருக்கும் இரண்டு டஜன் கசையடி கொடுக்க ஆணையிட்டான். அப்படி அவர்கள் அடிபடுவதை மற்ற கைதிகள் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டான்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஏ.பி.சி.வீரபாகு அந்தச் சிறை அதிகாரியிடம் பாய்ந்து சென்று ஆட்சேபம் தெரிவித்தார். அந்த அதிகாரி இன்சிடம் இவர் போய், நீ அடிப்பது போதாதென்று எங்களையும் பார்க்கச் சொல்லுகிறாயா? என்று உறுமினார். அவன் வீரபாகுவை மிருகத் தனமாக தடிகொண்டு அடித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்தான். அத்தகைய உரமும், நேர்மையும் உடைய தேசபக்தர் வீரபாகு. வாழ்க ஏ.பி.சி.வீரபாகுவின் புகழ்!

Saturday, November 13, 2010

எம்.சங்கையா

பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அப்படி பீராய்ந்து பார்த்துக் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் மதுரை மாவட்டத்தில் தேடியபோது கிடைத்த சில அரிய தொண்டர்கள் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது. இப்படியும் தியாகிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தில் கிடைத்த சுதந்திரம் இன்று என்ன பாடுபடுகிறது. நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. கிடக்கட்டும் இன்று பெரியகுளம் தாலுகாவில் வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் கம்மவார் நாயுடு குலத்தில் உதித்த நடுத்தர வசதி படைத்த குடும்பத்தில் வந்த எம்.சங்கையா எனும் தியாகி பற்றி பார்ப்போம்.

வெங்கடாசலபுரத்தில் கி.மாத்தி நாயக்கர் என்பவர் ஒரு கெளரமான மனிதர். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் எம்.சங்கையா. இளம் வயதில் மகாத்மா காந்தியின் பெயரையும் அவரது பேராற்றலையும் பற்றி தெரிந்து கொண்டு ஒரு காந்தி பக்தர் ஆனார். மதுரையில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை வைத்தியநாத ஐயர், ஜார்ஜ் ஜோசப் போன்ற பெரிய காந்திய வாதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். இவரும் தன்னை காந்தி பணியில், நாட்டுச் சுதந்திரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1934இல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து பெரியகுளத்துக்கும் விஜயம் செய்தார். விடுவாரா இந்த சந்தர்ப்பத்தை சங்கையா, ஓடிப்போய் மகாத்மா தரிசனம் செய்தார். மகாத்மாவைப் பார்த்ததாலோ, அல்லது அவர் அருளிய உபதேசத்தாலோ, இவர் தனது பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு சுதந்திர வேள்வியில் கலந்து கொண்டார்.

1936இல் சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதில் சக்திவேல் என்பவர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார். இவரது வெற்றிக்காக கிருஷ்ணசாமி ஐயங்கார், சொக்கலிங்கம் பிள்ளை போன்ற அன்றைய காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ஊர் ஊராகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் பயணம் செய்ய இப்போது போல விரைவு வாகனங்கள் கிடையாது. கால் நடையாக நடந்தே சென்று எல்லா கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தார் இவர்.

தேசிய பத்திரிகைகளுக்கு உள்ளூர் முகவராக இருந்து பத்திரிகைகளை விநியோகம் செய்யலானார். அப்போது தேனி தியாகராஜன் இந்தப் பகுதியில் இருந்த வீறுகொண்ட காங்கிரஸ்காரர். இன்னும் சொல்லப் போனால் தேனி தியாகராஜன் காலத்தில் அந்தப் பகுதிகளில் சுயமரியாதை இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தியாகராஜன். தேனி ஆற்றுப்படுகையில் நடைபெறவிருந்த சுயமரியாதை கூட்டம் நடைபெற முடியாமல் தேனி தியாகராஜனின் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. அந்த தேனி தியாகராஜனுடைய வலது கரமாக இருந்து செயல்பட்டவர்களில் நமது சங்கையாவும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பெரியகுளம் தாலுக்கா குழுவின் செயலாளராகவும் இருந்தார். ராஜாஜி அமைச்சரவை ராஜிநாமா செய்தவுடன் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். அந்த கோரிக்கையை கோஷமிட்டுக்கொண்டு இவர் ஊர்வலமாகச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு இந்தய பாதுகாப்புச் சட்டத்தின்படி 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் உசிலம்பட்டி நிதிமன்றத்தில் நான்கரை மாத தண்டனையும் ஐம்பது ரூபாய் அபராதமும் பெற்றார். அபராதம் கட்ட மறுத்து இவர் மேலும் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மதுரை, வேலூர் ஆகிய ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டார். விடுதலையான பிறகும் கூட இவரைப் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருந்தது.

