சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
46. வேதாரண்யம் தியாகி வைரப்பன்.
தொகுப்பு: வெ. கோபாலன்.
1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாளன்று திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து ராஜாஜி தலைமையில் சுமார் நூறு தொண்டர்கள் கிளம்பி பதினைந்து நாட்கள் நடைப் பயணம் செய்து வேதாரண்யம் சென்றடைந்து அங்கே அகஸ்தியம்பள்ளி எனும் இடத்தில் உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாக்கிரகத்தை இங்கே தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் ராஜாஜி, சந்தானம், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி புளியம் மிளாறினால் அடிபட்டு, உதைபட்டு சிறை சென்று செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் ஒருபக்கம் உப்பு சத்தியாக்கிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்கள் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயினும், தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சில அரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் வேதாரண்யத்தில் நாவிதராக இருந்த ஓர் இளைஞர் செய்த அரிய காரியமும், அதன் விளைவாக அவர் சிறை சென்று தியாகியான விதமும் சற்று வித்தியாசமானது, ஏன்? வேடிக்கையானதும் கூட. அந்த நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.
வேதாரண்யம் புகழ்மிக்க புண்ணிய ஸ்தலம். இங்குள்ள ஆலயத்தில் அடைபட்டுக் கிடந்த கதவை பார்வதி தேவியாரின் தாய்ப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பதிகம் பாடி திறந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒருசேர இத்தலத்துக்கு விஜயம் செய்து பாடியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயுமானவ சுவாமிகளின் எட்டாவது வாரிசாக வந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்து அவ்வூரில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. வேதரத்தினம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும், ஊரில் பலருக்கும் முடிவெட்டும் நாவிதராக வைரப்பன் என்றொரு இளைஞர் இருந்தார். இவருக்கு பிள்ளை அவர்களின் மீது மரியாதை, அன்பு, ஏன் பக்தி என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பிள்ளை அவர்களை போலீசார் கைவிலங்கு கால் விலங்கிட்டு வீதி வழியே இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு ஊரே அழுதது. பிள்ளை அவர்களின் மனைவியும், அவரது ஒரே மகனான அப்பாக்குட்டி குழந்தையாக இருந்து இந்த காட்சியைக் கண்டு வருந்தியிருக்கிறார்கள்.
போலீசார் விலங்கிட்டு வேதரத்தினம் பிள்ளையைத் தெருவோடு அழைத்துச் செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளையவர்களின் மனைவியிடம் ஓடிச்சென்று, ஐயோ, ஐயாவை இப்படி அடித்து இழுத்துச் செல்கிறார்களே அண்ணி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று அலறி அழுதனர். கையில் மகன் அப்பாக்குட்டியை வைத்துக் கொண்டு இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெருமைக்குரிய தாய், ஐயா என்ன குற்றம் செய்தார்? திருடினாரா, பொய் சொன்னாரா? இல்லையே. இந்த நாட்டு ஜனங்கள் எல்லோரும் சுதந்திரம் பெற வேண்டுமென்றுதானே போராடினார். இதோ இழுத்துச் செல்கிறார்களே இந்த போலீஸ்காரர்களுக்கு உட்பட. பிறகு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று 'வந்தேமாதரம்' என்று முழங்க, இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டிருந்த குழந்தையும் எல்லாம் தெரிந்தது போல கையைத் தூக்க, அத்தனைப் பெண்களும் ஒருமுகமாக வந்தேமாதரம் என்று முழங்கினர். பிள்ளை அவர்களிடம் பக்தி விஸ்வாசம் கொண்ட நாவிதர் வைரப்பன் இந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் கொதித்து, ஆத்திரமடைந்து, இந்த வெள்ளை அரசாங்கத்துக்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீசாருக்கும் ஏதாவதொரு வகையில் பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார். அதை உடனே செயல் படுத்தவும் துணிந்தார்.
