ப. ஜீவானந்தம்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்
"ஜீவா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.
கன்யாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 21-8-1907இல் பட்டன் பிள்ளை உமையம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ஜீவா. இந்தச் சிறுவனுக்கு சொரிமுத்து என்றும் மூக்காண்டி என்றும் பெயர் . இவரே தனது பெயரை ஜீவானந்தம் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இளம் வயதில் மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு காந்திய வழியில் அரசியல் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் சிராவயம் எனும் கிராமத்தில் 1927இல் "காந்தி ஆசிரமம்" ஒன்றை இவர் நிறுவினார்.
1927இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாடுதான் ஜீவா கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு. அரசியலில் காந்திஜியையும் சமூகப் பிரச்சினைகளில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களையும் பின்பற்றத் தொடங்கினார். அரசியல், சமூக மாற்றம் இவற்றோடு இலக்கியத் தாக்கமும் அவரிடம் இயற்கையாக வந்து சேர்ந்து கொண்டது. மகாகவி பாரதியின் பால் மிக்க ஈடுபாடு கொண்டு அவர் எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் மனம் ஈடுபட்டு அவற்றை அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்துப் பாடுவதை நாள் முழுவதும் கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக தாகூரின் "கீதாஞ்சலி"யை இவர் தமிழாக்கம் செய்திருப்பதைப் போல வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை.
சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம். இந்தச் செய்தி பலராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த செய்தி.
மகாத்மா காந்தி விதவைகளின் மறுமணம் பற்றிக் கொண்டிருந்த கருத்தை மகாகவி பாரதியும் கண்டித்திருக்கிறார். காந்திஜி இன்னமும் இந்த விஷயத்தில் பிற்போக்கானவர் என்பது அவர் கருத்து. அதுபோலவே ஜீவாவும் சமூக சீர்திருத்தங்களில் காந்திஜி சற்று பிற்போக்கானவர், ஆனால் தேச சுதந்திரம், கதர்த் தொழில் ஆகியவை அவர் கொண்ட உயரிய சேவைகல் என்று கருதினார்.
1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்திலும் அதனையொட்டி அந்தப் போரில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் மறைவினால் மனம் பாதிக்கப்ப்ட்ட நிலையில் ஜீவா பல ஊர்களுக்கும் சென்று பொதுமக்களிடம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை விளக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசினார். 1928இல் பெரியகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சிறிது நேரம் பேசினார். இந்த காலகட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையோடும் ஜீவாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.
சரி! காங்கிரஸில் இருந்து கொண்டு காந்திஜி, பெரியார் ஆகியோருடைய கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஜீவா பின் எப்போது கம்யூனிஸ்ட்டாக மாறினார்? இந்த கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். அதற்கொரு சரியான காரணம் இருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் ஒரு பக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி போலவே நாட்டிலுள்ள அனைவரும் அமைதி, அகிம்சை, சத்தியாக்கிரகம் என்று இருப்பார்கள் என்று எண்ணியதோ என்னவோ பிரிட்டிஷ் அரசு. ஆனால் அவர்களது எண்ணங்களுக்கு மாறாக பல மாகாணங்களில் தொழிலாளர் இயக்கங்கள் உருவாகி, வளர்ந்து, பலம்பெறத் தொடங்கியது. தொழிலாளர் நலன் மட்டுமல்ல, நாட்டு நலனும் முக்கியம் என்று இவர்களது செயல்பாடு இருந்தது கண்டு வெள்ளையர் ஆட்சிக்குக் கிலி பிடித்தது. என்ன செய்வது? இந்த தொழிலாளர் தலைவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளி இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளிவிட எண்ணியது.
அதற்காக வட மாநிலங்கள் மேற்கு வங்கம், பம்பாய், பஞ்சாப், ஐக்கியமாகாணம் போன்ற பகுதிகளில் இருந்த விவசாய, தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைப் பிடித்து அவர்கள் மீது சதிவழக்கொன்றை ஜோடித்து விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினர். இதற்கு "மீரத் சதிவழக்கு" என்று பெயர். கம்யூனிச இயக்கத்தின் மூத்த பிதாமகர் எஸ்.ஏ.டாங்கே போன்ற முன்னணித் தலைவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1933இல் வெளிவந்தது. குற்றவாளிகள் என கூண்டில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மிக விளக்கமாக அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதையெல்லாம் படித்த ஜீவாவுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுத் தனது எதிர்கால அரசியலை நிச்சயம் செய்து கொண்டார்.