1941இல் மகாத்மா அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு பல ஊர்களுக்கும் சென்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார். அப்படி அவர் சென்னையில் பாண்டி பஜாரில் கோஷமிட்டுக்கொண்டு சென்றபோது தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனை காலத்தை இவர் அலிப்புரம் சிறையில் கழித்துவிட்டு விடுதலையானார்.

1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது. இவர் மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிவிட்டதாக போலீஸார் இவரை எச்சரிக்கைச் செய்தனர். தேனி போலீசார் இவரை கண்காணித்தபடி இருந்தனர். பாதுகாப்பு கைதியாக பெரியகுளம் சப் ஜெயிலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலையானார். 1943இல் இவரது தந்தையார் ஏற்பாட்டின்படி இவருக்கும் லட்சுமி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. இவருக்கு நாடே குடும்பம் என்பதால் நாட்டுச் சேவையில் சதா கழித்து வந்தார். 1943 முதல் 1947 வரையில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவருக்கு சுதந்திரத்துக்குப் பிறகு அரசாங்கம் தாமரைப் பட்டயம் அளித்து கெளரவித்தது. மத்திய மாநில ஓய்வூதியமும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் தன் குடும்பத்தோடு இந்தத் தியாகி சுதந்திரக் காற்றி சுவாசித்து வாழ்ந்தார். வாழ்க எம்.சங்கையா புகழ்.

கல்கி T. சதாசிவம்


கல்கி T. சதாசிவம்

ராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் T.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி வெளியேறி வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் இருந்தமையால் அதில் பணிபுரிந்தார். சதாசிவம் அவர்கள் பள்ளி இறுதி வரை படித்தவர். 1921ஆம் ஆண்டில் ஒரு மகாமகம் வந்தது. அதற்கு சாரணர் தொண்டராகச் சென்றவர் சதாசிவம். அப்படி கும்பகோணம் போன இடத்தில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவருடைய சிம்ம கர்ஜனை சதாசிவத்தை ஒரு தேசபக்தனாக ஆக்கியது.

அதுமுதல் சுப்பிரமணிய சிவாவின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சதாசிவம். சிவா அவர்கள் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்காகப் பாப்பாரப்பட்டியில் இருந்த நிலத்தில் ஒரு அடிக்கல்லை அப்போதைய பெருந்தலைவர் வங்கத்துச் சிங்கம் சி.ஆர்.தாஸ் அவர்களைக் கொண்டு நாட்டியிருந்தார். பாரதமாதா ஆலயப் பணிக்காக பாரதாஸ்ரமம் அமைக்கப்பட்டது. அதில் சேர்ந்த சதாசிவம் தேசத் தொண்டில் முழு மூச்சாக இறங்கினார்.

பாரதமாதா ஆலயம் அமைப்பதற்காக ஊர் ஊராக பஜனை செய்துகொண்டு செல்லும் தேசபக்தர் கூட்டத்தில் உண்டியல் எடுத்து வசூல் செய்தார். நிதி சேர்ப்பதில் சமர்த்தர் எனும் பெயரை அப்போதே அவர் பெற்றார். 1922இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923இல் மறியல் போராட்டம், அன்னிய துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் இப்படிப்பட்ட காந்திய நெறியில் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.

கதர் இயக்கத்திலும் இவர் பெரும் பங்கு வகித்தார். ஊர் ஊராகச் சென்று கதர் துணி மூட்டைகளை எடுத்துச் சென்று கதர் என்பது தேசியத்தின் அடையாளம் சுதந்திரம் வேண்டுவோர் கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதோடு, சுதந்திரத்துக்கும் பாடுபடுபவர்களாக ஆகமுடியும் என்று சொல்லி பெருமளவு கதர் துணிகளை விற்பனை செய்தார். ஆங்காங்கு போய் மக்கள் மத்தியில் சாங்கோபாங்கமாகப் பேசி கதர் துணி விற்பார், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ப்பார், இப்படி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றார் சதாசிவம்.

