Followers

Monday, May 17, 2010

திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
45. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி.
தொகுப்பு: வெ. கோபாலன்.

ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் அலுவலகம் திருச்சியில்தான் இருந்தது என்பது பலருக்கு இன்று தெரிந்திருக்க நியாயமில்லை. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி கூட முதன் முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் திருச்சியில்தான் பணிசெய்து கொண்டிருந்தார் என்பதும் புதிய செய்தியாக பலருக்கு இருக்கும். தமிழ்நாடு காங்கிரசின் தலைமை அகமாகத் திகழ்ந்த திருச்சி மாநகரில் அப்போது காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்த தியாகச் செம்மல்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி ஆவார்.

இவர் தொழில் முறையில் மருத்துவராக இருந்து திருச்சி நகர மக்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். இவரது தந்தையார் வாசுதேவ சாஸ்திரியார். இவர் 1887ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி சிங்காரத் தோப்பில் "சத்தியாக்கிரக விலாஸ்" எனப் பெயரிடப்பட்ட வீட்டில் இவரது வாசம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நாடு சுதந்திரம் பெற வேண்டும் எனும் பேரவா இவருக்கு உண்டு. மருத்துவப் பட்டப்படிப்பு படித்து புகழ்மிக்க மருத்துவராக இவர் பிராக்டீஸ் செய்து வந்த போதும் தேச சேவையையே பெரிதும் விரும்பி செய்யத் தொடங்கினார். 1912இல் இவர் சுதேச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு IPC செக்ஷன் 123யின் கீழ் தண்டிக்கப்பட்டு ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் மட்டுமல்ல இவரது குடும்பம் முழுவதுமே ஈடுபட்டு அடிபட்டு சிறை புகுந்து சகல கஷ்டங்களையும் பட நேர்ந்தது. இந்த தியாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இவர் குடும்பத்தின் மற்றவர்கள், இவரது மனைவி கல்யாணி, சாஸ்திரியாரின் சகோதரன் மகன் கணபதி சாஸ்திரி, மகள் சுப்பலக்ஷ்மி, சுப்பலக்ஷ்மியின் கணவர் ராமரத்தினம், இவரது சகோதரரும் பிரபல வக்கீலுமான டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் சிறைசென்ற தியாக சீலர்கள். குடும்பமே நாட்டுக்காக சிறைசென்ற வரலாறு வேறு எங்கேயாவது, எவராலாவது நடத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை, நேரு குடும்பத்தைத் தவிர. இவர்கள் அனைவரும் கைதாகி கண்ணனூர் சிறையில் ஆறு மாத காலம் வைக்கப்பட்டிருந்தனர்.

சுவாமிநாத சாஸ்திரியார் அழகான தோற்றமுடையவர். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட கிராப்புத் தலை. சிவந்த மேனி, எப்போதும் சிரித்த முகம், கலகலப்பான பேச்சு இவை சாஸ்திரியாரின் முத்திரைகள். ரத்தினவேல் தேவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர். கதர் பட்டு சட்டை அணிந்து, அங்கவஸ்திரம் தரித்து பார்ப்பதற்கு எப்போதும் கண்ணியமான தோற்றத்தோடு விளங்குவார். கையில் ஒரு ஓலைப்பெட்டி. அதில் நூல் நூற்பதற்கான பஞ்சு பட்டைகள், கையில் ஒரு தக்ளி இவை சகிதமாகத்தான் அவர் எப்போதும் இருப்பார். ஏழை மக்களுக்கு அவர் அந்தக் காலத்திலேயே இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இவர் இருந்தார். அதுமட்டுமல்ல திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பதவியும் இவரிடம்தான் இருந்தது. இவை இரண்டிலும் இவர் ஆற்றிய பணிகள் இன்றும்கூட நினைவு கூரத் தக்கவையாகும். அவருக்குச் சொந்தமான பிரம்மாண்டமான "சத்தியாக்கிரக விலாஸ்" எனும் மாளிகையைவிட்டு நீங்கி தென்னூரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்த ஏழை ஜனங்களுக்கு மருத்துவ உதவியையும் செய்து கொண்டு, தேசப்பணியாற்றினார்.

சிறையில் சுவாமிநாத சாஸ்திரியாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதுமுதல் அவர் உடல் நலம் கெட்ட நிலையில்தான் பொதுத் தொண்டிலும் கவனம் செய்து வந்தார். இந்த காரணத்தினால் 1942 ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் எழுச்சியுற்ற "ஆகஸ்ட் புரட்சியில்" இவரால் ஈடுபடமுடியவில்லை. டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளின் மையக் கரு ஒத்துழையாமை இயக்கம்தான். இலக்கியத்திலும் அவரது நாட்டுப் பற்று, சமுதாயப் பற்று வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட. இவர் நடத்திய பத்திரிகையின் பெயர் "களி ராட்டை" என்பதாகும். இந்த பத்திரிகையின் மூலம் மகாத்மா காந்தியடிகளின் தேச நிர்மாணப் பணிகளைப் பரப்பி வந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரது நெருங்கிய நண்பர். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இந்த பெருமகன் சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக 13-7-1946இல் காலமானார். இவர் காலமானபோது மகாத்மா காந்தி தன் கைப்பட இரங்கல் கடிதமொன்றை இவர் மனைவி கல்யாணி அம்மாளுக்கு எழுதியிருந்தார். தனது தூய வாழ்க்கையாலும், உயர்ந்த தியாகத்தாலும், தேசபக்தி ஒன்றையே செல்வமாகத் தனது குடும்ப வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற இந்த தியாக சீலரின் புகழ் வாழ்க!

No comments:

Post a Comment

Please give your comments here