ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்
ஓமந்தூர், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முத்துராம ரெட்டி ரங்கநாயகி தம்பதியருக்கு ஓர் தவப்புதல்வன் பிறந்தான். அந்தக் குழந்தைதான் பின்னாளில் சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான்.
இளம் வயதில் தந்தையை இழந்த ஓ.பி.ஆர் தன் கல்வியை மட்டும் விடாமல் தொடர்ந்தார். கற்பதில் ஆர்வமும், கற்றதை நடத்தையில் காட்ட ஊக்கமும் உடையவராக விளங்கினார் இவர். இலக்கணம் கற்றார், சமய, ஆன்மிக, நீதி நூல்களைக் கற்றார், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கசடறக் கற்றார். அவரது அறிவும் ஞானமும் விசாலமடைய அடைய அவர் சிந்தனையும் பரந்து விரிந்ததாக, 'சர்வோ ஜனஹ ஸுகினோ பவந்து' இவ்வுலக மாந்தரெல்லாம் நலமோங்கி வாழ்க எனும் மந்திரத்தைத் தனது வாழ்க்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கினார். ஊருக்குள் இவருக்கு நல்ல பெயர், போதாதற்கு இவர்தான் அவ்வூரின் மணியகாரர். மக்கள் இவருக்கு அளிக்கும் மரியாதைக்குக் கேட்க வேண்டுமா? உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்போர் நேர்மை, இரக்கம், தூய்மை இவற்றின் இருப்பிடமாக இருந்தால் கேட்க வேண்டுமா? இவரிடம் மக்கள் அன்பு மட்டுமல்ல, பக்தியே செலுத்தி வந்தார்கள்.
இவர் அடிப்படையில் ஒரு விவசாயி. தானே களத்தில் இறங்கி விவசாயம் பார்த்து, அதில் தேவையான முன்னேற்றங்களைச் செய்து அனுபவ விவசாயியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியிடம் இவருக்கு ஈடுபாடு, பக்தி. தியாகி வெங்கம்பூர் சாஸ்த்திரி என்றொருவர். அவர்தான் ரெட்டியார் மனதில் தேசிய விதையை ஊன்றி, அதை நன்கு வளர்த்து விட்ட அரசியல் குரு. இவரது அயராத காங்கிரஸ் பணி, தன்னலமற்ற தொண்டு இவரை 1930ஆம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கியது. இவர் தென் ஆற்காடு மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து நாட்டின் அரசியல் நிலமையை மக்களுக்கு விளக்கி, கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
காந்தி ஆசிரமம் ஒன்றை சிறுவந்தாடு எனும் கிராமத்தில் தொடங்கி நடத்தினார். தென் ஆற்காடு மாவட்டத்தில் 1927 தொடங்கி 1934 வரையிலான காலகட்டத்தில் பல காங்கிரஸ் மகாநாடுகளைக் கூட்டி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் தலமை அகமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனி கவர்னராக இருந்த இடம் கடலூர்தான். இங்குள்ள ஒரு மைதானத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் பொதுமக்கள் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஓமந்தூரார் அங்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதிகார வர்க்கம் செய்வதறியாது விழித்தது. ஓமந்தூரரின் புகழ் பெருகியது. கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மாவட்டத்தின் காங்கிரஸ் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.
1920இல் நாகபுரியில் சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குச் சென்று வந்த ஓ.பி.ஆர். தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டைக் கூட்டினார். இதில் பண்டித அசலாம்பிகை அம்மையார், 'தி ஹிந்து' ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிருஷ்ணசாமி சர்மா வ.உ.சி. தண்டிக்கப்பட்டபோது கரூரில் அந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து பேசிய பேச்சுக்காக சிறை தண்டனை பெற்றவர்.
1933இல் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து மாவட்ட மாநாட்டை நடத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதுதான் அவரது முதல் சிறை வாசம்.