ஜீவாவின் அனல் கக்கும் பேச்சைக் கண்டு பிரிட்டிஷ் அரசு, இவர் இனி எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி ஜீவா கோட்டையூரில் பேசினார். இது பெரிய குற்றம் அல்லவா, பிரிட்டிஷார் பார்வையில். இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பிறகு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறைவாசமும், சிறையில் பகத் சிங்கின் கூட்டாளிகளோடு ஏற்பட்ட பரிச்சயமும், மார்க்சீய நூல்களைப் படித்ததன் பலனும் சேர்ந்து இவரை ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக மாற்றியது.
கம்யூனிசம் ஒரு புறம், சமூக சீர்திருத்தம் மறுபுறம் என்று இவர் இருமுனை வாளாகச் செயல்பட்டார். பகத் சிங்கின் நூலொன்றை இவர் தமிழில் மொழிபெயர்த்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜீவா. அப்படிக் கைது செய்யப்பட்ட இவரை மிகவும் கொடிய பயங்கரவாதியாகச் சித்தரித்து கைவிலங்கிட்டு ஊர் ஊராக அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவரது செயல்பாடு இன்னும் வேகமாக வளரத் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரி கொள்கையுடையவர்கள் அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முதல் மகாநாடு சேலத்தில் நடந்தது. இதில் ஜீவா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் தேர்வானார் ஜீவா. 1938இல் வத்தலகுண்டில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலிருந்து அகில இந்திய காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வாயினர். அவர்களில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோரோடு இவர்களைக் காட்டிலும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார் ஜீவா. அப்போதுதான் ராஜாஜிக்கு யார் இந்த ஜீவா என்ற கேள்வி பிறந்தது.
இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார்.
அதன் பிறகு காங்கிரசிலோ, அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவிலோ அங்கம் வகிக்காமல் ஜீவா முழுநேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். 1940இல் இவரை சென்னை நகரை விட்டு வெளியேறும்படி வெள்ளையர் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் இவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரைக்கால் பகுதிக்குச் சென்றார். அந்த அரசும் இவரை அங்கு தங்க சம்மதிக்கவில்லை. அங்கிருந்து பம்பாய் சென்ற ஜீவாவை அந்த மாகாண அரசு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றியது. 1942இல் விடுதலையான ஜீவா திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டார். அந்த சமஸ்தான அரசு இவரை சொந்த ஊரான பூதப்பாண்டியை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இவரால் சும்மாயிருக்க முடியுமா? தடையை மீறினார், கைது செய்யப்பட்டு சிறைவாசமும் ரூ.500 அபராதமும் கிடைத்தது.
அதிலிருந்து தொடர்ந்து ஜீவா தொழிலாளர் போராட்டங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் அது முதல் இந்திய சுதந்திரம் வரை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். 1952 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சென்னை மாகாணத்தில் அமைந்த அரசுக்கு ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது ஆளும்கட்சி வரிசையில் ராஜாஜியும், எதிர் வரிசையில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்து வாதிட்டதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது ராஜாஜி சொன்னார் கம்யூனிஸ்ட்டுகள்தான் எனது முதல் எதிரி என்று.
ஜீவாவின் அரசியல், சமூக சீர்திருத்தக் கொள்கை, தொழிற்சங்க பணிகள் இவற்றோடு இலக்கியத் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். இவரது கணீரென்ற குரலில் இவர் தாகூரின் 'கீதாஞ்சலி'யை மொழிபெயர்த்த தமிழ்க் கவிதையை உரக்கப் பாடியதை நேரில் கேட்டு அனுபவித்த பேறு இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தனது அந்திம காலத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு குடிசையில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்த காலத்தில், காமராஜ் முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற தாம்பரம் வந்தார். இங்குதான் ஜீவா இருக்கிறாராமே அவர் வீட்டுக்கு விடு என்று காரோட்டியைக் கேட்டுக் கொண்டார் காமராஜ். கார் ஒரு குடிசை வாயிலில் நின்றது. இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள்.
ஜீவா வசிக்க ஒரு அரசாங்க வீட்டை ஒதுக்க காமராஜ் ஜீவாவிடம் அனுமதி கேட்டார். அதை மறுத்துவிட்ட ஜீவா சொன்னார், இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகளுக்கு என்று இருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதுமென்றார். அதன் பிறகு அவர் அதிக நாள் உயிரோடு இல்லை. இறக்கும் தருவாயில் ஜீவா சொன்ன செய்தி, காமராஜுக்குத் தகவல் சொல்லிவிடு என்பதுதான். இந்த நூற்றாண்டின் ஒரு அதிசய மனிதர், கொள்கைப் பிடிப்புள்ள மக்கள் தலைவன், சிறந்த இலக்கியவாதி மறைந்து போனார். ஆனாலும் அவர் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் தொண்டர்கள் இன்றும் ஜீவாவின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்து வருகிறார்கள். வாழ்க ஜீவாவின் புகழ்!
"ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு"
(இந்தக் கட்டுரை "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலரில் பி.எம்.சோமசுந்தரம் எழுதி வெளியானது)
சுதந்திரப் பொன் விழாவை நாம் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் நமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு நம் முன்னோர்கள் பட்ட பாட்டையும் அவர்கள் செய்த தியாகத்தையும் எழுதிட எந்த அகராதியிலும் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை.
குடும்பத்தைத் துறந்து வெஞ்சிறையில் அடைபட்டு செங்குருதி சிந்தி தம் இனிய உயிரத் தந்து, நமக்கு வாங்கித் தந்த சுதந்திரம் இது. இந்த வேள்வியில் ஆஹூதியானோர் பல்லாயிரக் கணக்கில். அவர்களில் இந்தத் தலைமுறையினர் மறக்க முடியாதவர் மறக்கக்கூடாதவர் ஜீவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் ப.ஜீவானந்தம்.
1927ஆம் ஆண்டு சிராவயல் கிராமத்தில் ஜீவா ஆரம்பித்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார் காந்தியடிகள். ஜீவாவைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவர் கேட்டார். 'இந்திய மக்கள்தான் என் சொத்து' என்று ஜீவா பதிலளித்தார். இந்த பதிலால் நெகிழ்ந்த காந்தியடிகள் 'இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என ஜீவாவைப் பாராட்டினார்.
பதவிக்காகவும் சொந்தச் சூழ்நிலை காரணமாகவும் தங்களது கொள்கைகளையே தியாகம் செய்யும் தலைவர்களை இன்று பார்க்கிறோம். கொண்ட கொள்கையில் எந்தச் சூழ்நிலையிலும் லட்சியங்களைக் கைவிடாத கொள்கைக் கோமானகவே கடைசி வரை வாழ்ந்தவர் ஜீவா.
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை பெரியாரின் இணையிலாத் தொண்டனாகவும் வலது கரமாகவும் இருந்தவர்.
குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெரியாரிடம் கருத்து மாறுபட்டு பலர் பிரிந்து செல்வது வழக்கம். பிரிந்து செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். ஒரு சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திசை மாறுவதைக் கண்டார் ஜீவா. 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மகாநாட்டில் பெரியாரின் முன்னிலையிலேயே அவரது கருத்தை போக்கை விமர்சனம் செய்து (தலைவரைத் தொண்டர்கள் விமர்சனம் செய்ய முடிந்த காலம் அது) விட்டு வெளியேறினார்.
ஆத்திகராக பொது வாழ்வை ஆரம்பித்தவர் ஜீவா. காங்கிரஸ் தொண்டராக சோஷலிஸ்டாக சுயமரியாதை வீரராக பொதுவுடமைக் கட்சியின் தொண்டர் தோழர் தலைவர் என்று பல நிலைகளில் பணியாற்றியவர். காந்திஜி, பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், ராய. சொ., கோவை அய்யாமுத்து போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர். இன மத பேதமின்றி பல்வேறு கட்சிகளும் போராடிப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் பிதுரார்ஜித சொத்தாக அனுபவிக்க நினைத்த போது அதைத் தன் கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர் ஜீவா.
பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த நாட்டுக்குத் தந்த நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி எனும் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் 21-8-1907ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீவானந்தம். பின்னாளில் இவர் ஜீவா எனப் பெயர் பெற்றாலும் இவரது பெற்றோர் பட்டம் பிள்ளை உமையாம்பாள் தம்பதியினர் இவருக்கு வைத்த பெயர் சொரிமுத்து.
சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பேசும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். இது அவருக்கு முதல் சிறை அனுபவம். அன்று தொடங்கி 1942இல் தடுப்புக் காவல் சட்டப்படி மீண்டும் சிறை. நாடு கடத்தல் என்று அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம்.
ஜீவாவை அவரது தொண்டர்கள் "ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு" என்று சொல்லும் அளவுக்குத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போராட்டத்திலும் சிறையிலும் கழித்தார்.
பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த சமயம் மதுரையில் மாநாடு ஒன்றை மிகச் சிறப்பான முறையில் நடத்தினார். ஜீவா மாநாடு முடிந்த மறுநாள் சக தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் 'மயக்கம்' தெளிவித்து எழுப்பினர். மயக்கம் ஏன் வந்தது என்று கேட்டனர். கையில் காசில்லாததால் ஜீவா இரண்டு நாள் பட்டினி என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்தது. (பாருங்கள்! இவர் ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர்) உடனே அவருக்கு உணவு கொடுத்தனர். அப்போது மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நின்றார். ஜீவா, தன் அரைக்கால் சட்டையிலிருந்து பணக்கத்தை ஒன்றை எடுத்து அவரிடம் தந்தார்.
