Followers

Friday, November 5, 2010

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

திருச்சி மாநகரம் பல நூறு தியாகிகளை இந்திய சுதந்திரத்துக்கு அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல தியாகிகளில் வக்கீல் ரா.நாராயண ஐயங்கார் என்பவர் முதன்மையானவர். அவர்களுடைய காலம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதால், சுதந்திரப் போர் முக்கியமான கட்டத்தை நெருங்கிய சமயத்தில் இவர்கள் எல்லாம் களத்தில் இல்லை. அதனால் பெரும்பாலும் இவர்களது வரலாறு வெளியே வராமலேயே போய்விட்டது. என்றாலும் இவர்களது பங்களிப்பு மறக்கக்கூடியவைகள் அல்ல.

1919இல் பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையை அடுத்து நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பு அதிகமாகியது. மகாத்மா காந்தி ஒத்துழையாம இயக்கத்தைத் தொடங்கினார். 1919இல் தமிழகத்தில் திருநெல்வேலியில் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவரது தீர்மானத்தை மிதவாத காங்கிரசைச் சேர்ந்த சர் சி.பி.ராமசாமி ஐயரும், சீனிவாச சாஸ்திரியாரும் எதிர்த்துப் பேசினர். அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டு சட்டசபைகளுக்குப் போகவேண்டுமென்பது அவர்களது வாதம். இவர்களது எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக இவ்விருவரும் காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டனர். இவ்விதம் அந்தக் காலத்தில் தீவிர வாதிகள், மித வாதிகள் என்ற ரீதியில் காங்கிரசார் பிரிந்திருந்தனர். இதில் ரா.நாராயண ஐயங்கார் தீவிரவாத கோஷ்டியில் அங்கம் வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் நாராயண ஐயங்கார் சட்டக்கல்வி படித்து வக்கீலாகத் தொழில் தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்திலும் இவர் தீவிரமாக பங்குபெறத் தொடங்கினார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் அலுவலகம் சின்னக்கடைத்தெருவின் அருகில் இரட்டை மால் வீதியில் இருந்தது. அப்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சுவாமிநாத சாஸ்திரி, சையத் முர்டூசா சாஹேப் ஆகியோர் முக்கிய பதவிகளில் இருந்தனர். 1920 வாக்கில் வ.வெ.சு.ஐயரும் மாவட்ட காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

அப்போது திருச்சி தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆசிரியர் கல்கி அவர்கள் தனது படிப்பை நிறுத்திவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இப்படி இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக ஊர் ஊராகச் சென்று பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றியும், நாட்டுக்கு சுயராஜ்யம் தேவை என்பதைப் பற்றியும் பேசினார்கள். ரா.கிருஷ்ணமூர்த்திக்கு (கல்கி) நல்ல குரல் வளம். மென்மையான கீச்சுக்குரல். அவர் மகாகவி பாரதியாரின் பாடல்களை அருமையாகப் பாடுவார்.

1921இல் கதர் மற்றும் இந்தி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வடநாட்டுக் காரரான பிரதாப்நாராயண வாஜ்பாய் என்பவர் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் பேசிய பேச்சுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஓராண்டு சிறையும், இவரது உரையை தமிழில் மொழிபெயர்த்த பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு ஓராண்டு சிறையும் கொடுக்கப்பட்டது. பின்னர் இவர் சிறையிலிருந்து வெளிவந்த பின் உடல்நலம் கெட்டு காலமானார். அவரது ஈமக் கிரியைகளை பாலகிருஷ்ண சாஸ்திரியே செய்தார்.

1925இல் அகில இந்திய கதர் நூல் நூற்போர் சங்கத்தின் தலைவராக க.சந்தானம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் செயலாளராக ரா.நாராயண ஐயங்கார் பணி புரிந்தார். திருச்சி தியாகி சங்கிலியாப் பிள்ளை கதர் வஸ்திராலய ஊழியராகப் பணிபுரிந்தார். இந்தக் கதர் கடை திருச்சி பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இருந்தது.

1926-27இல் மகாத்மா காந்தி தென்னிந்திய சுற்றுப்பயணம் வந்தார். அப்போது அவர் திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்தில் தங்கினார். அவருடன் ராஜாஜி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய், மீராபென் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வீட்டில் காவல் வேலையைச் செய்தது தொண்டர் ரா.நாராயண ஐயங்கார்.

மகாத்மா காந்தி அப்போது திருச்சியில் இருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயரின் மனைவி வந்து அவரைச் சந்தித்து சேரன்மாதேவி குருகுல உரிமைகள் அனைத்தையும் மகாத்மாவிடம் ஒப்படைத்தார். 1930இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இயக்கத்தின் பொறுப்பை போகும் வழியிலுள்ள ஊர்களில் கவனித்துக் கொள்ள ரா.நாராயண ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் கல்லணையில் தொண்டர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது, உணவு அளிக்கக்கூடாது என்று தஞ்சை கலெக்டர் தார்ன் போட்டிருந்த உத்தரவுக்கு எதிராக மக்கள் ரகசியமாக மரத்தில் சோற்று மூட்டைகளைக் கட்டி வைத்து தொண்டர்களை எடுத்துச் சாப்பிடும்படி ரகசிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

உப்பு சத்தியாக்கிரகத்துக்கு உதவுவதற்காக திருச்சியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த முகாம் நடத்த கிலேதார் தெருவில் இருந்த நீலாம்பாள் எனும் அம்மையார் தனது வீட்டைக் கொடுத்திருந்தார். அவரை போலீசாரும், அரசாங்க அதிகாரிகளும் எவ்வளவோ மிரட்டியும் அவர் படிந்து வரவில்லை. முகாம் அங்குதான் நடந்தது. ஒவ்வொரு நாளும் அந்த முகாமிலிருந்து ஐம்பது தொண்டர்கள் வேதாரண்யம் பயணமாயினர்.

