சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
49. தியாகி பி.எஸ். சின்னதுரை
தொகுப்பு: வெ.கோபாலன்
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டசபையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக சட்டசபை உறுப்பினராக இருந்து விவாதங்களில் சிறப்பாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் பி.எஸ்.சின்னதுரை. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடும் வயது இல்லாத நிலையில் பெரிய தலைவர்களுக்கிடையே செய்திகளை ரகசியமாகப் பரிமாரிக்கொள்ள ஒவர் தூதனாகப் பயன்பட்டு வந்தார். விளம்பரத் தட்டிகளை எழுதி ஊரில் பல பகுதிகளிலும் கொண்டுபோய் வைப்பார். சுவர்களில் கூட்ட விளம்பரங்களை எழுதுவதோடு, அறிவிப்பு செய்து மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளையும் செய்து வந்தார். அப்படி இவர் பணியாற்றும் காலங்களில் பலமுறை போலீசாரிடம் மாட்டிக்கொண்டு புளியம் மிளாரினால் அடிவாங்கி கால் வீங்கிக் கிடந்த நாட்களும் அதிகம்.
இவர் பல்லடத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சுப்பராய செட்டியார். இவர் படிக்கும் காலத்தில் இவருக்கு அமைந்த ஆசிரியர்களில் பலர் தேசபக்தர்கள். அவர்கள் ஊட்டிய தேசபக்தி இவர் ரத்தத்தில் கலந்துவிட்டது. இவர் தன் வயதுக்கும் மீறிய பணிகளில், தேச சேவையில் ஈடுபட்டு பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
ஒரு ஆலையில் தொழிலாளியாக சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்த போதே தேச சேவையை இவர் உயிர் நாடியாகக் கருதி வந்தார். மால நேரங்களில் எங்கெங்கு பொதுக்கூட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பெஞ்சுகளைத் தூக்கிப் போடுவது முதல் மேடையை தயார் செய்வது வரை பல வேலைகளைத் தானே முன்வந்து செய்வார். நாளடைவில் பெரிய தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு இவரும் மேடைப் பேச்சாளர் ஆனார். பலரிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகள் இவரது பேச்சில் வெளிவர அவை மக்கள் மனதில் போய் தைக்கத் தொடங்கியது. இவர் பேச்சில் வீரம் வெளிப்படும், செய்திகளில் உணர்ச்சி விளையாடும், கோழைகளையும் நிமிர்ந்து நிற்கச் செய்யும் அதிரடிப் பேச்சாக இவரது பேச்சுக்கள் அமையும்.
இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதும், இவர் தீவிரமாக யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஊர் ஊராகச் சென்று மக்களிடம் இந்தப் போர் நம்மை கலந்தாலோசிக்காமல் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்காக ஈடுபடும் போர். இதில் நம் மக்களும், செல்வமும் வீணடிக்கப்படுவது நியாயமில்லை. நாம் எந்த விதத்திலும் இந்தப் போரில் அவர்களுக்கு உதவக்கூடாது. இது ஏகாதிபத்திய போர். நம்மை அடக்கி ஆள்வோரின் போர், எனவே இது நமக்கு எந்த வகையிலும் தொடர்புடையதில்லை என்று பேசினார். இத்தகைய பேச்சு இவரை சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்த்தது. தொழிலாளர் சின்னதுரை, சிறைக்கைதியானார்.
1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் தலைவர்கள் இல்லாமலேயே பொதுமக்களாலும், தொண்டர்களாலும் நடத்தப்பட்டது. அதில் சின்னதுரை ஈடுபட்டார். அப்போதைய கோவை மாவட்ட தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்கள் தலைமையில் போராட்டம் வலுத்தது. சூலூர் விமான தளம் தகர்க்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ரயில்கள் கவிழ்க்கப்பட்டன. பல இரகசிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் வன்முறை விளையாடியது.
பி.எஸ்.சின்னதுரை கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சித்திரவதைக்கு ஆளானார். எதற்கும் மனம் கலங்காமல் நாட்டு விடுதலை ஒன்றையே சதாகாலம் எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழிலாளர்களின் தலைவர் ஆனார். பல தொழிற்சங்கங்களுக்கு இவர் தலைவராக இருந்து அவர்கள் நலன் கருதி அரிய தொண்டாற்றினார். சென்னை சட்டசபையில் உறுப்பினராக இருந்து பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். இவரது எளிமை, அடக்கம், தெளிந்த சிந்தனை, கனிவான பேச்சு இவைகள் இவரது எதிரிகளாலும் போற்றி பாராட்டப்பட்டன. வாழ்க தியாகி பி.எஸ்.சின்னதுரை புகழ்!
No comments:
Post a Comment
Please give your comments here