அதற்கு அடுத்த ஆண்டே, மகாத்மா காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டாம் முறையாக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு இவர் ஊரின் ஓரத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் வசிக்கலானார். அரசியலும் ஆன்மீகமும் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் பலரும் இவரைத் தேடி அங்கு வரலாயினர். அந்தக் காலத்தில் தென் ஆற்காடும், செங்கல்பட்டும் இணைந்தது ஒரு பாராளுமன்றத் தொகுதி. இங்கு எம். பக்தவத்சலத்தின் மாமனாரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான முத்துரங்க முதலியார் காங்கிரஸ் சார்பிலும், கேசவன் எனும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் இங்கு போட்டியிட்டனர். இதில் முத்துரங்க முதலியார் வென்றார்.
1936 தேர்தலில் இம்மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான போட்டி காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும். இதில் ஓ.பி.ஆர். முனைந்து ஈடுபட்டு காங்கிரஸ் சார்பில் ந.சோமையாஜுலு, பசும்பொன் தேவர், ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் பயனாக அகில இந்தியாவும் ஓ.பி.ஆரை. கவனிக்கத் தொடங்கியது. யார் இந்த சாதனையாளர் என்று. ஓ.பி.ஆரின் பெயர் தமிழகமெங்கும் பரவியது.
1938இல் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். இவரது புரட்சிகரமான போக்கும், முற்போக்குச் சிந்தனைகளும் இவருக்கு கட்சியிலும் சரி, உறவிலும் சரி எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத, ஊழலற்ற, நேர்மையான இவரைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். என்ன செய்வது? புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காகவும் இவர் பாடுபடலானார். இவரை ஆதரித்துப் பல தலைவர்கள் அன்று அந்த போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர்.
1942 ஆகஸ்ட் 8, பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போரில் ஒன்று செய், அல்லது செத்து மடி எனும் வேத வாக்கியத்தை மகாத்மா தொண்டர்களுக்கு வழங்கினார். அன்று இரவே அங்கு வந்திருந்த அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஓமந்தூராரும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு 18 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது நான்காவது சிறை வாசம்.
இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல் ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது. வாழ்க ஓமந்தூரார் புகழ்!
Oமந்தூரார் தன் இறுதிக்காலத்தை ரமண ஆஸ்ரமத்தில் ஒரு துறவிபோல இருந்து கழித்தார். அவர் முன்னாள் முதல்வர் என்று சொன்னால்தான் தெரியும்.அப்படி எளிமையாக வாழ்ந்தார்.
ReplyDelete"ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்"
ReplyDeleteபெயரை மட்டுமே அறிந்திரிந்தேன்.
தோன்றிப் புகழோடு தோன்றுக அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
நன்றி.
எளிமை,தூய்மை,உழைப்பு,தன்னலம் கருதாத நாட்டுப்பற்று
ReplyDeleteஆகியவற்றை ஒருங்கே பெற்று நாட்டுக்கு உழைத்த ஓமந்தூரார்
பற்றி தெரிந்து கொள்ள உதவிய இப்பதிவிற்கு நன்றி.
எளிமை,தூய்மை,உழைப்பு,தன்னலம் கருதாத நாட்டுப்பற்று
ReplyDeleteஆகியவற்றை ஒருங்கே பெற்று நாட்டுக்கு உழைத்த ஓமந்தூரார்
பற்றி தெரிந்து கொள்ள உதவிய இப்பதிவிற்கு நன்றி.
ஓமந்தூரார் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் இரண்டு வருடம் முதல்வர் பதவி வகித்தார். இவர் தொழில்,குடும்பம் என்று பாராமல் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற உத்தமர் ஓமந்தூர் பட்டாபி இராமசாமிரெட்டியார். இன்றைய தமிழக அரசு இவர் வரலாறு அனைத்தும் வெளியிடவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வெளியிவேண்டும்.
ReplyDeleteராமசாமி ரெட்டியார் நல்ல மனிதர்
ReplyDelete