சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
41. TVS குடும்பத்தின் செளந்தரம் அம்மாள்.
(டாக்டர் ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்)
தொகுப்பு: வெ.கோபாலன்.
மதுரையில் டி.வி.சுந்தரம் ஐயங்கார் மிகப் பெரிய மோட்டார் தொழிலதிபர். சுய முயற்சியினாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து, சிறந்த மனிதராக விளங்கியவர் திரு சுந்தரம் ஐயங்கார். நேரம் தவறாமை இந்த நிறுவன ஊழியர்களின் அடையாளம்; பண்பும், பணிவும் அந்த கம்பெனி ஊழியர்களின் அடையாள முத்திரை. மதுரை நகரப் பேருந்து சேவையை முழுமையாக ஏற்று நடத்திக் கொண்டிருந்த இந்த கம்பெனி பேருந்து இயக்கம் பற்றி கூறும்போது மதுரை வாசிகள் போற்றி புகழும் செய்தி, இவர்களது நேரம் தவறாமை. குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டுமென்றால், அந்த பேருந்து சரியாக அந்த நேரத்தில் வந்து சேரும். நம் கடிகாரத்தை அதைப் பார்த்து சரி செய்து கொள்ளலாம் என்று மதுரை வாசிகள் சொல்லுவதுண்டு. அப்படிப்பட்ட புகழ்மிக்க தொழிலதிபரின் மகளாகப் பிறந்தவர்தான் செளந்தரம்.
டி.வி.சுந்தரம் ஐயங்கார், மற்ற பல தொழிலதிபர்களைப் போல ஆங்கில ஆதிக்கத்துக்கு துணை போனவர் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினருக்கும் பல உதவிகளைச் செய்து வந்தார். இவரது மனைவி திருமதி லக்ஷ்மி அம்மாள் தான் கதர் துணியை மட்டுமே அணிவதோடு, வீடு வீடாகச் சென்று அனைவரும் கதர் துணியை அணியவேண்டுமென்று கேட்டுக் கொண்டு கதர் துணிகளையும் விற்றார். தேச நிர்மாணப் பணிகளில் மகாத்மா காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி பல சேவைகளை இவர் புரிந்து வந்தார். குழந்தைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.
1935ஆம் ஆண்டு செளந்தரம் டெல்லியிலுள்ள லேடி ஹார்டிஞ்சு மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறவியிலேயே அறிவுச் சுடராக பிரகாசித்த இவரது திறமை நாட்பட நாட்பட மேலும் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது. பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக இவர் தேர்ந்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பிறகு மகளிர் மருத்துவம் (Gynaecology) தாய் சேய் நலம் (Obsterics), ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். சென்னையில் சுமார் இரண்டு ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார்.
இவர் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சேவா கிராமம் சென்று மகாத்மாவைச் சந்தித்திருக்கிறார். அங்கு பல சேவைகளில் பங்கு கொண்டிருக்கிறார். அதுதவிர சென்னை, மதுரை ஆகிய நகரங்களிலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து சுதந்திரப் போரில் தனது பங்கினை அளித்து வந்திருக்கிறார். 1937 முதல் மூன்றாண்டுகள் மதுரையில் கெளரவ மருத்துவராகப் பணியாற்றினார். 1938இல் இவர் பெண்களுக்கு கண்காணிப்பு இல்லம் (Vigilance Home) நிறுவினார். 1940இல் கேரளாவைச் சேர்ந்த சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். 1942 தொடங்கி இவர் நேரடியாக சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் கேரளப் பகுதியெங்கும் சுற்றுப் பயணம் செய்து நாட்டு விடுதலைக்குப் போராடினார். தேச விடுதலைக்காக சிறை சென்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். இவரது நடவடிக்கையைக் காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் இவரை சமஸ்தானத்தை விட்டு வெளியேற்றியது.
1943இல் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு சேர்ந்து பல சமூகப் பணிகளை மேற்கொண்டார். அன்னை கிராமிய மருத்துவப் பணி என்ற பெயரில் இவர் பல கிளைகளை அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவியை மேற்கொண்டார். 1945இல் இவர் கஸ்தூர்பா காந்தி நினைவு அறக்கட்டளைக்குத் தமிழ்நாட்டு பிரதிநிதியாக மகாத்மாவால் நியமிக்கப்பட்டார். 1947இல் இப்போது உள்ள காந்திகிராமம் துவக்கப் பட்டது. இரண்டு ஏக்கர் நிலத்துடன் அன்று ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம் என்று 350 ஏக்கர் நிலப் பரப்பில் செயல்பட்டு வருகிறது. இதில் 4000க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து பயன் பெறுகிறார்கள்.
மதுரை சிதம்பர பாரதி, வீர சவார்க்கர் எழுதிய 'எரிமலை' எனும் ஆங்கில நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். அது அரசாங்கம் தடை செய்திருந்தது. அந்த நூலை சுமார் 250 பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்து டாக்டர் செளந்தரம் கொடுத்தார். இந்த நூல் காரைக்காலில் அச்சிடப்பட்டு ரகசியமாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. சுதந்திர தாகம் மக்களியையே பரவ இந்த நூலும் பயன்பட்டது. 1857 சிப்பாய் கலகம் என்ற பெயரில் ஆங்கில ஆசிரியர்கள் கூறும் நிகழ்ச்சி முதல் விடுதலைப் போர் என்று வீர சாவர்க்கர் விளக்கிய எழுதிய நூல் இது. இந்த 'எரிமலை' நூலை பலர் மொழி பெயர்த்திருக்கின்றனர். எனினும் ஆங்கில அடக்குமுறைக்கு இடையே துணிவோடு மொழிபெயர்த்த டாக்டர் செளந்தரத்தின் பணி சிறப்பானது.
1952இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி என புகழ் பெற்றார். வினோபா பாவே தமிழகம் விஜயம் செய்தபோது டாக்டர் செளந்தரம் அவர்களுடன் பயணம் செய்து அவரது பூதான இயக்கத்தில் பங்கு கொண்டார். 1956இல் பிரதமர் ஜவஹர்லால் மற்றும் திருமதி இந்திரா காந்தியுடன் இவர் சீனாவிற்கு விஜயம் செய்தார். கிராமப் பொருளாதாரம், கிராம சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.
1957ஆம் ஆண்டு தேர்தலில் மிகவும் பிந்தங்கிய வேடசந்தூர் தொகுதியில் நின்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதிக்கு கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், மின்சாரம் இவற்றைக் கொண்டு வந்து பெருமை சேர்த்தார். இந்தியாவிலுள்ள நான்கு காந்தி மியூசியங்களில் மதுரை மியூசியத்தை டாக்டர் பி.என்.ராமசுப்பிரமணியத்துடன் சேர்ந்து உருவாக்கினார். 1960இல் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் துணைத் தலைவர் ஆனார். 1962ஆம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். குழந்தைகள் கல்வி, சமூக நலம் ஆகியவற்றில் இவர் அதிக கவனம் செலுத்தினார்.
1974 இல் காந்தி கிராமத்தின் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது இவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட பாடுபட்டார். தான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண் என்ற நினைப்பே இல்லாமல், எப்போதும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி இவற்றுக்காகவே இறுதி வரை பாடுபட்டார். வாழ்க செளந்தரம் ராமச்சந்திரன் புகழ்!
No comments:
Post a Comment
Please give your comments here