போராடவும், கோஷம் போட்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகி சிறைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் தியாகம் இவரையும் போராடத் தூண்டியது. இவர் ஓர் சபதம் மேற்கொண்டார். தனது தொழிலை போலீசாருக்கோ, அடக்குமுறைக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கோ செய்வதில்லை, அதாவது அவர்களுக்கு சவரம் செய்வதில்லை என்று உறுதி பூண்டார். அதை மிகக் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கவும் செய்தார். அது போராட்ட காலமல்லவா? வெளியூரிலிருந்து பல போலீஸ்காரர்கள் பணியின் நிமித்தம் அவ்வூருக்கு வந்திருந்தனர். அப்படி முகம் தெரியாத ஒரு புதிய போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து வைரப்பனிடம் முகச் சவரம் செய்து கொள்ள விரும்பினார். வைரப்பனும் அவரைப் பலகையில் உட்கார வைத்து முகத்தில் நீர் தடவி, சோப்பின் நுரை போட்டு கத்தியைத் தீட்டி பாதி சவரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வைரப்பனுக்குத் தெரிந்த ஒரு நபர் அங்கு வந்தார். அவர் சும்மாயிராமல், "என்ன வைரப்பா! போலீஸ்காரங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்தியே! இப்போ என்ன ஆச்சு? போலீஸ்காரர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கியே!" என்று கேட்டு விட்டார்.
வைரப்பனுக்கு அதிர்ச்சி. உடனே எழுந்து கொண்டார். "ஐயா! நான் உங்களுக்கு முகச் சவரம் செய்ய முடியாது. நீங்கள் வேறு இடம் பாருங்கள்" என்று சொல்லிவிட்டார். பாதி முகச் சவரம் செய்துகொண்ட நிலையில் முகத்தில் சோப் நுரையுடன் நிற்கும் அந்த போலீஸ்காரர் கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் அசைந்து கொடுக்கவில்லை. தன் போலீஸ் தோரணையில் மிரட்டிப் பார்த்தார். அதற்கும் வைரப்பன் அஞ்சவில்லை. "என்னால் செய்ய முடியாது, நீங்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வைரப்பனை கைப்பிடியாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி "தம்பி! ஒழுங்காக அந்த போலீஸ்காரருக்கு மீதி சவரத்தையும் செய்துவிடு! இல்லாவிட்டால் தண்டிக்கப் படுவாய்" என்றார்.
வைரப்பனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் மேற்கொண்ட விரதம் சந்திக்கு வந்து விட்டது. இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் தனது எஜமான் வேதரத்தினம் பிள்ளையவர்கள் "வைரப்பா! நீயெல்லாம் போராட்டத்தில் கலந்து கொண்டால், உன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்புறம் உன்னை நம்பியிருப்பவர்கள் திண்டாடுவார்கள், நீ வெளியே இருந்து கொண்டு உன்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்துக் கொண்டிரு" என்று சொல்லியிருந்தாரே, இப்போது தானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிபதியின் முன்பு நிற்கிறோமே என்று மகிழ்ச்சி.
நீதிபதியைப் பார்த்து வைரப்பன் சொன்னார், "ஐயா! எஜமானே! போலீஸ்காரருக்கு மிச்சம் சவரத்தை நம்மாலே செய்ய முடியாதுங்க! அப்படி செய்துதான் ஆகணும்னா, ஐயாவே செய்து விட்டுடுங்க!" என்று சொல்லிக் கொண்டே தனது சவரச் சாதனங்கள் கொண்ட தகரப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்து விட்டார். கோர்ட்டே கொல்லென்று சிரித்தது. நீதிபதிக்கு வந்ததே கோபம். வைரப்பனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறிவிட்டார். வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. தானும் போராடி ஜெயிலுக்குப் போகப் போகிறோம். நம் தலைவர் பிள்ளை அவர்களை அவமானப் படுத்திய இந்த போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம் புகட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சி. அவர் அப்போது இளைஞர்தான், பிறகு சிறை வாசம் முடித்து வெளியே வந்து தியாகி வைரப்பன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு நீண்ட காலம் உயிரோடு இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டு விட்டால் போதும். அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓட அதை வர்ணிப்பார். தானும் தன் தலைவரைப் போல ஜெயிலுக்குப் போய் தியாகியாகி விட்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ இராமபிரானுடைய அணை கட்டும் பணியில் உதவியதாகச் சொல்லப்படும் அணில் போல தானும் இந்த நாட்டு விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்திவிட்ட மகிழ்ச்சி அவருக்கு. அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் வேதாரண்யத்தில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யத்தில் அவருக்கு ஓர் நினைவுத் தூண் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்க தியாகி வைரப்பன் புகழ்!
No comments:
Post a Comment
Please give your comments here