இவ்வளவு பணம் இருக்கும்போது ஏன் பட்டினியாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டபோது வந்த பதில் "இது கட்சியின் பணம். நான் சாப்பிட அல்ல". இதுதான் மாசிலா மாணிக்கம் ஜீவா.
பாரத மக்களின் மனதில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் நேரு என்றால், தமிழக மக்களின் மனதில் அதை ஆழ ஊன்றியவர் ஜீவா.
குடிசை வீட்டில் வாழ்ந்த ஜீவாவுக்கு அரசு சார்பில் வீடு கொடுக்க அப்போதைய முதலமைச்சர் காமராஜ் விரும்பினார். அவர் ஜீவாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்த போது, "எல்லோருக்கும் வீடு கொடிங்கள். அப்போது எனக்கும் ஒன்று கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்" என்று அரசு வீட்டை மறுத்தவர் ஜீவா.
எந்த விஷயத்திலும் ஒரு உண்மையான அக்கறையுடனும், தீவிரமான பற்றுதலுடனும் ஈடுபடும் இயல்பு கொண்டவர் ஜீவா. தலைவராக இருந்த போதும் தன்னை ஒரு தொண்டனாக தோழனாக நினைப்பதில் பெருமை கொண்டவர்.
நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.
இலக்கிய ஆர்வலர் என்பதைமட்டும் சொல்லி நிறுத்திவிட்டீர்கள்.ஜீவா பெரிய பாரதி பக்தர்.கம்பனில் ஆழ்ந்த புலமை உடையவர் அல்லவா?
ReplyDeleteசிங்கத்தை எந்தக் காட்டில் விட்டாலும் அது சிங்கம் தான்.
ReplyDeleteஅதன் சீற்றம் மாறாது.
அதைப் போலத்தான் இந்த ஜீவாவும்.
நான் அதிகம் விரும்பும் தலைவர்.
கம்பனையும், மஹாகவியையும்,இந்த ஜீவாவையும் மான சீகமாக நேசிக்கிறேன், போற்றுகிறேன், வணங்குகிறேன்.......
சிறுவயதிலே நான் "ஜீவபாரதி" அன்று புனைப்பெயர் கொண்டு தமிழில் கிறுக்க ஆரம்பித்தேன். அற்புத மனிதர்.
எங்கள் ஊர் ஜீவா மன்றத்தின் சார்பாக நடந்த இலக்கியக் கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன், அந்தக் கூட்டத்தில் பேசிய குன்றக்குடி அடிகளார் (முன்னவர்) அவர்களுக்கு, பாரதி மன்றம் என்ற ஒரு அமைப்பை எனது நண்பர்களோடு ஏற்படுத்திக் கொண்டு அதன் சார்பாக அவருக்குப் பொன் ஆடைப் போர்த்தி மகிழ்ந்திருக்கிறேன்.
வானொலியில் ஒளிபரப்பும் கம்பன் விழா நிகழ்சிகளை கேட்கத் தவறியதில்லை. டி.கே.சி, ஜீவா இவர்களின் மீசையைப் பாருங்கள் கம்பனாகவே தெரியும். காரணம் கம்பனையே இவர்களைக் கொடு தான் வரைந்திருப்பார்கள் போலும். தமிழகத்தில் கம்பனை வளர்த்தவர்களில் இவர்களுக்குத் தான் அதிக பங்கு.
////அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம்////
வேறுயாரும் இப்படி மகாத்மாவிடம் பாராட்டுப் பெற்றிருக்க மாட்டார்கள்..
/////இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார்./////
இதைப் போன்றத் தவறுகள் தான் தேசநலனுக்காக ஆரம்பித்த இயக்கம் முதலாளிகளின் கூட்டமாக மாறி இன்று அதன் பலனை தமிழகத்திலே அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
/////இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள்//////
மனம் வலிக்கிறது..... படிக்கும் போது கண்கள் கலங்க வைத்த நிகழ்வு..... யார் இவர்கள்? இப்போது எங்கேப் போனார்கள்...... இருப்பார்கள் ஆனால் அவர்கள் இறந்தப் பின்புதான் தெரிய வருவார்கள் போலும்.
இவரைப் போன்ற தியாகிகளோடு பழகிய உங்களோடு நான் பழகுகிறேன், நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் படிக்கிறேன் எனும்போது நான் பேருவகை அடைகிறேன்.
நன்றிகள் ஐயா!