அப்போது நாராயண ஐயங்காருக்கு விருதுநகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் கல்யாண கோஷ்டியொன்று விருதுநகரிலிருந்து வருகிறது. அவர்களை ரயில் நிலையத்துக்கு வந்து சந்திக்கவும் என்று இருந்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. யாருக்குக் கல்யாணம். அந்த கல்யாண கோஷ்டியில் வருபவர்கள் யார்? ஒன்றும் தெரியவில்லை. விலாசமும் சரியாகத்தான் இருந்தது. சரி எதற்கும் போய் பார்க்கலாம் என்று இவரும் போய் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ரயில் நின்றது. அதிலிருந்து ஒரு கோஷ்டி. அதில் ஒருவருக்கு மஞ்சள் வேட்டியணிந்து மாலையுடன் இருந்தார். அவருடன் அவர் தோழர் ஒருவர். இவர்களுக்குப் பாதுகாப்பாக போலீசார். பார்த்தால் ஒருவர் காமராஜ், மஞ்சள் வேட்டிக்காரர் அவரது தோழர் முத்துச்சாமி. அவரது திருமண வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு திருச்சி அழைத்து வரப்பட்டிருந்தார் முத்துச்சாமி. உடன் காமராஜ். அந்த கோஷ்டியை டாக்டர் ராஜன் இல்லம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

உப்பு சத்தியாக்கிரகம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் நாராயண ஐயங்காருக்கு வேதாரண்யத்திலிருந்து ஒரு கடிதம். கு.லட்சுமணசாமி முதலியார் என்பவர் எழுதியிருந்தார். அதில் "இங்கு கிரெளன் பிராண்ட் சரக்கு ரொம்பவும் மும்முரமாக எடுபடுவதால், அதனுடன் போட்டிபோடக்கூடிய நல்ல சரக்குகளை அனுப்பவும்" என்றிருந்தது. இது என்ன? ஒன்றும் புரியவில்லையே என்று இவருக்குக் குழப்பம். அதன் பொருள் பின்னர் இவருக்குப் புரிந்தது. அது "அங்கு போலீசின் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது. ஆகையால் அதனை எதிர்த்து நிற்கக்கூடிய தொண்டர்களை அனுப்பவும் என்று இருந்தது.

இவர்கள் முகாம் நடத்த இடம் கொடுத்த நீலாம்பாள் பற்றி சொன்னோமல்லவா? போலீஸ் அவரை மிரட்டியபோது, வீடு தன்னுடையது அதனை இவர்களுக்கு வாடகைக்குத் தந்திருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியும் அவருடைய வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் சாட்சிக் கூண்டில் ஏறி, தான் விரும்பிதான் இந்தப் பணிக்காக தனது வீட்டைக் கொடுத்ததாகக் கூறி சிறை புகுந்தார்.

ரா.நாராயண ஐயங்கார் தண்டிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவருக்குக் கல் உடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. வக்கீலாக இருந்தவர் அங்கு போய் கல் உடைத்தார். வக்கீலான இவரை சிறையில் 'சி' வகுப்பில் வைத்திருந்ததனால் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் கிளர்ச்சி செய்து இவருக்கு 'பி' வகுப்பு கிடைக்க வகை செய்தது. விடுதலையாகி இவர் திருச்சி வந்தபோது இவருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. "சங்கு" கணேசனுடன் சேர்ந்து "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகை நடத்தினார். திருச்சி தியாகி எஸ்.வெங்கட்டராமன் தொடங்கி நடத்திய "ஜெயபாரதி" எனும் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ஆண்டுகள் பணி. 'தினமணி', 'சுதேசமித்திரன்' ஆகியவற்றில் சுதந்திர எழுத்தாளராக அடிக்கடி எழுதிவந்தார். தனது எண்பதாவது வயதைத் தாண்டி வாழ்ந்த இவர் திருச்சியில் காலமானார். திருச்சி மாவட்டம் அளித்த சிறந்த தியாகிகளில் ரா.நாராயண ஐயங்காரும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை பழனிக்குமாரு பிள்ளை

மதுரை தந்த பல தேசபக்தர்களில் பழனிக்குமாரு பிள்ளையும் ஒருவர். இவர் 24-9-1898இல் பிறந்தார். 1908இல் தேச விடுதலைக்காக நடைபெற்ற போராட்டம் இவரை இழுத்துக் கொண்டது. அப்போது சுயராஜ்ய வேட்கை உள்ளவர்கள் பலர் இந்தியாவில் புதிது புதிதாகத் தோன்றிய பல ஆன்மிக, அரசியல் இயக்கங்களில் சேரந்தனர். அதன்படி இவர் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினர் ஆனார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு சுயராஜ்யக் கட்சி என்று தனியாக காங்கிரசிலிருந்து பிரிந்து போய் ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பழனிக்குமாரு பிள்ளை பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டம் நேரடியாக இந்திய சுதந்திரம் எனும் கோரிக்கையை வைத்துப் போராடுவதற்கு முன்பாக மகாத்மா காந்தியின் ஆணைக்கிணங்க பல சமூக, அடித்தட்டு மக்களைக் காப்பாற்றும் பல இயக்கங்களை அறிவித்தார். அதில் ஒன்றுதான் ஏழை உழைப்பாளிகளை குடியின் கேட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற கள்ளுக்கடை மறியல் போராட்டம். 1922இல் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஒரு வாரம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கூட்டங்களில் பேசும்போது எதிர்கட்சியாக இருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி இவர் பல முறை அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். 1930இல் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். அதில் இவர் தொண்டராகக் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், உப்பு சத்தியாக்கிரகத்தை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிவகாசி சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இவர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

1932ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். ராமநாதபுரம், மதுரை ஆகிய ஜில்லாக்களில் காங்கிரஸ் கமிட்டியில் போராட்டக் குழுவில் தலைமை வகித்து இவர் வழிநடத்திச் சென்றதால் இவர் மீது வழக்கு வந்தது. மறியல் நடத்தியக் குற்றத்துக்காக இவருக்கு 2 வருட தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் தண்டனைகளை அலிப்பூர், திருச்சி சிறைகளில் கழித்து விடுதலையானார்.

