சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
54. திண்டுக்கல் மணிபாரதி
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.
திண்டுக்கல் நகரம் வரலாற்றுப் புகழ் பெற்றது. தொழில்துறையில் நல்ல வளர்ச்சியடைந்து மதுரைக்கு அடுத்ததாகக் கருதப்படும் பெரிய நகரம். பூட்டு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஊர். திண்டுக்கல் பூட்டுதான் உலகப் பிரசித்தமானது. இந்தப் பகுதியில் தலையணை போன்ற தோற்றத்தில் அமைந்த ஓர் குன்றிற்கு தலையணைப் பாறை என்று பெயர். இது நாளடைவில் மருவி 'திண்டுக்கல்' என வழங்கப்படுகிறது. இந்தப் பாறை 400 அடி அகலம் 280 அடி உயரமும் கொண்டது. உறுதியான இந்தப் பாறையைப் போலவே இங்கு உறுதியான மனம் படைத்த தேசபக்தர்கள் பலர் தோன்றினார்கள்.
திண்டுக்கல்லில் அமைந்துள்ள கோட்டை 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. 1736இல் ஆற்காடு நவாப் சந்தா சாகேப் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மைசூர் படை இந்த ஊரைக் கைப்பற்றியது. 1755இல் ஹைதர் அலி இந்த நகரத்தை ஒரு ராணுவ முகாமாக மாற்றியமைத்தார். அதுமுதல் இந்த ஊர் வரலாற்றில் பல போர்களுக்குக் காரணமாகவும் அமைந்தது. மேலும் திண்டுக்கல்லையடுத்த மலைப் பிரதேசத்தில் விளைந்த சிறுமலைப் பழம் எனும் ஒரு அரிய வகை வாழைப்பழம் மிகவும் பிரசித்தமாக இருந்தது. பழனி ஆலயத்திற்கு பஞ்சாமிர்தம் செய்ய இது பயன்பட்டது. அது தற்போது அரிதாகிவிட்டது.
இத்தனை அரிய வரலாற்றுப் பின்னணியுள்ள திண்டுக்கல்லில் தோன்றிய பல தேசபக்தர்களில் மணிபாரதியும் ஒருவர். இவ்வூரிலிருந்து மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த மணிபாரதி இளவயதிலேயே, பள்ளிப்பருவத்திலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு, மகாத்மா காந்தி வகுத்துக் கொடுத்தப் போராட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டார். வயது ஏற ஏற இவரது போராட்டக் களம் விரிவடைந்து கொண்டே சென்றது. மாணவர் இயக்கத்திலிருந்து இவர் நகர காங்கிரஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கத் தொடங்கினார். சுற்று வட்டார கிராமங்களுக் கெல்லாம் சென்று அங்கு மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டினார். அதற்கேற்ப நல்ல பேச்சுத் திறன் இவருக்கு அமைந்திருந்தது நல்லதாகப் போயிற்று. மக்கள் இவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார். வெகுகாலம் "திண்டுக்கல் மணிபாரதி" என்ற பெயர் மேடைப் பேச்ச்சில் திறமையானவர் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தது.
திண்டுக்கல்லை மையமாக வைத்துச் சுற்றுப்புற கிராமங்களில் சுதந்திரப் பிரச்சாரம் செய்து வந்த இவர், நாளடைவில் அப்போதைய தேசிய வாதிகளாகவும், பின்னர் பொதுவுடமை கட்சியினராகவும் இருந்த ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் இவர்களோடும், ஆன்மீகமும் தேசியமும் இரு கண்களாக மதித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர்களுடன் இணைந்து சென்னை மாகாணம் முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
1930ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகம், தமிழகத்தில் ராஜாஜி நடத்திய வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரக யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல போராட்டங்கள் நடந்த காலம். இந்த காலகட்டத்தில் திண்டுக்கல் மணிபாரதி சிறைப்பட்டு ஒரு வருடம் கைதியாக இருந்தார். இந்த தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த இவர் மீண்டும் 1932இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கைதாகி சிறை சென்றார்.
2
தொழிலாளர்களுக்காகப் போராடத் தொடங்கிய இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைந்து பாடுபட்டார். INTUC எனப்படும் தேசிய தொழிலாளர் இயக்கத்தில் அப்போது முனைப்புடன் ஈடுபட்டிருந்த ஜி.ராமானுஜம், ரங்கசாமி, எம்.எஸ்.ராமச்சந்திரன், வேலு போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடலானார். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஊர் ஊராக சென்று மேடைகளில் காங்கிரசுக்கு வாக்களிக்க வெண்டினார். இவருடன் தீரர் சத்தியமூர்த்தி, கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரும் மேடைகளில் முழங்கி வந்தனர். இந்தத் தேர்தலில்தான் அப்போது ஆட்சி புரிந்த ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியமைத்தது, ராஜாஜி 'பிரதமர்' (முதல்வர்) ஆனார்.
1940இல் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். செளந்திரா மில் தொழிலாளர் சங்கத்துக்குத் தலைவராக இருந்த மணிபாரதி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவர் விடுதலை யடைந்த நேரம், மகாத்மா காந்தி அறிவித்த "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நாடெங்கும் வெடித்துக் கிளம்பியது. தேசத் தலைவர்கள் அனைவரும் சிறைப்பட்டிருந்த அந்த நேரத்தில், போராட்டத்தைத் தலைமையேற்று நடத்த ஆளில்லாமல், பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களுமே அவரவருக்குத் தோன்றிய விதத்தில் போராட்டம், அதிலும் வன்முறைப் போராட்டம் நடத்தது தொடங்கியிருந்த நேரம். மணிபாரதி மட்டும் விட்டுவைக்கப்படுவாரா? இவரும் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு கைதியாக சிறை வைக்கப்பட்டார். இவர் வேலூர், கண்ணனூர் ஆகிய இடங்களில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தார். இவருடன் சிறையில் எம்.எஸ்.முனுசாமி, ஏ.ராங்கசாமி ஆகிய தேசபக்தர்களும் இருந்தனர்.
இவர் தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தில் நெடுநாட்கள் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக தமிழ்நாட்டின் மேடைகள் தோறும் முழங்கி வந்தார். காமராஜர் முதலான தமிழகத் தலைவர்கள் இவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். வாழ்க திண்டுக்கல் மணிபாரதி புகழ்.
No comments:
Post a Comment
Please give your comments here