சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
57. மட்டப்பாறை வெங்கட்டராமையர்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்
ஒரு காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போதெல்லாம் 'மட்டப்பாறை வெங்கட்டராமையர்' எனும் இவரது பெயர் அடிக்கடி அடிபடும். இவர் ஒரு அஞ்சா நெஞ்சம் படைத்த போராளி. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ராஜாஜி, கே.சந்தானம் போன்றவர்கள் சிறைப்பட்டதும் 'சர்வாதிகாரி' பொறுப்பெடுத்துக் கொண்டு இவர் போராடும்போது இவர் பட்ட புளியம் மிளாறு அடி இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைக்கும். அத்தனை கொடிய அடக்கு முறையையும்கூட இவர் தனது வைர நெஞ்சத்தால் எதிர்கொண்டு போரிட்டார் எனும்போது நாம் தலை நிமிர்ந்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?
மதுரை மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள இராமராஜபுரம் என்கிற மட்டப்பாறையில் இவர் 1886ஆம் வருஷம் ஜூலை மாதம் பிறந்தார். இவர் தனது ஆரம்ப காலப் படிப்பை கும்பகோணத்தில் தொடங்கினார். பின்னர் இவர் மதுரையில் பாரதி ஆசிரியர் வேலை பார்த்த பெருமைக்குரிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கம் வலுவடைந்து வந்தது. அந்தப் போராட்டம் தேசபக்த உள்ளம் கொண்ட இளைஞர்களைச் சுண்டி இழுத்தது. அதில் வெங்கட்டராமனும் இணைந்து கொண்டார்.
1907ஆம் ஆண்டில் சூரத் நகரத்தில் ஒரு பிரசித்தமான காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டில்தான் காங்கிரசில் இருந்த இரு கோஷ்டிகள் திலகர் தலைமையிலான தீவிர சிந்தனையுள்ள கோஷ்டிக்கும், மிதவாத கோஷ்டிக்கும் போராட்டம் நடந்து மகாநாடு தடைபட்டது. இந்த மகாநாட்டுக்காக மகாகவி பாரதியார் பத்திரிகைகள் மூலம் பல அறிவிப்புகள் செய்து தொண்டர்களை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தலைமையில் நூற்றுக்கணக்கானவர்களை ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றார். இந்தத் தொண்டர் படையில் முக்கியப் பங்காற்றியவர் மட்டப்பாறை அவர்கள். தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வ.உ.சி. பாரதி போன்றோர் பாலகங்காதர திலகரின் ஆதரவாளர்கள். மட்டப்பாறையும் யார் பக்கம் இருந்திருப்பார் என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ? சூரத் சென்றதும் இவர் திலகர் பெருமானின் அன்புக்குப் பாத்திரராகி அவருக்கு உறுதுணை புரிந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை இருந்ததால் இவர் அங்கு நல்ல சேவை செய்ய முடிந்தது. மொழிப்புலமை மட்டுமல்ல, இவருக்கு விளையாட்டுகளிலும் ஆர்வமும், திறமையும் இருந்தது. சிலம்பம், மல்யுத்தம், கோழிச்சண்டை, கடா சண்டை, ஜல்லிக்கட்டு முதலியன இவர் பங்கு கொள்ளும் வீரவிளையாட்டுகளாகும்.
1920ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர் மதுரை மாவட்டத்தில் சுற்றாத இடம் இல்லை. கிராமம் கிராமமாக இவர் சென்று பிரச்சாரம் செய்தார். இவர் காலடி படாத கிராமமே அந்தக் காலத்தில் மதுரை வட்டாரத்தில் கிடையாது என்பர். இவர் தோற்றத்திலும் சிங்கம். மேடை ஏறிவிட்டால் பேச்சிலும் கர்ஜனை. இவரைக் கண்டு அந்தக் கால மதுரை கலெக்டர் ஹால் என்பவரும், உப்பு சத்தியாக்கிரகத்தின் போது தஞ்சை கலெக்டர் தார்ன் என்பவரும் அச்சமடைந்தார்களாம். இவரது செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம். அந்தக் காலத்தில் நடந்த கள்ளுக்கடை ஏலத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் எவரும் கள்ளுக்கடையை ஏலம் எடுக்க முன்வரவில்லையாம். இவரது இந்தச் செல்வாக்கைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அடிவருடிகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இவர் மீது பொய்யான வழக்கை அதாவது வழிப்பறி செய்ததாக பொய்வழக்கு தொடுத்து இவரை அலைக்கழித்தனர். கோர்ட் கோர்டாகவும், ஊர் ஊராகவும் இவரை அலைய விட்டனர். அப்படியும் இவர் அசரவில்லை. இவர் அத்தனை பொய் வழக்குகளையும் உடைத்தெரிந்து மக்களால் "மட்டப்பாறை சிங்கம்" எனப் போற்றப்பட்டார்.