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் (தீச்சட்டி கோவிந்தன்) மீது திராவகம் வீசப்பட்ட வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவருக்கெதிராக வலுவான சாடிசிகள் எதுவும் இல்லாமல் போகவே இவர் விடுவிக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரது தீவிரமான ஈடுபாட்டைக் கவனித்த போலீஸ் இவரை போலீஸ் காவலில் வைத்துக் கொண்டு, சில நாட்களுக்குப் பின் வெளியே விட்டனர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ந.சோமையாஜுலு, காமராஜ் ஆகிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழனிக்குமாரு பிள்ளை. பெருந்தலைவர் காமராஜருடன் ஒன்றாக இவரும் அவரும் ஒரே சிறையில் இருந்திருக்கின்றனர். இவருக்கு காமராஜருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது விருதுநகரில். அப்போது இவர் அவ்வூரில் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். இவர் பொது நலனுக்காக அயராது பாடுபட்டு எப்போதும் பிறருக்கு உதவுவதிலேயே காலத்தைச் செலவிட்டார். இவர் 14-7-1977இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பழனிக்குமாரு பிள்ளையின் தியாகம்!

ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரை ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்

மதுரையைச் சேர்ந்த இந்த இஸ்லாமியப் பெரியவர் தன்னுடைய சுதந்திரப் போராட்ட வாழ்க்கையை 1910இல் அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தோடு தொடங்கினார். இவர் பல மொழிகளில் வல்லுனர். இவர் மேடையேறி பேசினால் அனைவரும் ஆழ்ந்து கவனிப்பர். இவருடைய பேச்சுக்கள் எப்போதும் வீண் பேச்சாக இருந்ததில்லை. பல மொழி நூல்களிலிருந்தும், பல்நாட்டு அறிஞர் பெருமக்களின் உரைகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவார். அவர் பேசுகிறார் என்றால் மதுரையிலும் சுற்று வட்டாரங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வர். அன்றைய ஆங்கில ஆளும் வர்க்கத்தை இவர் தனது பேச்சினால் கலங்க அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். தேசபக்தி, மதபக்தி இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!

Wednesday, November 3, 2010

தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்

A.Y.S. பரிசுத்த நாடார்

ஒரு ஊரின் பெயரைச் சொன்னவுடன் சிலரது பெயர்கள் நினைவுக்கு வரும்; அதுபோல தஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வரும் பெயர் A.Y.S. பரிசுத்த நாடார். தேசியப் பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியில் 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி A.யாகப்ப நாடார் - ஞானம்மாள் தம்பதியருக்குப் பிறந்த அருந்தவச் செல்வங்கள் மூவரில் இளைய மகன் இவர். இவரது மூத்த சகோதரர் A.Y.அருளானந்தசாமி நாடார், இவரது சகோதரி இதயமேரி அம்மாள்.

இவர் தஞ்சாவூர் நகராட்சியின் சேர்மனாக நீண்ட காலம் பதவி வகித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியவர். மூன்று முறை தேர்தலில் வென்று பதினைந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றிய இவர் தி.மு.க.வின் தலைவர் தஞ்சையில் போட்டியிட்டபோது மட்டும், ஒரே ஒரு முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர். நாட்டுப் பற்றோடும், மக்கள் நலனில் அக்கறை உணர்வோடும் இவர் சமூகப் பணிகளில் செயலாற்றியவர். இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் Air Raid Warden பொறுப்பில் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பாளராகப் பணியாற்றியவர் இவர். அவரது உயரிய செயல்பாடு காரணமாக அன்றைய அரசாங்கம் இவருக்கு "ராவ் சாஹேப்" விருதை வழங்கி கெளரவித்தது. தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றினார். தஞ்சை நகர காங்கிரஸ் தலைவராக 21 ஆண்டுகள் இருந்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியக்கமிட்டி உறுப்பினராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இப்படி பல நிலைகளில் இவர் கட்சிப்பணியாற்றியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் இவரது நேர்மையையும், நிர்வாகத் திறமையையும், கடுமையான உழைப்பையும், தொண்டுள்ளத்தையும் கண்டு இவரிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

சிறுபான்மை இன ரோமன் கத்தோலிக்க நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரான இவருக்கு எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், நல்லெண்ணமும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரும் இவரது மூதாதையர்களும் இந்தப் பகுதி மக்களுக்கு, அவர்கள் எந்த சாதி, இனத்தைச் சேர்ந்தவராயினும் பாகுபாடின்றி நான்கு தலைமுறைகளாகப் பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டி, அவர்களை உயர்த்துவதற்காக இடைவிடாது பாடுபட்டிருக்கிறார்கள். அந்த நன்றியுணர்வை இன்றளவும் சுற்றுப்புற கிராம மக்களிடம் பார்த்து உணர முடிகிறது. தர்ம காரியங்களுக்கும், உதவிகள் தேவைப்படும் தகுதி வாய்ந்த இளைய தலைமுறையினருக்கும் இந்தக் குடும்பம் விளம்பரமின்றி செய்து வரும் பெரும் பணிகளை மக்கள் மனதார பாராட்டி மகிழ்கிறார்கள்.

A.Y.S. பரிசுத்த நாடார், தஞ்சை தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இவற்றில் கல்வி பயின்றார். விளையாட்டுகளில் ஆர்வமுடையவர் இவர்; குறிப்பாக கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டு சென்னை மாகாண கால்பந்துக் குழுவில் விளையாடியிருக்கிறார். மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். டென்னிஸ் ஆட்டத்திலும் இவர் வல்லவராக விளங்கியிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி, இவர் தனது 61ம் வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று அதற்கான உரிமம் பெற்றுத் தன்னந்தனியராக விமானம் ஓட்டி பாராட்டுதல்களைப் பெற்றவர் என்பதுதான்.

