Followers

Monday, May 17, 2010

அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
67. அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

1942 ஆகஸ்ட் போராட்டத்தின் போது கோவை சூலூர் விமான நிலையம் தீக்கிரையான வரலாறு அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்த கலவரத்தின்போது முன்னணியில் இருந்தவர் கோவை பி.வேலுசாமி. இவர் தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு தொழிற்சங்க இயக்கத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர். 1920ஆம் வருஷம் பழனிசாமி நாயுடுவுக்கு மகனாகப் பிறந்தார். இவரது நேர்மையும், தொழிலாளர்களுக்காக உண்மையாகப் பாடுபடும் உணர்வையும் மதித்து அவர்கள் மத்தியில் இவர் ஒரு கெளரவமான தலைவராக ஏற்கப் பட்டவர். கோவை தொழிலாளர் இயக்கம் மிக பயங்கரமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. என்.ஜி.ராமசாமி எனும் உண்மைத் தொண்டன் பலமுறை அடித்து குற்றுயிரும் குலையுயிருமாகப் போடப்பட்டு தனது இளம் வயதிலேயே மரணமடைந்து விட்டவர். அவர் வழியில் வந்த வேலுசாமி மட்டும் அடி உதைகளுக்குத் தப்பிவிடமுடியுமா. இவருக்கும் அவை தாராளமாகக் கிடைத்தன. அந்த விழுப்புண்களோடுதான் இவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

கூட்டத்தில் பேசுவதோ, கூட்டத்துக்குத் தலைவர்களை அழைத்து வருவதோகூட இவருக்கு முக்கியமில்லை. அப்படி நடக்கும் கூட்டங்களில் யாரும் புகுந்து கலாட்டா செய்யாமல் பார்த்துக் கொள்வதில் இவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். மகாத்மாவின் ஒத்துழையாமை போன்ற போராட்டங்களில் இவர் ஈடுபாடு கொண்டாலும், தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு இவர் தொழிலாளர் இயக்கத்தில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் காங்கிரசில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" எனும் அறைகூவலை மக்களுக்கு விடுத்தார். தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், வழிகாட்டுதல் இல்லாத மக்கள் கூட்டம் தன்னிச்சையாக போராட்டத்தைத் தொடங்கி விட்டனர்.

ஆகஸ்ட் போராட்டத் தொண்டர்கள் கோவையில் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இன்னார் இன்ன வேலைகளைச் செய்வது என்று முடிவாகியது. அதன்படி வேலுசாமி பைக்காரா மின் நிலையத்தைத் தகர்ப்பது என்று முடிவாகியது. அதற்காக இவரும் வேறு பல தொண்டர்களும் எவ்வளவு முயன்றும், அங்கிருந்த பலத்த காவல் காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கோவையில் இருந்த இம்பீரியல் வங்கி (தற்போது ஸ்டேட் வங்கி) யைத் தாக்க முயன்று அதிலும் தோல்வி கண்டனர்.

அடுத்ததாக சூலூர் விமான நிலையத்துக்குத் தீ வைப்பது என்ற முடிவில் இவர்கள் பலர் ஒன்றுகூடி ரகசியமாகச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் பல குழுக்களாகப் பிரிந்து நாலா திசைகளிலும் தீ வைத்துவிட தீ நன்கு பற்றி எரியத் தொடங்கியது. இவர்கள் ஓடி தலைமறைவாகி விட்டனர். போலீஸ் இவர்களைப் பிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் இவர்களோ மாறுவேடமணிந்து கொண்டு போலீசின் கையில் அகப்படாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்கள். அப்படிப் போகின்ற இவர்களுக்கு ஆங்காங்கே அடைக்கலம் கொடுத்து காப்பாற்ற ஏராளமான தேசபக்தர்கள் இருந்தார்கள். இவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் மாட்டிக்கொண்டு சிறை செல்ல நேருமென்பதெல்லாம் இவர்களுக்குத் தெரிந்திருந்தும் தைரியமாக இதனைச் செய்தார்கள். அடடா! தேசபக்திக்குத்தான் எவ்வளவு சக்தி.

என்னதான் இவர்களு ஊர்விட்டு ஊர் ஓடிக்கொண்டிருந்தாலும் போலீஸை கடைசிவரை ஏமாற்ற முடியவில்லை. வேலுச்சாமியும் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிடைக்கும் மரியாதைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? நிர்வாணமாக்கப்பட்டு கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்கப்பட்டார் வேலுச்சாமி. சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். உன் தேசத்தின் மீது பக்தியா, அதற்காக விமான நிலையத்துக்குத் தீ மூட்டுவாயா என்று சொல்லிச் சொல்லி அடித்தனர். மயங்கி கீழே விழுந்தவரை இருவர் தாங்கிப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் அடித்தனர். அட என்ன கொடுமை!

போலீஸ்காரர்கள் அடித்த அடியில் இவரது முதுகு தண்டுவடத்தில் நல்ல காயம். மூளையில் நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டதாம். இப்படிப் பலநாட்கள் செய்த சித்திரவதைக்குப் பின் இவர் அடி தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழ, வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி கொட்டத் தொடங்கியது. குற்றுயிரும் குலை உயிருமாக இவர் விசாரணை கைதி என்ற பெயரில் சிறையில் வாடினார். இவற்றிற்கு முத்தாய்ப்பாக இவர் அலிப்புரம் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ மனையில் இவருக்குச் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் கூட பட்ட அடியின் பயனாக இவர் அடிக்கடி நினைவாற்றலை இழக்கத் தொடங்கினார். கை நடுக்கம் ஏற்பட்டு எதனையும் பிடிக்கவோ, சாப்பிடவோ, எழுதவோ முடியாமல் போயிற்று.

இவர் சிறைவாசம் முடிந்து வெளியேறிய பின்னரும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் பங்கு கொண்டார். 11000 தொழிலாளர்கள் வேலை இழந்ததை எதிர்த்துப் போராடிய இவருக்கு 15 மாதங்கள் விசாரணைக் கைதி என்ற பெயரில் சிறைவாசம். அது முடிந்து வெளியே வந்து 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். போராட்ட காலத்தில் இவர் மீது வழக்குத் தொடர்ந்து இவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கிடைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் இவரது தொழிலாளர் போராட்டம் நின்றபாடில்லை. 1952ல் கம்போடியா மில்லில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த மோதலின் காரணமாக இவர் இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார்.

தொழிலாளர் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்த போது இவர் மீது கல்வீசப்பட்டது. கல்வீச்சில் இவரது இடது கண்ணின் கீழ் எலும்பு முறிந்து கோவை தலைமை மருத்துவ மனையிலும், பின்னர் சென்னை அதாலமிக் கண் மருத்துவ மனையிலும் ஆறு மாதங்கள் சிகிச்சை செய்து கொண்டும் பலனின்றி ஒரு கண்ணின் கண்பார்வை இழந்தார். 1967ல் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து இவர் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தி.மு.க. அரசில் விவசாய மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி ஒன்றரை மாதம் சிறையில் இருந்தார். ஒரு ESI மருத்துவ மனைக்கு அண்ணாவின் பெயர் வைக்கப்பட்டதை எதிர்த்து தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியின் பெயரை வைக்க வற்புறுத்தி போராடி சிறை சென்றார். பிறகு 1972 வரை வாழ்ந்த இவர் தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டு இறைவனடி சேர்ந்தார். வாழ்க பி.வேலுச்சாமி புகழ்!

No comments:

Post a Comment

Please give your comments here