இவர் இரக்க குணம் உடையவர். தன் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்படுவது கண்டால் உடனே தன் கையில் இருப்பதைக் கொடுத்து அவர்களது கஷ்டத்தை நீக்க உதவி செய்வார். 1930 சுதந்திரப் போர் வரிசையில் மிக முக்கியமான ஆண்டு. ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் துவங்கிய ஆண்டு. திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். மாநில காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்தமையால் அவர் அங்கு மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்தார்.

இவருக்கு ராஜாஜியையும், அவர் மூலமாக மகாத்மா காந்தியடிகளையும் நன்கு அறிந்திருந்தார். இவர் சிறை சென்று மீண்ட சமயம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி புதிய பத்திரிகை தொடங்க முயன்று கொண்டிருந்தார். சதாசிவம் அவரோடு இணைந்து "கல்கி" எனும் பத்திரிகையைத் தொடங்க ஆலோசனைகளைக் கூறி வேலைகளை ஆரம்பித்தார். எழுத கல்கியும், நிர்வாகம் சதாசிவம் என்றும் அன்று தொடங்கிய கல்கி ராஜநடை போட்டு பயணத்தைத் தொடங்கியது. அடடா! கல்கி படைத்த இலக்கியங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் சதாசிவம் அளித்த ஊக்கம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கல்கியும், சதாசிவமும் இணைபிரியாத ராஜாஜி தொண்டர்களாக விளங்கினார்கள். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள ஆங்கரை எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் பெயர் தியாகராஜன். தியாகராஜனுடைய 16 குழந்தைகளில் இவர் 3ஆவது குழந்தை. 4-9-1902இல் இவர் பிறந்தார். 1936இல் இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைச் சந்தித்தார். 10-7-1940இல் இவர்களது திருமணம் நடந்தேறியது. அதே ஆண்டில்தான் கல்கி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இவர் தனது 95ஆம் வயதில் 22-11-1997இல் அமரத்துவம் அடைந்தார். குருநாதரின் ஆலோசனைக்கிணங்க இசையுலக சக்கரவர்த்தினியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்பலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். அவர்கள் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு உந்துசக்தியாக இருந்து பாடுபட்டவர் சதாசிவம். இந்த தம்பதியினரின் நிதி உதவி கச்சேரி மூலம் இந்திய நாட்டில் பயன்பட்ட ஆலயங்கள், நிறுவனங்கள் எத்தனையோ! இன்று இருவரும் அமரராகி விட்டனர். வாழ்க சதாசிவம் புகழ்!

Friday, November 12, 2010

ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரை ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி வி.கே.டி.பங்கஜத்தம்மாள் தம்பதி

மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்கள் அதிகம். மதுரை வைத்தியநாத அய்யர் குடும்பம், என்.எம்.ஆர்.சுப்பராமன் குடும்பம் இப்படி எத்தனையோ குடும்பங்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்கள். அந்த வரிசையில் ஸ்ரீநிவாச ஆழ்வார், பங்கஜத்தம்மாள் தம்பதியினரைக் குறிப்பிடலாம்.

மதுரையில் திருமலை ஆழ்வார் என்பவரின் மகன் ஸ்ரீநிவாச ஆழ்வார். இவருக்கு இசை நன்றாக வரும். அதோடு பாடல்களை இயற்றிப் பாடும் திறன் இருந்ததால் இளம் வயது முதல் தானே பாடல்களை இயற்றிப் பாடிவந்தார். தேசியப் பற்றி ஏற்பட்டுவிட்ட இவருக்கு, எழுதும் பாடல் எல்லாம் தேசியப் பாடல்களாகவே அமைந்துவிடும். அந்தக் காலத்தில் நாட்டில் நிகழும் எந்தவொரு பெரிய நிகழ்ச்சியையும் பாட்டு வடிவில் எழுதி பாடி, புத்தகமாக வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அப்போது நடந்த சில கொலை நிகழ்ச்சிகளைக் கூட பாடலாக வடித்த பாவலர்கள் நம் மத்தியில் இருந்தார்கள். ஸ்ரீநிவாச ஆழ்வாரை தனது இளம் வயதில் மிகவும் பாதித்த நிகழ்ச்சி 1919இல் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் டயர் என்பானால் கொடூரமாக சுடப்பட்டு இறந்தார்கள். இந்த படுகொலை நிகழ்ச்சியை ஸ்ரீநிவாச ஆழ்வார் கவிதைவடிவில் எழுதி, சோகமும் வீரமும் இழைந்தோடும்படியாகப் பாடி மக்கள் மத்தியில் அனுதாபத்தையும், சுதந்திரப் போரின்பால் ஈர்ப்பையும் உண்டாக்கினார்.