அரசியல், வணிகம், விளையாட்டு போன்ற துறைகளைத் தவிர இவர் ஈடுபட்டு பெருமை சேர்த்த வேறு பல துறைகளும் உண்டு. பாரத சாரண இயக்கத்தில் உதவி இயக்குனராக இருந்தவர்; தஞ்சை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூர் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர்; தஞ்சாவூரில் இருக்கும் யூனியன் கிளப்பின் தலைவர்; காஸ்மாபாலிடன் கிளப்பின் தலைவர்; தோல்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இப்படிப் பலப்பல. இவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அங்கு இவரது அயராத உழைப்பாலும், நேர்மை நெறிகளாலும் சிறப்பிடம் பெற்று விளங்கியிருக்கிறார்.

1949ம் ஆண்டில் முதன்முதலாக தஞ்சாவூரில் ROTARY CLUB OF THANJAVUR என்ற பெயரில் முதல் ரோட்டரி சங்கத்தைத் தோற்றுவித்து அதன் சாசனச் செயலாளராக இருந்திருகிறார். தஞ்சாவூரில் ரோட்டரி இயக்கத்தின் முன்னோடியாக இவர் திகழ்ந்திருக்கிறார். 1946ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான புதுச்சேரி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென்மாநில தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் குழு அமைத்தபோது, சிறுபான்மையினரின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நோக்கில் Rev.Fr. Jerome D'Souza அவர்களின் தலைமையில் அமைந்த சிறுபான்மையோர் குழுவில் இவரும் அங்கம் வகித்து அரிய பணியாற்றியிருக்கிறார். இந்தப் பெருமகனார் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் திரைப்படம் அறிமுகமான காலத்திலேயே திரைப்படக் கொட்டகைகளை அமைத்து மக்கள் பார்க்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்.

அரசியல், சமூகத்தொண்டு, கல்விப்பணி, தொழில்துறை என்று பல்முனை வித்தகராக விளங்கிய பெருந்தகையாளர் A.Y.S.பரிசுத்த நாடார் திருமதி பிலோமினா சூசையம்மாள் தம்பதியருக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் குலவிளக்குகளாகத் திகழ்கின்றனர். அவர்கள் S.P.ஜெரோம், S.P.ஜேம்ஸ், S.P.ஜார்ஜ், S.P.பெஞ்சமின், S.P.பெலிக்ஸ், S.P.செல்வராஜ், S.P.அந்தோணிசாமி, S.P.அருள்தாஸ் ஆகியோராவர். இவர்களுக்கு ஒரு சகோதரி; அவர் பெயர் S.P.மேரி ஞானம் அருள்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"

என்பது வள்ளுவர் வாக்கு. “உலகத்தில் பேரறிவாளரிடம் இருக்கும் செல்வமானது, ஊருக்கு நடுவில் இருக்கும் குளத்து நீர் எல்லோருக்கும் பயன்படுவதைப் போன்றது” என்பது இதன் பொருள். அப்படிப்பட்ட பேரருளாளர்கள் புகழ் ஓங்கட்டும்!

அக்கினித் திராவக அபிஷேகம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயருக்கு அக்கினித் திராவக அபிஷேகம்.

1942 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம். மதுரையில் தேசியத் தொண்டர்கள், சொர்ணத்தம்மாள் உள்ளிட்ட பெண்கள் உட்பட பலர் ஊர்வலமாகச் சென்று மகாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்படி அமைதியாகப் போய்க்கொண்டிருந்த ஊர்வலத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது. ஊர்வலத்தில் வந்த சில தொண்டர்களையும், இரண்டு பெண்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி ஊருக்கு எட்டு மைல் தள்ளி ஒரு வனாந்திரப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்று, அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு வந்து விட்டார்கள். நட்ட நடுக் காட்டில் நிர்வாண கோலத்தில் அந்த தாய்மார்களும், தொண்டர்களும் அன்று பட்ட வேதனை. அப்பப்பா, கொடுமை. இந்தக் கொடுமையைச் செய்தவன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். பெயர் விஸ்வநாதன் நாயர். இவரைத் தீச்சட்டி கோவிந்தன் என்று குறிப்பிடுவார்கள். தேசபக்தர்களுக்கு கொடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றவர்.


இந்த நிகழ்ச்சியின் காரணமாக மதுரை இளைஞர்களுக்கு இந்த விஸ்வநாதன் நாயர் மீது ஒரு கண். அவனை பழி தீர்த்துக் கொள்வதற்காக நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்த்தது. அவர்கள் அந்த கொடுங்கோல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயரை நடுவில் விட்டு அக்கினித் திராவகத்தால் அபிஷேகம் செய்து ஆனந்தப் பட்டனர். பழிக்குப் பழி. எங்கள் தாய்க்குலத்தை நிர்வாணமாக்கி அவமதித்த விஸ்வநாத நாயரே, இனி வாழ்நாள் முழுவதும் நீ செய்த அந்த கொடுமையை உன் முகத்தையும் உடம்பையும் பார்த்துப் பார்த்து நினைவு படுத்திக் கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் மீது அக்கினித் திராவகம் வீசிய நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கை நிரூபிக்கப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை. எனவே அக்கினித் திராவகம் வீசினார்கள் என்பதற்குப் பதிலாக அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இந்திய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ராமானுஜம் ஐயங்கார், கோ.குப்புசாமி, டி.தர்மராஜ் சந்தோஷம், முதலான வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் பழிக்குப் பழி வாங்கும் செயலை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரத் திலகங்கள் K.B.ராஜகோபால், D.ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நீலகண்டன் என்பாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், லட்சுமணன், காயாம்பு தேவர், கோமதிநாயகம் ஆகியோருக்கு தலைக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.

