Followers

Monday, May 17, 2010

கடலூர் அஞ்சலை அம்மாள்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
63. கடலூர் அஞ்சலை அம்மாள்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தியாகங்கள் பல புரிந்த வீரர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கிடைப்பது என்பது அரிதுதான். எத்தனையோ தியாகிகளின் வரலாறு கால ஓட்டத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து வெளியில் தெரியாமலே பொய்விட்டது. வேறு சிலரது வரலாறோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படாத காரணத்தாலேயே மறக்கப்பட்டும் விட்டது. ஒரு நாட்டின் தியாக வரலாறு முறைப்படி அரசாங்கத்தின் முத்திரையோடு பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட தியாகிகளை மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். குறைந்த பட்சம் சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களிலாவது அவர்களது நினைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமாகாத சில பெயர்களில் கடலூர் அஞ்சலை அம்மாளும் ஒருவர். இவரது கணவரும் ஒரு தியாகி. இவரது மகளும், மருமகனும்கூட தியாகிகள். இப்படி குடும்பமே தியாகிகள் குடும்பமாக இருக்கும் ஒருசிலரில் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்று.

இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நம் நாட்டுப் பெண்கள் இப்போது போல சுதந்திரம் பெற்று ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழவில்லை. அந்நிய ஆட்சி நமக்களித்த தீயவற்றில், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்குக் கல்வி அறிவு பெற வாய்ப்பு இல்லாமை போன்றவற்றால் பொதுவாக பெண்கள் பொதுக் காரியங்களில் அதிகம் தலையிடுவதில்லை. இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக நமது பாரத பண்பாட்டிலும், நமது மக்களின் ரத்த ஓட்டத்திலும் கலந்துவிட்ட பெண்ணுரிமை காரணமாக, பெண்கள் அறிவிலே சிறந்தும், நிர்வாகத் திறன், அநீதிகளைக் கொண்டு பொங்கும் பாங்கு இவையெல்லாம் எல்லா காலங்களிலும் சாம்பல் மூடிய அக்கினியாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி சில பெண்கள் ஆண்களுக்கு நிகராகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றும், தியாகங்கள் பல புரிந்துமிருக்கிறார்கள். அதற்கு அந்தக் குடும்பத்தின் ஆண்மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்குமானால் இவர்களது பங்கு சிறப்பாக அமையும். அப்படி குடும்பச் சூழ்நிலையும், சுதந்திர தாகமும் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். சென்னையில் கர்னல் நீல் என்பவனின் சிலையொன்று இருந்தது. இந்த நீல் முதல் சுதந்திரப் போரின் போது இந்திய மக்களுக்கும், சிப்பாய்களுக்கும் இழைத்த கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொடுங்கோலனின் சிலை சென்னை நகரத்தில் இருப்பது அவமானம் என்று கருதி இந்தச் சிலையை நீக்க ஒரு போராட்டம் நடந்தது. ந.சோமையாஜுலு போன்ற பெரும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 1927இல் முதன் முதலாக அஞ்சலை அம்மாள் இந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933இல் சட்டமறுப்பு மறியலிலும், 1940இல் தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1941லும், 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் வாழ்க்கை பெரும்பாலும் சிறைவாசத்திலேயே கழிந்தது எனலாம். ஊர் சுற்றி பார்க்க இவர் அலைந்திருக்கிறாறோ இல்லையோ, பல ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஊர்களில் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகியவை அடங்கும். இவர் கர்ப்பவதியாக இருந்த காலத்தில் சிறை சென்று, பேறு காலம் வந்தபோது சில நாட்கள் வெளியே விடப்பட்டு, பிரசவம் ஆனதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

1929ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் முருகப்பா, இவரும் பலமுறை சிறை சென்ற தியாகி. கணவன் மனைவி இருவருமே சிறையில் இருந்தபோது, இவர்களது மகள் லீலாவதி என்ன பாடு பட்டிருப்பார். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகள் லீலாவதி ஒன்பது வயதாக இருக்கும்போதே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வயதிலேயே நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இவரது தேசப்பணியைக் கண்டு மகிழ்ந்த மகாத்மா காந்தி இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று வார்தா ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.

அஞ்சலை அம்மாளும் அவர் கணவர் முருகப்பாவும் கடலூர் சிறையில் இருந்த காலத்தில் வேலூரைச் சேர்ந்த ஜமதக்கினி என்பவரும் கடலூர் சிறையில் இருந்தார். இவர் சிறையில் காரல் மார்க்சின் 'தாஸ் காபிடல்' எனும் நூலை மூலதனம் என்று மொழியாக்கம் செய்தவர். இவர் பிரபல மார்க்சீய சிந்தனையாளராக மலர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர். இவர் கடலூர் சிறையில் இருக்கும் காலத்தில் அஞ்சலை அம்மாளையும், முருகப்பாவையும் சந்திக்க சிறைக்கு வரும் மகள் லீலாவதியைச் சந்திக்க நேர்ந்தது. மகள் லீலாவதிக்கும், சிறையில் இருந்த தியாகி ஜமதக்கினிக்கும் காதல் மலர, இவ்விருவருக்கும் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் ஜமதக்கினி அவர்களோ, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் என்று உறுதியாக இருந்தார். அதன்படியே 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த ஜமதக்கினி (நாயக்கர்) 1952 முதல் சுதந்திர இந்தியத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றார். அங்கு வெற்றி பெற்றவர் B.பக்தவத்ஸலு நாயுடு என்ற சுயேச்சை. இரண்டாவதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் வேதாசல முதலியார். இந்த பக்தவத்ஸலு நாயுடு, பின்னர் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபோது, காங்கிரசுக்கு ஆதரவளித்து, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் இவர்கள் அமைச்சர்களாக ஆனபோது, இவர் துணை சபாநாயகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்தில், தம்பதிகளைத் தவிர, மகள் மருமகன் ஆகியோரும் சிறை சென்ற தியாகிகளாக இருந்தனர் என்பதும், பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்தவர் இந்த அஞ்சலை அம்மாள் என்பதும் பெருமைப் படத்தக்க விஷயம். வாழ்க அஞ்சலை அம்மாள் புகழ்!

4 comments:

  1. she is the first lady MLA in Tamilnadu..

    ReplyDelete
  2. she is first Lady MLA in Tamilnadu..

    ReplyDelete
  3. she is the first tamilnadu MLA Lady...

    ReplyDelete
  4. Her son jayaveran is my grandfather.

    ReplyDelete

Please give your comments here