1930இல் ராஜாஜி தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரையில் உப்பு எடுக்கும் சத்தியாக்கிரக பாத யாத்திரையை மேற்கொண்டார். இந்தப் போரில் அவரே நேரில் தேர்ந்தெடுத்த நூறு தொண்டர்களை அழைத்துச் சென்றார். அப்படிச் சென்ற மதுரை தொண்டர்களில் ஒருவராக ஸ்ரீநிவாச ஆழ்வார் கலந்து கொண்டு காந்தியத்தில் தனக்கிருந்த ஆழ்ந்த பற்றை வெளிக்காட்டினார். வழியில் நடந்த சிரமங்களையெல்லாம் நாட்டுக்காகப் பொறுத்துக் கொண்டு கைதாகி சிறைப்பட்டு ஓராண்டு திருச்சி சிறையில் கிடந்தார்.

தேசபக்தர் சுப்பிரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் தொடங்கவிருந்த பாரதாஸ்ரமத்தில் சிவாவின் தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். சுதந்திரம் எனும் சூரிய உதயத்தைக் காணாமலே இவர் 1937இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவருக்கு ஏற்ற மனைவியாக அமைந்தவர் பங்கஜத்தம்மாள். இவ்விருவருக்கும் இளம் வயதில் பால்ய விவாகம் நடைபெற்றிருந்தது. அதாவது அந்த அம்மையாருக்குத் திருமணத்தின்போது வயது 7. ஸ்ரீநிவாச ஆழ்வார் நன்றாகப் பாடுவார் என்பதைப் பார்த்தோமல்லவா. அவர் அப்படி தேசியப் பாடல்களை பஜனையாகப் பாடிக்கொண்டு தெருத்தெருவாகப் போவது வழக்கம். அப்போதெல்லாம் அவருடைய மனைவி பங்கஜத்தம்மாளும் அவரோடு பஜனை பாடிக்கொண்டு செல்வார். அது தேசிய பஜனை. இவர்களுக்கு மதுரையில் செல்லுமிடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பஜனை பாடுவது மட்டுமல்லாமல் இந்த அம்மையார் மேடைகளில் ஏறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிவந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காங்கிரசின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இத்தனை தியாகங்களையும் இந்த தம்பதியினர் நம் நாட்டுச் சுதந்திரத்துக்காகச் செய்தனர். இவர்களுக்கு வாரிசுகள் உண்டா? இருந்தால் அவர்கள் யாரேனும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைத்தார்களா? பாவம் ஊருக்கு உழைத்து, சிறையில் அடைபட்டு, ஏழ்மையில் மாண்டுபோன பல்லாயிரக்கணக்கான தேசபக்தர்கள் வரிசையில் இந்த ஏழை பஜனை செய்யும் தியாகிகளையும் சேர்த்துக் கொள்வோம்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசின் போக்குப் பிடிக்காமல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் அம்மையார். சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டு மக்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சுரண்டல் இவைகளால் தாக்குண்டு வருந்தியதைப் பொறாமல் இவர் சோஷலிச இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடினார். ஜனநாயக முறையில் தேர்தலிலும் நின்று பார்த்தார். முடியுமா? சுதந்திரப் போர் காலத்தில் கள்ளுக்கடை மறியலிலும், சுதேசிப் பொருட்களை வாங்கு என்று போராடியும் சிறை சென்ற அம்மையார், பதுக்கலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் போராட்டத்தைத் தொடர்ந்தார். பிறவி போராளியான இந்த அம்மையார் 1979 ஜூலை 1ஆம் தேதி அமரரானார். இந்த புரட்சி தீபத்தின் பெயரை மற்றுமொருமுறை உச்சரித்துப் புண்ணியம் பெறுவோம். வாழ்க பங்கஜத்தம்மாள் புகழ்!