மற்ற எதிரிகளான ஓ.ஆர்.சுந்தர ராவ், டி.எம்.கோபாலாச்சாரி, ஏ.என்.விசுவநாதன், ரத்தினம் பிள்ளை, சோமுப் பிள்ளை, கணபதி பிள்ளை, சங்கிலித்தேவர், நாராயணன், குருநாதன் ஆகியோர் செஷன்ஸ் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் இவர்களில் பலர் மறுபடியும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிவிஷன் மனு செய்தனர். திரு ஜெயராமன் என்ற வழக்கறிஞர் எதிரிகளுக்காக வாதிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. இவர்கள் தவிர மேலும் பலர் தடையை மீறியதற்காகவும், ராஜதுவேஷப் பேச்சிற்காகவும் சிறை தண்டனை பெற்று மதுரையின் பெருமையை உலகறியச் செய்தனர். வாழ்க மதுரை தியாகசீலர்களின் புகழ்!

Sunday, October 31, 2010

கவி கா.மு.ஷெரீப்



கவி கா.மு.ஷெரீப்

தமிழ் திரை உலகில் பல கவிஞர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களில் பலர் இன்றும் நமது நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பல பாடல்கள் நமது நெஞ்சங்களில் ஆழப்பதிந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. தங்களது கவித்துவம் வெளிப்பட வேண்டும், திரையுலகின் மூலம் தங்களது பெயரும் புகழும் வெளி உலகில் பரவ வேண்டும் என்பதோடு, வாழ்க்கைக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது என்பதற்காக இவர்கள் இந்தத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட பல கலைஞர்கள், கவிஞர்கள் நமது நாடக மேடைகளிலிருந்து தான் தமிழ்த்திரை உலகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களில் உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கம்பதாசன், பாபநாசம் சிவன், வாலி, நா.காமராஜ், நா.முத்துக்குமார், கு.மா.பாலசுப்பிரமணியன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்கள் தவிர இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் பல இளைய தலைமுறை கவிஞர்களும் அடங்குவார்கள்.

நூறு ஆண்டுகள் ஆனபின்பும் இவர்களது பல பாடல்கள் அன்றும் பாடப்பட்டுக் கொண்டிருக்கும், அத்தகைய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் பல. இவர்களது கவிதைகளை இசை அமைத்து கேட்டு இன்புறும் வண்ணம் இசை அமைத்துக் கொடுத்த அமரத்துவம் வாய்ந்த இசை இயக்குனர்களைத்தான் மறக்கமுடியுமா? சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்டராமன், ஜி.ராமநாத ஐயர், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வேதா போன்ற பலர் என்றும் நிலைத்திருக்கும் பாடல்களை இசை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் அவர்களின் படங்கள் இவைகளில் எல்லாம் அதிகமாகப் பாடல்களை இயற்றியவர் கவி.கா.மு.ஷெரீப். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. நல்லதொரு தேசிய வாதி. காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தேச விடுதலைப் போரிலும் ஈடுபாடு கொண்டவர். காங்கிரசில் தமிழ் மொழிபால் ஆர்வம் கொண்ட பலர் அன்று தமிழ்நாட்டில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தொண்டர்களாகத்தான் இருந்து வந்தார்கள். அவர்களில் கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்களைச் சொல்லலாம்.

கவி.கா.மு.ஷெரீப் அன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.இவர் 11--8--1914இல் பிறந்தார். 1973 அக்டோபர் 10ஆம் தேதி காலமானார். தஞ்சை மாவட்டக் காரரான இவருக்கு தேசியமும், மொழியும் இரு கண்களாக இருந்தன. சின்ன வயதில் மற்ற திரைத்துறை கவிஞர்களைப் போலவே இவரும் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். பின்னர் இவரது பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெறலாயின. அப்படிப் புகழ் பெற்ற பாடல்களின் வரிசை மிகப் பெரிது. முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மாயாவதி" எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகிதான் பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது.

எம்.ஏ.வேணு அவர்களின் தயாரிப்பில் சேலத்தில் தயாரான டவுன் பஸ் எனும் படத்தில் பாடப்பட்ட "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?" என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த "மாங்கல்யம்" படத்தில் வந்த "பொன்னான வாழ்வு மண்ணாகலமா?" என்கிற சோகப் பாட்டு. "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்ற பாட்டு "பணம் பந்தியிலே" படத்தில். சிவகாமி எனும் படத்தில் "வானில் முழு மதியைக் கண்டேன்" என்ற பாடல். ஏ.பி.நாகராஜனின் வெற்றிப் படமான "மக்களைப் பெற்ற மகராசி"யில் பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தில் வந்த "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?", "அன்னையின் ஆணை"யில் வந்த "அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை", எம்.ஏ.வி.பிக்சர்ஸ் "முதலாளி"யில் "குங்குமப் பொட்டுக்காரா, கோணக் கிராப்புக்காரா" பாடல், நான் பெற்ற செல்வத்தில் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்" பாடல் இப்படி இவரது திரையுலகப் பாடல் பயணம் தொடர்ந்தது.

இந்தக் கால கட்டத்தில் இவரது அரசியல் மேடைப்பேச்சு, தமிழரசுக் கழகம், காங்கிரஸ் மேடைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ம.பொ.சி.யின் நிழல் போல செயல்பட்ட இவரும் "தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற இதழ்களை நடத்தினார். ஜானிகான் ஜான் தெரு, தேனாம்பேட்டையில் இவரது அலுவலகம் அமைந்திருந்தது. பிரபலமான அரசியல் வாதியாகவும், திரைத்துரைப் பிரமுகராகவும் இவர் இருந்தார். இவர் இளமையில் திருவாரூரில் இருந்த சமயம் "ஒளி" எனும் பத்திரிகையை நடத்தி வந்தார். பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவரும் நாளில் இவரது சிபாரிசின் பேரில்தான் கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்தார்.

இப்போது போல திரையுலகக் கவிஞர்களுக்கு அதிகம் பாட்டு எழுத வாய்ப்புக்கள் வராது. இவர் ஓர் ஆண்டுக்கு ஓரிரு பாடல்கள் மட்டும்தான் எழுதுவார். அப்படி எழுதுகின்ற பாடலுக்கும் அதிக நாட்களை இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இசை அமைப்பாளர்கள் கவிஞர்களைத் தேடிப் பின் தொடர்ந்துகொண்டு இருப்பார்களாம் பாட்டு தயாராகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டு. இவரே அது பற்றி எழுதியிருக்கிறார். அதில் இவர் குறிப்பிடும் செய்தி, இசை அமைப்பாளர் இசையை வாசித்துக் காட்டும் போதே சில கவிஞர்கள் தூங்கிவிடுவார்களாம் என்பதும் ஒன்று.