1921இல் இவர் மீது 'ஜாமீன் கேஸ்' எனும் வழக்கு போட்டு, அதன் மூலம் இவரை ஓராண்டு சிறைக்கு அனுப்பினார்கள். சிறைக்கு வெளியே இருக்கும் காலங்களில் எல்லாம் இவர் ஏதாவதொரு மகாநாட்டை நடத்திக் கொண்டிருப்பார்; அல்லது மக்களைத் திரட்டி சுதந்திரப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்; அல்லது ஏதாவதொரு அரசியல் மேடையில் ஆங்கில அரசுக்கு எதிராக முழங்கிக் கொண்டிருப்பார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதாகி ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். பின்னர் 1932இல் திண்டுக்கல்லில் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு ஓராண்டு சிறை வாசம். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பழனி தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தேர்தலுக்காக தீரர் சத்தியமூர்த்தி, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருடன், பழனி, கொடைக்கானல் பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சுற்றி பிரச்சாரம் செய்தார். 1937இல் வத்தலகுண்டில் ஒரு காங்கிரஸ் மகாநாட்டை நடத்தினார். இதற்கு ராஜாஜி தலைமை ஏற்றார். போடிநாயக்கனூர் ரங்கசாமி செட்டியார் என்பவர் இவருக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்தக் காலத்தில் மதுரை ஜில்லா பகுதிகளில் நீதிமன்றங்களில் நெடுங்காலமாக தீர்த்து வைக்கப்படாமல் இருந்த பல வழக்குகளை இவர் தலையிட்டு தீர்த்து வைத்திருக்கிறார். அன்பாக இவர் இரு தரப்பாரிடமும் பேசி வழக்கை முடித்து வைக்கும் சாமர்த்தியத்தை அனைவருமே பாராட்டுவார்கள்.
சிவில் வழக்குகள் மட்டுமல்ல, சில திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் இவரிடம் முறையிட்டால் அதில் தலையிட்டு அதனைக் கண்டுபிடித்துக் கொடுப்பார். ஒருமுறை சபாநாயகராக இருந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள் இந்தப் பகுதியில் பிரயாணம் செய்துகொண்டிருந்த போது கொடைக்கானலில் சில பொருட்களைத் தவற விட்டு விட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட மட்டப்பாறை அவரிடம் 'நீங்கள் கவலைப் பட வேண்டாம், அவை உங்களிடம் வந்து சேரும்' என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டு, இவர் முயற்சியால் ஆட்களின் துணைகொண்டு களவு போன பொருட்களைக் கண்டுபிடித்து அவரிடம் சேர்தார். இவர் அச்சம் என்ற சொல்லையே அறியாதவர். கடலூர் சிறையில் நெல்லைச் சிங்கம் எஸ்.என்.சோமையாஜுலுவுடன் இவர் இருந்திருக்கிறார். அப்போது அங்கு சிறை சூப்பிரண்டெண்டாக இருந்த இங்கிள் பீல்ட்டால் எனும் வெள்ளையன் இவரை அன்பாக "வெங்கடப்பாறை" என்றழைப்பான். இவர் அனைவரிடமும், சாதி, மத மாத்சர்யமின்றி அன்போடு பழகுவார். திறந்த உள்ளம் படைத்தவர். தெளிந்த சிந்தனையாளர்; இவர் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமானதாக இருக்கும்; செயல் வேகம் கொண்டவர், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீர நெஞ்சினர். இத்தனை குணங்களும் கொண்டவர்தான் அமரர் மட்டப்பாறை வெங்கட்டராமையர். வாழ்க இவரது புகழ்!
நன்றி...
ReplyDeleteமிக நன்றி ஐயா... நன்றியுடன் மட்டப்பாறை சிங்கத்தின் பேரனின் நண்பன் செந்தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து... சுரேசின் நண்பன் சேகர்.
ReplyDeleteநிலக்கோட்டை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளது என்பது மட்டப்பாறை தியாகி வெங்கட்ராமையரால்தான். கார்த்திக் மல்லியம்பட்டி 9751881542 மல்லையம்பட்டி
ReplyDelete