Followers

Monday, May 17, 2010

"கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
36. "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி.
தொகுப்பு: வெ.கோபாலன்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? "அலை ஓசை" எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு", "அலை ஓசை", இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் 'அச்சா தேஷ் சேவக்" என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. "கல்கி" பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய "சுதந்திரன்" எனும் பத்திரிகையில் வெளிவந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் திரு வி.க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த "நவசக்தி" இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி "யங் இந்தியா"வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து "நவசக்தி"யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான "விமோசனம்" எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.

விடுதலையான பிறகு "ஆனந்த விகடனில்" தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய "தியாக பூமி" நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த 'சரோஜா' எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. "ஆனந்த விகடனில்" ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் "கல்கி" எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.

மகாகவி பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை.

இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here