இவரைப் பற்றிய மற்றொரு தகவல் திரையுலகில் பரவியிருந்தது. அது "சிவலீலா" எனும் நாடகத்துக்காக கவி.கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்களை ஏ.பி.நாகராஜன் தனது திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களில் எடுத்துக் கையாண்டார் என்பதுதான். அதன் முழு விவரமும் நமக்குத் தெரிய வரவில்லை. இவர் நிறைய அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். கவிதைகள் தவிர, கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு 1972இல் கலைமாமணி விருதினை அளித்துக் கெளரவித்தது. இவர் எழுதிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். திரைத்துறையில் வாய்ப்பு குறைந்த பிறகு, அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்று இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தார். மிக உயர்ந்த குணங்களையும், தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட மிகச் சிறந்த ஆன்மிக வாதியாகவும் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப். வாழ்க கவி.கா.மு.ஷெரீப்பின் புகழ்!


"தமிழ் முழக்கம்" கவி கா.மு.ஷெரீப்

(கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி "தினமணி" தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது)

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே', இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?', 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று 'குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

'தமிழரசுக் கழகத்துடன்' இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்", "சாட்டை" போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். "அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி" என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்" என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

"கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்" என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். "எனக்கென எஞ்சி நின்றவை -- புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று" என்றும், "புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது" என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைதவர். அவரின் முதல் கவிதை "குடியரசு" ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

"சீறாப்புராணம்" சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்" என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

"தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக" என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் "சந்திரோதயம்" என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். 'அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் 'சாட்டை' இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் 'தமிழ் முரசு' என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் "தமிழகக் களக்கவினர்" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் 'சந்திரமோகன்' நாடகத்தில் 'திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி" என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். 'பெண் தெய்வம்', 'புது யுகம்' ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை 'மச்சகந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். 'சிவ லீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், 'பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான 'காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.
****


Thursday, September 2, 2010

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
திருமதி மங்களம் பகவதி, பி.ஏ.,பி.எட்.,
திருவாரூர்.

நீலகண்ட பிரம்மச்சாரி - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன். தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர். இவர் ஒருவருக்காக இருபதுக்கும் மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஒரு அறையத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர். தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் 1978ம் வருஷம் மார்ச் மாதம் 4ம் தேதி காலமானவர். நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்து விடக்கூடாது. இவரை நந்தி மலையில் மகாத்மா சந்திக்க முயன்றும், இவர் இருந்த குன்று மிக உயரத்தில் இருந்தமையால் மகாத்மாவின் செயலாளர் மகாதேவ தேசாய் சென்று இவரை அழைத்து வந்து மகாத்மாவைச் சந்திக்க வைத்த வரலாறும் நமக்குக் கிடைக்கிறது. யார் இந்த நீலகண்ட பிரம்மச்சாரி? இவரது சாதனைகள்தான் என்ன என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா? தேசப்பற்று என்பது என்ன, அதற்காக ஒருவர் எந்த அளவுக்குத் தியாகங்களைப் புரியலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீலகண்ட பிரம்மச்சாரியின் வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் போதும். இனி இந்த தியாக புருஷனின் வரலாற்றைச் சிறிது பார்க்கலாம்.

திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம் ஒவ்வோராண்டும் "மகாகவி பாரதியார் பற்றிய ஓர் அஞ்சல் வழிக் கல்வியை" நடத்தி வருகின்றனர். அதில் இவ்வாண்டு ஒரு பாடத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி எழுதிவிட்டு, அதுகுறித்த ஒரு கேள்வியையும் கேட்டிருந்தனர். அதற்கு விடை தெரிந்து கொள்ள முயன்றபோது சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட திரு ரா.அ.பத்மநாபன் எழுதிய "புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி" எனும் நூல் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை, அதனை மறுபதிப்பு செய்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த நூலில் உள்ள சில செய்திகளை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1911ல் மணியாச்சி ரயில் நிலயத்தில் வாஞ்சிநாதன் எனும் வீர தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. இவர் 1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகவாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள் 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான். சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் 4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்த 'ஊட்டுப்புரை' சத்திரத்தில் தங்கிக் கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தபின் சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிந்தார். அவரது நேர்மைத் திறத்தால் இவர் அங்கு சாமான்கள் வாங்கும் முகவராக நியமனமானார். அப்போது 1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நமது நீலகண்டனும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைத்தார். அவரது சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுத் தருவதாக நீலகண்டன் உறுதியளித்தார். எனினும் அப்படி செய்ய முடியாமல் அரசியல் வேலைகள் நீலகண்டனை தன்வசம் இழுத்துக் கொண்டன. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றினார்.

தஞ்சை மாவட்ட ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங்கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணன் என்று ஒருவர். இவர் 1908ல் சென்னை வந்தார். இந்த காலகட்டத்தில் நீலகண்டனை இரகசியப் போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். பிரம்மச்சாரி என்பதற்கு திருமணமாகாமலும், பெண்கள் தொடர்பே இல்லாதவர் எனும் பொருள்படக்கூடிய சொல். இருந்த போதிலும், குடும்ப பந்தங்களில் ஈடுபடாத, கொண்ட குறிக்கோளுக்காகப் பாடுபட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற பொருளில் அவர் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டார். மேலும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொள்ளாமல் பொதுவாக இந்தத் திருநாட்டின் தேசபக்தன் எனப் பொருள்படும்படி இந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார்.

போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த "அபினவ பாரதம்" எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு. பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் அங்கே சென்றார். சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் இவர் "சூர்யோதயம்" எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார். இவர் வ.உ.சிக்குத் தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுத்தார். அதையறிந்த நீலகண்டன் தனி நபர் கொலைகளில் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் நாட்டில் ஒரே சமயத்தில் புரட்சி செய்து வெள்ளையனை வெளியேற்ற வேண்டுமென்பதே தான் ஈடுபட்டுள்ள அபினவ பாரத இயக்கத்தின் நோக்கம் என்பதையும் தெளிவு படுத்திவிட்டு ஆஷ் கொலைசெய்யப்படும் போது தான் இங்கிருந்தால் தன்னையும் அதில் பிணைத்து விடுவார்கள் என்று எண்ணி வடக்கே காசிக்குச் சென்று அங்கு ஓர் தேசபக்தர் வீட்டில் தங்கி இருந்தார்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிக்கு அவர் வன இலாகாவில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் போலீசிடம் சிக்கியதால் வாஞ்சிக்கு துணை நின்றதாக நீலகண்டனும் தேடப்பட்டார். 1911 ஜூலையில் நீலகண்டன் கல்கத்தா போலீஸ் கமிஷனர் சர் சார்லஸ் டக்கார்டு என்பவருக்குத் தான் சரணடைய விரும்புவதாகக் கடிதம் எழுத, இவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். இவரை விசாரணை செய்த நீதிபதி ஏ.எம்.சி.டாம்போ என்பவர் இவர் மீது மரியாதை கொண்டு நெல்லை நீதிமன்றத்தில் இவர் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டபோது, இவரது தோற்றத்தையும், முகத்தில் இருந்த தேஜசையும் கண்டு இவருக்கு ஒரு நாற்காலி கொடுத்து அமர வைக்குமாறு உத்தரவிட்டார். நீலகண்டனை அந்த நீதிமதி மிகவும் மரியாதையோடு நடத்தியதோடு, அவர் மீது தனது வாழ்நாளின் கடைசி வரை பக்தி பாராட்டி அவருக்கு சகல மரியாதைகளையும் செய்து வந்தார், இவரது நண்பராகவும் திகழ்ந்தார்.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கு 22. 1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார். சிறையிலும் இவரது புரட்சி ஓயவில்லை. சிறையில் தனக்குக் கடுங்காவல் தண்டனை என்பதால் விறகு வெட்டச் சொல்லுகிறார்கள், நான் ஒரு அரசியல் கைதி எனக்கு இந்த வேலைகள் தரக்கூடாது, படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். இவர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. அரிசிச் சொறும் படிக்க நூல்களும் தரப்பட்டன. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து இவர் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார், பிறகு பெல்லாரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்க வர்க்கம் அந்த நாளில் சுதந்திரப் போர் வீரர்களை எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தி யிருந்தால் நீலகண்டன் போன்ற மன உறுதி படைத்த வீரர்கள் கூட தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 1914ல் உலக யுத்தம் தொடங்கியது. அப்போது இவர் சிறையிலிருந்து தப்பியோடி பிறகு மாட்டிக்கொண்டு அதற்கும் சேர்த்துத் தண்டனை அடைந்தார்.

இவர் சிறையில் ஒழுங்காக நடந்துகொண்டால் ஏழாண்டு சிறை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றார்கள். ஆனால் இவரது செயல்பாடுகளால் இவரது தப்பிச் செல்லும் முயற்சியும் சேர்த்து இவருக்குத் தண்டனைக் காலம் ஏழரை ஆண்டுகளாக்கப்பட்டது. 1912 பிப்ரவரி 15ல் தொடங்கி இவரது தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாரைத் தொடர்பு கொண்டார். பாரதியாரும் இவருக்கு அவ்வப்போது தனது சிரம தசையிலும் உதவி புரிந்தார். பாரதியார் காலமானபோது இவரைத்தான் பாரதிக்கு கொள்ளிவைக்கச் சொன்னார்கள், இவர் மறுத்துவிடவே அந்தப் பொறுப்பு பாரதியாரின் உறவினரும், தமிழ்நாடு இந்தி பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஹரிஹர சர்மாவுக்குச் சென்றது.

பாரதியார் இவருக்கு அறிமுகப்படுத்திய தொழிலாளர் இயக்கங்களின் முன்னோடியும், பொதுவுடமைவாதியுமான தேசபக்தர் சிங்காரவேலரின் தொடர்பு இவரைப் "போல்ஷ்விக் பிரசுரங்கள்" வெளியிடத் தூண்டின. அது ஆயுதப் புரட்சியைத் தூண்டும் பிரசுரங்கள். இந்த குற்றத்துக்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை 1922 முதல் தொடங்கியது. சிறையில் நன்னடத்தைக்காக சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு 1930ல் ரங்கூன் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். இந்த தண்டனைக் காலம் முழுவதும் இவர் நாட்டின் பல்வேறு ஊர்களில் இப்போது பாகிஸ்தானிலுள்ள முல்டான், பெஷாவர், பர்மாவில் ரங்கூன் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். விடுதலையானதும் சென்னை திரும்பி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி', 'இந்து' பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

இளம் வயது தொடங்கி புரட்சிப் பாதையில் பயணித்த நீலகண்டனுக்கு இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 'பரிவிராஜக' (பற்றுக்களை விடுத்த சந்நியாச வாழ்க்கை) வாழ்க்கையை மேற்கொண்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் இவை எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்வது அவருக்கு ஒரு மாறுதலாக இருந்தது. இந்த வாழ்க்கையில் அவர் பெயர், புகழ், குற்றச்சாட்டு என்று எதையும் சுமக்காமல் வாழ்க்கை கனமில்லாமல் இருந்ததை உணர்ந்து கொண்டார். வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்த இவர் வேறு எதிலும் மனம் ஈடுபடாதிருக்க வேண்டி சதா சர்வ காலமும் அனைத்துக்கும் மூலாதாரமான பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார். இவரை இப்படிப் பார்த்தவர்களுக்கு இவர் எருக்கஞ்சேரி நீலகண்டனாக இல்லாமல், சுவாமி ஓம்காரானந்தாவாகத் தெரிந்தார். இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். பரதேசி வாழ்க்கை மேற்கொண்ட இவர் அதனை விரும்பாமல் ராணியிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப்பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான்பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.