Thursday, November 11, 2010

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

சினிமாவும், தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்குச் சாதனாமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியரும்கூட. இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வைத் தூண்டும்படிதான் எழுதுவார். பார்ப்பவர்களுக்கும் அவை ஓர் புதிய எழுச்சியை உருவாக்கும்.

இவர் நாடகங்களில் மக்கள் உணர்வுகளைத் தூண்டச் செய்யும் விதத்தில் மகாகவி பாரதியாரின் "கரும்புத் தோட்டத்திலே" எனும் பாடலையும், ஜாடையாக வெள்ளைக்காரர்களைக் குறிப்பிட்டு "கொக்கு பறக்குதடி" என்ற பாடலும் பிரசித்தம். "கதர் கப்பல் வருகுதே" என்றொரு பாடல். அது தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது. காங்கிரஸ் இயக்கத்துக்காக யார் யாரெல்லாம் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் போய் நாடகம் போட்டு ஆங்காங்கு தேசபக்தியை ஊட்டிவந்தார் இவர். இவர் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தையும் தேச சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வந்தார். பல நேரங்களில் போலீசார் வந்து நாடகத்தைப் பாதியில் நிறுத்தி விடுவார்கள். இவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட்டால், இவர் சிறை செல்வதையே வழக்கமாகக் கொண்டார்.

விடுதலையாகி வெளியே வந்த பிறகும் மீண்டும் அதே நாடகத்தைப் போடுவார், அதே வசனங்களைப் பேசுவார். தடையை மீறியும் பல நேரங்களில் இவர் நாடகங்களை நடத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய நாடகங்கள் அனேகமாக புராண நாடகங்கள்தான். அதில் இவர் முருகனாகவோ, சிவனாகவோ நடித்துக் கொண்டிருப்பார். இவரை மேடையிலேயே வைத்து கைது செய்து கொண்டு போவார்கள். அப்போது விஸ்வநாத தாஸாக இல்லாமல் முருகனாகவோ, சிவனாகவோதான் சிறைக்குச் செல்வார். ஒரு முறை இவர் திருநெல்வேலியில் நாடகம் போட்டு கைதானபோது இவருக்காக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வழக்கில் வந்து வாதாடியிருக்கிறார்.

இவர் சிறைப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கொதித்தெழத் தொடங்கினர். போலீசாரோடு மோதினர். இவர் மதுரை ஜில்லா போர்டு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். திருமங்கலம் காங்கிரஸ் கமிட்டிக்கு இவர் நிறைய நிதி சேர்த்துக் கொடுத்திருக்கிறார். இப்படி தன் வாழ் நாளெல்லாம் நாடகம், நாட்டுப்பணி, சிறைவாசம் என்றிருந்தவரின் முடிவு அற்புதமானது.

சென்னையில் இவர் ஒரு நாடகத்தில் முருகனாக வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். நாடகத்தின் முடிவில் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் அப்போதே அவர் ஆவி பிரிந்து காலமாகிவிட்டார். மக்கள் கலங்கிப் போனார்கள். மயில் வாகனத்தின் மீது முருகனாகக் காட்சியளித்தவர் அடுத்த நொடி பிணமாகப் போனது அனைவரையும் பாதித்து விட்டது. வாழ்க தியாக விஸ்வநாததாஸ் புகழ்!

எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பாடிய "கொக்கு பறக்குதடி"

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு தனது நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை நாடெங்கும் பறப்பிய தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களை அறியாதார் யார்? அவருடைய 'வெள்ளை கொக்கு பறக்குதடி" எனும் அது எந்த நாடகமாக இருந்தாலும் மக்கள் பலமுறை பாடச் சொல்லிக் கேட்பார்கள். அந்த முழுப்பாடலும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய அந்தப் பாடலை இயற்றியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். அதனை நாடக மேடைகளில் பாடி பெருமை சேர்த்தவர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ். தன் நாடகமொன்றில் முருகன் வேடமிட்டு மயில் மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர் பாடிய அந்தப் பாட்டிப் படியுங்கள். அந்த தியாக புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கொக்கு பறக்குதடி பாப்பா!

கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)

கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)

வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)

தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு - அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)

கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)

மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)

பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)