சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
56. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.
முனகல பட்டாபிராமய்யா என்ற பெயரைப் பார்த்தவுடன் இவர் ஏதோ ஒரு ஆந்திரத்து தேசபக்தர் போல இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா? ஆம்! இவரது பூர்வீகம் ஆந்திராவிலுள்ள முனகல எனும் ஊர்தான். இவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து மதுரை அருகிலுள்ள சோழவந்தானில் குடியேறியவர். இவரது முன்னோர் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலுக்குப் பின்புறம் வைகையாற்றில் பொதுமக்கள் நீராடுவதற்காக ஒரு படித்துறையை அமைத்தார்கள். 'முனகல' எனும் சொல்லுக்கு முனையுள்ள கல் என்று பொருள். இப்படியொரு படித்துறையை பாறாங்கல் கொண்டு கட்டுவார்கள் என்பதாலேயே முனகல என அழைக்கப்பட்டார்கள் போலும்.
முனகல பட்டாபிராமையா ஒரு பன்மொழி வித்தகர். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றதோடு, வேத சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து மக்களை நன்கு அறிந்து கொண்ட பட்டறிவும் பெற்றவர்.
1919இல் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கம் இவரை முதன்முதல் நாட்டுப் பணியில் இழுத்து வந்தது. பால கங்காதர திலகர் மதுரை விஜயம் செய்த போது அவருக்கு வரவேற்பு அளிப்பதில் முன் நின்றவர். 1921 - 22 காலகட்டத்தில் நடந்த நாகபுரி கொடிப்போராட்டத்தில் கலந்துகொள்ள மதுரை பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களை அனுப்பி வைத்ததோடு தானும் சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் மதுரை விஜயத்தின் போது அவர் ஜார்ஜ் ஜோசப் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஹரிஜன நிதிக்காக அலைந்து திரிந்து மக்களைத் தூண்டி ஏராளமான பொருளும், நகைகளும் நிதிக்கு அளிக்கத் தூண்டினார். இவரது இந்தப் பணிக்காக மகாத்மா இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்.
1926இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையை கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு நடப்படி எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். இவரது AICC பதவியின் காரணமாக இவருக்கு வட இந்தியத் தலைவர்களின் நட்பும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மகாநாடுகளுக்கு இவர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.
மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற எல்லா போராட்டங் களுக்கும் தொண்டர்களைத் தயார்செய்து அனுப்பும் பணியையும் திறமையாக செய்து வந்தார். அப்படிப்பட்ட அமைப்புகள் பல இடங்களிலும் இருந்தன. காமய கவுண்டன்பட்டியில் இவரது தொண்டர்படை பயிற்சி மையம் இருந்தது. 1930இல் போராட்டங்கள் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் இவர் கள்ளுக்கடை மறியல் செய்து சிறைபட்டார். இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்.
1932இல் காந்தி - இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்து கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாநோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம்! சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கல் தலையிட்டு சமாதானம் செய்து, நிலைமை மோசமடையாமல் காத்தனர்.
1941இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும்படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா? அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல வேண்டாமா? சும்மா வந்ததா சுதந்திரம்?
'தீண்டாமை' எனும் கொடுமைக்கு சாஸ்திரங்களில் சான்றுகள் இல்லை என்று இவர் தீவிரமாக வாதிட்டார். இதனைத் தகுந்த ஆதாரங்களுடன் மகாத்மாவிடம் இவர் வாதிட்டார். இவரது அழுத்தமான சாஸ்திர ஞானத்தையும், வாதிடும் திறமையையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருந்த பிடிப்பையும் கண்டு மகாத்மா காந்தி வியந்து பாராட்டினார். 1942இல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் முடிந்து வெளியில் வந்ததும், இவர் தேசியப் பள்ளிக்கூடம், பாரதி வாசகசாலை, கைக்குத்தல் அரிசி சாப்பிடுவோர் சங்கம் போன்றவற்றை நிறுவினார். ஈ.வே.ரா. அவர்கள் தனது பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எதிர்த்து அதே பத்திரிகைக்கு இவர் ஒரு கட்டுரையை அனுப்பி வெளியிடச் செய்தார். உத்தமபாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த "பாரதி" எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
1946இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு காட்டி உழைத்தமைக்காக இவருக்கு அரசாங்கம் விருது அளித்து கெளரவித்தது. அதற்காக இவருக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதிக்காகக் கொடுத்து விட்டார். சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசாங்கத்தின் தாமரப் பட்டயம் பெற்ற இவர் 1977இல் காலமானார். வாழ்க முனகல பட்டாபிராமையா புகழ்!
மிகவும் நன்றி ! தாங்கள் வரலாற்ரு மாணவரா அல்லது பேராசிரியரா என எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய சொந்த பாட்டனாரைக் குறித்தும் அவரது ஒப்பற்ற தியாகங்களைக் குறித்தும் அவரது சொந்தங்களே மறந்து விட்ட போதிலும், தங்களது வலைப் பக்கத்தில் அவரைப் பற்றிக் காணும் பாக்கியத்தில் கண்கள் பனிக்கின்றன. நன்றி!
ReplyDelete