அந்த மலைவாழ் மக்கள் சிலர் அடிக்கடி சாது ஓம்காரை வந்து சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படியொரு முறை அவர் கொடுத்த பூஜை தீர்த்தம் அவர்களது நோய்களைத் தீர்த்தது என்ற செய்தி பரவ, பலரும் இவரிடம் தீர்த்தம் பெற்றுக்கொள்ள வரலாயினர். 1934ல் இவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது இவர் மனத்தில் ஓர் கேள்வி எழுந்தது: "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதன் என்ற பெயரும் புகழும் பெறவா என்னை ஆண்டவன் படைத்தான். எப்போதும் கூட்டம் சூழ்ந்திருக்க மன அமைதியின்றி தியானத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதற்கா இங்கு வந்தேன். என் யோகப் பயிற்சி என்ன ஆவது" என்பது அவர் மனம் எழுப்பிய கேள்வி.

அவ்வளவுதான், அவர் அந்தக் கூட்டத்திலிருந்தும், பெயரும் புகழும் தேடிவரும் சந்தர்ப்பத்தைக் கைகழுவிவிட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்னகிரி மலையின் உச்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓர் பாழடந்த மண்டத்தைச் சிறிது செப்பனிட்டு அங்குள்ள ஒரு சுனையைச் சுத்தம் செய்து அங்கேயே தங்கினார். இந்தப் பணிகளில் அவருக்கு உதவிய கிராம மக்களுக்கு 1934ல் அவர் ஓர் சமாராதனை செய்து உணவளித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் இவர் பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார். 1936ல் மகாத்மா காந்தி மைசூர் வந்திருந்தபோது சாது ஓம்காரை சந்திக்க விரும்பினார். அவர் இருந்த மலையுச்சிக்கு அவரால் போகமுடியாததால் அவரது செயலாளர் மகாதேவ தேசாயை அங்கு அனுப்பி அவரைச் சந்தித்து மகாத்மாவைக் காண அழைத்தார். அவரும் அப்படியே வந்து மகாத்மாவுடன் சில மணிகள் ஆன்மிக சிந்தனைகள் பற்றி உரையாடினார்.

1936 முதல் அவர் சுமார் 30 ஆண்டுகாலம் சுற்றுப்பயணம் செய்தார். பிறகு 1966ல் முதுமை காரணமாக ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். அவர் இருந்த சென்னகிரி உச்சியில் காட்டுத்தீ பரவியதால் மறுபடியும் சுவாமி ஓம்கார் மலையடிவாரத்துக்குத் தனது ஆசிரமத்தை மாற்றிக் கொண்டார். இவருக்கு சமூகத்தின் பலமட்டத்திலும் சீடர்கள் உருவானார்கள். பல சாதியினர், கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், அரச குடும்பத்தினார், அடிமட்ட மக்கள், இளையோர், முதியோர் என்று இவரைத் தேடி வரும் மக்கள் அதிகமானார்கள். இவரது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை "மெய் ஒப்புதல்" எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.

இவரது இரண்டாவது நூல் "உபதேஷ்" எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் "தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்". இதுவும் பெங்களூரில் வெளியானது. தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவியாக மாறிய இவரது வாழ்க்கை இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி சத்குரு ஸ்ரீ ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், பிங்கள வருஷம், மாசி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண பக்ஷம் தசமி திதியில் 1978 மார்ச் மாதம் 4ம் தேதி மாலை 4.10க்கு இவ்வுலக பந்தங்கள் நீங்கி இறவா புகழுடம்பு எய்தினார்.

அவருக்கு இறுதிக்காலம் சமீபித்துவிட்டது என்ற தகவல் சீர்காழி எருக்கஞ்சேரியிலிருந்த அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது இளவல் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி வந்து அவருக்கு சாம வேத முறைப்படி சுவாமி ஓம்காரின் காதில் கர்ண மந்திரம் ஓதினார். அவரது உடல் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரளான மக்கள் வந்து மரியாதை செலுத்தினர். மறுநாள் மார்ச் 5ம் தேதி ஞாயிறு காலை சுமார் 2000 பேர் ஆசிரமத்தில் கூடியிருக்க, ஆசிரமத்து வளாகத்திலேயே சுவாமி ஓம்கார் அவர்களின் பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நீலகண்ட பிரம்மச்சாரி போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. தனது எண்பத்தி எட்டு ஆண்டு வாழ்க்கையில் நாற்பத்தி நான்கு வயது வரை இந்திய சுதந்திரத்துக்காக பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகத் தன்னையே சுதந்திர வேள்வியில் ஆஹூதியாக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரருக்கு எங்காவது ஒரு இடத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறதா? எங்காவது ஒரு சிலை உண்டா? இவரது புரட்சி வாழ்க்கை எந்த பாட நூலிலாவது இடம் பெற்றிருக்கிறதா? நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரே சிலைகள் மயமாகக் காட்சி அளிப்பதும், பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஏதேதோ எழுதப்பட்டிருப்பதும் கண்டு இந்த சுதந்திர வீரனுக்கு எதுவுமே இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்டால், புதிதாகத் தியாகிகள் உருவாக முடியுமா? தன்னலமற்ற நாட்டுச்சேவை இனி கிடைக்குமா என்று நல்ல உள்ளங்கள் வருந்தத்தான் செய்யும். என்ன செய்வது? இதுபோன்ற தியாகிகளை வணங்கினால்தான் இந்த நாட்டில் தேசபக்தி வளரும், புதிய தியாகப் பரம்பரை தோன்றும். வாழ்க நீலகண்ட பிரம்மச்சாரி (சுவாமி ஓம்காரானந்தா) புகழ்!

(1889ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த தினம்)
(1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி இவரது நினைவு தினம்.)